Tuesday, January 01, 2008

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 13

கீசு கீசு என்று பறவைகளின் குரல் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. முந்தைய நாள் மலை சுற்றி வந்த களைப்போ என்னவோ தெரியவில்லை. நன்கு விடிந்த பின்னரும் கந்தன் தூங்கிக் கொண்டிருந்தான். மெதுவாக அவனுக்கு விழிப்பு வந்த போது விடிந்து வெகு நேரம் ஆகிவிட்டிருந்தது. கண்ணைத் திறந்தும் திறக்காமலும் எழுந்து பார்த்தால் அருகில் படுத்திருந்த கேசவனையும் மணிகண்டனையும் காணவில்லை. வெளியே பல் விளக்கிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டே மெதுவாக பாயை விட்டு எழுந்தான் கந்தன். ஏதோ வேறு உலகத்திற்குச் சென்று வந்தது போல் இருந்தது. கல், மரம், செடி, கொடி என்று என்ன என்னவோ கனவுகள். மெதுவாக வெளியே வந்து பார்த்தால் தாத்தா காலை இளவெயிலில் ஒரு சிறு பாறையின் மேலே அமர்ந்து கொண்டு ஏதோ ஒரு செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார். கந்தனைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டுப் படிப்பதைத் தொடர்ந்தார்.

"தாத்தா. கேசவனும் மணிகண்டனும் எங்கே?"

"அவங்க ஆறு மணிக்கே எந்திருச்சு கீழே குளிக்கப் போயிட்டாங்க. நீ இங்கேயே குளிச்சிரலாம் மோகன். சுடு தண்ணி வைக்கிறேன். பல்லு விளக்கிட்டு வா"

சரி என்று தலையாட்டிவிட்டு அறையின் அந்தப் பக்கம் இருந்த வாசலின் வழியாக வெளியே வந்து பார்த்தான். ஒரு மரத்தடியின் கீழ் ஒரு சின்ன வாளியில் தண்ணீர் இருந்தது. பக்கத்திலேயே ஒரு சின்ன தொட்டியில் நீர் நிரம்பி இருந்தது. பாத்ரூம் போகவேண்டுமே என்று நினைத்துக் கொண்டே கந்தன் பார்வையை ஓட்ட பக்கத்திலேயே இன்னொரு கட்டிடத்தில் பாத்ரூம் இருப்பது தெரிந்தது. அங்கிருந்த இன்னொரு தாத்தா இவனது பார்வையைப் பார்த்துவிட்டு "இங்கே பாத்ரூம் போய்க்கோ தம்பி" என்றார்.

பல் விளக்கிவிட்டு பாத்ரூம் போய்விட்டு திரும்பித் தாத்தா இருந்த இடத்திற்கு வந்த போது அவர் இன்னும் செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார். இவனும் அவர் பக்கத்திலேயே கொஞ்சம் இடம் விட்டு உட்கார்ந்து கொண்டான். அந்த அதிகாலை நேரத்தில் இளவெயிலில் அந்த இடத்திலிருந்து பார்க்க அண்ணாமலையார் கோவில் கோபுரங்களும் ஊரும் அழகாக இருந்தன. காகாவென்று கத்திக் கொண்டு கருநிறக்காக்கைகள் யாரையோ காப்பாற்றச் சொல்லி முறையிடுவது போல் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தன. பசுமையான காட்சி எல்லாப்பக்கமும் விரிந்தது. ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வரும் போதே கனவில் வந்தவற்றைப் பற்றியும் எண்ணிக் கொண்டிருந்தான் கந்தன்.



"மோகன். நல்லா தூங்குனியா?"

"ம்ம்"

"என்ன யோசனையா இருக்க மோகன்?"

பதில் சொல்லாமல் குழப்பமாக மனத்தில் ஓடிக் கொண்டிருந்த கனவுகளை எண்ணிக் கொண்டிருந்தான் கந்தன். முந்தைய இரவு சிலப்பதிகாரப் பாடலைக் கேட்டுக் கொண்டே தூங்கியது நினைவிற்கு வந்தது. பஞ்சவர்க்கு தூது ந்டந்தானைப் பற்றிய பாடலைக் கேட்டுக் கொண்டே தூங்கியதால் அந்த கனவு வந்ததோ என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் மற்ற கனவுகளைப் பற்றி ஒன்றும் புரியவில்லை.

"மோகன். என்ன யோசனை?"

'எத்தனை தடவை தான் சொல்றது என் பேரு கந்தன்னு. ஏன் தாத்தா மோகன் மோகன்னு கூப்புடறார்?' கொஞ்சம் எரிச்சலாக இருந்தது கந்தனுக்கு.

"தாத்தா. என் பேரு கந்தன். என்னை ஏன் எப்பவும் மோகன்னு கூப்புடறீங்க?"

சிரித்துக் கொண்டார் தாத்தா.

"உம் பேரு கந்தன்னு தெரியும். ஆனா உன்னை ஏன் மோகன்னு கூப்புடறேன்னு உனக்கு இந்நேரம் புரிஞ்சிருக்குமே"

"இல்லை தாத்தா. புரியலை"

"நீ தான் ஜகன்மோகன்"

பளீரென்று யாரோ கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது கந்தனுக்கு.

தாத்தா என்ன சொல்கிறார் என்பது புரிந்தும் புரியாதது போல் இருந்தது.

"என்ன தாத்தா சொல்றீங்க?" என்று கண்கள் விரியக் கேட்டான்.

"ஆமாம் மோகன். நீ தான் கிருஷ்ணர் உதைச்ச கல்லு. நீ நேத்து ராத்திரி கனவுல பாத்ததெல்லாம் உன்னோட முந்தையப் பிறவிங்க தான்"

அவர் சொன்னதை முழுவதும் புரிந்து கொள்ள சில நிமிடங்கள் ஆனது கந்தனுக்கு. தாத்தாவும் ஒன்றும் பேசாமல் அவன் அதனை முழுதும் கிரகித்துக் கொள்ள நேரம் தந்தார்.

