பழந்தமிழ் இலக்கியங்களில் தற்போது கிடைக்கும் இலக்கியங்களில் மிகவும் தொன்மையானது தொல்காப்பியம் என்று கருதப்படுகிறது. தற்போது கிடைக்கும் சங்க நூற்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படும் போது தொல்காப்பியம் இதில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலைபெற்றிருக்கிறது. இந்த சங்க நூற்களின் காலத்தை இன்னும் முன்னால் கொண்டு சென்று கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தொடங்குகிறது இப்போது கிடைக்கும் நூற்களின் காலம் என்ற கருத்தும் இப்போது கேட்கத் தொடங்கியிருக்கிறது. தொல்காப்பியத்தின் காலத்தைப் பற்றிய கருத்துகளை விவரிப்பது இந்த இடுகையின் நோக்கமில்லை. இந்த நூலின் தொன்மையைச் சுட்டிக்காட்டுவதற்காக இந்த கருத்துகளை இங்கே தொட்டுச் செல்கிறேன்.
தொல்காப்பியம் எனும் இலக்கண நூலில் எல்லா இலக்கண விதிகளும் சூத்திர முறையில் கூறப்பட்டிருக்கின்றன. அகத்திணையியலில் ஐந்தாம் சூத்திரம் ஐவகை நிலங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலங்களைப் பற்றிக் கூறும் போது அவற்றின் தெய்வங்களையும் குறிக்கிறது.
மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே
முல்லை என்பது காடுகள் நிறைந்த நிலம். அதில் மாயோன் உறைகிறான்.
குறிஞ்சி என்பது மலைகள் நிறைந்த நிலம். அதில் சேயோன் உறைகிறான்.
மருதம் என்பது நன்னீர் நிறைந்த நிலம். அதில் வேந்தன் உறைகிறான்.
நெய்தல் என்பது எங்கு நோக்கினும் மணல் நிறைந்து காணப்படும் நிலம். அதில் வருணன் உறைகிறான்.
இங்கே மாயோன் என்பவன் கண்ணன் என்றும், சேயோன் என்பவன் முருகன் என்றும், வேந்தன் என்பவன் இந்திரன் என்றும் பொருள் கூறுவார்கள். பிற்கால இலக்கியங்களில் எல்லாம் மாயவன் என்று கண்ணனே அறியப்படுவதால் கண்ணன் தான் இங்கே மாயோன் என்று சொல்லப்படுகிறான் என்ற பொருள் பொருந்தும். அப்படியே பிற்கால இலக்கியங்களில் குறிஞ்சித் தலைவனாக முருகனே அறியப்படுவதாலும் அவன் சிவனின் மகன் என்றும் கொற்றவை சிறுவன் என்றும் அறியப்படுவதாலும் சேயோன் என்பது முருகனே என்ற பொருளும் பொருந்தும். வேந்தன் என்றால் இந்திரன் தானா? இந்திரன் என்ற சொல்லும் வேந்தன் என்ற சொல்லும் அரசன் என்ற பொதுப் பொருளைக் கொண்டிருப்பதாலும் இந்திரன் மழைக்கு தலைவன் என்று வடமொழி இலக்கியங்களும் பிற்கால தமிழ் இலக்கியங்களும் கூறுவதாலும் நீர் நிறைந்த நிலத்திற்கு இந்திரன் தலைவன் என்பதும் பொருந்தும். வருணன் என்பவன் வடமொழி வேதம் சொல்லும் வருணன் தானா? இல்லை வேறு தெய்வமா? இந்த கேள்வியும் உண்டு. வடமொழி வேதம் சொல்லும் தேவனாம் வருணனும் கடலுக்கு அரசனாகத் தான் அறியப்படுகிறான். இங்கும் கடலும் கடல் சார்ந்த இடமும் என்று வகுக்கப்படும் நிலமாம் நெய்தலுக்கு உரியவனாக வருணன் அறியப்படுகிறான். இங்கே பிற்கால இலக்கியங்கள் என்று சொன்னது தொல்காப்பியத்திற்குப் பின்னால் எழுந்த இலக்கியங்கள். அவற்றில் சங்க இலக்கியங்களும் அடக்கம்.
