கோடி கோடி கண்டா கலகலநிநாத கராலே
கோடி கோடி புஜைந்திர்திரித கர கரவாலே
அபலா கேனோ மா எதோ பாலே
பஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்
ரிபுதலவாரிணீம் மாதரம்!
வந்தே மாதரம்!
முப்பது கோடி வாய் நின்னிசை முழங்கவும்
அறுபது கோடி தோளுயர்ந்துனக்காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திறலுடையாய்! அருளினை போற்றி!
பொருந்தலர் படை புறத்தொழித்திடும் பொற்பினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல் படை தாங்கி முன் நிற்கவும்
'கூடு திண்மை குறைந்தனை' என்பதேன்?
ஆற்றலில் மிகுந்தனை, அரும்பதம் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை ஓட்டுவை.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
கோடி கோடி கண்டா கலகலநிநாத கராலே - கோடி கோடி தொண்டைகள் (குரல்கள், வாய்கள்) கலகல என்று உன் புகழைப் பாடும்
கோடி கோடி புஜைந்திர்திரித கர கரவாலே - கோடி கோடி தோள்கள் (புஜங்கள்) தம் தம் கரங்களில் படைக்கலங்கள் தாங்கி நிற்கும்
அபலா கேனோ மா எதோ பாலே - (அப்படியிருக்க) உன்னை வலுவற்றவள் என்று யார் தான் சொல்லுவார்கள்?
பஹுபல தாரிணீம் - தோள்வலு மிக்கவளே!
நமாமி - போற்றி
தாரிணீம் - தாங்கும் நிலமே!
ரிபுதலவாரிணீம் மாதரம்! - எதிரிகளின் படைகளை விரட்டுபவளே! அன்னையே!
வந்தே மாதரம்! - தாயை வணங்குகிறேன்!
பொருந்தலர் - பொருந்தாதவர்; நட்பில்லாதவர்; எதிரிகள்.
***
துமி வித்யா துமி தர்மா
துமி ஹ்ருதி துமி மர்மா
த்வம் ஹி ப்ராணா: ஷரீரே
பாஹுதே துமி மா சக்தி
ஹ்ருதயே தும் மா பக்தி
தொமார இ ப்ரதிமா கடி
மந்திரே மந்திரே!
நீயே வித்தை! நீயே தருமம்!
நீயே இதயம், நீயே மருமம்!
உடலகத்திருக்கும் உயிருமன் நீயே!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
தடந்தோளகலாச் சக்தி நீ அம்மே!
சித்தம்தீங்காதுரு பக்தியும் நீயே!
ஆலயந்தோறும் அணி பெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவி இங்குனதே!
வந்தே மாதரம் வந்தே மாதரம்!
அறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ!
தோளிடை வன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ,
ஆலயந்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
துமி வித்யா - நீயே கல்வி
துமி தர்மா - நீயே அறம்
துமி ஹ்ருதி - நீயே உள்ளம்
துமி மர்மா - நீயே அதனுள் மறைந்திலகும் எண்ணங்கள்
த்வம் ஹி ப்ராணா: ஷரீரே - உறுதியாக (எங்கள்) உடல்களில் வாழும் உயிரும் நீயே
பாஹுதே துமி மா சக்தி - தோள்களில் நீயே எங்கள் வலிமை
ஹ்ருதயே தும் மா பக்தி - உள்ளங்களில் நீயே எங்கள் பக்தி
தொமார இ ப்ரதிமா கடி மந்திரே மந்திரே - ஆலயங்கள் தோறும் இருப்பது உன் திருவருவம் தானே!
வன்பு - வலிமை
***
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteநல்ல மொழியாக்கம் குமரன்!
போன பதிவில் சொன்னது போல், பாரதியின் இரண்டாம் ஆக்கம் இன்னும் இனிக்கிறது! மூலப்பாடலுடன் போட்டி போதும் அளவுக்குக் சொற்செறிவு நிறைந்துள்ளது!
//நீடு பல் படை தாங்கி முன் நிற்கவும்
'கூடு திண்மை குறைந்தனை' என்பதேன்?//
அக்னி, நாக், த்ரிசூல் என்று படைகள் தாங்கி நிற்கும் அன்னையை, இனி யாரும் அப்படிக் கேட்கத் தான் முடியுமா?!!
ஜெய வந்தே மாதரம்!
November 08, 2006 3:37 PM
--
Johan-Paris said...
அன்புக் குமரா!
தாய் நாட்டின் பெருமை பாடலிலும்; பாரதியின் தமிழாக்கத்திலும் மிளிர்கிறது. இதுவரை அதன் அர்த்தம் அறியவில்லை. நன்று!
யோகன் பாரிஸ்
November 09, 2006 5:50 AM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் இரவிசங்கர். அதனால் தான் பாரதியாரும் இரண்டாவது முறை மொழிபெயர்ப்பு செய்தார் போலும்.
November 09, 2006 6:00 AM
--
குமரன் (Kumaran) said...
மகிழ்ச்சி யோகன் ஐயா. பொருளை உரைப்பது தான் இப்பதிவுகளின் நோக்கம்.
November 09, 2006 6:01 AM
--
தி. ரா. ச.(T.R.C.) said...
அரும்பொருள் உரைத்த அருட்குமரா வாழ்க
November 09, 2006 9:54 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றிகள் தி.ரா.ச.
November 09, 2006 10:02 AM
அன்னையர் திருநாளில் இந்திய அன்னையின் திருவடிக்கு அடியேனின் வணக்கங்கள்!
ReplyDelete