Thursday, June 19, 2008
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
கொத்தலர் குழலியோடு - கொத்தாக மணம் மிகுந்த மலர்களை கூந்தலில் அணிந்திருக்கும் உமையன்னையோடு
விசயற்கு நல்கு - விசயனான அருச்சுனனுக்கு அருள் செய்வதற்காக
குணமாய வேட விகிர்தன் - இறைவனின் குணங்களைப் பறைசாற்றும் உருவினை விடுத்து மாய உருவில் வேடனாகத் தோன்றும் திருவிளையாடல்கள் செய்பவன்
மத்தமும் - கங்கை என்னும் நீரையும்
மதியும் - பிறை நிலவினையும்
நாகம் - பாம்பினையும்
முடிமேலணிந்து - தன் திருமுடிமேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளம் புகுந்து நிலை நின்றதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே - பௌத்தரையும் சமணர்களையும் வாதப்போரில் செருக்கழிக்கும் அண்ணலின் திருநீற்றின் பெருமையில் எனக்கு ஆழ்ந்த திடமான நம்பிக்கை உண்டு
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அத்தகு எதிர்ப்புகளும் சிவனடியார்களுக்கு நல்லவையாக மாறும் அவை மிக நல்லவையாக மாறும்
இந்த இடுகை 'கோளறு பதிகம்' பதிவில் 17 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete36 comments:
Ram.K said...
//குணமாய வேட விகிர்தன் //
அருமையான விமரிசனப் பெயர்.
//அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல //
இருமுறை 'நல்ல' என்ற சோற் பிரயோகம் ஏன் என்று விளக்க முடியுமா ? அறிய ஆவலாக உள்ளேன். தங்களின் மொழிபெயர்ப்பு எனக்குச் சற்று இடறுகிறது.
June 17, 2006 11:24 AM
--
வாய்சொல்வீரன் said...
arumai
June 17, 2006 6:09 PM
--
manu said...
குமரன் பதிகம் போடுவதற்கும் அதற்குப் பொருள் கொடுப்பதற்கும் மிக மிக நன்றி. அர்த்தத்தோடு படிப்பதால் அருமை மிகுகிறது.
June 17, 2006 6:59 PM
--
செல்வன் said...
மகாபாரதத்தில் வரும் கதைதானே இது?இந்த சம்பவம் நிகழ்ந்தபின் சிவனாருக்கும் அர்ஜுனனுக்கும் சண்டை வரும்.அர்ஜுனன் தேவலோகம் செல்வான்.
ஓம் நமசிவாய
June 17, 2006 7:40 PM
--
குமரன் (Kumaran) said...
பச்சோந்தி (இராமபிரசாத்) அண்ணா, மொழிபெயர்ப்பா? ஓ, பழந்தமிழிலிருந்து உரைநடைத் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்கிறேன் என்று சொல்கிறீர்களா? :-) எங்கே புரியவில்லை என்று சொல்லுங்கள். முடிந்தவரை விளக்குகிறேன். என்னால் முடியாவிட்டால் மற்றவர் முயலுவர்.
நல்ல நல்ல என்று இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் பலமுறை சொல்லியிருக்கிறார் சம்பந்தர். வலியுறுத்தத் தான் மீண்டும் மீண்டும் சொல்லியிருப்பதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு ஏதாவது சிறப்புப் பொருள் தோன்றுகிறதா?
June 17, 2006 8:18 PM
--
குமரன் (Kumaran) said...
