Wednesday, February 24, 2010

ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற! அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற!

தென் தமிழ் நாட்டின் புத்தூர் இந்த ஊர். ஆற்றங்கரையில் அரவணையில் துயின்று கொண்டே இருந்து அது அலுத்துப் போய், 'மானைத் தேடி மருகன் சென்றது போல்' இந்த மாமனும் கையில் சாட்டையுடன் அரச கோலம் கொண்டு அரங்க மன்னாராய் நிற்கும் ஊர். இவன் வந்து நின்ற நேரம் கோதை, இராதை, குமரி, சங்கரி, இராகவி என்று பல பெண்மான்கள் இந்த ஊரில் பிறந்தார்கள். இப்பெண்களில் கோதையே தலைவி; இவர்களின் நாச்சியார்! கூடல் இழைத்துப் பார்த்ததில் கோவிந்தன் வருவான் என்ற செய்தி கிடைக்க அந்த மயக்கத்திலேயே ஆழ்ந்து போய் அரங்கன் என்னும் மதயானையால் சுவைத்து எறியப்பட்ட கரும்புச்சக்கையாகக் கிடக்கிறாள் கோதை! வடமதுரைக்கு அவளை உய்த்திடும் நாள் இன்னும் வரவில்லையோ என்று வியந்து கொண்டு அவளைத் தனியே இருக்க விட்டு அவள் தோழியர் திண்ணைப்புறத்திற்கு வந்தனர். வந்தவர்கள் நடுவே அயோத்தியர்கோனைப் போற்றுவதும் ஆயர்கள் ஏற்றினைப் போற்றுவதும் என்று ஒரு போட்டி தோன்றியது.

குமரி: உங்கள் கோவிந்தன் தாய் தந்தைக்கு அடங்காதவன். உடன்பிறந்தவனோ கோள் சொல்லி. எங்கள் இராமன் அப்படியா? பெற்றோர் சொல்படி கானகம் ஏகினான் எங்கள் காகுத்தன். தன்னுடைய உடமைகள், உணவு, உறக்கம் அனைத்தையும் தொலைத்து கூடவே காவலாக நின்றான் உடன்பிறந்தானான இளையாழ்வான். இவனையும் மிஞ்சும் வகையில் 'என் உகப்பு பெரிதில்லை; உன் திருமுக உகப்பே பெரிது' என்று முடி சூடாமல் அடி சூடி நின்றான் தம்பி பரதாழ்வான். 'உன்னைப் பேணுதற்கு உன் அடியார்கள் உண்டு; உன் அடியார்களைப் பேணுதலே உன் திருவுள்ளக் குறிப்பு' என்று சொல்லி அடியார்க்கு அடியானாய் நின்றான் சத்ருக்னன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாமாயனாய் உங்கள் கண்ணன் இருக்கலாம். நற்குணங்களில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்கள் இந்தச் சக்ரவர்த்தித் திருமகன்கள்!

***

"என் மனம் பெரிதும் மயங்குகின்றதே. பெருமாள் காடேறப் போனான். சக்ரவர்த்தியோ அப்பிரிவைத் தாங்காமல் வானேறப் போனார். இவ்விரு துன்பமே தாங்க முடியாத போது பழுத்த புண்ணிலே புளி பெய்ததைப் போல அரசனின்றி நாடு இருக்கக் கூடாது; முடி சூட்டிக் கொள் என்று சொல்கிறீர்களே! இது தகுமா? முறையா? நீதியா?

எம்பெருமானுக்கு உடைமையான நான் அவன் உடைமையான இந்த நாட்டை ஆளுவது எப்படி? நீங்கள் எல்லோரும் இப்படி ஒன்றாகக் கூடி வந்து என் இயல்பைத் துறக்க வேண்டுவது ஏன்? அவனுக்கே அடிமையாக இருப்பது தானே என் இயல்பு?!

