Sunday, April 11, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 7

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் ஏழாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் ஆறு பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

சிற்றெரும்பைப் பார். எத்தனை சிறியது; அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு, எல்லா அவயங்களும் கணக்காக வைத்திருக்கிறது.

யார் வைத்தனர்? மஹாசக்தி. அந்த உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன. எறும்பு உண்ணுகின்றது. உறங்குகின்றது. மணம் செய்து கொள்கின்றது. குழந்தை பெறுகிறது. ஓடுகிறது. தேடுகிறது. போர் செய்கிறது. நாடு காக்கிறது. இதற்கெல்லாம் காற்று தான் ஆதாரம்.

மஹா சக்தி காற்றைக் கொண்டுதான் உயிர் விளையாட்டு விளையாடுகின்றாள். காற்றைப் பாடுகிறோம். அஃது அறிவிலே துணிவாக நிற்பது; உள்ளத்திலே விருப்பு வெறுப்புகளாவது. உயிரிலே உயிர் தானாக நிற்பது. வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம். நாம் அறிவதில்லை. காற்றுத் தேவன் வாழ்க.


----------

எனது உரை: இங்கே எறும்புகளென்று மனிதர்களைத் தான் சொல்கிறாரோ பாரதியார் என்று தோன்றுகிறது. இல்லை எறும்புகளைக் கூறி உலகத்தில் சிறிய உயிர்களிலிருந்து எல்லா உயிர்களுக்கும் காற்று தான் முக்கியத் தேவை என்று மட்டும் தான் கூறுகிறாரோ?

வேதங்கள் இறைவனைப் பற்றிப் பலவாறாகக் கூறிவிட்டுப் பின்னர் அவனை நாம் முழுவதும் அறியோம் என்று உரைப்பதைப் போல இங்கே பாரதியும், வெளி உலகத்திலே காற்றின் செய்கையை நாம் அறிவோம் என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே நாம் அறிவதில்லை என்றும் சொல்கிறார் போலும்.

8 comments:

  1. 02 ஜனவரி 2006 அன்று 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்ற எனது இன்னொரு பதிவில் இடப்பட்ட இடுகை இது. அதற்கு வந்த பின்னூட்டங்கள்:

    8 comments:

    G.Ragavan said...
    குமரன், எனக்கு ஒரு திரைப்படப் பாடல் நினைவிற்கு வருகின்றது.

    "காற்றின் அணுவை மூச்சாக்கி என் கந்தா எனக்கு உயிர் கொடுத்தாய்
    மூச்சே காற்றாய் உள்ள வரை உன்னைப் போற்றிப் பாடிட குரல் கொடுத்தாய்"

    மறுபடியும் கந்தனா என்று கேட்காதீர்கள். சொல்லாத நாளில்லை.

    January 02, 2006 11:39 AM
    --

    குமரன் (Kumaran) said...
    தெரியுமே. வேலை வணங்குவதே வேலை என்று இருப்பவராயிற்றே. :-)

    January 02, 2006 2:02 PM
    --

    ReplyDelete
  2. சிவா said...
    குமரன்! வசனக் கவிதை நன்றாக இருக்கிறது. சில கேள்விகள். 1. கவிதை என்று நீங்கள் சொல்வதால் இது கவிதை என்பது போல் தெரிகிறது. கிட்டத்தட்ட இது உரைநடை போல் தான் இருக்கிறது (இந்த மடையனுக்கு அப்படி தான் தோன்றுகிறது. நீங்கள் எதுகை-மோனை போட்டு விளக்குவீர்கள் என்று நினைக்கிறேன்). இது உண்மையிலேயே தமிழ் இலக்கியத்தில் ஒரு வடிவமா?. பாரதி மட்டும் தான் இந்த வடிவத்தில் எழுதியுள்ளாரா? இல்லை வேறு எவரும் எழுதியுள்ளனாரா?. கவிதையில் பட்டையை கிளப்பும் பாரதிக்கு திடிரென்று இப்படி வசனத்தில் கவிதை எழுத எண்ணம் ஏன் வந்தது?. கூறுங்களேன்.

    January 02, 2006 2:21 PM
    --

    குமரன் (Kumaran) said...
    சிவா. அருமையான கேள்விகள். பதில்கள் இதோ.

    உண்மைதான். பாரதியின் வசன கவிதைகள் பெரும்பாலும் உரைநடை தான். இந்தக் காலப் புதுக்கவிதைகளின் முதல் தோற்றம் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த வசன கவிதைகளையும் வார்த்தைக்கு வார்த்தை மடக்கி மடக்கி எழுதினால் புதுக்கவிதைகளாய்த் தோன்றுமோ என்னவோ? :-)

    இது உரைநடை என்பதால் தானே பாரதியாரே இவற்றை வசன கவிதை என்று கூறுகிறார்.

    எதுகை மோனை என்பது கவிதைக்கு ஒரு அழகே தவிர அவை எப்போதும் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. கருத்து இல்லாமல் எதுகை மோனை மட்டும் இருந்தால் அது கவிதையாகவே இருக்காது. ஆனால் எதுகை மோனை இல்லாமல் கருத்து இருந்தால் அது கவிதை என்று ஏற்றுக்கொள்ளப்படும்.

    இந்தக் காலத்தில் பெரும்பாலும் கவிதைகள் எதுகை மோனை இல்லாமலேயே எழுதப்படுகின்றன. அப்படி எதுகை மோனையோடு நான் எழுதி அண்ணன் கஜினி காம்கி வந்து அதை நர்ஸரி ரைம்ஸ் போல இருக்கிறது என்று சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும் :-) நல்ல வேளை அவர் திருவாசகம், திருக்குறள், திருப்பாவை, அபிராமி அந்தாதி போன்றவைகளைப் படிக்கவில்லை. படித்திருந்தால் அவைகளும் கவிதைகளா, நர்ஸரி ரைம்ஸ் போல இருக்கிறது என்று சொல்லியிருப்பார். :-) இப்போதெல்லாம் அவரைக் காண முடிவதில்லை. எங்கே போனாரோ தெரியவில்லை. அவர் வந்தால் அவர் கருத்துக்களைப் படித்துக் கொஞ்சம் நகைச்சுவையாகப் பொழுது போகும். :-)

    \\இது உண்மையிலேயே தமிழ் இலக்கியத்தில் ஒரு வடிவமா?\\ தெரியவில்லை. பாரதிக்கு முன் யாரும் வசன கவிதை எழுதியதாகத் தெரியவில்லை.

    \\பாரதி மட்டும் தான் இந்த வடிவத்தில் எழுதியுள்ளாரா? இல்லை வேறு எவரும் எழுதியுள்ளனாரா?. \\
    எனக்குத் தெரிந்த வரை அவர் மட்டும் தான் வசன கவிதைகள் எழுதியிருக்கிறார். மற்றவர் வசன கவிதையை எழுதுவதற்கு முன்னரே புதுக்கவிதைகள் வழக்கில் வந்துவிட்டதால் மற்றவர்கள் எழுதவில்லையோ என்னவோ?

    \\கவிதையில் பட்டையை கிளப்பும் பாரதிக்கு திடிரென்று இப்படி வசனத்தில் கவிதை எழுத எண்ணம் ஏன் வந்தது?. \\ இது தான் இருப்பதிலேயே அருமையான கேள்வி. :-)

    பாரதியாருக்குத் தமிழ் மொழியில் மட்டுமில்லாது வடமொழியிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை இருந்தது. வடமொழி வேதங்களை நன்கு ஊன்றிப் படித்தார். ஆன்மிகத்திற்காகப் படித்த அதே வேளையில் வடமொழியின் கவிதை வடிவங்களையும் அழகினையும் ரசித்தவர் அவர். ஆங்கிலத்திலும் பல புலவர்களின் கவிதைகளைப் படித்தவர். வடமொழியிலும் ஆங்கிலத்திலும் அழகாக உரைநடையில் எழுதுவதும் கவிதையாகப் பாடப்படுவதைப் பார்த்தவர். சாம வேதம் முழுக்க முழுக்க இயற்கைச் சக்திகளைப் புகழும் உரைநடையில் எழுதப்பட்டுப் பாடப்படும் கவிதைகளே. இந்த வசன கவிதைகளும் இயற்கைச் சக்திகளைப் புகழும் கவிதைகளே. சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாடியவர் அல்லவா அவர். அதனால் வடமொழியிலும் ஆங்கிலத்திலும் உள்ள இந்தக் கவிதை வடிவினை தமிழிலும் எழுதி சோதனை செய்தார் அவர்.

    இங்கு சொன்னதெல்லாம் நான் படித்தவைகளிலிருந்து நானே ஊகித்துச் சொன்னக் கருத்துகளே. பாரதியார் நேரடியாக இந்தக் காரணங்கள் சொன்னாரா இல்லையா தெரியவில்லை. சொன்னதாகப் படித்ததாக நினைவு. ஆனால் எங்கே படித்தேன் என்று நினைவில்லை. அதனால் இவை என் சொந்தக் கருத்துகளாய்க் கூட இருக்கலாம்.

    மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்க்கலாம். இராகவன், மதுமிதா அக்கா, இராமநாதன், மற்றும் நண்பர்களே என்ன சொல்கிறீர்கள்?

    அடக்கத்தின் மொத்த உருவம் தன்னை மடையன் என்று சொல்லிக் கொண்டு இந்த அருமையான கேள்விகளைக் கேட்டிருக்கிறது. உங்கள் பதில் என்னவோ?

    January 02, 2006 3:07 PM

    ReplyDelete
  3. --

    சிவா said...
    //**அடக்கத்தின் மொத்த உருவம்**// புது வருசமும் அதுவுமா உங்க நக்கலுக்கு எல்லையே இல்லாம போச்சு குமரன் :-))

    மிக்க நன்றி! என்னோட கேள்விகளுக்கு இவ்வளவு பெரிய பதிலா. தனி பதிவாகவே போட்டிருக்கலாம் போல். விளக்கம் எல்லாம் புரிந்தது. பாரதியை பற்றி மேலும் தெரிந்து கொண்டேன். நன்றி குமரன்.

    கஜினி சார்! வாங்க சார்! இப்படி காணாம போய்டீங்களே! நீங்க இல்லாம சுவாரசியமே இல்ல சார்!
    :-))

    January 02, 2006 9:00 PM
    --

    G.Ragavan said...
    கவிதையில் ஒரு வகையே வசனகவிதை. வசனகவிதையில் நிறைய பேர் எழுதவில்லை என்று நினைக்கின்றேன். வசனம் போல் இருக்கும். ஆனால் வசனமன்று. ஆனால் வசனமெல்லாம் கவிதையாகாது. இது குமரன் சொல்வது போல, இலக்கிய மரபு பத்தாமல் விளைந்த கவிதை வடிவம். பின்னாளில் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி புதுக்கவிதையாக மாறியிருக்கிறது.

    January 03, 2006 6:25 AM
    --

    தி. ரா. ச.(T.R.C.) said...
    என்கருத்து காற்றுனுடைய செயலைத்தான் பார்க்கமுடிகிறதே தவிர காற்றைப்பார்க்க முடிவதில்லை.அதுபோல கடவுளின் செயல்களை மட்டும்தான் பர்க்கமுடியும் அவரை பார்க்கமுடியாது, இதைத்தான் பாரதியர் காற்றின் மூலம் சொல்லியிருப்பார். தி. ரா.ச

    January 04, 2006 9:48 AM
    --

    குமரன் (Kumaran) said...
    அருமையான கருத்து தி.ரா.ச.

    January 04, 2006 12:11 PM

    ReplyDelete
  4. Good evening sir,
    Thanks for ur wind 7th. It is very nice. sir tiny ant has so many organ like us but they donot have laziness like us Ant always working at night time also.

    sundari.p

    ReplyDelete
  5. பாரதி காற்று அடிக்கும் ...
    உள்ளம்சிறகடிக்கும் எண்ணம் மெய் சிலிர்க்கும்
    குமரன் .எழுத்தில் பி ர தி பலிக்கும் சித்ரம்

    ReplyDelete
  6. உயிர்தான் இங்கு காற்றானது ்்்

    ReplyDelete