Monday, November 19, 2007

சிவவாக்கிய சித்தர் போற்றும் இராம நாமம்

சிறு வயதில் 'அருள் வழித் துதிகள்' என்று ஒரு புத்தகத்தை அம்மா அறிமுகம் செய்து வைத்தார்கள். மதுரைக் கோவிலிலும் திருப்பரங்குன்றம் கோவிலிலும் அந்த புத்தகம் கிடைக்கும். இப்போதும் கிடைக்கின்றது என்று நினைக்கிறேன். பல துதிப்பாடல்கள் எனக்கு அறிமுகம் ஆனது அந்தப் புத்தகம் மூலமாகத் தான்.

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

என்று தொடங்கி சிவவாக்கிய சித்தரின் பாடல்கள் சில அறிமுகம் ஆனதும் அந்தப் புத்தகத்தின் மூலமாகத் தான். சந்தத்தில் இந்தப் பாடல்கள் மிக அருமையாக இருக்கும். வலைப்பதிவு எழுத வந்த பின் ஞானவெட்டியான் ஐயா சிவவாக்கியரின் பாடல்கள் எல்லாவற்றையும் வலையேற்றுவதைக் கண்டு மிக மகிழ்ந்து தொடர்ந்து படிக்கத் தொடங்கினேன். சிவவாக்கியரின் பாடல்களில் இருக்கும் சந்தத்தை வெகு நாட்களாக எந்தப் பாடலிலும் கண்டதில்லை. திருமழிசையாழ்வார் பாசுரங்களைப் படிக்கும் வரை. அந்தப் பாசுரங்கள் எல்லாம் அதே சந்தத்தில் வரும். சிவவாக்கியரே திருமழிசையார் என்றொரு வழக்கும் உண்டு.

ஐந்தெழுத்து மந்திரத்தின் பெருமையைப் பலவாறாகப் பேசிவரும் சிவவாக்கியரின் பாடல்கள்.

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்!
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்து கூற வல்லீரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்ப்லத்தில் ஆடுமே


போன்ற பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கும்.



அப்படி அஞ்செழுத்து மந்திரத்தைப் போற்றும் சிவவாக்கிய இராம நாமத்தையும் போற்றி சில பாடல்கள் பாடியிருக்கிறார்.

அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
சிந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே

அந்தி காலங்கள் இரண்டிலும் (காலை, மாலை) உச்சிப் பொழுதிலும் தீர்த்தம் ஆடி செய்யும் சந்தியா வந்தனமும், தர்ப்பணங்களும், தபங்களும், செபங்களும், இவற்றால் சிந்தையில் மேவும் ஞானமும் எல்லாமும் சிந்தையால் தினம் தினம் இராம இராம இராம என்ற நாமத்தை செபிப்பதால் கிட்டும்.

சதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாம் இதாம நல்லவென்று வைத்துழலும் மோழைகாள்
ச்தா விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம ராம ராம ராம என்னும் நாமமே


எப்பொழுதும் பஞ்சமாபாதகங்களைச் செய்து விட்டு அந்தப் பாவங்களைத் தீர்க்க 'இது தான் சிறந்த மந்திரம்', 'இது தான் சிறந்த மந்திரம்' என ஒவ்வொன்றாக நினைத்துக் குழம்பும் மடமை உடையவர்களே. இராம இராம என்ற மந்திரமே இதாம் இதாம் என்று சொல்லி மகிழ்ந்து சதா காலமும் விடாமல் ஓதுவார்க்கு நல்ல மந்திரமாகும்.


நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராம என்ற நாமமே

நான் என்றும் நீ என்றும் நாம் பேசும் பொருட்கள் எல்லாம் ஏது? நம் இருவருக்கும் நடுவில் நாம் இருவரும் அல்லாமல் இருப்பது எது? கோனாகிய தலைவன் யார்? குரு யார்? கூறிடுவீர்கள். ஆனது எது? அழிவது எது? எல்லாப் பொருள்களையும் உட்கொண்டு அப்புறத்தில் அப்புறமாக கடைசியிலும் நிற்பது எது? அது இராம இராம என்னும் நாமமே.

போதடா எழுந்ததும் புலனாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சும் மூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடா விராம ராம ராம என்னும் நாமமே


காலையில் (பொழுதில்) எழுந்ததும் (கதிரவன்), மலராக எழுந்ததும் (போது - மொட்டு), கண்ணுக்குப் புலனான ஒளியாக வந்ததும், தாது என்னும் மகரந்தமாகியும் (உயிர்ச்சக்தியாகியும்) உள்ளே புகுந்ததும், தானாக விளைந்ததும் எது? அந்த மந்திரத்தை ஓது. ஐந்தும் மூன்றும் (5+3) ஒன்று சேர்ந்த எட்டெழுத்து மந்திரத்தை ஓது. இராம இராம இராம என்ற மந்திரத்தை ஓது.