குருதேவரே. நீங்கள் எங்கள் குலத்திற்கு புரோஹிதர். முன்னோடிச் சென்று இக்குலத்திற்கு ஹிதமானதை செய்வது தானே தங்கள் கடமை. தமையன் காடேறவும், தந்தை துஞ்சவும் நான் முடி சூட்டிக் கொள்வது தானா தாங்கள் முன்னோடிச் சென்று இக்குலத்திற்கு இதம் செய்வது?

ஒருவருக்கு உரிமையான இரு பொருட்கள் ஒன்றையொன்று ஆளுவது இயலுமோ? நானும் பெருமாளின் உடைமை; இந்நாடும் அவன் உடைமை. இந்நாட்டை நான் ஆளுவதும் நிகழுமோ?

தந்தை சொல்லே மிக்கது என்று எண்ணி இந்த நாட்டை அப்படியே விட்டுச் சென்றான் அண்ணன். அவனைப் பிரிந்த துயரம் தாங்காமல் உடனே உயிரைத் துறந்தார் தந்தை. இப்படி ஒருவருக்கொருவர் இளைக்காதவராய் இருக்க, நான் இந்த நாட்டை ஆளத் தொடங்கினால் இந்த அண்ணனுக்குத் தம்பியாக நான் ஆவது எப்படி? இந்தத் தந்தைக்கு நான் மகனாக ஆவதும் எப்படி?"

"பரதா. அப்படியென்றால் என்ன தான் செய்வது?"

"சுவாமி. நாம் எல்லோரும் சேர்ந்து போய் பெருமாள் திருவடிகளிலே விழுந்து அவரை மீட்டுக் கொண்டு வந்து திருவபிஷேகம் செய்வோம். வாருங்கள்"

அனைவரையும் அழைத்துக் கொண்டு திருச்சித்திரக்கூடத்திலே போய் பெருமாள் திருவடிகளிலே தனது விருப்பத்தைச் சொல்கிறான் பரதாழ்வான்.

"அண்ணா. திருமுடியைத் துறந்து சடாமுடியைப் புனைந்தீர்கள். நாட்டை விட்டு காட்டிலே எழுந்தருளினீர்கள். இந்தக் காட்டையும் தவ வேடத்தையும் துறந்து திருவயோத்திக்கு வந்து திருமுடி சூடி (முடியொன்றி) மூன்று உலகங்களையும் என்றைக்கும் ஆண்டு (மூவுலகங்களும் ஆண்டு), உன்னுடைய இளையவனாய் பிறந்ததால் தம்பியாகவும், உன்னிடமே உலக வழக்குகள் அனைத்தையும் அறிந்து கொண்டதால் சீடனாகவும், உன்னால் விற்கவும் கொள்ளவும் படியான பொருளாக இருப்பதால் அடிமையாகவும் இருக்கிற எனக்கு அருள் செய்ய வேண்டும் (உன் அடியேற்கு அருள் என்று)"

***

இராகவி: இப்படி நாட்டை விட்டு காட்டுக்குப் போன அண்ணனின் பின் தொடர்ந்து சென்று (அவன் பின் தொடர்ந்த), மூத்தவன் இருக்க இளையவன் முடிசூடும் வழக்கம் இல்லை என்றும், தன்னுடைய இயல்பு பெருமாளுக்கு உடைமையாக இருக்கும்படி இருக்க அவன் உடைமையான இராச்சியத்தைத் தான் ஆள இயலாது என்றும் சொன்ன ஒப்பில்லாத நற்குணங்கள் நிரம்பிய பரத நம்பிக்கு (படி இல் குணத்துப் பரத நம்பிக்கு) தன் திருவடி நிலைகளைத் தந்தான் காகுத்தன்.

சங்கரி: இவ்வளவு தூரம் கெஞ்சியவனுடன் திரும்பி வராமல் தன் திருவடி நிலைகளைத் (பாதுகைகளைத்) தந்தானே கோமகன்! அது ஏன்?

குமரி: திருவடி நிலைகளைத் தந்ததால் தந்தையின் சொல்லையும் நிறைவேற்றினான்; தம்பியின் துயரத்தையும் தீர்த்தான்.

