Wednesday, October 01, 2008

சங்க இலக்கியத்தில் அம்மன் வழிபாடு


சங்க இலக்கியத்தில் எங்கெல்லாம் அன்னையின் வழிபாடு பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை அண்மையில் ஒரு நண்பர் கேட்டார். அந்த வகையில் இதுவரையில் சங்க இலக்கியத்தைப் படிக்கவில்லையே என்றேன். அன்னை அசுரர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றதைக் கொண்டாடும் நவராத்திரிப் பண்டிகையின் போது அந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று அந்த நண்பர் கட்டளையிட்டார். அவர் சொன்ன பின்னர் தேடிப் பார்த்ததில் கிடைத்த சில குறிப்புகளைக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். மேலும் குறிப்புகள் கிடைக்கும் போது அவற்றையும் வருங்காலத்தில் எழுதுகிறேன். இந்தத் தேடுதலில் பல புதிய கருத்துகளை அறிந்து கொண்டேன். என்னை இச்செயலில் பணித்த நண்பருக்கு நன்றி.

சங்க இலக்கியத்தில் அன்னை என்றவுடனே நினைவிற்கு வரும் பெயர் 'கொற்றவை'. கொற்றம் என்றால் வெற்றி. அந்த வெற்றியை வேண்டியும் வெற்றி அடைந்த பின்னர் அதற்கு நன்றி கூறியும் வழிபடும் நிலைக்கு 'கொற்றவை நிலை' என்ற பெயரைத் தருகிறது சங்க நூற்களிலேயே பழமையானது என்று கருதப்படும் தொல்காப்பியம். பகைவர் மேல் போர் செய்யக் கிளம்பும் போது பகைவரின் செல்வமான மாடுகளை முதலில் கவர்ந்து வருவது பண்டைத் தமிழ் வழக்கம். போரின் அந்தப் பகுதியைக் கூறுவது வெட்சித் திணை. கொற்றவை நிலை என்ற துறை வெட்சித் திணையின் பகுதியாகச் சொல்லப்படுகிறது.

பண்டைத் தமிழ் இலக்கியங்கள் அகம், புறம் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது நம் எல்லோருக்கும் தெரியும். அகத்திணைகளாக நிலத்தின் வகைகள் அமைந்திருக்கின்றன - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. அந்த நிலங்களின் விளக்கங்களை நாம் அறிவோம்.

இவ்வைந்து நிலங்களில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நான்கு நிலங்களுக்குரிய தெய்வங்களை மட்டும் தொல்காப்பியம் குறித்துச் செல்கிறது. முல்லைக்கு மாயோன் ஆகிய திருமாலும் குறிஞ்சிக்கு சேயோனாகிய செவ்வேள் முருகனும் மருதத்திற்கு வேந்தனாகிய இந்திரனும் நெய்தலுக்கு வருணனும் தெய்வங்களாகக் கூறப்படுகின்றனர். பாலை நிலத்துக்குரிய தெய்வம் தொல்காப்பியத்தில் கூறப்படவில்லை. ஆனால் அடுத்து வந்த சில சங்க நூற்களில் பாலை நிலத்துக்குரிய தெய்வமாக கொற்றவை சொல்லப்படுகிறாள்.

அகத் திணைகளில் முதலாவதாகக் குறிக்கப்படும் குறிஞ்சித்திணைக்கு ஒத்த புறத்திணையாக வெட்சித் திணை கூறப்படுகிறது. வெட்சியில் கொற்றவை நிலை கூறப்படுவதால் குறிஞ்சிக்கு செவ்வேள் முருகனுடன் கொற்றவையும் தெய்வம் என்ற ஒரு கருத்து பழைய உரையாசிரியராகிய இளம்பூரணரால் சொல்லப்பட்டிருக்கிறது.

மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி; காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை - இவ்விரண்டும் வெம்மையால் தம் நிலை மாறித் திரிந்து நிற்பது பாலை - இப்படி ஒரு விளக்கமும் பழந்தமிழ் நூற்களில் காணப்படுகிறது. வருடத்தில் ஆறு மாதங்கள் இந்நிலங்கள் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் உரிய இலக்கணத்துடன் இருந்து அடுத்த ஆறு மாதங்கள் வெயில் சுடும் போது பாலையாக மாறினாலும் அந்நிலங்களில் வாழ்ந்த மக்கள் ஆறு மாதங்கள் முருகனையும் மாலவனையும் வணங்கிவிட்டு மற்ற ஆறு மாதங்களில் கொற்றவையை வணங்கினார்கள் என்று கூறுவது சரியாகாது. அதனால் எப்போதுமே இந்நிலங்களில் கொற்றவையும் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதற்கு ஏற்ப முருகன் 'பழையோள் குழவி' என்று போற்றப்படுகிறான். மாலவன் 'மாயோன்' எனப்பட்டதைப் போல் கொற்றவையும் 'மாயோள்' எனப்படுகிறாள்.

'பழையோள்' என்ற பெயரைப் பார்க்கும் போது இவளே தெய்வங்களுள் மூத்தவளாக இருந்தாள் என்ற எண்ணமும் தோன்றுகிறது. கொற்றவை என்ற பெயரிலும் அந்தக் குறிப்பு இருக்கிறது. கொற்றம் + அவ்வை = கொற்றவை. கொற்றத்தைத் தரும் மூத்தவள் என்ற பொருள் கொற்றவைக்கு இருப்பதையும் காணலாம்.

மால் நிறம் என்பது கருநிறத்தைக் குறிக்கும். கரிய மலையை 'மால் வரை' என்று அழைக்கும் மரபை சங்க இலக்கியத்தில் பல இடங்களில் காணலாம். அந்த மால் நிறத்தைக் கொண்டவன் 'மாஅல்' என்றும் 'மாயோன்' என்றும் அழைக்கப்பட்டான். அதே போல் மால் நிறத்தைக் கொண்டவள் 'மாயோள்' என்று அழைக்கப்பட்டாள்.

இவள் முல்லை நிலத்து தெய்வமாக இருந்தாள் என்பதை இவள் 'காடு கிழாள்', 'காடமர் செல்வி' என்றும் அழைப்படுவதிலிருந்து அறியலாம்.

இவள் இந்நிலங்களில் வாழ்ந்த பல இனக்குழுவினருக்குத் தலைமைத் தெய்வமாக இருந்தாள் என்பது 'ஐயை' என்ற பெயரின் மூலம் தெரிகிறது.

மலையும் காடும் மிகுதியாக இருந்த சேர நாட்டினர் இத்தெய்வத்தை மிகுதியாக வணங்கினர் என்ற குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. சேர நாட்டில் இருக்கும் அயிரை மலை என்றொரு மலை குறிக்கப்பட்டு அந்த அயிரை மலையில் வாழும் கொற்றவையைப் போற்றும் பாடல்கள் இருக்கின்றன. அந்த அயிரை மலைக் காவலனாக சேரர்கள் குறிக்கப்படுகின்றனர்.

இந்தக் கட்டுரையை ஒரு அறிமுகமாகவே எழுத எண்ணியதால் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த கட்டுரையில் எந்தத் தரவுகளையும் எடுத்துத் தரவில்லை. தரவுகள் வேண்டுமென்றால் கேளுங்கள்; தருகிறேன். இவற்றை விரித்து மேலும் எழுதும் போது அந்தத் தரவுகளையும் எடுத்துக் காட்டி எழுதுகிறேன்.

24 comments:

  1. இப்படி ஒரு இடுகையை நவராத்திரி ஸ்பெஷலாக தந்ததுக்கு உங்களுக்கு முதல் நன்றிங்க குமரன்.

    பரவாயில்லை உங்க நண்பர் சரியான கோரிக்கையை சரியான இடத்தில் கேட்டிருக்காரு. :)

    ReplyDelete
  2. //மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி; காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை - இவ்விரண்டும் வெம்மையால் தம் நிலை மாறித் திரிந்து நிற்பது பாலை - இப்படி ஒரு விளக்கமும் பழந்தமிழ் நூற்களில் காணப்படுகிறது.//

    ஆமாம், இந்த இரண்டுமே பாலையாகக் கூடிய சாத்தியம் இருக்கில்லையா?