35 comments:

  1. மிக எளிமையா என்னைமாதிரி ஆட்களுக்கும் புரியுமாறு இருக்கிறது. நன்றி குமரன்.....

    ReplyDelete
  2. //சிவவாக்கியரே திருமழிசையார் என்றொரு வழக்கும் உண்டு//

    விளக்கம் ப்ளீஸ்! :-)

    ReplyDelete
  3. சிவவாக்கியர் பாடல்களின் சந்தம், அவர் கருத்துக்களைப் போலவே கம்பீரமான நடைச் சந்தம், குமரன்!
    தடங், தடங் என்ற ஓசை!

    //அஞ்செழுத்தில் "ஓர்" எழுத்து அறிந்து கூற வல்லீரேல்//

    அருமை! அருமை!
    அறிந்து கூர, அறிந்து கூற வேண்டும்!

    //ஓதடா அஞ்சும் மூன்றும் ஒன்றதான அக்கரம்//

    இதில் அஞ்சும், மூன்றும் என்னும் போது
    அஞ்சும் வந்து விட்டது
    அஞ்சும் மூன்றும் வந்து விட்டது!

    அஞ்சு = நமசிவாய என்பதும் அஞ்சு தான்; நாராயணாய என்பதும் அஞ்சு தான்!
    அஞ்சும் மூன்றும் ஒன்றதான அக்கரம் என்னும் திருவெட்டெழுத்தில் பிரணவாகாரம் பிரிக்க முடியாத ஒன்று! இந்த மூன்று தான் அஞ்சோடு சேர்ந்து தனிப்பொருள் தருகிறது!
    மற்றபடி ரெண்டுமே அஞ்சு தான்! தேசிகரின் தத்துவ த்ரயம் படித்தால் இன்னும் கொஞ்சம் விளங்கும்!

    திருவந்திப்புரம் என்னும் திருவகீந்திரபுரத்தில் பெருமாள் முக்கண்ணனாக, மூன்று கண்களோடு சிவ தத்துவமாகத் தான் விளங்குகிறான். இங்கு தான் தேசிகருக்கும் தத்துவ த்ரயம் காட்டி அருளினான்!

    ReplyDelete
  4. மௌலி,

    அதென்ன என்னை மாதிரி ஆட்களுக்கு? எனக்கும் சித்தர் பாடல்கள் எல்லாம் அவ்வளவா புரியாது. சிவவாக்கியர் பாடல்கள் கொஞ்சம் எளிமையா இருக்குன்னு நினைக்கிறேன். :-)

    ReplyDelete
  5. விளக்கம் எல்லாம் தர முடியாது இரவிசங்கர். தெரிஞ்சுக்கணும்ன்னு கேட்டா சொல்லலாம். தெரிஞ்சுக்கிட்டே கேட்டா சொல்லமுடியாது. :-)

    ReplyDelete
  6. வேதாந்த தேசிகரின் தத்வ த்ரய சாரம் படிச்சிருக்கேன் இரவிசங்கர் - புரிஞ்சும் புரியாமலும். :-) திருவஹீந்திரபுர பெருமாள் முக்கண்ணனாக இருப்பதை நினைவூட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. //குமரன் (Kumaran) said...
    விளக்கம் எல்லாம் தர முடியாது இரவிசங்கர். தெரிஞ்சுக்கணும்ன்னு கேட்டா சொல்லலாம். தெரிஞ்சுக்கிட்டே கேட்டா சொல்லமுடியாது. :-)//

    அலோ...தெரிஞ்சுக்கணும்ன்னு என்ற ஆவலைத் தெரிஞ்சுக்கிட்டே தான் தெரியாம கேட்டேன்! :-)
    நீங்க தெரிஞ்சுக்கிட்டே, தெரிஞ்சதைத் தெரிஞ்சுக்கத் தரமாட்டேன்னு தெரியாமச் சொல்லுறீங்க! :-)

    இது தெரிஞ்சா தமிழ் கூறும் பதிவுலகம் தாங்குமா? சரி பரவாயில்லை!
    தெரிஞ்சோ தெரியாமலோ சொல்லிட்டீங்க! இப்ப தெரிஞ்சதை சொல்லுங்க! தெரிஞ்சிக்கறோம்!

    ReplyDelete
  8. குமரன்,

    சிவவாக்கியரைக் கல்லூரிக் காலத்தில் படித்த போது என்னில் பதிந்தது,
    "சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
    வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ"
    என்கிற வரிகளில் தெறித்த பகுத்தறிவு தான்.