"கிருஷ்ணர் தூது வந்ததுல பல நோக்கங்கள் இருந்தது மோகன். அதுல ஒரு நோக்கம் கல்லா கிடந்த உன்னை தன்னோட கால் ஸ்பரிசத்தால உணர்வு கொள்ளச் செய்யுறது"

கந்தனுக்கு என்னவோ அகலிகைக் கதையைக் கேட்பது போல் தோன்றியது.

"அப்படின்னா நான் எதாவது சாபத்தால கல்லா கிடந்தேனா தாத்தா?"

"இல்லை. நீ அது நாள் வரைக்கும் உயிரில்லாத வஸ்து. அன்னைக்குத் தான் கிருஷ்ணர் கால் பட்டு உயிர் வந்தது உனக்கு. கிருஷ்ணர் காலடி பட்ட மகிமையால நீ அப்பவே பாகவதத்தை நேரடியா சுகப்பிரம்மம் வாயாலேயே கேட்ட"

தாத்தாவுக்கு மற்றவர்களின் மனதைப் படிக்கத் தெரிந்திருக்கிறது. அதை வைத்து ஏதோ கதை விடுகிறார் என்று நினைத்தான் கந்தன். அந்த எண்ணம் ஓடியவுடன் குறுக்குக் கேள்விகள் அவன் மனத்தில் தோன்றி அவற்றைக் கேட்கும் தைரியத்தையும் தந்தன.

"அப்ப கல்லா இருந்த என் மேல தடுக்கி விழுந்தது தான் அபசகுனமா ஆகி கண்ணன் தூது வெற்றி பெறாம போயிருச்சா?" அவன் குரலில் கிண்டல் தொனித்தது.

"ஹாஹாஹாஹா. நீ மகாபாரதம் படிச்சிருக்கே இல்லை?"

"படிச்சிருக்கேன் தாத்தா"

"கிருஷ்ணர் தூது போனது சண்டையை நிறுத்துறதுக்கா?"

"இல்லை தாத்தா. போன இடத்துல கர்ணன், விதுரர்ன்னு எல்லாரையும் ஒரு குழப்பு குழப்பிட்டுத் தான் வந்தார்"

"அப்படி செய்யுறது தான் அவரோட நோக்கமா இருந்திருக்கும். அதெல்லாம் நல்லா தானே நடந்தது?! அதுல ஒரு நோக்கம் தான் உனக்கு உயிர் கொடுக்குறது"

"அப்ப கிருஷ்ணன் கால் பட்ட எல்லா கல்லுங்களுக்கும் உயிர் வந்திருச்சா?"

"அப்படி இல்லை. சில கல்லுங்களுக்குத் தான் உயிர் வந்தது"

அடுத்த கேள்விக்குத் தாவினான்.

"பாகவதத்தைச் சுகர் வாயாலேயே கேட்ட எனக்கு ஏன் தாத்தா அப்பவே முக்தி கிடைக்கலை?"

"நீ இன்னும் கல்லாவே தானே இருந்த? அதனாலத் தான்" என்று சிரித்த படியே சொன்ன தாத்தா தொடர்ந்தார். "உனக்கு இந்த உலக அனுபவங்களையும் இன்ப துன்பங்களையும் கொடுக்கணும்ன்னு தானே கிருஷ்ணர் உன்னை உதைச்சு உயிர் கொடுத்தது. அப்படி இருக்க உடனே எப்படி முக்தி கிடைக்கும்?"

அவர் சொன்னதை முழுதும் கந்தன் ஏற்றுக் கொண்டானோ இல்லையோ தெரியவில்லை.

"அப்ப நான் மரமா இருந்த இடத்துல தான் போகரோட சமாதி இருக்கா?"

"ஆமாம்"

கந்தனால் நம்ப முடியவில்லை. எத்தனை தடவை தாய் தந்தையர் பழனிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். எத்தனையோ முறை பழனியாண்டவனையும் போகர் சமாதியையும் பக்தியோடு வணங்கியிருக்கிறான். அந்த இடத்தில் மரமாக இருந்ததாகச் சொன்னால் நம்பும்படியாகவா இருக்கிறது? கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான். திடீரென்று இன்னொரு ஐயம் தோன்றியது.

"தாத்தா. வந்த கனவு எல்லாம் இந்தியாவுல தான் நடந்ததா இருக்கு. இதெல்லாம் நான் படிச்ச கதைங்களை என் மனசு கனவுங்களா ஏன் காமிச்சிருக்கக் கூடாது? இதெல்லாம் என்னோட முந்தையப் பிறவிங்கன்னா நான் வெளிநாட்டுல பொறக்கவே இல்லையா?" மடக்கிவிட்டோம் என்று நினைத்தான்.

சிரித்துக் கொண்டே "நல்ல கேள்வி மோகன். நீ வெளிநாட்டுலயும் பொறந்த. வேற மதத்துலயும் பொறந்த. உன்னோட ஒரு பிறவி சவுத் அமெரிக்காவுல ஒரு கிறிஸ்டியனா இருந்தது. இன்னொன்னு சைனாவுல தாவோ மதத்துல இருந்தது. வடக்கே கோவிந்த சிங்குக்கு நெருங்கின சீக்கிய மதத் தலைவரா கூட இருந்திருக்க."

சிறிது இடைவெளி கிடைத்தவுடன் "அப்படின்னா நான் எல்லா நாட்டுலயும் எல்லா மதத்துலயும் பொறந்திருக்கேனா?"

"இல்லை மோகன். நீ பொறக்காத நாடுங்க நெறைய இருக்கு. சில மதங்கள்ல நீ இன்னும் பொறக்கலை. இனிமே உனக்கு அந்த மதங்கள்ல பிறவி வரலாம்"

"அப்ப ஏன் அதெல்லாம் என் கனவுல வரலை?"