இப்படிப் பொருள் சொல்வதை மறுப்பவர்களும் உண்டு.
***
புறத்திணையியலில் ஐந்தாம் சூத்திரத்தின் ஒரு பகுதியில் பூவை நிலை என்னும் துறையைப் பற்றி விளக்கும் போது மாயோன் மீண்டும் சொல்லப்படுகிறான்.
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ் பூவை நிலையும்
மாயோனின் நிலைத்த பெருஞ்சிறப்பின் எல்லாவற்றையும் மிஞ்சும் பெரும்புகழைப் பாடுவதைப் போல் தலைவனின் புகழைப் பாடுவது பூவை நிலை. மாயோனின் சிறப்பையும் பெருமையையும் பாட்டுடைத் தலைவனுக்கு உவமையாகச் சொல்வதும் பூவை நிலை. சிறப்பான் ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள். இங்கே மாயோனின் சிறப்பையும் புகழையும் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுவிடாமல் மன்பெருஞ்சிறப்பு என்றும் தாவா விழுப்புகழ் என்றும் மிக மிக உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து மாயோன் என்னும் தெய்வம் தமிழர்களின் மிகப் பெரும் தெய்வமாக இருந்திருக்கிறது என்பது விளங்கும்.
***
உசாத்துணை: மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தாரின் தொல்காப்பிய வலைப்பக்கம்.
Is there any similarity between this mayan and mayan civilization in central america? Long before i read some articles about it
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteநண்டு மனப்பான்மையிலிருந்து தமிழர்களை மீட்டு, எறும்பு சித்தாந்தத்திற்கு கொண்டு வருவோம். அதற்கு கூடி உழைப்போம் வாருங்கள்.
தமிழர் மன சீர்திருத்தத்திற்கு, ஒரு புத்தகம் தயாராகிறது. உங்கள் மதிப்பீடுகள், கருத்துகள் தேவைப்படுகின்றன.
http://docs.google.com/View?docid=dgvbz3bh_0g3vpnh
"நிலனும் அந்த நிலத்தைச் சார்ந்தவர்கள் வழிபட்ட இறைவனும்்" --- நீங்கள் எழுதியிருப்பது அத்தனையும் சரியே. சந்தேகம் வேண்டாம். எல்லா பாடங்களிலும் அப்படித்தான் அர்த்தம் கொள்கிறார்கள்.
ReplyDeleteதொல்காப்பிய காலத்தை சரியாக நிர்ணயம் பண்ணிவிட்டால், பல உண்மைகள் நமக்குத் தெளிவாகும்.
தங்கள் முயற்சிகளுக்குப் பாராட்டுகள்.
சதுக்க பூதம்,
ReplyDeleteமாயோனுக்கும் அமெரிக்க மாயன் பண்பாட்டிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று தெரியவில்லையே. இணையத்தில் தேடிப் பார்க்கிறேன். ஏதாவது கிடைத்தால் படித்துப்பார்க்கிறேன்.
மாயோன் என்பதற்குப் பொருள் என்ன குமரன்?
ReplyDeleteமாயங்கள் செய்வபன் மாயனா?
மாயவன் என்பது தான் மாயோன் எனச் சுருங்கியதா?
மாயம் என்ற வேர்ச்சொல்லின் பயன்பாடு பற்றியும் ஆய்வு செய்தால், மாயோன் பற்றிய குறிப்புகள் இன்னும் கிடைக்குமா?
நச்சினார்க்கினியர் உரையில் 'மாயோன் ' என்ற சொல்லுக்குக் 'கடல் வண்ணன் ' என்று தான் வருவதாய் தமிழ் ஆசிரியர் சொன்னது நன்றாக நினைவுள்ளது!
