சொல் ஒரு சொல் எனும் உங்கள் பதிவு எனக்குப் பிடித்ததே! ஆனாலும், இது ஒரு பின்னோக்கு கருத்து,... புது சொற்களை தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு பின்னடைவு எனும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
இது தான் எஸ்.கே. 'சுடர்' தொடர்ப்பதிவிற்காக என்னிடம் கேட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு சுருக்கமாக பதில் சொல்லி விட்டிருக்கலாம். ஆனால் இந்தக் கேள்வியில் இருக்கும் கருத்தை ஒட்டியும் வெட்டியும் கடந்த சில நாட்களாக வலைப்பதிவுகளில் நடைபெற்று வரும் விவாதங்களுக்கும் என் கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். அதனால் இதனைத் தனிப்பதிவாக இடுகின்றேன். 'சொல் ஒரு சொல்' பதிவில் என்னுடன் இராகவனும், கோவி.கண்ணன் அண்ணாவும் இணைந்து இடுகைகள் இட்டுவருகின்றனர். அவர்களுக்கும் நான் இந்தப் பதிவில் சொல்லப்போகும் கருத்துகளில் பெரும்பான்மையானவற்றில் ஒப்புதல் இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கெல்லாம் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறதோ அவற்றை அவர்கள் தயங்காமல் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் தங்கள் கருத்துகளைத் தயங்காமல் சொல்லுங்கள்.
***
முதலில் மேலே கேள்வியில் இருக்கும் கருத்தினை ஒட்டியும் வெட்டியும் வரும் கருத்துகளைச் சுருக்கமாகப் பட்டியல் இடலாம்.
ஒட்டி வரும் கருத்துகள்:
1. ஆங்கிலம் எந்த வித தயக்கங்களும் இன்றி வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டதால் ஆங்கிலம் வளர்ந்து வருகிறது. தமிழில் இருக்கும் வேற்று மொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைப்பதின் மூலம் அப்படிப் பரிந்துரைப்பவர்கள் தமிழை ஒரு தேக்க நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். அது தமிழுக்கு ஒரு பின்னடைவு. அப்படி தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைக்கும் போது கடினமான சொற்களைப் பயன்படுத்தி சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத படி எழுதுகிறார்கள். அப்படி எல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் தமிழில் எழுதுவதற்கே சாதாரண மக்களுக்கு ஆர்வம் போய்விடும். அப்படி நடந்தால் அது தமிழுக்கு வளர்ச்சியைத் தருமா?
2. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் எல்லா மொழிகளிலும் வடமொழியான சமஸ்கிருதத்தின் தாக்கம் இருக்கின்றது. தமிழ் மட்டும் விதிவிலக்கு இல்லை. சமஸ்கிருதத்தின் துணையில்லாமல் தமிழால் இருக்க முடியாது.
3. ஸ்டாலின், இஸ்லாம், சரஸ்வதி, சுரேஷ், சமஸ்கிருதம் போன்ற வேற்று மொழிச் சொற்களை இசுடாலின், இசுலாம், சரசுவதி, சுரேசு, சமசுகிருதம் என்று எழுதுவதைப் பார்க்கும் போது கண் கூசுகிறது. இப்படி எழுதுவது கொடுந்தமிழ்.
4. மொழி என்பது ஒருவர் எண்ணத்தை மற்றவருக்குச் சொல்வதற்கு ஏற்பட்ட வழி. அவ்வளவு தான். நான் சொல்வதை யாரிடம் நான் சொல்கிறேனோ அவர்களுக்குப் புரிந்தால் போதும். அது எந்த மொழிச் சொற்களைக் கொண்டு சொல்லியிருந்தாலும் சரி. காலம் மாறுகையில் இப்படிப்பட்ட மாறுதல்கள் நடந்தே தீரும்; இவற்றைத் தடுக்க நினைப்பது பிற்போக்குத்தனம்.
கேள்வியில் இருக்கும் கருத்துக்கு மாற்றாக வரும் கருத்துகள்:
1. வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களை வழக்கிழக்கச் செய்கின்றன. ஒரு மொழியை அழிக்க அதன் சொற்களை வழக்கிழக்கச் செய்வதே எளிய வழி.
2. வேற்று மொழிச் சொற்களைப் புழங்குவதால் வேற்று மொழியினர் / ஆதிக்க வகுப்பினர் தமிழ் மக்களை / அடக்கப்பட்ட வகுப்பினரை மேன்மேலும் அடக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர். வேற்று மொழிச் சொற்களைப் புழங்கி அவர்கள் ஏதோ மேதாவிகளைப் போல் தோற்றமளித்து வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தெரியாத அப்பாவிகளை எளிதாக மன அளவில் அடக்குமுறைக்கு ஆளாக்குகிறார்கள்.
***
எனக்கு இரண்டு தாய்மொழிகள். இரண்டாவது தாய்மொழி தமிழ். சௌராஷ்ட்ரனாய் இருப்பது இந்தப் பிரச்சனையில் எனக்கு ஒரு ஆழ்ந்த பார்வையைக் கொடுத்திருக்கிறது. இரு தலைமுறைக்கு முன்னர் சௌராஷ்ட்ரர்கள் பல நல்ல சௌராஷ்ட்ரச் சொற்களை எளிதாகப் பேசிக் கொண்டிருந்தனர். என் பெற்றோர்களின் தலைமுறை சௌராஷ்ட்ரத்தில் பேசும் போது நிறைய தமிழ்ச்சொற்களைப் புழங்கத் தொடங்கியது. என் தலைமுறையினர் தமிழ்ச்சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் கலந்து தான் சௌராஷ்ட்ரம் பேசுகின்றனர் (பேசுகிறோம்). அவர்கள் பெற்றோர்கள் பேசிய சொற்களை என் பெற்றோர்களின் தலைமுறையினர் புரிந்து கொண்டனர் - ஆனால் அவற்றை எங்களிடம் தரவில்லை. அதனால் எங்களிடம் சௌராஷ்ட்ரம் பேச தேவையான எல்லா சொற்களும் இல்லை; அதனால் எங்கள் எண்ணங்களை நன்கு வெளிப்படுத்த வேற்று மொழிச் சொற்களைப் புழங்க வேண்டிய கட்டாயம்.
இன்னொன்றையும் சொல்கிறேன். 19ம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் வாழ்ந்த நடனகோபால நாயகி சுவாமிகள் இயற்றிய சௌராஷ்ட்ர மொழிப் பாடல்கள் எதுவுமே என் தலைமுறையினருக்குப் புரியாது. ஆங்காங்கே ஒரு சில சொற்கள் புரியும். அவ்வளவு தான். அவ்வளவு ஏன்? என் தந்தையாரிடமும் என் மாமனாரிடமும் ஒரு முறை டி.எம்.எஸ். பாடிய இந்தச் சௌராஷ்ட்ர பாடல்களைப் போட்டுக் காண்பித்தேன். அவர்களுக்கும் அதே நிலை தான். 'நம் மொழி என்று தெரிகிறது. ஆனால் எல்லா சொற்களும் புரியவில்லை' என்கிறார்கள். பாடலை எழுத்து வடிவில் பார்த்தால் புரியாமல் போகலாம். பாட்டாகப் பாடும் போது கூடப் புரியவில்லை என்றால்? அதுவும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் எழுதியவற்றை. அப்படி என்றால் எத்தனை இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்?
என் நல்வினைப்பயன் இந்தப் பாடல்களில் இருக்கும் பெரும்பான்மையான சொற்கள் எனக்குப் புரிகின்றன. செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்களே. அது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். மொழி ஆர்வத்தால் சௌராஷ்ட்ர மொழியின் சொற்களும் புரிகின்றன. சிவமுருகனைத் தவிர்த்து இந்த பாடல்களை முழுதாகப் புரிந்து கொள்ளும் எங்கள் தலைமுறையினரை நான் இன்னும் பார்க்கவில்லை. இந்தக் காரணத்தால் தான் சிவமுருகனும் நானும் நாயகி சுவாமிகளின் பாடல்களுக்கு விளக்கம் எழுதிக் கொண்டிருக்கிறோம் - அப்போதாவது சௌராஷ்ட்ர இளைஞர்களுக்கு தங்கள் மொழியில் உள்ள பாடல்கள் புரியுமே என்று.
கால்கரி சிவா அண்ணாவுடனும், அவருடைய அண்ணனுடனும் பேசும் போது அவர்கள் என் சொற்தொகையில் (Vocabulary) இல்லாத சில சொற்களைப் புழங்கக் கண்டேன். அவர்கள் என்னை விட மூத்தவர்கள்; எனக்கும் முன்னாலேயே மதுரையை விட்டுக் கிளம்பியவர்கள் என்பதை அதன் மூலமே சொல்லிவிடலாம். என்னுடைய மொழி ஆர்வத்தையும் மீறி அவர்கள் புழங்கிய அந்த சௌராஷ்ட்ர சொற்கள் ஏன் என் சொற்தொகையில் இல்லை? இப்படியே இருந்தால் யாருக்கு நட்டம்? எனக்கும் சௌராஷ்ட்ரத்திற்கும் தானே.
இந்த நிலைக்கு என் முன்னோர்களை மட்டுமே குறை கூற விரும்பவில்லை. இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததற்கு பல சமூக, வரலாற்றுக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி பேசுவது இந்தப் பதிவின் நோக்கத்திற்குத் தேவையில்லாதது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
***
என் பின்புலத்தைச் சொன்னது என் கருத்துகள் எந்த இடத்திலிருந்து வருகின்றன என்று காட்டுவதற்காகத் தான். அது மட்டுமின்றி கற்பது இரண்டு வகை - தானே பட்டு கற்றுக் கொள்வது; மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்வது. தமிழ் இங்கே சௌராஷ்ட்ரத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தேன். (சௌராஷ்ட்ரத்தை எந்த வகையிலும் நான் தாழ்த்தி எழுதவில்லை என்றே நினைக்கிறேன். அப்படி யாருக்காவது தோன்றினால் குறிப்பிட்டுச் சொல்லுங்கள்).
மேலே ஒட்டியும் வெட்டியும் வருகின்ற கருத்துகளின் பின்னால் பல அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்பதை அறிவேன். நான் சொல்வதும் என் புரிதல், நம்பிக்கை, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையிலேயே இருப்பதால் ஏதோ ஒரு அரசியல் சார்பாகத் தோன்றலாம். நான் சொல்வதே உண்மை. மற்ற கருத்துகள் எல்லாம் பொய் என்று எண்ணவில்லை.
***
இப்போது கருத்துகள் ஒவ்வொன்றாக எடுத்துப் பேசலாம். முதலில் எஸ்.கே.யின் கேள்வியை ஒட்டி வரும் கருத்துகளைப் பார்ப்போம்.
1. ஆங்கிலம் எந்த வித தயக்கங்களும் இன்றி வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டதால் ஆங்கிலம் வளர்ந்து வருகிறது. தமிழில் இருக்கும் வேற்று மொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைப்பதின் மூலம் அப்படிப் பரிந்துரைப்பவர்கள் தமிழை ஒரு தேக்க நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். அது தமிழுக்கு ஒரு பின்னடைவு. அப்படி தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைக்கும் போது கடினமான சொற்களைப் பயன்படுத்தி சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத படி எழுதுகிறார்கள். அப்படி எல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் தமிழில் எழுதுவதற்கே சாதாரண மக்களுக்கு ஆர்வம் போய்விடும். அப்படி நடந்தால் அது தமிழுக்கு வளர்ச்சியைத் தருமா?
ஆங்கிலத்தில் வேற்று மொழிச் சொற்களைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். உண்மை. சொற்களின் குறை இருக்கும் போது வேற்று மொழிச் சொற்களை எடுத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் தேவையில்லை. அதனைத் தான் ஆங்கிலம் செய்கிறது. ஆனால் அது தான் ஆங்கிலத்தின் வளர்ச்சிக்குக் காரணம் என்பது சரியில்லை. ஆங்கிலம் வளர்வதற்கு வேறு காரணிகள் இருக்கின்றன. முன்னாள் உலக வல்லரசும் இன்னாள் உலக வல்லரசும் ஆங்கிலம் பேசியதாலும் பேசுவதாலும் மற்றவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. அந்த வலுவில் தான் ஆங்கிலம் வளர்கிறதே அன்றி வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்வதால் இல்லை. மேலே சொன்னது போல் வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்வது அந்த மொழியில் அந்தச் சொற்கள் இல்லாததால்.
ஆங்கிலத்தில் ஏற்கனவே சொற்கள் இருந்து அந்தச் சொற்களுக்குப் பதிலாக வேற்று மொழிச் சொற்களைப் புழங்கினால் அது தவறு. அது மொழி அழிவதற்குத் தான் வழி வகுக்கும். ஆங்கிலத்திற்கு இருக்கும் மற்ற காரணிகள் இல்லாத மொழிகளுக்கு இது இன்னும் அதிகமான உண்மை என்பதை உணரவேண்டும். சௌராஷ்ட்ரம் ஒரு எடுத்துக்காட்டு.
இன்று நாம் தமிழில் மற்ற மொழிச் சொற்களைக் கலந்து பேசுகிறோம். அதனால் மிக எளிதான பாரதியார் பாடல்களுக்குக் கூட விளக்கம் சொல்ல வேண்டிய நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். இது நல்லதில்லை.
பல நூற்றாண்டு கால இலக்கியங்கள் இருக்கும் தமிழ் போன்ற செம்மொழிகளில் மனிதனின் கருத்துகளில் பெரும்பான்மையானவற்றைச் சொல்வதற்குச் சொற்கள் இருக்கின்றன. அவற்றை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வருவது அந்த மொழி அழியாமல் காப்பாற்றும். அதனை விட்டு வேற்று மொழிச் சொற்களைப் புழங்குவது தான் மொழி வளர்வதற்கு வழி என்ற தவறான எண்ணத்தால் வேற்று மொழிச் சொற்களைப் புழங்கத் தொடங்கினால் தமிழை மறந்துவிட்டு வேற்று மொழியையே பேசும் காலம் வர நெடுங்காலம் செல்லாது.
எல்லா கருத்துகளையும் கூற தமிழில் சொற்கள் இருக்கின்றன என்று சொல்ல இயலாது. புதிதாக வந்த அறிவியல் சொற்களுக்கு நேரான சொற்கள் தமிழில் இல்லாமல் இருக்கலாம். அப்போது அவற்றிற்கு ஏற்ற கலைச்சொற்களைத் தமிழில் பரிந்துரைத்துப் புழங்கச் செய்வது தமிழை வளர்க்குமா? வேற்று மொழிச் சொற்களை அந்த நேரத்தில் புழங்குவது தமிழை வளர்க்குமா?
அப்படி பரிந்துரைக்கப்படும் சொற்களில் எது கடினம் எது எளிது என்பது அவரவர் மொழி அறிவைப் பொறுத்தது. கொஞ்சம் இலக்கிய பழக்கம் இருப்பவர்களுக்கு எளிதாகத் தோன்றும் சொற்கள் இலக்கிய பழக்கம் இல்லாதவர்களுக்கு கடினமாகத் தோன்றலாம். ஆனால் அதே சொற்கள் பழக்கத்தினால் எளிதாகத் தோன்றத் தொடங்கும். சில காலத்திற்கு முன்னால் பரிந்துரைக்கப்பட்ட பேருந்து, சட்டப்பேரவை, பேரவைத் தலைவர் போன்ற சொற்கள் இப்போது கடினமாக இருக்கின்றனவா? பெரும்பான்மையானவர்களுக்குப் புரிகின்றதல்லவா? அதே போல் இப்போது கடினமாகத் தோன்றும் பல பழைய சொற்களும் புதிய சொற்களும் மீண்டும் புழக்கத்தில் வரும் போது அவை எளிதாகத் தோன்றும்.
பரிந்துரைக்கப்பட்ட எல்லாச் சொற்களும் புழக்கத்தில் வருவதில்லை. அதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. யார் அந்தச் சொற்களைப் புழங்குகிறார்கள், எந்த பொருளில் புழங்குகிறார்கள், அந்த சொற்களின் வீச்சு என்ன என்று பல காரணிகள் இருக்கின்றன. அதனால் பழைய சொற்களை எடுத்துக் கொடுப்பதும் புதிய சொற்களை உருவாக்குதலும் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். 100 சொற்கள் பரிந்துரைக்கப் பட்டால் அதில் 50 சொற்கள் புழக்கத்தில் வந்தாலே அது பெரும் நன்மையை விளைக்கும். அதுவே மொழி அழியாமல் இருப்பதற்கும் வளர்வதற்கும் வழி.
பின்னூட்டம், உள்குத்து, வெளிக்குத்து போன்ற சொற்களை பதிவுலகம் தவிர்த்து மற்ற இடங்களில் பேசினால் அவை மற்றவர்களுக்கு கடினமான சொற்களாகத் தோன்றும். அப்படி துறை சார்ந்த சொற்களும் இருக்கின்றன. அந்த பரிபாஷையை மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது அந்தத் துறையின் வீச்சைப் பொறுத்து அமையும்.
2. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் எல்லா மொழிகளிலும் வடமொழியான சமஸ்கிருதத்தின் தாக்கம் இருக்கின்றது. தமிழ் மட்டும் விதிவிலக்கு இல்லை. சமஸ்கிருதத்தின் துணையில்லாமல் தமிழால் இருக்க முடியாது.
இரு வேறு மொழி பேசுபவர்கள் பழகும் போதும் ஒருவர் மொழியை மற்றவர் கற்கும் போது மொழிகளுக்குள் கொடுக்கல் வாங்கல் நடப்பது இயற்கை. அப்படி பார்க்கும் போது பண்பாட்டு அளவிலும் பல வித வரலாற்று, அரசியல் காரணிகளாலும் தமிழும் வடமொழியான சமஸ்கிருதமும் நெருங்கிப் பழகியது. வேண்டுமென்றோ இல்லை இயற்கையாகவோ வடமொழியில் தமிழ்ச்சொற்களும் தமிழில் வடமொழிச் சொற்களும் கலந்திருக்கின்றன. அப்படி வேறு இடங்களில் இருந்து வரும் சொற்களைத் தமிழ்ப்படுத்தி தமிழ்ச்சொற்களுக்கு இணையாகப் புழங்குவதற்கு இலக்கணத்திலேயே திசைச்சொற்கள் என்று ஒரு பிரிவை வைத்து வழி ஏற்படுத்தியிருக்கிறார்கள் தமிழ் ஆன்றோர்கள். இயற்கையாக இப்படி ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் செல்வது அந்த இன்னொரு மொழியின் தேவைக்கேற்ப அமையும். அவ்வாறின்றி வேண்டுமென்றே ஒரு மொழியின் சொற்களைப் புழங்காமல் வேற்று மொழிச் சொற்களையே புழங்குவது முதல் மொழியின் சொற்கள் அழிவதற்கே வழி வகுக்கும்.
சங்க இலக்கியங்களைத் தவிர்த்து மற்ற தமிழ் இலக்கியங்களில் எனக்கு ஓரளவு பழக்கம் இருக்கிறது. அப்படி இலக்கியங்கள் படிக்கும் போது இப்போது தமிழில் புழங்கும் பல வடமொழிச்சொற்களுக்கு (திசைச் சொற்களுக்கு) இணையான தமிழ்ச்சொற்கள் இருப்பதைக் காண்கிறேன். அவற்றை மீண்டும் புழக்கத்தில் கொண்டுவந்தால் அந்த சொற்கள் அழியாமல் இருக்கும். அந்தச் சொற்களை புழக்கத்தில் கொண்டு வருதல் திசைச்சொற்களை (வேற்று மொழிச் சொற்களை) முழுவதுமாக தமிழ் அகராதிகளில் இருந்து எடுப்பதற்காக இல்லை. பழந்தமிழ்ச் சொற்கள் தமிழ் அகராதிகளில் இல்லாமல் போகும் நிலையைத் தவிர்க்க. அந்த பழந்தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைப்பதாலும் மீண்டும் புழக்கத்தில் கொண்டு வருவதாலும் திசைச் சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களும் - இரண்டுமே புழக்கத்தில் இருக்கும். எது எளிதாக இருக்கிறதோ அது மக்கள் நடுவில் புழக்கத்தில் நிற்கும்.
வடமொழியின் தாக்கம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் பல மொழிகளிலும் இருக்கிறது என்பது உண்மை. அதே நேரத்தில் தமிழின் தாக்கம் வடமொழி முதற்கொண்டு பல மொழிகளில் இருக்கிறது என்பதும் உண்மை. வடமொழியின் துணையின்றி தமிழால் இருக்க முடியாது என்று எண்ணுபவர்கள் தமிழிலிருந்து தான் வடமொழிச் சொற்கள் பிறந்திருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் காட்டும் போது பதறுதல் கூடாது.
நான் அறிந்த வரையில் தமிழால் தனித்து இயங்க முடியும். எந்த விதமான கருத்துகளையும் எடுத்துக் கூறும் வகையில் தமிழில் அடிச்சொற்கள் இருக்கின்றன. அந்த அடிச்சொற்களை வைத்து புது அறிவியல் கருத்துகளைக் கூறும் சொற்களையும் தமிழால் சொல்ல முடியும். அப்படியே சில சொற்கள் தமிழில் ஏற்படுத்த முடியாவிட்டால் அப்போது மற்ற மொழிச் சொற்களை எடுத்தாள தமிழில் திசைச்சொல் என்ற வகை இருக்கிறது. ஆனால் அப்படி செய்வது தமிழில் அந்தக் கருத்தைச் சொல்ல முடியாது என்பது நன்கு நிறுவப்பட வேண்டும். அதற்கு முன்னரே வேற்று மொழிச் சொற்களைப் புழங்கிவிட்டு தமிழில் அதற்குச் சொல் இல்லை; தமிழில் அந்தக் கருத்துகளைச் சொல்ல இயலாது; தமிழால் தனித்து இயங்க இயலாது என்று சொல்வது சரியன்று.
3. ஸ்டாலின், இஸ்லாம், சரஸ்வதி, சுரேஷ், சமஸ்கிருதம் போன்ற வேற்று மொழிச் சொற்களை இசுடாலின், இசுலாம், சரசுவதி, சுரேசு, சமசுகிருதம் என்று எழுதுவதைப் பார்க்கும் போது கண் கூசுகிறது. இப்படி எழுதுவது கொடுந்தமிழ்.
ம்ம்ம். முதன்முதலில் இசுடாலின், இசுலாம், சரசுவதி போன்றவற்றைப் படிக்கும் போது கொஞ்சம் சிரிப்பாகத் தான் இருக்கும். கன்னன், கருணன், துருபதை, இலக்குவன், சானகி, தயரதன், கோசலை, சுமித்திரை, சனகன், விசுவாமித்திரன், வசிட்டன், விட்டுசித்தன், வீடணன், கும்பகருணன், அயோத்தி, மிதிலை, யுதிட்டிரன், வீடுமன் போன்ற சொற்களைப் படிக்கும் போது சிரிப்பாக இருக்கிறதா? இயல்பாக இருப்பது போல் தோன்றுகிறதா? இயல்பாக இருப்பது போல் தான் தோன்றுகிறது. ஏன்? ஏனெனில் இவை இலக்கியத்தில் படித்திருக்கிறோம். படித்துப் பழக்கம் இருக்கிறது. இப்படி வேற்று மொழிப் பெயர்ச் சொற்களைத் தமிழ்படுத்திச் சொல்வது தமிழ் மரபு. அப்படித் தான் இலக்கியங்களில் செய்திருக்கிறார்கள். அதன் படி இலக்கணமும் அமைத்திருக்கிறார்கள். இசுடாலின், இராசீவ் போன்ற சொற்களை முதலில் பார்க்கும் போது அவை சிரிப்பாக இருக்கலாம். ஆனால் பழக தொடங்கிய பின் அவை இயற்கையாக இருக்கும். அதனை விட்டுவிட்டு அப்படி எழுதுவது கொடுந்தமிழ் என்றால் இலக்கியங்கள் எல்லாவற்றையுமே கொடுந்தமிழ் என்றே சொல்ல வேண்டும். அவற்றில் சமய இலக்கியங்களும் அடங்கும்.
4. மொழி என்பது ஒருவர் எண்ணத்தை மற்றவருக்குச் சொல்வதற்கு ஏற்பட்ட வழி. அவ்வளவு தான். நான் சொல்வதை யாரிடம் நான் சொல்கிறேனோ அவர்களுக்குப் புரிந்தால் போதும். அது எந்த மொழிச் சொற்களைக் கொண்டு சொல்லியிருந்தாலும் சரி. காலம் மாறுகையில் இப்படிப்பட்ட மாறுதல்கள் நடந்தே தீரும்; இவற்றைத் தடுக்க நினைப்பது பிற்போக்குத்தனம்.
கால மாற்றத்தால் பல மாறுதல்கள் வரும் என்பது உண்மை. கால மாறுதலால் தான் சௌராஷ்ட்ரமும் இந்த நிலையில் இருக்கிறது. தருமி ஐயா சொன்னது போல் மூன்று தலைமுறைக்கு முன் தமிழே சரியாகத் தெரியாத பெண்கள் மதுரையில் இருந்தார்கள். காலத்தின் கட்டாயத்தால் அடுத்த தலைமுறை தங்களைத் தனிப்படுத்திக் கொள்வதைக் குறைத்தது. தமிழருடன் கலந்து பழகத் தொடங்கியது. அடுத்தத் தலைமுறை தமிழைக் கலந்து பேசத் தொடங்கியது. அடுத்தத் தலைமுறை தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுகிறது. இப்போது மிஞ்சியது முன்னேறிய சௌராஷ்ட்ரமா? சௌராஷ்ட்ரர்கள் மூன்று தலைமுறைக்கு முன்னர் இருந்ததை விட இப்போது முன்னேறியிருக்கலாம். ஆனால் அவர்கள் இழந்தது அவர்களின் மொழியில் இருந்த சொற்கள்.
இந்தப் போராட்டம் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. கால மாற்றத்தால் நடக்கும் செயல்கள் எல்லாமே நல்ல செயல்கள் இல்லை. சில நேரங்களில் ஈடு செய்ய முடியாத இழப்புகளும் நேர்கின்றன. இன்று நான் சௌராஷ்ட்ரன் என்று சொல்லிக் கொள்கிறேன். இன்னும் இரண்டு தலைமுறை இதே போல் சென்றால் இந்திய வம்சாவளியினர் என்று மேலை நாடுகளில் இப்போது சொல்கிறோமே அதே போல் சௌராஷ்ட்ர வம்சாவளியினர் மட்டுமே மிஞ்சுவார்கள்.
தமிழனின் நல்வினைப்பயன் (அதிருஷ்டம்) நிறைய தமிழ் இலக்கியங்கள் இருக்கிறது. நீண்ட நெடிய இலக்கிய பாரம்பரியம் இருக்கிறது. அவற்றின் மூலம் பழைய தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்து வரலாம். அதனால் முன்னேற்றம் தடைபடாது. வேற்று மொழியினருடன் அவர்கள் மொழியில் பேசுவோம். நம்மவர்களுடன் நம் மொழியில் பேசுவோம். அப்படி நம் மொழியில் பேசும் போது நம் சொற்களைக் கொண்டு பேசுவோம். அதனால் நாம் முன்னேற்றமும் அடையலாம்; நம் மொழியும் தொலையாது.
(இவ்வளவு பேசுகிற நீ சௌராஷ்ட்ரத்தில் அது நடக்க ஏதாவது செய்யலாமே. தமிழைத் தமிழர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் - என்று யாராவது சொன்னால் - அவர்களுக்கு என் பதில் இது - சௌராஷ்ட்ரத்திலும் இந்த விவாதம் நடக்கிறது. சௌராஷ்ட்ரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது வேற்று மொழியினர் இருக்கும் போதும் சௌராஷ்ட்ரத்தில் பேசிக் கொள்கிறார்கள் என்று வரும் குற்றச்சாட்டு இது நடப்பதைக் காட்டுகிறது. வேறு தளங்களில் சௌராஷ்ட்ரத்திற்காகவும் இந்த முயற்சிகளில் பலர் ஈடுபட்டுள்ளோம். மதுரையில் பிறந்து வளர்ந்த நாங்கள் தமிழாலும் தமிழராலும் அடைந்த நன்மைகள் ஏராளம். அந்த உணர்வில் இயற்கையாகத் தமிழ், தமிழர் என்றால் எங்களுக்கும் பதறுகிறது. மேலே சொன்னது போல் தமிழ் எனது இரண்டாவது தாய்மொழி. வேறு யார் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ எனக்கு தமிழும் தாய்மொழி தான்; நான் தமிழனும் தான். ஆக சொல் ஒரு சொல் பதிவு ஒரு தமிழனால் தான் தொடங்கப்பட்டிருக்கிறது).
இப்போது எஸ்.கே.யின் கேள்வியில் இருக்கும் கருத்திற்கு மாற்றுக் கருத்துகளைப் பார்ப்போம்.
1. வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களை வழக்கிழக்கச் செய்கின்றன. ஒரு மொழியை அழிக்க அதன் சொற்களை வழக்கிழக்கச் செய்வதே எளிய வழி.
மேலே உள்ள கருத்துகளைப் பற்றி பேசும் போதே இந்தக் கருத்திற்கு ஆதரவாகப் பேசிவிட்டேன்.
2. வேற்று மொழிச் சொற்களைப் புழங்குவதால் வேற்று மொழியினர் / ஆதிக்க வகுப்பினர் தமிழ் மக்களை / அடக்கப்பட்ட வகுப்பினரை மேன்மேலும் அடக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர். வேற்று மொழிச் சொற்களைப் புழங்கி அவர்கள் ஏதோ மேதாவிகளைப் போல் தோற்றமளித்து வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தெரியாத அப்பாவிகளை எளிதாக மன அளவில் அடக்குமுறைக்கு ஆளாக்குகிறார்கள்.
இது நடக்கவில்லை என்று மறுக்க முடியாது. நடக்கிறது. ஆனால் இது ஒரு பகுதி மட்டுமே. எந்த வித ஆதிக்க மனப்பான்மை இல்லாமலும் எந்த வித உள்நோக்கங்கள் இல்லாமலும் பழக்கத்தின் காரணமாக மட்டுமே பலர் வேற்று மொழிச் சொற்களைப் புழங்குகிறார்கள். அவை வேற்று மொழிச் சொற்கள் என்று கூட அறியாமலேயே.