இராதை: அது எப்படி?

இராகவி: "பரதா. நீ அழைக்க நான் மீண்டும் வந்தால் நம் தந்தையார் சொன்னதைச் செய்யாமல் அரசாட்சியின் ஆசையினாலே மீண்டு வந்ததாக ஆகும். நீ என்னை மீட்டுக் கொண்டு போனால் உனக்கும் அபவாதம் உண்டாகும். தாயுடன் சேர்ந்து சதி செய்து நாட்டைப் பெற்றுக் கொண்டு தமையனைக் காடேற விட்டான்; இப்போது கெட்ட பெயர் உண்டான போது பின்னே தொடர்ந்து சென்று கண்ணைக் கசக்கி காலிலே விழுந்து மீட்டுக் கொண்டு வந்தான்; இரண்டையும் செய்ய வல்லவனாக இருக்கிறான் பரதன் என்று உனக்கு மேலும் கெட்ட பெயர் உண்டாகும். அதனால் நான் மீண்டும் திருவயோத்திக்கு வருவது இயலாது" என்று சொன்னான் இராமன். மேலும் சுதந்திரனாக அவனே ஆள்வதைத் தானே பரதன் மறுத்தான். அவன் சுதந்திரன் இல்லை; தனக்கு பிரதிநிதியாக ஆள்கிறான் என்று சொல்வதைப் போலும், காட்டிற்குச் சென்றவன் தந்தை சொற்படி பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டிற்கு எழுந்தருளுவான் என்று உறுதி சொல்வதைப் போலும் தன் திருவடி நிலைகளைத் தந்து முடி சூட மறுத்தவனை அடிசூடும் அரசாக்கி விட்டான் இராமன் (அன்று அடி நிலை ஈந்தானைப் பாடிப் பற). இதனால் தந்தை சொல்லும் நிறைவேறியது; தம்பி துயரமும் நீங்கியது. அப்படிப்பட்ட அயோத்தியர் கோமானை நாம் பாடுவோம் (அயோத்தியர் கோமானைப் பாடிப் பற)!

இராதை: இது என்ன முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாய்?! மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்ததன் பின்னர் இராமனை அயோத்தியர்கோன் என்று சொல்லுதல் ஆகுமா?

குமரி: பரதாழ்வான் மரவடிகளைத் தான் கொண்டு போனான். அவன் ஆள்கிறான் இல்லை. அவன் முடி சூடவில்லை. பெருமாள் அடியையே சூடினான். அதனால் திருவயோத்திக்கு அரசன் இராமனே. அதனால் அயோத்தியர் கோமானைப் பாடுவோம் என்றதில் தவறில்லை.

சங்கரி: சரி தான். இப்போது எங்கள் கண்ணனைப் பற்றி நாங்கள் சொல்ல நீங்கள் கேளுங்கள்.

அருகில் இருக்கும் மரம் செடி கொடிகளும் அணுகி வரும் மாடு மனிதர் பறவைகளும் பொசுங்கிப் போகும்படி நஞ்சை உமிழும் காளியனின் பொய்கை கலங்கும்படி (காளியன் பொய்கை கலங்க) ஓடிச் சென்று குதித்து (பாய்ந்திட்டு), பொய்கையின் கலக்கத்தால் சினம் கொண்டு வானளவிற்கு விரித்து நின்ற காளியனின் ஐந்து தலைகளிலும் மாறி மாறி நின்று (அவன் நீள் முடி ஐந்திலும் நின்று) நடனம் செய்து (நடம் செய்து) அதனால் தலையும் கழுத்தும் உடலும் நெரிந்து குருதி உமிழ நலிந்து நின்று உயிர் பிழைக்க வேண்டி நின்ற காளியனின் அடைக்கலத்தை ஏற்றுக் கொண்டு அவனுக்கு அருள் புரிந்தான் எங்கள் வித்தகன் (மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்)! அவனுடைய தோள் வலிமையைப் பாடுவோம் (தோள் வலி வீரமே பாடிப் பற)! குற்றமற்ற நீல மணியைப் போன்ற வடிவழகை உடைய கண்ணனைப் பாடுவோம் (தூமணி வண்ணனைப் பாடிப் பற)!