    அதன்பிறகும் சிவவாக்கியரை முழுதும் படித்தால் அவர் எந்த நாமத்தையும் புகழ்ந்திருப்பதாகத் தோன்றவில்லை. "பஜனை செய்வோம் கண்ணன் நாமம்; பட்டினி கிடந்து, பஜனை செய்வோம் கண்ணன் நாமம்" என்று பராசக்தி படத்தில் கிறுக்கண்ணன் வேடத்தில் சிவாஜி பாடுவாரே அந்தத் தொனியில் இருக்கும் பக்தி(?) தான் சிவவாக்கியரின் பாடல்களில் இருப்பது என்றே நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  9. இரவிசங்கர். வழக்குகளைப் பற்றி எல்லாம் இன்னொரு நாள் பேசலாம். :-)

    http://members.tripod.com/~sriramanujar/thirumazhis.html

    ReplyDelete
  10. நல்ல வரிகள் இரத்னேஷ். இந்த வரிகளோடு நிறுத்திவிடாமல் அடுத்த வரிகளையும் எல்லா பாடல்களையும் படித்துப் பாருங்கள். உங்கள் புரிதல் மாறலாம்.

    அப்படியே முடிந்தால் இங்கே தந்துள்ள நான்கு (ஐந்து) பாடல்களில் எங்கே கிறுக்கண்ணனைப் போல் சிவவாக்கியர் பக்தியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் என்று சுட்டிக் காட்டுங்கள். என் புரிதல் மாறலாம்.

    :-)

    ReplyDelete
  11. எளிமை - அருமை - குழந்தகளுக்கும் அறிமுகம் செய்திட வேண்டும் - செய்வோம்

    ReplyDelete
  12. குமரன்,

    //விளக்கம் எல்லாம் தர முடியாது இரவிசங்கர். தெரிஞ்சுக்கணும்ன்னு கேட்டா சொல்லலாம். தெரிஞ்சுக்கிட்டே கேட்டா சொல்லமுடியாது.//

    ஆசிரியர் பரீட்சையில் கேள்வி கேட்பது தனக்குத் தெரியாததைத் தெரிந்து கொள்வதற்காக அல்ல; அந்த மாணவனுக்கு பதில் தெரியும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்ட.


    அவருக்காக வேண்டாம்; எங்களுக்கெல்லாம் நிஜமாகவே தெரியாத விஷயம் தானே அது? சொல்லுங்களேன்.

    (சிவவாக்கியரின் பாடல்கள் பற்றிய கேள்விக்கான பதிலை மாலைக்குள் தருகிறேன்)

    ReplyDelete
  13. இரத்னேஷ். இரவிசங்கருக்குத் தந்த அடுத்தப் பின்னூட்டப் பதிலைப் பாருங்கள். ஒரு சுட்டியைத் தந்திருக்கிறேன். அதில் திருமழிசையாழ்வார் வரலாறு தரப்பட்டிருக்கிறது. அதில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்புவதைக் காணலாம்.

    ReplyDelete
  14. இரத்னேஷ்.

    சிவவாக்கிய சித்தர் தான் பின்னாளில் திருமழிசை ஆழ்வார் ஆனார் என்றொரு கருத்து உண்டு. திருமழிசையாழ்வார் தன்னுடைய பாசுரங்களில் ஒன்றில் தான் சமணம், சாக்கியம், சைவம் என்று எல்லா சமயங்களின் தத்துவங்களையும் படித்துப் பின்னர் வைணவத்தில் நிலை நின்றதாகச் சொல்லியிருக்கிறார். அவர் சைவராக சிவவாக்கியராக இருந்த போது பேயாழ்வாரால் வைணவராக மாற்றப்பட்டார் என்று சொல்வார்கள். ஒரு முறை பேயாழ்வார் செடிகளைத் தலைகீழாக நட்டு துளைகள் நிறைந்த பானையால் நீர் இறைத்து அந்தச் செடிகளுக்கு ஊற்றுவதைப் பார்த்து சிவவாக்கியர் அவரைக் கேள்வி கேட்க, அவர் 'நீர் புறச்சமயத்தில் நின்று உழலுவதும் இது போல் தான்' என்று சொல்லி வைணவராக மாற்றினார் என்று சொல்வார்கள்.

    பாடல்களின் சந்தம் ஒத்துப் போனது தற்செயலாக இருக்கலாம். அதனால் சிவவாக்கியர் தான் திருமழிசையாழ்வாராக மாறினார் என்ற கருத்தினை ஏற்றுக் கொள்ள இயலாது என்று 'வழக்கு' உண்டு. அதனைத் தான் இரண்டு பொருளில் 'வழக்கு - வழக்கம்(கருத்து), வழக்கு (பிணக்கு) இருக்கிறது' என்று இடுகையில் குறிப்பிட்டேன்.

    ReplyDelete
  15. குமரன்,

    தங்களுடைய இடுகைகளில் இருக்கும் பொறுப்பு தருகின்ற லேசான பயமே தங்களுக்கு எழுதும் முன் இன்னொரு முறை யோசித்துக் கொள்ளலாமா என்று எண்ண வைக்கிறது. அதற்கு என் முதல் நன்றி.

    சிவவாக்கியருக்கு வருகிறேன்.

    தாங்கள் சுட்டியுள்ள பாடல்களில் கிண்டல் இருப்பதாக நான் சொல்லவில்லை. இவை மட்டுமின்றி இன்னும் பலபாடலக்ளில் ஓரெழுத்து ஈரெழுத்து என்று பத்தெழுத்து வரையில் மந்திரங்களைச் சிலாகித்து எழுதுவது போல் எழுதி இருக்கிறார்.

    அவற்றைச் சொல்லி விட்டு அவர் மேலும் ஆழமாக உள்சென்று கூறுவதை மற்ற பாடல்களில் பரவலாகக் காண முடிகிறது.

    சிவவாக்கியரின் த்தப்பாடல்களையும் (500-க்கு மேற்பட்டவை என்னிடம் உள்ள பழைய நூலில் இருக்கின்றன) படிக்கும் போது அவருடைய ENLIGHTENMENT தெரிவதாக எண்ணுகிறேன். மந்திரம் சாமி பூதம் உருவ வழிபாடு போன்றவற்றை எல்லாம் தாண்டியது ஆன்மீகம் என்கிற அவருடைய பார்வை தான் எனக்கு அவர் மீது ஈடுபாடு வந்ததற்கே காரணம்.

    விளக்கமே தேவைப்படாத அவருடைய பாடல்களில் மிகச் சிலவற்றைத் தருகிறேன். நீங்கள் ஏற்கெனவே படித்திருப்பீர்கள். மீள் ஞாபகத்திற்காக:

    நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்தம் நித்தம் நீரிலே
    விருப்பமோடு நீர்குளிக்கும் வேதவாக்யம் கேளுமின்
    நெருப்பும் நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல்
    சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடல் ஆகுமே

    கோயிலாவதேதடா குளங்களாவதேதடா
    கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
    கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
    ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே

    பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதைகாள்
    பூசையுள்ள தன்னிலே பூசை கொண்ட தெவ்விடம்
    ஆதி பூசை கொண்டதோ அனாதி பூசை கொண்டதோ
    ஏது பூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே

    இருக்க நாலு வேதமும் எழுத்தை அறவோதினும்
    பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான் இரான்
    உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லீரேல்
    சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடல் ஆகுமே

    வாயிலே சுரக்கு நீரை எச்சில் என்று சொல்கிறீர்
    வாயிலே குதப்புவேதம் எனப்படக் கடவதோ

    தில்லைநாயகன் அவன் திருவரங்கனும் அவன்
    எல்லையான புவனமும் ஏகமுத்தியானவன்
    பல்லும்நாவும் உள்ளபேர் பகுத்துக் கூறி மகிழுவார்
    வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே

    சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள்
    தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என்செய்வேன்

    அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
    அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
    அஞ்செழுத்தும் நெஞ்செழுத்து அவ்வெழுத்து அறிந்தபின்
    அஞ்செழுத்தும் அவ்வின்வண்ணம் ஆனதே சிவாயமே

    சத்தியாவது உன்னுடல் தயங்குசீவன் உட்சிவம்
    பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே.

    இந்த ஊரில் இல்லை என்று எங்கு நாடி ஓடுறீர்
    அந்த ஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே

    சாத்திரங்கள் பார்த்துப் பார்த்துத் தான் குருடு ஆவதால்
    நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதி செய் மூடர்காள்

    இந்த வரிகள் என்னுடைய கருத்து வலுப்படப் போதுமானதாக இருந்தன.

    எல்லாவற்றிற்கும் மேலாக, "If God is Omnipotent, and if he can be moved by a simple prayer, doesn't it amount to claiming a share of omnipotence?" என்று பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் ஒரு கட்டுரையில் எழுதி இருந்ததைப் பின்னாளில் படித்த போது
    "அடக்கினால் அடங்குமோ அண்டம் அஞ்செழுத்துளே"
    "அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கென்றால் அசங்குமோ"
    "கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ"
    என்றெல்லாம் சிவவாக்கியர் கேட்டிருந்தது ஞாபகம் வர, அட, ரஸ்ஸலும் சிவவாக்கியரைப் படித்திருப்பாரோ என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  16. //மந்திரம் சாமி பூதம் உருவ வழிபாடு போன்றவற்றை எல்லாம் தாண்டியது ஆன்மீகம் என்கிற அவருடைய பார்வை தான் எனக்கு அவர் மீது ஈடுபாடு வந்ததற்கே காரணம்.
    //
    இது அவரவர் மெய்ஞான வளர்ச்சியைப் பொறுத்தது. இதுதான் ஆன்மீகம் என்றேதையும் வரையுறுத்த இயலாது.
    நமது சித்தரோ, பல நிலையில் எழுதியிருக்கலாம், அல்லது பல நிலையில் இருப்போருக்கும் எழுதி இருக்கலாம்.