??? ???? நண்பரே. நண்டு மனப்பான்மையும் எறும்பு சிந்தாந்தமும் - ம்ம்ம். நல்ல உவமைகள். ஒருவரை ஒருவர் பின்னிழுத்து யாரும் முன்னேறாமல் செய்யும் மனநிலைக்கு நண்டு மனப்பான்மை உவமை. ஒருவர் முன்னேறிச் சென்ற வழியில் இன்னொருவரும் சென்று எல்லோரும் முன்னேறும் மனப்பான்மைக்கு எறும்புகள் உவமை. நன்கு சொன்னீர்கள். ஆனால் தமிழர்கள் மட்டுமே இந்த குறை உள்ளவர்கள் இல்லை. சௌராஷ்ட்ரன் என்பதால் சௌராஷ்ட்ரர்களிலும் இப்படிப்பட்ட குறை இருப்பதாக மற்ற சௌராஷ்ட்ரர்கள் சொல்லி வருந்துவதைக் கேட்டிருக்கிறேன். ஆக தமிழர்களோ இல்லையோ நண்டு மனப்பான்மையிலிருந்து மீண்டு எறும்பு மனப்பான்மைக்கு எல்லோரும் செல்ல வேண்டும்.
ReplyDeleteநீங்கள் தந்துள்ள சுட்டியில் இருப்பவற்றைப் படித்தேன். மிக நல்ல தொகுப்பு. நிறைய புதிய எண்ணங்களைக் கற்றுக் கொண்டேன். உங்கள் முயற்சி வெற்றி பெறவும் எல்லா தமிழர்களிடமும் இந்த எண்ணங்கள் பரவவும் என் வாழ்த்துகள்.
உண்மை தான் ஜீவி ஐயா. எல்லா பாடங்களிலும் அப்படி தான் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் அப்படித் தான் பொருள் கொள்கிறார்கள். ஆனால் சிலர் ஏதோ அவர்களுக்கு மட்டுமே கிடைத்த தரவுகள் அடிப்படையிலோ அல்லது அவர்களின் கொள்கைகள் அடிப்படையிலோ வேந்தனும் வேதகால இந்திரனும் பிற்காலத்தில் இணைக்கப்பட்டார்கள்; மாயோனும் கண்ணனும் பிற்காலத்தில் இணைக்கப்பட்டார்கள்; தொல்காப்பியம் சொல்லும் வருணனும் வேதம் சொல்லும் வருணனும் வெவ்வேறு என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் அப்படி சொல்பவர்கள் சேயோன் முருகன் இல்லை என்று மட்டும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். :-) என்ன தரவுகள் அவர்களுக்குக் கிடைத்ததோ அறியேன். :-) எல்லாம் அவரவர் புரிதல்கள் என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியது தான் போலும். :-)
ReplyDeleteஇவர்கள் கருத்துகளை எதிர்ப்பதை விட தரவுகள் அடிப்படையில் என்ன தெரிகிறது என்பதையும் எவை எவை எந்த அடிப்படையில் என்ன பொருள் தருகிறது என்பதையும் மட்டுமே சொல்லிச் செல்ல விரும்புகிறேன். அதனால் இலக்கிய அடிப்படையில் பேசும் போது மூல நூலில் இருக்கும் வரிகளையும் அப்படியே கொடுக்கிறேன். நான் சொல்லும் பொருள் தவறு என்றால் மூல வரிகளைக் கொண்டு அதற்கு என்ன பொருள் கொள்ளவேண்டும் என்று யாராவது சொல்ல விரும்பினால் சொல்லலாம் இல்லையா?
அது மட்டும் இல்லாமல் வேறு தரவுகளும் தந்து ஏன் நான் கொள்ளும் பொருள் தவறு என்றும் அவர்கள் சொல்லலாம். கற்றது கைம்மண் அளவு தானே. தரவுகளின் அடிப்படையில் சொல்லும் போது மறுக்க ஒன்றும் இல்லை.
