"ஐயா. நான் உங்கள் அடிமை. உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். கட்டளை இடவேண்டும்".
தூங்கிக் கொண்டிருந்தால் எப்படி காதில் விழும்? உறங்குவான் போல் யோகு செய்கிறான் என்று என்ன தான் மற்றவர்கள் சொன்னாலும் உண்மையில் யாரைப் பற்றியும் கவலைப் படாமல் தானே இந்த நெடியவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்?
வந்தவர் மீண்டும் உரத்தக் குரலில் கூவுகிறார்.
"ஐயா. நான் உங்கள் அடிமை. என்ன சேவை அடியேன் செய்யலாம் என்று கட்டளை இடவேண்டும்".
திடுக்கிட்டு எழுந்தார் நெடியவர். யாரது உரக்கக் கூவி என் உறக்கத்தைக் கலைத்தது என்பது போல் மெதுவாகத் தலையைத் திருப்பி வந்தவரைப் பார்த்தார். வந்தவர் யார் என்று தெரிந்தது.
"வாருமையா. எங்கே இவ்வளவு தூரம்?"
"ஐயா. அடியேன் தொண்டை மண்டலத்துக்காரன். உங்கள் அடிமை. உங்களிடம் அடிமைச் சேவை செய்யலாம் என்று வந்தேன்".
"என்ன தொழில் தெரியும்?"
"என்ன வேலை வேண்டுமானாலும் செய்வேன் ஐயா"
"இது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்?"
"விசிறி வீசிக் கொண்டிருந்தேன் ஐயா".
"விசிறி வீசினீரா? அது இங்கே வேண்டாமே! ஏற்கனவே இரு ஆற்றின் இடையில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கே எப்போதும் குளிர்ந்த காற்று வீசுகின்றது. அதனால் தான் அந்த சுகத்தில் நீர் வந்த போது நன்கு உறங்கிவிட்டேன். ம்ம். உம்மை யாரிடம் அனுப்புவது?
சரி. என்னைப் போல் ஒருவன் வடவெல்லையில் நிற்கிறான். அவனிடம் செல்லும். அவன் உம் பணியை ஏற்றுக் கொள்வான்"
"அப்படியே செய்கிறேன் ஐயா"
***
"வாரும் ஐயா. வந்த நோக்கம் என்னவோ?"
"ஐயனே. நான் உங்கள் அடிமை. உங்களிடம் சென்று பணி செய்யுமாறு ஆற்றங்கரை ஐயன் பணித்தார்."
"ஓ. கிடந்தான் அனுப்பினானோ?! சரி தான். என்ன பணி தெரியும்?"
"இட்ட பணி ஏதெனினும் செய்வேன் ஐயா. இது வரை விசிறும் பணி செய்துள்ளேன்"
"விசிறும் பணியா? சரி தான் போம். இங்கே மலை மேலே குளிர் தாங்க முடியவில்லை. உட்கார்ந்தால் குளிருகிறது. உறங்கினால் குளிருகிறது. அதனால் நானே என் மனைவியின் சேலையைப் போர்த்திக் கொண்டு நின்று கொண்டே இருக்கிறேன். இங்கே விசிறுவதற்கா வந்தீர்?
தொண்டை நாட்டிலே என்னைப் போல் ஒருவன் நின்று கொண்டே இருக்கிறான். ஆனால் குளிரினால் அன்று; வெம்மை தாங்க முடியாமல். அங்கே சென்று உம் பணியைச் செய்வீர். மிகப் பொருத்தமாக இருக்கும்"
"அப்படியே செய்கிறேன் ஐயனே".
***
'பெரிய மலை மேல் இருந்தால் குளிரும் என்பதால் இந்த ஐயன் சிறிய மலை மேல் நிற்கிறார் போலும். யானை மேல் அம்பாரியில் நிற்பது போல் தான் இவர் நிற்கிறார். இவராவது நம் பணியை ஏற்கிறாரா இல்லையோ?'
"ஐயனே. உங்களை நம்பி இந்த நம்பி வந்திருக்கிறேன். உங்கள் அடிமை. என் பணி ஏற்றுக் கொள்ள வேண்டும்"
"உம்மை அனுப்பியது யார் நம்பி?"
