Wednesday, January 07, 2009

குறுந்தொகையின் சேவலங்கொடியோன்

இந்த உலகமும் உலக மக்களும் இன்பமயமான நாட்களை எப்படி அடைந்தன? அப்படி அடையப்பட்ட இன்பமயமான நாட்கள் எப்படி தொடர்கின்றன? ஏதோ ஒரு பெரிய மலையின் உருவில் எல்லாரையும் மயக்கும் ஒரு தீமை ஒன்று இந்த உலகத்தின் இன்ப நாட்களைக் கெடுத்து நின்றதாம். அதனை ஒரு வெஞ்சுடர் வேல் பிளந்து அழித்ததாம். அவ்வாறு அந்த பெரிய மலையின் உருவில் நின்ற தீமையை அவ்வேல் அழித்ததால் இந்த உலகமும் உலக மக்களும் இன்பமயமான நாட்களை அடைந்து தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்களாம். ஏதோ புராண கதையைக் கேட்டது போல் இருக்கிறதா? கந்த புராணத்தில் வரும் கதை தான். ஆனால் அது கந்த புராணத்தில் தான் முதன்முதலில் சொல்லப்படவில்லை. அதற்கும் முன்பே குறுந்தொகையின் கடவுள் வாழ்த்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற பழந்தமிழ் புலவரால் சொல்லப்பட்டது. ஆகையினால் கந்த புராணக் காலத்தில் இந்தக் கதை புகுத்தப்பட்டது என்று எண்ணவும் சொல்லவும் இனி செய்தல் வேண்டாம்.

தாமரை புரையும் காமர் சேவடிப்,
பவழத்து அன்ன மேனித், திகழ் ஒளிக்,
குன்றி ஏய்க்கும் உடுக்கைக், குன்றின்
நெஞ்சு பகவெறிந்த அம் சுடர் நெடுவேல்
சேவலங்கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே


தாமரை மலர் போன்ற அழகிய செம்மையான திருவடிகளையும், பவழத்தை ஒத்த சிவந்த நிறம் கொண்ட திருமேனியையும், எத்திசையிலும் விளங்கும் பேரொளியையும், குன்றிமணியை விட சிவந்த ஆடையையும், கிரவுஞ்ச மலையின் நெஞ்சு பிளக்கும் படி எறிந்த அழகும் ஒளியும் உடைய நீண்ட நெடிய வேற்படையும் கொண்ட சேவலைக் கொடியாகக் கொண்ட திருமுருகன் இந்த உலகத்தைக் காப்பதால் உலகத்தில் இருக்கும் உயிர்கள் எல்லாம் எந்தக் குறையும் இன்றி நாள்தோறும் வாழ்கின்றன.

தியான சுலோகம் என்று ஒன்றை வடமொழிப் பனுவல்களில் சொல்வார்கள். இறைவனின் திருமேனியை அடி முதல் முடி வரை வருணித்துத் தியானிக்கும் வகையில் அச்சுலோகங்கள் அமையும். இந்தப் பாடலும் ஒரு தியானசுலோகம் போல் அமைந்திருக்கிறது. திருவடிகளைச் சொல்லி, திருமேனியைச் சொல்லி, அத்திருமேனியின் பேரொளியைச் சொல்லி, அத்திருமேனியில் உடுத்தியிருக்கும் பேரொளிப் பட்டுத் துணியைச் சொல்லி, ஏந்தியிருக்கும் வேற்படையைச் சொல்லி, சேவற்கொடியைச் சொல்லி அவன் திருவுருவைக் கண் முன்னால் நிறுத்தி தியானிக்க வைக்கிறது இந்தப் பாடல்.

தாமரை என்ற மலரை மங்கலக் குறியாகக் கொள்வது வழக்கம். அதனைக் கொண்டு இந்நூலைத் தொடங்குவது போல் இப்பாட்டை அமைக்கிறார் பெருந்தேவனார். அழகிய சேவடி எல்லோரும் விரும்பும் சேவடியாகவும் இருப்பதால் காமர் சேவடி என்றார் போலும்.

