Thursday, December 20, 2012

அரி என்ற பேரரவம்!



புள்ளும் சிலம்பின காண்! புள் அரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?!
பிள்ளாய்! எழுந்திராய்! பேய் முலை நஞ்சு உண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

அதிகாலை ஆனதால் பறவைகளும் எழுந்து சிலம்பத் தொடங்கிவிட்டதைப் பார்! பறவையான கருடனுக்கு அரசனான திருமாலின் திருக்கோயிலில் வெண்மையான சங்கின் பேரரவம் ஒலிக்கிறதே! கேட்கவில்லையா? ஏ பிள்ளை! எழுந்திருப்பாய்!

பேயான பூதனையிடம் நச்சுப் பாலை உண்டு அதனுடன் அவள் உயிரையும் உண்டு, வண்டிச்சக்கரமாக கள்ளமாக வந்த சகடாசுரன் நொறுங்கிப் போகும்படி உதைத்து, பாற்கடல் வெள்ளத்தில் பாம்புப் படுக்கையில் துயில் கொண்ட - உலகங்களுக்கு எல்லாம் விதையானவனை - உள்ளத்தே கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பெரும் ஒலி நம் உள்ளம் புகுந்து குளிர வைக்கிறது!

1 comment: