Sunday, March 07, 2010

தகை அணங்குறுத்தல் - 1

இன்பத்துப் பாலில் முதல் அதிகாரத்துக்குப் பெயர் 'தகை அணங்குறுத்தல்'. காதலன் தன் காதலியைப் பற்றி வருணித்துப் பாடுவது போல் அமைந்துள்ளது இந்த அதிகாரம். இந்த அதிகாரத்தின் முதல் ஐந்து குறட்பாக்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

அணங்கு கொல் ஆய் மயில் கொல்லோ கனங்குழை
மாதர் கொல் மாலும் என் நெஞ்சு.

என் காதலியின் அழகிய உருவம் வருணிக்க இயலாத ஒன்று. ஒரு முறை பார்த்தால் அவள் தேவதையோ என்று தோன்றுகிறது. மறுமுறை பார்க்கும் போது அழகிய தோகை மயிலோ என்று தோன்றுகிறது. இல்லை கனமான அழகிய குழையை காதில் அணிந்திருக்கும் மானிடப் பெண் தானோ என்று இன்னொரு முறை பார்க்கும் போது தோன்றுகிறது. அவளின் அழகைக் கண்டு என் மனம் மயங்குகிறதே.

அணங்கு கொல் - தேவதையோ? (அணங்கு என்னும் சொல் பயமூட்டும் தெய்வப் பெண்களுக்கு, மோகினிகளுக்கு தொடக்கத்தில் பயன்படுத்தப் பட்டு, பின் வள்ளுவர் காலத்தில் அழகிய அன்புள்ள மகிழ்ச்சியூட்டும் தேவதைகளைக் குறிக்க பயனாகத் தொடங்கியது என்று படித்திருக்கிறேன்).

ஆய் மயில் கொல்லோ - அழகிய தோகை மயிலோ?

கனங்குழை மாதர் கொல் - கனமான குழையை காதில் அணிந்திருக்கும் பெண்ணோ?

மாலும் என் நெஞ்சு - மயங்கும் என் மனம்.

*****

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக் கொண்டன்ன(து) உடைத்து.

அவள் என்னை நோக்கினாள். அவள் என்னைப் பார்க்கிறாளே என்று நான் அவளைத் திரும்பப் பார்க்கும் போது அவள் என்னை மீண்டும் நோக்கினாள். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் ஒரே நேரத்தில் நோக்கியது என்னால் தாங்க முடியவில்லை. அவள் ஒருத்தி என்று தான் நினைத்தேன். ஆனால் அவள் விழி அம்புகளால் அவள் தாக்கியது அவள் ஒரு பெரிய படையுடன் வந்து தாக்கியது போல் இருந்தது.

நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் - அவள் என்னை நோக்கி, நான் அவளை நோக்கும் போது அவள் உடனே என்னை எதிர் நோக்கினாள்; அது

தாக்கு அணங்கு தானைக் கொண்டு அன்னது உடைத்து - தேவதை போன்ற அப்பெண் தனியாக வராமல் ஒரு தானையுடன் (படையுடன்) வந்து தாக்குவது போல் உள்ளது.

'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்' என்னும் போது இப்படித் தான் இருந்தது போலும். இன்றும் இளைஞர்களுக்கு இப்படித் தானே இருக்கிறது.

*****

பண்டறியேன் கூற்றென்பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

கூற்றுவன் எனப்படும் கொடிய எமனை எனக்கு முன்பெல்லாம் தெரியாது. அவனின் வலிய பாசக் கயிறு எவ்வளவு வலிமையை உடையது என்பதை இந்த பெண்களில் சிறந்தவளால் (பெண் தகையால்) இப்போது அறிந்து கொண்டேன்.

பண்டு அறியேன் கூற்று என்பதனை - கூற்றுவனை நான் முன்பெல்லாம் அறிய மாட்டேன்.

இனி அறிந்தேன் பெண் தகையால் பேரமர்க் கட்டு - இப்போது அறிந்து கொண்டேன் இந்த பெண்ணால் அவனின் வலிய கட்டினை.

*****

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்.

பெண்மையின் சிறந்த உதாரணமாகத் தோன்றுகின்ற இந்தப் பேதைப் பெண்ணுக்கா கண்டவர்கள் உயிரை உண்ணும் கண்கள் அமைந்தன? என்ன முரண்பாடு?

கண்டார் உயிர் உண்ணும் - கண்டவர்கள் உயிரை உண்ணும்

தோற்றத்தால் பெண் தகைப் பேதைக்கு - பார்ப்பதற்கு பெண்மையின் உதாரணமாகத் தோன்றும் இந்தப் பேதைக்கு

அமர்த்தன கண் - அமைந்தன கண்கள்.