நன்றி வாய்சொல்வீரன்
June 17, 2006 8:18 PM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் மனு. சுகர் என்றால் சர்க்கரை என்று பொருள் தெரிந்து உண்டாலும் பொருள் தெரியாமல் உண்டாலும் சர்க்கரை இனிக்கத் தான் போகிறது. இறைப்பாடல்கள் மருத்துவர் தரும் மருந்துக் கலவை போல் தான் தரும் பலனைத் தரத்தான் போகிறது; மருத்துக் கலவையில் என்ன என்ன சேர்ந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டா குடிக்கிறோம்; அது போல் இறைப்பாடல்களை பொருள் தெரியாமல் சொன்னாலும் பலன் உண்டு. ஆனால் சர்க்கரை என்று சொல்லும் போதே சர்க்கரையின் இனிப்புச் சுவை நாக்கில் ஊறுவது போல் சுகர் என்றால் சர்க்கரை என்று பொருள் தெரிந்தால் சுகர் என்று சொல்லும் போதும் அந்த இனிப்புச் சுவை நாக்கில் தெரியுமல்லவா? அந்த அனுபவத்திற்காகத்தான் பொருளறிதல். இங்கே சுகர் என்றது ஆங்கிலச் சொல்லை; சுகமுனிவரை அல்ல. (உங்களுக்குத் தெரியும் என்று தெரியும்.) :-)
June 17, 2006 8:23 PM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் செல்வன். மகாபாரதத்தில் வரும் கதை தான். வேறு எந்த இலக்கியத்தில் அருச்சுனன் வருகிறான் சொல்லுங்கள்? :-) பார்த்தன் பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக தவம் செய்யும் போது அவனுக்கு அருள் செய்ய இறைவனும் இறைவியும் வேடுவர்கள் போல் வந்து குந்தியின் மகனுடன் விளையாட்டாய் போர் புரிந்து தருமனின் தம்பி இறைவனை வில்லால் அடிப்பானே. அந்தக் கதை தான் இங்கே சொல்கிறார் சம்பந்தர். பாசுபதாஸ்திரம் பெற்றபின் இந்திரன் அருச்சுனனை தேவலோகம் அழைத்துச் சென்று இளவரசுப் பட்டம் கட்டுவான். ஆமாம். நீங்கள் சொல்வது சரி தான்.
June 17, 2006 8:26 PM
--
rnateshan. said...
அருமையானப் பாடல்!!அர்த்தமும் அருமை!!
June 17, 2006 11:03 PM
--
சிவமுருகன் said...
அருமையான விளக்கம்
June 18, 2006 1:29 AM
--
குமரன் (Kumaran) said...
படித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி நடேசன் ஐயா & சிவமுருகன்.
June 18, 2006 5:07 AM
--
G.Ragavan said...
முறையான விளக்கம் குமரன்.
மத்தமும் மதியம் என்று படித்தவுடன் என் எண்ணம் மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மற்பொரு திரள் புய மதயானை என்று ஓடியது. :-)
June 19, 2006 10:29 AM
--
SK said...
தமிழில் ஒரு பொருளை மேலும் அதிகப்படுத்திச் சொல்வதற்கு அதனையே இருமுறை பயில்வர்.
[உ-ம்] லட்டு எனக்கு 'மிகமிகப்' பிடிக்கும்.
'பலப்பல' வேடம் தரித்து வருவான்.
வேகவேகமாக ஓடினான்.
இரைக்க இரைக்க நடந்து வந்தான்.
ஓடி ஓடிக் களைத்தான்.
பேசிப் பேசி அறுத்தான்.
எழுதி எழுதித் தள்ளினான்.
இது போல இன்னும் பல.
அது போலத்தான் இங்கு 'நல்ல நல்ல' பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
குமரன் கூட, அவரது பதிலில், தெரிந்தோ தெரியாமலோ, 'மீண்டும் மீண்டும்' எனச் சொல்லியிருக்கிறார்!
இறுதியாக ஒரு நல்ல திரைப்பாடல்: "நல்ல நல்ல' பிள்ளைகளை நம்பி....!!
குமரன், செல்வனும், நீங்களும் சொன்ன விளக்கத்துக்குப் பின்னர்,
'விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்' என்பதற்கு,
அருச்சுனனுக்கு அருள வேண்டும் என்ற குணத்தினை வேண்டி, மாய உருவில் வேடனாக வந்த வித்தகன்' என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
அதிகமெனில், மன்னிக்கவும்.
June 19, 2006 11:21 AM
--
செல்வன் said...
