Sunday, June 14, 2009

முப்பத்தியிரண்டும் முப்பத்தியேழும்...

யார் இந்தத் தொடர் வலைப்பின்னல் பதிவினைத் தொடங்கியவர் என்று தெரியவில்லை. அண்மையில் சில நண்பர்கள் பதிவுகளில் இதனைக் கண்டபோது விரைவில் நமக்கும் அழைப்பு வரும்; ஆனால் அது சில நாட்களிலா வாரங்களிலா மாதங்களிலா என்று பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சில நாட்களிலேயே வந்துவிட்டது. ஜி.ரா., கோ.ரா, இராகவன் (இராஜேஷ்) தான் அழைத்தது. எப்போதும் போல் வலைப்பின்னல் இடுகை இட அழைப்பு வந்து ஒரு மாதம் இரண்டு மாதம் கழித்து இடாமல் இந்த முறை உடனே இட்டுவிடலாம் என்று இடுகிறேன். :-)

***

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?

எங்க குலக்கடவுள் திருப்பரங்குன்றத்துறைவோன். எங்க அம்மா முருக பக்தை. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அன்னை அங்கயற்கண்ணியின் இடப்புறம் கோவில் கொண்டிருக்கும் 'கூடல் குமரனை' ஒவ்வொரு சஷ்டியன்றும் சென்று வழிபடுவார்கள். அத்தோடு நான் பிறந்தது பங்குனி உத்திரமாகவும் அமைந்து விட்டதால் 'குமரன்' என்ற பெயரை வைத்துவிட்டார்கள். என் வயதுக்குழுவில் மதுரையில் நிறைய குமரன்கள் உண்டு. என் பள்ளி வகுப்பில் என்னுடன் ஐந்து குமரன்கள் படித்தார்கள்.

என்னிடமிருந்து மின்னஞ்சல் பெற்றவர்கள் என் பெயரின் பிற்பகுதியான 'மல்லி' என்பதைப் பார்த்திருப்பார்கள். அது பரம்பரையாக எங்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் பெயர். சௌராட்டிரர்கள் ஒவ்வொருவருக்கும் அப்படி ஒரு குடும்பப் பெயர் உண்டு.

என் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். என் நண்பர்கள் பலருக்கும் (இராகவன், இரவிசங்கர்,...) வடமொழிப்பெயர் அமைந்துவிட எனக்கு முழுக்க முழுக்கத் தமிழ்ப்பெயராக அமைந்ததில் அதுவும் தமிழ்க்கடவுள் முருகனின் பெயர் அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

இராகவன் கண்களால் அழுவதையும் மனத்தால் அழுவதையும் பற்றி சொல்லியிருந்தார். எனக்கும் அப்படி சொல்லத் தோன்றுகிறது.

கண்ணீர் விட்டது அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் 'சூப்பர் சிங்கர் 2008'ன் இறுதி நாளில் அஜீஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட போது. என்னைப் பொறுத்தவரை வெற்றி பெறத் தகுந்தவர் இரவி தான். அதனால் அஜீஷ் வெற்றி பெற்றதில் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால் கண்ணீர் விடக் காரணம் அந்த வெற்றிச் செய்தியைக் கேட்ட போது அஜீஷின் தாயார் மிகவும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டதும் குழைந்த குரலில் நன்றி உரைத்ததும் கண்ட போது. ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்பதனை நேரில் கண்ட நெகிழ்ச்சி. அத்தோடு என்னை ஈன்றவளும் உயிருடன் இருந்திருந்தால் இப்படித் தானே என் வாழ்வினைக் கண்டு மகிழ்ந்திருப்பாள் என்ற நினைவு. அஜீஷின் அன்னையிடம் என் அன்னையைக் கண்டேன் போலும்.

மனத்தால் அழுது கொண்டிருப்பது வயதான தந்தையை எண்ணி. எழுபது வயதாகும் அவருக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் சிறுநீரக அறுவை மருத்துவம் செய்தார்கள். இரு நாட்களுக்கு முன்னர் அவக்கரமாக கட்டிலில் இருந்து எழுந்தவர் தரையில் இருந்த போர்வை தடுக்கி விழுந்து இடுப்பு எழும்பு விலகிவிட்டது. மீண்டும் நேற்று அறுவை மருத்துவம் செய்து சரி செய்திருக்கிறார்கள். முனைப்புக் கவனிப்பில் (ICU) வைத்திருக்கிறார்கள். தம்பி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறான். செவ்வாய் கிழமை தான் அவருடன் பேச இயலும் என்றும் சொல்கிறான்.

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

கையெழுத்து என்றால் Handwritingஆ Signatureஆ என்று புரியவில்லை. நாம் தான் இரண்டையும் கையெழுத்து என்றே சொல்கிறோமே? Handwriting என்றால் பரவாயில்லாமல் இருக்கும். Signature என்றால் யார் வேண்டுமானால் போடும் படி எளிமையாக இருக்கும். இரண்டுமே பிடிக்கும் பிடிக்காது என்று சொல்லும் நிலையில் தான் இருக்கின்றன.

4. பிடித்த மதிய உணவு என்ன?

