Monday, November 26, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 2

முதல் அத்தியாயத்தை இங்கே பாருங்கள்.




திருவண்ணாமலை பேருந்து நிலையம் வந்தவுடன் ஆவலுடன் அருணாச்சல மலையைப் பார்த்தான் கந்தன். பஞ்சபூதங்களில் நெருப்பு உருவம் இந்த மலை என்று படித்திருக்கிறான். எல்லா மலைகளும் ஒரு காலத்தில் நெருப்பாக இருந்தது தானே என்று நினைத்துக் கொண்டான். பின்னே எரிமலைக் குழம்பில் இருந்து தானே எல்லாம் மலையும் உருவானது?! கேசவனிடம் அதனைச் சொல்லியிருந்தால் இமயமலை அப்படித் தோன்றவில்லை என்று விளக்கியிருப்பான். ஆனால் அவனிடம் சொன்னால் திருவண்ணாமலை திருத்தலத்தைப் பற்றி கந்தன் கேலி செய்கிறான் என்று நினைத்துவிட்டால்? மனம் வருத்தப்பட்டால்? மனம் வருத்தப்படுகிறது என்று சொல்லி எதிர்த்து ஏதாவது சொல்பவனாக இருந்தாலாவது ஏதாவது பேசலாம். இந்தக் கேசவன் அது கூட செய்யமாட்டான். மனம் புண்பட்டாலும் ஒரு புன்சிரிப்பு மட்டும் தான். அப்படிப்பட்டவனை புண்படுத்தத் தான் மனம் வருமா? இவன் ரொம்பவே சாது என்று வழக்கம் போல் நினைத்துக் கொண்டான் கந்தன்.

கேசவனோ பேருந்தில் உட்கார்ந்தவாறே யாரையோ தேடிக் கொண்டிருந்தான். அவன் தேடியவர் கிடைத்துவிட்டார்கள் போலும். ஒரு புன்சிரிப்பு அவன் முகத்தில் தவழ்ந்தது. 'மணிகண்டா. மணிகண்டா' என்று யாரையோ அழைத்தான். அந்தப் பெயரைக் கேட்டவுடன் தான் கந்தனுக்கு மணிகண்டனுடைய ஊர் திருவண்ணாமலை என்பதும் மணிகண்டனின் குடும்பம் தான் தாத்தாவுக்குத் தினமும் உணவு சமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நினைவிற்கு வந்தது.

மணிகண்டன் பேருந்திற்குப் பக்கத்தில் வந்து 'வாங்க அண்ணா. வாங்க கந்தன் அண்ணா. நல்லா இருக்கீங்களா?' என்று நலம் விசாரித்தான். கந்தன் ஒரே ஒரு முறை தான் மணிகண்டனைப் பார்த்திருக்கிறான். பல ஆண்டுகள் பழகியவரையே எளிதில் மறந்துவிடுகின்றவனுக்கு ஒரு முறை பார்த்தவர்களா நினைவில் இருப்பார்கள்?! அன்பாக விசாரித்த மணிகண்டனை அப்போது தான் முதன்முதலில் பார்ப்பது போல் பார்த்து 'நல்லா இருக்கேன் மணிகண்டன். நீ எப்படி இருக்கிறாய்?' என்று விசாரித்தான்.

மணிகண்டன் அதற்கு பதில் சொல்லாமல் இருவரும் கொண்டு வந்த சின்ன பைகளை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். இருவரும் அவனைப் பின் தொடர்ந்தார்கள். கொஞ்ச நேர நடைக்குப் பின் கோவில் வாசல் வந்தது. கந்தனுக்கு உடனே உள்ளே நுழையத் தான் ஆசை. ஆனால் மணிகண்டன் கோவிலின் இடப்பக்கமாகப் போவதைப் பார்த்துப் பேசாமல் நடந்தான். கோவிலின் இடப்புறம் இருக்கும் ஒரு தெருவில் இருக்கும் வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்றான். 'அம்மா. கேசவன் அண்ணாவும் கந்தன் அண்ணாவும் வந்தாச்சு' என்று குரல் கொடுத்தான்.