குமரி: சரி தான்! கண்ணன் ஆடினான் என்றால் அவன் கால் வலிமையை அல்லவோ பாட வேண்டும்?! தோள் வலிமையைப் பாடச் சொல்கிறாயே?!

இராதை: காலால் ஆடினான் என்பது சரி தான். ஆனால் அந்த காளியன் தன் உடலாலும் வாலாலும் கண்ணனைப் பிணைத்தும் அடித்தும் கீழே விழும்படி செய்ய முயன்றானே. அப்போது அவன் உடலையும் வாலையும் விலக்கி நின்ற வீரம் கண்ணனின் தோள் வலிமை தானே?! அதனால் அவன் தோள் வலிமையைப் பாடுவோம்!

இராகவி: நன்கு சொன்னாய்! தூமணி வண்ணனைப் பாடச் சொன்னதற்கும் ஏதேனும் காரணம் உண்டா?

சங்கரி: உண்டு இராகவி! காளியனால் கருநிறம் கொண்டு கிடந்த பொய்கை கண்ணனால் காளியன் விரட்டப்பட்ட பின்னர் மீண்டும் தூய்மை கொண்டு தன் இயல்பான நிறமான நீல நிறத்தைக் கொண்டதே! அதனைச் செய்தவன் இந்த தூமணிவண்ணன் தானே! அதனால் தூமணிவண்ணனைப் பாடுவோம்!

இராதை: காளியன் தலையில் மட்டுமா ஆடினான் கோகுலன்?! அவன் இன்னும் நிறைய ஆச்சரியங்களைச் செய்திருக்கிறான்! மாயத்தால் வண்டிச் சக்கரமாக வந்த கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சினான் கோவிந்தன் (மாயச் சகடம் உதைத்து)! தாயார் கட்டி வைத்த உரலை இழுத்துக் கொண்டு சென்று, வழியிலே நின்ற இரு மருத மரங்களின் இடையே புகுந்து, தடை செய்த அம்மருத மரங்கள் முறியும் படி இழுத்துச் சென்றான் தாமோதரன் (மருது இறுத்து)! பசு மேய்க்கப் போன இடையர்களுடனே அவர்களுக்குத் தலைவனாகச் சென்று, பசுக்கூட்டத்தை மேய விட்டு ஆநிரையைக் காத்தான் கோபாலன் (ஆயர்களோடு போய் ஆநிரை காத்து)! மற்ற இடங்களில் இருக்கும் பசுக்கூட்டங்கள் புல்லும் தண்ணீருமே தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையாகக் கொண்டிருக்க கோகுலத்தின் பசுக்களோ இவனது அழகிய வேய்ங்குழல் இசையினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாழும்படியான வித்தகம் கொண்டவன் வேணுகோபாலன் (அணி வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற)! இமையா நெடுங்கண் இமையவர்கள் போற்ற நிற்கும் விசும்பினை விட அறிவொன்றும் இல்லா ஆய்க்குலத்துப் பிறந்து ஆயர்களுக்குத் தலைவனாய் இருப்பதில் செருக்கு கொள்பவனைப் பாடுவோம் (ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற)! பரமபதத்தில் இருப்பதைக் காட்டிலும் மிக்க மகிழ்ச்சி கொண்டு பசு நிரை மேய்த்தவனைப் பாடுவோம் (ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற)!


இராகவி: சரி தான். எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னைச் சரணடை என்று நிபந்தனை இட்ட கோவிந்தனைப் போல் இல்லாமல் யாராயிருந்தாலும் சரணடைந்தவர்களுக்கு என் உயிரையும் தருவேன் என்றானே காகுத்தன், அவன் புகழைக் கேள்! மிகவும் ஆழமாக இருப்பதாலே தன் நீல நிறம் மாறி கரு நிறம் கொண்டிருந்தது தென் கடல் (கார் ஆர் கடலை). நீரில் இட்டாலோ கருங்கற்கள் ஆழ்வதையே இயல்பாகக் கொண்டவை. குரங்குகளோ ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கும் ஒரு கல்லிலிருந்து இன்னொரு கல்லிற்கும் தாவுவதையே இயல்பாகக் கொண்டவை. இவற்றின் இயல்பிற்கு மாறாக இந்த ஆழம் நிறைந்த கருங்கடலை குரங்குகள் கல்லினை இட்டு அடைத்து அணை கட்டும் படி இயல்புகளையே மாற்றும் திறன் கொண்டவன் இராமன் (அடைத்திட்டு)! அது மட்டுமா?! நுழைவதற்கு மிகவும் அரிதானது இலங்கை! பல அரண்களையும் காவல்களையும் கொண்டது! புகவரிய அந்த இலங்கையில் பல்லாயிரக்கணக்கான குரங்குகளின் படையுடன் புகுந்தவன் எங்கள் ஆஜானுபாகு (இலங்கை புக்கு)!

குமரி: இப்படி செய்வதற்கரிவற்றை எல்லாம் செய்து வந்திருக்கிறானே சீராமன் என்று அவன் பெருமையையும் வலிமையையும் புரிந்து கொள்ளாமல், புரிந்து கொண்டு பிராட்டியைத் திருப்பித் தராமல், தன்னுடைய வரத்தின் வலிமையையும் தோள் வலிமையையும் பெரிதாக எண்ணிக் கொண்டு போர் செய்ய வந்த இராவணனின் அழகிய பொன்முடி சூடிய தலைகள் பத்தினையும் துணித்தான் தசரதகுமாரன். ஒவ்வொரு தலையாக அறுத்தானா என்ன? இல்லை. ஒரே அம்பினால் ஒன்பதோடு ஒன்று என்னும்படி பத்துத் தலைகளையும் ஒரே நேரத்தில் துணித்தான் (ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும் நேரா)! 'இராவணன் தம்பி நான்' என்று தன்னைப் பற்றிய உண்மையைக் கூறிக் கொண்டே வந்து நேர்மையுடன் சரண் புகுந்த வீடணனுக்கு பல நூறு காலம் அரசாளும் படி இலங்கை அரசை தந்தான் சரணாகத வத்ஸலன் (அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த)! இப்படி எதிரியானாலும் சரணென்று வந்தால் இகபர சுகங்களைத் தந்து ஆட்கொள்ளும் குணத்தால் ஒரு காலும் திருப்தி பிறவாமல் மேன்மேலும் அனுபவிக்க வேண்டும் என்னும் ஆவலை உண்டாக்கும் அமுதத்தைப் போன்றவனைப் பாடுவோம் (ஆரா அமுதனைப் பாடிப் பற)! இராவணனை அழித்து பின்னர் பிராட்டியோடே திருவயோத்திக்கு எழுந்தருளி திருவபிஷேகம் செய்து கொண்டு திருவயோத்யையில் உள்ளவர்களுக்கு அரசனாக ஆண்டவனைப் பாடுவோம் (அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற)!

நால்வரும்: அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற! அயோத்தியர் கோமானைப் பாடிப் பற! தோள்வலி வீரமே பாடிப் பற! தூமணிவண்ணனைப் பாடிப் பற! ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற! ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற! ஆரா அமுதனைப் பாடிப் பற! அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற!

வியாக்கியான சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த உரையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்தப் பொருளுரை. இப்பாடலை கண்ணன் பாட்டில் கேட்கலாம்!

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்!

23 comments:

  1. வியாக்யானம் அருமையா இருக்கு குமரன்..
    ஆனால் என்ன ஏற்கனவே காதல் நோயில் தவிக்கும் கோதையின் நிலை, தோழிகளின் பேச்சைக் கேட்டு இன்னும் மோசமடையத்தான் செய்யும்..