இந்தப் பாட்டில் குன்றைத் தொளைத்த வேற்படையைப் பாடியிருப்பதைப் படிக்கும் போது பிற்காலத்தில் ஓசை முனி அருணகிரிநாதர் 'கிளை பட்டு எழு சூர் உரமும் கிரியும் தொளைபட்டு உருவத் தொடு வேலவனே' என்று கந்தரனுபூதியில் பாடியது நினைவிற்கு வருகிறது. 'கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு அவுணரைக் கடந்த சுடர் இலை நெடுவேல்' என்று சிலப்பதிகாரமும் கூறும். இதன் மூலம் குன்றின் நெஞ்சைக் குமரனின் நெடுவேல் பிளந்த செய்தி சங்க காலத்திலிருந்து தொடர்ந்து இருந்து வருகிறது என்று தெரிகின்றது.

சேவலங்கொடியோன் என்று சொல்லியதன் மூலம் குன்றினைத் தொளைத்த நெடுவேல் சூரன் மாமரமாய் கடல் நடுவில் நின்ற பின்னர் அம்மரத்தையும் பிளந்து ஒரு பகுதியைச் சேவற்கொடியாய்க் கொண்டனன் குமரன் என்று சொன்னார் ஆசிரியர்.

16 comments:

  1. மிக அருமை குமரன். தியான ஸ்லோகங்களுக்கும், இப்பாடலுக்கும் இருக்கும் தொடர்பு பற்றிக் கூறியது அழகு.

    சிலப்பதிகாரம் மற்றும் மற்ற பாடல்களை கூறியிருப்பது உங்களதுஆழ்ந்த வாசிப்பினை தெளிவாகக் காட்டுகிறது.

    ReplyDelete
  2. //கந்த புராணத்தில் தான் முதன்முதலில் சொல்லப்படவில்லை. அதற்கும் முன்பே கலித்தொகையின் கடவுள் வாழ்த்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற பழந்தமிழ் புலவரால் சொல்லப்பட்டது//

    அருமை! அதுவும் "பாரதம்" பாடிய பெருந்தேவனார் சொல்வதில் இன்னும் எத்தனை சிறப்பும் இன்பமும் இருக்கு!

    சிலம்பும் மலை பிளந்த மன்சிறப்பைப் பாடுவது சிறப்பு!

    //'கிளை பட்டு எழு சூர் உரமும் கிரியும் தொளைபட்டு உருவத் தொடு வேலவனே' என்று கந்தரனுபூதியில் பாடியது நினைவிற்கு வருகிறது//

    கந்தர் அலங்காரமும் அலங்காரம் செய்கிறது மலையெறிந்த மருகனை!

    தேரணி இட்டு புரம் எரித்தான் மகன் செம் கையில் வேல்
    கூர் அணி இட்டு அணுவாகி கிரௌஞ்சம் குலைந்து அரக்கர்
    நேரணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது சூர்
    பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.

    ReplyDelete
  3. எங்கள் திருப்புகழ் மட்டும் அனுபூதிக்கும், அலங்காரத்துக்கும் பின் தங்குமா என்ன? :)

    மலை மாவு சிந்த
    அலை வேலை அஞ்சல்
    வடிவேல் எறிந்த அதி தீரா!

    ReplyDelete
  4. //தியான ஸ்லோகங்களுக்கும், இப்பாடலுக்கும் இருக்கும் தொடர்பு பற்றிக் கூறியது அழகு//

    சுக்ல+அம்பர+தரம் போலவா? :)

    தியான சுலோகமோ, மோன சுலோகமோ, யானை சுலோகமோ - அதெல்லாம் யாருக்குத் தெரியும்? :))

    ஆனா இந்தப் பாடல் தியான சுலோகத்தைக் காட்டிலும் உயர்ந்தது! ஏன்னா இது தியானமும்+பலனும் சேர்த்துச் சொல்லும் செந்தமிழ்ச் செய்யுள்!

    சேவலங் கொடியோன் காப்ப
    ஏம வைகல் எய்தின்றால் உலகே
    -ன்னு உலக இன்பம் என்னும் பல-ஸ்ருதியும் சேர்த்தே சொல்கிறது! :)

    ReplyDelete
  5. அழகான பாடல்; அருமையான விளக்கம். நன்றி குமரா.