உள்ளிருந்து நடுத்தர வயது அம்மா ஒருவர் வெளியே வந்து 'வாங்கப்பா. பஸ் பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது?' என்று கேட்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள். கந்தன் ஒரு புன்னகையோடு நிறுத்திக் கொள்ள கேசவன் தான் பயணத்தைப் பற்றி சொன்னான். மோர் வேண்டுமா காபி வேண்டுமா என்று கேட்டு கந்தனுக்கு மோரும் கேசவனுக்குக் காப்பியும் தந்தார்கள்.

கந்தன் மோர் குடித்துக் கொண்டிருக்கும் போதே 'கந்தன். உங்களுக்கு திருப்புகழ் நல்லா தெரியும்ன்னு மாமா சொல்லியிருக்கார். அப்படியா?' என்று கேட்டார்கள். அவர்கள் தாத்தாவைத் தான் மாமா என்று கூறுகிறார்கள் என்று கந்தனுக்கு ஏற்கனவே தெரியும். கேசவன் தான் தாத்தாவிடம் கந்தனுக்குத் திருப்புகழ் தெரியும் என்று சொல்லியிருப்பான் என்று நினைத்துக் கொண்டான். 'அம்மா. என்னை சும்மா வா போன்னே பேசுங்க. மரியாதையெல்லாம் வேண்டாம்' என்று சொல்லிவிட்டு, 'ஆமாம் அம்மா. கொஞ்சம் கொஞ்சம் தெரியும்' என்று சொன்னான். எங்கே திருப்புகழ் பாடச் சொல்லிடுவாங்களோ என்று உள்ளூரப் பயந்தான். நல்ல வேளையாக அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை.

மோரும் காப்பியும் குடித்து முடித்த பிறகு, 'இப்பவே மாமாவைப் பார்க்க போறீங்களா இல்லை சாப்புட்டுட்டுப் போறீங்களா?' என்று கேட்டார். கந்தனுக்கோ முதலில் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று ஆவல். ஆனால் கேசவன் பேசட்டும் என்று சும்மா இருந்துவிட்டான்.

கேசவன், 'இப்பவே தாத்தாவைப் பார்க்கப் போகிறோம் அம்மா' என்று சொன்னவுடன் சரி என்று சொல்லி மணிகண்டனையும் கூட அனுப்பினார்கள். மலையில் கொஞ்ச தூரம் ஏறிப் போனால் 'அடிமுடி கோவில்' என்றொரு சிறிய கோவில் இருக்கிறது. கோவிலுக்கு முன்னால் கோவிலை ஒட்டியபடியே ஒரு சின்ன குடிசையும் இருக்கிறது. அங்கே தான் தாத்தா வசிக்கிறார். மணிகண்டன் வேக வேகமாக மலையில் ஏறிவிட்டான். கேசவனும் கந்தனும் அந்த மலையில் ஏறுவது இது தான் முதல் தடவை என்பதால் கொஞ்சம் மெதுவாகத் தான் ஏறினார்கள். போகும் வழியில் ஒருவர் சில ஆடுகளின் பின்னே வந்தார். அவரிடன் மணிகண்டன் 'தாத்தாவைப் பாத்தீங்களா?' என்று கேட்க அவரும் 'பாத்தேன் தம்பி. சாமி வெளிய தான் உக்காந்திருக்குது' என்று சொன்னார். அவரும் ஆடுகளும் கடந்து போகும் வரை கந்தனும் கேசவனும் அசையாமல் நின்றிருந்தார்கள். மணிகண்டன் 'நல்ல வேளை தாத்தா தூங்கலை போலிருக்கு. இப்பத் தான் தாத்தாவுக்குச் சாப்பாடு குடுத்துட்டு வந்தேன். சாப்புட்டுட்டு கொஞ்ச நேரம் படுத்திருப்பார் தாத்தா. அதான் கேட்டேன்' என்று விளக்கினான்.

