உருத்திராட்ச பூனைகளைப் பற்றி நாம் நிறைய கேள்விபட்டிருக்கிறோம்; பார்த்திருக்கிறோம். இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியலை என்று பலமுறை நொந்துக் கொண்டும் இருக்கிறோம். திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கவிஞர் சொன்னதும் சரி தான். காலம் காலமா உலகம் தோன்றிய நாள் தொடங்கி இப்படிப்பட்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். எதற்கு இவ்வளவு தூரம் பீடிகை போடுகிறேன் என்று பார்க்கிறீர்களா? ஒன்றுமில்லை. காலம் காலமாய் அழியாமல் இருக்கும் படி மாமல்லன் காலத்தில் கல்லிலே உருத்திராட்ச பூனையைச் செதுக்கி வைத்திருக்கிறார்களே, சென்னை சென்ற போது அதனைப் பார்த்து வந்தேன், அதைப்பற்றிச் சொல்லத்தான். :-)
நாங்கள் மாமல்லபுரமாம் மகாபலிபுரம் சென்ற போது சரியான வெயில் காலம். வெயில் அதிகமாக வருவதற்குள் சென்று வந்துவிட வேண்டும் என்று எண்ணி காலை 8 மணிக்கெல்லாம் மாமல்லபுரத்தில் இருந்தோம். அப்படியிருந்தும் வெயில் வாட்டி எடுத்துவிட்டது.
முதலில் பாறைச் சரிவில் நிற்கும் உருண்டைப் பாறையைக் காட்டி கண்ணனின் வெண்ணெய் உருண்டை என்று சொன்னார்கள். அவ்வளவு தான் என் மகள் பார்க்கும் பாறையை எல்லாம் கண்ணனின் வெண்ணெய்; மண் எல்லாம் அவன் தின்ற மண் என்று கதை சொல்லத் தொடங்கிவிட்டாள். வீடு வந்து சேரும் வரை இது கண்ணன் தின்ற வெண்ணெயா; இது அவன் தின்ற மண்ணா; நானும் தின்று பார்க்கலாமா என்று ஒரே தொல்லை.
ஒரு கல் மண்டபத்தில் மும்மூர்த்திகளின் கோவில் இருந்தது. நன்றாக இருந்தது. ஒரு தனிக்கோவிலில் அண்மைக் காலத்தில் நிறுவப்பட்ட தொந்தி கணபதி இருந்தார். ஒரு குடைவரை மண்டபத்தில் வராகமூர்த்தியும் கஜலக்ஷ்மியும் இருந்தார்கள். இன்னொரு குடைவரை மண்டபத்தில் கண்ணன் கோவர்த்தன மலையைத் தாங்கி நிற்கும் காட்சி அழகுறச் செதுக்கப்பட்டிருந்தது. பாம்பு, புலி முதல் எல்லா மிருகங்களும் மழைக்கு மலையின் கீழ் ஒதுங்கியதை அழகாக வடித்திருந்தார்கள். என் மகளுக்கு பலராமன் உருவம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. கதை கேட்டு கதை கேட்டு அவள் கற்பனையில் வடித்திருந்த பலராமன் உருவத்துடன் இந்த உருவம் நன்கு ஒத்துப் போனது போல.
அடுத்து அருச்சுனன் தவத்தைக் காட்டும் ஒரே கல்லில் செதுக்கிய நெடிய தொடர் சிற்பங்களைப் பார்த்தோம். (படத்தை அழுத்திப் பெரிதாக்கிப் பாருங்கள்). பாறையில் மேல்பகுதி எல்லாம் தேவர்கள். நடுவே இருக்கும் பிளவு பாதாள உலகத்தில் இருந்து நாகர்கள் வருவதற்காக இருக்கும் பிலம் (பிளவு). அதிலிருந்து நாகர்கள் வெளிப்படுகிறார்கள். ரிஷிகளும் முனிவர்களும் பிளவின் இருபுறமும் காட்டப்பட்டிருக்கிறார்கள். ஆங்காங்கே வன விலங்குகள். ஒரு பெருமாள் கோவிலும் உண்டு. பெருமாள் கோவிலின் மேல் பகுதியில் எலும்பும் தோலுமாக ஒற்றைக்காலில் நின்று இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி நிற்கும் உருவம் தான் அருச்சுனன். அவன் தவத்தை மெச்சி பாசுபத அஸ்திரம் தருவதற்காக அதனை ஏந்திக் கொண்டு சிவபெருமான் அவனது வலப்புறத்தில் நிற்கிறார்.