*****

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம்மூன்றும் உடைத்து.

நான் பார்க்கும் போது அவள் என்னைப் பார்த்தால் அவள் கண்கள் என் உயிரைப் பறிக்கும் கூற்றம் போல் உள்ளன. அவள் பார்ப்பதற்காக பயன்படுத்தும் உறுப்பாகவும் அவள் கண்கள் உள்ளன. மருண்டு நோக்கும் அவளது கண்கள் மானின் கண்கள் போலும் உள்ளன. இந்த இளம்பெண்ணின் பார்வை இந்த மூன்றையும் கொண்டிருக்கிறதே? ஆச்சரியம்.

கூற்றமோ - கூற்றுவனோ?

கண்ணோ - கண்களோ?

பிணையோ - மானின் கண்களோ?

மடவரல் நோக்கம் - இளம்பெண்ணின் பார்வை

இம்மூன்றும் உடைத்து - இந்த மூன்றையும் கொண்டிருக்கிறது.

9 comments:

  1. இந்த இடுகை 'ஐயன் வள்ளுவனின் இன்பத்துப்பால்' பதிவில் பிப்ரவரி 25, 2006 அன்று என்னால் இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள் இவை:

    21 comments:

    Ram.K said...
    //அவளின் அழகைக் கண்டு என் மனம் மயங்குகிறதே.//

    ஆஹா இன்னொரு வண்ணக்குழப்பம் ?

    :-))

    February 25, 2006 11:34 AM
    --

    சிங். செயகுமார். said...
    வணக்கம் குமரன் இந்த பதிவை பார்த்ததும் இரண்டு குறள் கண்டிப்பாக இருக்கும் என நினைத்தேன்!

    நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்...........
    இவளுன் கண் இரு நோக்கு.......
    அடுத்த பதிவில விளக்கமா எழுதுங்க!


    மன்னிக்கவும் முதல் ஐந்துகுறளுக்குத்தான் எழுதி இருக்கேளா! சரி சரி

    February 25, 2006 5:47 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் பச்சோந்தி இராமபிரசாத் அண்ணா. இது இன்னொரு வண்ணமயமான குழப்பம். :-)

    February 26, 2006 10:51 AM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் செயகுமார். அடுத்தப் பதிவில் நீங்கள் எதிர்பார்க்கும் குறள் வரும்.

    February 26, 2006 10:51 AM
    --

    Anonymous said...
    Valluvar intha subject-la kooda ezhuthi irukkarnu enakku theriyathu.

    Kumaresh

    February 27, 2006 4:47 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் குமரேஷ். நாம் படிக்கும் போது இந்த குறட்பாக்களைப் படிப்பதில்லை. பின்னர் எங்கே திருக்குறள் படிக்கிறோம்? அதனால் இன்பத்துப் பால் பற்றி நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அப்படியே இன்பத்துப் பால் இருப்பது தெரிந்தாலும் அதில் உள்ள குறட்பாக்கள் தெரிவதில்லை. எனக்கும் பத்திற்கு மேல் இந்த இன்பத்துப் பாலில் இருக்கும் குறட்பாக்கள் தெரியாது. இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும். எப்படியும் பொருள் புரிந்துவிடும் என்ற நம்பிக்கையில் தொடங்கி விட்டேன். :-)

    February 27, 2006 8:22 PM
    --

    Anonymous said...
    Ithu Ippa rhombha mukiiyamaana ondra?

    :-(

    February 27, 2006 8:39 PM
    --

    குமரன் (Kumaran) said...
    அனானிமஸ் அண்ணா/அக்கா. இதைவிட உலக வாழ்க்கையில் முக்கியமானது வேற இருக்கா என்ன? :-)

    February 27, 2006 9:22 PM
    --

    சிவமுருகன் said...
    சும்ம போட்டு தாக்குங்க, முதல் தடவை படிச்சே என் கல்ல்லூரி நாட்களை ஞாபகபடுத்திவிட்டீர்கள் அதுவும் முதல் ஐந்து குறளிலே இப்படி என்றால், எல்லாபதிவும் முடியும் நேரத்தில் என் சுயசரிதை முடிந்து விடும் என்று நினைக்கிறேன்.