    //அதனால் எப்போதுமே இந்நிலங்களில் கொற்றவையும் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதற்கு ஏற்ப முருகன் 'பழையோள் குழவி' என்று போற்றப்படுகிறான். மாலவன் 'மாயோன்' எனப்பட்டதைப் போல் கொற்றவையும் 'மாயோள்' எனப்படுகிறாள். //

    :-)

    //'பழையோள்' என்ற பெயரைப் பார்க்கும் போது இவளே தெய்வங்களுள் மூத்தவளாக இருந்தாள் என்ற எண்ணமும் தோன்றுகிறது. கொற்றவை என்ற பெயரிலும் அந்தக் குறிப்பு இருக்கிறது. கொற்றம் + அவ்வை = கொற்றவை. கொற்றத்தைத் தரும் மூத்தவள் என்ற பொருள் கொற்றவைக்கு இருப்பதையும் காணலாம். //

    நல்லாயிருக்கே இந்த விளக்கம். :)
    மூத்த தெய்வம், அப்படிங்கறதை தேவி பாகவதமும் சொல்லுது. வெள்ளி முதல் 3 நாட்கள் மதுரையம்பதில அதான் வரப்போகுது. :-)

    ReplyDelete
  3. //அடிப்படையில் எழுதப்பட்ட இந்த கட்டுரையில் எந்தத் தரவுகளையும் எடுத்துத் தரவில்லை. தரவுகள் வேண்டுமென்றால் கேளுங்கள்; தருகிறேன். இவற்றை விரித்து மேலும் எழுதும் போது அந்தத் தரவுகளையும் எடுத்துக் காட்டி எழுதுகிறேன்//

    நேரம் கிடைக்கையில் தவறாமல் விரித்து எழுதுங்க குமரன்.

    ReplyDelete
  4. //இவள் முல்லை நிலத்து தெய்வமாக இருந்தாள் என்பதை இவள் 'காடு கிழாள்', 'காடமர் செல்வி' என்றும் அழைப்படுவதிலிருந்து அறியலாம்//

    செல்வின்னு இப்போ சொல்ற அதே பொருள்தான் சங்க காலத்திலும் இருந்திருக்குமா குமரன்?

    சுனாமி வந்ததால்தான் தற்போதைய குமரி கரையாச்சு அப்படின்னு படிச்ச நினைவு. அதற்கு முன் இன்றைய குமரியையே "காடமர் செல்வி" என்று கூறியிருக்க வாய்ப்பிருக்கிறதா?..

    காடமர் செல்வி = கடம்பவனச் செல்வியை கூட குறிக்கலாம்?

    ReplyDelete
  5. சரியான நேரத்திலயும் கேட்டீங்கன்னு சொல்லுங்க மௌலி. தேடி எடுத்த தரவுகளை எல்லாம் வைத்து இனி மேல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன். நீங்கள் கேட்ட அளவிற்கு இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது முழுமையாக இருக்கிறதா கட்டுரை?

    ReplyDelete
  6. மருதத்திற்கும் அந்த வாய்ப்பு உண்டு மௌலி. ஆனால் குறிஞ்சியும் முல்லையும் திரிவதே பாலை என்று இலக்கியம் சொல்கிறது. மருதத்தைப் பற்றி அப்படி சொல்லவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

    செல்வன் செல்வி இரண்டும் மகன்/மகள் என்ற பொருளிலும் செல்வத்தையுடையவர் என்ற பொருளிலும் வழங்கியிருக்கிறது. என்றுமுள தென் தமிழின் அழகு அது தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய சொற்கள் பற்பல இன்றைக்கும் பொருள் மாறாமல் அப்படியே இருக்கின்றன.

    சுனாமி என்ற ஆழிப்பேரலையால் குமரிக்கண்டம் அழிந்தது என்ற மரபு உண்டு. இலக்கிய மரபு மட்டுமே தான் இதுவரை கிடைத்திருக்கிறது. அகழ்வாராய்ச்சி இன்னும் செய்து மேலும் தரவுகளைப் பெற வேண்டும்.