சரி. இதெல்லாம் சொல்லிவிட்டீர்களே; உருத்திராட்ச பூனை எங்கே என்று கேட்கிறீர்களா? வலப்பக்கம் பெரிய யானை ஒன்று நிற்கிறதே. அதன் தந்தத்தின் கீழே பாருங்கள். அருச்சுனன் நிற்பது போலவே ஒரு பூனை நிற்பதைப் பார்க்கலாம். அதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த உருத்திராட்ச பூனையைச் சுற்றி கைகளைக் கூப்பிக் கொண்டு பல எலிகளும் நிற்கின்றன. நகைச்சுவை உணர்வு மிகுந்த சிற்பி போலும். நன்கு வடித்திருக்கிறார். நீங்கள் மாமல்லபுரம் சென்றால் தவறாமல் இந்தப் பூனையையும் எலிகளையும் பார்த்துவிட்டு வாருங்கள்.
அடுத்து கடற்கரை கோவிலுக்குச் சென்றோம். அது கடற்கரையில் இருப்பதால் கடற்காற்றின் அரிப்பை கல்லில் நன்கு காண முடிந்தது. அந்த நேரத்தில் வெயிலின் கடுமை அதிகமாக இருந்ததால் கோவிலை அனுபவித்துப் பார்க்க முடியவில்லை. விரைவில் வீட்டிற்குப் போனால் போதும் என்று திரும்பி வந்துவிட்டோம்.
வெற்றி, நீங்கள் சொன்னபடி இந்தியப் பயணத்தில் என்ன எல்லாம் பதிவுலகில் பகிர்ந்து கொள்ளலாமோ அவற்றை எல்லாம் சொல்லத் தொடங்கியிருக்கிறேன்.
ReplyDeleteகுமரன், சிவகாமி சபததத்தில் இதுக் குறித்து வரும் இல்லையா?
ReplyDeleteகுமரன்,
ReplyDeleteஎன்ன ஆச்சரியம். நேற்று இரவுதான் இந்த மாமல்லபுர சிலைகள், கடற்கரைக் கோவில், தஞ்சைப் பெருங்கோயில் பற்றியெல்லாம் பல மணித்தியாலங்கள் நானும் எனது தமிழக நண்பரும் கதைத்துக் கொண்டிருந்தோம். இன்று அதுபற்றி உங்களின் பதிவு. :-))
குமரன், படங்களுடன் , விளக்கக் குறிப்புகளும் தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னே கைவண்ணம்! எப்படி அருமையாகச் சிலைகளை வடித்திருக்கிறார்கள். எமது பார்வைக்குக் கிடைக்காமல் கடலில் மூழ்கியவை எத்தனையோ யார் கண்டார் ((:-
குமரன், பதிவுக்கு மீண்டும் என் நன்றிகள்.
ஆஹா................
ReplyDeleteயானையப் பார்த்த என் கண்ணு எப்படி இந்தப் பூனையை விட்டுவச்சதுன்னு தெரியலை(-:
ஆனாலும் உங்க கண்ணுக்குப் பவர் ஜாஸ்தி குமரன்.
அடுத்தமுறை லிஸ்டுலே பூனையைச் சேர்த்தாச்சு.
இங்கே நம்ம வீட்டுக்காக, இந்தியாவிலே வாங்குன ஒரு நடன விநாயகர் போஸ்டரில்
அவரோட ஆட்டத்துக்கு அவர் வாகனம் ரெண்டு காலுலே நின்னு கையிலே பெரிய தாளம்
வச்சு வாசிக்குது....... எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு.
முதலில் பாறைச் சரிவில் நிற்கும் உருண்டைப் பாறையைக் காட்டி கண்ணனின் வெண்ணெய் உருண்டை என்று சொன்னார்கள். அவ்வளவு தான் என் மகள் பார்க்கும் பாறையை எல்லாம் கண்ணனின் வெண்ணெய்; மண் எல்லாம் அவன் தின்ற மண் என்று கதை சொல்லத் தொடங்கிவிட்டாள். வீடு வந்து சேரும் வரை இது கண்ணன் தின்ற வெண்ணெயா; இது அவன் தின்ற மண்ணா; நானும் தின்று பார்க்கலாமா என்று ஒரே தொல்லை. //
ReplyDeleteபெரியாழ்வார் கோதை கதை மாதிரி இருக்கே குமரன். குழந்தை நன்றாக எழுதுவாள் பாருங்கள்.
நல்லா இருக்கு படம். இத்தனை தடவை மஹாபலிபுரம் போயும் நின்று பார்த்ததில்லை. வெய்யில் வாட்டிவிடும். மிகவும் நன்றி..
துளசி, குமரன் போட்ட புகைப்படத்தையே சிவகாமியின் சபதத்தில் வினு ஓவியமாய் தீட்டியிருப்பார். கள்ள பூனை ஆஷாடபூதீ கோலத்தில் நிற்க பவ்வியமாய் எலிகள் வணங்கிக்கொண்டு இருக்கும் ஆயனாரின் சிற்பத்தை சிவகாமி பார்த்து ஆனந்தப்படுவது
ReplyDeleteபோன்ற காட்சி என்று நினைவு, இல்லை மாமல்லனும், மகேந்திரனுமா சரியாய் நினைவில்லை. ஆனால் ஓரகண்ணில் எலிகளைக் கணக்கெடுக்கும்
கள்ள பூனையாரின் முகம் மட்டும் நினைவில் இருக்கிறது.
யாரூப்பா கல்கி ரசிகர்கள் யாராவது வந்து விளக்குவார்கள் என்றுப் பார்த்தால் ஒருவரையும் காணவில்லையே
ஆமாம் உஷா. சிவகாமி சபதத்தில் இந்த சிலைகளைப் பற்றியும் மாமல்லபுரத்தைப் பற்றியும் வரும்.
ReplyDeleteசிற்பி ஆயனர் கற்பனைப் பாத்திரமா உண்மையில் வாழ்ந்தவரா தெரியவில்லை. ஆனால் ஆயனச் சிற்பியை சிவகாமி சபதத்தின் மூலம் இந்தக் காலத்தவர்க்கு நன்கு அறிமுகப் படுத்தி வைத்துவிட்டார் கல்கி. நான் சிவகாமி சபதத்தை இணையத்தில் படித்தவன். அதனால் நீங்கள் சொல்லும் ஓவியத்தைப் பார்த்ததில்லை. :-( ஆனால் என்ன நேரில் அந்த சிற்பத்தைப் பார்த்தாயிற்றே. :-)
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅனானிமஸ். உங்கள் பின்னூட்டத்தை முதலில் பொருள் புரியாமல் அனுமதித்துவிட்டேன். பின்னர் பொருள் புரிந்தவுடன் அழித்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். இனி மேல் முடிந்த வரை பிரச்சனையில் இறங்காமல் இருப்பதென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteபூம்புகாரில் நிறைய கடலில் மூழ்கியிருக்கும் வெற்றி. தமிழகக் (இந்தியக்) கடலோரங்களிலும் இலங்கைக் கடலோரங்களிலும் அகழ்வாராய்ச்சி செய்தால் நிறைய வெளிக்கொணரலாம். அதற்குரிய நேரம் இன்னும் வரவில்லை போலும்.
ReplyDeleteபயணக்கட்டுரை எழுதுவதில் அவ்வளவு ஆர்வம் எனக்கில்லை வெற்றி. அதனால் பயணத்தின் போது குடும்பத்தினர் யாரும் இல்லாமல் நிழற்படங்களே எடுக்கவில்லை. இந்தப் படத்தில் மட்டுமே யாரும் இல்லை. நீங்கள் சொன்ன பிறகு சிந்தித்ததில் சொல்ல முடிந்தவற்றை இங்கே சொல்லியிருக்கிறேன். பார்ப்போம். இன்னும் எத்தனை இடுகைகள் சொல்வதற்கு இருக்கின்றன என்று.
நீங்க சொல்ற போஸ்டரை நானும் பார்த்திருக்கேன் துளசியக்கா. அருமையான கற்பனை அது. ரொம்ப நல்லா இருக்கும்.
ReplyDeleteஅடுத்த முறை மாமல்லபுரம் போனா தவறாம பூனையையும் பார்த்துட்டு வாங்க.
