Thursday, July 11, 2013

காத்யாயினி விரதம்

'இப்போதெல்லாம் நம் வீட்டு வேலைகள் எல்லாம் மிக நன்றாக நடக்கிறது. கவலை தொலைந்தது. நல்ல கட்டுபாட்டை விதித்தோம். நம் பெண்டு பிள்ளைகள் எல்லாம் நம் கட்டுபாட்டில் இருந்தால் எல்லாம் தானாகவே நன்கு நடக்கிறது பாருங்கள்'.

'சரியா சொன்னீங்க. வீடு ஒழுங்கா இருந்தா தானே ஊரும் நாடும் ஒழுங்கா இருக்கும்.'

'ஒரு கவலை விட்டதுன்னா இன்னொரு கவலை. இந்த வானம் ஒரு நேரத்துல பெஞ்சு கெடுக்குது. இன்னொரு நேரம் பெய்யாம கெடுக்குது. ஹும்'.

'ஐயா. நான் ஊருக்கு புதுசு. நீங்க எல்லாம் ஆயர்கள் தானே. வேளாண் தொழில் செய்பவர்களைப் போல் வானம் பொய்த்ததற்கு வருந்துறீங்க? ஒன்னும் புரியலையே?!'

'தம்பி. நீங்க சொல்றது சரி தான். விவசாயம் பாக்குறவங்களுக்குத் தான் மாதம் மும்மாரி பெய்யணும்ன்னு கவலை இருக்கும். அவங்க பருவம் பாத்து பயிர் செய்றவங்க. அதுனால அவங்களுக்குப் பருவம் தவறாம மழை பெய்யணும். ஆனா எங்களுக்கும் ஒழுங்கா காலா காலத்துல மழை பெய்யணுமப்பா. இல்லாட்டி மாடு கன்னுகளுக்கு எப்படி தண்ணி காட்டுறது? அதுங்க தானே எங்க சொத்து? அதுங்களுக்கு நேரா நேரத்துக்கு தண்ணி கிடைக்கலைன்னா பால் வருமா? அதை வித்து நாங்க வாழ்க்கை தான் நடத்த முடியுமா? அது தான் எங்க கவலை'

'ஓ. அப்படியா? நான் கூட எங்க ஊரு பாட்டுக்காரர் ஒருத்தர் பாடுன மாதிரியோன்னு நினைச்சேன்.'

'உங்க ஊரு பாட்டுக்காரர் பாடுன மாதிரியா? என்ன பாடுனாரு?'

'அதுவா? தண்ணியப் பாத்து அவரு பாடுவாரு.

"தண்ணீரே. நீ வானத்துல இருக்கும் போது மேகம்ன்னு உனக்குப் பேரு. மண்ணுல விழும்போது மழைன்னு பேரு. எங்க ஊரு ஆய்ச்சிமாரு கண்ணுல பட்டுட்டா நீர்மோருன்னு உனக்குப் பேருன்னு பாடுவாரு. அதான்".

'தம்பி. உனக்கு ரொம்பத் தான் குறும்பு. விருந்தாளியாச்சேன்னு பாக்கறேன்'

'கோவிச்சுக்காதீங்க ஐயா. ஏதோ நினைவுல வந்தது. அதான் சொன்னேன்'.

'சரி. சரி. இந்த வீண் பேச்சை எல்லாம் விடுங்கள். இப்படி மழை பெய்யாமல் இருக்கிறதே. அதற்கு ஏதாவது ஒரு நல்ல வழி இருந்தால் சொல்லுங்கள்'

'நாட்டாமை ஐயா. உங்களுக்குத் தெரியாத வழியா? நீங்களும் நம்ம ஊரு பெரியவங்களும் சேர்ந்து ஆலோசிச்சு ஒரு நல்ல வழியைச் சொல்லுங்க'

'ம். பல வழிகளையும் சிந்திச்சோம். ஒரு வழி சரியா வரும்ன்னு தோணுது. நம்ம ஊரு கன்னிப் பொண்ணுங்க எல்லாம் காத்யாயினி நோன்பு இருந்தா மழை தானா பெய்யும்ன்னு சொல்றாங்க. அது எனக்கும் சரின்னு படுது. நீங்க என்ன சொல்றீங்க?'

'காத்யாயினி நோன்பா? அப்படின்னா என்ன நோன்பு?'