    ReplyDelete
  2. அருமை ! அருமை ! :)
    இந்த விளக்கத்தில் எத்தனை பாசுரங்கள் கையாளப்பட்டு இருக்கின்றன பாருங்களேன். பொறுமையாக மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  3. //சங்கரி:
    சரி தான். இப்போது எங்கள் கண்ணனைப் பற்றி நாங்கள் சொல்ல நீங்கள் கேளுங்கள்//

    அதானே!

    அது என்ன சும்மா அயோத்தியர் கோமான், ஜாமான்-ன்னுக்கிட்டு? :)

    அயோத்தியர் கோமான், தென்னிலங்கைக் கோமான்-ன்னு தான் அவளைப் பொறுத்தவரை எல்லாருமே கோமான் தான்! :)

    ReplyDelete
  4. //சங்கரி: உண்டு இராகவி!//

    :)))

    //சரி தான்!
    கண்ணன் ஆடினான் என்றால் அவன் கால் வலிமையை அல்லவோ பாட வேண்டும்?! தோள் வலிமையைப் பாடச் சொல்கிறாயே?!//

    கால் வலி-ன்னு பாடினா திருவடிகளுக்கு வலிக்குமே!
    அதான் தோள் வலி-ன்னு பாடினோம்! :)

    ReplyDelete
  5. உண்மையிலேயே தோள் வலிமை தான் அதிகமாக வெளிப்பட்டது, காளிங்க மர்த்தனத்தில்!

    கை வலிமையோ (தேனுகாசுரன்), கால் வலிமையோ (சகடாசுரன்), பொதுவாக எதிரிகளின் சம்ஹாரத்தில் தான் முடியும்! ஆனால் தோள் வலிமையோ, அழிக்க மட்டுமல்லாது, அருளவும் செய்யும்! தோள் தினவும் எடுக்கும்! அபய ஹஸ்தமும் நீட்டும்!

    கண்ணன் பிறந்தது முதல்...
    பூதனை, சகடன், வதன், பகன், அகன், தேனுகன் என்று ஒரே சம்ஹாரங்களாக இருக்க...
    இது தான் கண்ணன் அவதாரத்தில் முதல் முறை, அழிக்காது, அருளிச் செய்து விட்டது!

    தான் மட்டுமல்ல, தன் அன்பர்களும் இனி காளிங்கனை அழிக்க மாட்டார்கள்! இனி கருடனும், தலையின் மேல் தன் கால் தடங்களைக் கண்ட பின், ஒன்றும் செய்யாது விட்டு விடுவான் என்று சத்தியமும் செய்து கொடுத்து, அவனை விடுவித்தார்!

    இதுவே தோள் வலியின் பெருமை!
    அபிமான பங்கமும் செய்யும்!
    அருளும் செய்யும்!
    முன்பு செய்த பழிக்குத் துணை, அவன் பன்னிரு "தோளும்"!
    - என்ன சங்கரி சொல்லுறது சரி தானே? :))

    ReplyDelete
  6. //ஆயர்களோடு "போய்" ஆநிரை காத்து அணி//

    இது ரொம்ப முக்கியம்!

    நான் ஆயர் தலைவனின் மகன்! அதனால் ஆர்டர் மட்டும் போட்டுவிட்டு, வீட்டிலும் வெளியிலும் கும்மாளம் மட்டுமே அடிப்பேன் என்று இருக்காது...

    சக ஆயர்களோடு "போய்" ஆநிரை காத்தான்!
    அவன் மேல் "சென்றதாம்" என் சிந்தனையே!