இவை எல்லாம் போக, நம் கண் முன்னால் நடப்பவைகளிலேயே சில நேரங்களில் அங்கே என்ன நடந்தது என்று நம்மால் தெளிவாகச் சொல்ல இயலவில்லை. நான் பிறப்பதற்கு முன்னர் தமிழகத்தில் என்ன நடந்தது என்பதை நீங்கள் எழுதுகிறீர்கள். படித்து அறிந்து கொள்கிறேன். அப்படி இருக்க சங்க காலத்தில் நடந்தவை பற்றி யாராலும் அறுதியிட்டுக் கூற இயலுமா என்ற கேள்வியும் இருக்கிறது. அதனால் தான் தரவுகள் அடிப்படையில் எல்லாவற்றையும் அணுக விரும்புகிறேன்.
தொல்காப்பியக் காலத்தை எப்படி நிறுவுவது, எந்த அடிப்படைகள் வேண்டும் என்பவற்றைப் பற்றி தற்போது எனக்கு ஒன்றுமே தெரியாது ஐயா. நிறைய படித்து அறிந்து கொள்ள வேண்டும். சங்க கால நூற்களைப் பற்றி இராம.கி. ஐயா ஆய்ந்து கொண்டிருக்கிறார். அவர் தன் ஆய்வு முடிவுகளைச் சொன்னால் பலவற்றைப் புதிதாக அறிய முடியும் என்று எண்ணுகிறேன்.
தங்களின் பாராட்டிற்கு நன்றி.
இரவிசங்கர். மாயோன் என்பது மாயவன் என்பதின் இன்னொரு வடிவம் என்பதே என் புரிதலாக இருந்தது. நீங்கள் கேட்ட பிறகு இணையத்தில் இருக்கும் அகராதிகளில் பார்த்தேன். ஓரிடத்தில் மாயோன் என்பதற்கு 'கருவண்ணன்' என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது. நீங்களும் இணைய அகராதிகளில் பாருங்கள்.
ReplyDeleteஅப்படி தேடிய போது பரிபாடலில் மாயோன் என்பதை திருமாலுக்குப் பெயராக புழங்கியிருக்கின்றார்கள் என்ற குறிப்பையும் கண்டேன். மேலும் தேடியதில் பரிபாடலில் மதுரையைப் பற்றிச் சொல்லும் போது
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்
என்று சொல்லப்பட்டிருக்கிறது. மாயோனாகிய திருமாலின் உந்தியிலமைந்த தாமரை மலரையொத்து அமைந்திருந்ததாம் மதுரை. இது மாயோன் என்பவன் கண்ணன்/திருமால் என்பவனே என்று உறுதிப்படுத்தும் இன்னொரு தரவு. பரிபாடலை இன்னும் கொஞ்சம் நெருங்கிப் படித்து விட்டு இதனைப் பற்றி மேலும் எழுதுகிறேன்.
what if Aryan's forced the meaning to "maayon" as "kannan"
ReplyDeletehow can you prove some "thimmies" wrong if they said above statement???
Aryanoda thollaiyum thimmikaloda thollaiyum thaanga mudiyalaippa?
வெத்து வேட்டு ஐயா. சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்? ஒரு தனி மனிதர் தன் மனத்திற்குத் தோன்றிய கற்பனையை எல்லாம் எழுதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அப்படித் தான் நடந்தது என்று சொல்வார். அதனையும் தரவாக எண்ணி சில பேர் பேசுவார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியத் தரவுகளை எடுத்து வைத்துப் பேசினாலும் கற்பனை கதைகளைப் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். அதில் ஆரியன் என்ன திராவிடன் என்ன எல்லோரும் ஒரே மாதிரி தான்.
ReplyDeleteஇன்றைக்கு இன்னொரு கேள்வி தோன்றியது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற முறையில் தான் ஐவகை நிலங்களைக் கூறுவார்கள். குறிஞ்சியும் முல்லையும் திரிந்தால் பாலை என்பதாக சிலப்பதிகாரம் சொல்லும். அதனால் பாலை தவிர்த்து மற்ற நான்கு நிலங்களை மட்டுமே கூறும் பழந்தமிழ் இலக்கியங்கள். அந்த நான்கு நிலங்களை வைத்துத் தான் உலகத்திற்கு 'நானிலம்' என்ற பெயரும் உண்டு.