வேற்று மொழிச் சொற்களை புழங்கி மேதாவிகளைப் போல் தோற்றமளிக்கிறார்கள் என்று சொல்பவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். வேற்று மொழிச் சொற்களைப் புழங்குபவர்கள் எல்லாருக்குமே மேதாவிகளைப் போல் தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவர்களின் மேல் நாம் அந்தப் பழியைப் போடும் போது, நம்மைப் பார்த்து அவர்கள் 'சரி. நீங்கள் தமிழில் தானே எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதுவது யாருக்குமே புரியவில்லையே. பலருக்கும் புரியாத பழைய சொற்களையும் நீங்களே உருவாக்கிய புதிய சொற்களையும் கலந்து தானே நீங்கள் எழுதுகிறீர்கள்?! அது உங்களை மேதாவிகளாகக் காட்டிக் கொண்டு மற்றவர்களை அடக்கி ஆள்வதற்கா?' என்ற கேள்வியைக் கேட்பதற்கு வழி செய்கிறோம். நாம் பழந்தமிழ் சொற்களையும் புதிதாக நாமே உருவாக்கியச் சொற்களையும் வைத்து எழுதுவது நம் மேதாவித் தனத்தைக் காட்டுவதற்கு இல்லை. தனித் தமிழில் எழுதி தமிழ் வளர்க்கவே. தமிழ்ப் பணி செய்யவே என்பது நமக்குத் தெரியும். ஆனால் நம் கருத்துகளுடன் ஒத்துப் போகின்றவர்கள் நம் கருத்துகளுடன் ஒத்துப் போகாதவர்களை அவர்கள் நினைக்காத ஒன்றை வைத்துத் தாக்கும் போது அதே தாக்குதல் நம் மீதும் எழுகிறது.
நம் நோக்கம் அவர்களைத் தாக்குவதைத் தவிர்த்துவிட்டு அறியாமல் வேற்று மொழிச் சொற்களைப் புழங்குகிறார்களே - எந்த அரசியல் நோக்கமும் இல்லாத சாதாரணத் தமிழர்கள் - அவர்களுக்கு தமிழ் மொழிச் சொற்களை எடுத்துக் கொடுப்பதாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் தாக்குவது தேவையில்லாத ஒன்று. நம்மைத் தாக்கும் போது தகுந்த பதில் சொல்லலாம். நாமே சென்று தேவையில்லாமல் தாக்குதல் கூடாது. அதற்கு பதில் இராம.கி. ஐயாவைப் போலவும், தமிழ் விக்சனரி நண்பர்களைப் போலவும் ஆக்க பூர்வமான வேலையில் ஈடுபடவேண்டும். அதுவே நமக்கும், நம் மொழிக்கும் நல்லது.
***
சொல் ஒரு சொல் பதிவில் எழுதுபவர்கள் யாருமே தமிழ் அறிஞர்கள் இல்லை. இராம.கி. ஐயா போன்ற அறிஞர்கள் செய்யும் மொழி ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு தமிழ் அறிந்தவர்கள் இல்லை. இராம. கி. ஐயா போன்றவர்கள் பழந்தமிழ் சொற்களை மீட்டுக் கொடுக்கட்டும்; புதிய சொற்களை ஆக்கிக் கொடுக்கட்டும். புதிய சொல்லாக்கத்தில் 'தமிழ் விக்சனரி' நண்பர்களின் ஆக்கம் மிக நன்றாக இருக்கிறது. சொல் ஒரு சொல் பதிவில் நாங்கள் இந்த இரண்டையுமே செய்யவில்லை. இரண்டு பேர்களும் செய்வதிலிருந்து எடுத்துக் கொண்டு அதனை முடிந்த வரையில் பொதுமக்கள் விரும்பும் வகையில் கதை வடிவாகவோ, கட்டுரை வடிவாகவோ நகைச்சுவை வடிவாகவோ கொடுத்து பழைய சொற்களையும் புதிய சொற்களையும் புழக்கத்தில் கொண்டு வர முயல்கிறோம்.
அந்த வகையில் பார்த்தால் சொல் ஒரு சொல் முயற்சி பின்னோக்கு கருத்து இல்லை. புதுச் சொற்களைத் தமிழுக்குக் கொண்டு வரும் முயற்சிக்குப் பின்னடைவு இல்லை.
***
தொடர்ந்து சொல் ஒரு சொல் பதிவில் ஆக்கபூர்வமாகப் பங்கேற்று வரும் ஜெயஸ்ரீ அவர்கள் மிக அழகாக மேலே நான் நீட்டி முழக்கிய எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். அவர் சொன்னது இதோ.
புதிய கலைச்சொற்கள் உருவாக்கப்படுவதோடு இருக்கும் பல நல்ல, அழகான சொற்களும் வழக்கொழிந்து போய்விடக்கூடாது என்பதற்கான நல்ல் முயற்சிதான் 'சொல் ஒரு சொல்' பக்கம் .
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 21 பிப்ரவரி 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete91 கருத்துக்கள்:
சிவபாலன் said...
நோக்கம் சிறந்த நோக்கம் என்றால் அதன் செயல்களும் சிற்ந்தவையே!
அதனால் சொல் ஒரு சொல் நல்லதே!
தொடரட்டும்!!
வாழ்த்துக்கள்!
February 21, 2007 2:21 PM
--
Samudra said...
ஆனால் இந்த முயற்ச்சி ஒரு mere academic exerciseஆகவே இருந்துவிடக்கூடிய வாய்ப்பு நிறைய உண்டுங்க குமரன்.
மேலும் இசுடாலின், இசுலாம் என்பதையெல்லாம் விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். நெஜமாவே கொடுமையா இருக்குங்க. :)
மற்றபடி, முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
February 21, 2007 5:00 PM
--
குமரன் (Kumaran) said...
சிவபாலன். நோக்கமும் சிறந்தது; செயல்களும் சிறந்தவை என்று சொல்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
February 21, 2007 5:13 PM
--
குமரன் (Kumaran) said...
சமுத்ரா,
இதோ நீங்கள் இப்போது முயற்ச்சி என்று எழுதியிருக்கிறீர்கள். ஆனால் சரியான முறை முயற்சி என்று எழுதுவது. எழுத வந்த பொது முயற்ச்சி என்று எழுதத் தொடங்கி பின்னர் முயற்சி என்று சரியாக எழுதியவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
இந்த மாதிரி எழுத்துப்பிழைகள் மட்டுமின்றி மற்றவைகளும் சரியானவற்றைப் புழங்கத் தொடங்கிய பின் தானாகச் சரியாகிவிடும். இதெல்லாம் மொழிவல்லுனர்களின் வெற்றுக் கூச்சலாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால் 'முயற்சி' உங்களிடம் இருந்தும் என்னிடமிருந்தும் தொடங்க வேண்டும். இன்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள் - இனி மேல் முயற்ச்சி என்று எழுதுவதில்லை என்று. அதே போல் தவறாமல் 'சொல் ஒரு சொல்' இடுகைகளைப் படித்து அதில் வரும் சொற்களைப் புழங்கத் துவங்குங்கள். அப்புறம் இது வெற்று அறிவாராய்ச்சிக் கூச்சலாக இருக்காது. செயலிலும் நடக்கும்.
அப்படித் தானே சமுத்ரா பேருந்து, அரசு, மாநிலம், மாவட்டம் என்ற சொற்களை எல்லாம் நாம் எளிதாக எழுத்திலாவது புழங்குகிறோம். இல்லாவிட்டால் இன்னும் பஸ், கவர்ன்மென்ட், ஸ்டேட், டிஸ்ட்ரிக்ட் என்று எழுதிக் கொண்டிருப்போம் - ஏனெனில் இன்னும் அப்படித் தானே பேசிக் கொண்டிருக்கிறோம். எழுத்திலாவது இப்படி வந்ததற்கு என்ன காரணம்? இப்படிப்பட்ட அகாடெமிக் எக்ஸர்சைஸ் தானே?
கொடுமையாகவும் கடுமையாகவும் தோன்றுபவை எல்லாம் பழக்கமின்மையால் தான். பெரும்பான்மை மக்கள் எதனைப் புழங்குகிறார்களோ அது பழகிப் போய்விடும். பின்னர் அவை கொடுமையாகவும் கொடுந்தமிழாகவும் தெரியாது.
இசுலாம், இசுடாலின் என்று எழுதவோ பேசவோ சொல்லி வற்புறுத்தவில்லை. ஆனால் அப்படி எழுதுவது தான் சரியான தமிழ் முறை என்று எண்ணுபவர்கள் எழுதினால் அவற்றை கொடுந்தமிழ் என்று சொல்லாதீர்கள். தமிழறிஞர்கள் சரி என்று எண்ணினால் அதே போல் எழுதிக் கொண்டு வருவார்கள். அப்போது மக்கள் நடுவில் அது புழக்கத்தைப் பெறும். பின்னர் உங்களுக்கு அது செயற்கையாகத் தோன்றாது. இசுலாம், இசுடாலின் என்று எழுதுவது மக்களின் ஆதரவைப் பெறாமலே போகலாம். ஆனால் அதற்காக சரி என்று தோன்றும் முறையில் எழுதி அதனை ஏன் சரி என்று சொல்கிறோம் என்பதனையும் எழுதுவதை நிறுத்த முடியாது.
வாழ்த்துகளுக்கு நன்றி சமுத்ரா.
February 21, 2007 5:27 PM
--
இலவசக்கொத்தனார் said...
குமரன்,
இது அவசியமான பதிவுதாங்க. அதனால யாரு என்ன சொன்னாலும் கவலைப்பட்டு சோர்ந்து போகாமா நல்ல படியா தொடர்ந்து நடத்துங்க.
ஸ்,ஷ்,ஜ் போன்ற எழுத்துக்கள் வழக்கத்தில் வந்து விட்டதால் அவற்றை சேர்க்க மாட்டேன் என அடம்பிடிப்பது தேவை இல்லை என்பதே என் எண்ணம்.
February 21, 2007 5:39 PM
--
குமரன் (Kumaran) said...
இல்லை கொத்ஸ். என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது இந்த சொல் ஒரு சொல் பதிவு. யார் என்ன சொன்னாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டே தான் இருக்கப் போகிறோம். இன்னும் நிறைய பேர் இந்த முயற்சியில் பங்கெடுத்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
நீங்கள் குறித்துள்ள கிரந்த எழுத்துகளை தமிழில் பயன்படுத்துவதில் தமிழறிஞர்கள் நடுவில் கருத்து வேறுபாடு இருக்கிறது. நான் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டே தான் இருக்கிறேன். ஆனால் இலக்கியங்களைப் பார்த்தால் (பாரதி வரை) கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாமலே தான் எழுதி வந்திருக்கிறார்கள்.
February 21, 2007 5:54 PM
--
Anonymous said...
ரொம்ப நீண்ண்ண்ட்ட்ட பதிவு.
February 21, 2007 7:26 PM
--
FloraiPuyal said...
இசுலாம் இசுடாலின் போன்ற இடங்களில் பயன்படும் வகையில் முன்பு குற்றியல் இகர உகரங்களுக்குக் குறிகள் இருந்ததாக கேள்வி. அவற்றை அன்பர் இராமகி போன்றோர் யாராவது மீட்டு வந்தால் இது போன்ற கேள்விகள் எழமாட்டா. இன்றும் பேச்சு வழக்கில் இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தானிருக்கிறோம்.
February 21, 2007 8:04 PM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் பெயர் சொல்லாத நண்பரே. இடுகை நீண்டது தான். பிரித்து இரண்டு பகுதிகளாக இடலாம் என்று இருந்தேன். எங்கே பிரிப்பது என்று புரியாததால் ஒரே இடுகையாக இட்டுவிட்டேன்.
February 21, 2007 8:35 PM
குமரன் (Kumaran) said...
ப்ளோரைப்புயல். குற்றியல் இகர உகரங்களைப் பற்றி நான் அறிந்தவை மிகக் குறைவு. இராம.கி. ஐயாவிடம் கேட்கிறேன்.
February 21, 2007 8:43 PM
ஞானவெட்டியான் said...
அன்பு குமரன்,
தங்களின் இவ்விடுகையை என் பார்வைக்குக் கொண்டுவந்தமைக்கு நன்றி. சின்னாட்களாக(சில நாட்களாக)த் தமிழ்மணம் படிப்பதையே விட்டுவிட்டேன். காரணம்; மலிந்திருக்கும் சாதி சமயச் சண்டைகளும், மொழிச் சண்டைகளும் மறைமுக நேரடி முகம் சுளிக்கவைக்கும் தாக்குதல்களுமே. எழுத்தில் நளினம், கண்ணியம் ஆகியவைகள் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலை.
1. தங்களின் "சொல் ஒர் சொல்" தொடரப்படவேண்டிய ஒன்றே. உங்கள் மூவருடன் நாலாவதாக நானும் சேர்ந்துகொள்கிறேன்.
2. தமிழைக் காக்கிறோம்! "எல்லோரும்(அனைவரும்) நான் பரிந்துரைக்கும் சொல்லைத்தான் உபயோகிக்க(பயன்படுத்த)வேண்டும்" என்று இராமகி கூறவில்லை; "சொல் இருக்கிறது புழக்கத்தில் கொண்டுவந்தால் தமிழுக்கு வளம் சேர்க்கும்" என்றுதான் கூறுகிறார். பசித்தவன் புசிக்கட்டுமே!
3.மனம் ஒவ்விப் புழக்கத்தில் கொண்டுவர நினைப்பவர்கள் முயலட்டும். ஏலாதோர் தங்களின் வசதிப்படி நடக்கட்டும்.
இதைத் தமிழ்மணம் போன்ற ஒர் பொது அமைப்பினில் நக்கலடிப்பதும், சாடமாடையாகப் பேசுவதும், புறணி பேசுவதும் நன்றல்ல.
4.தனித்தமிழில் எழுதுவதுபோல அவர்களும் கலப்புத் தமிழ் வளர்க்க இடுகைகள் இட்டுவிட்டுப் போகட்டும்.
தமிழின் வளர்ச்சிக்காக நாலுபேர் இருந்தால் சங்கதத்தின் வளர்ச்சிக்கு நாலுபேர் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் அடுத்த மொழியை இகழாது ஆதாரங்களுடன் சொற்களை அகழ்ந்தெடுத்து சங்கதத்தை வளர்க்கட்டுமே. யார் வேண்டாமென்றது?
5."ஒரு மொழி(மதம்) உயர்ந்தது; அதனால் மற்ற மொழிகள்(மதங்கள்) தாழ்ந்தது." என்னும் அகந்தையான எண்ணம் களையப்படவேண்டு.
இங்கு அதுபோலவே,"என் சமயத்தில் இன்னின்ன நல்ல செய்திகள் உள்ளன" என்று மட்டும் எழுதட்டும்.
தவறில்லை. வரம்பு மீறி அடுத்த மொழியையோ(மதத்தையோ) உராயும்போதுதான் வம்பு வருகின்றது; தமிழ்மணம் நாறுகின்றது(மணம் வீசுவதல்ல).
6.இளையோர்களுக்கு முறையாகத் தமிழ் பயிலும் வாய்ப்பு இல்லாமையும் ஒரு காரணம்.
7.இராமகி எழுதும்போது, அவர் நடையில்தான் எழுத முடியும். நான் எழுதும்போது என் சட்டியில் இருப்பதுதான் வெளிவரும். இளைய தலைமுறை அவர்களுக்குத் தெரிந்த நடையில்தான் எழுதுகிறார்கள்(மச்சி, தல,....).
"இந்நடையில் எழுதித் தமிழைக் கொலைசெய்யாதே!" என யாராகிலும் எதிர்க்கிறார்களா? இல்லையே!
8.இப்பின்னூட்டம், மொழி, மதம் ஆகிய இரண்டுக்கும் பொருந்தும்.
அவரவர் வழியில், அறிந்த முறையில் இடுகைகளை இடுங்கள்.
