Friday, December 12, 2008

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை! நீருக்குள் மூழ்கிடும் தாமரை!

நிறைய கவிஞர்கள் அவர்களது முத்திரையாக தமது பெயரையோ தமது காதலர் பெயரையோ தமக்குப் பிடித்த ஒன்றின் பெயரையோ பாடலின் கடைசி வரியிலோ கடைசி வரியின் முந்தைய வரியிலோ வைப்பார்கள். கவிஞர் தாமரை தன் பெயரை இந்தப்பாடலின் இரண்டாவது வரியிலேயே வைத்திருக்கிறார். :-)

ஒரு பெண் கவிஞர் ஆணின் காதல் உணர்வுகளை அருமையாகக் கூறும் இந்தப் பாடல் வரிகளை எழுதியிருப்பது மிக அருமை. காதலின் வேகத்தால் தன் நிலை தலைகீழாகப் போவதை இந்தப் பாடலில் காதலன் மிக மிக நன்றாகச் சொல்கிறான். ஒவ்வொரு வரியும் அருமை. அதிலும் எடுப்பும் (முதல் நான்கு வரிகள்) தொடுப்பும் (அடுத்த நான்கு வரிகள்) மிக மிக அருமை.



நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!
நீருக்குள் மூழ்கிடும் தாமரை!
சட்டென்று மாறுது வானிலை!
பெண்ணே உன் மேல் பிழை!!!

நில்லாமல் வீசிடும் பேரலை!
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை!
பொன்வண்ணம் சூடிய காரிகை!
பெண்ணே நீ காஞ்சனை!!!

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா!

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ?!
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ?!
என்னோடு வா வீடு வரைக்கும்!
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்!

இவள் யாரோ யாரோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
இது பொய்யோ மெய்யோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்!
ஏக்கங்களை தூவிச் சென்றாள்!
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு!
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே!
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே!
காதல் எனை கேட்கவில்லை!
கேட்டால் அது காதல் இல்லை!

என் ஜீவன் ஜீவன் நீதானே!
என தோன்றும் நேரம் இதுதானே!
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!
(நெஞ்சுக்குள்..)

படம்: வாரணம் ஆயிரம்
வெளிவந்த வருடம்: 2008
இயற்றியவர்: கவிஞர் தாமரை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், பிரசன்னா


காதலனாக நடிக்கும் சூர்யா மிக நன்றாக நடித்திருக்கிறார். பாடலின் வரிகளுக்குப் பொருள் புரியவில்லை என்றால் கேளுங்கள். சொல்கிறேன்.

13 comments:

  1. //என்னோடு வா வீடு வரைக்கும்!
    என் வீட்டை பார் என்னை பிடிக்கும்!//

    கதையையும் தெரிந்துகொண்டதனால் எழுதப்பட்ட வரிகள்.

    ReplyDelete
  2. ஆமாம். அப்படியும் சொல்லலாம் சின்ன அம்மிணி. :-)

    ReplyDelete
  3. புன்னகையோ போகமில்லா....

    ReplyDelete
  4. அகில் பூங்குன்றன்,

    திருத்தத்தைச் சொன்னதோடு அந்த வரியின் பொருளையும் சொல்லுங்கள். அப்போது தானே பொருந்துகின்றதா இல்லையா என்று தெரியும்.

    boganvilla என்று கூகிள் இமேஜஸில் தேடிப் பாருங்கள். அதே பூ இந்தப் பாடலில் 'கள்ளமில்லா புன்னகை' என்ற வரி வரும் போதும் போகன்வில்லா/போகமில்லா வரும் போது காட்டப்படுகிறதா என்று பாருங்கள். அதே போல் பொருள் பொருத்தத்தையும் பாருங்கள். எல்லாவற்றையும் பார்த்த பின்னரும் அது போகன்வில்லா இல்லை போகமில்லா என்று சொல்வீர்கள் என்றால் இடுகையிலும் மாற்றிவிடுகிறேன். :-)

    ReplyDelete
  5. இந்தப் படத்தையும் பாருங்கள் அகில் பூங்குன்றன்.

    http://jefferyschafer.com/Boganvilla.JPG

    ReplyDelete
  6. //என்னோடு வா வீடு வரைக்கும்!
    என் வீட்டை பார் என்னை பிடிக்கும்!//

    எத்தனை எளிமையான ஆனால் உணர்வுபூர்வமான வரிகள். இப்போதெல்லாம் கொஞ்சம் எதுகை-மோனைக்கும் importance கொடுக்க ஆரம்பித்துவிட்டார் தாமரை :)

    அது "போகன்வில்லா" தான்.... போகன்வில்லா என்றால் வாசனையற்ற காகிதப்பூ

    ஆனா கள்ளத்தனம் ஏதுமில்லை
    புன்னகையோ போகன்வில்லா எனும் போது அவள் புன்னகை போலி (அ) உயிரற்ற புன்னகை என்பது போல் ஆகிவிடாதா??