எண்ணெய் பருப்புப் பொடி சாதம், மட்டன்/சிக்கன் குழம்பு, வத்தற்குழம்பு, தயிர்சாதத்துடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலைத் துவையல்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

தொடர்ந்து பேசவேண்டும்; பழகவேண்டும் என்றில்லாமல் ஒத்த சிந்தனை, செயல்பாடு என்று இருக்கும் நண்பர்கள் பலர் உண்டு. இரவிசங்கரும் இராகவனும் போல். இப்போது இருக்கும் இடத்திலும் நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இல்லை; முன்பிருந்த நெருங்கிய நண்பர்களுடனும் அடிக்கடி தொலைபேசுவது கூட இல்லை.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

இரண்டுமே பிடிக்கும். கடல் என்றால் திருச்செந்தூர் கடல் பிடிக்கும். அருவி என்றால் பழைய குற்றால அருவி பிடிக்கும்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முழுமையான தோற்றத்தின் கவர்ச்சி.

8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது என் தமிழார்வம். பிடிக்காதது தற்புகழ்ச்சியும் புகழ்ச்சிக்கு மயங்குதலும்.

9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?

Pass...

10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்பா. அவருடன் மதுரையில் இருக்க இயலவில்லை.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெண்ணிற பனியனும் காக்கி நிற இடையாடையும்.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?

எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவை நினைத்து எனக்குத் தூக்கம் வரவில்லை. யார் தூக்கத்தையும் கெடுக்காமல் எதையும் கேட்காமல் அமைதியாக இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?

நீல நிறம். வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்.

14. பிடித்த மணம்?

புளிக்காய்ச்சல் காயும் மணம். எனக்கு மிக மிகப் பிடித்த உணவு புளியோதரை.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

முனைவர் நா. கண்ணன்: தமிழ் மரபு அறக்கட்டளையை நிறுவி பாடுபடுபவர். தமிழுக்காக அவர் ஆற்றும் தொண்டுகள் மிகச் சிறந்தவை.

மௌலி: ஆழ்ந்த சமயப் பற்றும் சமய ஒழுக்கமும் மிக்கவர்.

கவிநயா அக்கா: எளிமையும் இனிமையும் உடையவர்.

கீதாம்மா: கல்விக் கடல். கற்றதை அள்ளித் தரும் வண்மை.

யோகன் ஐயா: எளிமையும் அன்பும் மிக்கவர். வெகு நாட்களாக என் பதிவுகள் பக்கம் இவரைக் காணவில்லை.

இராகவ்: பண்பும் பணிவும் மிக்கவர்.

சிவமுருகன்: செயல்திறன் மிக்கவர். மீனாட்சி அம்மன் கோவில் படங்களைத் தொகுத்தவர்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

ஒவ்வொன்றும் பிடிக்கும். மிகவும் பிடித்தது 'பொற்சிலையும் சொற்குவையும்'.

17. பிடித்த விளையாட்டு:

எதுவும் இல்லை.

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம். ஆனால் பெரும்பாலும் தொடுவில்லை (Contact Lens) அணிந்திருப்பேன்.

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

நகைச்சுவை, வரலாறு, புராணம்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

Night in the Museum - திரையரங்கில் என் இரு குழந்தைகளுடன்.

21. பிடித்த பருவகாலம் எது?

பருவகாலமா? +2 படிக்கும் போது நிறைய வாங்கினேன். அதில் எந்த இதழ் பிடித்தது என்று இப்போது நினைவில்லை. :-)

ஓ. பெரும்பொழுதுகளைப் பற்றி கேட்டீர்களா? இளவேனில் தான் மிகவும் பிடிக்கும். :-)

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கலித்தொகை - புலியூர்க் கேசிகன் உரை.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்போதாவது. தோன்றும் போது.

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது: கீசு கீசு என்று எங்கும் பறவைகள் தமக்குள் கலந்து பேசும் பேச்சு அரவம்.
பிடிக்காதது: பேரிரைச்சல்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

தற்போது வாழும் இடம்.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

உண்டு. ஆனால் சொல்ல இயலாது. :-)

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

யாராவது அரைகுறையாக ஒன்றைப் படித்துவிட்டு அதுவே அறுதியானது என்று பேசும் போது.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சினம். இந்த சேர்ந்தாரைக் கொல்லி வீட்டை விட்டு வெளியே அவ்வளவாக வருவதில்லை. அதனால் வீட்டில் உள்ளோருக்கு மட்டுமே இதன் வேகம் தெரியும். மனைவி, மக்கள், அப்பா, தம்பி, பாட்டி என்று இவர்களிடம் மட்டுமே இது பாய்ந்திருக்கிறது இது வரை. அண்மைக் காலமாக அவ்வளவாக வெளிப்படவில்லை. அதனால் மனைவியும் மக்களும் வருத்தமின்றி இருக்கிறார்கள்.

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?

நயாகரா.

30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?

மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று ஆசை.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

பதிவுகள் எழுதுவதும் படிப்பதும்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.

ஒருவன் மற்றவரை நேசிப்பது மற்றவருக்காக இல்லை; தனக்காகவே.

தானே தமக்குச் சுற்றமும்; தானே தமக்கு விதிவகையும்.