வரம்பு மீறுதல் அழகல்ல.(வரம்பு எதுவரை என அடுத்த வினா வரும். அடுத்தவன் கண்ணையும், மனதையும் குத்தாத வகையில் எழுதுங்கள்)
ஒருவர் ஒன்றை வளர்த்தால் மற்றவர் இன்னொன்றை வளர்க்கப் பாடுபடுங்கள்.
யார் யாருக்கு எதுஎது தேவையோ அவரவர்கள் அதையதை எடுத்துக்கொள்ளட்டும்.
"மொழியிலும் மதத்திலும் உயர்வு தாழ்வு கிடையாது" - என் கருத்து மட்டுமே!
உயர்வு தாழ்வு வரும்போதுதான் போர் தொடங்குகிறது.
இப்போதைக்கு இது போதும்.
February 21, 2007 9:07 PM
SK said...
ஜெயஸ்ரீ சொன்ன அந்த ஒரு வரியே போதுமானது!
'முயற்ச்சி" என எழுத்துப் பிழையாக சமுத்ரா எழுதியதையும், இசுடாலின், இசுலாம் என்றெல்லம் எழுதுவதுதான் சரி என நீங்கள் வாதிடுவதையும் ஒப்பிடுவது ஆச்சரியமளிக்கிறது.
இசுலாம் என்னும் போது சொல்லின் உச்சரிப்பே முழுதுமாக ,மாறுகிறதே.
பஸ், பேருந்து ஆனதும் இதுவும் ஒன்றாகுமா?
சரியான உதாரணமாக இல்லையே.
பஸ், பச் என்றால் நீங்கள் சொல்வது சரியாய் இருக்கலாம்.
கடல் என்பதற்கு இன்னொரு பெயர் ஆழி, ஓதம்.
இவற்றை உபயோகிக்க தடையேதும் இல்லை.
சொல் ஒரு சொல் வாழட்டும்; வளரட்டும்.
அதற்காக இதெல்லாம் கொஞ்சம் அதிகமெனத் தோன்றுகிறது.
February 21, 2007 9:20 PM
துளசி கோபால் said...
என்னைச் சொல்லுங்க. எல்லா மொழிகளிலும் சில சொற்களை எடுத்துக்கிட்டுக் கலந்துகட்டி எழுதறதுக்கு
காரணம் 'அவ்வளவாகத் தமிழ் தெரியாது'. தூய தமிழில் (இதைத்தானே தனித்தமிழ்ன்னு சொல்றாங்க?)
எழுதினதைப் படிச்சாலும் பல சமயங்களில் புரிஞ்சுக்க முடியலை. ஒருவேளை, தமிழ்ச் சூழல் இல்லாமப் போனதும்
ஒரு காரணமோ?
நல்ல பதிவு குமரன். ஆழமாச் சிந்திச்சு இருக்கீங்கன்னு தெரியுது.
வாழ்த்து(க்)கள்.
பி.கு: நான் நினைச்சதை நம்ம ஞானவெட்டியார் சொல்லிட்டார்.
February 21, 2007 9:49 PM
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. இந்த இடுகையில் இருப்பவை போன வாரத்திலிருந்து நான் எண்ணிக் கொண்டிருப்பவை. அவற்றை எழுத உங்கள் கேள்வி ஒரு தூண்டுதலாக அமைந்தது. உங்கள் கேள்விக்கு ஜெயஸ்ரீ சொன்னதே போதுமானது. ஆனால் போன இடுகையில் சொன்னது போல் அத்தோடு நிறுத்தாமல் சில எண்ணங்களையும் எழுத நினைக்கிறேன் என்று சொன்னேனே. அதனால் தான் இந்த நீண்ட இடுகை.
இசுலாம், இசுடாலின் என்று எழுத வேண்டும் என்று நான் வற்புறுத்தவில்லை என்று தான் சொன்னேன். ஆனால் அது தான் சரி என்று தமிழறிஞர்கள் நினைத்தால் அப்படியே அவர்கள் எழுதட்டும். அதனை கொடுமையாக இருக்கிறது; கொடுந்தமிழ் என்றெல்லாம் சொல்லுவதைப் பற்றி தான் நான் சொன்னேன். எழுத்துப்பிழைகளுடன் எழுதுவது உங்கள் கண்ணுக்கும் என் கண்ணுக்கும் உறுத்தலாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். பல இடங்களில் நீங்கள் எ.பி.களைத் திருத்துவதைக் கண்டிருக்கிறேன். அப்படி திருத்த திருத்த மாற்றம் வரும். அது போல் சரியானது என்று அறிஞர்கள் எண்ணுவதை புழங்கப் புழங்க மாற்றம் வரும். இதுவே ஒப்பீட்டாக நான் சொன்னது.
பஸ் பேருந்து ஆனது இதற்கு சரியான எடுத்துக் காட்டாகத் தோன்றாவிட்டால் தசரதன் தயரதன் ஆனதும் த்ரௌபதி துருபதை ஆனதும் என்று ஒரு பெரிய பட்டியலை இடுகையில் தந்திருக்கிறேனே; அவை எல்லாம் சரியான எடுத்துக்காட்டுகள் தானே. :-)
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி எஸ்.கே. ஆனால் எது அதிகம் என்று மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள். தவறிருந்தால் மாற்றிக் கொள்கிறோம். நீங்கள் சொல்வது தவறென்றால் நீங்களும் மாற்றிக் கொள்வீர்கள் என்பதையும் அறிவேன். :-)
உங்களின் பல கேள்விகளுக்கும் (இதுவரை கேட்டதற்கும் கேட்காததற்கும்) இடுகையிலும் இதுவரை வந்த பின்னூட்டங்களிலும் விடை சொல்லியிருக்கிறேன் என்றே நினைக்கிறேன். அப்படி ஏதேனும் சொல்லாமல் விட்டிருந்தால் கேளுங்கள். விடை சொல்ல முயல்கிறேன். விடை தவறென்றால் திருத்திக் கொள்கிறோம்.
February 21, 2007 10:01 PM
குறும்பன் said...
நான் விரும்பி படிக்கும் பதிவு சொல் ஒரு சொல்.
ராஜி , ராஜன், ராஜேந்திரன், ராஜா என்பதை வயதானவர்கள் ( என் தாத்தா ) ராசி, ராசன், ராசேந்திரன், ராசா ( ஜ-ச ) என்று தான் அழைப்பார்.
முடிந்தவரை கிரந்த எழுத்துக்களை தவிர்ப்போமே.
February 21, 2007 10:21 PM
இலவசக்கொத்தனார் said...
//முடிந்தவரை கிரந்த எழுத்துக்களை தவிர்ப்போமே.//
ஏன் தவிர்க்க வேண்டும்? கட்டம் என எழுதினால் கட்டமா கஷ்டமா என ஏன் குழம்ப வேண்டும்? இந்த எழுத்துக்கள் தமிழின் பகுதியாகத்தானே இருக்கின்றன? எதற்காக விலக்க வேண்டும்?
February 21, 2007 10:57 PM
Prasannaa said...
சொல் ஒரு சொல் மிகவும் அவசியமான ஒரு பதிவு. இதை தொடர்வதாக சொன்னதற்கு நன்றி.
//நான் அறிந்த வரையில் தமிழால் தனித்து இயங்க முடியும். எந்த விதமான கருத்துகளையும் எடுத்துக் கூறும் வகையில் தமிழில் அடிச்சொற்கள் இருக்கின்றன. அந்த அடிச்சொற்களை வைத்து புது அறிவியல் கருத்துகளைக் கூறும் சொற்களையும் தமிழால் சொல்ல முடியும். அப்படியே சில சொற்கள் தமிழில் ஏற்படுத்த முடியாவிட்டால் அப்போது மற்ற மொழிச் சொற்களை எடுத்தாள தமிழில் திசைச்சொல் என்ற வகை இருக்கிறது. ஆனால் அப்படி செய்வது தமிழில் அந்தக் கருத்தைச் சொல்ல முடியாது என்பது நன்கு நிறுவப்பட வேண்டும். அதற்கு முன்னரே வேற்று மொழிச் சொற்களைப் புழங்கிவிட்டு தமிழில் அதற்குச் சொல் இல்லை; தமிழில் அந்தக் கருத்துகளைச் சொல்ல இயலாது; தமிழால் தனித்து இயங்க இயலாது என்று சொல்வது சரியன்று.//
மிகவும் சரியான கருத்து.
//இசுலாம், இசுடாலின் என்று எழுதவோ பேசவோ சொல்லி வற்புறுத்தவில்லை. ஆனால் அப்படி எழுதுவது தான் சரியான தமிழ் முறை என்று எண்ணுபவர்கள் எழுதினால் அவற்றை கொடுந்தமிழ் என்று சொல்லாதீர்கள//
கிரந்த எழுத்துக்களை வேண்டுவோர் பயன்படுத்தி விட்டு போகட்டும். ஆனால் அது கொடுந்தமிழ் என்று எண்ணுவது மிக மிகத் தவறு.
ஜெயஸ் ரீயின் கருத்தும், ஞானவெட்டியான் ஐயா அவர்களின் பின்னூட்டமும் இந்த பதிவின் தேவை மற்றும் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
உங்களின் இந்த நல்ல பதிவு/முயற்சி தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.
February 21, 2007 11:34 PM
Mathuraiampathi said...
குமரன்,
நீண்ட பதிவாகிலும் அழகாக கருத்தினை கையாண்டிருக்கிறீகள்....நன்றி....
அதிலும் சொளரஷ்டிரத்தை எடுத்துக்காட்டாக கொண்டு சொல்லப்பட்ட விதம் அருமை, ஏனெனில் எனது மற்ற சொளராஷ்டிர நண்பர்களிடமும் இந்த முயற்சியினைக் கண்டு நான் வியந்ததுண்டு. வெல்லட்டும் தங்களது முயற்சி தமிழிலும், சொளரஷ்டிரத்திலும்.
என்னையே எடுத்துக் கொள்ளூங்கள், என்னால் ஷ், ஸ், போன்ற எழுத்துக்களை பயன் படுத்தாமல் பேச/எழுத முடியவில்லை, ஆனால் இந்த எழுத்துக்களை பயன்படுத்துவதால் நான் தமிழனில்லை என்பதுபோல் பேசப்படுவதில் மனம் வருந்தத்தான் செய்கிறது....
என்னால் ஏதாவது செய்ய முடியுமென நீங்கள் கருதினால் தயங்காது தெரிவியுங்கள்.
February 21, 2007 11:36 PM
G.Ragavan said...
பதிவைப் பற்றிய விமர்சனத்திற்குப் போகும் முன் இந்த இருமொழிக் கொள்கை பற்றி ஒரு விளக்கம். அல்லது என் கருத்து என்று சொல்லலாம்.
நீங்கள் தமிழைத் தாய்மொழி என்று சொல்லிக் கொள்வதில் தவறில்லை. தமிழ் பிழைக்க வேண்டும், உயர வேண்டும் என்று விரும்பினாலே தமிழன் என்ற அடைமொழி போட்டுக் கொள்ளலாம். தமிழனாகப் பிறந்து வாளைப்பளமாம் மலப்பளம் சாப்பிடுவதுதான் தவறு. வேறொரு மொழி நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறன்று.
ஒரு இலக்கியவாதியைச் சொல்கிறேன். அவருடைய பெயரைச் சொன்னாலே கரிசல்காடுகள் எல்லாம் பூப்பூக்கும். சருவங்களிலேயே மழை நீர் பெய்யும். கி.ராஜநாராயணன். அவர் தெக்கத்திக்காரர். அவருடைய தாய்மொழி தெலுங்கு. ஆனால் நீங்கள் சொல்வது போல பெரும்பாலும் தமிழ் கலந்த தெலுங்கு. இல்லை இல்லை. தெலுங்கு கலந்த தமிழ். கிண்டலாக இப்படிச் சொல்வார்களாம். காப்பி கீழ சிந்தீருச்சு. இது தமிழ். காப்பி கீழ சிந்தேச. இதுதான் அவர்கள் பேசும் தெலுங்கு. ஆனால் அவர் தமிழிலக்கியத்திற்குச் செய்தது? அவரைத் தமிழர் இல்லையென்று எப்படிச் சொல்ல முடியும்? ஆகையால் நீங்கள் தமிழர் என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
February 22, 2007 12:11 AM
கீதா சாம்பசிவம் said...
சிந்தனைக்கு உரிய பதிவு. ஆனால் இந்த ஷ, ஸ, ஹ, போன்றவற்றை மாற்றினால் உச்சரிப்பும் மாறும், அர்த்தமும் மாறும். அது தேவையா? மொழியோடு உச்சரிப்பும் தேவை என்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் பணி தொடர என்னோட வாழ்த்துக்கள். படிக்கிறேன் அடிக்கடி வந்து, ஆனால் பின்னூட்டம் கொடுக்க முடியறதில்லை. அதனால் வரலைன்னு நினைத்துக் கொள்ளாதீர்கள்.
February 22, 2007 2:29 AM
தருமி said...
இது ஒரு நல்ல தமிழ்த் தொண்டு. வேண்டுவோர் கொள்க.
மேலும் வளர
நல்வாழ்த்துக்கள்.
February 22, 2007 3:53 AM
G.Ragavan said...
// இலவசக்கொத்தனார் said...
ஸ்,ஷ்,ஜ் போன்ற எழுத்துக்கள் வழக்கத்தில் வந்து விட்டதால் அவற்றை சேர்க்க மாட்டேன் என அடம்பிடிப்பது தேவை இல்லை என்பதே என் எண்ணம். //
கொத்தனார்...இங்கு ஸ், ஷ், ஜ் பயன்படுத்துவதில் மட்டுமில்லை பிரச்சனை. அவை பெயர்ச்சொல்லில் வருகையில் ஒன்றும் செய்ய முடியாது. ஜானி என்பதைச் சானி என்றா எழுத முடியும்? ஆனால் இங்கு பொதிந்திருப்பதற்கு வேறொரு பரிமாணமும் உண்டு.
நீங்களே சொல்லியிருக்கும் கஷ்ட எடுத்துக்காட்டையே எடுத்துக்கொள்வோம். கஷ்டமோ இஷ்டமோ இங்கு துன்பமென்றோ விருப்பமென்றோ பயன்படுத்தினால் ஸ், ஷ் எல்லாம் தேவையில்லையே. இவையொன்றும் தெரியாத புதுச் சொற்கள் இல்லையே. இதைச் சொல்வதும்தான் சொல் ஒரு சொல்லின் வேலை.
கஷ்டம் பழகிவிட்டதே என்று சொல்கின்றவர்களுக்குச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நான் முன்பே சொன்ன எடுத்துக்காட்டைச் சொல்லிக் கொள்ள மட்டும் விரும்புகிறேன். மலைப்பழம் என்று வாழையில் ஒரு வகை. அதை அப்படியா உச்சரிக்கிறோம். மலைப்பழம் விரும்புகிறவர்கள் மலைப்பழம் சாப்பிடுங்கள் என்று சொல்வதோடு எங்கள் வேலை முடிகிறது. அதற்கு மேல் உங்கள் விருப்பம். அதாவது நினைவு படுத்திக் கொண்டேயிருப்பது. அதற்கு மேல் உங்கள் விருப்பம்.
February 22, 2007 4:00 AM
K.V.Pathy said...
Congrats to Sourashtrian Thamizhan/ Thamizh Sourashtrian.
tumre mullaa maaikurinchi mullo rovvo ghedi devo.
Pathy.