'கன்னிப் பெண்கள் எல்லாம் வெள்ளென எழுந்து யமுனையில் நீராடி ஒரு பாவையை நோன்புக்காக உருவாக்கி அதனை காத்யாயினியாக வரித்து நோன்பு நோற்க வேண்டும். இப்படி முப்பது நாட்கள் செய்தால் நல்ல மழை பெய்யும்'.

'நல்ல நோன்பாகத் தான் இருக்கிறது. ஆனால் நம் வீட்டுப் பெண்பிள்ளைகளை எல்லாம் எப்படி அந்த அதிகாலை வேளையில் தனியாக யமுனை நதிக்கரைக்கு அனுப்புவது? எந்த நேரத்துல என்ன நடக்குமென்றே இப்போதெல்லாம் தெரிவதில்லை? அரக்கர்களும் அரக்கிகளும் இந்த சுற்று வட்டாரத்தில் உலாவிக் கொண்டே இருக்கிறார்கள். தகுந்த பாதுகாப்போடு தான் நம் பெண்களை நதிக்கரைக்கு அனுப்ப வேண்டும்'.

'நீங்கள் சொல்வதும் சரி தான். நம் காளையர்களைத் தான் அந்த பெண்களுக்குத் துணையாக அனுப்ப வேண்டும்.'

'நல்ல கதை போங்கள். பாலுக்குக் காவல் பூனையா?'

'அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். நாமே தேர்ந்தெடுப்போம் ஆட்களை. நல்லவர்களாகத் தேர்ந்தெடுத்து அனுப்பினால் எந்த குறையும் நேராது'

'சரி சரி. என்ன செய்தாலும் பார்த்து செய்யுங்கள்'

***

'இன்றோடு நம் தொல்லைகள் எல்லாம் தீர்ந்ததடி நிருபமா.'

'ஏன் அப்படி சொல்கிறாய் சாருலேகா? கண்ணனைக் காணாத நாளும் ஒரு நாளா? எத்தனை நாள் ஆனது அவனைக் கண்டு?'

'அதற்குத் தான் விடிவு காலம் வந்ததென்றேன் நிருபமா'.

'உண்மையாகவா? ஊர்க்கட்டுப்பாட்டை நீக்கிவிட்டார்களா? இனி மேல் நம் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் செல்லலாமா?'

'ஊர்க் கட்டுப்பாட்டை நீக்கவில்லை. ஆனால் மழை வேண்டி நம்மை எல்லாம் நோன்பு நோற்கச் சொல்லியிருக்கிறார்கள்'

'நோன்பா? என்ன நோன்பு? அதனால் நமக்கு என்ன பயன்?'

'பாவை நோன்பு தான் தோழி. அதிகாலையில் எழுந்து நதியில் நீராடி பாவையைத் தொழுது நோன்பு நோற்க வேண்டும்.

அந்த நோன்பிற்குக் காவலாக இளைய கோபர்களை அனுப்புகிறார்கள். கோபகுமாரன் நந்தகுமாரனும் வருகிறான்.'

'உண்மையாகவா? கண்ணனும் வருகிறானா? அவனைக் காணலாமா? இதனை ஏனடி முதலிலேயே சொல்லவில்லை'.

'என்ன செய்வது? இது வரை உன் தாயார் இங்கே இருந்தார்களே. அவர்கள் முன்னால் எப்படி சொல்வது? நாளை முதல் நோன்பு தொடங்குகிறது. நோன்பினை நன்கு கடைபிடித்தால் கண்ணனையும் காணலாம். மழையும் பொழியும். அப்படி நடந்தால் ஊர்க்கட்டுப்பாடும் தளரும் வாய்ப்பு உண்டு. கண்ணனை நாம் அடையும் வாய்ப்பும் உண்டு'.

'நோன்பைக் கட்டாயம் நல்லவிதமாகக் கடைபிடிப்போம். மழை வேண்டி நீங்கள் வேண்டுமானால் நோன்பிருங்கள். நான் கண்ணனை வேண்டி இருக்கப் போகிறேன்'

'அடிப் போடி. நீ மட்டுமா? எல்லாருமே அப்படித் தான். அவனை அடைய இதுவே தகுந்த வாய்ப்பு. அவனையே வேண்டி நோன்பை நோற்போம்'

***
2007ல் எழுதியதன் மறுபதிவு...

2 comments:

  1. Comments from original post:

    11 comments:

    SP.VR. சுப்பையா said...
    ////'நல்ல நோன்பாகத் தான் இருக்கிறது. ஆனால் நம் வீட்டுப் பெண்பிள்ளைகளை எல்லாம் எப்படி அந்த அதிகாலை வேளையில் தனியாக யமுனை நதிக்கரைக்கு அனுப்புவது? எந்த நேரத்துல என்ன நடக்குமென்றே இப்போதெல்லாம் தெரிவதில்லை? அரக்கர்களும் அரக்கிகளும் இந்த சுற்று வட்டாரத்தில் உலாவிக் கொண்டே இருக்கிறார்கள். தகுந்த பாதுகாப்போடு தான் நம் பெண்களை நதிக்கரைக்கு அனுப்ப வேண்டும்'.///

    காலம் காலமாக இந்த நிலை மட்டும் மாறாமல் தொடர்கிறதே!
    அதைவிட இப்போது இன்னும் மோசமாக அல்லவா மாறிவிட்டது!
    April 01, 2007 8:04 PM
    வடுவூர் குமார் said...
    அந்த காலத்திலேயே,நமது பெண்கள் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கும் வித்தையை கற்றுவைத்துள்ளார்கள் போலும்.
    நோன்புக்கு நோன்பு,தரிசனத்துக்கு தரிசனம்.
    April 01, 2007 8:04 PM
    VSK said...
    பழங்காலமும், நிகழ்காலமும், யமுனை மனிதர்களும், நம்மூர் மனிதர்களும் கலந்து வருவது சற்று குழப்பமாக இருக்கிறது!

    திருப்பாவை பதிவின் முன்னுரையா இது?

    காத்யாயினி என் குல தெய்வம்.

    ஆசையோடு வந்தேன்!

    இதில் ஏதும் எனக்கு புது செய்தி இருக்குமோ என!

    விளக்கவும்!
    April 01, 2007 10:02 PM
    குமரன் (Kumaran) said...
    வாத்தியார் ஐயா. அந்தக் காலத்தில் பெண்பிள்ளைகள் கவலையின்றி வெளியே தனியாகச் செல்ல முடிந்ததாகத் தான் இலக்கியங்கள் சொல்கின்றன. இந்தக் கதை நடக்கும் கால கட்டத்தில் மட்டும் அரக்கர்கள் அரக்கியர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அதனால் அப்படி சொன்னார்கள். இந்தக் காலத்தில் அரக்கர்கள் இல்லை; மனித வடிவில் அரக்கர்கள் இருக்கிறார்கள்.
    April 02, 2007 6:09 AM
    குமரன் (Kumaran) said...
    ஆமாம் வடுவூர் குமார். பெண்களின் புத்தி கூர்மையான புத்தி என்று அதனால் தானே சொன்னார்கள். நோன்பிற்கு நோன்பும் ஆனது; தரிசனத்திற்கு தரிசனமும் ஆனது. :)
    April 02, 2007 6:10 AM
    குமரன் (Kumaran) said...
    எஸ்.கே. பழங்காலமும் நிகழ்காலமும் கலந்து வருவது, யமுனை மனிதர்களும் நம்மூர் மனிதர்களும் கலந்து வருவது ஆழ்வார்கள் பாசுரங்களைப் படித்ததால் வந்தது. ஆழ்வார்களின் பாசுரங்களில் இராமனைப் போற்றும் போது கண்ணன் செய்ததைச் சொல்வதும் கண்ணனைப் போற்றும் போது இராமன செய்ததைக் கூறுவதும் மிகத் தாராளமாக நடக்குமே. அது போல் நம்மூர் மனிதர்களும் யமுனைக்கரை மனிதர்களும் கண்ணனின் கால நிகழ்ச்சியும் கவி காளமேகத்தின் பாடலும் என கலந்து வருகின்றன.

    காத்யாயின் நோன்பான பாவை நோன்பே ஆண்டாள் பாடிய திருப்பாவையின் அடிப்படை என்பது வைணவ மரபு. இந்த இடுகையில் வரும் கதை பாகவதத்தில் இருக்கிறது.

    எல்லோருக்கும் தெரிந்த கதை என்பதைத் தான் 'எனக்கு' புது செய்தி என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஏற்கனவே தெரியாதது எதுவும் இந்த இடுகையில் இருக்கும் வாய்ப்பு குறைவே என்று நினைக்கிறேன்.

    இந்த விளக்கத்தைத் தானே எதிர்பார்த்தீர்கள் எஸ்.கே. உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கும் தெரியும் படி செய்ய நீங்கள் எடுக்கும் முயற்சி தானே இந்தக் கேள்விகள். நன்றிகள்.

    ReplyDelete
  2. குமரன் (Kumaran) said...
    இன்னொன்றை மறந்துவிட்டேன். திருப்பாவையின் முன்னுரையா என்று கேட்டிருந்தீர்கள். ஆமாம் இந்தப் பதிவில் இது வரை வந்திருக்கும் இடுகைகள் எல்லாமே திருப்பாவையின் முன்னுரையாக எழுதியது தான். 2005 நவம்பரில் இருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். நடுவில் 2006ல் ஏழே இடுகைகள் தான் இட முடிந்தது. இனி தொடர்ந்து வரும்.
    April 02, 2007 6:18 AM
    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    காத்யாயினி = நவ துர்க்கைகளில் ஒருத்தி. ஒட்டியான பீட நிலையை! காத்யாயன மகரிஷியின் புதல்வியாய் அவதரித்தாள். வன துர்க்கை என்றும் போற்றப்படுபவள்.

    இன்றும், வட இந்தியாவில், திருமணம் தள்ளிப் போனால் பரிகாரமாக, இந்த அம்மனைத் தான் தரிசனம் செய்து பூசைகள் வைப்பார்கள்!

    பொதுவாக கிராமங்களிலும் ஆயர் குலத்திலும், தங்கள் வீட்டுப் பெண் சிறுவயதிலேயே தவறி விட்டாலோ, காணாமற் போய் விட்டாலோ, அவளைக் காத்யாயினியாக உருவகித்து, அவள் நினைவாகப் படையல் படைக்கும் வழக்கம் உள்ளது!

    கண்ணனுக்குப் பின் பிறந்த துர்க்கை, வசுதேவரால் சிறைச்சாலைக்கு இடம் மாறி, பின் கம்சன் கைப்படாமல் வானத்தில் மறைந்தாள்!
    தங்கள் வீட்டுப் பெண் குழந்தையின் நினைவாகவும் நந்தகோபர் மற்றும் ஆயர்கள், காத்யாயினிக்குப் பூசைகள் வைத்தனர். தங்கள் பெண்களான கோபியர்க்கும் நல்ல கணவன் கிடைக்க இவளை வழிபட்டனர்.
    "நந்தகோபம் சுதம் தேவி" என்று இந்த சுலோகமும் தெரிவிக்கிறது!

    காத்யாயினி மகாமாயே மகாயோகின்ய தீஸ்வரி
    நந்தகோபம் சுதம் தேவி
    பதிம் மே குருதே நமஹ.
    April 03, 2007 2:19 PM
    குமரன் (Kumaran) said...
    இரவிசங்கர். சௌராஷ்ட்ரர்களிடமும் நீங்கள் சொன்ன வழக்கம் உண்டு. சிறு வயதுப் பெண்கள் தவறும் போதும் கர்ப்பிணிப் பெண்கள் தவறும் போதும் அவர்கள் நினைவாக ஒரு ஓலைப்பெட்டியோ மரப்பெட்டியோ மஞ்சள் குங்குமம் தடவி பூஜையில் வைத்து ஒவ்வொரு வருடமும் பொங்கல் வைத்து புதுத் துணிகளைப் பெட்டியில் வைத்து வழிபடுவார்கள். எங்கள் வீட்டிலும் கர்ப்பிணியாக இருக்கும் போது தவறிய என் அத்தைக்கு அப்படி ஒரு ஓலைப்பெட்டி இருக்கிறது. வீட்டில் நடக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு முன்னரும் அவர்கள் நினைவாக பொங்கல் வைத்துப் படைப்பார்கள்.

    நீங்கள் சொன்ன சுலோகத்தைப் படித்த பிறகு தொடர்புகள் நன்கு புரிகின்றன. மஹிஷாசுர மர்த்தினி விருத்தத்திலும் நந்தனின் மகள் தேவி என்பதைப் பற்றி பலமுறை வருகின்றதே.
    April 05, 2007 7:36 AM
    Ammu Madhu said...
    அருமையா எழுதிருக்கீங்க குமரன்.
    April 05, 2010 4:25 PM
    குமரன் (Kumaran) said...
    நன்றி அம்மு மது.

    உங்கள் பதிவில் இருக்கும் கிடந்த கோலத்துப் பெருமாள் மிகவும் அழகாக இருக்கிறார்! எந்த ஊர் பெருமாள்?
    April 05, 2010 4:48 PM

    ReplyDelete