    குமரி மாவட்டம் காடாக இருந்திருக்கவும் அங்கிருந்த தெய்வம் காடமர் செல்வியாக இருந்திருக்கவும் வாய்ப்புண்டு. அதே போல் மதுரையும் காடாக இருந்திருக்கவும் அங்கிருந்த தெய்வமான கடம்பவனச் செல்வி காடமர் செல்வியாக இருந்திருக்கவும் வாய்ப்புண்டு.

    ReplyDelete
  7. வாங்க திரு. ருத்ரன் ஐயா. தங்கள் வருகை தந்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்கள் பாராட்டிற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  8. //நீங்கள் கேட்ட அளவிற்கு இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது முழுமையாக இருக்கிறதா கட்டுரை?//

    எனக்கு இந்த இடுகை முழுமையாத்தான் தெரியுதுங்க குமரன்.

    கொஞ்ச நாட்கள் முன் ஏதோ ஒரு பதிவுல அம்மன் வழிபாடு பின்னாடி வந்தது, அப்படிங்கற மாதிரி பெரிய சர்ச்சை ஓடிய நினைவு.

    //மருதத்திற்கும் அந்த வாய்ப்பு உண்டு மௌலி. ஆனால் குறிஞ்சியும் முல்லையும் திரிவதே பாலை என்று இலக்கியம் சொல்கிறது.//

    நானும் மருதத்தை ஏன் சொல்லலைன்னு நானும் நினைத்தேன். ::)

    ReplyDelete
  9. //செல்வன் செல்வி இரண்டும் மகன்/மகள் என்ற பொருளிலும் செல்வத்தையுடையவர் என்ற பொருளிலும் வழங்கியிருக்கிறது.//

    மணமாகாதவரைச் செல்வி அப்படின்னு சொல்வது?...குமரி அப்படின்னு சொல்வது பழங்கால மரபா?, இல்லை செல்வியும் இருந்திருக்கா?

    இப்போ கன்யாகுமரி என்று சொல்வதை தொடர்பு படித்திக் கேட்கிறேன்

    ReplyDelete
  10. என்னடா மௌலிகிட்ட இருந்து இவ்ளோ பின்னூட்டம்னு பார்த்தேன் :) கேள்வி கேட்டது அவர்தானா. விவரங்களுக்கு நன்றி குமரா.

    அவளே அனைத்தும்! :)
    முதலும் நடுவும் முடிவும்
    இதுவும் அதுவும் எதுவும்
    அவளேதான்!

    ReplyDelete
  11. //'பழையோள்' என்ற பெயரைப் பார்க்கும் போது இவளே தெய்வங்களுள் மூத்தவளாக இருந்தாள் என்ற எண்ணமும் தோன்றுகிறது. கொற்றவை என்ற பெயரிலும் அந்தக் குறிப்பு இருக்கிறது. கொற்றம் + அவ்வை = கொற்றவை. கொற்றத்தைத் தரும் மூத்தவள் என்ற பொருள் கொற்றவைக்கு இருப்பதையும் காணலாம். //

    படிச்சிருக்கேன் குமரன், நானும் ஒரு தேடலிலேயே சில வருடங்கள் முன்பு இந்தப் பெயரைக் கண்டேன். இப்போ மிகச் சமீபத்தில் தான் இவளே ஜேஷ்டா தேவி என அழைக்கப்பட்டாள் என்றும் ஒரு கருத்து நிலவுவதையும் தெரிந்து கொண்டேன், அது எந்த அளவுக்கு சரி என்று தெரியாது. ஆனால் வர்ணனை பொருந்தி வருகின்றது. மேலும் இந்த காடு கிழாள், காடமர் செல்வி என்ற பெயர்களும் பழைய குமரிக்கண்டத்திலே புழங்கி இருக்கணும் என்ற எண்ணம் எனக்கும் இருக்கு. அதைப் பற்றியும் தெளிவாக்குங்கள். அருமையான தகவல்கள், நன்றி.