"உனக்கு இந்தப் பிறவியில எது புரியுமோ அது மட்டும் தான் வந்திருக்கு. சவுத் அமெரிக்கா பிறவியும் கொஞ்சம் கனவுல வந்தது. ஆனா உனக்கு நினைவில்லை. ஏன்னா அது உனக்குப் புரியலை"

தாத்தா என்ன தான் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை கந்தனால். நரசிம்மதாசனையும் ஜகன்மோகனையும் நினைத்தால் தான் அவர்களைப் போல் வாழ்ந்திருப்போம் என்றே எண்ணிப் பார்க்க முடியவில்லை. நினைத்தால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

"தாத்தா. நரசிம்மதாசனும் ஜகன்மோகனும் நான் தான்னா நம்ப முடியலை தாத்தா. அவங்க ரெண்டு பேரும் ஆன்மிகத்துல ரொம்ப முன்னேற்றம் அடைஞ்சவங்களா இருக்காங்க. நான் அப்படி இல்லையே?"

"மோகன். நீ எதை விரும்பினீயோ அதுக்கு ஏத்த மாதிரியான பிறவி உனக்கு கிடைச்சிருக்கு. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தீனா திருவாசகம், திவ்யப்பிரபந்தம், பகவத்கீதை, கோபிகா கீதம், மாதிரி நூல்களெல்லாம் எடுத்துப் படிச்சவுடனே உனக்கு புரிஞ்சிருக்கும். சரி தானே?"

தாத்தா சொல்வது சரி தான். எந்த மத நூலை எடுத்துக் கொண்டாலும் எந்த தத்துவ நூலை எடுத்துக் கொண்டாலும் படிக்கத் தொடங்கியவுடனேயே ஏற்கனவே படித்திருக்கிறோம் என்று தோன்றுவதும் அந்த நூல் அடுத்து சொல்லப் போகும் கருத்து படிப்பதற்கு முன்பே தோன்றுவதையும் கவனித்திருக்கிறான். ஆனால் அது ஏரணத்திற்கு ஏற்றபடி அமையும் கருத்துகள் என்பதால் அப்படி தோன்றுகின்றன என்றே நினைத்திருந்தான். இப்போது அவற்றை முற்பிறவியில் படித்திருந்ததால் தான் அவை அவனுக்குப் படிப்பதற்கு முன்பே தெரிந்தன என்பதை ஏற்றுக் கொள்ள கந்தனால் முடியவில்லை.

"யார் எந்தத் தத்துவத்தைப் பத்தி பேசினாலும் உன்னால ஒரு அதாரிட்டியோட அந்த தத்துவத்தைப் பேச முடியுதே. அது ஏன்னு யோசிச்சியா? அந்தத் தத்துவத்தை நல்லா ஆராய்ஞ்சு அனுபவிச்சதால தான் உன்னால அப்படி பேச முடியுது."

"தாத்தா. அப்படின்னா ஏன் இந்தப் பிறவியில நான் ஆன்மிகத்துல ஈடுபாடு இல்லாம இருக்கேன்?"

"இந்தப் பிறவியிலயும் ஆன்மிகத்துல ஈடுபாட்டோட தான் இருக்க. இல்லாட்டி எதுக்கு தத்துவங்களையும் பாசுரங்களையும் படிக்கிற? ஆனா இந்த பிறவியில நீ விரும்புன இல்லற அனுபவம் கிடைக்கிறதுக்காக நீ அவ்வளவு தீவிரமா ஆன்மிகத்துல இறங்கலை"

இல்லற அனுபவம் என்று சொன்னவுடன் கல்கத்தா காளிதேவி நினைவிற்கு வந்தாள்.

"தாத்தா. ஜகன்மோகனுக்குக் காளிதேவியை கும்புடணும்ன்னு தோணுனதால தான் நேத்து பிடாரி அம்மனைப் பாத்தவுடனே எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு இருந்ததா?"

சிரித்துக் கொண்டே "அப்படி எல்லாம் இல்லை மோகன். அண்ணாமலையார்கிட்டயும் உனக்கு ஈர்ப்பு உண்டு. அந்த நேரத்துல அலைபாயத் தொடங்குன உன் மனசு அங்கே இருந்த அதிர்வுகளை ஏத்துக்கலை. பிடாரி அம்மன்கிட்ட வர்றப்ப மனசு அடங்கத் தொடங்கிருச்சு. அதனால அங்க இருந்த அதிர்வுகளை உன் மனசு ஏத்துக்கிச்சு. அவ்வளவு தான்"

அடுத்த கேள்விக்குத் தாவினான்.

"தாத்தா. அப்ப இந்தப் பிறவியில நான் கல்யாணம் பண்ணிக்குவேனா இல்லையா?"

"கல்யாணம் பண்ணிக்குவ"

"அப்ப என் ஜாதகத்துல நான் நாப்பது வயசுல சன்யாசியா போயிருவேன்னு இருக்கே?"

"நீ நாப்பது வயசுல சன்னியாசியா போறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு தான் உன் ஜாதகம் சொல்லுது. கட்டாயம் ஆயிடுவேன்னு சொல்லலை"

"புரியலை தாத்தா. ஜாதகத்துல சொல்றதை நம்பக்கூடாதுன்னு சொல்றீங்களா?"

"நீ இன்ஸ்ட்ருமென்டேசன் கன்ரோல் இஞ்சினியரிங்க் தானே படிச்சிருக்க?"

ஆமாம் என்று தலையாட்டினான் கந்தன்.

"அப்ப இன்டிகேட்டருக்கும் கன்ட்ரோலருக்கும் வித்தியாசம் தெரிஞ்சிருக்குமே"

ஆமாம் என்று தலையாட்டினான் கந்தன்.

"ஜாதகம் இன்டிகேட்டர் தான் கன்ட்ரோலர் இல்லை. It indicates what can happen due to past actions. It does not control what will happen. The control is with you. It shows you what opportunities are in front of you. It shows you what choices are in front of you. You are the one who will decide the choice you want to make."

புரிந்த மாதிரி இருந்தது.

"அதனால நீ இந்தப் பிறவியில என்ன என்ன செய்றீயோ அதுக்குத் தகுந்த மாதிரி தான் உன் வாழ்க்கையும் போகும். அதனால நீ நாப்பது வயசுல சன்னியாசி ஆயிடுவன்னு உறுதியா சொல்ல முடியாது."