எஸ்.கே
தமிழ் இலக்கணம் எனக்கு சுத்தம்:-)பொருள் சரியா என குமரன் தான் சொல்லணும்
கொத்தலர் குழலி என்ற வார்த்தை திருப்பாவையிலும் வருகிறது
(கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்து கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்)
June 19, 2006 1:19 PM
--
Ram.K said...
எனக்கு ஏதும் தெரியவில்லை. எனவே தான் இந்த வினா?
நான் தங்களை அழைத்திருக்கிறேன்.
http://tamiltheni.blogspot.com/2006/06/blog-post_20.html
பார்க்கவும்.
June 19, 2006 1:24 PM
--
குமரன் (Kumaran) said...
நன்றி இராகவன். ஆமாம் இராகவன். மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மற்பொரு திரள் புய மதயானைக்கு நீங்கள் எப்போது விளக்கம் சொல்லப் போகிறீர்கள்? ஜெயச்ரி ஊருக்குப் போய்விட்டார்கள். எஸ்.கே.யும் திருப்புகழுக்குப் பொருள் சொல்வதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. யாராவது திருப்புகழையும் தொடங்கினால் என்ன?
June 19, 2006 2:30 PM
--
குமரன் (Kumaran) said...
அருமையான தெளிவான எடுத்துகாட்டுகளைச் சொன்னதற்கு நன்றி எஸ்.கே.
விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தனுக்கு நீங்கள் சொன்ன விளக்கம் அருமை. உங்கள் விளக்கத்தைப் படித்த பிறகு இன்னொரு சிறு மாற்றம் தோன்றியது. அருச்சுனனுக்கு அருளும் குணமென்ற (குணம் ஆய) வேட விகிர்தன் என்ற பொருள் இன்னும் இயற்கையாகப் பொருந்துகிறது. மாய வேடம் என்றே சொல்லத்தேவையில்லை. நல்கு குணம் ஆய வேட விகிர்தன் என்றால் மிக அருமையாகப் பொருந்துகிறது. இந்த வகையில் சிந்திக்கத் தூண்டியதற்கு மிக்க நன்றி.
June 19, 2006 2:33 PM
--
குமரன் (Kumaran) said...
செல்வன். இந்த cross reference செய்வது எனக்கு வருவதே இல்லை. இராகவன், எஸ்.கே. நீங்கள் எடுத்துக் கொடுக்கும் எடுத்துகாட்டுகள் எல்லாம் எனக்குத் தோன்றுவதில்லையே ஏன்? இன்னும் ஆழங்கால் படுவதில்லையோ பாடல்களில்? :-(
திருப்பாவையிலிருந்து தகுந்த எடுத்துக் காட்டு தந்திருக்கிறீர்கள். நன்றி.
June 19, 2006 2:34 PM
--
குமரன் (Kumaran) said...
நீங்களும் ஆறு விளையாட்டிற்கு அழைத்திருக்கிறீர்களா இராமபிரசாத் அண்ணா? ஏற்கனவே வெங்கடரமணி அழைத்திருக்கிறார். நாலு விளையாட்டின் போது என்னை நாலு பேர் அழைத்த பின் தான் நான் நாலு பதிவு போடுவேன் என்று சொல்லியிருந்தேன். இப்போது ஆறு பேர் அழைக்கும் வரை காத்திருக்கவேண்டுமோ? :-) சும்மா சொல்றேன். எஸ்.கே. இறுமாப்பு என்று என்னை அடிக்க வந்துவிடாதீர்கள். :-) கூடிய விரைவில் ஆறு பதிவையும் போடுகிறேன். இருவர் அழைத்ததே அதிகம். :-)
June 19, 2006 2:37 PM
--
செல்வன் said...
குமரன்,
கொத்தாக பூமலரை அணிந்த அன்னை உமை என்று சொன்னால் "பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இல்லை" என வாதிட்ட நக்கீரன் நினைவு தான் வருகிறது.அன்னை உமைக்கும் மலரை அணிவதால் மட்டுமே கூந்தலில் வாசம் வருகிறது என்றல்லவா கீரர் வாதிட்டார்?
June 19, 2006 2:53 PM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் செல்வன். அப்படித் தான் நக்கீரர் வாதிட்டார் என்று திருவிளையாடல் திரைப்படம் சொல்கிறது :-) திருவிளையாடல் புராணம் என்ன சொல்கிறது என்று நினைவில்லை. சின்ன வயதில் படித்தது. மறந்து போய்விட்டது. யாராவது திருவிளையாடல் புராணத்தை அண்மையில் படித்திருக்கிறீர்களா? நக்கீரரின் வாதம் என்ன என்று தெரியுமா? பெண்களின் கூந்தலில் இயற்கையாக மணம் இல்லை என்பது அடிப்படை வாதம் என்று தெரியும்; ஆனால் உமையன்னைக்கும் அப்படித் தான் என்று வாதம் செய்தாரா?
June 19, 2006 4:52 PM
--
SK said...
உங்களை எனது 'ஆறு' பதிவில் எதிர்பார்த்து "மிகமிக" ஏமாந்தேன், குமரன், ராகவன்!!!
:))
விரைவில் திருப்புகழ் விளக்கம் எழுதத் துவங்குகிறேன், குமரன்.
முருகனருள் முன்னிற்கும்!
June 19, 2006 10:12 PM
--
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. உங்கள் ஆறு பதிவைப் படிப்பதற்காக தாள்ப்பிரதி எடுத்திருக்கிறேன். பின்னூட்டங்கள் எல்லாம் சேர்த்து 'மிக மிக' நீளமாக இருப்பதால் கணினியிலேயே படிப்பது முடியாத செயல். விரைவில் படித்து முடித்து 100வது பின்னூட்டம் வருவதற்குள் உங்கள் ஆறு பதிவிற்குப் பின்னூட்டம் இட்டுவிடுவேன் என்று நினைக்கிறேன். (ஏற்கனவே 100வது பின்னூட்டம் வந்தாச்சோ?)
June 20, 2006 3:57 AM
--
G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...
எஸ்.கே.யும் திருப்புகழுக்குப் பொருள் சொல்வதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. யாராவது திருப்புகழையும் தொடங்கினால் என்ன? //
கீழே பாருங்கள் குமரன். முருகன் அருள் முன்னிற்கிறது.
// SK said...
விரைவில் திருப்புகழ் விளக்கம் எழுதத் துவங்குகிறேன், குமரன்.
முருகனருள் முன்னிற்கும்! //
SK, விரைவில் தொடங்குங்கள். வாரம் ஒன்று என்று போட்டால் கூடப் போதும். படித்து மகிழ்வோம்.
June 20, 2006 4:09 AM
--
G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...
செல்வன். இந்த cross reference செய்வது எனக்கு வருவதே இல்லை. இராகவன், எஸ்.கே. நீங்கள் எடுத்துக் கொடுக்கும் எடுத்துகாட்டுகள் எல்லாம் எனக்குத் தோன்றுவதில்லையே ஏன்? இன்னும் ஆழங்கால் படுவதில்லையோ பாடல்களில்? :-( //
காரணம் தெரியவில்லை குமரன். என்னை விட நிறைய கற்றவர் நீர். அப்படியிருக்க எம்மைக் கேட்டால் என்ன சொல்வது!
June 20, 2006 4:12 AM
--
குமரன் (Kumaran) said...
//என்னை விட நிறைய கற்றவர் நீர். //
உங்களுக்கு எப்படி அது தெரியும் இராகவன்? நான் அகல உழுதிருக்கலாம்; ஆனால் நீங்கள் ஆழ உழுகிறீர்களே. அதனால் அதிகம் கற்றவர் நீங்கள் தானே. கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தகன்னு ஐயன் வேற சொல்லியிருக்காரே. அதன் படி நீங்க நடந்துக்கிறீங்க.
June 20, 2006 9:24 AM
--
SK said...