"ஆற்றங்கரை ஐயன் மலை குனிய நின்ற ஐயனிடம் அனுப்ப அவர் இங்கே என்னை அனுப்பினார் ஐயா"
"ஓ. நின்றானும் கிடந்தானும் அனுப்பினார்களோ? என்ன பணி செய்வீர் நீர்?"
"எப்பணியும் செய்வேன் ஐயனே. ஆலவட்டம் வீசுவது என் சிறப்பு"
"ஆகா. பொருத்தமான ஆளைத் தான் அனுப்பியிருக்கிறார்கள் இருவரும். இங்கே யாக குண்டத்தின் வெம்மை தாங்க முடியவில்லை. இப்போதே உம் ஆலவட்டப் பணியைத் தொடங்குங்கள்"
"அப்படியே ஐயனே. இதோ தொடங்கினேன்"
இப்படி திருவாலவட்டத் திருப்பணியெனும் விசிறி வீசும் பணியைச் செய்து செய்து இந்த அருளாளனிடம் எப்போதும் பேசிக் கொண்டே இருந்தார் இந்த நம்பி. இவரை நம்பி இவர் அடி பணிந்த இளையாழ்வாரின் ஆறு கேள்விகளுக்கு அருளாளனிடம் பதில் வாங்கியும் தந்தார். உலகம் உய்ய அந்த உடையவருக்கு இவர் காட்டிய வழி நம் எல்லோருக்கும் காட்டிய வழி.
திருக்கச்சி நம்பிகள் திருவடிகளே சரணம்.
* பேரருளாளன் ஏகாந்த சேவைக்கு அணுக்கத் தொண்டர்!
ReplyDelete* எம்பெருமானார் இராமானுசரின் முதல் குரு!
* இராமானுசரின் வாழ்க்கையே வேறு மாதிரி மாற, அறிந்தோ அறியாமலோ காரணமாய் ஆகி விட்டவர்!
* பேரருளாளன் என்னும் வரதராசனிடம் பேச வல்லவர்!
* பேசி ஆறு வார்த்தைகளை வெளிப்படுத்தித் தந்தவர்!
* பிறப்பால் அல்ல என்றாலும் ஒழுக்கத்தால் அந்தணர்!
* ஆலவட்டம் என்னும் விசிறி கைங்கர்யம் மட்டுமல்லாது, இன்னும் நீர், மலர், அடியார் என்று பல தொண்டுகள் புரிந்தவர்!
* வசதியான வாணிபத்தை விட்டு, அசதியான அருளாளன் பணிக்கு நின்றவர்!
* ஆயிரமாவது பிறந்தநாள் அண்மையில் கண்ட....
திருக்கச்சி நம்பி திருவடிகளே சரணம்!
திருக்கச்சி நம்பிகளின் சிலையை, சென்னை கந்த கோட்டம் முருகன் கோயிலிலும் இன்றும் காணலாம்!
ReplyDeleteஅது ஒரு இனிமையான கதை! :)
//அதனால் நானே என் மனைவியின் சேலையைப் போர்த்திக் கொண்டு நின்று கொண்டே இருக்கிறேன்//
ReplyDeleteஹா ஹா ஹா!
இ லைக் இட் வெரி மச்! :)
திருவேங்கடமுடையானை இதுக்காகவே அடியேனுக்கு நெம்ப பிடிக்கும்! :)
அம்மா ஞாபகமா இருக்கட்டும்-ன்னு அவங்க பட்டுச் சீலையை அமெரிக்கா கொண்டு வந்த போது, மொத மூனு மாசம் வீட்டுக் காய்ச்சலை (ஹோம் சிக்னெஸ்) புடைவை தான் நீக்கியது! :)
அதுவும் ரெட்டை மடிப்பு பட்டுச் சீலை கனமா, குளிருக்கு இதமா, அதே சமயம் வாசனையா இருக்கும்! போர்த்திக்கிட்டு தூங்கலாம்! :))
* அரங்கன் கருவறையில் எப்போதும் வெண்ணைய் வாசம் அடிக்கும்!
ReplyDelete* வேங்கடவன் கருவறையில் எப்போதும் பச்சைக் கர்ப்பூரத் துளசீ வாசம் வீசும்!
ரெண்டு பேருமே குளிரில் இருப்பவர்கள்! அதனால் சூடு தரும் வெண்ணைய், துளசி/கர்ப்பூரம்!
* வரதன் கருவறையில் யக்ஞ வாசம் வீசும்! யாக வேதிகை (ஹோம குண்டத்தில்) தோன்றியவன் ஆதலாலே முகம் உட்பட பல இடங்களிலும் நெருப்புச் சூடுக் குறிகள்! அவனுக்குத் தான் பூவாடையும், விசிறியும், குளிர் காற்றும், பட்டை விட பஞ்சுத் துணிகளும் தேவை!
அவன் தேவையறிந்து சேவை செய்த திருக்கச்சி நம்பிகளின் ஆத்மார்த்த தொண்டே தொண்டு!
அதை உரையாடல்-கதை வடிவில் அழகாய்க் கொடுத்த குமரனுக்கு அடியேன் நன்றி!
வேறு யாருக்குமே இல்லாத இன்னொரு பெரிய பெருமை திருக்கச்சி நம்பிக்கு உள்ளது!
ReplyDeleteசீடனுக்குக் குருவைக் காட்டுவது தான் உலக வழக்கம்!
ஆனால் குருவுக்கு "அதோ உங்களுக்கு வரப் போகும் சீடன்" என்று காட்டிய பெருமை...
தொலைவில் இருந்தே...ஆளவந்தாருக்கு "இவர் தான் உங்கள் இராமானுசன்" என்று முதல் முதலில் அடையாளம் காட்டிய பெருமை திருக்கச்சி நம்பிகளையே சாரும்!
அந்தச் சொற்ப நேரத்தில் ஆளவந்தாரும் உடையவரும் பார்த்துக் கொண்டதோடு சரி! அப்புறம் கடைசி வரை பார்க்கவே முடியவில்லை! :(
இப்படி.....
ஆச்சார்யர் ஆளவந்தாருக்கே இராமானுச சம்பந்தம் ஏற்படுத்தி வைத்த ஒரே மாமனிதர்...திருக்கச்சி நம்பிகள் மட்டுமே!
"தாழ்ந்த குலத்தவரான" திருக்கச்சி நம்பிகளைத் தகாத வார்த்தைகளைச் சொல்லி அசிங்கமாகப் பேசிய காரணத்தால்...
ReplyDeleteஇராமானுசரின் திருமண வாழ்க்கையே முறிந்து போய், இறுதியில் துறவு கொள்ள வைத்தது!
இப்படி அறிந்தோ அறியாமலோ, மொத்த உலகுக்கும் இராமானுசர் கிடைக்கக் காரணமாய் இருந்தவர் திருக்கச்சி நம்பிகள்!
இன்னொரு பெரும் பெருமையும் நம்பிகளுக்கு உள்ளது!
ReplyDeleteஇராமானுசரே விரும்பி உண்ணும் எச்சில் உணவு, திருக்கச்சி நம்பிகளின் இலையில் இருந்து மட்டுமே!
இது வேறு எவ்வளவு பெரிய ஆச்சார்யருக்குமே யாருக்குமே கிட்டாத பெருமை!
தான் "தாழ்ந்த குலத்தவன்" என்பதால் கடைசி வரை, "உயர் குலத்து" இளைய பையனான இராமானுசனைத் தன் கீழே வைத்துச் சீடனாகச் சேர்த்துக் கொள்ள நம்பிக்கு மனம் ஒப்பவில்லை! அப்படிச் செய்தால் வீண் பிரச்சனைகளை எழுப்புவார்கள் என்று நம்பிக்குத் தெரியும்!
அதனால் தனக்கு நம்பியின் ஆச்சார்ய சம்பந்தம் ஏற்பட வேணுமே என்ற பாவனையில், அவர் உண்ட மிச்சத்தை உண்ணத் தானாக மனசில் நினைத்துக் கொண்டார் இளைய இராமானுசன்!
ஆனால் அதுவும் ஈடேறாமல், இராமானுசரின் மனைவி "ஆசார மமதை" கொண்டு அவமதித்தார்! உடையவர் ஆசைப்பட்டது அவர் வாழ்நாளில் கடைசி வரை நடக்காமலேயே போனது! :(
ஆண்டாளின்
நூறு தடா வேண்டுதலை நிறைவேற்றி வைத்த உடையவர்! ஆனால் அவர் ஆசையை யார் நிறைவேற்றி வைப்பது?
கோதையே நிறைவேற்றி வைக்கிறாள் வேதாந்த தேசிகர் மூலமாக!
இன்றளவும் திருவரங்கத்தில் திருக்கச்சி நம்பிகளுக்குச் செய்யப்படும் அதே நைவேத்தியமே, இராமானுசருக்கும் செய்யப்படுகிறது! அவர் உண்டு முடித்த எச்சில் இலையிலேயே உடையவரும் உண்டு முடிக்கிறார்!
இந்தப் பெருமை "ஸோ கால்டு தாழ்ந்த குலத்தவரான" திருக்கச்சி நம்பிகளுக்கு மட்டுமே உரிய ஒன்றாகும்! வேறு எந்த ஆச்சாரியருக்கும் கிடையாது! இதுவே இராமானுசரின் உள்ளக் கிடக்கை!
Nandri Kumaran!nandri Ravishankar!
ReplyDeleteஉரிமை உணர்வோடு உருப்படியாக ஏதும் செய்யாமல் இந்த அடிமை ஏன் ஊர் சுற்றுகிறது?
ReplyDeleteமுன்பே இத்தகவல் அறிந்தாலும், மூன்று பெருமாள்களைய்யும் இணைத்து, பேசுமொழியில் அருமையாக வந்திருக்கிறது குமரன்.
ReplyDeleteஐ. இது நல்லா இருக்கே. நான் சும்மா ஒரு வரி எழுதிவிட்டுட்டுப் போயிடலாம் போலிருக்கே இரவி. நீங்க வந்து காஞ்சிபூர்ணரைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறீர்களே. :-) இந்தக் கூட்டணியைத் தொடர்வதில் எனக்கு முழு ஒப்புதல். :-)
ReplyDeleteகந்த கோட்டத்திற்கு நிறைய முறை சென்றிருக்கிறேன் இரவி. இதுவரை திருக்கச்சி நம்பிகளின் அர்ச்சையை அங்கே கண்டதில்லை. எங்கே இருக்கிறார்? அந்த இனிமையான கதையையும் சொல்லுங்கள்.
ReplyDeleteஎங்கே இரவி வெண்ணெய் வாசத்தையும் பச்சைக்கர்ப்பூர துளசி வாசத்தையும் உணரும் வரையில் அரங்கன் திருமுன்னோ வேங்கடவன் திருமுன்னோ நிற்க முடிகிறதா என்ன? எல்லோரும் பெருமாளைச் சேவித்துக் கொள்ள வேண்டியிருப்பதால் ஒரு நிமிடம் இரு நிமிடம் தான் அங்கே நிற்க முடிகிறது. அதனால் நீங்கள் சொன்னவற்றைக் கவனித்ததில்லை.
ReplyDeleteவரதன் சன்னிதிக்கு ஒரு முறை இரு முறை தான் சென்றிருக்கிறேன். தங்க பல்லி வெள்ளி பல்லி பார்த்தது தான் நினைவிருக்கிறது. பேரருளாளன் உயரமான கருவறையில் நிற்பதும் நினைவிருக்கிறது. மற்றவை நினைவில்லை.
ஆமாம் இரவி. ஆமுதல்வனை ஆளவந்தாருக்கு அறிமுகப்படுத்தியவர் இவரே. அப்போது யாமுனர் மட்டும் தானே இளையாழ்வாரைப் பார்த்தார். இராமானுசர் ஆளவந்தாரைப் பார்த்தாரா? பார்க்கவில்லை என்றல்லவோ நினைத்தேன்.
ReplyDeleteதிருவரங்கத்தில் திருக்கச்சிநம்பிகளின் பிரசாதமே எம்பெருமானாருக்குத் திருத்தளிகையாக சமர்ப்பிக்கப்படுகிறது என்பதை இதுவரை அறிந்திலேன் இரவி. இந்த முறை தமிழகப் பயணத்தில் திருவரங்கம் சென்ற போது உடையவரின் பிரசாத திருவமுது உடையவர் சன்னிதியில் கிடைத்தது. அது திருக்கச்சிநம்பிகளும் திருவமுது செய்தது என்று இன்று அறிந்தேன்.