43 comments:

  1. /என் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். என் நண்பர்கள் பலருக்கும் (இராகவன், இரவிசங்கர்,...) வடமொழிப்பெயர் அமைந்துவிட எனக்கு முழுக்க முழுக்கத் தமிழ்ப்பெயராக அமைந்ததில் அதுவும் தமிழ்க்கடவுள் முருகனின் பெயர் அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி./

    உண்மை தான்

    எல்லாரும் அமைவதில்லை
    அழகு தமிழில் பெயர் அமைய

    ReplyDelete
  2. /மனத்தால் அழுது கொண்டிருப்பது வயதான தந்தையை எண்ணி. எழுபது வயதாகும் அவருக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் சிறுநீரக அறுவை மருத்துவம் செய்தார்கள். இரு நாட்களுக்கு முன்னர் அவக்கரமாக கட்டிலில் இருந்து எழுந்தவர் தரையில் இருந்த போர்வை தடுக்கி விழுந்து இடுப்பு எழும்பு விலகிவிட்டது. மீண்டும் நேற்று அறுவை மருத்துவம் செய்து சரி செய்திருக்கிறார்கள். முனைப்புக் கவனிப்பில் (ICU) வைத்திருக்கிறார்கள். தம்பி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறான். செவ்வாய் கிழமை தான் அவருடன் பேச இயலும் என்றும் சொல்கிறான்./

    எல்லாம் நன்றாக நடக்கும்.

    ReplyDelete
  3. /
    பிடித்தது என் தமிழார்வம். /

    ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  4. /10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?

    அப்பா. அவருடன் மதுரையில் இருக்க இயலவில்லை./

    /12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?

    எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவை நினைத்து எனக்குத் தூக்கம் வரவில்லை. யார் தூக்கத்தையும் கெடுக்காமல் எதையும் கேட்காமல் அமைதியாக இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கிறேன்./

    சொல்ல வார்த்தை இல்லை

    அதே போன்ற சூழ்நிலையில் இருப்பவன் நானும் என்பதால்

    ReplyDelete
  5. /21. பிடித்த பருவகாலம் எது?

    பருவகாலமா? +2 படிக்கும் போது நிறைய வாங்கினேன். அதில் எந்த இதழ் பிடித்தது என்று இப்போது நினைவில்லை. :-)

    ஓ. பெரும்பொழுதுகளைப் பற்றி கேட்டீர்களா? இளவேனில் தான் மிகவும் பிடிக்கும். :-)/

    குறும்பு

    ReplyDelete
  6. kumaran, may the almighty be with your father and make his life easy.
    ~
    Radha

    ReplyDelete
  7. கேட்டதும் கொடுப்பவரே குமரரே குமரரே
    மினசோட்டா நாயகரே :)

    பதிவிட்டமைக்கு நன்றி பல.

    // கண்ணீர் விட்டது அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் 'சூப்பர் சிங்கர் 2008'ன் இறுதி நாளில் அஜீஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட போது. என்னைப் பொறுத்தவரை வெற்றி பெறத் தகுந்தவர் இரவி தான். அதனால் அஜீஷ் வெற்றி பெற்றதில் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். //

    உண்மையைச் சொல்லப் போனால் அஜீஷை விடவும் அனைவரும் நன்றாகப் பாடினார்கள். அதிலும் ஒரு பெண் மிக அருமையாகப் பாடினார். பெயர் மறந்து விட்டது. அவரும் கடைசிச் சுற்றுக்கு வந்தார். ஆனால் நடுவர்களாக உட்கார்ந்திருந்த மலையாளிகள் ஒரு மலையாளியைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்றே தோன்றுகின்றது. (அஜீஷ் ஒரு மலையாளி என்று எண்ணிச் சொன்னது).

    // எண்ணெய் பருப்புப் பொடி சாதம், மட்டன்/சிக்கன் குழம்பு, வத்தற்குழம்பு, தயிர்சாதத்துடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலைத் துவையல்.//

    உப்புக்கண்டத்தை விட்டு விட்டீர்களே. அது இரவுக்கா?

    தந்தையாரின் உடல்நிலை எப்படியிருக்கிறது? எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அருளால் விரைவில் நலமடைய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  8. உங்கள் தந்தை பூரண குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  9. அப்பா சீக்கிரமே நலமாக வாழ்த்தும் வேண்டுதலும் குமரன்!

    ReplyDelete
  10. //என் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். என் நண்பர்கள் பலருக்கும் (இராகவன், இரவிசங்கர்,...) வடமொழிப்பெயர் அமைந்துவிட//

    யப்பா! இதில் இம்புட்டு மகிழ்ச்சியா?

    //Signature என்றால் யார் வேண்டுமானால் போடும் படி எளிமையாக இருக்கும்.//

    நான் ரெடி! நீங்க ரெடியா? :))

    //கண்ணீர் விட்டது அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் 'சூப்பர் சிங்கர் 2008'ன் இறுதி நாளில் அஜீஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட போது//

    ரவி
    ரேனு
    அப்பறம் தான் அஜீஷ்!

    கடைசியில் ரவிக்கு தனது தரப்பு முடிப்புரைக்கு இன்னும் வாய்ப்பு கொடுக்காமல் கார்னர் பண்ணியது போல இருந்தது! :(

    அஜீஷும் நல்லாத் தான் பாடினார்! ஆனால் சங்கீத ஜாதி முல்லையில் பாவமே இல்லை! வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

    திறமையை வெளிக் கொணர்ந்து இத்தனை பேரைப் பேச வைத்த நீங்களும் வெற்றியாளர் தான் ரவி!

    ReplyDelete
  11. //எண்ணெய் பருப்புப் பொடி சாதம்//

    நெய் இல்லியா? :)

    //தயிர்சாதத்துடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலைத் துவையல்//

    கடிச்சிக்க உப்பிட்ட மாங்காய்?