    February 28, 2006 3:36 AM
    --

    குமரன் (Kumaran) said...
    உங்கள் சுயசரிதை மட்டுமன்று சிவமுருகன். ஏறக்குறைய எல்லாருடைய கதையும் அப்படித்தான். :-)

    March 04, 2006 11:41 PM
    --

    செல்வேந்திரன் said...
    குறளுக்கு குரல் கொடுக்கும் பணி தொடரட்டும் !
    யான் பெற்ற இன்பத்துப் பால் பெறுக இவ்வையகம் !!

    April 03, 2006 3:19 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் செல்வேந்திரன். நீங்களும் தொடர்ந்து வந்து படித்துக் குரல் கொடுங்கள்.

    நன்றிகள்.

    April 03, 2006 4:12 PM
    --

    கோவி.கண்ணன் said...
    திருவள்ளுவர் காலத்தில் பெண்ணை வருனித்ததைப் பற்றி நீங்கள் சொல்கிறீர்கள், இன்று திரைப்பட பாடலாசிரியர்கள்,

    'பட்டினத்தார் பாடல்களை பாடம் செய்து ஒப்பிப்பேன் கண்ணே நீ சம்மதம் சொன்னால்' என்று ரீமா சென்னை புகழ்ந்து பாடல்களை ஏற்றுகின்றனர். தமிழ் கூறும் நல்லுலகு இதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது

    May 01, 2006 8:17 PM
    --

    பொன்ஸ்~~Poorna said...
    //ஆனால் அவள் விழி அம்புகளால் அவள் தாக்கியது அவள் ஒரு பெரிய படையுடன் வந்து தாக்கியது போல் இருந்தது.//

    குமரன், எங்க தல கைப்பு சொல்றா மாதிரி எல்லாம் ஐயாவின் பார்வையாகவே இருக்கே, அம்மாவின் பார்வையிலும் எழுதி இருக்காரா வள்ளுவர்?

    May 02, 2006 12:12 AM
    --

    ReplyDelete
  2. செந்தில் குமரன் said...
    ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் சொல்லும் விதம் அற்புதம்.

    இதன் மூலம் குறள் மட்டும் அல்லாது பொதுவான தமிழ் செய்யுள்களின் பொருளும் அறிந்து கொள்ளும் விதமாக பதிவு அமைந்துள்ளது.

    உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்.

    உங்களின் தமிழ் பணிக்கு தமிழ் மாணாக்கனாகிய என்னுடைய நன்றிகள்.

    May 02, 2006 1:28 AM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் கோவிகண்ணன். தமிழ் கூறும் நல்லுலகம் பெரும் முன்னேற்றம் தான் பெற்றுள்ளது. புதிய புதிய வருணனைகள். :-) ஆனால் வள்ளுவரின் இன்பத்துப்பாலைப் படிக்கும் போது சில வருணனைகள் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கின்றன என்பதையும் அதனை இன்றும் நாம் புழங்குகிறோம் என்பதையும் அறிந்து வியப்புறலாம்.

    May 03, 2006 11:59 AM
    --

    குமரன் (Kumaran) said...
    பொன்ஸ், வள்ளுவர் ஐயாங்கறதால ஐயாவோட பார்வையில தானே எழுதியிருப்பார்? :-) அப்படி என்னால அறுதியிட்டுச் சொல்ல முடியலை. நானும் இப்போது தான் இன்பத்துப் பாலைப் படிக்கத் தொடங்கியிருக்கேன். இனிமே தான் பார்க்கணும் வள்ளுவர் அம்மாவோட பார்வையிலும் எழுதியிருக்காரான்னு.

    May 03, 2006 12:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் செந்தில் குமரன் (குமரன் எண்ணம்). அது தான் முக்கிய நோக்கமும் கூட. குறட்பாக்களின் பொருளை மட்டும் சொல்வதாய் இருந்தால் தனியாகப் பொருளை மட்டும் எழுதிவிட்டுச் சென்றுவிடலாம். ஆனால் பழந்தமிழ்ச் சொற்களின் பொருளையும் அறிந்து அது மற்றோரிடத்தில் வரும்போது அதன் பொருளை உணர வகைசெய்யும் படி சொற்களின் பொருளையும் தனித்தனியாகக் கொடுக்க முயற்சிக்கிறேன். இந்த வலைப்பூவில் மட்டுமின்றி எனது எல்லா வலைப்பூவிலும் இது செய்யப்படுகிறது. இப்படித் தான் நான் தமிழும் வடமொழியும் கற்றேன் என்பதால் அந்த முறையிலேயே எழுதுகிறேன்.

    May 03, 2006 12:04 PM
    --

    குமரன் (Kumaran) said...
    செந்தில் குமரன். தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.