    புதுசா மேய்ச்சலுக்குப் போகும் பசுக்களுக்கு, எப்படி மடுவில் கால் மாட்டிக்காம, தண்ணி குடிக்கணும்-ன்னு செஞ்சே காட்டுவானாம் எங்கள் கண்ணன்!
    அதுக்கு, தானே ஒரு பசு போல் இரண்டு கைகளை ஊன்றி, அந்தப் போஸில் நாலு கால் போல் காட்டி, அவன் நீர் உறிஞ்சுவதைப் பார்த்து, கன்னுக்குட்டிகளும் உறிஞ்சுமாம்! My Kannan is a Cool Guy! Aint he? :)

    இதுவரை இப்படியெல்லாம் யாருமே பாத்து பாத்து செஞ்சதில்லை!
    அதனால் தாய்ப் பசுக்களுக்கு இன்னும் மகிழ்ச்சி!

    அதான் கன்னுக்குட்டி அருகில் இல்லாமலேயே,
    கண்ணன் தொட்ட மாத்திரத்தில்...
    ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப...

    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம்
    கோபாலன் பேரைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி!
    ராமாரி அரே சங்கரி :))

    ReplyDelete
  7. எங்கே இருந்து இப்படி சங்கரி ராகவி, குமரி-ன்னு எல்லாம் பேரைப் புடிச்சீங்க குமரன் அண்ணா? :))

    ReplyDelete
  8. எங்கே இருந்து இந்தப் பேரைப் புடிச்சீங்க-ன்னு தெரியாது!
    ஆனா வாழைப்பந்தல் கிராமத்தில் ஒரு நல்ல பையனை வேவு பாத்தீங்களோ-ன்னு சந்தேகமா இருக்கு! :)

    அங்கே ஒரு பெரியவர் சீண்டிய பேரை,
    இங்கே ஒருவர் மட்டும் அறிந்த பேரை,
    நீங்க கோதைப் பதிவில் போட்டுக் கலாட்டா பண்றீங்களா? ரொம்ப நேரம் சிரிச்சேன்! :)

    ReplyDelete
  9. //இராகவி: சரி தான். எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னைச் சரணடை என்று நிபந்தனை இட்ட கோவிந்தனைப் போல் இல்லாமல்

    யாராயிருந்தாலும் சரணடைந்தவர்களுக்கு என் உயிரையும் தருவேன் என்றானே காகுத்தன்//

    தோடா...
    உங்கள் இராமன் நிபந்தனையே போடலையா என்ன? :)

    சரணம்-ன்னு அடைஞ்சவங்களை மட்டும் தானே காப்பேன்-ன்னு சொன்னான்?
    என்னமோ நிபந்தனையே இல்லாம எல்லாரையும் காப்பேன்-ன்னு சொன்னாப் போலச் சொல்றீங்க? :)

    எங்கள் கண்ணன் நிபந்தனை எல்லாம் ஒன்னுமே போடலை!
    கவலைப் படாதே-ன்னு மட்டும் தான் சொன்னான்!

    * மாசுச: = கவலைப் படாதே!
    * சர்வ தர்மான் பரித்யஜ்ய = பிடிச்சித் தொங்கிக்கிட்டு இருக்கும் தர்மங்களை விட்டுவிடு! கவலைப் படாதே!
    * மாம் ஏகம் சரணம் வ்ரஜ = என் கிட்டயே வந்துருடா!
    * மோட்ச இஸ்யாமி = நான் உன்னை வச்சிக் காப்பாத்துறேன்!

    சர்வ தர்மான் பரித்யஜ்ய, மாம் ஏகம் சரணம் வ்ரஜ எல்லாம் கண்டிஷன் அல்ல! :)
    அய்யோ, ஷாக் அடிக்கும் ஒயரை (மின்கம்பியை) உதறிடு-ன்னு அலறுவது கண்டிஷனா? அதுக்குப் பேரு முதலுதவி! :)

    எங்கள் கண்ணன் போட்ட ஒரே நிபந்தனை = மா சுச: (கவலைப் படாதே)
    My Kannan is a Cool Guy!

    ReplyDelete
  10. வியாக்கியானச் சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  11. ஆங்..மறந்துட்டேனே! அது என்ன //அவன் தம்பிக்கே "நீள்" அரசு ஈந்த//?