    //இரவிசங்கரும் இராகவனும் போல்//

    ஹா ஹா ஹா!

    //முன்பிருந்த நெருங்கிய நண்பர்களுடனும் அடிக்கடி தொலைபேசுவது கூட இல்லை//

    மின்னஞ்சலாச்சும் அப்பப்போ அனுப்புங்க குமரன்!
    பழைய நட்பு பழைய சோறைப் போல! புத்துணர்வுக்கு உணவு!

    //பிடிக்காதது தற்புகழ்ச்சியும் புகழ்ச்சிக்கு மயங்குதலும்//

    நீங்களா?
    தற்புகழ்ச்சியா?
    பிறர் புகழ்ச்சி-ன்னு சொல்லுங்க! எங்களை எல்லாம் புகழாம இருந்தாலே போதும்! :)

    ReplyDelete
  12. //யார் தூக்கத்தையும் கெடுக்காமல் எதையும் கேட்காமல் அமைதியாக இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கிறேன்//

    பதிவுகளின் ரகசியம் இது தானோ? :)

    //Night in the Museum - திரையரங்கில் என் இரு குழந்தைகளுடன்//

    சூப்பர் படம்! கற்பனையின் விரிவுகளுக்கு பஞ்சமே இல்லை! சேந்தன் பயந்தானா என்ன? :)

    //பருவகாலமா? +2 படிக்கும் போது நிறைய வாங்கினேன்//

    :)
    விசித்ரா, விருந்து எல்லாம் VPP-ல வாங்கலையா? :)))

    ReplyDelete
  13. // உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

    யாராவது அரைகுறையாக ஒன்றைப் படித்துவிட்டு அதுவே அறுதியானது என்று பேசும் போது.//

    அடியேன் பேரை நேரடியாவே சொல்லி இருக்கலாமே குமரன்? :)))
    அந்த "அரைகுறை" அடியேன்! அடியேன்! அடியேன் தான்!

    அரைகுறை-ன்னு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்!
    தூயோமாய் வந்தேன்! துயில் எழப் பாடுவேன்! வாயால் முன்னமுன்னம் மாற்றாதே குமரா நீ! நேய நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்! :))

    ReplyDelete
  14. //ஒருவன் மற்றவரை நேசிப்பது மற்றவருக்காக இல்லை; தனக்காகவே.
    தானே தமக்குச் சுற்றமும்; தானே தமக்கு விதிவகையும்//

    அருமை!
    நண்பர்களை நேசிப்பதும் நமக்காகவே!
    எல்லாப் பொதுநலத்திலும் சுயநலமும் கலந்தே உள்ளது!
    Every Pessimism has a hidden Optimism as its object என்பார் டி.எச்.லாரன்ஸ்!

    என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே - மாறன் வாக்கு! :)

    ReplyDelete
  15. அப்பா முழுதும் நலம் பெற்று, தங்கள் மனக் கவலை தீர்ந்து, மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் என்று மீண்டும் ஒரு முறை, கலியுக வரதனாம் திருவேங்கடமுடையானிடம் வேண்டுகிறேன்!

    உற்ற உறுபிணி நோய்காள்! உமக்கொன்று சொல்லுவன் கேண்மின்
    பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்
    அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ்வினைகள்! உமக்கு இங்கோர்
    பற்றில்லை கண்டீர் நடமின், பண்டன்று பட்டினம் காப்பே!!!

    ReplyDelete
  16. குமரன், விரைவில் உங்கள் அப்பா நலமடைய இறைவனை வேண்டுகிறேன்.

    அது ஏன் நயாகரா நீர்வீழ்ச்சி பார்க்க தமிழ்நாட்டுக்காரங்களுக்கு பிடிக்குது? நான் அங்க போனப்ப எல்லாம் ஒரே தமிழ் சத்தம் தான்!

    //தானே தமக்குச் சுற்றமும்; தானே தமக்கு விதிவகையும்.// ரொம்ப சரி.

    ReplyDelete
  17. தந்தை பூரண நலம் அடைய அன்னை மீனாக்ஷியைப் பிரார்த்தனை செய்கிறேன் குமரன்.

    நீங்க முன்பு கொடுத்த பட்டாம்பூச்சியையே இன்னும் பறக்க விடாது அடைத்து வைத்திருக்கிறேன்...ஆனாலும் விடாது இதற்கும் கூப்பிட்டிருக்கிறீர்கள்....நன்றி:)

    விரைவில் இதையாவது எழுதிவிடுகிறேன். :)

    ReplyDelete
  18. //தானே தமக்குச் சுற்றமும்; தானே தமக்கு விதிவகையும்.//

    சத்யமான வரி...இது பற்றித்தான் நானும் சில நாட்களாக அசை போட்டு வருகிறேன்...விரைவில் இது பற்றிய ஒரு இடுகையும் மதுரையம்பதியில் வரும்.. :)

    ReplyDelete
  19. குமரன், அப்பா விரைவில் குணமடைய என் அப்பன் வரதனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  20. //அஜீஷின் தாயார் மிகவும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டதும் குழைந்த குரலில் நன்றி உரைத்ததும் கண்ட போது///

    ஆமாம் குமரன்.. ரொம்பவே நெகிழ்ந்து போனேன்...