    இரத்னேஷ் குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தும் அருமை. படம் பிடித்து சுவரில் மாட்டிடலாம்!

    ReplyDelete
  17. //தங்களுடைய இடுகைகளில் இருக்கும் பொறுப்பு //

    இரத்னேஷ். எழுத்தாளர்களையும் அவர்கள் எழுத்தையும் நீங்கள் குழப்பிக் கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும். :-) என் எழுத்துகளில் வேண்டுமானால் பொறுப்பு தென்படலாம். ஆனால் அடியேன் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாதவன். இரண்டையும் நீங்கள் குழப்பிக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். :-)

    ReplyDelete
  18. நன்றி ஜீவா வெங்கட்ராமன் சார்.

    குமரன், அடியேன் அடியேன் என்று வன்முறைக் கலாச்சாரத்தை விடாமல் தூண்டும் செயலை இந்த பக்தர்கள்(!) எப்போது விட்டொழிப்பார்கள்?

    ReplyDelete
  19. இரத்னேஷ். அடியேன் அடியேன் என்று தானே முன் வருபவர்களை அடிக்கவும் மனது வருமா? இதெல்லாம் 'அவர் நாண நன்னயம் செய்துவிடல்' ஐடியாவைச் சேர்ந்தது.
    :-)

    ReplyDelete
  20. இரத்னேஷ். 'மந்திரம், சாமி, பூதம், உருவ வழிபாடு போன்றவற்றை எல்லாம் தாண்டியது ஆன்மிகம் என்கிற பார்வை உடையவர் சிவவாக்கியர்' என்பது உங்கள் கருத்தா 'பராசக்தி படத்தில் கிறுக்கண்ணன் பாடும் தொனியில் பக்தியைப் பற்றிப் பாடியவர் சிவவாக்கியர்' என்பது உங்கள் கருத்தா என்பதில் எனக்கு இப்போது கொஞ்சம் குழப்பம். உங்களைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்று தான் என்று நினைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரி தானா? அப்படி என்றால் எனக்கு அவற்றிற்கிடையே உள்ள தொடர்பு புரியவில்லை.

    நான் இங்கே தந்துள்ள பாடல்களில் கிண்டல் தொனிக்கவில்லை என்பதை உறுதி செய்ததற்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் அவர் இந்த மந்திரங்களை சிலாகிப்பதோடு நிறுத்தாமல் மேலேயும் சொல்லித் தான் இருக்கிறார். நீங்கள் சொன்னதில் ஒரே ஒரு இடத்தில் மாறுபடுகிறேன். அவர் சிலாகித்துச் சொல்வது 'போல்' சொல்லியிருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர் சிலாகித்துத் தான் சொல்லியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அப்படி நாம் நினைப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று கொஞ்சம் பார்க்கலாம்.

    ஆன்மிகம் என்பது உருவ வழிபாடு, மந்திரங்கள், சடங்குகள் இவைகளை எல்லாம் உட்கொண்டு அவற்றையும் தாண்டி இருக்கிறது. அதனால் அவற்றோடு நின்று விடாமல் உருவ வழிபாடு, மந்திரங்கள், சடங்குகள், தத்துவங்கள் இவை எல்லாம் எவற்றிற்குக் குறியீடாக இருக்கிறது என்பதைச் சிந்தை செய்யவும் வேண்டும் - இதனைத் தான் எல்லா நிலைகளிலும் இருக்கும் மக்களுக்காக கேள்விகளாகவும் அறிவுரைகளாகவும் சிவவாக்கியர் சொல்லியிருக்கிறார் என்பது என் கருத்து.

    ஆன்மிகம் என்பது உருவ வழிபாடு, மந்திரங்கள், சடங்குகள் இவைகளில் எவையும் இல்லை. இவற்றை எல்லாம் 'விட்டுவிட்டு' அவற்றையும் எல்லாம் தாண்டியது தான் ஆன்மிகம் என்று சொல்லுவதாக நீங்கள் நினைக்கிறீர்கள். சரி தானா?

    அதனால் தான் இவை எல்லாம் ஆன்மிகம் தான்; அதனால் 'மந்திரங்களைச் சிலாகித்துச் சொல்கிறார்' என்று நான் நினைக்க நீங்கள் 'மந்திரங்களைச் சிலாகித்துச் சொல்வது போல் சொல்கிறார்' என்று நினைக்கிறீர்கள். சரி தானா?