"தாத்தா. அது மட்டுமில்லாம என் ஜாதகத்துல கேது பன்னிரண்டாம் இடத்துல இருக்கிறதால எனக்கு இந்தப் பிறவியில முக்தின்னு சொல்லியிருக்கே. அதுவும் இன்டிகேட்டர் தானா?"

"ஆமாம். அதுவும் இன்டிகேட்டர் தான். உன்னோட போன பிறவிங்க சிலதுலயும் அப்படித் தான் ஜாதகம் இருந்தது. இந்தப் பிறவியிலயும் அப்படி இருக்கு. இனிமே வர்ற பிறவிங்கள்ல எல்லாம் அப்படி தான் இருக்கும். ஆனா எந்த பிறவியில நீ முக்தி அடைவன்னு சொல்ல முடியாது. That is your choice."

தொடர்ந்தார் தாத்தா.

"இந்த ரெண்டை மட்டும் தான் நீ கவனிச்சிருக்க. உனக்கு நல்ல பேரும் புகழும் நல்ல மனைவியும் மக்களும் அமைவாங்கன்னு கூட உன் ஜாதகத்துல சொல்லியிருக்கு. அதை கவனிக்கலையா?"

"கவனிச்சிருக்கேன் தாத்தா"

"அது மட்டுமில்லை. உன் கைரேகைகள்ல கூட நிறைய இன்டிகேசன் இருக்கே"

"ஆமாம் தாத்தா. எனக்கு சாலமன் ரேகை இருக்கு"

சிரித்தார் தாத்தா. "ஆமாம் சாலமன் ரேகை இருக்கு. அப்ப மத்தவங்க மனசைப் படிக்கிற சக்தி வந்திரணும். வரும்ன்னு நினைக்கிறியா?"

"தெரியலை தாத்தா. ஆனா திருச்செந்தூர்ல ஒரு சாமியார் சாலமன் ரேகையைப் பாத்துட்டு அதைத் தான் சொன்னார். நாப்பது வயசுல எனக்கு மத்தவங்க மனசைப் படிக்கிற சக்தி வந்துரும்ன்னு"

"வர்றதுக்கு வாய்ப்பு உண்டு மோகன். ஆனா கட்டாயம் வரும்ன்னு சொல்ல முடியாது"

"இப்ப எதுக்கு தாத்தா எனக்கு இந்த கனவுங்க எல்லாம் வந்தது? ஏன் எனக்கு என்னோட முந்தின பிறவியெல்லாம் தெரியணும்?"

"அடுத்த கேள்வியையும் கேக்காம விட்டுட்டியே. நேத்து வரைக்கும் ஒன்னும் சொல்லாத நான் ஏன் இன்னைக்கு இவ்வளவு நேரம் உன்னோட பேசணும்ன்னு இன்னொரு கேள்வி வந்ததே?"

வெட்கத்துடன் ஆமோதித்தான் கந்தன்.

"காரணம் இருக்கு மோகன். இனி வர்ற ஒவ்வொரு பிறவியிலயும் உனக்கு என்னை மாதிரி ஒருத்தர் வந்து இந்த முற்பிறவி கதையெல்லாம் சொல்லுவார். அப்படி ஒரு ஏற்பாடு இருக்கு. இதெல்லாம் தெரிஞ்ச பின்னாடியும் நீ என்ன சாய்ஸ் எடுத்துக்கறங்கறது உன் கையில. உனக்கு எப்ப இந்த உலக அனுபவங்கள் எல்லாம் போதும்ன்னு தோணுதோ அப்ப நீ மறுபடியும் விட்ட இடத்துல இருந்து தொடரலாம். அது வரைக்கும் என்னை மாதிரி யாராவது ஒருத்தர் வந்து நினைவுபடுத்திக்கிட்டே இருப்போம்"

"அப்ப நீங்க தான் எனக்கு குருவா?"

"இப்போதைக்கு இல்லை. நீ ஆன்மிகப் பயிற்சியைத் தொடரத் தொடங்கினா ஆகலாம்"

"அப்ப நீங்க யாரு?"

"நானும் உன்னை மாதிரி ஆன்மிகப் பயிற்சியில ஈடுபட்டவன் தான். நீ ஜகன்மோகனா இருக்கிறப்ப நான் சீரடி சாயிபாபாவோட சிஷ்யனா இருந்தேன். நீ சீரடி பக்கம் வந்தப்ப நீயும் நானும் நண்பர்களா இருந்தோம்"

திடீரென்று ஒரு கேள்வி தோன்றியது.

"தாத்தா. நான் எல்லா பிறவியிலயும் ஆம்பளையா தான் பொறந்தேனா?"

"இல்லை மோகன். பெண்ணாகவும் பிறந்திருக்கிறாய்."

"உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியுது. ஏன் எனக்குத் தெரியலை?"

சிரித்துக் கொண்டார் தாத்தா. "கீதையில நாலாவது அத்தியாயம் போல இருக்கு நீ கேக்குறது"

கீதையில் நாலாவது அத்தியாயத்தில் கண்ணன் சொன்னது நினைவிற்கு வந்தது கந்தனுக்கு. சூரியனுக்கு நான் இதனை உபதேசித்தேன் என்று கண்ணன் சொன்னவுடன், 'கிருஷ்ணா நீ என்னைவிட ஒரு நாள் மூத்தவன்; சூரியனோ வெகு நாட்களாக இருப்பவன். அவனுக்கு எப்படி நீ இதனை உபதேசித்தாய்' என்று அருச்சுனன் கேட்க 'பார்த்தா. உனக்கும் எனக்கும் பல பிறவிகள் உண்டு. அவற்றில் எல்லாவற்றையும் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்' என்று கண்ணன் சொல்வான்.

"அப்ப நீங்க கிருஷ்ணன் மாதிரி அவதாரமா தாத்தா?"