அன்பு குமரன்,இராகவன்,
திருப்புகழ் பதிவொன்று இட்டிருக்கிறேன். படித்துக் கருத்து சொல்லவும். நன்றி.
June 20, 2006 9:39 PM
--
குமரன் (Kumaran) said...
திருப்புகழ் பதிவு இட்டதற்கு மிக்க நன்றி எஸ்.கே. படித்துப் பின்னூட்டம் தந்துள்ளேன்.
June 21, 2006 3:45 AM
--
johan -paris said...
குமரா!
இலகுவான விளக்கம் ,புரிந்து கொள்ள இலகுவாக உள்ளது. சிறு விளக்கம் தேவை; பௌத்தர்களும்;சமணர்களும்;;;தமிழா,,,??,பேசினார்கள். சம்பந்தருக்கு ;பாளி தெரியுமா?இவர்கள் வாதம் தொடர்பு மொழியான வடமொழியில்; நடந்திருக்குமா??,;தற்ப்பொழுது;தமிழ் நாட்டில் எவ்வளவு தமிழ்ப் பௌத்தர்கள்;சமணர்கள் இருக்கிறார்கள்.தமிழ் நாட்டில் இன்னும் பௌத்த,சமண ஆலயங்கள்;உண்டா?வழிபாடுகள் நடக்கின்றனவா?? தெரிந்தோர் விபரம் தரவும்.
யோகன் பாரிஸ்
June 21, 2006 4:13 AM
--
குமரன் (Kumaran) said...
பௌத்தர்களும் சமணர்களும் மக்கள் மொழியில் பேசியே தங்கள் சமயங்களைப் பரப்பினார்கள். அதுவே அவர்கள் வலிமை. அதனாலேயே வடநாட்டில் இருக்கும் போது பாலி மொழியில் பேசினார்கள்; நூல்களை இயற்றினார்கள். அப்போது வடநாட்டில் வடமொழியான சமஸ்கிருதம் அறிஞர்களின் மொழியாக இருந்தது; பாலியே மக்கள் மொழியாக இருந்தது. அந்த அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தில் பௌத்தர்களும் சமணர்களும் தமிழ் மொழியிலேயே பேசியிருக்க பெரும் வாய்ப்பு உண்டு. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் குறைந்தது மூன்றாவது பௌத்த சமணர்களால் இயற்றப்பட்டவை தானே.
தற்போதும் சமணர்கள் நிறைய பேர் தமிழகத்தில் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் இராஜஸ்தானிய வழி வந்தவர்களாக இருக்கின்றார்கள். தமிழ் வழி வந்த சமணர்களைப் பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை. தமிழ்நாட்டில் பௌத்தர்களைப் பார்த்ததில்லை; கேள்விப்பட்டதில்லை.
June 21, 2006 4:24 AM
--
Anonymous said...
இங்கே 'மத்தமும்' என்பதற்கு கங்கை என்ற பொருளை இட்டிருக்கின்றீர்கள். மத்தம் என்றால் ஊமத்தையை குறிக்கும் பொருள் என்றே எனக்கு தோன்றுகிறது. ஊமத்தையை மாலையாக அணிந்தவன் என்பதே இதற்கு பொருள் என்று கருதுகிறேன்
Kannan
August 04, 2006 5:31 AM
--
நாமக்கல் சிபி said...
குமரன்,
மிக அருமையான விளக்கம்...
//தற்போதும் சமணர்கள் நிறைய பேர் தமிழகத்தில் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் இராஜஸ்தானிய வழி வந்தவர்களாக இருக்கின்றார்கள். தமிழ் வழி வந்த சமணர்களைப் பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை. தமிழ்நாட்டில் பௌத்தர்களைப் பார்த்ததில்லை; கேள்விப்பட்டதில்லை//
என்னங்க குமரன் இப்படி சொல்லிட்டீங்க??? நம்ம அப்பர், மகேந்திரவர்ம பல்லவன் எல்லாம் சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறி, மறுபடியும் இறைவன் அருளால் சைவத்திற்கு மாறினார்கள்.
