Friday, September 10, 2010

பழியற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய்!

நான்கு விதமான பாவகைகளில் பாடல்களை அந்தாதித் தொடையாக எழுதுவது 'நான்மணிமாலை' எனப்படும். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் விநாயகர் மீது அப்படியொரு நான்மணிமாலை எழுதியிருக்கிறார். மணக்குள விநாயகரைப் பற்றி அடிக்கடி இந்த நான்மணிமாலையில் சொல்வதால் புதுச்சேரியில் இருக்கும் போது இதனை இயற்றியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இந்த 'விநாயகர் நான்மணிமாலை'யில் இது வரை எட்டு பாடல்களுக்கு விளக்கம் பார்த்திருக்கிறோம். பிள்ளையார் சதுர்த்தியான இன்று (11 Sept 2010) அடுத்த பாடலுக்கு விளக்கம் காண்போம். இந்தப் பாடல் வெண்பா வகை. சென்ற பாடல் 'களித்தே' என்று நிறைவுற்றது. அந்தாதித் தொடை என்பதால் இந்தப் பாடல் 'களியுற்று' என்று தொடங்குகிறது.



களியுற்று நின்றுக் கடவுளே இங்குப்
பழியற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய் - ஒளிபெற்றுக்
கல்வி பல தேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்
தொல் வினைக் கட்டெல்லாம் துறந்து!


இன்பமாக வாழ்வதே உயிர்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது. ஆனால் அப்படி இன்பமாக வாழும் போது உலகத்தோடு ஒட்ட ஒழுகி, பெரியோர் பழித்தவற்றை செய்யாமல் விட்டு, அவர்கள் புகழ்வனவற்றை தவறாமல் செய்து, பழியின்றி வாழ்தலும் மனிதர்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. அதனால் தான் போலும் இவை இரண்டையும் சேர்த்துக் கடவுளிடம் வேண்டுகிறார் பாரதியார்.

களி உற்று நின்றுக் கடவுளே இங்குப் பழி அற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய்

இப்படி இன்பமாக இவ்வுலகில் வாழ்வதற்கு பழியற்று வாழ்வது மட்டும் போதாது போலும். அறிவு ஒளியும் பெற வேண்டியிருக்கிறது. அதற்கு பலவிதமான கல்விகளைக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டியிருக்கிறது. அதனால் அவ்விரண்டையும் அடுத்து வேண்டுகிறார் பாரதியார்.

ஒளி பெற்றுக் கல்வி பல தேர்ந்து

அதுவும் போதாது போலும். கடமைகள் என நான்குவிதமான கடமைகளைச் சென்ற பாடலில் சொன்னார். 'தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், உலகெங்கும் காக்கும் ஒருவனைப் போற்றுதல்' - இவை நான்கே இந்தப் பூமியில் எவருக்கும் கடமை என்று சொன்னார். இந்தக் கடமைகளை நன்காற்றும் திறன் வேண்டும் என்று வேண்டுகிறார் இந்தப் பாடலில்.

கடமையெலாம் நன்கு ஆற்றித்

மனிதன் பல்லாயிரம் ஆண்டுகளாக வரும் தொன்மையான பலவிதமான செயல்கட்டுகளில் கட்டுண்டிருக்கிறான் என்பது தத்துவச் சிந்தனைகளின் முடிவு. அந்த கட்டுகளில் இருந்து விடுபடுதலே என்றென்றும் இன்பமாக வாழ்வதற்கு வழி வகுக்கும். அதனால் அடுத்து அதனைச் சொல்கிறார் பாரதியார்.

தொல்வினைக் கட்டெல்லாம் துறந்து

இந்த நான்மணிமாலையே நான்குவகைப் பாக்களால் தொடுக்கப்பட்ட மணிமாலையென்றால் இந்தப் பாடலோ தனக்குள்ளேயே தொடுக்கப்பட்ட மாலையாக இருக்கிறது. இன்பம், பழியற்று வாழ்தல், ஒளி பெறுதல், கல்வி பல தேர்தல், கடமை ஆற்றுதல், தொல்வினைக்கட்டெல்லாம் துறத்தல், இன்பம் என்று ஒரு சுழல் இந்தப் பாடலில் வருகிறது. எல்லாமே இங்கே சுழற்சியில் தானே இயங்குகின்றன!


P.S. இன்று பாரதியார் நினைவு நாளும்!

6 comments:

  1. பாரதியின் விநாயகரை வைத்து இடுகை இட்டு சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கவலை இல்லாத மனமும் . .
    நோய் இல்லாத உடலும் .
    .வறுமை இல்லாத வாழ்வும் .
    .வாழ்வில் என்றும் அமைதியும் .
    .எடுக்கும் முயற்சியில் வெற்றியும் ..
    எல்லோரையும் மதிக்கும் பன்பையும்
    ஏழைகளுக்கு இரங்கும் அன்பையும்
    நல்ல வழியில் செல்கின்ற அறிவையும்
    .. எப்போதும் அருள வேண்டும் கணநாதா இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க chitram

    ReplyDelete
  3. சரவணன். செப்டம்பர் 11 பாரதியாரின் நினைவு நாள் என்று அறிந்திருந்தேன். ஆனால் இந்த இடுகை இடும்பொழுது அதனை எப்படியோ மறந்துவிட்டேன். உங்கள் பின்னூட்டம் கண்டபிறகு அது நினைவிற்கு வந்தது. நன்றி.

    ReplyDelete
  4. நன்றி இரவி & சித்ரம்.

    ReplyDelete
  5. அன்பின் குமரன்

    பாரதியாரின் நான்மணி மாலை - விநாயகர் பற்றியது - விளக்கங்களுடன் கூடிய பாடல் பகிர்வு அருமை . நல்ல விளக்க்ங்கள்

    நல்வாழ்த்துகள்
    ந்ட்புடன் சீனா

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வினாயகா ! நண்பா !

    ReplyDelete