Thursday, May 03, 2007

திருத்தமிழ் - தமிழில் வார்த்தை விளையாட்டு

மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், சென்னைத் தமிழ் இதெல்லாம் தெரியும். 'திருத்தமிழ்' தெரியுமா?

மொழி வளர்ச்சிக்காக ஆங்கிலத்தில் இருக்கும் விளையாட்டு 'scrable' எனப்படும் வார்த்தை விளையாட்டு. 26 ஆங்கில எழுத்துக்களையும் வைத்து விதவிதமான வார்த்தைகளை உருவாக்குவது தான் அந்த விளையாட்டு. செம்மொழியான தமிழ் மொழியில் இதுவரை இந்த விளையாட்டு உருவாக்கப்படவில்லை. காரணம் அதில் இருக்கும் 247 எழுத்துக்கள். அத்தனை எழுத்துக்களையும் அச்சிட்டு அதற்காக போர்டு ஒன்றை உருவாக்கி விளையாடுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்பதாலேயே. தமிழில் வார்த்தை விளையாட்டுக்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தது. நான்கு வருடப் போராட்டத்துக்குப் பிறகு, 'திருத்தமிழ்' என்கிற வார்த்தை விளையாட்டைக் கண்டுபிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சார்ட்டர்ட் அக்கவுண்ட்டன்ட் ராஜ்குமார்.



'தமிழில் ஏன் இந்த விளையாட்டு இல்லைன்னு தேட ஆரம்பிச்சது தான் என்னோட இந்த முயற்சிக்கான பிள்ளையார் சுழி. தமிழ்மொழியின் பெரிய பலமே அதன் எழுத்துக்கள் தான். ஆனா வார்த்தை விளையாட்டை உருவாக்குவதில் அது தான் பலவீனமா இருந்தது. ஒற்றைக் கொம்பு, ரெட்டைக் கொம்பு, புள்ளி எனக் குறியீடுகளைப் பயன்படுத்தி வர்ற எழுத்துக்களைச் சுருக்கினா வார்த்தை விளையாட்டைத் தமிழ்ல கொண்டு வந்துடலாம்னு நம்பிக்கை வந்துது. குறியீடுகள் இல்லாம 196 எழுத்துக்களைத் தனியே பிளாஸ்டிக் வில்லைகளில் பிரின்ட் செய்தேன். 86 குறியீடுகளைத் தனி வில்லைகளாக உருவாக்கினேன்.

அப்புறம் ஒரு தமிழ் அகராதியில் இருந்து 80,000 வார்த்தைகளைப் படித்து, எந்தெந்த எழுத்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. எவை மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று ஒரு சர்வே செய்தேன். குறைவாகப் பயன்படும் எழுத்துக்கு அதிக மதிப்பெண்ணும், அதிகமாகப் பயன்படும் எழுத்துக்கு குறைந்த மதிப்பெண்ணும் கொடுத்தேன்.

இந்த 196 எழுத்துக்களும் தடை இல்லாம சீராகப் பரவணும்னா 440 கட்டங்கள் வேணும். அந்த போர்டையும் ரெடி பண்ணியாச்சு. இப்ப நாலு பேர் இந்த விளையாட்டை விளையாடலாம். 196 அடிப்படை எழுத்துக்களில் 14 எழுத்துக்களையும், குறியீடு எழுத்துக்களில் 7 எழுத்துக்களையும் ஒருவர் பயன்படுத்தணும். இந்த 21 எழுத்துக்களை வெச்சு விதவிதமா வார்த்தைகளை உருவாக்க வேண்டியது தான். இரண்டாவது ஆட்டக்காரர் முதல் ஆட்டக்காரர் உருவாக்கிய வார்த்தைகளில் இருந்தே புதுப்புது வார்த்தைகளை உருவாக்க வேண்டும். அதிகம் பயன்படாத எழுத்துக்கள், குறியீடுகளுக்கு அதிக மதிப்பெண் கொடுக்கப்படும். எல்லா எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்ட பிறகு, அதிக மதிப்பெண் வாங்கியவர் வெற்றி பெறுவார்.

