Thursday, May 24, 2007

குருவாயூருக்கு வாருங்கள்!!!

ஒரு மனிதன் எந்த மதத்தினனாக இருந்தாலும் பக்தியுடன் எங்கும் இருக்கும் இறைவன் இந்தச் சிலையிலும் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு கோவிலுக்கு உள்ளே வந்து வணங்கும் போது மரபின் பெயரால் அதனை மறுப்பதும் மற்றவர் வற்புறுத்தலால் அனுமதித்துவிட்டுத் தீட்டு கழிப்பதும் மகா பாதகச் செயல்; வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

'உன்னுடன் ஐவரானோம்' என்று குகனிடம் சொல்லி அவனைக் கட்டித் தழுவிய இராமன் இதனைக் கண்டிப்பான்.

'தந்தையின் நண்பன் நீயும் என் தந்தை' என்று சொல்லி பறவையான ஜடாயுவுக்கு தந்தைக்கு உரிய முறையில் இறுதிச்சடங்குகள் செய்த இராமன் இதனைக் கண்டிப்பான்.

'தீண்டத் தகாதவள்' என்று குமுகத்தால் வகைப்படுத்தப்பட்டவளாக இருந்தாலும் 'பக்தியுடன் கடித்துக் கொடுத்த' எச்சில் பழங்களை சபரியிடம் இருந்து பெற்று உண்டு மகிழ்ந்த இராமன் இதனைக் கண்டிப்பான்.

ஆயர் குலத்தவருடன் அனைத்து குறும்புகளும் செய்த கண்ணன் இதனைக் கண்டிப்பான்.

சமமான பார்வையுடைய அறிஞன் எல்லோரிடமும் என்னையே காண்கிறான் என்று கீதையில் சொன்ன கண்ணன் இதனைக் கண்டிப்பான்.

திருப்பாணாழ்வாரை கருவறையுள் தன்னருகிலேயே வைத்திருக்கும் அரங்கன் இதனைக் கண்டிப்பான்.

பக்தியுடன் வந்த துலுக்க நாச்சியாருக்காக தன் உணவையும் உடையையும் மாற்றிய அரங்கன் இதனைக் கண்டிப்பான்.

கனகதாசருக்காக தானே திரும்பிய கண்ணன் இதனைக் கண்டிப்பான்.

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று கொண்ட கந்தன் இதனைக் கண்டிப்பான்.

குல முதல்வன் என்று வைணவர்களால் போற்றிப் புகழப்படும் வேளாளர் திலகமான மாறன் சடகோபன் நம்மாழ்வார் இதனைக் கண்டிப்பார்.

பல்வேறு சாதிகளில் பிறந்து கண்ணனின் மேல் உள்ள காதலினால் அனைவரும் போற்றும் ஆழ்வார்களான பன்னிருவர் இதனைக் கண்டிப்பர்.

காதலினால் கண்ணையே எடுத்து ஒத்திய, செருப்புக்காலுடன் கண்ணை அடையாளமிட்ட, வாயினால் திருமுழுக்கு செய்த, தான் அணிந்த மலர்களை இறைவனுக்குச் சூட்டிய கண்ணப்ப நாயனார் முதலிய அனைத்துக் குல அறுபத்தி மூவர் இதனைக் கண்டிப்பர்.

திருக்குலத்தார் என்று அனைவரையும் கோவிலுக்குள் அழைத்துச் சென்ற நம்மை உடையவர் இராமனுஜர் இதனைக் கண்டிப்பார்.

இப்படி இதனைக் கண்டிக்கும் மக்களைப் பட்டியல் இட்டுக் கொண்டே செல்லலாம். ஆனால் இவர்கள் அனைவரும் இறைவனைச் சிலையில் காண்பவர்கள்; அதனைச் சிலை என்று சொல்பவர்கள் இல்லை. கோவிலுக்குள் இருப்பது சிலை என்பவர்கள் கொள்ளும் ஆவேசத்தை விட அதிக ஆவேசம் எங்கும் உள்ளவன் இங்கேயும் இருக்கிறான் என்ற நம்பிக்கை உடையவருக்கு வர வேண்டும். வரட்டும்.

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்; பக்தர்களே துயிலெழுப்ப வாரீரோ!!!

Tuesday, May 08, 2007

தமிழ்மணம் செய்தது சரியா?