    ReplyDelete
  12. மிக அருமையான ஒரு தொடர் கட்டுரைக்கான முதல் அத்தியாயம். மூழ்கி முத்தெடுத்துக் கொடுங்கள். தமிழன்னை தன் ஆரத்தில் பதித்துக் கொள்வாள்.

    ஏற்கெனவே SPADE WORKS எல்லாம் முடிந்திருந்தால் இந்த நவராத்திரியிலேயே தொடர்ந்து எழுதலாமே. பொருத்தமாக இருக்கும்.

    ReplyDelete
  13. எந்தப் பதிவில் அப்படி சொன்னார்கள் மௌலி? மாந்தவியலாளர்களின் கூற்றுப்படி தாய்வழி சமுதாயமே உலகில் எல்லா இனங்களிலும் தொடக்கத்தில் இருந்தது. அந்த சமுதாயங்களில் தாய்த் தெய்வமே வணங்கப்பட்டிருப்பாள். அதில் எந்தவித ஐயமும் இல்லை. அதனால் 'கிடைத்த' தமிழ் இலக்கியத் தரவுகளின் படி கொற்றவை தமிழர்களால் மாயோனும் சேயோனும் சிவனும் வணங்கப்பட்ட அதே காலத்தில் தான் வணங்கப்பட்டாள் என்றே சொல்லமுடியும். 'பழையோள்' என்ற பெயர் மட்டுமே கிடைத்திருக்கிறது. அந்த வகையில் இதுவரை கிடைக்காத தரவுகள் இருந்திருக்கலாம் என்று ஊகித்துக் கொண்டு அவளே தொடக்கத்தில் வணங்கப்பட்டவள் என்று சொல்லலாம். அப்படி சொல்வதும் சரியே - ஆனால் அது தரவுகள் இருந்திருக்கலாம் என்று ஊகித்துச் சொல்வது. முருகனுக்கும் மாலவனுக்கும் அப்படி சொல்ல இயலும். :-)

    இங்கே சொல்ல வருவது கொற்றவை வழிபாடு காலத்தால் மாயோன், சேயோன், சிவன் வழிபாட்டிற்குப் பிந்தியது என்று சொல்லக்கூடாது - சமகாலத்தவை என்பதற்குத் தரவுகள் இருக்கின்றன. ஆனால் அவள் வழிபாடே காலத்தால் மூத்தது என்று சொல்ல வேண்டிய அளவிற்குத் தகவல்கள் இல்லை. :-)

    ReplyDelete
  14. திருமணம் ஆகாத பெண்ணை 'செல்வி' என்றும் 'குமரி' என்றும் 'குமாரி' என்றும் அழைப்பது அண்மைக்கால மரபு என்றே நினைக்கிறேன் மௌலி. குமாரி என்ற வடசொல்லுக்கு மகள் என்ற பொருள் மட்டுமே இருக்கின்றது என்று நினைக்கிறேன். அதே போல் தான் குமரி என்ற சொல்லுக்கும். செல்வி என்பது செல்வத்தையுடையவள்; செல்லத்திற்கு உரியவள் என்ற பொருட்களைத் தரும்.

    திரு என்று ஆண்களைக் குறிக்கத் தொடங்கி திருமதி என்று பெண்களைக் குறிக்கத் தொடங்கி அவை திருமணமானவர்களை மட்டுமே குறிக்கவேண்டும்; திருமணமாகாத பெண்ணைக் குறிக்க வேறு சொல் வேண்டும் என்று பார்த்த போது கிடைத்தது இந்த செல்வி என்ற சொல் புழங்கத் தொடங்கினார்கள் என்று நினைக்கிறேன். வடமொழியிலும் அப்படியே.

    நான் தேடிப் பார்த்தவரையில் செல்வி என்ற சொல்லும் குமரி என்ற சொல்லும் தமிழிலக்கியங்களில் 'திருமணமாகாத பெண்' என்ற பொருளில் புழங்கப்படவில்லை.