அடி முடி கோவிலுக்குப் பக்கத்தில் வந்த போது தாத்தா புன்னகையுடன் கால் மேல் கால் போட்டபடி ஒரு சின்ன பாறை மேல் உட்கார்ந்து கொண்டிருந்தார். கேசவனும் கந்தனும் வந்து தாத்தாவை வணங்கியவுடன் 'வா மோகன். நல்லா இருக்கியா?' என்று கந்தனை விசாரித்தார். கந்தன் 'நல்லா இருக்கேன் தாத்தா' என்று சொன்னான். கேசவனை ஒன்றும் கேட்கவில்லையே என்று கந்தன் எண்ணிக் கொண்டிருக்க, கேசவனோ புன்னகையுடன் தாத்தாவையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

கையில் இருந்த பையில் இருந்து எதையோ எடுத்தான் கேசவன். அவன் கையில் ஒரு பை இருந்ததையே அப்போது தான் பார்த்தான் கந்தன். பையில் இருந்து ஒரு வேட்டியும் அங்கவஸ்திரமும் வந்தன. அவற்றை தாத்தாவின் காலடியில் வைத்து அதன் மேல் ஒரு நூறு ரூபாய் நோட்டையும் வைத்தான் கேசவன். பின்னர் தாத்தாவிடம் 'தாத்தா. இந்த நூறு ரூபாயை உங்க மருந்து செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்' என்றான். 'ஆகா பழி வாங்கிவிட்டானே. சொல்லியிருந்தால் நானும் ஏதாவது வாங்கி வந்திருப்பேனே' என்று நினைத்தான் கந்தன். மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் கேசவன் நூறு ரூபாய் தாத்தாவுக்குக் கொடுக்கும் போது எட்டாயிரம் சம்பளம் வாங்கும் தான் அதைவிடக் குறைவாகக் கொடுக்கக் கூடாது என்று ஒரு ஐநூறு ரூபாய்த் தாளை எடுத்து வேட்டி அங்கவஸ்திரத்தின் மேல் வைத்தான். பின்னர் தாத்தாவை அவன் பார்த்த போது கண்ணில் ஓரத்தில் ஒரு சின்ன கருவம் தெரிந்தது போல் இருந்தது.

தாத்தா, 'மணிகண்டா. இதை எடுத்து வை.' என்று சொன்னார். கந்தனுக்கும் கேசவனுக்கும் மகிழ்ச்சி. மணிகண்டன் அவற்றை எடுத்து வைக்கும் போது 'இங்கே வா' என்று கூப்பிட்டு கந்தன் வைத்த ஐநூறு ரூபாயை எடுத்து வைத்துக் கொண்டார். கந்தனுக்கு சுருக்கென்றது. ஒரு வேளை தான் கருவத்துடன் வைத்தது தாத்தாவிற்குத் தெரிந்துவிட்டதோ; அதனால் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடப் போகிறாரோ என்ற கலக்கம் கந்தனிடம் வந்தது.

அடுத்த அத்தியாயம் இங்கே

25 comments:

  1. இதுவரை திருவண்ணாமலை கோவிலுக்கு செல்ல இயலவில்லை, அந்தக் குறை இங்கே தீர்ந்துவிடும் போலும், மிக்க நன்றி!

    நான் எனும் உணர்வின் மையங்களை தூண்டி விட்டிருக்கிறீர்கள். நல்லது. நல்ல பாடங்களைச் சொல்லும் கதையாக இருக்கும்.

    ReplyDelete
  2. ஒருவர் செய்தார் என்பதால் தானும் செய்ய வேண்டுமா? கந்தன் இது வரை சராசரி ஆளாக இருப்பதில் மகிழ்ச்சி!! அவன் எப்படி மாறுகிறான், அவன் பெறும் நல்ல மாற்றங்கள் நமக்கும் கிட்டுமா எனப் பார்க்கலாம்.