ReplyDeleteகுறிஞ்சி தொடங்கி அந்த வரிசையில் சொல்லாமல் இங்கே தொல்காப்பியம் மருதத்தில் தொடங்குவதில் ஏதேனும் காரணம் உண்டா? குறிஞ்சி, முல்லை என்ற வரிசை மட்டுமே மாறியிருக்கிறது. அப்புறம் மருதம், நெய்தல் என்ற வரிசை மாறவில்லை. முல்லையை முதலில் கூற முல்லை நிலத்திற்கோ முல்லை மேய மாயோனுக்கோ ஏதேனும் முதன்மை உண்டோ?
அன்புள்ள குமரன்,
ReplyDeleteபழந்தமிழ் இலக்கியங்களில் காதலர்களின் காமத்திற்குத் தலைவனாகக் காமவேள் குறிக்கப்படுகிறான். இந்தக் காமனுக்குத் தந்தை,முல்லைநிலக்கடவுள் திருமால்.
கலித்தொகையில், நெய்தல் நிலக்காதலை எழுதியவர் புலவர் நல்லாந்துவனார்.கலித்தொகை (நெய்தல்-30)-ல்
காமனை 'நெடியோன் மகன்' என்று இவர் குறிப்பிடுகிறார். நெடியோன் என்பது திருமாலைக் குறிக்கும் சொல் என்பது பல செய்யுள்களில் காணக்கிடக்கிறது. கலித்தொகையில் முல்லை நிலம் குறித்து எழுதியவர் சோழன் நல்லுத்திரன். முல்லைக்கலியின் ஒன்பதாம் பாட்டிற்கான உரை எழுதுகையில் உரையாசியர் நச்சினார்க்கினியர், "காமன் மாயோன் மகனாதலின்" என்று குறிப்பிடுகிறார்.
இவற்றால், "மாயோன்" என்கிற சொல் திருமாலைத்தான் குறிக்கிறது என்பது தெளிவாகிறது. அதனால், மத்திய அமெரிக்காவின் மாயன் பண்பாட்டிற்கும், நமது மாயோனானத் திருமாலுக்கும் தொடர்பு இல்லை என்று எண்ணுகிறேன்.
இந்தக் குறிப்புகள் தங்கள் நீண்ட நெடிய ஆராய்ச்சிகளுக்கு பயன்படலாம். வேறு ஏதாவது தரவுகள் கிடைப்பினும், அவ்வப்போது குறிப்பிடுகிறேன்.
//அப்படி சொல்பவர்கள் சேயோன் முருகன் இல்லை என்று மட்டும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.//
ReplyDeleteகுமரன்,
இதெல்லாம் ரொம்ப அதிக எதிர் பார்ப்பாக இருக்கிறது, அது எப்படிங்க முழுக்க முழுக்க தமிழ் மண்ணில் தோன்றியது என்று அறியப்பட்ட முருகனை சொல்ல முடியும், கந்த புராணதிற்கு முன்பு முருகனுக்கு வேதத் தொடர்பு வலிய புகுத்தப்பட்டது போல் தெரியவில்லை.
விடை கிடைத்ததா ?
:)
கோவி.கண்ணன். எப்படி முருகவழிபாடு முழுக்க முழுக்க தமிழ் மண்ணில் தோன்றியது என்று அறியப்படுகிறதோ அதே போல் கண்ணன் வழிபாடும் முழுக்க முழுக்க தமிழ் மண்ணில் தோன்றியது என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. முருக வழிபாட்டிற்கு எத்தனைப் பழைமையான சான்றுகள் உள்ளனவோ அதே அளவிற்கு கண்ணனைப் பற்றியும் இருக்கின்றன. ஒவ்வொன்றாக எடுத்து வைத்து வருகிறேன். எல்லாவற்றையும் எடுத்து வைக்கக் குறைந்தது ஒரு வருடமாவது ஆகலாம். தரவுகள் இன்றி இந்தக் கருத்தை வலியுறுத்த விரும்பவில்லை. அதனால் முதலில் தரவுகளை வைக்கிறேன்.