தமிழ்மணத்தில் இப்போது புதிதாக 'சூடான பதிவுகள்' என்று ஒரு பட்டியல் தமிழ்மண முதல் பக்கத்தின் இடப்பகுதியில் வருகிறது. இதனைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனால் விதி யாரை விட்டது? அதனால் என் மனத்தில் குறுகுறுத்துக் கொண்டிருக்கும் கேள்வியை இங்கே கேட்டுவிடுகிறேன். பதில் சொல்வதும் சொல்லாததும் தமிழ்மணத்தாரின் விருப்பம்.

இதுவரை Blog என்பதைப் பதிவு என்றும் Posting என்பதை இடுகை என்றும் சொல்லிவந்த தமிழ்மணம் இப்போது திடீரென்று 'சூடான இடுகைகள்' என்று இடாமல் 'சூடான பதிவுகள்' என்று குழப்புவது ஏன்?

இது தானப்பா என் கேள்வி! மற்ற ஏதாவது கேள்விகள் கேட்டு சொ.செ.சூ. வைத்துக் கொள்வேன் என்று நினைத்து வந்திருந்தால் மன்னித்துவிடுங்கள். அப்படியாவது நிறைய பேர் இந்த இடுகையைப் பார்த்து அது 'சூடான ...' பட்டியலில் வருகிறதா என்று பார்ப்போம். நிறைய பேர் பார்த்தால் தான் இடுகை அந்தப் பட்டியலில் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அந்தப் பட்டியல் எதன் அடிப்படையில் வருகிறது என்ற கேள்வியை நான் கேட்கவில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். :-)

Sunday, May 06, 2007

இருவகை மேலாளர்கள் - (ஒரு நிமிட மேலாளர் பகுதி 2)

இந்தத் தொடரின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.

***

இந்த உலகில் இருக்கும் மேலாளர்கள் பெரும்பாலானவர்கள் இருவகையில் அடங்கிவிடுவார்கள். இரண்டு வகையான மேலாளர்களையும் நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்த்திருக்கலாம். நீங்கள் ஒரு மேலாளர் என்றால் நீங்கள் எந்த வகையில் வருபவர் என்பதை உங்களால் எளிதாகச் சொல்லிவிடமுடியும். ஒரு வகை மேலாளர் மற்றொரு வகை மேலாளர் செய்வது போல் செய்ய முயன்றிருக்கலாம்; ஆனால் இயற்கையாக வரும் வகையிலேயே செல்வது எளிதாக இருப்பதைக் காணலாம். இரண்டு வகைகளிலும் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. அதனால் நமக்கு எது எளிதாக வருகிறது என்று பார்த்து அதன் தீமைகளைக் குறைக்க முயலும் மேலாளர்களும் உண்டு; நானும் அப்படி முயன்றிருக்கிறேன்.

முதல் வகை மேலாளர்களை உலகம் முழுவதும் பரவலாகப் பார்க்கலாம். மேலை நாடுகளில் இவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நாசூக்காக நடந்து கொள்வார்கள்; நம் நாட்டில் இவர்கள் நேரடியாகவே நடந்து கொள்வார்கள். அதனால் முதலில் நம்மவர்கள் எல்லோரும் இந்த வகைதான் என்று தோன்றும். கவனித்துப் பார்த்தால் உலகில் பெரும்பாலும் இந்த வகையினர் தான் என்று புரியும். மேலே சொன்னது போல் மேலை நாட்டவர்கள் மென்மையாக மறைமுக வழிகளில் அதனைச் செயல்படுத்துவார்கள்.

இந்த வகை மேலாளர்களைப் பார்த்தால் அவர்கள் செய்யும் பணி எல்லாம் திறம்பட நிறைவேறும்; நேரத்தோடு (on time), செலவு ஒதுக்கிய பணத்தை மீறாமல் (on budget), சொன்னதைச் சொன்னபடி (on scope) எல்லாப் பணியையும் இவர்கள் நிறைவேற்றுவார்கள். இவர்களின் மேலாளர்களிடம் இவர்களுக்கு மிக மிக நல்ல பெயர் இருக்கும். சொன்னதை சொன்னபடி செய்து முடிக்க வல்லவர் என்ற பெயர் இருக்கும். இவர்களால் இவர்கள் பணி புரியும் நிறுவனங்கள் பயன்பெறும்.