    ReplyDelete
  6. இரவி,

    பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றதால் அவர் வைணவர் என்று நீங்கள் நினைக்கவில்லை என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் அவர் கடவுள் வாழ்த்தாக மற்ற சங்க கால தொகை நூற்களுக்கும் (அகநானூறு, புறநானூறு போன்றவை) பாடல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் திருமாலை ஒரு பாடலிலும் முருகனை ஒரு பாடலிலும் பாடியவர் சிவபெருமானை மூன்று பாடல்களில் (அதாவது மூன்று தொகை நூற்களின் கடவுள் வாழ்த்துகளில்) பாடுகிறார். இவருடையை கடவுட்கொள்கையே இன்னும் வாழையடி வாழையாகப் பல நூற்றாண்டுகள் வருகின்றது என்று தோன்றுகிறது.

    கந்தரனுபூதி வரி சட்டென்று நினைவிற்கு வந்தது. அதனால் அதனை இட்டேன். நீங்கள் சொன்ன திருப்புகழ் வரிகளையும் அறிவேன். ஆனால் நினைவிற்கு வரவில்லை அப்போது. கந்தரலங்காரம் படித்ததே இல்லை. இராகவனும் நீங்களும் எழுதுவதைத் தான் படித்துக் கொண்டிருக்கிறேன். அப்பாடல்களை இட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  7. மிக்க நன்றி மௌலி. தியான சுலோகங்களுக்கும் இப்பாடலுக்கும் உள்ள ஒற்றுமை தெளிவாகத் தெரிவதால் அதனைச் சொன்னேன். சிலப்பதிகாரத்தில் இருக்கும் வரியைப் பற்றி சொன்னது இந்தப் பாடலின் உரையில் அந்த வரிகள் சொல்லியிருந்ததால். எனக்கு சிலப்பதிகாரம் கொஞ்சமே கொஞ்சம் தான் தெரியும். இப்போது தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  8. இரவி,

    உங்களுக்குப் பானை சுலோகம் மட்டும் நல்லா தெரியும்னு எனக்கும் தெரியும். அதுவும் பொய் சொல்ல வைக்கும் பானை சுலோகம். :-)

    தியான மோன யானை சுலோகங்கள் தெரியாமலா சுப்ரபாதத்திற்குப் பொருள் எழுதினீர்கள்? கதை விடுவதற்கும் ஒரு அளவு வேண்டும். அநியாயத்திற்கு ஸ்பின் மாஸ்டர் ஆகிவிட்டீர்களே? :-)

    ஆமாம் இந்தப் பாடலில் தியான சுலோகமும் பலஸ்ருதியும் இணைந்தே இருக்கின்றன.

    ReplyDelete
  9. பாடலை கொணர்ந்தமைக்கு நன்றிகள் குமரன்.
    என் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  10. நன்றி கவிநயா அக்கா. நேரம் கிடைத்ததில் அடுத்தடுத்து இடுகைகள் போட்டிருக்கிறேன். அவற்றையும் படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  11. மகிழ்ச்சி ஜீவா. அடுத்த இடுகையில் இருக்கும் பாடலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றி.

    ReplyDelete
  12. //பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றதால் அவர் வைணவர் என்று நீங்கள் நினைக்கவில்லை என்று எனக்குத் தெரியும்//

    இவர் அடையாளம் "பாரதம் பாடிய" என்று இருப்பினும்...இவர் இத்துணை கடவுள் வாழ்த்துகளைப் பேதமின்றிப் பாடுவதால் அப்படிச் சொன்னேன் குமரன்! அப்போ வலைப்பூ துவங்கி இருந்தால், பெருந்தேவனார், கண்ணன் பாட்டு, முருகனருள், சிவன் பாட்டு-ன்னு எல்லாவற்றிலும் இருந்திருப்பாரோ? :)

    //உங்களுக்குப் பானை சுலோகம் மட்டும் நல்லா தெரியும்னு எனக்கும் தெரியும். அதுவும் பொய் சொல்ல வைக்கும் பானை சுலோகம். :-) //

    ஹா ஹா ஹா
    கண்ணனைப் பானைக்குள் ஒளித்து வைச்சிட்டு, என்ன பொய்யைச் சொல்ல முடியும்? :)

    //தியான மோன யானை சுலோகங்கள் தெரியாமலா சுப்ரபாதத்திற்குப் பொருள் எழுதினீர்கள்?//

    அது உங்கள் பேருதவியுடன்!