    ReplyDelete
  21. //இராகவ்: பண்பும் பணிவும் மிக்கவர் //

    நீங்க பொய்யெல்லாம் சொல்வீங்களா குமரன் :)

    ReplyDelete
  22. //4. பிடித்த மதிய உணவு என்ன?

    மட்டன்/சிக்கன் குழம்பு,//

    பதிவுகளை பார்த்து நிச்சயம் அஹிம்சாவாதியாக இருப்பீர் என்று நினைத்தேன். எட்டாவது அதிசயம் !!

    ReplyDelete
  23. நன்றி திகழ்மிளிர்.

    ReplyDelete
  24. ஆறுதல் மொழிகளுக்கு நன்றி திகழ்மிளிர், இராதாமோகன், இராகவன், கீதாம்மா, இரவி, கெக்கே பிக்குணி, மௌலி, இராகவ்.

    ReplyDelete
  25. இராகவன்,

    இறுதிச் சுற்றுக்கு வந்தவர்களில் எனக்குப் பிடித்த வரிசை: இரவி, இரேணு, அஜீஷ். ஆனால் பொதுமக்களின் வாக்கெடுப்பில் வரிசை மாறிவிட்டது.

    அஜீஷ் மலையாளியா என்று தெரியவில்லை. நடுவர்கள் மூவரும் மலையாளிகளா என்று தெரியவில்லை. ஆனாலும் இந்தத் தேர்வு மக்களால் செய்யப்பட்டது என்பதால் அந்தக் குற்றச்சாட்டை வைக்க இயலாது.

    உங்களுக்கு வாணி ஜெயராம் தொடங்கி பெண்குரல்களே மிகவும் பிடிக்கும் என்று தெரிகிறது. எனக்கு என்னவோ சுசீலா அம்மா குரலுக்கு நிகராக வேறு எந்த பெண் குரலும் வருவதாகத் தோன்றுவதில்லை. வாணியம்மா குரலும் சித்ராம்மா குரலும் பிடிக்கும்.

    ஏன் உப்புகண்டத்தில் பட்டியலில் விட்டேன் என்று தெரியவில்லை. உப்புகண்டம் எந்த நேரத்திலும் கடித்துக் கொள்ளலாம். அதுவும் எனக்கு மிகவும் பிடித்த புளியோதரையுடன் உப்புகண்டம் இருந்தால் மூன்று வேளைக்கு ஆனதை ஒரே வேளையில் தின்று தீர்ப்பேன். :-)

    தந்தையாரின் உடல் நலம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. இன்று இரவு தம்பியிடம் பேச வேண்டும்.

    ReplyDelete
  26. எனக்கும் இரவிக்குத் தகுந்த மரியாதை கடைசியில் கொடுக்கப் படவில்லை என்று வருத்தம் உண்டு இரவி. இந்த மூன்றாம் இடத்தை அறிவிப்பது, முதல் இடத்தை அறிவிப்பது என்ற வரிசையில் இரண்டாம் இடம் பெறுபவர் தகுந்த மரியாதை பெற இயலாமல் போய்விடுகிறது. விஜய் தொலைக்காட்சி அதனை எந்த வகையிலாவது சரி செய்ய வேண்டும். இரவி, இரேணு, அஜீஷ் மூவருமே (பிரசன்னா கூட) திரையிசையில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

    பருப்புப்பொடி சாதத்துடன் எண்ணெய் தான் இரவி. நெய் இட்லி, தோசை, பருப்புசாதத்திற்குத் தான்.

    மின்னஞ்சல் நண்பர்கள் அனுப்புவாங்க இரவி. நான் பதில் சொல்வேன். நானே மின்னஞ்சல் அனுப்பியது மிகக்குறைவு. அவர்கள் பிறந்த நாளை நினைவில் வைத்து அன்றாவது மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

    வீட்டுல வந்து கேட்டுப் பாருங்க என் தற்புகழ்ச்சியின் தன்மையையும் புகழ்ச்சிக்கு மகிழும் மகிழ்ச்சியையும்.

    'Night in the museum' நியூயார்க்கில் நடக்கும் கதை இல்லை; வாஷிங்க்டனில் நடக்கும் கதை இரவி. புதிய படம். அவ்வளவாக பயம் இல்லை. IMaxல் பார்த்தோம். அப்ப அப்ப சேந்தன் கொஞ்சம் பயந்த மாதிரி இருந்தது.

    அரைகுறையாகப் படித்து விட்டு அறுதியிட்டுப் பேசுபவர் நீங்கள் இல்லை இரவி - அது உங்களுக்கே நன்றாகத் தெரியும். நான் யாரைச் சொல்கிறேன் என்றும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். :-)

    நேய நிலைக்கதவம் திறந்தால் அந்த அரைகுறையினர் மீதும் வேகம் வராது தான்.

    அண்மையில் உபநிடதத்தில் யாக்ஞவல்கியர் தன் மனைவி மைத்ரேயியிடம் பேசிய பேச்சுகளைப் படித்துக் கொண்டிருந்தேன் இரவி. அதில் அவர் சொல்வாரே - கணவன் மனைவியை நேசிப்பது மனைவிக்காக இல்லை; ஆத்மாவிற்காக. மனைவி கணவனை நேசிப்பது கணவனுக்காக இல்லை; ஆத்மாவிற்காக. ...