    ReplyDelete
  15. அவர் கேட்டிருக்காவிட்டாலும் இவ்வளவு பின்னூட்டங்கள் போடுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கு கவிக்கா. இது அன்னையின் வழிபாடு பற்றி பேசும் ஒரு கட்டுரை. அதோடு மட்டுமின்றி அவருடைய சேர்க்கையும் இப்போது அப்படி இருக்கிறது. அந்த நண்பரிடமிருந்து தொற்றிக் கொண்டது இப்படித் தொடர்பின்னூட்டங்கள் இடும் கலை. :-)

    ReplyDelete
  16. நன்றி இரத்னேஷ். இயலும் போதெல்லாம் எழுதுகிறேன்.

    ReplyDelete
  17. //இங்கே சொல்ல வருவது கொற்றவை வழிபாடு காலத்தால் மாயோன், சேயோன், சிவன் வழிபாட்டிற்குப் பிந்தியது என்று சொல்லக்கூடாது - சமகாலத்தவை என்பதற்குத் தரவுகள் இருக்கின்றன.//

    ஆஹா!

    //ஆனால் அவள் வழிபாடே காலத்தால் மூத்தது என்று சொல்ல வேண்டிய அளவிற்குத் தகவல்கள் இல்லை. :-)//

    ஹிஹிஹி :-)

    ReplyDelete
  18. //அவர் கேட்டிருக்காவிட்டாலும் இவ்வளவு பின்னூட்டங்கள் போடுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கு கவிக்கா. இது அன்னையின் வழிபாடு பற்றி பேசும் ஒரு கட்டுரை. //

    இது சரி.

    //அதோடு மட்டுமின்றி அவருடைய சேர்க்கையும் இப்போது அப்படி இருக்கிறது. அந்த நண்பரிடமிருந்து தொற்றிக் கொண்டது இப்படித் தொடர்பின்னூட்டங்கள் இடும் கலை//

    ஆஹா, இது யாருங்க...எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க குமரன்?. :)

    ReplyDelete
  19. //நான் தேடிப் பார்த்தவரையில் செல்வி என்ற சொல்லும் குமரி என்ற சொல்லும் தமிழிலக்கியங்களில் 'திருமணமாகாத பெண்' என்ற பொருளில் புழங்கப்படவில்லை.//

    புரியுதுங்க...

    ReplyDelete
  20. कुमारी ,कुमारिका = இரண்டுக்கும் அர்த்தம் சந்ஸ்க்ருத அகராதியில் திருமணம் ஆகாத 12 வயதிற்குட்பட்ட கன்னிப்பெண், பார்வதி, மகள் என்ற அர்த்தம் இருக்கின்றது. இங்கே எது வரும்னு நீங்களும், மெளலியும் பேசி முடிவு பண்ணிக்குங்க! நான் வரேன், அப்புறமா, ஏதாவது ஊத முடிஞ்சா ஊதிட்டுப் போகலாமே! :))))))))))))

    ReplyDelete
  21. நவராத்திரி நாயகி பற்றிய சுவைத்தமிழ்ப் பதிவு!

    குமரன்,
    கொற்றவையைக் கள்ளர்களின் தெய்வமாகவும், வறண்ட பாலைக்குத் தெய்வமாகவும் ஏன் பண்டைத் தமிழர்கள் குறித்தார்கள், அந்தக் குறியீடின் பின்னணி என்ன என்று சொல்லுங்களேன்!

    மாயோன்-மாயோள் என்பது வெறும் நிறத்தின் பாற்பட்ட பெயர் மட்டுமேவா? இல்லை இந்த இரு தெய்வங்களுக்கும் உறவுமுறை பற்றி சங்க இலக்கியம் ஏதேனும் பேசுகிறதா?

    முருகனுக்கு குறிஞ்சி, மாயோனுக்கு முல்லை என்பது போல் கொற்றவை அன்னைக்கு உரிய உரிப்பொருட்கள் என்னென்ன?

    ReplyDelete
  22. இரவி,

    நீங்கள் கேட்ட கேள்விகள் எதற்குமே எனக்கு விடைகள் தெரியாது. நேரம் கிடைக்கும் போது தேடிப் பார்க்கிறேன். ஏதேனும் தரவுகள் கிடைத்தால் சொல்கிறேன்.

    ReplyDelete