    என் மறுமொழி இன்னும் முடியவில்லை. இப்போது படம் பார்க்கக் குடும்பம் அழைக்கிறது. படம் பார்த்துவிட்டு வந்துத் தொடர்கிறேன். பொறுமைக்கு நன்றி. :-)

    ReplyDelete
  21. இரத்னேஷ்,

    சித்தர்களின் பாடல்களிலேயே கொஞ்சமாவது புரிகின்ற மாதிரி எளிமையாக இருப்பது சிவவாக்கியர் பாடல்கள் தான். ஆனால் நான் அவர் பாடல்கள் என்று 500க்கும் மேற்பட்ட பாடல்களைப் படித்ததில்லை. படித்ததெல்லாம் ஐம்பதோ அறுபதோ தான். ஞானவெட்டியான் ஐயா அவர்களின் பதிவிலும் அவ்வளவு தான் இருக்கின்றன. இனி மேல் வலையேற்றுவார் என்று நினைக்கிறேன்.

    நீங்கள் தந்த பாடல்களைப் பார்க்கலாம்.

    முதல் பாடலில் நெருப்பில் நெய் விட்டுச் செய்யும் வேள்விக்கும் நீரில் தினந்தோறும் குளித்து வேத வாக்கியங்களை ஓதுவதற்கும் இருக்கும் உட்பொருளை மறந்துவிட்டு வெறும் சடங்குகளாகச் செய்வதை மறுத்து அவற்றின் உட்பொருளை நினைக்குமாறு அறிவுறுத்துகிறார். அப்படி உள்ளிருக்கும் நெருப்பின் குறியீடாக வெளி நெருப்பும் உள்ளிருக்கும் அன்பிற்கு குறியீடாக வெளி நெய்யும், உள்ளிருக்கும் கருணைக்கு குறியீடாக வெளி நீரையும் நன்கு நினைத்துக் கொண்டு அந்த வேத வாக்கியங்களைக் கூறினால் அழிவற்ற ஒளியுருவான இறையைத் தொடர்ந்து கூடி இருக்கலாம் என்கிறார்.

    ReplyDelete
  22. முதல் பாடலில் சொல்லப்பட்டக் கருத்தைப் போன்றே இரண்டாம், மூன்றாம், நான்காம் பாடல்களிலும் சொல்கிறார்.

    ஐந்தாம் பாடலைப் பாதி தான் கொடுத்திருக்கிறீர்கள். மீதியைத் தேடிப் பார்த்தேன். ஞானவெட்டியான் ஐயா பதிவில் இருக்கிறது. முதல் இரு வரிகளுக்குப் பொருள் புரிந்த மாதிரி இருந்தாலும் அடுத்த இரு வரிகளுக்குப் பொருள் புரியவில்லை. வேதங்களுக்குத் தனிப்பட்ட பெருமை இல்லை. அந்த சொற்களை விட அவை குறிக்கும் உட்பொருளுக்குத் தான் மதிப்பு அதிகம் என்று சொல்கிறாரோ என்று தோன்றுகிறது. முழுப்பாடலும் இதோ

    வாயிலே குடித்த நீரை எச்சிலென்று சொல்லுறீர்
    வாயிலே குதப்பு வேத எனக்கடவதோ (ஒரு சொல் குறைவது போல் தோன்றுகிறது - சந்தம் சரியாக வரவில்லை)
    வாயின் எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
    வாயின் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே!

    ReplyDelete
  23. அடுத்த பாடலைப் படிக்க என் மனத்திற்கு மிக மிக இதமாக இருக்கிறது. தில்லை நாயகனையும் திருவரங்கனையும் ஒரே அடியில் சொல்வதைப் பார்க்கும் போது அவர் காலத்திலேயே தில்லை என்பது சைவர்களின் 'கோயில்' எனவும் திருவரங்கம் வைணவர்களின் 'கோயில்' என்றும் நன்கு நிலை பெற்று விட்டது என்று தெரிகிறது. இந்தப் பாடல் இன்னொன்றையும் எனக்குச் சொல்கிறது. உருவ வழிபாட்டை அவர் மறுத்துக் கூறவில்லை; உருவத்தில் இருக்கும் ஒற்றுமையைப் புரிந்து கொள்ளாமல் பகுத்துக் கூறிக் கொண்டிருப்பவரகளைச் சாடுகிறார்.

    அடுத்தப் பாடலைத் தேடிய போது மதுரைத் திட்டத்தில் 500க்கும் மேற்பட்ட சிவவாக்கியர் பாடல்கள் இருக்கும் பக்கம் கிடைத்தது. அதனை இனி படிக்கிறேன். தேட வைத்த உங்களுக்கு நன்றி.

    சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள்
    தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் செய்வேன்
    மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
    காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே.

    இங்கேயும் வெறும் சடங்குகளை மறுத்து அவற்றின் உட்பொருளான உள்ளிருக்கும் முக்கண்ணனைக் காணுங்கள் என்று சொல்கிறார்.

    அடுத்துத் தந்திருக்கும் பாடல்களையும் இப்படியே படித்துப் புரிந்து கொள்ளலாம். இவற்றை இன்று படித்துப் பொருள் உணர ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி இரத்னேஷ்.

    ReplyDelete
  24. சொல்ல மறந்தேனே. அடுத்தப் பாடல்களின் பொருளினையும் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் சொன்னதைப் பற்றியும் இனி வரும் பின்னூட்டங்களில் சொல்கிறேன். இப்போது கொஞ்சம் ஓய்வு. :-) மீண்டும் பொறுமைக்கு நன்றி.

    ReplyDelete
  25. குமரன்,

    // சித்தர்களின் பாடல்களிலேயே கொஞ்சமாவது புரிகின்ற மாதிரி எளிமையாக இருப்பது சிவவாக்கியர் பாடல்கள் தான்.//

    தங்களுடைய இந்த ஒரு வரிக்காக ஒரு பதிவு போட்டிருக்கிறேன். சமயம் கிடைக்கும் போது பாருங்கள்.

    ReplyDelete
  26. இரத்னேஷ்,

    இப்பத் தான் இடுகையைப் பார்த்துவிட்டு பின்னர் படிக்கலாம் என்று பிரதி எடுத்து வைத்தேன். :-)

    ஆகா. தப்பா ஒரு வரி பொதுமைப்படுத்திச் சொல்லிட்டேனோ? சித்தர்களின் பாடல்களில் சில சித்தர்களின் பாடல்கள் தான் நன்கு புரியும். அப்படிப்பட்டவர்களில் சிவவாக்கியரும் ஒருவர் என்று சொல்லியிருக்க வேண்டுமோ? :-)

    ReplyDelete
  27. சித்தர் பாடல்களை நான் விட்டாலும் அவை என்னை விடாது போல இருக்கு.

    சிவவாக்கியர்!
    இவர் சொன்ன முதல் வாக்கியம் சிவா! அழவில்லை, அசையவில்லை சொன்னது வெறும் "சிவ சிவ" என்ற வாக்கியம் தான். அகவே இவர் சிவ வாக்கியரானார்.

    //ஓதடா அஞ்சும் மூன்றும் ஒன்றதான அக்கரம்//

    நானும் 5+3=8 ன்னு நினைத்தேன்.

    ReplyDelete
  28. இரத்னேஷ்.

    அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கென்றால் அசங்குமோ? என்றும் கம்பமற்ற பாற்கடல கலங்கென்றால் கலங்குமோ? என்றும் சிவவாக்கியர் சொல்பவையும் வெற்றுச் சடங்குகளை நோக்கிய சாடல்களாகத் தான் எனக்குப் புரிகிறது. உள்ளன்பு என்கிற பக்தியை சாடுவதாகத் தோன்றவில்லை. உள் நோக்கும் பார்வைகளை வேண்டும் சித்தரின் பாடல்கள் உள்ளன்பைச் சாடும் என்றும் தோன்றவில்லை. வெறும் நீரை ஊற்றினால் அம்பலம் ஆடி விடுமா? அன்பென்ற நீரை இட்டால் அல்லவோ அசங்கும். கம்பம் என்னும் மனத்தைக் கட்டுதல்/மூச்சைக் கட்டுதல் போன்றவை இல்லாமல் வெறும் சடங்குகளால் என்ன பயன்? கம்பம் எனும் கட்டுதலைக் கொண்டு தான் பாற்கடலைக் கலக்க முடியும். அமுதத்தை எடுக்க முடியும். இந்தப் பாடலில் அடுத்த இருவரிகள் 'இன்பமற்ற யோகியை இருளும் வந்தணுகுமோ? செம்பொனம்பலத்திலே தெளிந்ததே சிவாயமே'. அதற்குப் பொருள் என்ன என்று நீங்களே உணர்ந்து பாருங்கள்.

    Yes. God is omnipotent. And he can be moved by a simple prayer because he is simple too at the same time. Does it amount to claiming a share of omnipotence? Not necessarily. இறைவன் எல்லாம் வல்லவனாக இருக்கும் அதே நேரத்தில் எளிவந்த தன்மையனாகவும் அன்பிற்கு அடங்குபவனாகவும் இருக்கிறான்/றாள்/றது. அந்த எளிமைக்குணத்தால் அவன் அன்பர்களின் வேண்டுதல்களுக்குக் கட்டுப்படுகிறான். அதனால் அன்பர்கள் அவனது 'எல்லாம் வல்ல தன்மையை' அடைந்துவிட்டார்கள் என்று பொருள் இல்லை. அப்படி எல்லாம் வல்லவனாக இருந்தாலும் அன்பர்களின் அன்புக்குக் கட்டுப்படும் பெருமைக்குணமும் உடையவனாக இருப்பதே பெருமானின் பெருமையாகச் சொல்வார்கள். அப்படி இறைவன் அன்பர்களின் அன்புக்கு அடங்குவதால் அடியார் தம் பெருமை மிகப் பெரிதே என்றும் போற்றிச் சொல்லுவார்கள். அது அன்பர்களைப் போற்றுவதற்காகச் சொல்லப்படும் உபசார மொழிகளே; உண்மையில் எல்லாம் வல்லவன் இறைவன் மட்டுமே.