ReplyDeleteசெல்வனைப் போல திருமாலே நானும் உனக்குப் பழவடியேன்.
ReplyDeleteநன்றி செல்வ நம்பி ஐயா.
ஐயா/அம்மாவிடம் அடியேனுக்குச் சவுக்கடி வாங்கித் தரத்தான் போலும் சவுக்கடி ஐயா/அம்மா. :-)
ReplyDeleteஉரிமையை உணர்ந்தவர் அவர் மட்டும் தான் போலும் ஐயா/அம்மா. அதனால் தான் அந்த உரிமையை உணர்ந்து ஓரிடத்தில் தங்காமல் ஊர் சுற்றி உருப்படியான பணியை இந்த அடிமை ஓங்கி ஒலித்து உரிமையோடு பெற்றுக் கொண்டது.
நன்றி மௌலி.
ReplyDeleteஏதோ ஒரு முன்னோர் உரையைப் படித்துக் கொண்டு வரும் போது இப்படி ஒரு வரி வந்தது; அதனை விரித்து எழுத வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டேன். இன்று எழுத வாய்ப்பு கிடைத்தது.
ReplyDelete//நீங்க வந்து காஞ்சிபூர்ணரைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறீர்களே. :-) இந்தக் கூட்டணியைத் தொடர்வதில் எனக்கு முழு ஒப்புதல். :-)//
ReplyDeleteபதிவிடா விரதம் போல் பின்னூட்டமிடா விரதம் வேற நான் துவங்கணுமா? :)
திருக்கச்சி நம்பிகளின் ஆயிரமாவது ஆண்டு (1009 - 2009)!
அதான் கூடலில் அள்ளித் தெளித்து விட்டேன்!
ஆர்வக் கோளாற்றுக்கு அடியேனை மன்னியுங்கள்! :)
மொதல்ல உருகுறத நிறுத்தோணும்! :))
//கந்த கோட்டத்திற்கு நிறைய முறை சென்றிருக்கிறேன் இரவி. இதுவரை திருக்கச்சி நம்பிகளின் அர்ச்சையை அங்கே கண்டதில்லை. எங்கே இருக்கிறார்?//
ReplyDeleteசரவணப் பொய்கையை ஒட்டிய உள் மண்டபத்தில்...உற்சவ முருகனைப் பார்த்தவாறு...நெற்றியில் நாமமும், கையில் ஆலவட்டமும்!
கதையைத் தோழன் இராகவனிடம் கேட்டுக்கோங்க! :)
//அப்போது யாமுனர் மட்டும் தானே இளையாழ்வாரைப் பார்த்தார். இராமானுசர் ஆளவந்தாரைப் பார்த்தாரா?//
ReplyDeleteபார்த்தார்!
அண்ணலும் நோக்கினான்! அவரும் நோக்கினார்!
கண்கள் தாழ்ந்து கலந்தன! நயன தீட்சை!
ஆளவந்தார் யாரென்று இராமானுசருக்குத் தெரியாது! ஆனால் திருக்கச்சி நம்பிகளும் உடன் இருந்ததால் தொலைவில் இருந்து வெறுமனே ஒரு பார்வை வணக்கம்! உடனே யாதவப் பிரகாசர் கோஷ்டியுடன் கலந்து சென்று விட்டார்!
ஆளவந்தார் இவரைப் பார்த்து, "ஆம் முதல்வன்" என மொழிந்தார் தான்! அதற்காக இராமானுசர் அவரைப் பார்க்கவில்லை என்று அர்த்தமாகாது!
இராமானுசரின் பார்வையும் ஆளவந்தார் பார்வையும் பார்வை அளவில் கலந்தன, நொடிப் பொழுதில்...தொலைவில் இருந்தே! அந்த நயன தீட்சை பற்றிப் பின்னாளில் இராமானுசரே கீதா பாஷ்யத்தில் சிலாகித்துப் பேசுகிறார்!
"ஆளவந்தாரின் ஒரே பார்வை அன்று என் மேல் பட்டதே!
அன்று கட்டை போல் இருந்த நான்...இன்று நானும் ஒரு பொருளாக ஆகி நிற்கிறேனே!"
//சவுக்கடி said...