    May 03, 2006 12:04 PM
    --

    Anonymous said...
    குமரன் வலைப்பூவில் அற்புதமான படைப்புகளை தந்துள்ளீர்கள்.

    இது மிகவும் எல்லோருக்கும் பயனுள்ளது, எளிய தமிழ் உரை நடையில் படைப்பது பாராட்டுக்குரியது

    நன்றி
    இப்படிக்கு
    குமரன்@முத்தமிழ்மன்றம்.காம்

    June 23, 2006 5:31 AM
    --

    குமரன் (Kumaran) said...
    முத்தமிழ் மன்றத்துக் குமரனே. உங்கள் பாராட்டுகளைத் தலை தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி.

    June 26, 2006 2:34 PM

    ReplyDelete
  3. குமரன் ஐயா,

    ஜ்டார்ட் மீஜிக்....!!!

    திருக்குறளைத் தொடங்கியதற்கும் தொடர்வதற்கும் எம் மனமார்ந்த வாழ்த்துகள்!!

    இன்னும் 5 குறட்பாக்கள் தானே இருக்கு... அதிகாரம் முழுமையும் எழுதியிருக்கலாமில....

    -முகில்

    ReplyDelete
  4. முகில்,

    அடுத்த இடுகையில அடுத்த 5 குறட்பாக்கள் வரும். இவை எல்லாம் முன்பே எழுதியவை. அந்தப் பதிவில் இருப்பதை இங்கே மாற்றிக் கொண்டிருக்கிறேன். அங்கிருப்பதெல்லாம் இங்கே மாற்றிய பின்னர் தொடர்ந்து இங்கேயே எழுதலாம் என்று எண்ணியிருக்கிறேன். பார்ப்போம்.

    ReplyDelete
  5. குமரன் ஐயா,

    எப்படி உங்களால இத்தனை வலைப்பூக்கள சமாளிக்க முடியறது.

    கோதைத்தமிழ், விட்டுணு சித்தன், ஐயன் வள்ளுவன்...இன்னும் பல..

    நீங்க ரொம்ப நல்லவர் ன்னு சொன்னா, சாதாரணமா போயிடும்....

    நீங்க ரொம்ப, ரொம்ப நல்லவங்களா இருப்பீங்க போல....

    ReplyDelete
  6. சமாளிக்க முடியலை. :-)

    இன்னும் நிறைய பதிவுகள் வச்சிருந்தேன். 2008ல நிறைய பதிவுகளை மூடிட்டு அங்கே எழுதுனதை எல்லாம் கூடல் பதிவுக்குக் கொண்டு வந்தேன். அப்ப சில பதிவுகளை தனியாவே விட்டுவச்சேன்; தொடர்ந்து எழுதலாம்ங்கற நம்பிக்கை இருந்தது. எழுத முடியலை. அதனால தான் அந்தத் தனிப்பதிவுகள்ல இருக்கிறதையும் இங்கே கொண்டு வந்துட்டு அந்தப் பதிவுகளை மூடிடலாம்ன்னு நினைக்கிறேன். ரொம்ப ரொம்ப நல்லவனா இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. :-)

    ReplyDelete
  7. கூடல் இப்போ மெய்யாலுமே கூடல் ஆகப்போகுது!

    வலைப்பூக்களுக்கிடையில ஊடல் இல்லாமல் கூடிடு கூடலே!

    ReplyDelete
  8. //கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
    நோக்கம் இம்மூன்றும் உடைத்து. //

    "ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம் கொலோ? அறியேன் !
    ஆழியம் கண்ணபிரான் திருக் கண்கள் கொலோ? அறியேன் !
    சூழவும் தாமரை நாண்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்;
    தோழியர்கள்! அன்னைமீர் ! என் செய்கேன் துயராட்டியேனே?"
    திருவாய்மொழி (7 -7 -1 )
    :)

    ReplyDelete
  9. //ரொம்ப ரொம்ப நல்லவனா இருக்கிறது,
    ரொம்ப கஷ்டமா இருக்கு. :-)//

    நாங்க ரெண்டு பேரும் நல்லவங்களா இருந்தா,
    உங்களுக்கு ஏன் குமரன் அண்ணா கஷ்டமா இருக்கு? :)

    //ஆழியம் கண்ணபிரான் திருக் கண்கள் கொலோ? அறியேன் !//

    :)
    பார்த்தீங்களா ஆழ்வாரும் என் சப்போர்ட்டுக்கு வராரு! :)

    ReplyDelete