February 22, 2007 4:01 AM
G.Ragavan said...
// Anonymous said...
ரொம்ப நீண்ண்ண்ட்ட்ட பதிவு. //
என்ன செய்வது அனானி. தமிழின் வளமும் பெருமையும் காலமும் நீண்ண்ண்ண்ண்டதுதானே!
February 22, 2007 4:02 AM
G.Ragavan said...
// ஞானவெட்டியான் said...
அன்பு குமரன்,
தங்களின் இவ்விடுகையை என் பார்வைக்குக் கொண்டுவந்தமைக்கு நன்றி. சின்னாட்களாக(சில நாட்களாக)த் தமிழ்மணம் படிப்பதையே விட்டுவிட்டேன். காரணம்; மலிந்திருக்கும் சாதி சமயச் சண்டைகளும், மொழிச் சண்டைகளும் மறைமுக நேரடி முகம் சுளிக்கவைக்கும் தாக்குதல்களுமே. எழுத்தில் நளினம், கண்ணியம் ஆகியவைகள் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலை.
1. தங்களின் "சொல் ஒர் சொல்" தொடரப்படவேண்டிய ஒன்றே. உங்கள் மூவருடன் நாலாவதாக நானும் சேர்ந்துகொள்கிறேன். //
ஐயா வருக. தங்கள் வருகை எங்களுக்கு மகிழ்ச்சியே. நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் மிகவும் ஏற்கக்கூடியவையே. கடை விரிக்கிறோம். கொள்வதும் கொள்ளாததும் கள்வதும் கல்வதும் கல்லாததும் உங்கள் விருப்பம். சரிதானே ஐயா?
February 22, 2007 4:04 AM
G.Ragavan said...
// SK said...
ஜெயஸ்ரீ சொன்ன அந்த ஒரு வரியே போதுமானது!
'முயற்ச்சி" என எழுத்துப் பிழையாக சமுத்ரா எழுதியதையும், இசுடாலின், இசுலாம் என்றெல்லம் எழுதுவதுதான் சரி என நீங்கள் வாதிடுவதையும் ஒப்பிடுவது ஆச்சரியமளிக்கிறது.
இசுலாம் என்னும் போது சொல்லின் உச்சரிப்பே முழுதுமாக ,மாறுகிறதே. //
அது ஒப்பீடு அல்ல எஸ்.கே. முயற்ச்சி என்று தவறாக எழுதுவதைப் பற்றி அவ்வளவு வருத்தமில்லாத நிலையில் இசுலாம் இசுடாலின் மீது வருத்தம் வருவதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் அவர். தனக்கே தந்தனா...ஊருக்கெப்படி துந்தனான்னு கேக்குறாரு.
February 22, 2007 4:16 AM
ரவிசங்கர் said...
உங்கள் பதிவின் நோக்கத்தையும் பதிவுக்கான தேவையையும் அருமையாக விளக்கி இருக்கிறீர்கள். சவுராஸ்டிர பின்புலத்தில் விளக்கி இருப்பது எளிதாக புரிந்து கொள்ள வைக்கிறது. ஆனால், சவுராஸ்டிரர்கள் குஜராத் போன்ற பகுதிகளில் இல்லையா? அங்கு அந்த மொழி உயிர்ப்போடு இல்லையா? தமிழகத்தில் வழக்கு குறைந்தாலும் அங்கிருந்து கற்றுக் கொள்ளலாம் தானே? புலம் பெயர் பகுதிகளில் வழக்கு குன்றுவது அனைத்து மொழிகளுக்கும் ஏற்படுவது தான்.
பதிவு குறித்த முயற்சியில் இன்னும் பலரை வரவேற்றிருக்கிறீர்கள். பங்கு கொள்ளும் அளவுக்கு எனக்கு திறம் இல்லை என்றாலும் உங்கள் பதிவில் விளக்கச் சொல்லி சில சொற்கைளை பரிந்துரைக்கிறேன்.
பண்டுவம் - இன்னும் சிற்றூர்களில் புழங்கும் சொல். treatment என்னும் சொல்லுக்கு இணையானது. சிகிச்சை என்ற சொல்லுக்கு மாற்று.
மும்முரம் - busy என்ற சொல்லுக்கு ஒத்து வருவது.
அணியம் - ready
அதர், படல் - காட்டு வேலிகளை அடைக்கப் பயன்படும் gate போன்ற ஒன்று.
இட்டறை - குறுகிய பாதை.
இந்த சொற்கள் குறித்தும் நீங்கள் எழுதலாம்.
இன்னும் பல சொற்களும் எங்கள் ஊரில் புழங்குகின்றன. சுத்தமாக ஆங்கிலம் தெரியாத கிராமத்து பாட்டிகளிடம் தொடர்ந்து ஒரு மணி நேரம் பேசினால் பல நல்ல தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ளலாம்.
விக்சனரி குழுமம், தளம் குறித்த பாராட்டுக்களுக்கும் நன்றி. உங்களை போன்றவர்களும் அங்கு பங்களிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். மிகக் குறைவான பங்களிப்பாளர்களே அங்கு இருக்கிறார்கள் :(
February 22, 2007 6:00 AM
குமரன் (Kumaran) said...
ஞானவெட்டியான் ஐயா. நண்பர்கள் என் தனிப்பதிவுகளை மீண்டும் தமிழ்மணத்தில் இணைக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் சொல்லும் இந்த சூழல் தான் என்னைத் தயங்க வைக்கிறது.
என் மனச்சாட்சியைப் போல் மிக நன்றாக என் எண்ணங்களைத் தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள்.
1. உங்களுக்கு அழைப்பு அனுப்பியிருக்கிறேன். மற்ற சில நண்பர்களுக்கும் அனுப்பியிருக்கிறேன். யாராவது இந்தப் பதிவில் இணைந்து செயல்பட விரும்பினால் சொல்லுங்கள். அழைப்பை அனுப்புகிறோம்.
2. நீங்கள் சொல்வது மிகச் சரி ஐயா. இராம.கி. ஐயாவும் சரி, தமிழ் விக்சனரி நண்பர்களும் சரி, சொல் ஒரு சொல்லும் சரி. யாருமே யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
3. இந்த இடுகையே அப்படி நக்கலாஇ பேசுபவர்களுக்கு அவர்களைப் போல் நாமும் நக்கலாஇப் பேசாமல் நேரடியாகத் தரும் விடை.
4. சரியாகச் சொன்னீர்கள். நானும் தனித்தமிழில் எழுதவில்லை. முடிந்தவரையே தமிழ்ச்சொற்களைப் புழங்குகிறேன். ஆனால் தனித் தமிழில் எழுத முயல்கிறேன். அது மற்ற மொழிகளின் மேல் உள்ள வெறுப்பினால் இல்லை.
சங்கதத்தைப் பற்றி நீங்கள் சொன்னதை முழுதாக ஏற்றுக் கொள்கிறேன். என் பதிவுகளில் சில வடமொழிச் சுலோகங்களுக்குப் பொருள் கூறியவை என்று தாங்கள் அறிவீர்கள். முன்பே பலமுறை சொன்னது போல் எனக்கு 'தமிழும் வடமொழியும் இரு கண்கள்'. தமிழின் மேலோ வடமொழியின் மேலோ எனக்கு வெறுப்பில்லை; ஆனால் அதனை வளர்க்கிறோம் என்று இரு புறத்திலும் இருந்து கொண்டு ஒருவர் மற்ற மொழியை அவதூறாகப் பேசிக் கொண்டு அரசியல் செய்வதைக் கண்டு வருந்துகிறேன்.
தமிழுக்குச் சொல் ஒரு சொல் தொடங்கியது போல் வடமொழிக்கும் தொடங்குவேனா என்று யாராவது கேட்டால் நான் சொல்லப்போவது: வடமொழியை அந்த அளவிற்கு அறியேன்.
5. இந்த கருத்தினை எல்லோரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் ஐயா. ஆனால் எத்தனை முறை சொன்னாலும் அலை ஓயப்போவதில்லை என்று தான் தோன்றுகிறது.
6. உண்மை ஐயா. எனக்கும் தமிழ் இலக்கணம் அவ்வளவாகத் தெரியாது. இத்தனைக்கும் நல்ல தமிழ் ஆசிரியர்களைப் பெற்றவன் நான். ஐயப்பன் என்று ஒரு அன்பர் தொல்காப்பியத்திற்கு விளக்கம் சொல்லத் தொடங்கினார். அவரை சிறிது நாட்களாகக் காணவில்லை.
என்னுடைய இரு மொழிகளிலும் ஒரே கேள்வி கேட்கப் படுகின்றன. ஆங்கிலமோ இந்தியோ கற்றால் வேலை வாய்ப்பிற்காவது பயன்படும். தமிழைக் கற்றால் தமிழாசிரியராக மட்டும் தான் போக முடியும். சௌராஷ்ட்ரம் கற்றால் அது கூட இல்லை. இப்படிப்பட்ட வாதத்தை சிலர் வைப்பதைப் பார்த்திருக்கிறேன். பயன் இல்லையென்றால் உங்கள் தாயைக் கூடத் தள்ளிவைத்து விடுவீர்களா என்று கேட்டிருக்கிறேன்.
7. இப்போது சொன்னீர்களே இது மிக மிகச் சரி. எல்லோரும் அவரவர் அறிந்த வரையில் அவரவர் நடையில் தான் எழுத முடியும். அண்மையில் என் நண்பர் ஒருவர் 'நீங்கள் நிறைய நல்ல விதயங்களை எழுதுகிறீர்கள். ஆனால் இன்னும் எளிதாக எழுதினால் என்னைப் போன்றவர்கள் இன்னும் விரும்பிப் படிப்போம்' என்றார். அவருக்காக நான் முயன்று இன்னும் எளிதாக எழுதலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் அது எப்போதும் முடிவதில்லை.
8. மொழி, மதம் மட்டுமின்றி இன்னும் எங்கே எல்லாம் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் நீங்கள் சொன்னது பொருந்தும் ஐயா.
தங்கள் கருத்துகளைத் தெளிவு பட உரைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.
February 22, 2007 6:11 AM
FloraiPuyal said...
//
கொத்தனார்...இங்கு ஸ், ஷ், ஜ் பயன்படுத்துவதில் மட்டுமில்லை பிரச்சனை. அவை பெயர்ச்சொல்லில் வருகையில் ஒன்றும் செய்ய முடியாது. ஜானி என்பதைச் சானி என்றா எழுத முடியும்? ஆனால் இங்கு பொதிந்திருப்பதற்கு வேறொரு பரிமாணமும் உண்டு.
//
இப்படி அனைத்துப் பெயர்ச்சொற்களையும் அப்படியே தமிழில் எழுத வேண்டுமானால் இன்னும் ஒரு மூவாயிரம் புதிய எழுத்துக்களாவது தேவைப்படும். ஸ், ஷ், ஜ் போன்ற கிரந்த எழுத்துக்கள் இருப்பதால் அவற்றைப் பயன்படுத்தலாம் என்று சொல்கிறீர். mathew என்ற பெயரை எப்படி எழுதுவீர்? மே - மா இரண்டிற்கும் இடைப்பட்ட ஒலியாயிற்றே! elizabeth என்பதில் வரும் za என்பதை எப்படித் தமிழில் எழுதுவது? நேற்று வடமொழி, இன்று ஆங்கிலம், நாளை எதுவோ. சொற்களை இரவல் வாங்கும் ஆங்கிலம் கூட எழுத்துக்களை இரவல் வாங்கவில்லையே. அதனால் தமிழுக்கு அவ்வெழுத்துக்கள் தேவையில்லை என்பது என் கருத்து. சானி என்று எழுதினாலும் படிக்கும் பொழுது அதைச் சரியாக உச்சரிக்கப் பழகுகிறோம்.
February 22, 2007 6:59 AM
ஞானவெட்டியான் said...
அன்பு Floraipuyal,
Mathew என்பதை மத்தேயு என விவிலிய மொழிபெயர்ப்பில் உள்ளதே! எத்தனையோ இலட்சம் பேர் பயன்படுத்துகிறார்களே!
February 22, 2007 8:32 AM
குமரன் (Kumaran) said...
அனானி நண்பரே. பெரியாரின் கருத்துகளை பின்னூட்டமாக இட்டிருக்கிறீர்கள். இந்தப் பதிவில் பெரியார் கருத்துகளை எதிர்த்தோ ஆதரித்தோ எதுவும் பேசவில்லை. அதனால் அந்தப் பின்னூட்டத்தை அனுமதித்தால் இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் திசை திருப்பப்படும் என்று அஞ்சுவதால் அதனை அனுமதிக்கவில்லை. மன்னிக்கவும். நீங்கள் அதே பின்னூட்டத்தை இன்னொரு வலைப்பதிவிலும் இட்டிருப்பதைப் பார்த்தேன். அங்கேயும் அவர்கள் உங்களுக்கு இதே போன்ற பதிலைத் தான் சொல்லியிருக்கிறார்கள்.
February 22, 2007 9:12 AM
அருள் செல்வன் கந்தசுவாமி said...
குமரன்,
தொடர்ந்து எழுதுங்கள். அனைவரும் அனைவரிடமிருந்தும் கற்கிறோம். மொழியின் அழகு பயில்வதில்தானே இருக்கிறது. உங்கள் குழுவினருக்கு (!) வாழ்த்து.
அருள்
February 22, 2007 10:06 AM
oagai said...
காக்க காக்க குமரவேள் காக்க!
சற்று விரிவான பின்னூட்டமிடுகிறேன்.
சுருக்கமான பின்னூட்டம்:
குமரன், இதை தொடரவேண்டும் என்பதில் யாதொரு குழப்பமும் ஐயமும் இல்லை.
February 22, 2007 11:44 AM
Kumaresh said...
குமரன் & 'சொல் ஒரு சொல்' குழு நண்பர்களே,
தமிழில் புழக்கத்தில் இல்லாத பல சொற்களை புழக்கத்திற்கு கொண்டு வரும் உங்கள் பணி சிறந்தது. எனினும், கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தக் கூடாது என்பது ஏற்கத்தக்கதல்ல என்பது என்னுடைய கருத்து. பொதுவாக பலர் தங்கள் பெயரை மற்றவர்கள் மாற்றி உச்சரிப்பதை விரும்பமாட்டார்கள். பெற்றோர் ஆசையாக வைத்த பெயரை பிறர் மாற்ற எந்த உரிமையும் இல்லை. என் பெயர் (குமரேஷ்) பல வட நாட்டு நண்பர்கள் மாற்றி உச்சரிக்கும் போது (கும் ரஷ்) திருத்தி இருக்கிறேன். அப்படி இருக்கும் போது, ஸ்டாலினை இசுடாலின் என்று அழைப்பது நல்லதல்ல என்றே தோன்றுகிறது - குறிப்பாக தமிழில் 'ஸ்' என்ற எழுத்து இருக்கும் போது, அதை பயன்படுத்த வேண்டியது தானே?
னன்றி
குமரேஷ்
February 22, 2007 11:52 AM
குமரன் (Kumaran) said...