"இல்லை மோகன். நான் அவதாரமில்லை. ஆன்மிகப் பயிற்சி செய்யிற ஒரு ஜீவன் தான். நான் மட்டுமில்ல. இங்கெ ஏறக்குறைய எல்லாருமே ஏதோ ஒரு பிறவியில எந்த வகையிலயோ தொடர்பு ஏற்பட்டவங்க தான்"

"அப்ப புதுசாவே யாருக்கிட்டயும் பழகுறதில்லையா?"

"அப்படி சொல்ல முடியாது. புதுசாவும் தொடர்புகள் ஏற்படத் தான் செய்யும். இப்ப மணிகண்டனோட நீ பழகுற மாதிரி"

"அப்படின்னா கேசவன் எப்ப இருந்து என்னோட இருக்கான்?" வேகமாகக் கேட்டான் கந்தன்.

"பதினாறு பிறவியா வர்றான். அவன் மட்டும் தான் ஒவ்வொரு பிறவியிலயும் உன்னோடவே வர்றவன்"

தாத்தா சொல்வதை இன்னும் முழுவதுமாக நம்ப முடியவில்லை கந்தனால். அதற்கு மேல் கேட்பதற்கு ஒரு கேள்வியும் இல்லை என்பது போல் அமர்ந்திருந்தான்.

தூரத்தில் கேசவனும் மணிகண்டனும் காலை உணவு எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

***

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

34 comments:

  1. //Live traffic feed
    Singapore arrived from thamizmanam.com on "கூடல்: புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 13"

    //

    படிச்சாச்சு...வந்து சென்றதற்கான ஆதாரம் அது.
    :)

    ஜோதிடம், மறுபிறவி, முற்பிறவி - நிறைய குழப்பி இருக்கிங்க ... :) என்னை அல்ல மோகனை சாரி கந்தனை.

    ReplyDelete
  2. புத்தாண்டு நல்ல திருப்பங்களோட ஆரம்பிச்சு இருக்கு. உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள் குமரன்.

    ReplyDelete
  3. கந்தன் குழம்பித் தான் போயிருக்கான் போலிருக்கு கோவி.கண்ணன். :-)

    ReplyDelete
  4. நன்றி கொத்ஸ். முந்தின அத்தியாயங்களோட தொடர்பு இப்ப புரிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன். கந்தனைத் தாத்தா குழப்பின மாதிரி உங்களை நான் முந்தி குழப்பிட்டேன்னு நினைக்கிறேன். மன்னிச்சுக்கோங்க. :-)

    ReplyDelete
  5. உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குமரன்!

    இது வரை வந்த பகுதிகளில் இது தான் டாப் க்ளாஸ்!
    உண்மை வெறும் புகழ்ச்சியில்லை!

    ReplyDelete
  6. மிகவும் இயல்பான பல் விளக்கிய பின் ஒரு சூழ்நிலையில் பல்லை மட்டுமா விளக்கிக் கொண்டான் கந்தன்?
    பலதையும் அல்லவா விளக்கிக் கொண்டான்!!!

    கல் பட்டா கண்ணன் தூது முறியும்?
    போகருக்கு நிழல் தந்தா போகம் தணியும்??
    வெளிநாட்டில் பொறாந்தா மட்டும் வெளி ஒன்று தெரியும்??
    வெளிநாட்டுல பொறக்கலையாங்கிற துறுதுறு கேள்விக்குத் தாத்தா தந்த சுறுசுறு பதில் சூப்பரு!

    Indicator/Controller உவமை மிகவும் அருமை! - இது பற்றித் தனியாகச் சில கேள்விகள் இருக்கு உங்க கிட்ட!

    //அவன் மட்டும் தான் ஒவ்வொரு பிறவியிலயும் உன்னோடவே வர்றவன்//

    ஹூம்...விட்ட குறை தொட்ட குறை போலவா? வந்து வழி வழி ஆட்செய்வது போலவா??

    //அதற்கு மேல் கேட்பதற்கு ஒரு கேள்வியும் இல்லை என்பது போல் அமர்ந்திருந்தான்//

    அருமை!
    "இல்லை"-ன்னு நச்-னு முடிச்சிருக்கீங்க! :-)

    ReplyDelete
  7. சீரியசான ஒரு கேள்வி. அறியும் விழைவுடன்.
    பல நண்பர்களின் சார்பாக அடியேன் முன் வைக்கிறேன்.

    //It shows you what choices are in front of you.
    You are the one who will decide the choice you want to make//

    //ஆனா எந்த பிறவியில நீ முக்தி அடைவன்னு சொல்ல முடியாது. That is your choice//

    கல், மரம், கருடன் பிறவிக்கு எல்லாம் indicator-கள் கிடையாதா குமரன்?
    அப்பிறவியில் எல்லாம் who makes the choice? or what makes the choice?

    ReplyDelete
  8. "ஏரணத்திற்கு"

    புதிய சொல்லைத் தெரிந்து கொள்ள முடிந்தது, முடிவிற்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

    ReplyDelete
  10. ஆக இதெல்லாம் முற்பிறவிகளா...ம்ம்ம்ம்......இப்ப கந்தனா வந்திருக்கானாக்கும். ம்ம்ம்.... ஏன் எல்லாக் கல்லுக்கும் பிறவிகள் வரலை? ஒரேயொரு கல்லை மட்டும் (அல்லது சில கற்களுக்கு மட்டும்) பிறவி கொடுத்திருக்காரு கிருஷ்ணரு?

    அப்புறம்.... எல்லாம் இருக்கு. எடுத்துக்கிறது நம்மளோடதுன்னா...அது கடவுளின் விருப்பமா இல்லையா? எதை நம்ம எடுக்குறோம்னு முடிவு பண்றது கடவுளின் எண்ணப்படி நடக்கலையா?

    ReplyDelete
  11. புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி இரவிசங்கர். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    கீதாம்மாவுக்கு நரசிம்மதாசன் கதை புடிச்சிருந்தது. உங்களுக்கு இந்த உரையாடல் பிடிச்சிருக்கா இரவிசங்கர்? :-) ரொம்ப நீளமா போச்சேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். பரவாயில்லை. கதையை விரைவா முடிப்போம்ன்னு போட்டுட்டேன். :-)

    நிறைய கேள்வி கேட்டு பதிலெல்லாம் வாங்கிட்டான் கந்தன். ஆனா இன்னும் அவன் குழம்பித்தான் இருக்கான்னு தோணுது. பலதும் விளக்கிக் கொண்டான்னு சொன்னதுக்காகச் சொன்னேன்.

    உங்க கேள்விகளைக் கேளுங்க இரவிசங்கர். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன். இந்த உவமை தாத்தா சொன்னதுங்கறதால எல்லா கேள்விகளுக்கும் எனக்கு விடை தெரிஞ்சிருக்காது.

    கேசவனுக்கும் கந்தனுக்கும் இடையே இருக்கும் நட்பு ரொம்ப நல்லா இருக்குல்ல. பதினாறு பிறவியா தொடர்ந்து வர்றான்னு தெரிஞ்ச பின்னாடி இன்னும் ரொம்ப நெருங்குன நண்பர்கள் ஆகியிருப்பாங்களோ? தெரியலை.

    இல்லைன்னு எங்கேங்க முடிச்சிருக்கேன். இன்னும் நம்ப முடியாம தான் இருக்கான் கந்தன். :-)

    ReplyDelete
  12. சீரியஸா நல்ல கேள்விகள் கேட்டிருக்கீங்க இரவிசங்கர். தாத்தாகிட்ட கேக்க வேண்டிய கேள்விகள். இல்லாட்டி நம்ம வாத்தியார் ஐயாகிட்ட கேக்கலாம்.

    சீரியஸா என்னோட பதில் 'எனக்குத் தெரியலை தான்'. உங்களுக்கு என்ன தோணுது?

    ReplyDelete
  13. புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி கீதாம்மா.

    ஏறக்குறைய கதை முடிஞ்சிருச்சு கீதாம்மா. அடுத்த அத்தியாயம் சுருக்கமா முடிஞ்சிரும்.

    லாஜிக்ன்னு எழுதாம ஏரணம்ன்னு எழுதியிருக்கேன். அது தான் அதோட பொருள்ன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. //"ஜாதகம் இன்டிகேட்டர் தான் கன்ட்ரோலர் இல்லை. It indicates what can happen due to past actions. It does not control what will happen. The control is with you. It shows you what opportunities are in front of you. It shows you what choices are in front of you. You are the one who will decide the choice you want to make."//
    Vazhkkayin Menmaikku Arumaiya Vazhi Kattal..

    ReplyDelete
  15. இராகவன். நல்ல கேள்விகள். நீங்க கேட்ட கேள்விகளை எல்லாம் கந்தனும் இன்னும் கேட்டுக்கிட்டு இருக்கான் போலிருக்கு.

    ReplyDelete
  16. இந்தத் தொடர்கதையை எழுதும் போது கதையை எப்படி எழுத வேண்டும் என்று நல்ல வழிகாட்டல்களைத் தந்ததற்கு மிக்க நன்றி ஜீவி ஐயா. நீங்க சொன்ன ஆலோசனைகளை நன்கு புரிந்து கொண்டு பயன்படுத்தியிருக்கிறேனா? அடுத்த அத்தியாயத்துடன் கதை நிறைவு பெறும். ஒரு விமர்சனக்கட்டுரை எழுதித் தருகிறீர்களா?

    ReplyDelete
  17. குமரன், இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் முதலில்.

    பலப்பல பிறவிகள் எடுத்தும், ஒவ்வொரு பிறவியிலும் ஒருவர் வந்து அவனை நல்வழிப்படுத்தியும், இன்னும் கந்தன் பிறவிகள் எடுக்கிறான். பார்ப்போம். ஜோதிடம் வேறு அவனைக் குழப்புகிறது.

    மோகனின் கேள்விகளூம் குருவின் பதில்களும் படித்துப் படித்து மனதில் உள் வாங்கிக் கொண்டேன்.

    கண்ணன் தூது முறிந்ததா ?? இல்லைஇல்லை - அவன் வந்த நோக்கம் நிறைவேறியது. அவன் தூது வந்ததே மற்றவர்களின் நிர்ப்பந்தத்தால் தான் - விரும்பி அல்ல.

    கதை முடியப் போகிறது. பொறுத்திருந்து முடிவை எதிர் நோக்குவோம்.

    ReplyDelete
  18. :-))

    கந்தன் - குமரனின் உள்மனமா?

    ReplyDelete
  19. புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி சீனா ஐயா.

    தொடர்ந்து வந்து ஆதரவு தந்ததற்கும் நன்றி.

    ReplyDelete
  20. வாங்க புது மாப்பிள்ளை சார். கந்தன் நம்ம எல்லோரோட உள்மனம்ன்னு சொல்லலாமே? :-) சரியா? :-)

    ReplyDelete
  21. //குமரன் (Kumaran) said...

    வாங்க புது மாப்பிள்ளை சார். கந்தன் நம்ம எல்லோரோட உள்மனம்ன்னு சொல்லலாமே? :-) சரியா? :-)//

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

    பொதுவா எல்லாரோட உள்மனமும்னு சொல்ல முடியுமானு தெரியல. முற்பிறவி நம்பிக்கை எல்லாம் நிறைய பேருக்கு இல்லைனு தான் நினைக்கிறேன் :-)

    (எனக்கு இருக்கு)

    பல கேள்விகள் மனதில் தொக்கி நிற்கின்றன. ஆனா எல்லா கேல்விக்கு பதில் ப்ளாக்ல கிடைக்காது :-))

    ReplyDelete
  22. ஆமாம் பாலாஜி. நம்பிக்கை இருக்கிறவங்களோட உள்மனம்ன்னு தான் சொல்ல வந்தேன். :-)

    கேள்விகளைத் தயங்காம கேளுங்க. நான் சொல்லாட்டி மத்தவங்க சொல்லமலா இருந்திருவாங்க?

    இங்கே கேட்கக் கூடாத கேள்விகள்ன்னா தனிமடல்ல கேளுங்க.

    ReplyDelete
  23. //வெட்டிப்பயல் said...
    பல கேள்விகள் மனதில் தொக்கி நிற்கின்றன. ஆனா எல்லா கேல்விக்கு பதில் ப்ளாக்ல கிடைக்காது :-))//

    பதில் ப்ளாக்-ல கிடைக்கறது கஷ்டம் தான்!
    ஆனா வொயிட்-ல கிடைக்கும் மாப்ளே! :-)

    //பொதுவா எல்லாரோட உள்மனமும்னு சொல்ல முடியுமானு தெரியல//

    நம்ம உள்மனமே நமக்கு எவ்வளவு ஆழமாத் தெரியும்-னு தெரியாது!
    வெளிமனம்-னு வேணும்னா சொல்லலாம்! :-)

    ReplyDelete
  24. கேட்க கூடாத கேல்வினு எல்லாம் இல்லைங்க குமரன். அது பதிவை திசை திருப்பக்கூடும். அதுக்கு தான் யோசிச்சேன்.

    சரி கேள்விகள் இதோ!!!

    1. அந்த முக்தி சாய்ஸ் என்பது எல்லோருக்கும் கிடைப்பதா இல்லை கந்தன் @ மோகனுக்கு மட்டும் கிடைத்ததா?

    2. எல்லோருக்கும் கிடைப்பதாக இருந்தால் இதை போல் ஒரு குரு வந்து வழி காட்டுவார்களா?

    3. இவனுக்கு மட்டுமிருந்தால் அந்த கல் மேல் மட்டும் கண்ணனுக்கு கரிசனம் எதனால் ஏற்பட்டது?

    4. //"பாகவதத்தைச் சுகர் வாயாலேயே கேட்ட எனக்கு ஏன் தாத்தா அப்பவே முக்தி கிடைக்கலை?"//
    //
    "நீ இன்னும் கல்லாவே தானே இருந்த? அதனாலத் தான்" என்று சிரித்த படியே சொன்ன தாத்தா தொடர்ந்தார். "உனக்கு இந்த உலக அனுபவங்களையும் இன்ப துன்பங்களையும் கொடுக்கணும்ன்னு தானே கிருஷ்ணர் உன்னை உதைச்சு உயிர் கொடுத்தது. அப்படி இருக்க உடனே எப்படி முக்தி கிடைக்கும்?"//

    கால் பட்டு உயிர் வந்திருந்தால் அடுத்து இரண்டு தலைமுறை வரை கல்லில் உயிர் இருந்ததா?

    5. பாகவதத்தை கேட்கும் போது கல்லா இருந்ததால மோட்சம் கிடைக்கல. ஆனா அந்த நவபாஷான சிலை செய்யும் போது மரமா இருந்ததே. அதுக்கு எல்லாம் மோட்சம் கிடைக்காதா? (அதாவது பகவதத்தை கேட்பதும் குமரனின் உருவத்தை வடிப்பதை பார்ப்பதற்கு நிகரானது தானே? இல்லை குமரன் (கந்தன்) மொட்சம் கொடுக்க மாட்டாரா?)

    6. பாபா படம் பார்த்திருக்கீங்களா? அதை பார்க்கும் போது என்ன உணர்ந்தீர்கள்?

    ReplyDelete
  25. நல்ல கேள்விங்க பாலாஜி.

    1. வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே. எல்லா ஜீவனும் எந்த வித வேறுபாடுகளும் இன்றி முக்தி அடையலாம் என்பது இந்தியத் தத்துவங்கள் சொல்வது. அதனால அது எல்லோருக்கும் கிடைப்பது தான். முந்தையப் பிறவிகள்ல கந்தன் ஆன்மிகப் பயிற்சியெல்லாம் செஞ்சுருந்ததால அவனுக்கு இந்தப் பிறவியில் கொஞ்சமே கொஞ்சம் பயிற்சி செய்தால் முக்திக்கு வாய்ப்புண்டு. அதனை அவன் ஜாதகமும் கைரேகையும் காட்டுது. மத்தவங்களுக்கு அந்த நிலை வந்தால் அவர்களுக்கும் அந்த வாய்ப்புகள் இருக்கும்; ஜாதகமும் கைரேகையும் காட்டலாம். காட்ட வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. வேறு வகையில் அவை காண்பிக்கப்படலாம்; எந்த இன்டிகேசனும் இல்லாமலும் முக்தி கிடைக்கலாம். There are too many possibilities.

    2. அந்த ஜீவனுக்குத் தேவையிருந்தால் குரு வருவார். Again there are too many possibilities.

    3. தெரியாது. கண்ணனைத் தான் கேட்க வேண்டும். வைணவத் தத்துவம் இந்த மாதிரி நடப்பதை அஹேதுக கிருபை (காரணமில்லாத கருணை) என்று சொல்கிறது.

    4. கல் என்பதால் அவ்வளவு நாட்கள் உயிருடன் இருந்தது போலும்.

    5. பாகவதம் கேட்டதால பரிட்சித்துக்கு மோட்சம் கிடைச்சதா கந்தன் படிச்சிருக்கான். அதனால டக்குன்னு அதைக் கேட்டான். அவனைப் பொறுத்தவரை கண்ணன் கதை தான் மோட்சம் தரும்; முருகன் சிலை மோட்சம் தராது என்ற எண்ணம் எல்லாம் இல்லை. :-)

    6. பாபா படத்தை முழுவதுமாகப் பார்த்ததில்லை. பாடல்களைப் பார்த்திருக்கிறேன். அதனாலேயே படத்தைப் பார்க்காமல் விட்டேன். நீங்கள் கேட்பதைப் பார்த்தால் பார்க்க வேண்டும் போலிருக்கிறதே. :-)

    ReplyDelete
  26. முதல் கேள்வியை தப்பா புரிஞ்சிக்கிற மாதிரி சொல்லிட்டேன் போல...

    1. முக்தி ஜீவாத்மாவோட சாய்ஸா இல்லை பரமாத்மாவோட சாய்ஸா? (அதாவது மனிதனோட விருப்பமா இல்லை இறைவனின் விருப்பமா?)