    ReplyDelete
  3. திருவண்ணாமலை கோவிலைச் சுற்றிக் காண்பிப்பாரா கந்தன்? பார்க்கலாம் ஜீவா. சுற்றிக் காண்பிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

    நல்ல பாடங்கள் இருக்குமா என்று தெரியவில்லை. நானும் உங்களுடன் சேர்ந்து கந்தனைத் தொடர்ந்து போய் பார்க்கிறேன். ஏதாவது பாடங்கள் கிடைக்கிறதா என்று. :-)

    ReplyDelete
  4. கொத்ஸ். சராசரியா இருந்தா மாறணுமா? நல்ல மாற்றங்களைச் சொல்கிறீர்களா? எல்லோரும் தான் மாறிக் கொண்டிருக்கிறோம். மாற்றம் ஒன்று தானே மாற்றமே இல்லாதது. அந்த வகையில கந்தன் கடைசி வரைக்கும் சராசரியாகத் தான் இருக்கப் போகிறான் போலிருக்கிறது. பார்க்கலாம். :-)

    ReplyDelete
  5. மலையின் பெருமை தெரிந்தவன், கோயிலைப் பார்த்ததுமே உள்ளே நுழையவேண்டுமென நினைத்தவன், ஒரு தெரிந்த ஒரு பெரியவரைப் பார்க்கப் போகும் போது வெறும் கையுடன் போனானா?

    இருக்கலாம். கர்வம் சில சமயங்களில் கண்னை மறைக்கும் என்பார்கள்!
    :)

    ReplyDelete
  6. இன்று வரை திருவண்ணாமலைக்குச் செல்ல முடியவில்லை. போனவருஷம் போக நினைத்துக் கிளம்பிப் பாதியில் திரும்பினோம். ஒவ்வொருவருக்கும் அங்கே தான் முக்கியத் திருப்பம் வாழ்வில் ஏற்படுகிறது. மலையே மகானாக இருப்பதாலோ என்னவோ?? பார்க்கலாம், கந்தனுக்குள் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது என. ஆவலைத் தூண்டித் தான் விட்டிருக்கிறது உங்கள் தொடர். இயல்பான நடை, சரளமான போக்கு! தொடருங்கள்!!!!

    ReplyDelete
  7. கந்தன் - கேசவன் - அண்ணாமலை - மணி கண்டன் - கதாபாத்திரங்கள் அனைவரும் உறவினர்கள். எதோ ஒன்றைச் சொல்ல ஒவ்வொருவரும் வருகின்றனர். உண்ணிப்பாய்க் கவனிக்க வேண்டும்.

    கருவம் - நான் என்ற அகந்தை - கந்தனிடம் இருக்கிறது.

    //மனம் வருத்தப்படுகிறது என்று சொல்லி எதிர்த்து ஏதாவது சொல்பவனாக இருந்தாலாவது ஏதாவது பேசலாம். இந்தக் கேசவன் அது கூட செய்யமாட்டான். மனம் புண்பட்டாலும் ஒரு புன்சிரிப்பு மட்டும் தான். அப்படிப்பட்டவனை புண்படுத்தத் தான் மனம் வருமா? இவன் ரொம்பவே சாது என்று வழக்கம் போல் நினைத்துக் கொண்டான் கந்தன். //

    கேசவனை போன்றவர்கள் உலகில் சில பேர் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  8. பாத்தீங்களா எஸ்.கே. இந்தக் கந்தன் இப்படித் தான். படிச்சு நிறைய தெரிஞ்சிருக்கேன்னு பாத்தா ஒரு பெரியவரை அதுவும் முன்னாடியே தெரிஞ்ச பெரியவரைப் பாக்கப் போகும் போது வெறும் கையோட போவானா? படிப்பறிவுக்கும் செய்கைக்கும் சம்பந்தமே இல்லாத ஆளா இல்லை இருக்கான்?! அதனால தான் சொன்னாங்க போல ஒருத்தரோட வெளி உருவத்தைப் பாத்து எடை போட்டுறக் கூடாதுன்னு.

    ReplyDelete
  9. உண்மை கீதாம்மா. எனக்கும் திருவண்ணாமலை போய் வந்த அனுபவம் நல்லதொரு அனுபவம் தான். திருப்பம் ஏற்பட்டதா தெரியவில்லை. ஆனால் திருப்தியாக இருந்தது.