இந்த விளையாட்டு மூலமா புதுப்புது தமிழ் வார்த்தைகளைச் சிரமம் இல்லாமல் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். இதைப் பரிசீலிக்கச் சொல்லி தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கேன்' என்கிற ராஜ்குமார், 'முதல் உலகத் தமிழ் விளையாட்டுப் போட்டிகள்' என்ற பெயரில் இந்த வார்த்தை விளையாட்டுகளை நடத்தப் போகிறாராம். 'இதில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் www.thiruthamizh.com என்கிற இணைய தள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்' என்றார்.

நன்றி: ஆனந்த விகடன், 02 மே 2007 இதழ்

***

இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு இதில் குறிப்பிட்டிருக்கும் வலைப்பக்கத்திற்குச் சென்றேன். பலவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். இந்த விளையாட்டுப்பெட்டியைப் பெற விரும்புபவர்களுக்கு மேலதிகத் தகவல்கள் இந்தப் பக்கத்தில் இருக்கிறது.

11 comments:

  1. ராஜ்குமாருக்கு பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. ஆமாம் பாலாஜி. நான் சொல்லாமல் விட்டுவிட்டேன்.

    இராஜ்குமாருக்கு வாழ்த்துகள். இது ஒரு மிகச் சிறந்த முயற்சி.

    ReplyDelete
  3. அது தான் ஜீவா நானும் நினைத்தேன் இந்தக் கட்டுரையைப் படித்த போது.

    ReplyDelete
  4. பாராட்டப்பட வேண்டிய முயற்சி!

    பதிவுக்கு நன்றி, குமரன்!

    ReplyDelete
  5. ஆமாம் எஸ்.கே. மிக நல்ல, பாராட்டப்பட வேண்டிய முயற்சி இது.

    ReplyDelete
  6. ராஜ்குமார் செய்த தொண்டு சிறப்பு. தமிழக அரசு இதை அங்கீகரிக்க வேண்டும். இதைப் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும். செய்வார்களா? ராஜ்குமாரைப் போல மொழிக்கு ஆக்கபூர்வமாகவும் சிந்திக்கிறவர்கள் மனம் வைத்தால் நடக்கலாம்.

    ReplyDelete
  7. சீன மொழியில் கூட scrabble போல ஒரு விளையாட்டைப் பார்த்தேன் குமரன், அலுவலகத்தில் உள்ள சீன நண்பரிடம்.

    அங்கு முடியும் போது, இங்கும் முடியும் என்று முடித்துக் காட்டிய ராஜ்குமாரின் முயற்சியை அரசு ஏற்க வேண்டும்!
    திருத்தமிழ் என்ற பெயரை எப்படித் தேர்ந்தெடுத்தாரோ? அழகான பெயர், ஒரு சுவையான விளையாட்டுக்கு!

    ReplyDelete
  8. நல்ல முயற்சி.

    கொஞ்சம் கஷ்டம் என்றாலும் வரும் தலைமுறைக்கு ரொம்பவே உதவியான தொரு முயற்சி.

    ReplyDelete
  9. வருங்காலத் தலைமுறைகளுக்கு மட்டும் இல்லை சிவமுருகன். அவ்வளவாகத் தமிழ் தெரியாத நமக்கே பல வகையில் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நல்லதும் கெட்டதுமான ஒன்று நடக்கவும் வாய்ப்புண்டு. பல புதியத் தமிழ்ச் சொற்கள் தோன்றுவதற்கு வாய்ப்புண்டு. ஆனால் அவை தமிழ்ச்சொற்களின் பிறப்பு நுட்பத்தை அறியாமல் தோற்றுவிக்கப்படும் வாய்ப்புகள் நிறைய உண்டு.

    ReplyDelete
  10. தகவலுக்கு நன்றி.. பாராட்டப்படவேண்டிய முயற்சி.

    ReplyDelete