அதே நேரத்தில் இவர்களிடம் பணி புரிந்தவர்களைப் போய்ப் பாருங்கள். அவர்களுக்கு இவர்களைப் பிடிக்காது; இவர்களிடம் வேலை செய்வதைப் பெரும் தண்டனையாகக் கருதுவார்கள். சிலர் வேறு பணியைத் தேடிச் சென்றிருப்பார்கள். எளிதாக வேலை கிடைக்காத துறையென்றால் பல்லைக் கடித்துக் கொண்டு தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு வேலை செய்து கொண்டிருப்பார்கள். நிறைய பேர் நோய்வாய்ப்படுவதற்குக் கூட அவர்களின் மேலாளர்கள் காரணமாக இருந்ததுண்டு.

இந்த முதல் வகை மேலாளர்கள் சர்வாதிகார மேலாண்மை வகையைச் சேர்ந்தவர்கள். இவர்களால் நிறுவனம் பயன்பெறலாம்; ஆனால் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பயன் அடைவதில்லை.

இரண்டாம் வகை மேலாளர்களையும் நீங்கள் நிறைய இடங்களில் பார்க்கலாம். ஆனால் என்ன அவர்கள் ரொம்ப நாள் ஒரு நிறுவனத்தில் தங்குவதில்லை. அதனால் அந்த வகையினரைப் பார்ப்பது அரிதாக இருப்பது போல் தோன்றும். ஆனால் சரி பாதி இந்த வகையினர் என்பது என் அனுபவம்.

இவர்களிடம் பணிபுரிந்தவர்களும் புரிபவர்களும் இவர்களை மிகவும் மெச்சுவார்கள். மீண்டும் இவர்களிடம் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்ப்பார்கள். பல வருடங்களுக்கு முன்னர் இவர்களிடம் பணி புரிந்தவர்களும் இவர்களைப் பற்றிப் பேசும் போது 'மிக நல்லவர்; மிகத் திறமையானவர்' என்றெல்லாம் பேசுவார்கள்.

ஆனால் இவர்களின் மேலாளர்களிடம் இவர்களுக்கு நல்ல பெயர் இருக்காது. இவர்கள் செய்யும் பணிகள் ஏதோ ஒரு வகையில் குறையுடையதாக இருக்கும் - ஒன்று நேரத்தோடு பணிகள் முடியாது; அல்லது ஒதுக்கிய பணத்தை விட அதிக செலவு பிடிக்கும்; அல்லது சொன்னதை சொன்னபடி செய்திருக்கமாட்டார்கள் - சில நேரங்களில் இவற்றில் ஒன்றிற்கும் மேற்பட்ட குறைகளும் இருக்கலாம். இவர்களின் மேலாளர்களிடம் இவர்களுக்கு நல்ல பெயர் இல்லாததால் இவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.

இந்த இரண்டாம் வகை மேலாளர்கள் மக்களாட்சி மேலாண்மை வகையைச் சேர்ந்தவர்கள். இவர்களால் மக்கள் பயன்பெறுவார்கள்; ஆனால் நிறுவனம் பயன்பெறுவதில்லை.

இப்படி இருக்கும் மேலாளர்கள் எல்லாம் 'பாதி மேலாண்மை' செய்பவர்கள் தான். பணியையும் மேலாண்மை செய்ய வேண்டும்; பணிபுரிபவர்களையும் மேலாண்மை செய்ய வேண்டும். மேலாண்மை என்றால் தகுந்த முறைப்படி எல்லாவற்றையும் செய்வது. அதனால் மக்களைக் கவனிக்காமல் பணியை மட்டுமே கவனிப்பதும் தவறு. பணியைக் கவனிக்காமல் மக்களை மட்டுமே கவனிப்பதும் தவறு.

நான் எந்த வகையாக இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள் என்றும் சொல்லுங்கள். நான் இதில் ஒரு வகை என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் இருக்கும் தீமைகளைக் குறைக்க முயல்வதுண்டு. பல நேரம் வெற்றி பெற்றதுண்டு. சில நேரம் வெற்றி பெற்றதில்லை.

நீங்களும் இதில் எந்த வகை என்பதைச் சொல்லுங்கள்.

Friday, May 04, 2007

சுந்தரத்தோளனின் (கள்ளழகரின்) தசாவதாரக் காட்சிகள்

கள்ளழகரின் சித்திரத் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்ச்சி இரவு முழுவதும் நிகழும் இந்த தசாவதாரக் காட்சிகள் தான். வைகைக்கரையில் இருக்கும் இராமராயர் மண்டபத்தில் இரவு முழுவதும் பத்து விதமான அவதார அலங்காரங்களில் பவனி வந்து காட்சி தருவார் கள்ளழகர். அதிகாலையில் மோகினி அவதாரம் கொண்டு குலுங்கிக்கொண்டு வரும் பவனியை மட்டுமே இதுவரைக் காணக் கொடுத்து வைத்திருக்கிறேன். மற்றத் திருக்கோலங்களையும் தினமலரின் தயவால் வருடாவருடம் கண்டு வருகிறேன். இதோ இந்த வருட தசாவதாரத் திருக்கோலங்களில் சில - தினமலரின் தயவால்.