    ReplyDelete
  7. உண்மை பிரேம்குமார். மிக அழகான எளிமையான வரிகள். அதே நேரத்தில் ஆழமான வரிகள்.

    எதுகை மோனை அழகு தானே. எதுகை மோனைக்காக பொருளை விட்டால் தான் பிடிப்பதில்லை. பொருளுடன் எதுகையும் மோனையும் சேர்ந்தால் அழகோ அழகு தான்.

    போகன்வில்லாவின் அழகைத்தான் இங்கே புன்னகைக்கு உவமையாகக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். வாசனை இல்லை தான். அதன் பெயர் காகிதப்பூ தான். ஆனால் அது போலி இல்லை; செடியில் பூக்கும் உண்மை மலர் தான். அழகான மலர் தான். தேன் வந்து பாயுது காதினிலே என்றால் எறும்பு மொய்க்காதா என்று கேட்பது போல் தான் புன்னகை போகன்வில்லா என்றால் அது போலியா என்று கேட்பது. அழகு மட்டுமே உவமை. வாசனையின்மை இல்லை. :-) சரியா?

    இந்தப் பாட்டில் இப்படி ஆழ்ந்து போவதற்கு நிறைய இருக்கின்றன. :-)

    ReplyDelete
  8. இரண்டு காரணங்கள் நான் அந்த வரிகளை போகமில்லா என்று கருத.
    முதல் காரணம் பாட்டின் சூழ்நிலை. இதுவரை நாயகனை நாயகி காதலிக்க ஆரம்பிக்க வில்லை.நாயகன் நாயகியை பார்த்த உடனே காதல் கொண்டு ஆரம்பிக்கும் பாடல் இது. புன்னகை சிந்தும் இதழ்கள் இதுவரைக்கும் நாயகனுக்கு போகங்களை வழங்கவில்லை.... போகமில்லா புன்னகை மட்டும். புன்னகை சிந்தும் இதழ்கள்தானே வாலிபத்தின் போகங்களை வழங்கும் நுழைவாயில்.

    இரண்டாமவது காரணம் கவிஞர் தாமரை. இவர் பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளையோ பெயர்களையோ உபயோகிப்பதில்லை.

    போகன்வில்லா காகிதப்பூ என்றால் அதனை இந்தபாடலில் உபயோகித்திருக்கமாட்டார் என்றே நம்புகிறேன்.

    ReplyDelete
  9. காரணங்களைச் சொன்னதற்கு நன்றி அகில் பூங்குன்றன்.

    முதல் காரணம் சரியென்று தோன்றவில்லை. மற்ற வரிகளில் காதலன் காதலில் மூழ்கி எழுவதைச் சொல்லிவிட்டு புன்னகை மட்டும் போகத்தைத் தரவில்லை என்று சொல்வதாகத் தோன்றவில்லை.

    இரண்டாவது காரணத்தைப் பற்றி பேசும் அளவிற்கு எனக்கு கவிஞர் தாமரையின் பாடல்கள் தெரியாது. அப்படியே அவர் வேற்று மொழிச் சொற்களைப் பாடல்களில் பயன்படுத்துவதில்லை என்றாலும் இந்தப் பாடல் அப்படிப் பயன்படுத்துவதில் தொடக்கமாக இருக்கும் வாய்ப்பு உண்டு. :-)

    காகிதப்பூவை இந்தப் பாடலில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டிய தேவையும் புரியவில்லை.

    ReplyDelete
  10. போகன்வில்லா-is correct

    ReplyDelete
  11. I am thamarai, the lyricist...

    mr kumaran,

    hats off and tnx t u.. ungal vilakkam miga sariyaanadhu..Adhu 'bogainvilla ' engira poodhan.. adhan azagai thaan uvamaiyaaga payan paduthiyirukkiren.. vasanaiyinmaiyai illai..
    nanri..ungal aazndha rasanaikku..

    ReplyDelete
  12. Blogger Thamarai said...

    I am thamarai, the lyricist...

    mr kumaran,

    hats off and tnx t u.. ungal vilakkam miga sariyaanadhu..Adhu 'bogainvilla ' engira poodhan.. adhan azagai thaan uvamaiyaaga payan paduthiyirukkiren.. vasanaiyinmaiyai illai..
    nanri..ungal aazndha rasanaikku..

    October 07, 2009 9:05 AM

    ReplyDelete
  13. வாவ். மிக்க நன்றி கவிஞர் தாமரை. உங்களிடமிருந்தே இந்த வரியின் பொருள் உறுதியாக அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete