இன்பத்துப் பாலின் இரண்டாவது அதிகாரம்:
இருநோக்(கு) இவளுண்கண் உள்ள(து) ஒரு நோக்கு
நோய் நோக்(கு) ஒன்றந்நோய் மருந்து
என்னை உண்டு விடுவது போல் இருக்கும் இவள் கண்களில் இருவிதமான பார்வைகள் இருக்கின்றன. ஒரு பார்வை எனக்குக் காதல் நோயைத் தரும். இரண்டாவது பார்வை அந்த காதல் நோய்க்கு மருந்தாகும்.
இருநோக்(கு) இவள் உண்கண் உள்ளது - இரு விதமான பார்வைகள் இவளின் உண்ணும் கண்களில் உள்ளது.
ஒரு நோக்கு நோய் நோக்கு - ஒரு பார்வை காதல் நோய் தரும் பார்வை
ஒன்று அந்நோய் மருந்து - மற்றொன்று அந்த நோயைத் தீர்க்கும் மருந்து.
***
கண்களவு செய்யும் சிறு நோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது
கள்ளத்தனமாக அவள் வீசும் கடைக்கண் பார்வையில் கிடைக்கும் இன்பம் காதல் இன்பத்தில் சிறந்த பகுதி இல்லை; அதனை விடப் பெரிது.
கண் களவு செய்யும் சிறு நோக்கம் - யாரும் அறியாமல் என் மீது கள்ளத்தனமாக அவள் வீசும் பார்வை
காமத்தில் செம்பாகம் அன்று - கலவியில் கிடைக்கும் இன்பத்தில் சிறந்த பகுதி இல்லை
பெரிது - அதனை விடப் பெரியது.
***
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்
கடைக்கண்ணால் என்னை அவள் நோக்கினாள்; பின்னர் நாணத்தால் தலைகுனிந்தாள்; அவ்விதம் அவள் செய்தது அவள் எங்கள் காதல் இருவரையும் சேர்த்துக் கட்டும் காதல் என்னும் பயிருக்கு ஊற்றிய நீரானது.
நோக்கினாள் - அவள் என்னைப் பார்த்தாள்
நோக்கி இறைஞ்சினாள் - பின்னர் நாணத்தால் தலை குனிந்தாள்
அஃது அவள் யாப்பினுள் அட்டிய நீர் - அது அவள் எங்களைக் கட்டும் காதல்பயிருக்கு ஊற்றிய நீர்.
***
யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்
நான் பார்க்கும் போது குனிந்து நிலத்தை நோக்குவாள். நான் பார்க்காத போது என்னைப் பார்த்து மகிழ்ந்து புன்னகை புரிவாள்.
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் - நான் பார்க்கும் போது நிலத்தை நோக்குவாள்.
நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - நான் பார்க்காத போது அவள் பார்த்து மென்மையாக புன்னகைப்பாள்.
***
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
சிறக்கணித்தாள் போல நகும்
அவள் என்னைப் பார்ப்பதே குறிக்கோளாக என்னை உற்றுப் பார்க்கவில்லையே தவிர வேறு எங்கோ பார்ப்பது போல் ஒரு கண்ணால் என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - என்னை உற்று நோக்கவில்லையே தவிர
ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணை வேறெங்கோ பார்ப்பது போல் வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.
வெற்றி said...
ReplyDeleteகுமரன்,
அருமையான விளக்கம். இதே குறள்களுக்கு மதிப்பிற்குரிய கலைஞர் மு.கருனாநிதி அவர்கள் தனக்கே உரிய பாணியில் குறளோவியம் எனும் அவரது நூலில் அளித்த விளக்க உரையையும் இங்கே [கீழே] இணைக்கிறேன்.படித்துப் பாருங்கள்.
-------------------------------
வைத்தியர் ஊசி குத்துகிறார்; உடலில் வலி ஏற்படுகிறது. ஆனால் அந்த ஊசி வழியே உடலுக்குள் செல்லுகிற மருந்து, நோய் தீர்க்கப் பெரிதும் உதவுகிறது. வைத்தியரிடம் வேதனை தரும் ஊசியும் இருக்கிறது. நோய் வேதனையை நீக்கும் மருந்தும் அதனுள் இருக்கிறது!
இங்கே திருவள்ளுவர் ஒரு வைத்தியரைக் குறள் மூலம் அறிமுகப்படுத்துகிறார் பாருங்கள். அழகி அழகனைப் பார்க்கிறாள். அந்தப் பார்வையை அவன் வர்ணிக்கிறான். இந்த அணங்கு இரு பார்வையுடையவள்; ஒரு பார்வையால் அவனுக்கு வேதனை உண்டாக்கினாள். அடுத்த பார்வையால் அந்த வேதனையைப் போக்கினாள். இந்த விசித்திரமான பெண்மணியின் பார்வைச் சிறப்பை வள்ளுவர் வாய்மொழியாகவே கேளுங்கள்:
"இருநோக்கு இவளுகண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து"
அப்படி அவள் பார்க்கிறாளே என்பதற்காகப் பருவ இளைஞன் வாளாயிருந்து விட்டானா? அவனோ ஒரு வம்புக்கார வாலிபன் போலும். காதல் மயக்கத்தில் என்னென்ன சொல்கிறான் பாருங்கள்:
"நான் அவளைப் பார்க்கும் போது அவள் என்னைப் பார்க்காமல் நிலத்தை நோக்குகிறாள். நான் அவளைப் பாராதிருக்கும்போது அவள் என்னைப் பார்த்து மகிழ்கிறாள்" என்று கூறுகிறான்.
இது எவ்வளவு பெரிய பொய் தெரியுமா?
"நான் அவளைப் பாராதிருக்கும்போது அவள் என்னைப் பார்த்து மகிழ்கிறாள்" என்கிறானே - இவன்தான் அவளைப் பார்ப்பதில்லையே; அப்படி இருக்கும் போது அவள் இவனைப் பார்ப்பது மட்டும் இவனுக்கு எப்படித் தெரிந்தது?
அதேபோல் இவன் அவளைப் பார்க்கும்போது அவள் நிலத்தை நோக்குகிறாளாமே; அது எப்படி? இவனைப் பார்த்துவிட்டுத்தானே அவள் தனது பார்வையை வேறு பக்கம் திருப்ப வேண்டும்?
இந்தப் பார்வைக்குத்தான் 'பார்க்காமல் பார்க்கும் பார்வை' என்று பெயர் போலும்! இத்தகைய நிகழ்ச்சியால் வள்ளுவர் எதை விளக்குகிறார் தெரியுமா? காதலன் கூறும் பொய்யை மட்டுமல்ல, அவர்கள் கண்களை வேறு பக்கம் திருப்ப அவர்களே முயன்றாலும் அது முடியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதைத்தான் சொல்லாமல் சொல்கிறார் செந்நாப்போதார். இதோ அந்தக் குறளோவியம்:
"யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்"
[கலைஞர் மு.கருனாநிதியின் குறளோவியம் நூலிலிருந்து]
May 19, 2006 4:36 PM
--
சிவமுருகன் said...
குமரன் அண்ணா,
முதல் விளக்கம் பார்த்த போது.
பாரதியின் பாடலும் அதற்க்கு நான் கல்லூரி நாட்களில் ஒரு கவிதையும் எழுதியது ஞாபகத்திற்க்கு வந்தது.
"உன் ஒரு பார்வை நோயானது, உன் மறுபார்வை மருந்தானது"
"அப்பேற்பட்ட பார்வை எனக்கு தேவையில்லை."
"எனவே கண்தானம் செய்யுங்கள்
நோய்க்கு மருந்து தானம்"
4வது குறள் விளக்கம் படிக்கும் போது,
இதை தான் ஒரு ஜெமினி கணேசன் படத்தில் ஒரு பாடல் வரும் "நான் உன்னை பார்க்கும் போது நீ மண்ணை பார்க்கிறாய், நான் விண்ணை பார்க்கும் போது நீ என்னை பார்க்கிறாய்" என்ற பாடலில் சொன்னார்களோ.
May 20, 2006 7:03 AM
--
Merkondar said...
வள்ளுவன் அனுபவித்து எழுதினாரா அல்லது கற்பணையாக எழுதினாரா உள்ளதை உள்ளபடியே அனுபவித்து எழுதியது போல் உள்ளதே
May 20, 2006 10:39 PM
--
வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteவள்ளுவர் அனுபவித்துத் தான் எழுதி இருக்க வேண்டும்.இது எல்லாம் எங்க காலத்தில் நடந்தது தான்.இவ்வளவு இனிய உரைகள் கொடுத்ததற்கு நன்றி குமரன்.
May 21, 2006 12:28 AM
--
Samudra said...
அடடா! இதையெல்லாம் இத்தனை நாள் படிக்காமல் விட்டுவிட்டேனே!
எழுதுங்க குமரன் எழுதுங்க...இன்னும் நிறைய எழுதுங்க!
May 21, 2006 2:16 AM
--
குமரன் (Kumaran) said...
பாராட்டுகளுக்கும் இந்தக் குறட்பாக்களை வைத்து கலைஞர் மு.க. அவர்கள் தீட்டிய குறளோவியத்தை இங்கே தந்ததற்கும் மிக்க நன்றி வெற்றி. நானும் பொருள் சொல்வதற்கு முன் தி.மு.க.வின் வலைத்தளத்தில் இருக்கும் கலைஞரின் திருக்குறள் - உரையைப் படிக்கிறேன்.
May 21, 2006 6:23 AM
--
குமரன் (Kumaran) said...
உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது சிவமுருகன். இன்பத்துப் பாலில் வரும் பல குறட்பாக்களை திரைப்பட கவிஞர்கள் தங்கள் பாடல்களில் எடுத்தாண்டிருக்கிறார்கள். அண்மையில் அப்படிப்பட்ட ஒன்று வைரமுத்துவின் வரிகளில் வரும் 'கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு அந்தப் பெண்ணில் இருக்கு' இதற்கான குறள் விரைவில் இங்கு பதிக்கப்படும்.
May 21, 2006 6:25 AM
--
குமரன் (Kumaran) said...
என்னார். நமக்குத் தெரிந்த வள்ளுவரின் வரலாற்றின் படி அவர் இல்லறத்தவர் தானே. அதனால் உள்ளதை உள்ளபடி அனுபவித்துத் தான் எழுதியிருப்பார் என்று எண்ணுகிறேன்.
May 21, 2006 6:26 AM
--
குமரன் (Kumaran) said...
எல்லார் வீட்டிலும் இதே கதை தான் போலும் வல்லி அவர்களே. பாராட்டிற்கு நன்றி.
May 21, 2006 6:27 AM
--
குமரன் (Kumaran) said...
எழுதுறேன் சமுத்ரா எழுதுறேன். நீங்க தொடர்ந்து படிங்க.
என்ன ஆச்சு உங்கள் உபநிஷத் வலைப்பூ. இரண்டோ மூன்றோ பதிவுகள் போட்டிருந்தீங்க. இப்ப அந்த வலைப்பூவே காணலை?
May 21, 2006 6:28 AM
--
Ram.K said...
குறிப்பறிதல் - என்று சொல்லும்போது அதன் டெக்னிக் எல்லாம் பொதுவாக நாம் எங்கும் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் interpretation என்று கூடச் சொல்லலாம்.
ஆனால், காமத்துப்பாலில் அதற்கு என்று தனிப் பொருள் கொண்டு அமைந்துவிடுவது இனிமை.
//ஒரு கண்ணை வேறெங்கோ பார்ப்பது போல் வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.//
:))
May 21, 2006 6:43 AM
--
Samudra said...
//என்ன ஆச்சு உங்கள் உபநிஷத் வலைப்பூ. இரண்டோ மூன்றோ பதிவுகள் போட்டிருந்தீங்க. இப்ப அந்த வலைப்பூவே காணலை? //
யோசிச்சு பார்த்தா நான் புரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருந்துச்சு.
சரி, ஞானபழம் ஆனதுக்கு அப்புறம் இந்த மாதிரி பதிவு போடலாம்ன்னு முடிவு பன்னீட்டு அதுக்கு பதிலா மிலிட்டரி பதிவு ஒன்னு ஆரம்பிச்சுட்டேன்.
நமக்கு நல்லா தெரிஞ்ச விஷயம் இல்லையா...ஒழுங்கா எழுத முடியுது. :)
May 21, 2006 6:57 AM
--
rnateshan. said...
குமரன்,
ந்ன்றி.
May 21, 2006 8:43 AM
--
கோவி.கண்ணன் said...
குறிப்பறிதல் விசயத்தில் ஐந்தறிவு ஆத்மாக்கள் நம்மைக் காட்டிலும் கில்லாடிகள்
May 21, 2006 10:41 AM
--
G.Ragavan said...
குறிப்பறிதல்.....குமரன் விளக்கங்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தன. இன்னும் கொஞ்சம் விரித்து எழுதுங்கள்.
ஒரு கண்ணில் சூரியன். ஒரு கண்ணில் நிலவு என்ற பொருளில் ஒரு கண்ணதாசன் பாடல் வரியும் உண்டு. மறந்து விட்டது.
May 21, 2006 11:01 PM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் இராம்பிரசாத் அண்ணா. நீங்கள் சொல்வது மிகச்சரி.
May 23, 2006 12:50 PM
--
குமரன் (Kumaran) said...
நமக்கு நல்லா தெரிஞ்ச சங்கதிகளைப் பத்தி எழுதணும்ன்னு நினைக்கிறதுல தப்பு இல்லை சமுத்ரா. ஆனால் ஞானப் பழம் ஆன பின்னாடி தான் உபநிஷத் பத்தி எழுதணும்ன்னா முடியுமா? கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர். அதனால பயப்படாம தயங்காம எழுதுங்க.
May 23, 2006 12:52 PM
--
குமரன் (Kumaran) said...
நன்றி நடேசன் ஐயா.
May 23, 2006 12:53 PM
--
குமரன் (Kumaran) said...
உண்மைதான் கோவிகண்ணன். ஐந்தறிவு உயிர்கள் குறிப்பறிதலில் நம்மைவிட சிறந்தவையே. நாம் அவற்றிடம் கற்றுக் கொள்ள நிறைய உண்டு.
May 23, 2006 12:54 PM
--
குமரன் (Kumaran) said...
இல்லை இராகவன். இதற்கு மேல் விரித்து எழுத மனமில்லை. தொடங்கும் போது ஒரு வடிவத்தில் தொடங்கிவிட்டேன். அந்த வடிவிலேயே இன்பத்துப் பால் முழுதும் முடிக்கலாம் என்று இருக்கிறேன். முடித்தபிறகு வேறு வடிவத்தில் (கதைவடிவிலோ மற்ற வடிவிலோ) எழுத முடிந்தால் அப்போது எழுதலாம்.
ஒரு கண்ணில் சூரியன், ஒரு கண்ணில் நிலவு - கோதையின் வரி போல் இருக்கின்றதே?!! :-)
May 23, 2006 12:57 PM
இரு நோக்கு இவளுண்கண் ஒரு பிரமாதமான குறள். கண்கள் என்று சொல்கிறரே ஒழிய, விரகத்தைத் தருவது, தணிப்பது என்று இரண்டையும் செய்கிறவர்கள் பெண்கள். ஒருவேளை பெண் என்பவள் கண்ணே (Darling!)என்று நிரூபிக்கிறாரோ என்னவோ!
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com
இது ஆண் பார்வை. பெண் பார்வையில் விரகம் தருவதும் அதைத் தணிப்பதும் ஆணாக இருக்குமே. அதனை இலக்கியமாக்காமல் பெண்கள் விட்டுவிட்டார்கள் என்று நாச்சியார் திருமொழியைப் படிக்கும் வரையில் நினைத்திருந்தேன். :-)
ReplyDelete