    பாபா படம் நீங்க கண்டிப்பா பார்க்கனும். ஆனா DVDல பாருங்க. பாதி படத்துக்கு மேல ஓட்ட வேண்டியதிருக்கும் ;)

    ReplyDelete
  27. நாலாவது கேள்வியும் தப்பா கேட்டுட்டேன் :-)

    கல்லுக்கு உயிரில்லாததால் மொட்சமடையவில்லைனு சொன்னீங்க. ஆனா அதுக்கு உயிர் வந்து இரண்டு தலைமுறையே வந்து விட்டது. (உயிர் - ஆன்மா எல்லாம் ஒரு பொருளா இல்லை வெவ்வேறா?)

    உயிர் இருந்திருந்தால் அதுக்கு மோட்சம் கிடைத்திருக்கனும் தானே?

    ReplyDelete
  28. பாலாஜி. உங்க Rewritten முதல் கேள்விக்கு பதில் சொல்லணும்ன்னா இராகவனுக்குச் சொன்ன பதிலைத் தான் சொல்லணும் - உங்க கேள்வி கந்தனுக்கும் இருக்கும் போலிருக்கு. :-)

    பாபா படம் கிடைச்சா பாக்குறேன் பாலாஜி.

    தாத்தா சொன்ன பதில் கல்லுக்கு உயிரில்லாததால மோட்சம் இல்லைன்னு தொனிச்சிருச்சோ? அப்படி சொல்லலை தாத்தா. கல்லுக்கு உயிர் வந்த பின்னாடி தான் பாகவதம் கேட்டிருக்கு. அதனால பரிக்ஷித்துவிற்கு கிடைச்ச மாதிரி மோட்சம் கல்லா இருந்தப்பவே கிடைச்சிருக்கணுமேன்னு கந்தன் கேக்குறான். அதுக்கு தாத்தா கண்ணன் அப்படி நினைக்கலை. நீ 'அனுபவிக்கணும்'ன்னு நினைச்சதால உனக்கு மோட்சம் தரலைன்னு சொல்லி சமாளிக்கிறார். நீங்க கேட்ட முதல் கேள்வியைத் தான் இங்கே தாத்தா தொட்டிருக்கார். ஆனா சரியா விடை சொல்லலை. அதான் கந்தனுக்கு உங்க கேள்வி இன்னும் இருக்கு.

    இங்கே உயிர்-ஆன்மா ரெண்டையும் ஒரே பொருளில் தான் பயன்படுத்தியிருக்கேன். வேறுபாடு சொல்லணும்னா சொல்லலாம்.

    கடைசி அத்தியாயமும் வந்துரட்டும் பாலாஜி. இன்னும் இருக்குற கேள்வியெல்லாம் அப்ப கேக்கலாம். சில கேள்விகளுக்கு எந்த விடையும் சொல்லாம தான் கதையை முடிக்கப் போறேன்.

    விமர்சனக் கட்டுரையை ரெடி பண்றீங்க தானே? அடுத்து வரிசையா நண்பர்களின் விமர்சனம் தான் வரணும். :-)

    ReplyDelete
  29. அருமையா இருந்தது குமரன்.
    பலருக்கு கதையின் போக்கு புரிந்திருக்கும், இப்போ - அதற்குள்ளே முடிகிறது என்கிறீர்களே!
    ஜோதிடம், ஜாதகம் பற்றி தீர்கமான கருத்து சொன்னது குழம்பிப் போயிருக்கும் வாசகர்களுக்கு நிச்சயம் தீர்வாக அமையும்!

    ReplyDelete
  30. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குமரன்.

    இன்னும் சில அத்யாயங்கள் இருக்கிறது, படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  31. புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி மௌலி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    முந்தைய அத்தியாயங்களைப் படிக்காமலேயே இந்த அத்தியாயத்தைப் படிச்சுட்டீங்களா?

    ReplyDelete
  32. இந்தப் பின்னூட்டங்களும், அதற்கான பதில்களுமாய்ச் சேர்ந்து கதையின் அர்த்தத்தை நன்கு புரிய வைக்கும் அனைவருக்கும் என்று நினைக்கிறேன். இன்றுதான் எல்லாப் பின்னூட்டங்களையும் படித்தேன்.

    ReplyDelete
  33. முதலிலேயே முற்பிறவிகளைப் பற்றிய கதைகள் என்று சொல்லியிருந்தால் தொடக்கத்திலேயே எல்லோருக்கும் கதையின் போக்கு புரிந்திருக்கும் ஜீவா. ஆனால் மனத்தில் தொடர்கதை எப்படி அமையவேண்டும் என்று முதலில் நினைத்தேனோ அதே அமைப்பிலேயே எழுதி வந்தேன். அதனால் தலைப்பில் மட்டும் குறிப்பைத் தந்துவிட்டு அதனையே மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டிக் கொண்டு வந்தேன். சில நண்பர்களுக்குப் புரிந்துவிட்டது. ஓரிருவர் புரிந்தும் புரியாத மாதிரியே கடைசி வரையில் இருக்கின்றார்கள் (யாரென்று கேட்காதீர்கள். சொல்ல மாட்டேன். :-) )

    கதையில் சொல்ல வேண்டியவை எல்லாம் (சொல்ல நினைத்தவை எல்லாம்) சொல்லியாயிற்று. அப்புறம் கதையை நிறைவு செய்ய வேண்டியது தானே. சொல்ல வருவதை எப்படி கதையாகச் சொல்வது என்பதில் ஒரு பயிற்சி இப்போது கிடைத்துவிட்டதால் இந்த மாதிரி சிறுகதைகளோ தொடர்கதைகளோ இனி மேலும் எழுதுவேன் என்று நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ். பார்ப்போம்.

    ReplyDelete
  34. ஆமாம் கீதாம்மா. இரவிசங்கர், இராகவன், பாலாஜி இவர்களின் எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்லவில்லை. தாத்தாவிடமும் கேட்டுச் சொல்ல இயலவில்லை. இனி மேல் தாத்தாவைப் போல் யாராவது வந்து சொன்னால் தெரிந்து கொள்ளலாம். :-)

    ReplyDelete