    அதனைப் படிக்கும் போது கீதையும் திருவாசகமும் சொல்பவை நினைவிற்கு வந்தன. அதனால் வாழ்க்கையைப் பற்றிய கேள்வி என்றவுடன் உடனே இது நினைவிற்கு வர எழுதினேன்.

    பட்டினம் காப்பிட்டதற்கு மிக்க நன்றி இரவி. மிகவும் தேவையான பாசுரம். நானும் இரண்டு மூன்று முறை அனுசந்தித்தேன்.

    ReplyDelete
  27. நயாகராவிற்கு மூன்று முறை சென்று வந்துவிட்டேன் கெக்கேபிக்குணி அக்கா. ஆனாலும் இன்னும் எத்தனை முறை வேண்டுமானால் போகலாம். குலசேகரன் படியைத் தரிசிப்பதைப் பற்றி இரவி எழுதியிருக்கிறார்; நான் கிண்டலாக சொல்வதுண்டு 'இந்தியாவில இருந்து வர்றவங்களுக்கு திருப்பதி போற மாதிரி நயாகரா போறது'ன்னு. என்னைப் பொறுத்த வரையில் அது உண்மை தான். அந்த அருவியில் மாலவன் அழகைக் காண்கிறேன்.

    ReplyDelete
  28. உங்க கட்டுரையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் மௌலி.

    ReplyDelete
  29. பொய்யில்லை உண்மை தான் இராகவ். :-)

    ReplyDelete
  30. முரண்பாடுகள் இருப்பது எல்லோருக்கும் இயல்பு என்றாலும் முரண்பாடுகள் மிகுதியாக என்னிடம் இருக்கின்றன இராதா. அதனால் தான் இப்படி தோன்றுகிறது. நான் ஊன் உண்ணும் போது பார்ப்பவர்கள் நிறைய பேர் வியப்போடு 'நீங்க நான் வெஜ் சாப்புடுவீங்களா?' என்று கேட்டதுண்டு. தோற்றமும் பேச்சும் எழுத்தும் ஒரு செய்தியைச் சொல்ல செயல்கள் வேறுவிதமாக இருக்கின்றன. சினத்தைப் பற்றியும் சொல்லியிருக்கிறேனே பார்த்தீர்களா? அப்பாவிற்கு அறுவை மருத்துவம் செய்வதற்கு முன் பேசினேன் - எதற்கும் கவலைப்படாதீர்கள்; பணத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்றெல்லாம். நேற்று தம்பியிடம் சொல்லியிருக்கிறார் நான் மிக அன்பாகப் பேசினேன் என்று. அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் நான் மற்ற நேரங்களில் அவரிடம் எப்படி பேசியிருக்கிறேன் என்று. வெட்கம் இல்லாத பிறவியாகிவிட்டேன்.

    ReplyDelete
  31. ம்ம்ம்...சுவாரஸ்யமான முரண்பாடுகள்...எப்படி வெட்கம் இல்லாது போயிற்றோ அப்படியே க்ரோதமும் இல்லாமல் போக கடவது. :-)

    //ஒருவன் மற்றவரை நேசிப்பது மற்றவருக்காக இல்லை; தனக்காகவே.//
    தத்துவ நூல்களை(அல்லது வேத உபநிஷத்துகள் போன்றவற்றை) படித்து புரிந்ததை சொல்கிறீரா அல்லது உணர்ந்து சொல்கிறீரா என்று தெரியவில்லை. நடை முறையில் ஏற்றுக் கொள்ள ரொம்பவும் கடினமான ஒரு தத்துவம் என்று என் அபிப்பிராயம்.
    ~
    ராதா

    ReplyDelete
  32. அப்பா விரைவில் குணமடைய என்னுடைய பிரார்த்தனைகள், குமரா.

    //கவிநயா அக்கா: எளிமையும் இனிமையும் உடையவர்.//

    ஆத்தாடி! அன்புக்கு நன்றி. சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன்.

    நயாகரா எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

    //31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

    பதிவுகள் எழுதுவதும் படிப்பதும்.//

    உங்களிடம் எனக்கு பிடித்தது உங்க நேர்மையும், தமிழறிவும் ஆர்வமும் :)

    ReplyDelete
  33. தங்கள் ஆசிகளுக்கு நன்றி இராதா. குரோதமும் இன்றிப் போகக்கடவது. ததாஸ்து. :-)

    தத்துவ நூல்கள் படித்தால் மட்டும் எல்லாம் மனத்தில் நிற்பதில்லை. அனுபவத்திலும் கொஞ்சம் வந்தால் தான் மனத்தில் நிற்கும். அதே போல் அனுபவத்தில் வருவதெல்லாம் முழு உண்மையும் இல்லை. எத்தனையோ வகையான சாத்தியங்கள் ஒன்றே அனுபவமாக அமைகிறது; மற்றவருக்கு வேறு அனுபவம் சாத்தியமாகலாம். அதனால் 'ஒருவர் மற்றவரை நேசிப்பது தனக்காகவே' என்பது தத்துவ புரிதலுக்கும் அனுபவத்திற்கும் இடையில் நிற்கும் ஒன்று.