    //ஆமாம் இந்தப் பாடலில் தியான சுலோகமும் பலஸ்ருதியும் இணைந்தே இருக்கின்றன//

    அதைச் சுட்டிக் காட்ட விரும்பித் தான் அவ்வாறு சொன்னேன் குமரன்!

    சிலர் வடமொழிச் சுலோகங்களோடு தொடர்பு படுத்திப் பார்க்கும் போது தான் சிலாகிக்கிறார்கள்! ரசிக்கிறார்கள்! அதில் தவறொன்றும் இல்லை!

    ஆனால் இதே சுலோகங்களை எடுத்தாளும் போது, அதைத் தமிழ்ச் சொற்களோடு தொடர்பு படுத்திப் பார்க்கும் போது...நையாண்டி எழுகிறது! இங்கு கூடவா இப்படி ஒப்புமை படுத்திப் பார்க்கணும்?-ன்னு நையாண்டிகள்!

    நியாயங்கள் தனக்கு வேறு, பிறர்க்கு வேறு அல்லவே! அதான் சுட்டிக் காட்டினேன்!

    செந்தமிழ்ப் பனுவலில் தியான சுலோகமும் பல ஸ்ருதியும் ஒன்றாய்ச் சேர்ந்து இருப்பது, தமிழ்ப் பனுவல்களுக்கே உள்ள பெருமை!

    தியான சுலோகம் + பல ஸ்ருதி என்று இணைந்திருக்கும் சுலோகங்கள் வடமொழியில் உள்ளனவா குமரன்?

    ReplyDelete
  13. //தியான சுலோகம் + பல ஸ்ருதி என்று இணைந்திருக்கும் சுலோகங்கள் வடமொழியில் உள்ளனவா குமரன்?//

    இந்த மாதிரி எல்லாம் கேட்டால் சட்டென்று பதில் சொல்லத் தெரியாது இரவிசங்கர். சில நேரங்களில் சட்டென்று நினைவிற்கு வருகின்றது; பெரும்பாலும் வருவதில்லை. இப்போது எதுவுமே நினைவில் இல்லை. :-( :)

    ReplyDelete
  14. //குமரன் (Kumaran) said...
    இந்த மாதிரி எல்லாம் கேட்டால் சட்டென்று பதில் சொல்லத் தெரியாது//

    ஹா ஹா ஹா
    இப்படிச் சட் சட்டெனக் கேட்பது கைவந்த கலை! எனக்கு அல்ல! இலக்குவனுக்கு! இலக்குவ முனிகள் இருவருக்கு! :))

    குமரனைத் தொடர்ந்து சட்-எனப் பிடித்தேன்!
    எங்கு எழுந்து அருளுவது இனியே?

    ReplyDelete
  15. குமரன்,

    அழகாய் சொல்லியிருக்கின்றீர்கள். மற்ற இலக்கியங்களையும் சுட்டுவது தங்களின் ஆழ்ந்தகன்ற படித்தலை காட்டுகிறது, அது எதுவுமின்றியே நானும் எதையெதையோ கிறுக்குவது எத்துனை அறியாமை!! (ஒரு சிறு விளக்கம், “கலித்தொகை” என்று குறிப்பிட்டு இருக்கின்றீகள், இது குறுந்தொகையின் கடவுள் வாழ்த்தல்லவா?)

    என் இடுகைகளை படித்தமைக்கு மிக்க நன்றி!
    வாழ்க தமிழ்...
    தமிழொடு நீவீர்...
    நின்னொடு ஞாலம்...
    ஞாலமொடு தமிழே...

    ReplyDelete
  16. வாங்க விஜய். ஆமாம். தலைப்பில் சரியாகச் சொல்லிவிட்டு இடுகையில் தவறு செய்திருக்கிறேன். சங்க கால நூல்களில் இன்னும் தேவையான அளவிற்கு பழக்கம் ஏற்படவில்லை என்பதைத் தான் இந்தக் குழப்பம் காட்டுகிறது! :-) இடுகையிலும் சரி செய்கிறேன்.

    தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

    ReplyDelete