ReplyDeleteகந்த புராணம் சொல்லும் முருகனைப் பற்றியச் செய்திகள் கந்த புராணத்திற்கு வெகு நாட்களுக்கு முன்பே இருக்கின்றன என்பதையும் காண்கிறேன். அவற்றில் வேத தொடர்பும் இருக்கின்றன. அந்தத் தரவுகளையும் ஒவ்வொன்றாக வைத்து வருகிறேன்.
தொடர்ந்து வரும் இடுகைகள் கண்ணனையும் முருகனையும் மாற்றி மாற்றிச் சொல்லிவருவதை அவதானித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
அவக்கரப் படாமல் ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். அப்படிச் சொல்லி வரும் போது இந்தக் கருத்துகளுக்கு எதிரான தரவுகள் கிட்டினால் அவற்றையும் தவறாமல் எடுத்து வைப்பேன். தரவுகளின் அடிப்படையில் கருத்துகளை மாற்றிக் கொள்ள எந்த தயக்கமும் இல்லை.
//இதெல்லாம் ரொம்ப அதிக எதிர் பார்ப்பாக இருக்கிறது//
ReplyDeleteமாயோன் கண்ணன் இல்லை என்று நிறுவ முயன்றதும் முருகன் மட்டுமே பழந்தமிழர்களால் வணங்கப்பட்டவன் என்று நிறுவியதும் இங்கே நன்கு நிலை நிறுத்தப்பட்டதால் இந்தக் கேள்வி அதிக எதிர்பார்ப்பாகத் தோன்றுகிறது கோவி.கண்ணன். அப்படி நிறுவிய நூல்களை மட்டும் படிக்காமல் மூல நூல்களைப் படித்தால் நான் மேலே சொன்ன கருத்துகள் தோன்றுகின்றன. முருகன் கட்டாயம் பழந்தமிழர்களால் வணங்கப்பட்டவன்; முருகனைப் பேசும் முதல் முறையே கண்ணனைப் பற்றியப் பேச்சும் இருக்கின்றது. அந்தத் தரவுகள் கிடைப்பதற்கு முன்னால் என்ன என்ன நடந்திருக்கலாம் என்று சொல்வதெல்லாம் ஊகங்களின் அடிப்படையில் தானே ஒழிய தரவுகள் இல்லை என்று நினைக்கிறேன். மேலும் ஆய்ந்த பிறகு இந்தக் கருத்து மாறலாம். மாறினால் கட்டாயம் சொல்வேன்.
ஜீவி ஐயா. தங்களின் குறிப்புகளுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து குறிப்புகளைத் தந்து வாருங்கள்.
ReplyDeleteகாமனார் தாதை என்று பெருமாளைப் போற்றும் திருவாய்மொழிப் பாசுரங்கள் படித்திருக்கிறேன். கலித்தொகையிலும் அந்தக் கருத்து வந்திருக்கிறது என்பதை அறிந்து மகிழ்கிறேன். இது என் தேடல்களுக்கு ஒரு நல்ல குறிப்பு. நெடியோன் என்று பல சங்க இலக்கியங்களில் திருமாலைக் குறித்திருக்கிறார்கள் என்று இராம.கி. ஐயாவும் பல குறிப்புகள் தந்திருக்கிறார். முல்லைக்கலியின் உரையில் நச்சினார்க்கினியர் சொல்வதும் மாயோன் திருமாலே என்பதை உறுதி செய்கிறது.
நீங்கள் சொன்னது போல் இது நீண்ட நெடிய ஆராய்ச்சி தான். தங்கள் உதவியும் வாழ்த்துகளும் ஆசிகளும் பெரிதும் பயன்படும்.