    இதனை தீவொழுக்கமாகப் புரிந்து கொண்டால் நடைமுறைக்கு ஒத்து வராதது போல் தோன்றும். நாம் நம் குடும்பத்தை நேசிப்பது முதல் உலக உயிர்களை நேசிப்பது வரையில் எல்லாமும் மற்றவர்களுக்காகவே நேசிக்கிறோம் என்று நினைப்பதில் ஒரு மகிழ்ச்சி. ஆனால் உண்மையில் குடும்பத்தை நேசிப்பது நம்மை நேசிப்பதே; ஊரை நேசிப்பது நம்மை நேசிப்பதே; சமயத்தை நேசிப்பது நம்மை நேசிப்பதே; நாட்டை நேசிப்பது நம்மை நேசிப்பதே; ... ; உலக உயிர்களை எல்லாம் நேசிப்பது நம்மை நேசிப்பதே;... என்று விரிந்து கொண்டே செல்லும். வரட்டுத் தத்துவமாக இல்லாமல் வாழ்க்கை நெறியாக இருக்கும் போது சுவையான ஒன்று தான் இது.

    ReplyDelete
  34. நன்றி கவிநயா அக்கா.

    ReplyDelete
  35. இராதா. உங்கள் பதிவில் பின்னூட்டம் இட இயலவில்லை. அதனைக் கொஞ்சம் கவனியுங்கள். ஏதாவது சொல்லலாம் என்றால் பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்திருக்கிறீர்களே?

    ReplyDelete
  36. குமரன், 'ஒருவர் மற்றவரை நேசிப்பது தனக்காகவே' என்பது பற்றி உங்கள் சிந்தனைகள் சுவாரஸ்யமானவை. இக்கருத்தினை நான் ஒரு சில வருடங்களுக்கு முன் சில நூல்களில் படித்துவிட்டு (முண்டக உபநிஷத் அல்லது வேறு ஏதோ ஒரு உபநிஷத் என்று நினைக்கிறேன்) அனைத்தும் புரிந்த ஒரு மேதாவியாக என்னை நினைத்துக் கொண்டு பலரை புண்படுத்தி இருக்கிறேன். "உனக்காக இதை செய்தேன்" என்று அன்புடன் ஒருவர் சொன்னாலும், "அதெல்லாம் ஒன்றும் உண்மை இல்லை. அப்படி செய்தால் உமது உள்ளம் சந்தோஷிக்கும் என்பதற்காகவே செய்தீர்கள்", என்று வாதிட்டு ஹிம்சை செய்து இருக்கிறேன். வாக்கினால் ஹிம்சை. :) அப்பொழுது இருந்த மன நிலையில் இந்த உண்மையை உணர்ந்தால் நிறைய sentimental/emotional சிக்கல்கள் தீரும் என்று நினைத்து, என்னை சுற்றி இருந்த பலரிடமும் "அனைவரும் ஒரு வகையில் சுயநலவாதிகளே" என்று அவர்களுக்கு பிடிக்காத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்தினை சொல்லி ஹிம்சை செய்தேன். சில மாதங்கள் கழித்தே என்னுடைய பைத்தியக்காரத் தனம் புரிய ஆரம்பித்தது. :) அதன் பிறகு இம்மாதிரி மகாவாக்யங்களை எல்லோரிடமும் apply செய்யும் பைத்தியக்கார செயலை நிறுத்திக் கொண்டேன். இதனை ரொம்பவும் நுணுக்கி ஆராய்ந்து, "அந்த செயலை நீர் விட்டதும் உம்முடைய நன்மை/திருப்திக்காகவே" என்று என் மனசாட்சி சொல்கிறது. :)

    ReplyDelete
  37. குமரன் பதிவு போட்டுவிட்டேன்.

    http://maduraiyampathi.blogspot.com/

    ReplyDelete
  38. ரசித்தேன் குமரன் எல்லா பதில்களையும்

    ReplyDelete
  39. // தந்தையாரின் உடல் நலம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. இன்று இரவு தம்பியிடம் பேச வேண்டும். //

    தந்தையார் இப்பொழுது எப்படியிருக்கிறார் குமரன்?


    // குமரன் (Kumaran) said...

    இராகவன்,

    இறுதிச் சுற்றுக்கு வந்தவர்களில் எனக்குப் பிடித்த வரிசை: இரவி, இரேணு, அஜீஷ். ஆனால் பொதுமக்களின் வாக்கெடுப்பில் வரிசை மாறிவிட்டது.

    அஜீஷ் மலையாளியா என்று தெரியவில்லை. நடுவர்கள் மூவரும் மலையாளிகளா என்று தெரியவில்லை. ஆனாலும் இந்தத் தேர்வு மக்களால் செய்யப்பட்டது என்பதால் அந்தக் குற்றச்சாட்டை வைக்க இயலாது. //

    அஜீஷ் மலையாளியா என்று தெரியவில்லை என்பது உண்மைதான். ஆனால் பெயர்.. முகவெட்டு.. அம்மாவின் உடையலங்காரம்.. நகையலங்காரங்களைப் பார்க்கையில் அப்படித் தெரிகிறது. அவர் மலையாளியாக இருப்பது தவறல்ல. ஆனால் முதலிடத்திற்கு அவர் தகுதியானவர் இல்லை என்பது என் கருத்து. பொதுமக்கள் முடிவே முடிவு.

    ஆனால் நடுவர்கள் என்ற பெயரில் இரண்டு பேர் அடித்த அசிங்கக் கூத்து இருக்கிறதே... நிகழ்ச்சி பார்க்கும் ஆசையையே கெடுத்துக் கொண்டிருந்தது. ஸ்ரீநிவாசின் வெத்து வேட்டு விமர்சனங்களும்... ஆமாம் சாமி சுஜாதாவும். ம்ம்ம்.. உன்னி கிருஷ்ணன் மட்டுமே கொஞ்சம் முனைப்போடு செயலாற்றினார் என்பது என் கருத்து.