Thursday, May 03, 2007

திருத்தமிழ் - தமிழில் வார்த்தை விளையாட்டு

மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், சென்னைத் தமிழ் இதெல்லாம் தெரியும். 'திருத்தமிழ்' தெரியுமா?

மொழி வளர்ச்சிக்காக ஆங்கிலத்தில் இருக்கும் விளையாட்டு 'scrable' எனப்படும் வார்த்தை விளையாட்டு. 26 ஆங்கில எழுத்துக்களையும் வைத்து விதவிதமான வார்த்தைகளை உருவாக்குவது தான் அந்த விளையாட்டு. செம்மொழியான தமிழ் மொழியில் இதுவரை இந்த விளையாட்டு உருவாக்கப்படவில்லை. காரணம் அதில் இருக்கும் 247 எழுத்துக்கள். அத்தனை எழுத்துக்களையும் அச்சிட்டு அதற்காக போர்டு ஒன்றை உருவாக்கி விளையாடுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்பதாலேயே. தமிழில் வார்த்தை விளையாட்டுக்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தது. நான்கு வருடப் போராட்டத்துக்குப் பிறகு, 'திருத்தமிழ்' என்கிற வார்த்தை விளையாட்டைக் கண்டுபிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சார்ட்டர்ட் அக்கவுண்ட்டன்ட் ராஜ்குமார்.



'தமிழில் ஏன் இந்த விளையாட்டு இல்லைன்னு தேட ஆரம்பிச்சது தான் என்னோட இந்த முயற்சிக்கான பிள்ளையார் சுழி. தமிழ்மொழியின் பெரிய பலமே அதன் எழுத்துக்கள் தான். ஆனா வார்த்தை விளையாட்டை உருவாக்குவதில் அது தான் பலவீனமா இருந்தது. ஒற்றைக் கொம்பு, ரெட்டைக் கொம்பு, புள்ளி எனக் குறியீடுகளைப் பயன்படுத்தி வர்ற எழுத்துக்களைச் சுருக்கினா வார்த்தை விளையாட்டைத் தமிழ்ல கொண்டு வந்துடலாம்னு நம்பிக்கை வந்துது. குறியீடுகள் இல்லாம 196 எழுத்துக்களைத் தனியே பிளாஸ்டிக் வில்லைகளில் பிரின்ட் செய்தேன். 86 குறியீடுகளைத் தனி வில்லைகளாக உருவாக்கினேன்.

அப்புறம் ஒரு தமிழ் அகராதியில் இருந்து 80,000 வார்த்தைகளைப் படித்து, எந்தெந்த எழுத்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. எவை மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று ஒரு சர்வே செய்தேன். குறைவாகப் பயன்படும் எழுத்துக்கு அதிக மதிப்பெண்ணும், அதிகமாகப் பயன்படும் எழுத்துக்கு குறைந்த மதிப்பெண்ணும் கொடுத்தேன்.

இந்த 196 எழுத்துக்களும் தடை இல்லாம சீராகப் பரவணும்னா 440 கட்டங்கள் வேணும். அந்த போர்டையும் ரெடி பண்ணியாச்சு. இப்ப நாலு பேர் இந்த விளையாட்டை விளையாடலாம். 196 அடிப்படை எழுத்துக்களில் 14 எழுத்துக்களையும், குறியீடு எழுத்துக்களில் 7 எழுத்துக்களையும் ஒருவர் பயன்படுத்தணும். இந்த 21 எழுத்துக்களை வெச்சு விதவிதமா வார்த்தைகளை உருவாக்க வேண்டியது தான். இரண்டாவது ஆட்டக்காரர் முதல் ஆட்டக்காரர் உருவாக்கிய வார்த்தைகளில் இருந்தே புதுப்புது வார்த்தைகளை உருவாக்க வேண்டும். அதிகம் பயன்படாத எழுத்துக்கள், குறியீடுகளுக்கு அதிக மதிப்பெண் கொடுக்கப்படும். எல்லா எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்ட பிறகு, அதிக மதிப்பெண் வாங்கியவர் வெற்றி பெறுவார்.