நாகப்பட்டின சூடாமணி விகாரம் (பௌத்த மதத்தை சார்ந்த மடம்) பற்றி கேள்விப்பட்டதில்லையா?
சுமார் 1200 வருடங்களுக்கு முன்னால் தமிழ் நாட்டில் பௌத்தர்களும், சமணர்களும் அதிகாரம் செலுத்தி வந்தனர். இறைவன் அருளால் நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றி இந்து மதத்தை காப்பாற்றினர்.
August 04, 2006 8:41 PM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் கண்ணன். நீங்கள் சொல்வது சரியென்றே நினைக்கிறேன். 'மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்' என்ற திருப்புகழ் வரிகளுக்குப் பொருள் சொல்லும் போது எஸ்.கே. அவர்களும் ஊமத்தை என்றே மத்தத்திற்கு பொருள் சொல்லியிருந்தார். மத்தம் என்று நீரை வடமொழியில் குறிப்பிடுவார்கள் என்று ஏதோ ஒரு நினைவில் அப்படி 'கங்கை' என்று பொருள் கூறிவிட்டேன். சரியான பொருள் ஊமத்தை தான் போலும்.
August 05, 2006 1:48 PM
--
குமரன் (Kumaran) said...
பாலாஜி. நான் நீங்கள் சொன்னதை மறுக்கவில்லையே. தற்காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சமணர்கள் எல்லாம் இராஜஸ்தானிய வழி வந்தவர்களாக இருக்கிறார்கள். தமிழர்களான சமணர்களைக் கண்டதில்லை என்று தானே சொன்னேன்.
அப்போது தமிழகத்தில் பௌத்தர்களைப் பார்த்ததில்லை என்று சொன்னேன். அண்மையில் 'அயோத்திதாச பண்டிதர்' என்பவரால் ஏற்படுத்தப் பட்ட பௌத்த (சாக்கிய) சங்கத்தைச் சேர்ந்தப் பௌத்தர்கள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருப்பதாக ஒரு கட்டுரையைப் படித்தேன்.
August 05, 2006 1:53 PM
--
நாமக்கல் சிபி said...
//தமிழ் வழி வந்த சமணர்களைப் பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை. தமிழ்நாட்டில் பௌத்தர்களைப் பார்த்ததில்லை; கேள்விப்பட்டதில்லை//
கேள்விப்பட்டதில்லை என்று நீங்கள் சொல்லியதை தவறாக புரிந்து கொண்டேன். மன்னிக்கவும்.
அவர்கள் அதிகமாக அரசியலில் ஈடுபட்டார்கள் என்று கல்கி அவர்களின் சிவகாமியின் சபதத்தில் படித்திருக்கிறேன். அதனால் அதற்கு பிறகு வந்த மன்னர்கள் சமணம் பௌத்த மதங்களை ஆதரிக்காமல் போனதும், நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்கள் ஆற்றிய சமயத் தொண்டுகளின் காரணத்தால் அந்த இரு மதங்கள் தமிழகத்தில் இருந்து மறைந்திருக்கலாம்.
August 05, 2006 9:17 PM
--
குமரன் (Kumaran) said...
உண்மை தான் பாலாஜி. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது அந்தக் காலத்தில் மிகவும் உண்மையாக இருந்தது. அதனால் சமணர்களும் பௌத்தர்களும் அரசியல் ஆதரவை இழந்த பின் மக்களும் சைவ வைணவ சமயங்களுக்கு மாறிவிட்டனர் போலும்.
August 05, 2006 9:22 PM
சுகர் பற்றி நல்லா சொல்லியிருக்கீங்க :) அது சரி... அப்ப "மத்தமும்" என்கிறதுக்கு என்ன பொருள்?
ReplyDeleteஊமத்தை தான் இங்கே மத்தம் அக்கா. அப்படித் தான் சில தேவாரப் பாடல்களிலும் இருக்கு.
ReplyDelete