//முருகவழிபாடு முழுக்க முழுக்க தமிழ் மண்ணில் தோன்றியது என்று அறியப்படுகிறதோ அதே போல் கண்ணன் வழிபாடும் முழுக்க முழுக்க தமிழ் மண்ணில் தோன்றியது என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. //
ReplyDeleteஇதை நான் சொன்னால் திரிப்பதாகவே சொல்லுவார்கள்,
மாலும், வேலனும் , ஈசனும் தொன்றுதொட்டே தமிழ் மண்ணுக்குறியவர்கள் என்று நான் எழுதினால் அபத்தமாக இருப்பது போல் தோன்றும். நீங்கள் சான்றுகளுடன் விளக்கினால் மறுப்பவர் எவர் இருக்க முடியும் ?
வரவேற்கிறேன்.
வேதத்தில் தூற்றப்பட்ட சிவனை, வேதத்தில் குறிப்பிட்ட ருத்திரனாக உருமாற்றியது போல் கண்ணனை கிருஷ்ணனாக சொல்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
"இமைய வில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
ReplyDeleteஉமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தக்கையின்கீழ் புகுந்து,அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல"...
இந்த வரிகள், கலித்தொகையில்('குறிஞ்சி'யில் 23ம் வரி) "குறிஞ்சி"யைப்பாடிய புலவர் கபிலரால் குறிக்கப்படுகிறது.
"ஐ இரு தலையின் அரக்கர் கோமான்"-- பத்துத்தலை இராவணனா?
உங்களிடம் உரை நூல் இருப்பின்
இதுபற்றியும் இதன் தொடர்ச்சி பற்றியும் பார்க்க வேண்டுகிறேன்.
//கந்த புராணதிற்கு முன்பு முருகனுக்கு வேதத் தொடர்பு வலிய புகுத்தப்பட்டது போல் தெரியவில்லை.
ReplyDelete//
//வேதத்தில் தூற்றப்பட்ட சிவனை, வேதத்தில் குறிப்பிட்ட ருத்திரனாக உருமாற்றியது போல் கண்ணனை கிருஷ்ணனாக சொல்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
//
கோவி.கண்ணன். நீங்கள் படித்தவற்றையும் புரிந்து கொண்டவற்றையும் கொண்டு இந்த மாதிரி கருத்துகள் சொல்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.
கந்தபுராணம் சொன்னவை எல்லாம் தமிழ் இலக்கியங்களில் முன்பே சொல்லப்பட்டிருக்கின்றன என்று சொன்னேன். அப்போது வேதத் தொடர்பும் இருக்கின்றன என்று சொன்னேன். ஆனால் இந்த 'வலிய' என்று சொன்ன ஒரு சொல்லை பார்க்காமல் விட்டுவிட்டேன்.
சான்றுகள் வைத்தப் பின்னர் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் - அவை கந்த புராணத்தில் 'வலிய' புகுத்தப் பெற்றவையா அன்றி முன்னரே பழந்தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றனவா என்று.
வேதத்தில் தூற்றப்பட்ட சிவன் - வேதத்தில் குறிப்பிடப்பட்ட உருத்திரன் - உருமாறல், கண்ணனை கிருஷ்ணனாக சொல்கிறார்கள் என்பவை அப்படியே சான்றுகள் பார்க்கும் போது இன்னும் நன்கு புரிபடும். தேவகி மைந்தன், வடமதுரையில் பிறந்தவன், பலராமனின் தம்பி போன்று கிருஷ்ணனைக் கூறும் குறிப்புகள் எல்லாம் பழந்தமிழ் இலக்கியங்களில் (சங்க கால, சங்கம் மருவிய கால இலக்கியங்களில்) அப்படியே வருகின்றன. சொல்லப்போனால் கண்ணனை/கிருஷ்ணனைப் பற்றிய குறிப்புகள் முதலில் தோன்றுவது தமிழில் தான்; பின்னரே அவை வடக்கில் தோன்றுகின்றன என்றும் தோன்றுகிறது - இது சான்றுகள் வைக்கும் வரை முன்னீடு என்றே கொள்ளுங்கள்.