ReplyDeleteஉரிமை உணர்வோடு உருப்படியாக ஏதும் செய்யாமல் இந்த அடிமை ஏன் ஊர் சுற்றுகிறது?//
சவுக்கடி ஐயா!
அடிமை-ன்னா உங்க வசதிக்கு எல்லாம் கை கட்டி வாய் பொத்தி நிற்கும் அடிமை-ன்னு நினைச்சீங்களா?
இது அப்படி அல்ல! இது எவ்வளவு உரிமை வேணுமாலும் எடுத்துக் கொள்ளும் மீளா அடிமை!
அதான் அடிமை ஜாலியா ஊர் சுத்தி, உரிமையோடு ஊர் சுத்துகிறது!
கண்டதையும் செய்யாம, தனக்கு உருப்படியாகத் தெரிந்ததை மட்டுமே செய்வேன் என்று அடம் பிடிக்கிறது!
அப்படி அடம் பிடித்து, அதில் வெற்றியும் பெற்று விட்டது!
உரிமை உணர்வோடு உருப்படியாக ஊர் சுத்தும் அடிமையை, நீங்க இப்போ "உருப்படியா" புரிஞ்சிக்கிட்டீங்களா? :) "சவுக்கடி" போதுமா? :))
கந்தகோட்டத்தில் திருக்கச்சிநம்பிகளின் சிலை வந்த கதையை நீங்களே சொல்லுங்கள் இரவி. இராகவன் தான் இந்தப் பக்கமே வருவதில்லையே.
ReplyDeleteகீதா பாஷ்யத்தில் வரும் இராமானுஜரின் வார்த்தைகள் ஒரு சொல் மாறாமல் இவையே என்றால் இவற்றில் ஆளவந்தாரின் திருப்பார்வை தன் மேல் விழுந்ததை மட்டும் தானே உடையவர் சொல்கிறார்; தான் அவரைப் பார்த்ததைச் சொல்லவில்லையே. ஆளவந்தாரின் திருப்பார்வை தன் மேல் விழுந்ததைப் பின்னர் மற்றவரிடமிருந்து அவர் அறிந்துகொண்டிருக்கலாம்; அதனை அவ்வரிகளில் சொல்லியிருக்கலாம் அல்லவா?
ReplyDelete//ஆளவந்தாரின் திருப்பார்வை தன் மேல் விழுந்ததைப் பின்னர் மற்றவரிடமிருந்து அவர் அறிந்துகொண்டிருக்கலாம்; அதனை அவ்வரிகளில் சொல்லியிருக்கலாம் அல்லவா?//
ReplyDeleteஅப்படி வேறு யாரேனும் அவருக்குச் சொல்லி இருந்தால்...
குரு பார்வை பட்டது! ஆனால் ஐயகோ அடியேன் தான் பார்க்க கொடுத்து வைக்கவில்லையே என்று விசனப்பட்டுப் பேசி இருப்பார் அல்லவா? அதுவும் ஆளவந்தார் இறுதி காரியங்களில்? அந்தப் பகுதிகளை வாசித்தால் ஓரளவு புலப்பட்டு விடும்-ன்னு நினைக்கிறேன்!
இன்னும் சில தரவுகள் கொடுக்கத் தோன்றுகிறது! சரி வேணாம்! :)
உடையவர் பற்றிய அவர் சீடர்கள் எழுதிய குறிப்புகள், குறிப்பாக அனந்தாழ்வான் எழுதியதில் கண்கள் கலந்து தாழ்ந்ததைப் பற்றி எதற்கும் சரி பார்த்து விடுங்களேன்!
தவறாகச் சொல்லி இருந்தால் அடியேனை மன்னிக்கவும்!
நான் எங்கே என்று போய் சரி பார்ப்பேன் இரவி. என்னிடம் நீங்கள் சொல்லும் நூல்கள் இல்லை. அதனால தான் என் ஐயத்தை உங்களிடம் கேட்கிறேன். இன்னும் தரவுகள் இருக்கின்றன என்று சொன்னீர்களே; தொல்லையில்லை என்றால் தாருங்கள்.
ReplyDeleteஉரையாடலாக அருமையாக தந்திருக்கிறீர்கள். நன்றி குமரா.
ReplyDeleteநன்றி கவிநயா அக்கா.
ReplyDelete