    எங்கள் வீட்டில் பல வகைகளில் எல்லாம் வல்லவர்களாக நானும் என் மனைவியும் இருக்கிறோம். பெரும்பாலான நேரத்தில் நானே சர்வ வல்லமை பொருந்தியவனாகக் காட்சியளிக்கிறேன் (வெறும் காட்சியில் மட்டும் தான் :-) ). நான் எப்போது தரையில் அமர்ந்தாலும் என் தோளில் ஏறி உட்கார்ந்து கொள்கிறாள் என் 4 1/2 வயது மகள். நான் எப்போது தரையில் படுத்தாலும் என்னை மலை என்று எண்ணி என் மேல் ஏறித் தாண்டுகிறான் 10 மாத மகன். இவர்கள் இருவரும் இப்படி என்னை விளையாட்டுப் பொருளாகக் கொள்ளுவதை என்ன என்று சொல்லுவது? என் சர்வ வல்லமையில் இவர்கள் பங்கு பெற்றுவிட்டார்களா? அல்லது என் மேல் அவர்களுக்கு இருக்கும் அன்பினையும் அவர்கள் மேல் எனக்கு இருக்கும் அன்பினையும் இது காட்டுகிறதா?

    ReplyDelete
  29. நன்று சொன்னீர்கள் ஜீவா. ஆன்மிகம் இது மட்டும் தான்; இவை எல்லாம் இல்லை என்று வரையறுத்தல் இயலாது தான். பலதரப்பட்ட மக்கள் இருக்கும் போது பலவகையான வழிமுறைகள் இருக்கத் தான் செய்யும். சிலவற்றைத் தாழ்ந்த நிலை என்றும் சிலவற்றை உயர்ந்த நிலையென்றும் சொல்வதில் கூட எனக்கு ஒப்புதல் இல்லை.

    அதே போல் அவரது பாடல்கள் ஒரே நேரத்தில் ஒரே கருத்திற்காக எழுதப்பட்டவைகளாக இல்லாமல் பல நேரங்களில் பல மன நிலைகளில் பலத் தரப்பட்டக் கருத்துகளுக்காக பலதரப்பட்ட மக்களுக்காக எழுதப்பட்டவையாக இருக்கலாம். இவர் எழுதியவை இவை மட்டுமே என்று வரையறுக்க முயலுதல் ஒரு குடத்து நீரில் பகலவனின் பிம்பத்தைக் கண்டு குடத்து நீரில் பகலவன் அடங்கிவிட்டான் என்று சொல்வதைப் போல் தான்.

    ReplyDelete
  30. சிவவாக்கியரின் பெயர் விளக்கத்தைச் சொன்னதற்கு நன்றி சிவமுருகன். நான் இது வரை அறியாத தகவல்.

    ReplyDelete
  31. குமரா!
    சித்தர் பாடல் புத்தகம் உண்டு, பொருள் இல்லை.
    ஒரு பாடல்..
    தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல்
    செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தெம்முளே
    விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
    எங்குமாகி நின்ற நாமம் நாமம் இந்த நாமமே

    அவர்கள் தெளிவாகத் தான் இருந்துள்ளார்கள்

    ReplyDelete
  32. அன்பு குமரன்,
    //அடுத்தப் பாடலைத் தேடிய போது மதுரைத் திட்டத்தில் 500க்கும் மேற்பட்ட சிவவாக்கியர் பாடல்கள் இருக்கும் பக்கம் கிடைத்தது. அதனை இனி படிக்கிறேன்.//
    மேற்கூறிய பாடல்களை எளிமைப்படுத்துவான்வேண்டி சொற்களைப் பிரித்து எழுதியதில் பிழைகள்(தட்டச்சு உட்பட) உள்ளன. கவனம் அவசியம்.

    ReplyDelete
  33. ஆறு வருடங்களுக்கு பின் மீண்டும் பின்னூட்டம் பெறும் பகுதிகள் நிச்சயம் ஆன்மீக பதிவுகளாகவே இருக்கும்

    ReplyDelete
  34. எந்த பாடலில் பிழை ஏற்பட்டுள்ளது என்று இயன்றால் சொல்லுங்கள் ஐயா.

    ReplyDelete