    // இயல்பான நடை, சரளமான போக்கு! //

    நன்றி அம்மா. கந்தன், கேசவன், மணிகண்டன்னு பேரைத் திரும்பத் திரும்பச் சொல்லி குழப்பிவிட்டுக்கிட்டு இருக்கோமோன்னு ஒரு ஐயம் இருந்தது. இயல்பா இருக்கு எழுத்து நடைன்னா மகிழ்ச்சி. :-)

    ReplyDelete
  10. சீனா ஐயா. இந்தக் கதையில வர்றவங்க வீட்டுல எல்லாம் இன்னும் 'புதுமையான' ஷ் என்று முடியும் பெயர்களை வைக்கும் வழக்கம் வரவில்லை போலிருக்கிறது. அதனால் தான் இப்படி கந்தன், கேசவன், மணிகண்டன்னு பேரு. முதல் அத்தியாயத்திற்கு இரத்னேஷ் பின்னூட்டத்தைப் பார்த்துட்டு எங்க வீட்டுலயும் சொன்னாங்க நேத்து. கதா பாத்திரங்கள் பெயரை எல்லாம் சுரேஷ், ரமேஷ்னு வைக்கலாம்லன்னு. என்ன பண்றது, பேரெல்லாம் தானா அமையறதுன்னு சொன்னேன். :-)

    நீங்க ஒரு தடவை கந்தனைப் பாத்தீங்கன்னாலே போதும் - பாக்குறது எதுக்கு தொலைபேசினாலே போதும் - கந்தனுக்கு இருக்கும் கருவம் தெள்ளத் தெளிவா தெரிஞ்சிரும். :-)

    உண்மை ஐயா. கேசவனைப் போன்ற நல்லவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

    ReplyDelete
  11. அந்தத் தாத்தாவுக்கு எதுக்கு ஐநூறு? இப்பிடி பெருமைக்குப் பிண்டியிடிச்சுத்தான் நாடே இப்பிடியிருக்கு.

    சரி. கந்தன் திருந்துறானான்னு பாப்போம்.

    ReplyDelete
  12. பெருமைக்குப் 'பிண்டியிடிக்கிறது'ன்னா என்ன இராகவன்? நான் இதுவரை கேள்விபட்டதே இல்லையே?!

    ReplyDelete
  13. அது பள்ளிக்கூடத்துல ஒரு வாத்தியாரு சொன்னாரு. பேரு பெத்த பேருன்னு நம்ம சொல்றோம்ல....அந்த மாதிரி இதுவும். தெலுங்குல பிண்டின்னா மாவு. மாவ எதுக்கு இடிக்கனும்? ஒரு வேளை தானியங்களை இடிச்சி மாவாக்குறதச் சொல்லீருப்பாங்களோ? இல்ல கோயில்களுக்கு மாவெளக்கு இடிப்பாங்களே...அதாயிருக்குமோ. கன்னடத்துலயும் ஹெம்மெகே ஹிண்டின்னு சொல்வாங்களான்னு தெரியலையே.

    ReplyDelete
  14. ஓ. தெலுங்கா? இப்ப எல்லாம் நீங்க ஓவரா தெலுங்கு பேசறாப்பல இருக்கே இராகவன்?! எப்பப் பாத்தாலும் தெலுங்கு பாட்டு கேக்கறீங்க. எதாவது விஷேசமா? :-)

    ReplyDelete
  15. //எங்கே திருப்புகழ் பாடச் சொல்லிடுவாங்களோ என்று உள்ளூரப் பயந்தான்//

    pugazh ondru irandu therinjalum, athai vaai vittu paadanum nu sonna, ellarukkum mudalil konjam bayam thaan kumaran!
    Gira-neenga eppadi? :-)

    //தெலுங்குல பிண்டின்னா மாவு.//
    ithu varaikkum seri!