வீட்டுலயும் அந்தக் கவலை தான் வல்லியம்மா. விட்டா ஆண்டாள் ஆக்கிடுவீங்க போல இருக்கேன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனா காருல மட்டும் சாமி பாட்டு போடக்கூடாது; சினிமா பாட்டு தான். அதனால ஆண்டாள் ஆகமாட்டான்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். :-)
ReplyDeleteஒரு முறை தம்பிக்கு முன்னால வீட்டுல அப்படி சொன்னவுடனே 'குமரன் பெரியாழ்வாரா இருந்தா அது நடக்கும். அதனால நீங்க கவலைப்படாதீங்க'ன்னு சொல்லிட்டான். :-)
உருத்திராட்சப் பூனை. இதை நேரிலேயே பார்த்திருக்கிறேன். சிற்பங்கள் மிக அழகானவை. மாமல்லபுரம்....சிற்பக்கூடம். சமீபத்தில் முருகன் கோயில் ஒன்றை அகழ்ந்திருக்கின்றார்களாமே...அதைப் பார்த்தீர்களா?
ReplyDeleteஅகழ்ந்தது தெரியும் இராகவன். அது மாமல்லபுரத்திலா? அது தெரியாமல் போய்விட்டதே. பார்க்கவில்லை இராகவன்.
ReplyDelete//ஒரு முறை தம்பிக்கு முன்னால வீட்டுல அப்படி சொன்னவுடனே 'குமரன் பெரியாழ்வாரா இருந்தா அது நடக்கும். அதனால நீங்க கவலைப்படாதீங்க'ன்னு சொல்லிட்டான். :-)//
ReplyDeleteஹிஹிஹி.
விஜயன், பூனை எல்லாம் பார்த்ததுதான். அந்த குரங்கைப் பற்றிக் கூட எதோ சொல்லுவாங்க. மறந்து போச்சு.
சிற்பி பூனையின் கழுத்தில் ருத்திராட்சம் ஒன்றையும் போட்டிருந்தா - கற்களே விழுந்து விழுந்து சிரித்திருக்கும் குமரன்.
ReplyDeleteஅது சரி, பெரியாழ்வார் எந்த சினிமாப் பாட்டு விரும்பிக் கேட்டுக் கொண்டு காரை ஒட்டுவாரோ? :-)
//ஆனால் ஓரகண்ணில் எலிகளைக் கணக்கெடுக்கும்
கள்ள பூனையாரின் முகம் மட்டும் நினைவில் இருக்கிறது//
ஹிஹி
உஷா...அது ஆயனார்-சிவகாமி உரையாடல் போது தான்!
மாமல்லனும், மகேந்திரனும் பேசிக் கொள்வது கல்லில் குடையும் முன்பு!
//அந்த குரங்கைப் பற்றிக் கூட எதோ சொல்லுவாங்க. மறந்து போச்சு.//
குரங்கு அதன் துணைக்குப் பேன் பார்க்கும் சிற்பம், கொத்ஸ்!
/* அது மாமல்லபுரத்திலா? அது தெரியாமல் போய்விட்டதே. பார்க்கவில்லை இராகவன். */
ReplyDeleteஓம் குமரன். அது மாமல்லபுரத்தில் தான். அத்துடன் 2004 ம் ஆண்டு வந்த கடற்கோளும் [சுனாமியும்] நிலத்தின் கீழிருந்த பல சிற்ப வேலைப்பாடுகளை மீட்டுத் தந்தது. அவை பற்றி BBC யின் இணையத்தளத்தில் வந்த செய்திகளைப் படிக்க கீழே உள்ள சுட்டிகளைக் கிளிக் செய்யுங்கள்.
Lost city found off Indian coast
Tsunami reveals ancient temple sites
Tsunami throws up India relics
கொத்ஸ். எல்லா குரங்கையும் பாத்தீங்களா. மகிழ்ச்சி. :-)
ReplyDeleteஇரவிசங்கர், இது வைணவப்பூனையாக இருக்கும். அதனால் தான் உருத்திராட்சம் அணியவில்லையோ? :-)
ReplyDeleteஎனக்கு சாமி பாட்டு தான் காருல வேணும். மகளுக்குத் தான் சினிமா பாட்டு வேணும். :-)
நீங்க சொல்ற குரங்கு அதன் துணைக்குப் பேன் எடுக்கும் சிற்பம் இந்தக் கல்லுல இல்லை. அது தனியா இன்னொரு இடத்துல இருக்கிறது. ஆண் பெண்ணுக்குப் பேன் பார்க்க பெண் குழந்தைக்குப் பேன் பார்த்துக் கொண்டிருக்கிறது.