இந்த விளையாட்டு மூலமா புதுப்புது தமிழ் வார்த்தைகளைச் சிரமம் இல்லாமல் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். இதைப் பரிசீலிக்கச் சொல்லி தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கேன்' என்கிற ராஜ்குமார், 'முதல் உலகத் தமிழ் விளையாட்டுப் போட்டிகள்' என்ற பெயரில் இந்த வார்த்தை விளையாட்டுகளை நடத்தப் போகிறாராம். 'இதில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் www.thiruthamizh.com என்கிற இணைய தள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்' என்றார்.

நன்றி: ஆனந்த விகடன், 02 மே 2007 இதழ்

***

இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு இதில் குறிப்பிட்டிருக்கும் வலைப்பக்கத்திற்குச் சென்றேன். பலவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். இந்த விளையாட்டுப்பெட்டியைப் பெற விரும்புபவர்களுக்கு மேலதிகத் தகவல்கள் இந்தப் பக்கத்தில் இருக்கிறது.

Wednesday, May 02, 2007

கை வை தான் வைகையா?

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கு இருக்கும் இன்னொரு பெருமை வைகை நதி. கூடல் மாநகரின் பெயர் இலக்கியங்களில் எத்தனை முறை வந்துள்ளதோ அத்தனை முறை வைகை நதியின் பெயரும் வந்திருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் மட்டுமில்லாமல் தற்காலத் திரைப்படப் பாடல்களிலும் வைகையைப் பாடும் பாடல்கள் எத்தனை எத்தனை?!

வைகை நதிக்கு பெயர் வந்ததற்குத் திருவிளையாடல் புராணம் சொல்லும் காரணம் பலருக்குத் தெரிந்திருக்கும். அன்னை மீனாட்சி சிவபெருமானின் பூத கணங்களில் ஒருவரான குண்டோதரனுக்கு (பானை வயிறனுக்கு) விருந்து படைத்த போது அவரது தாகம் தீர்க்க சிவபெருமானின் திருவருளால் உண்டான ஆறே வைகை ஆறு என்று புராணம் சொல்லும். 'குண்டோதரா; உன் கையை வை; வை கை' என்ற பெருமானின் ஆணைப்படி குண்டோதரன் கை வைத்த இடத்திலிருந்து பெருகிய ஆறு என்பதால் 'வைகை' என்று பெயர் பெற்றது என்று சொல்வார்கள்.

இராம நாமத்தின் பெருமையைச் சொல்லும் போது நாராயண நாமத்தின் முக்கிய எழுத்தான 'ரா'வும் நமசிவாய நாமத்தின் முக்கிய எழுத்தான 'ம'வும் சேர்ந்தது தான் இராம நாமம் என்று சொல்வார்கள். அதனால் சைவ வைணவ மந்திரங்களின் மொத்த உருவம் இந்தத் தாரக மந்திரமான இராம நாமம் என்பது ஆன்றோர் அருள் வாக்கு.

அதே போன்ற பெருமை வைகை ஆற்றிற்கும் உண்டு. திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் 'வை'யும் சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தின் 'கை'யும் இணைந்து சங்கரநாராயணர்களின் இருப்பிடமான தீர்த்தமாக 'வைகை' அமைந்திருக்கிறது.

இந்த வைகை நதி சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்தக் காலத்திலும் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்வதைச் சித்திரைத் திருவிழாவின் போது பார்க்கலாம். அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண பெருவிழாவைக் கண்டு தரிசித்து மறு நாள் பெருந்தேர் பவனியைக் கண்டு களித்து அப்படியே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருவிழாவையும் கண்டு மக்கள் சைவ வைணவ பேதமின்றி இந்த வைகைக்கரையில் பவனி வருகிறார்கள். திருமண் இட்ட அடியவர்கள் பெரும் விசிறி கொண்டு மீனாட்சித் திருக்கல்யாணத்திலும் பெருந்தேர் விழாவிலும் விசிறுவதையும் திருநீறு அணிந்த அடியவர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைத்து எதிர்சேவை காண்பதையும் இந்த வைகைக்கரையிலே கண்டு மகிழலாம்.

அன்பும் அருளும் மக்கள் நடுவில் பெருகும் வகையில் தான் சுருங்கி தன் மக்கள் தன்னுள் இறங்கித் திருவிழா காணும் படி செய்யும் வைகைத் தாயே உனக்கு ஆயிரம் கோடி வணக்கம்.