உண்மை துளசி அக்கா. முழுக்க முழுக்கத் தூய தமிழில் எழுதினாலும் புதிய தமிழ்ச் சொற்களை வைத்து எழுதினாலும் பழந்தமிழ்ச் சொற்களை வைத்து எழுதினாலும் புரிவதில்லை தான். நீங்கள் சொன்னது போல் பழக்கம் இருந்தால் புரியும். அதனால் தான் முடிந்த வரை பழகிக் கொள்வோம் என்று முயல்கிறோம் (உங்களையும் சேர்த்தே சொல்கிறேன். பல இடங்களில் இதுக்கு தமிழ் என்ன என்று கேட்பதைப் பார்த்திருக்கிறேன்). ஆழமா சிந்திப்பது எனக்கு அவ்வளவா வராதுங்க அக்கா. மேலோட்டமா தான் சிந்தித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் அகலமா சிந்திக்க முயற்சி செய்தேன். இல்லாவிட்டால் தமிழ் தாலிபான் என்று திட்டுவார்களே (இப்பவே அப்படி தான் திட்டுகிறார்கள்.) :-)
February 22, 2007 2:19 PM
துளசி கோபால் said...
// இல்லாவிட்டால் தமிழ் தாலிபான் என்று திட்டுவார்களே
(இப்பவே அப்படி தான் திட்டுகிறார்கள்.) :-)//
திட்டு என்பது தமிழ்ச் சொல்லா?
வசை என்பது தமிழ்ச் சொல்லா?
குழப்பம் தீர்க்கணும், குமரா:-)
February 22, 2007 2:38 PM
குமரன் (Kumaran) said...
திட்டு என்பது தமிழ்ச்சொல் தான் அக்கா. வசையும் தமிழ்ச் சொல்லே.
திட்டு என்பதற்கு மணல்திட்டு என்ற இன்னொரு பொருளும் உண்டு.
February 22, 2007 2:51 PM
ஜெயஸ்ரீ said...
நன்றி குமரன். பலர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கான பதில்களை விளக்கமாக அளித்திருக்கிறீர்கள்.
ஆங்கிலம் அன்னிய மொழிச்சொற்களை வாங்கி வளர்ந்தாலும் ஏற்கனவே உள்ள சொற்கள் எல்லாம் அழிந்துவிடுவதில்லை.
இங்கு அமெரிக்காவில் பள்ளிகளில் மொழிக்கல்வி சிறப்பாகவே பயிற்றுவிக்கப்படுகிறது. சொல்ல வந்ததைச் சொன்னால்
போதும் என்ற அணுகுமுறை இல்லை. அழகாகவும் சுவைபடவும் எழுதப்படும் மொழிநடையும் நல்ல சொற்தொகை(vocabulary) யும்
மிகுந்த பாராட்டையும் ஊக்குவிப்பையும் பெறுகின்றன.
இங்கு நடத்தப்படும் பள்ளி, மாநில மற்றும் தேசீய அளவில் நடைபெறும் spelling bee போட்டிகளைப் பார்த்திருப்பீர்கள்
கடினமான, சாதாரண வழக்கில் இல்லாத சொற்களின் எழுத்துக்கோர்வை(spelling) ,,பொருள் மற்றும் அவற்றின்
மூலச்சொற்கள், சொல் உருவான விதம் அனைத்தையும் பயின்று, நினைவு கூர்ந்து சொல்லும் 10, 12 வயது
மாணவர்களைப் பாருங்கள். அந்த சொற்களை அறிந்து ஆகப்போவதென்ன என்று யாரும் கேட்பதில்லை.
பொருள்முதல்வாத(materialistic) நாடாக அறியப்படும் இங்கும் மொழி வளம் ஆரவாரமில்லாமல் பாதுகாக்கப்படுகிறது.
நமக்குத் தாய்மொழியும் கல்வி மற்றும் பணியிடங்களில் ஆங்கிலமும் ஆக இரு மொழிகள் இருப்பதால் மொழி வளத்தில்
கவனம் செலுத்துவது முக்கியமில்லாததுபோல் தோன்றலாம். நம் தலைமுறையில் (சுமார் 15-30 வருடங்களுக்கு முன்பு)
வரை கூட தமிழ் ஆங்கிலம் இரண்டுமே முக்கியத்துவம் பெற்று நல்ல முறையில் பயிற்றுவிக்கப்பட்டதாகவே
நான் உணர்கிறேன். இந்த அளவு தமிழ் மொழித் தேர்ச்சி இப்போதுள்ள தலைமுறை மாணவர்களுக்கு இருக்குமா என்பது
ஐயமே ! இந்த நிலையில் இப்படிப்பட்ட முயற்சிகள் மிகத் தேவையானவை. இல்லையெனில் பாரதி சொன்னதுபோல
'மெல்லத் தமிழினிச் சாகும்'.
மொழி ஒரு கருத்துப் பறிமாற்றக் கருவி மட்டுமா ? இத்தனை நூற்றாண்டுகள் நம் மக்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறை, பண்பாடு
மற்றும் சிந்தனைகளின் கருவூலமல்லவா ?
February 22, 2007 6:20 PM
இலவசக்கொத்தனார் said...
//இங்கு நடத்தப்படும் பள்ளி, மாநில மற்றும் தேசீய அளவில் நடைபெறும் spelling bee போட்டிகளைப் பார்த்திருப்பீர்கள்
கடினமான, சாதாரண வழக்கில் இல்லாத சொற்களின் எழுத்துக்கோர்வை(spelling) ,,பொருள் மற்றும் அவற்றின்
மூலச்சொற்கள், சொல் உருவான விதம் அனைத்தையும் பயின்று, நினைவு கூர்ந்து சொல்லும் 10, 12 வயது
மாணவர்களைப் பாருங்கள். //
ஜெயஸ்ரீ, அப்படியா? அவர்களுக்கு பொருள் எல்லாம் தெரியாது மனப்பாடமாக எழுத்துக் கோர்வை மட்டும்தான் தெரியும் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன்?
February 22, 2007 7:31 PM
ஞானவெட்டியான் said...
அன்பு ஜெயஸ்ரீ,
//சொற்தொகை(vocabulary)//
சொற்தொகை எனில்(என்றால்) சொற்களின் எண்ணிக்கை என்று ஆகுமல்லவா? அதற்குப் பகரியாக(பதிலாக) சொற்குவை எனக் கூறுதல் நலம். குவியலில் இருந்து வருவது குவை.
"சொற்குவை" - அழகாக உள்ளதல்லவா?
"சொல் ஒரு சொல்"லின் பணியை இங்கிருந்தே தொடங்குகிறேன்.
February 22, 2007 8:55 PM
குமரன் (Kumaran) said...
குறும்பன். நீங்கள் தொடர்ந்து 'சொல் ஒரு சொல்' பதிவைப் படித்துக் கருத்துக்களைக் கூறி வருவதற்கு நன்றி.
கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுத முடியும் போது அப்படி எழுதலாம். சரஸ்வதி என்று எழுதும் இடத்தில் சரசுவதி என்று எழுதினால் பொருள் மாற்றம் அடைவதில்லை. ஆனால் கொத்ஸ் சொன்னது போல் கட்டம் என்று எழுதினால் அது கட்டத்தைக் குறிக்கிறதா இல்லை கஷ்டத்தைக் குறிக்கிறதா என்ற குழப்பம் வரும்; இடத்திற்குத் தகுந்தாற் போல் பொருள் கொள்ள முடியும் என்றாலும் தவறான பொருளைக் கொடுப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
ஏற்கனவே சொன்னது போல் கிரந்த எழுத்துகளைப் பற்றிய முடிவு இன்னும் தமிழறிஞர்கள் எடுத்தாற்போல் தெரியவில்லை. கிரந்த எழுத்துகளுடன் தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். தவிர்ப்பவர்கள் தவிர்க்கட்டும்.
February 23, 2007 7:18 AM
குமரன் (Kumaran) said...
வாங்க பிரசன்னா. போன இடுகையைப் படித்து மின்னஞ்சலில் புதிய இடுகைகள் இடும் போது சொல்லுங்கள் என்று மின்னஞ்சல் அனுப்பியதற்கு நன்றிகள். அப்படி மின்னஞ்சல் அனுப்பியவுடன் வந்து இடுகையைப் படித்து கருத்தினைச் சொல்வதற்கும் நன்றி. நீங்களும் இன்னும் இருவரும் அனுப்பிய மின்னஞ்சல்களாலும் நண்பர்களின் கருத்துகளாலும் தான் மீண்டும் தமிழ்மணத்தில் என் தனி வலைப்பதிவுகளையும் இணைக்கத் தொடங்கியுள்ளேன்.
நீங்கள் கிரந்த எழுத்துகளைப் பற்றி சொன்னதே என் கருத்தும். நன்றி.
February 23, 2007 7:22 AM
குமரன் (Kumaran) said...
மதுரையம்பதி ஐயா. தமிழ் உணர்வு கொண்ட பல சௌராஷ்ட்ரர்கள் மதுரையில் இருக்கிறார்கள் என்பதை அனுபவ பூர்வமாக அறிந்தவர்கள் தாங்கள். அதனை இங்கே சொன்னதற்கு நன்றி. அவர்கள் தான் என்னிலும் தமிழ் உணர்வு ஊட்டியவர்கள். சௌராஷ்ட்ர மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர், பட்டிமன்றத் தென்றல், கிரி.ச. சுரேந்திரன் ஐயாவும், அதே பள்ளித் தமிழாசிரியர் சக்திவேல் ஐயாவும் எனக்குத் தமிழுணர்வு ஊட்டியவர்கள். முதலாமவர் சௌராஷ்ட்ரர். பள்ளி, கல்லூரிக் காலத்தில் கவிதைகள் எழுதும் போது சுரேந்திரதாசன் என்ற புனைப்பெயரில் எழுதியிருக்கிறேன்.
நீங்கள் சொல்வது மிக மிக உண்மை ஐயா. கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவது பழக்கத்தால் வந்தது. அதனைக் கொண்டு யாரையாவது தமிழனில்லை என்று சொல்வது வருந்தத்தக்கது; கண்டிக்கத் தக்கது. தனித்தமிழிலேயே எழுதும் பெரியவர்களும் பழக்கத்தால் வடமொழிச் சொற்களைத் தங்கள் எழுத்தில் இடும் போது சாதாரணமான நம்மைப் போன்றவர்கள் அதனைச் செய்யும் போது அதற்கு வேறு காரணம் கற்பிப்பது அரசியலின் பாற்பட்டது.
February 23, 2007 7:28 AM
ஜெயஸ்ரீ said...
//ஜெயஸ்ரீ, அப்படியா? அவர்களுக்கு பொருள் எல்லாம் தெரியாது மனப்பாடமாக எழுத்துக் கோர்வை மட்டும்தான் தெரியும் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன்? //
கொத்ஸ், சொற்களுக்கான பொருளே அறியாமல் எத்தனை சொற்களை அப்படி மனப்பாடம் செய்யமுடியும் ? இந்தப் போட்டிகள் நடத்தப்படுவதன் நோக்கமே மாணவர்களின் சொற்தொகை(vocabulary) யை அதிகரிக்கச் செய்வதுதான். spelling skills பற்றிய புத்தகங்களையும் வலைப்பக்கங்களையும் பாருங்கள்.
நான் சில போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். கேள்விகள் கேட்கப்படும்போதும், சில உதவிக்குறிப்புகள் (clues) கொடுக்கப்படும்போதும் சொல்லின் பொருள் ,மூலச்சொல் மற்றும் அந்தசொல் சார்ந்த இன்ன பிற தகவல்களும் சேர்ந்தே வருகின்றன.
மேலும் எழுத்துக்கோவை(spelling skills) தேர்ச்சிபெற சொற்களின் பொருள் மற்றும் அமைப்பை வைத்துப் புரிந்துகொள்வதே எளிமையான வழி.
விக்கிபீடியாவிலிருந்து
"Serious spelling bee competitors will study root words and etymologies, and often foreign languages from which English draws, in order to spell challenging words correctly "
இதில் etymology என்னும் சொற்பிறப்பியல் மிக முக்கியம். சொற்களின் எழுத்துக்கோர்வை மட்டுமன்றி அந்த சொல் சார்ந்த பல செய்திகளும் அறிந்துகொண்டால்தான் பெரிய அளவில் நடக்கும் இப்போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறலாம்.
சிறிய அளவில் நடக்கும் போட்டிகளில் சொற்களின் பட்டியல் முதலிலேயே அளிக்கப்பட்டுவிடும். அப்போது மனப்பாடம் மட்டுமே செய்வது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் அதுவும் இன்னும் சில சொற்களைத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
February 23, 2007 8:41 AM
ஜெயஸ்ரீ said...
//அன்பு ஜெயஸ்ரீ,
சொற்தொகை(vocabulary)
சொற்தொகை எனில்(என்றால்) சொற்களின் எண்ணிக்கை என்று ஆகுமல்லவா? அதற்குப் பகரியாக(பதிலாக) சொற்குவை எனக் கூறுதல் நலம். குவியலில் இருந்து வருவது குவை.
"சொற்குவை" - அழகாக உள்ளதல்லவா? //
ஆம் ஐயா, சொற்குவை என்பது சொற்தொகை என்பதைவிட அழகாகவே இருக்கிறது.
தொகை என்ற சொல்லுக்கு தொகுப்பு (collection), திரட்டு என்ற பொருளும் உண்டு. சொற்தொகை என்பதும் சரியான பொருளையே தருகிறது.
மிக்க நன்றி ஐயா.
February 23, 2007 9:08 AM
NJAANAVETTIYAAN said...
சரி.
அப்படியே கொள்ளலாம், அம்மா.
February 23, 2007 10:21 AM
குமரன் (Kumaran) said...
நன்றி இராகவன். பாஷா பக்தி நீஸ்தெனோ பாத் நீஸ்த பொன்னோ - மொழிப்பற்று இல்லாதவன் வெறும் பானை (சோறில்லாத பானை) - என்று சொல்வார் நாயகி சுவாமிகள். அதன் படி சௌராஷ்ட்ரத்தின் மேலும் தமிழின் மேலும் ஏன் வடமொழியின் மேலும் எனக்கு பற்று இருக்கிறது. ஒன்றுக்கொன்று ஒவ்வாதது இல்லை இந்த மொழிப்பற்றுகள்.
February 23, 2007 10:36 AM
குமரன் (Kumaran) said...
வாழ்த்துகளுக்கு நன்றி கீதா அம்மா. கிரந்த எழுத்துகளைப் பற்றி உங்கள் கருத்தினை அறிந்தேன். என் கருத்தும் இப்போதைக்கு அது தான்.
எனக்கு ஒரு எண்ணம் உண்டு. வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால் அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது.
தமிழில் பெரும்பாலும் எழுதி வைத்தார்கள் எல்லா இலக்கியங்களையும். அதனால் தான் எழுத்திற்கு முக்கியத்துவமும் எல்லாவற்றையும் குறைவான எழுத்துகளில் சொல்லிவிட முயல்வதும் நடந்தன என்று நினைக்கிறேன். பெரும்பாலான தமிழ் இலக்கியங்கள் செய்யுள் வடிவில் இருப்பதும் அதனால் தான். சொல்ல வந்ததைக் குறைந்த எழுத்துகளின் மூலம் குறைவான சொற்களின் மூலம் சொன்னால் ஓலையில் எழுதி வைப்பதற்கு எளிதாக இருந்தது.
வடமொழியில் பெரும்பாலும் வாய்மொழியாகத் தான் வேதங்களும் இலக்கியங்களும் சொல்லப்பட்டன. அதனால் அங்கே உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதனால் நிறைய எழுத்துகள் இருக்கின்றன. தொடக்கத்தில் உரை நடை வடிவிலும் பின்னர் ஆதி காவியமான இராமாயனம் முதற்கொண்டு பலவகை சந்தங்களிலும் எழுதப்பட்டன.