சுட்டிகளுக்கு நன்றி வெற்றி. படித்து விவரம் அறிந்து கொண்டேன்.
ReplyDelete//இரவிசங்கர், இது வைணவப்பூனையாக இருக்கும். அதனால் தான் உருத்திராட்சம் அணியவில்லையோ? :-)//
ReplyDeleteஅப்படின்னா, இனி
உருத்திராட்சப் பூனைகள் என்ற பதத்தோடு....
துளசிமணிப் பூனைகள் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம், குமரன்!
வைணவத்துக்கும் ஒரு பூனை வேண்டுமல்லவா? சரி நிகர் சமானமாக! :-))))
கவலைப்படாதீங்க இரவிசங்கர். அதுக்கு நான் இருக்கேன் - உருத்திராட்சமும் போடலை; துளசிமணியும் போடலை. ஆனா வைணவப்பூனை தான். :-)
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇந்த உருத்திராட்ச பூனையென்றால் என்ன? விளக்குங்களேன். முன்கூட்டியே, நன்றி.
ReplyDeleteசாரங்கன், உருத்திராட்ச பூனையென்றால் அது நான் தான். :-)
ReplyDeleteசரி விளக்கத்திற்கு வருகிறேன். வெளியே நல்லவரைப் போல் நடித்து உள்ளே எல்லாவித/சில கெட்ட பழக்க வழக்கங்களை வைத்திருப்பவர்களை உருத்திராட்ச பூனை என்பார்கள். பூனை உருத்திராட்சம் அணிந்து கொண்டு தவ முனிவர் போல் வேடமிட்டு சுற்றி வரும் பக்த எலிகளை ஒவ்வொன்றாகத் தின்றால் அந்தப் பூனை உருத்திராட்சப் பூனை. சரியா? இப்ப என் முதல் பதிலைப் படித்துப் பாருங்கள். :-)
அப்புறம்... மறந்துட்டேன் பாத்தீங்களா?!
ReplyDeleteமுதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சாரங்கன். எந்த ஊர் நீங்க? கும்பகோணமா?
//வெளியே நல்லவரைப் போல் நடித்து உள்ளே எல்லாவித/சில கெட்ட பழக்க வழக்கங்களை வைத்திருப்பவர்களை உருத்திராட்ச பூனை என்பார்கள்.//
ReplyDeleteஅப்படிப் பார்த்தா நாமெல்லாமே ஒரு விதத்தில் உருத்திராட்ச பூனைதான் :)
//முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சாரங்கன்.//
இது முதல் வருகையில்லை. கூடியளவு பின்னுட்டம் இடுவதைத் தவிர்கிறேன். ஏனென்றால் பின்னுட்டமிடும் அந்த நேரத்தில் இந்தப் பதிவு போல உள்ள பிற நல்ல பதிவுகளையும் படிக்கலாம் இல்லையா (ஆமா ஐஸெதான் ;-p)
//எந்த ஊர் நீங்க? கும்பகோணமா?//
தற்போது UK. எப்படிக் கும்பகோணம்னு நினைச்சீங்க?
நல்லாவே ஐஸ் வைக்கிறீங்க சாரங்கன். :-) தொடர்ந்து படித்து வாருங்கள். நீங்க படிச்சீங்கன்னு எனக்கு தெரியணும்ன்னு நினைச்சா ஒரு சின்னப் பின்னூட்டமாவது இடுங்கள். :-)
ReplyDeleteஉங்க பேரு தான் நீங்க கும்பகோணமோ என்று நினைக்கவைத்தது. கும்பகோணத்தில் சாரங்கபாணி பெருமாள் கோவில் உண்டல்லவா?
அப்புறம் தான் உங்கள் ப்ரொபைல் பார்த்து நீங்கள் இ.தமிழர் என்றும் இப்போது யூ.கே.யில் இருக்கிறீர்கள்/படிக்கிறீர்கள் என்று அறிந்து கொண்டேன்.
இ.தமிழர் என்றதும் இணையத்தமிழர் என்று சொல்கிறீர்களோ என்று எண்ணினேன். அப்புறம் தான் புரிந்தது அது இலங்கைத் தமிழர் என்பதின் சுருக்கம் என்று. :-)