இரவிசங்கர். மறைமலையடிகள் எழுதிய முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை படித்துக் கொண்டிருந்தேன். அதில் மாயோன் என்பதற்கு கரிய நிறத்தனன் என்று பொருள் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது:
ReplyDeleteமாயோள் - கரிய நிறத்தை உடையோள், மாந்தளிரின் நிறத்தை உடையோளெனினுமாம், 21; 'மாமை'
நிறத்தையுணர்த்துமென்பர்' திவாகரரும், புறப்பொருள் வெண்பாமாலையுரைகாரரும்
மால் - மாயோன், கரிய நிறத்தினன் என்பது சொற்பொருள், திவாகரம்
ஜீவி ஐயா. என்னிடம் உரை நூல் இல்லை. தமிழ் இணையப் பல்கலைகழக நூலகத்தில் இருக்கிறது. ஆனால் ஏதோ எழுத்துரு பிரச்சனையால் படிக்க முடியவில்லை.
ReplyDeleteஆனால் இந்தப் பாடல் தான் கொஞ்சம் எளிமையாகவே இருக்கிறதே.
இமயமலையை (மேரு மலையென்று சொல்லுவார்களும் உண்டு) வில்லாகக் கொண்டு சிவபெருமான் திரிபுர அசுரர்களைக் கொன்றதை முதல் வரி சொல்கிறது. ஈர்ச்சடை அந்தணன் என்பது சிவபெருமானுக்குப் பொருத்தமான பெயர்.
இரண்டாவது அடியும் எளிமையாக இருக்கிறது. உமையுடன் உயர்மலையாம் கயிலையில் அமர்ந்திருக்க... இப்படியே பொருள் பார்த்துக் கொண்டு வந்தால் 'இராவண கர்வ பங்க' நிகழ்ச்சியைத் தான் இந்தப் பாடல் சொல்கிறது.
ஆமாம், குமரன்!
ReplyDeleteஆனால், என் நப்பாசை இராவணன் கிடைக்கும் பொழுது இராமன் கிடைப்பாரோ என்று தான்!
சங்க இலக்கியங்களை அலசி ஆராயும் பொழுது இந்த நினைவை விட்டு விடாமல் கவனத்தில் கொள்ள ஒரு கோரிக்கை.
மிக்க நன்றி.
சொல்லவே வேண்டியதில்லை ஜீவி ஐயா. அப்படிப் பார்த்தால் கட்டாயம் அதனைப் பற்றி எழுதுவேன். இது வரை எழுதியதில் புறநானூற்றில் ஒரு இடத்தில் இராமனைக் 'கடுந்தெறல் இராமன்' என்று சொல்லியிருக்கிறது. நீங்கள் அந்த இடுகையைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் சொன்ன குறுந்தொகை பாடலில் 'ஐ இரு தலையின் அரக்கர் கோமான்' என்று மிகத் தெளிவாக 'ஐயிரு தலையை'ப் பற்றியும் கோமான் என்றும் சொல்லியிருக்கிறார் கபிலர். புறநானூற்றுப் பாடல் வெறுமனே 'அரக்கன்' என்று மட்டும் சொன்னது. பெயர் சொல்லாமல் வெறும் அரக்கன் என்று மட்டுமே சொன்னதால் அது இராவணனைக் குறிக்கிறது என்ற முடிவிற்கு வரத் தேவை இல்லை என்று இராகவன் கருதினார். அவர் இந்தப் பாடலைப் பார்த்தால் நம்மோடு ஒத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்.
ReplyDeletekumaran, maayon endra sollukku kariya niraththavan endru porul. mai niram udaiyavan maayOn aavaan. inku mai enpathu karumaiyaik kurikkum.
ReplyDeleteஆமாம் சக்தி. நானும் அந்தப் பொருளைச் சொல்லியிருக்கிறேன். பின்னூட்டங்களை நீங்கள் படிக்கவில்லையா? வேறு இடுகைகளிலும் இதனைச் சொல்லியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Jegan - என் மகனுக்கு மாயோன் மயிலோன் என்று பெயர் சூட்டியுள்ளேன் .. இந்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்நது .. நன்றி ..
ReplyDelete