மேலே சொன்னது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது. ஆனால் இன்று வரை இந்த இரு விதமான கருத்துகளின் இயக்கங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. உச்சரிப்பை முக்கியம் என்பவர்கள் ஒரு பக்கமும் எல்லா உச்சரிப்பையும் இருக்கும் எழுத்துகளாலேயே சொல்லிவிட முடியும் என்று ஒரு பக்கமும் வாதங்கள் நிகழ்கின்றன.
February 23, 2007 10:43 AM
குமரன் (Kumaran) said...
இந்தத் தமிழ்த் தொண்டை வாழ்த்தியதற்கு நன்றி தருமி ஐயா.
February 23, 2007 10:43 AM
குமரன் (Kumaran) said...
இராகவன், கஷ்டம் துன்பம் என்ற இரு சொற்களைக் கொண்டு சொல் ஒரு சொல்லைப் பற்றி விளக்கியதற்கு நன்றி.
ஆக மொத்தம் நீங்களும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துகிறீர்கள். நன்று.
February 23, 2007 10:47 AM
G.Ragavan said...
// ஞானவெட்டியான் said...
அன்பு ஜெயஸ்ரீ,
//சொற்தொகை(vocabulary)//
சொற்தொகை எனில்(என்றால்) சொற்களின் எண்ணிக்கை என்று ஆகுமல்லவா? அதற்குப் பகரியாக(பதிலாக) சொற்குவை எனக் கூறுதல் நலம். குவியலில் இருந்து வருவது குவை.
"சொற்குவை" - அழகாக உள்ளதல்லவா?
"சொல் ஒரு சொல்"லின் பணியை இங்கிருந்தே தொடங்குகிறேன்.//
சொற்குவை மிகவும் அழகான சொல். இந்தச் சொல்லை மிகவும் ரசித்து ருசித்துப் பயன்படுத்தப் பசித்து என்னுடைய கதையொன்றின் தலைப்பில் எழுதினேன். "பொற்சிலையும் சொற்குவையும்" என்று.
http://gragavan.blogspot.com/2005/11/blog-post.html
February 23, 2007 10:48 AM
குமரன் (Kumaran) said...
வாங்க பதி ஐயா. நீங்கள் இப்படி என்னை கிண்டல் செய்வீர்கள் என்று தெரியும். :-) கட்டாயம் என் முதல் அன்னைக்கும் நேரம் ஒதுக்குகிறேன். ஆனால் மேலே சொன்னது போல் சௌராஷ்ட்ரத்தில் எழுத முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. தமிழில் எழுதத் தானே வருகிறது. அதனால் தான் சௌராஷ்ட்ரத்தில் எழுதுவது மிகக் குறைவாக இருக்கிறது. ஆனால் மற்றவர்களை முயற்சி செய்யச் சொல்லிவிட்டு நான் என் தாய்மொழியில் முயற்சி செய்யாமல் இருப்பது தவறு தான்.
நண்பர்களே. கே.வி. பதி ஐயா நான் பதிவெழுதத் தொடங்கிய நாளிலிருந்து என் தமிழ் இடுகைகளை மொழி பெயர்த்தாவது சௌராஷ்ட்ரத்தில் எழுது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். நானும் இதோ அதோ என்று நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு வலைப்பதிவு தொடங்கி சில சௌராஷ்ட்ர இடுகைகளும் இட்டேன். ஆனால் நிறைய எழுதவில்லை. அதனைத் தான் ஐயா இங்கே சௌராஷ்ட்ரத்தில் சொல்கிறார் - உங்கள் முதல் அம்மாவுக்கும் முதலில் கொஞ்சம் நேரம் தாங்க.
February 23, 2007 10:57 AM
குமரன் (Kumaran) said...
இரவிசங்கர், நல்ல கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். சௌராஷ்ட்ரம் என்பது தற்கால குஜராத்தின் ஒரு பகுதி என்றாலும் முற்காலத்தில் மராட்டியத்தின் வட பகுதியும் குஜராத்தும் இணைந்து இருந்த பகுதியே சௌராஷ்ட்ர நாடாக இருந்திருக்கிறது. அங்கு பேசப்பட்ட மொழி சௌரசேனி என்ற பிராகிருத மொழிகளில் ஒன்று. இஸ்லாமிய படையெடுப்பின் போது அங்கிருந்து தெற்கே வந்த குழுவினர் வரும் வழியில் மராட்டி, தெலுங்கு போன்ற சொற்களையும் சேர்த்தெடுத்துக் கொண்டு வந்திருக்கின்றனர். சரியாகச் சொல்வதென்றால் கஜினி முகம்மது சோமநாதபுரத்தை மீண்டும் மீண்டும் தாக்கிய போது அங்கிருந்து இந்த மக்கள் கூட்டம் வெளியேறியது என்று இன்று திருமணங்களில் எங்கள் வரலாறு என்று மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளும் போது சொல்கிறார்கள். இந்த வாய்மொழி வரலாற்றைத் தவிர இலக்கிய ஆதாரங்கள் மிகக் குறைவாகத் தான் இருக்கின்றன. ஊர் விட்டு ஊர் செல்லும் போது இலக்கியங்களையும் எடுத்துச் செல்ல இந்தக் காலத்தில் முடிவது போல் அந்தக் காலத்தில் முடியாமல் போனதோ என்னவோ?
இடைக்காலத்தில் சௌரசேனியில் இருந்து குஜராத்தியும் மராட்டியும் வந்துவிட்டன. அதனால் தற்போதைய சௌராஷ்ட்ர மாவட்டங்களில் குஜராத்தி பேசுபவர்கள் தான் இருக்கின்றார்கள். சௌராஷ்ட்ரர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் மக்கள் தென்னகத்திலும் (தமிழ்நாட்டில் பெரும்பான்மை, சிறுபான்மை திருப்பதியிலும் மைசூரு பெங்களூருவிலும்) வடக்கே ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் இருக்கும் சௌராஷ்ட்ரர்கள் சௌராஷ்ட்ரம் பேசுவதில்லை; அங்கிருக்கும் மொழியையே பேசுகிறார்கள்.
இலக்கியங்கள் இருந்தாலோ இல்லை நீங்கள் சொன்னது போல் சௌராஷ்ட்ரம் பேசுபவர்கள் குஜராத்தியில் இருந்தாலோ சௌராஷ்ட்ர சொற்களை மீட்டெடுப்பது எளிதாக இருக்கும். இருப்பதை வைத்து செய்ய வேண்டியதே நிறைய இருக்கிறது. தமிழுக்கே இத்தனை இடர்பாடுகள் வரும் போது சௌராஷ்ட்ரத்திற்கு இன்னும் எத்தனை இடர்பாடுகள் இருக்கும் என்பதை நீங்கள் ஊகித்தறியலாம். எல்லாவற்றிற்கும் மேலாக சோம்பல் என்ற ஒன்றும் இருக்கிறது - என்னையும் சேர்த்து எத்தனையோ பேர் செய்ய வேண்டியதை அறிந்திருந்தும் செய்யாமல் காலத்தைக் கழிக்கிறோம்.
February 23, 2007 11:10 AM
குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். நல்ல சொற்களைத் தந்திருக்கிறீர்கள். இவற்றைக் குறித்து வைத்துக் கொள்கிறோம். ஒவ்வொன்றாக இடுகிறோம்.
விக்சனரி குழுமத்தில் நான் சேர்ந்துள்ளேன். அங்கு வரும் சொற்களையும் சொல் ஒரு சொல் பதிவில் இடுவதற்காகக் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது கவனித்துக் கொண்டிருக்கிறேன் - பங்கெடுக்கும் அளவிற்கு தமிழ் தெரியவில்லை என்றே நினைக்கிறேன் - அப்படி ஏதாவது தோன்றினால் உடனே குழுமத்தில் சொல்கிறேன்.
February 23, 2007 11:13 AM
குமரன் (Kumaran) said...
ப்ளொரைப்புயல். கிரந்த எழுத்துகளைப் பற்றிய தங்கள் கருத்தினைக் கூறியிருக்கிறீர்கள். நன்றி.
நீங்கள் சொல்வது போல் எல்லா ஒலிக்கும் ஏற்ற எழுத்து எல்லா மொழிகளிலும் இல்லை தான். அவரவர் மொழியில் இருக்கும் எழுத்துகளைக் கொண்டு தான் மற்ற மொழியின் சொற்களை பலுக்குகிறார்கள்.
இப்போது கிரந்த எழுத்துகள் என்று நாம் சொல்லும் ஸ, ஷ, ஹ, ஜ போன்றவை வடமொழி எழுத்துகளா இல்லை பழந்தமிழ் எழுத்துகள் தானா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அது ஒரு முடிவுக்கு வரும் வரை அவரவர் வசதிக்கேற்ப புழங்க வேண்டியது தான். இராகவன் சொன்னது போல் அப்படி புழங்க விருப்பமில்லை எனில் அதற்குரிய தமிழ்ச்சொல்லைப் புழங்க வேண்டியது தான்.
February 23, 2007 11:48 AM
குமரன் (Kumaran) said...
வாழ்த்துகளுக்கு நன்றி அருள் செல்வன் கந்தசுவாமி.
February 23, 2007 11:49 AM
குமரன் (Kumaran) said...
ஓகை நடராஜன் ஐயா. தங்களின் விரிவான பின்னூட்டத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
February 23, 2007 11:50 AM
குமரன் (Kumaran) said...
குமரேஷ். இங்கே இசுடாலின் என்று எடுத்துக் கொண்டது சிலர் அதனை வைத்துக் கேலி பேசியதற்காகத் தான். அப்படி தான் எழுத வேண்டும் என்று வற்புறுத்தவில்லை நாங்கள்.
ஒரு மொழிப் பெயரை இன்னொரு மொழிக்காரர்கள் சரியாக பலுக்குவது (உச்சரிப்பது) என்பது மிகக்கடினம் குமரேஷ். உங்கள் பெயரை கும்ரஷ் என்பவர்கள் தான் என் பெயரை கும்ரான் (கும் ஓடிவிட்டான்), குமாரன் என்று தான் அழைக்கிறார்கள். :-)
ஷ் என்ற எழுத்து தமிழ் எழுத்து தானா என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன குமரேஷ். ஆனால் இப்போது பயன்பாட்டில் இருப்பதால் நானும் புழங்குகிறேன்.
தற்போது நமக்கு ஸ்டாலின் என்ற பெயரை இசுடாலின் என்று எழுதினால் தப்பாகத் தெரிகிறது. ஆனால் அந்தக் காலத்தில் இலக்கியங்களில் அப்படி தான் எழுதியிருக்கிறார்கள்.
February 23, 2007 11:57 AM
குமரன் (Kumaran) said...
ஜெயஸ்ரீ,
மிக நன்றாகச் சொன்னீர்கள். நீங்கள் ஆங்கிலத்தைப் பற்றியும் அமெரிக்காவில் நடக்கும் ஆங்கில எழுத்துக்கோர்வை போட்டி பற்றியும் சொன்னதை நானும் கவனித்திருக்கிறேன். என்னுடன் வேலை பார்க்கும் பலரிடம் இதனை நான் கவனித்திருக்கிறேன். ஏதேனும் ஒரு ஆங்கிலச் சொல் புரியாவிட்டால் அவர்களைக் கேட்பேன். அந்தச் சொல்லின் பொருள், அதன் அடிச்சொல், அடிச்சொல்லும் இந்தச் சொல்லும் தோன்றிய காலகட்டம், பின்புலம், அந்தச் சொல்லின் சொந்தக்காரச் சொற்கள் என்று பலவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். சொற்றொடர்களுக்கும் அப்படி தான். மொழியை இவர்கள் நேசிக்கிறார்கள். நாம் நேசிப்பவர்களை வெறியர்கள் என்றும் தாலிபான் என்றும் திட்டுகிறோம்.
February 23, 2007 4:01 PM
குமரன் (Kumaran) said...
ஞானவெட்டியான் ஐயா. சொற்றொகையும் சொற்குவையும் இரண்டுமே நன்றாக இருக்கின்றன. சொற்றொகை என்பதை இராம.கி. ஐயா புழங்குவதைக் கண்டிருக்கிறேன். சொற்குவையை இராகவன் புழங்கிக் கண்டிருக்கிறேன். இராகவனும் அவர் அந்தச் சொல்லுடன் தலைப்பை இட்ட இடுகையையும் கொடுத்திருக்கிறார்.
February 23, 2007 4:03 PM
ஞானவெட்டியான் said...
"Vocabulay" எனப் பலுக்குவதை(உச்சரிப்பதை)விட சொற்றொகை, சொற்குவை, இரண்டுமே நன்றாக இருக்கின்றன. இதில் ஏதாவதொன்றை வைத்துக்கொள்வோம். இதில் கட்டாயப்படுத்துவதில் பலன் இல்லை. இருப்பதை, அதிலும் தெரிந்ததைச் சொல்வோம்.
"இனிய உளவாக இன்னா கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்றே"
February 23, 2007 8:28 PM
Thangamani said...
நல்ல பதிவு குமரன். இயல்பாக இருக்கிறது உங்களது அணுகுமுறை. சொல் ஒரு சொல்லின் வாசகன் என்ற முறையில் வாழ்த்துக்கள்!
February 23, 2007 9:38 PM
ஜீவா (Jeeva Venkataraman) said...
உங்களுக்கு தெரியாதது இல்லை குமரன். ஆனாலும் என் கருத்தையும் இங்கே பதித்துச் செல்கிறேன்.
"தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர் அந்நாளில். தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது."
இது சமீபத்தில் பறவைகள் பற்றியதொரு ஆங்கிலப்புத்தகத்தில் படித்தது.
இப்படி எந்த மொழியில் இருந்து எந்த மொழிக்குச் சென்றது என்று பார்ப்பது நதிமூலம் ரிஷிமூலம் தேடுவதுபோல என நான் நினைக்கிறேன். நிலை இல்லாத மூலம் கானல் நீரல்லவோ?
==
//பின்னூட்டம், உள்குத்து, வெளிக்குத்து போன்ற சொற்களை பதிவுலகம் தவிர்த்து மற்ற இடங்களில் பேசினால் அவை மற்றவர்களுக்கு கடினமான சொற்களாகத் தோன்றும்//
எனக்கு தெரிந்தவர் - இந்த சொற்களைப்பார்த்து விட்டு, இதென்ன இலங்கைத் தமிழா? என்கிறார்!
February 23, 2007 9:46 PM
குறும்பன் said...
இ.கோ, இராகவன் நான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டார்.
கொஞ்சம் சிரமபட்டிங்கன்னா கஷ்டத்தை துரத்திடலாம் :-))
தமிழ் சொற்களுக்கு கிரந்த எழுத்து தேவையில்லை. குமரேசன் என்பது குமரேஷ் என்று மாறினால் கிரந்த எழுத்துக்கு போகவேண்டியது தான்.
குமரேசனை எப்படி கூப்பிடுவார்கள் ? 'ன்' னை விட்டுட்டு குமரேசா என்றோ இல்லை குமரேசு என்றோ கூப்பிடுவார்கள். இப்ப குமரேஷ் என்று கூப்பிடுகிறார்கள்.
சங்கதத்தின் கலப்பு அதிகமாக ஷ், ஸ், ஜ அதிகமாக நம் பெயரில் கலந்து விட்டது.
February 23, 2007 10:53 PM
குமரன் (Kumaran) said...
நன்றி தங்கமணி. நீங்களும் சொல் ஒரு சொல்லின் வாசகர் என்று அறிந்து மகிழ்ந்தேன்.
February 24, 2007 9:04 AM
குமரன் (Kumaran) said...