    // உங்களுக்கு வாணி ஜெயராம் தொடங்கி பெண்குரல்களே மிகவும் பிடிக்கும் என்று தெரிகிறது. எனக்கு என்னவோ சுசீலா அம்மா குரலுக்கு நிகராக வேறு எந்த பெண் குரலும் வருவதாகத் தோன்றுவதில்லை. வாணியம்மா குரலும் சித்ராம்மா குரலும் பிடிக்கும். //

    ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் கூட சொன்னது அதுதான். இசையரசியின் குரல்தான் அவருக்குப் பிடித்த குரல்களிலேயே சிறந்தது என்று. ஆண்குரல்களில் ஜெயச்சந்திரன், டி.எம்.எஸ், மலேசியா, கார்த்திக் ஆகியோரின் குரல் மிகவும் பிடிக்கும். இவர்கள் பாடிக் கேட்கையில் தமிழ் தமிழாக இருப்பதும் சிறப்பு.

    // ஏன் உப்புகண்டத்தில் பட்டியலில் விட்டேன் என்று தெரியவில்லை. உப்புகண்டம் எந்த நேரத்திலும் கடித்துக் கொள்ளலாம். அதுவும் எனக்கு மிகவும் பிடித்த புளியோதரையுடன் உப்புகண்டம் இருந்தால் மூன்று வேளைக்கு ஆனதை ஒரே வேளையில் தின்று தீர்ப்பேன். :-) //

    இதெல்லாம் எங்களுக்குக் குடுக்காதீங்க. நீங்களே சாப்டுறீங்களே :( ஆம்ஸ்டர்டாமுக்கு பார்சல் அனுப்புங்களேன்.

    // உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

    யாராவது அரைகுறையாக ஒன்றைப் படித்துவிட்டு அதுவே அறுதியானது என்று பேசும் போது.//

    ஒரு கேள்வி. அப்படி ஒருவர் அரைகுறையாகத்தான் பேசுகிறார் என்று சொல்ல உங்களுக்கு எல்லாம் தெரியுமா குமரன்?

    ReplyDelete
  40. நீங்கள் சொல்வது போல் நானும் இருந்திருக்கிறேன் இராதா. பள்ளி/கல்லூரி நாட்களில் கீதையை விரும்பிப் படிப்பேன். 10ஆவது படிக்கும் போது தாயார் இறந்தார்; அப்போது ஒரு துளி கண்ணீரும் விடவில்லை. நான்கைந்து நாட்களுக்குப் பின்னர் பெரியம்மா 'டேய். மனசுலயே வச்சுக்காதேடா; அழுது தீர்த்திரு'ன்னு சொன்ன போதும் 'எதுக்கு அழணும் பெரியம்மா?'ன்னு கேட்டேன். கல்லூரிக் காலத்திலிருந்து பின்னர் பலமுறை அம்மாவிற்காக அழுதிருக்கிறேன்.

    ReplyDelete
  41. நன்றி ஷைலஜா அக்கா.

    ReplyDelete
  42. தந்தையார் இப்போது பரவாயில்லை இராகவன். எழுந்து அமரவும் நிற்கவும் பயிற்சி தந்து கொண்டிருக்கிறார்களாம்.

    //ஒரு கேள்வி. அப்படி ஒருவர் அரைகுறையாகத்தான் பேசுகிறார் என்று சொல்ல உங்களுக்கு எல்லாம் தெரியுமா குமரன்?//

    நல்ல கேள்வி இராகவன். இந்தப் பதிலை எழுதும் போது 'மிகுதிக் கண் மேற்சென்று இடிக்கும்' நண்பர்களில் யாராவது இப்படிக் கேட்கத் தான் போகிறார்கள் என்று நினைத்தேன். யாரும் கேட்காமல் கொஞ்சம் ஏமாற்றம் தந்தார்கள். நீங்கள் கேட்டுவிட்டீர்கள். இதே மாதிரியான கேள்வியை நான் உங்களிடம் 2006 ஜனவரியில் கேட்டது நினைவிற்கு வருகிறது. :-)

    அரைகுறையாக ஒருவர் படித்திருக்கிறார் என்பது அந்த விதயத்தில் அவரை விட கொஞ்சமே கொஞ்சம் அதிகமாக அறிந்திருப்பதால் தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால் நம்மைச் சுற்றி நடப்பதே நமக்கு முழுமையாகத் தெரியாமல் இருக்கும் போது எங்கேயோ எப்போதோ நடந்ததைப் பற்றி யாராலும் முழுமையாக அறிந்து மற்றவரை அரைகுறை என்று சொல்ல இயலாது - என்று அறிவு சொல்கிறது. ஆனால் 'பிடிப்பது, பிடிக்காதது' என்பதெல்லாம் அறிவை அடிப்படையாகக் கொண்டா நிகழ்கிறது? அறிவு என்ன தான் இடித்து உரைத்தாலும் சில நேரங்களில் அரைகுறையாக அறிந்து கொண்டு ஒருவர் பேசுகிறார் என்ற உணர்வும் அதனால் அது பிடிக்காமல் போவதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. :-)

    ReplyDelete