    வீடணனுக்கு "நீளமான" அரசு ஈந்தானா? அப்படின்னா என்னா-ன்னு சொல்லுங்க! போனாப் போகட்டும்! இராமனுக்கும் கொஞ்சம் பெருமை கிடைக்கட்டும்! :)

    ReplyDelete
  12. //மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்ததன் பின்னர் இராமனை அயோத்தியர்கோன் என்று சொல்லுதல் ஆகுமா? //

    வான்பணையம் என்றால் என்ன என்று நட்சத்திர(*) குறியிட்டு சொன்னால் என்ன? :)
    "மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப் போய் வானோர் வாழ
    செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட திருமால்கோயில்
    திருவடிதன் திருவுருவும் திருமங்கை மலர்க்கண்ணும் காட்டி நின்ற
    உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட ஓசலிக்கும் ஒளியரங்கமே."
    (பெரியாழ்வார் 412)

    ReplyDelete
  13. //பரமபதத்தில் இருப்பதைக் காட்டிலும் மிக்க மகிழ்ச்சி கொண்டு பசு நிரை மேய்த்தவனை//
    ".....திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி
    செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே !" (திருவாய்மொழி - 10-3-10)

    ReplyDelete
  14. //கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சினான் கோவிந்தன் //

    இதற்கு நம் எல்லோருக்கும் உடனே திருப்பாவை பாசுரம் நினைவிற்கு வரலாம். ஆனால் ஒரு மாறுதலுக்காக, ஆண்டாள் யாரிடம் இருந்து இப்படி பாடக் கற்றாளோ, அந்த மஹானுபாவர் அருளிய திருவெள்ளறை திவ்ய தேசத்து பாசுரத்தையும் நினைவு கூரலாம்.

    "கள்ளச்சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த
    பிள்ளையரசே.........ஒளியுடைவெள்ளறை நின்றாய் !
    பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே! காப்பிடவாராய்." (பெரியாழ்வார் 198)

    ReplyDelete
  15. ஆசார்யர் பெரிய வாச்சான் பிள்ளை புண்யத்தில் இந்தப் பதிவில் அப்படியே மூல நூலான வால்மீகி ராமாயண உரையாடல்கள் சில உள்ளன குமரன். :)

    ReplyDelete
  16. //என் மனம் பெரிதும் மயங்குகின்றதே. பெருமாள் காடேறப் போனான். சக்ரவர்த்தியோ அப்பிரிவைத் தாங்காமல் வானேறப் போனார்.//
    குமரன்,
    மேற்படி வரிகளை படித்த ஒரு நண்பர் கால தேசங்கள் புரியாமல் குழம்பி போனார். :)
    பாசுரங்களுக்கான சுட்டி (அல்லது பாசுரங்களே) பதிவின் ஆரம்பத்தில் இருந்தால் நேரே கூடலுக்கு வருகை தருபவர்களுக்கு புரிவது எளிதாக இருக்குமே.
    ~
    ராதா

    ReplyDelete
  17. very nice blog. Every article is nice

    ReplyDelete

  18. உங்கள் நட்சத்திரமே உங்கள் விருப்பங்களைநிறைவேற்றும் ரகசியம்
    http://saramadikal.blogspot.in/2013/06/10.html
    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
    இவண்

    சாரம் அடிகள்
    94430 87944

    ReplyDelete

  19. உங்கள் நட்சத்திரமே உங்கள் விருப்பங்களைநிறைவேற்றும் ரகசியம்
    http://saramadikal.blogspot.in/2013/06/10.html
    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
    இவண்

    சாரம் அடிகள்
    94430 87944

    ReplyDelete

  20. உங்கள் நட்சத்திரமே உங்கள் விருப்பங்களைநிறைவேற்றும் ரகசியம்
    http://saramadikal.blogspot.in/2013/06/10.html
    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
    இவண்

    சாரம் அடிகள்
    94430 87944

    ReplyDelete