    //மாவ எதுக்கு இடிக்கனும்? ஒரு வேளை தானியங்களை இடிச்சி மாவாக்குறதச் சொல்லீருப்பாங்களோ? //

    he he!
    oruthar idichi maavaakitaaru!
    antha perumai thanakkum konjam ottikanum appadinu ninachi, idicha maavaiye, perumaikku idichikirathu thaan piNdi idikkarathu :-)

    Kanthan chinna payyan thaane kumaran! parava illa, vuttu pudippom! :-)

    ReplyDelete
  16. குமரன்,

    // சீனா ஐயா. இந்தக் கதையில வர்றவங்க வீட்டுல எல்லாம் இன்னும் 'புதுமையான' ஷ் என்று முடியும் பெயர்களை வைக்கும் வழக்கம் வரவில்லை போலிருக்கிறது. அதனால் தான் இப்படி கந்தன், கேசவன், மணிகண்டன்னு பேரு.//

    ஓ! கதை சர"ஸ்"வதி, ல"க்ஷ்"மி, ஈ"ஷ்"வரி, வி"ஷ்"ணு போன்ற மாடர்ன் தெய்வங்களெல்லாம் கூடத் தோன்றியதற்கு முந்தைய காலக் கதை போலும். முகுந்தன், கபிலன், வள்ளுவன், இளங்கோ, பாரதி, கருணாநிதி என்கிற பெயர்கள் எல்லாம் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுப் புதுமைப் பெயர்கள் அல்லவா?

    மேலே உள்ளது சும்மா டபாய்ச்சலுக்கு. (இந்த வார்த்தைக்கு விளக்கம் கேட்டு விடாதீர்கள்; நான் ராகவன் சார் அளவுக்குத் தெளிவானவன் இல்லை). உங்க கதையைப் படிக்க ஆரம்பித்த உத்வேகத்தில் தான், தொல்காப்பியம் அப்படி ஒன்றும் புரியக் கஷ்டமாக இருக்கப் போவதில்லை என்கிற நம்பிக்கை பிறந்து புரட்ட ஆரம்பித்திருக்கிறேன்.

    ஒரு சிறு SUGGESTION:

    கொடுக்கப்பட்டிருக்கும் பில்டப்பில் 'கந்தனுக்கு வயிறு கலக்கியது; ஓரமாக ஒதுங்கினான்" என்று நீங்கள் எழுதினாலும் அதற்கும் விதவிதமாக ஆன்மிக INTERPRETATION தர பலரும் தயாராக இருப்பது ஒருவகையில் உங்க சிந்தனைச் சுதந்திரத்தைக் கட்டிப் போடுவது மாதிரி என்று உணர்கிறேன். அத்தியாயம் அத்தியாயமாக எழுதி பின்னூட்டங்களை ஃபாலோ செய்யாமல் மொத்தமாக முதலிலேயே எழுதி வைத்து விடுங்கள், அதில் குமரனின் சிந்தனை மட்டும் இருக்க வேண்டும் என்று எண்ணினால்.

    நன்று. தொடர்க.

    ReplyDelete
  17. கதை நன்றாக போகிறது.

    ஒரே ஒரு முறை அண்ணாமலையாரையும், அம்மையையும் தரிசித்து, பௌர்ணமி கிரிவலம் வந்துள்ளேன். நாங்கள் சென்ற சமயத்தில் பெரும் கூட்டம்! அந்த உன்னத சமயத்தை தங்களது எழுத்துக்கள் நினைவூட்டுகின்றன.

    மலை மேல் ஏதோ இருக்கிறது!

    இக்கதையில் அம்மையப்பனின் தரிசனம் கிடைக்குமா? (பொருத்திருப்போம்)

    //சொல்லியிருந்தால் நானும் ஏதாவது வாங்கி வந்திருப்பேனே'//

    இப்படி பலர் இருக்கதானே செய்கிறார்கள்.


    //எடுத்து வைக்கும் போது 'இங்கே வா' என்று கூப்பிட்டு கந்தன் வைத்த ஐநூறு ரூபாயை எடுத்து வைத்துக் கொண்டார்.//

    அவசர செலவுக்கு கேசவனிடம் தரபோகிறாரா! அதையும் தான் பார்ப்போமே!

    ReplyDelete
  18. என்ன இரவிசங்கர் நீங்க இராகவனை இதெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீங்க? அவர் 'வாய் விட்டுப் பாடினால் நோய் விட்டுப் போகும்'ன்னு ஏதாவது எகனை மொகனையா சொல்லுவாரு. அப்புறம் அதுக்கு விளக்கம் சொல்ல நீங்க தான் வரணும். :-) ஒழுங்கா எழுதுனாலே இரத்னேஷுக்குப் புரியலைங்கறார். இப்படி எகனை மொகனையா எழுதுனா என்ன பண்றது? :-)

    பெருமைக்குப் பிண்டியிடிக்கிறதுக்கு விளக்கம் சொன்னதுக்கு நன்றி இரவிசங்கர். நானும் அப்ப்டித் தான் புரிந்து கொண்டேன். நீ பதிவுகள்ன்னு எழுதுறது எல்லாமே அந்த வகைதானேன்னு என் மனசு சொன்னதை நான் யாருக்கிட்டயும் சொல்லமாட்டேன். நீங்களும் சொல்லாதீங்க. சரியா? :-)

    ReplyDelete
  19. வாங்க இரத்னேஷ் சார். நான் ஷ் பத்திப் பேசத் தொடங்குனா நீங்க பதிவெல்லாம் எழுத வர்றதுக்கு முன்னாடி நடந்த கதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கும். நீங்க சும்மா டபாய்ச்சீங்கங்கறதால அதை இன்னொரு நாள் சொல்றேன். :-)

    இராகவன் சார் உங்க வயசுல மூன்றில் ரெண்டு பங்கு வயசு உடையவர். அதனால் அவரை 'பார் அதி சின்னப் பயல்'ன்னு பாடுனா கூட சரியாத் தான் இருக்கும். அதனால இந்த சாரைக் கட் பண்ணிடுங்க (இராகவன். உங்க சார்பா நானே சொல்லிட்டேன். உங்களுக்கு ஓகே தானே?!)

    நீங்களும் தொல்காப்பியம் படிக்கிறீங்களா? ரொம்ப மகிழ்ச்சி. நானும் தொல்காப்பியம் படிக்கத் தொடங்கி அதிலிருந்து தான் ஒரு எடுத்துக்காட்டு சொல்லி 'பரிமேலழகர் - தேவநேயப்பாவாணர்' இடுகையில உங்களுக்குப் பதில் சொல்லலாம்ன்னு இருக்கேன்.

    கந்தனுக்கு கொஞ்சம் ஓவரா பில்டப் கொடுக்கிறேனோ? இருக்கலாம். கதையே கந்தன் கதை தானே. அவனுக்குக் கொடுக்காம வேறு யாருக்கு கொடுக்கிறது?!

    வலைப்பதிவின் பலமும் பலவீனமும் இது தானே இரத்னேஷ் சார்?! எழுதிக் கொண்டிருக்கும் போதே வரும் பின்னூட்டங்கள் எழுதுபொருளின் போக்கை மேலும் வலுப்படுத்துவதும் உண்டு; மாற்றுவதும் உண்டு. அது கதைகளுக்கும் பொருந்தும். என்னைக் கேட்டால் இங்கே என் இடுகைகளில் வரும் பின்னூட்டங்களை விட வேறு பதிவுகளில் நான் எழுதியவற்றிலிருந்து அல்லது எழுதிய பொருள்களின் தூண்டுதலால் வரும் எழுத்துகள் என் சிந்தனைப் போக்கினை அதிகம் பாதிக்கின்றன என்று சொல்வேன். அது இந்தத் தமிழ்மணம் போன்றதொரு திரட்டியில் இருப்பதில் உண்டாகும் பலமும் பலவீனமும்.

    முதலிலேயே கதையின் போக்கை மேலோட்டமாக முடிவு செய்து எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் கதையை அத்தியாயம் அத்தியாயமாகத் தான் எழுதப் போகிறேன். அதனால் கதையின் போக்கு மாறினாலும் பரவாயில்லை என்று தான் நினைக்கிறேன். வலைப்பதிவுலகில் இது ஒரு கூட்டு தொடர்கதை முயற்சியாக மாறினாலும் நல்லது தான். :-) வருங்காலத்தில் பல நாவல்கள் இப்படித் தான் எழுதப் பட போகின்றன. ஆங்கிலத்தில் அது இப்போதே தொடங்கிவிட்டது. தமிழில் வர கொஞ்சம் நாளாகலாம். இதுவரை வந்த பின்னூட்டங்கள் நான் நினைத்திருக்கும் கதையின் போக்கை வலுப்படுத்துவதாகத் தான் வந்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.

    உங்கள் கருத்தினை எதிர்வினையாகக் கொண்டுவிடுவேனோ என்ற தயக்கம் இல்லாமல் தெளிவாகச் சொன்னதற்கு மிக்க நன்றி. தொடர்ந்து சொல்லி வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  20. சிவமுருகன், கந்தனுக்கும் கிரிவலம் செல்ல வேண்டும் என்ற ஆவல் இருப்பதாகத் தெரிகிறது. போகிறானா என்று பார்ப்போம். ஐநூறு ரூபாயை தாத்தா என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க கந்தனும் ஆவலுடன் காத்திருக்கிறான். வியாழன் வரை பொறுத்திருக்க வேண்டும் போல.

    ReplyDelete
  21. // குமரன் (Kumaran) said...
    ஓ. தெலுங்கா? இப்ப எல்லாம் நீங்க ஓவரா தெலுங்கு பேசறாப்பல இருக்கே இராகவன்?! எப்பப் பாத்தாலும் தெலுங்கு பாட்டு கேக்கறீங்க. எதாவது விஷேசமா? :-) //

    என்னங்க இது...தெலுங்கு பாட்டு கேக்கக் கூடாதா? இதேமி பாதலு!!!!! ஹா ஹா ஹா நீங்க வேற குமரன்... எதையாவது கெளப்பி விடாதீங்க.

    // குமரன் (Kumaran) said...
    இராகவன் சார் உங்க வயசுல மூன்றில் ரெண்டு பங்கு வயசு உடையவர். அதனால் அவரை 'பார் அதி சின்னப் பயல்'ன்னு பாடுனா கூட சரியாத் தான் இருக்கும். அதனால இந்த சாரைக் கட் பண்ணிடுங்க (இராகவன். உங்க சார்பா நானே சொல்லிட்டேன். உங்களுக்கு ஓகே தானே?!) //

    ஓ அப்ப ரத்னேஷ் சொன்ன சார் நாந்தானா? வேற யாரையோன்னு நெனச்சேன் நெஜமாலுமே.

    // RATHNESH said...
    குமரன்,

    மேலே உள்ளது சும்மா டபாய்ச்சலுக்கு. (இந்த வார்த்தைக்கு விளக்கம் கேட்டு விடாதீர்கள்; நான் ராகவன் சார் அளவுக்குத் தெளிவானவன் இல்லை). //

    என்னங்க ரத்னேஷ்....என்னங்க இது....நான் தெளிவானவன்னு எப்படிச் சொல்றீங்க. போச்சு..போச்சு...விசாரணைக் கமிஷன் வைக்கனும். :)

    ReplyDelete
  22. குமரன்,
    கதை மிகவும் விறுவிறுப்பாகவும் ஆவலைத் தூண்டுவதாகவும் இருக்கிறது. கொஞ்ச நேரத்திற்கு முதல்தான் முதல் பாகத்தை வாசித்தேன். உடனடியாக இரண்டாவது பாகத்தையும் வாசிச்சு விட வேணும் எனும் ஆவலால் இரண்டாம் பாகத்தையும் சுறுக்காக வாசித்து முடிச்சாச்சு.

    கதை தொய்வில்லாமல் சுவையாகப் போகிறது... தொடருங்கள்.

    ReplyDelete
  23. நன்றி வெற்றி. உடனே அடுத்த அத்தியாயத்தையும் படித்து முடித்ததற்கு.

    ReplyDelete