ஜீவா. உங்கள் கருத்து என் கருத்தை ஆதரிக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொன்னது போல் சொற்களின் மூலத்தை அறிவது என்னைப் போன்றவர்களுக்கு மிகக் கடினம் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
தமிழைப் போல இருந்து தமிழகத்தாருக்குப் புரியாவிட்டால் அது ஈழத்தவர் பேச்சு வழக்கா என்று கேட்பது இயற்கை என்று நினைக்கிறேன் ஜீவா. நல்ல வேளை ஈழத்தவர் வழக்கா என்று கேட்டார்; வேறு மொழியா என்னாமல். :-)
February 24, 2007 9:06 AM
குமரன் (Kumaran) said...
தங்கள் கருத்திற்கு நன்றி குறும்பன். சங்கதத்தின் கலப்பு தமிழில் ஏற்பட்டுவிட்டது. இனிமேல் பெயர் வைக்கும் போது தமிழ்ப்பெயராக வைக்கலாம் - விரும்பினால். என் இரு மக்களில் ஒருவருக்கு தனித் தமிழ் பெயர்; இன்னொருவருக்கு வடமொழிப் பெயர். இராகவன் அந்த வடமொழிப் பெயர் உள்ளவரைப் பற்றி கேட்கும் போது அந்தப் பெயரைத் தமிழ்ப்படுத்தி தான் கேட்பார். :-)
February 24, 2007 9:09 AM
இலவசக்கொத்தனார் said...
//கஷ்டமோ இஷ்டமோ இங்கு துன்பமென்றோ விருப்பமென்றோ பயன்படுத்தினால் ஸ், ஷ் எல்லாம் தேவையில்லையே. இவையொன்றும் தெரியாத புதுச் சொற்கள் இல்லையே. இதைச் சொல்வதும்தான் சொல் ஒரு சொல்லின் வேலை.//
ஜிரா இதைச் சொன்னார். குறும்பனும் இதன் மூலம் கிரந்த எழுத்துக்களை தவிர்க்க வேண்டும் எனச் சொல்கிறார்.
எனக்கு புரியவில்லை. கஷ்டம் இஷ்டம் எல்லாம் தமிழ்ச் சொற்கள் இல்லையா? கிரந்த எழுத்துக்கள் எல்லாம் வேற்று மொழி எழுத்துக்களா? எதற்காக இவற்றைத் தவிர்க்க வேண்டும் எனச் சொல்கிறோம்? இதன் மூலம் ஒரு சொல்லை சரியானபடி உச்சரிக்க முடியுமானால் அது ஆரோக்கியமான வளர்ச்சிதானே?
உடனே ஆங்கிலத்தில் 'ழ' என்னும் உச்சரிப்புக்கு எழுத்து இருக்கிறதா? அங்கே போய் கேட்காமல் இங்கு என்ன கேள்வி என்றோ, அல்லது தமிழில் 'F' என்னும் உச்சரிப்புக்கு என்ன செய்வீர்கள் என்றோ கேட்டல் என்னிடம் பதில் இல்லை. நான் தமிழ் கற்றுக்கொண்ட நாளிலிருந்து இவை தமிழின் பகுதியாகத்தானே இருக்கிறது?
எதற்காக இவற்றை நீக்க வேண்டும் தவிர்க்க வேண்டும் என இவ்வளவு உணர்ச்சிமயமான எதிர்ப்பு?
February 24, 2007 9:23 AM
இலவசக்கொத்தனார் said...
போன பின்னூட்டம் எழுதும் போது இன்னும் ஒரு கருத்து.
F என்னும் உச்சரிப்பை உணர்த்துவதாக நாம் 'ஃ' என்னும் எழுத்தை சிலர் பாவிப்பதைப் பார்த்து இருக்கிறோம். இது கூடாது என எங்கோ படித்த ஞாபகம். அதுவும் ஏன் என்று புரியவில்லை.
இன்று நாம் பாவிக்கும் எத்தனை சொற்களில் ஆய்த எழுத்தை பயன் படுத்துகிறோம். அப்படி இருக்க, புதிதாக நாம் சொல்ல வேண்டிய ஒரு ஒலிச்சத்தத்திற்கு அதனை பயன்படுத்துவது குற்றமா? பொதுவில் பெருமளவு ஒத்துக் கொள்ளப்பட்டால் அப்படி பாவிப்பது தவறா?
புதிய எழுத்துக்களும் வரக்கூடாது. பயன் படுத்தப்படாத எழுத்துக்களும் வேறு வகையில் பயனாகக்கூடாது. இப்படி எல்லாம் சொல்லி யாருக்கும் புரியாத மாதிரி, பார்த்த உடன் அகராதியைத் தேடி ஓடுமாறு எழுதினால்தான் மொழி வளர்ச்சியில் எனக்கு அக்கறை. என்ன செய்ய.
February 24, 2007 9:42 AM
FloraiPuyal said...
கொத்தனார், கிரந்த எழுத்துக்கள் வடமொழியை எழுதத் தமிழர்கள் கண்டுபிடித்த எழுத்துக்கள். அவற்றைப் பிறமொழிச் சொற்களை எழுத பயன்படுத்தியுள்ளனர். நாமும் அவற்றைப் பயன்படுத்துவது தவறல்ல. தேவையில்லை என்பது வேறு கூடாது என்பது வேறு. தமிழில் மட்டுமின்றி சப்பானிய மொழியிலும் பிறமொழிச்சொற்களை எழுத தனி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். அதே நேரம் ஒருவர் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாது தமிழெழுத்துக்களில் எழுதுவதும் தவறல்லவே. நல்ல தமிழ்ச்சொற்களை எழுதவும் கிரந்தம் வேண்டும் என்றால் தவறு தான்.
February 24, 2007 11:46 AM
SK said...
தமிழ் எழுத்தை, தமிழனே இது தேவை என உணர்ந்து தமிழில் சேர்த்த எழுத்தை, தமிழை வளர்க்கிறேன் எனச் சொல்லும் தமிழ் அன்பர்களே மறுப்பது விந்தையிலும் விந்தை.
'ஷ, 'ஸ' 'ஜ', 'ஹ' இவற்றுக்கெல்லாம் ஒலி வடிவம் மட்டுமில்லாது உருவமும் கொடுத்து ஏற்றுக்கொண்டிருக்கிற ஒன்றை ஒதுக்க வேண்டும் என குரல் எழுப்புபவர் எழுப்பட்டும்.
நான் உபயோகப் படுத்த தயங்க மாட்டேன்!
ஏனெனில், என் தமிழ் வளர்த்த மூதாதையர் உணர்ந்தே செயல் பட்டிருக்கின்றனர் என்பது என் கருத்து.
இவ்வெழுத்துகளின் துணையின்றி, குமரனால் ஒரு சில நல்ல பதிவுகளை வெளியிடவே முடியாது!
February 24, 2007 12:05 PM
SK said...
//நல்ல தமிழ்ச்சொற்களை எழுதவும் கிரந்தம் வேண்டும் என்றால் தவறு தான். //
வடமொழியை எழுதவே இவை கண்டுபிடிக்கப்படான எனின், அவற்றால் எப்படி "நல்ல தமிழ்ச்சொற்களை" எழுத முடியும்?
அவ்ற்றில் இவை வராதே!
February 24, 2007 12:21 PM
குறும்பன் said...
//எனக்கு புரியவில்லை. கஷ்டம் இஷ்டம் எல்லாம் தமிழ்ச் சொற்கள் இல்லையா? //
கஷ்டம், இஷ்டம் என்பவை தமிழ் அல்ல ,
கஷ்டம் = சிரமம், துன்பம்
இஷ்டம் = விருப்பம்
..விக்கிபீடியாவில் இருந்து...
கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், விசேடமாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்திய பொழுது கிரந்த எழுத்துக்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இன்று, மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துக்கள் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.
******
//தமிழ் கற்றுக்கொண்ட நாளிலிருந்து இவை தமிழின் பகுதியாகத்தானே இருக்கிறது? //
உண்மை தான். இதை தமிழின் பகுதி என்பதை விட நிறைய தமிழர்களின் பகுதி என்றால் சரியாக இருக்கும், இப்போ நிலைமை இன்னும் மோசம். அதை சரி செய்வோமே... அதற்காக தானே 'சொல் ஒரு சொல்' போன்ற முயற்சிகள்.
February 24, 2007 1:52 PM
குமரன் (Kumaran) said...
கொத்ஸ். கஷ்டமும் இஷ்டமும் தமிழ்ச் சொற்கள் இல்லை என்பதே என் புரிதல். கட்டமும் இட்டமுமாக இருந்து அவை பின்னர் வடமொழியில் கஷ்டமும் இஷ்டமுமாக மாறியிருக்கலாம். அது எனக்குத் தெரியாது.
கஷ்டமும் இஷ்டமும் வழக்கத்தில் இருக்கிறது; அதனால் அவற்றை நான் பயன்படுத்துவேன்; அது படிப்பவர்களுக்கும் புரிகிறது - இந்த வாதத்தில் நான் எந்தக் குறையும் காணவில்லை. உங்கள் வாதம் கஷ்டத்தை கட்டம் என்று எழுதினால் குழப்பமாக இருக்கிறது என்று வந்தது. அதற்கு இராகவன் அப்படி கிரந்த எழுத்துகளைச் சேர்க்காமல் எழுத 'விரும்பினால்' வேறு தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன என்றார். அதற்கு குறும்பன் அவருடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறார்.
மீண்டும் சொல்கிறேன். கிரந்த எழுத்துகள் வேற்று மொழி எழுத்துகளா இல்லையா என்பதில் சர்ச்சை இருக்கிறது.
ப்ளோரைப்புயல் சொன்னது போல் வடமொழியை எழுத தமிழர்களால் கண்டுபிடிக்கப் பட்ட எழுத்துகள் தான் கிரந்த எழுத்துக்கள். அவற்றில் அ, ஆ, இ, ஈ போன்ற உயிர் எழுத்துகளும் க1, க2, க3, க4 என்று எல்லா வடமொழி எழுத்துகளும் இருக்கின்றன. அவற்றை வடமொழி இலக்கியங்களைத் தென்னாட்டார் எழுத பயன்படுத்தினர். இன்னொரு வகையில் சொல்ல வேன்டும் என்றால், இப்போது எப்படி தேவநாகரி வடமொழி எழுதப் பயன்படுகிறதோ அது போல் தென்னாட்டவர் வடமொழியை எழுத கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தினர். அந்த வகையில் கிரந்த எழுத்துகள் அனைத்துமே வேற்று மொழி எழுத்துகள் தான். இந்தக் கிரந்த எழுத்துகளில் தமிழர்களால் பெரும்பாலும் இப்போதும் பயன்படுத்தப்படுபவை ஷ, ஹ, ஜ, ஸ என்ற எழுத்துகள். தமிழ் நெடுங்கணக்கில் இவை இல்லை. நெடுங்கணக்கில் மட்டுமில்லாததால் இவை தமிழ் இல்லை என்று சொல்லவில்லை; இவை உண்மையிலேயே வடமொழி எழுதப் பயன்பட்ட எழுத்துகள் என்பதாலும் இவை வடமொழி எழுத்துகள் என்று சொல்லலாம். - இது ஒரு வாதம்.
என்ன தான் வடமொழி எழுத்துகளாக இருந்தாலும் தமிழில் வேற்று மொழிச் சொற்களைச் சொல்ல இந்த எழுத்துகள் இன்றியமையாதவை. அதனால் இவை தமிழ் நெடுங்கணக்கில் இல்லாவிட்டாலும் தமிழ் எழுத்துகளாகத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவையும் தமிழரால் ஏற்படுத்தப் பட்ட எழுத்துகள் தானே? தமிழி என்ற தமிழ் பிராமி எழுத்துகளில் இருந்து வந்தவையாக இந்த கிரந்த எழுத்துகள் இருக்க வேண்டும். அந்த வகையிலும் இவை தமிழ் எழுத்துகளாகக் கொள்ள வேண்டும் - இது இன்னொரு வாதம்.
என்னைப் பொறுத்தவரை சில பெயர்களைச் சொல்லவும் எழுதவும் எனக்கு இன்னும் கிரந்த எழுத்துகள் தேவைப்படுகின்றன. அதனால் அவற்றைப் பயன்படுத்துகிறேன். இராகவனும் அப்படியே.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் ஏன் சிலர் கிரந்த எழுத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று. ஆரோக்கியமான வளர்ச்சி எது என்பது சில நேரம் சொல்வது கடினம் கொத்ஸ். அதனால் தான் சௌராஷ்ட்ரத்தைப் பற்றி சொன்னேன். தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுவதை ஆரோக்கியமான வளர்ச்சியாக எண்ணினார்களோ என்னவோ இப்போது எனக்கு பல சௌராஷ்ட்ர சொற்கள் தெரியாது. அதே போல் பிற மொழிச் சொற்களைச் சொல்வதற்கு இந்த எழுத்துகள் வேண்டும் என்பதால் இது ஆரோக்கியமான வளர்ச்சி என்று இன்று தோன்றினாலும் பின்னர் என்ன ஆகும் என்பதை நம் சந்ததியினர் தான் சொல்ல முடியும்.
February 24, 2007 2:44 PM
குமரன் (Kumaran) said...
கொத்ஸ். எதற்கு இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று உணர்ச்சிகரமான எதிர்ப்பு என்பதற்கு மேலே உள்ள வாதத்தைச் சொல்லிவிட்டேன். உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நாம் தமிழ் கற்று கொண்ட போது இந்த கிரந்த எழுத்துகளை உயிர் எழுத்துகளோடோ, மெய் எழுத்துகளோடோ, உயிர் மெய் எழுத்துகளோடோ படித்தோமா என்று எண்ணிப் பாருங்கள். இல்லை என்றே நினைக்கிறேன். இந்த எழுத்துகளை அறிமுகம் செய்யும் போது இவை இந்த மூன்றிலும் வராத எழுத்துகள் என்றே அறிமுகம் செய்தார்கள் என்று நினைக்கிறேன். ஏன் என்று இப்போது எனக்குப் புரிகிறது.
இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதற்கு வரும் எதிர்ப்பும் ஏன் உணர்ச்சிகரமாக இருக்கிறது என்பதையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
நான் இரண்டு பக்கமும் இல்லை.
February 24, 2007 2:48 PM
குமரன் (Kumaran) said...
Fஐ பலுக்குவதற்கு ஃப் என்று நாம் இப்போது எழுதுகிறோம். பழக்கத்தின் காரணமாக அது Fஐ குறிக்கிறது என்று புரிந்து கொள்கிறோம். ஆனால் இந்த பழக்கம் இல்லாதவர் ஃப் F என்று பலுக்கமாட்டார் என்பதே நான் படித்தது. நீங்களும் அதைத் தான் படித்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.
புதிய எழுத்துகள் வரலாமா? ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ இருக்கும் எழுத்துகளை வைத்து தானே எல்லாவற்றையும் பலுக்க முயல்கிறார்கள்? புது எழுத்துகளைக் கொண்டா? ப்ளோரைப்புயல் சொல்லித் தான் ஜப்பானில் வேற்று மொழி எழுத்துகள் சிலவற்றைப் புழங்குகிறார்கள் என்று தெரிகிறது. அதே வழியில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தத் தமிழர்கள் முடிவெடுத்தால் அது தான் நடக்கும். ஆனால் அவை தமிழ் எழுத்துகள் இல்லை என்ற தெளிவு வேண்டும். தமிழ் நெடுங்கணக்கில் புதிய எழுத்துகளைச் சேர்க்க முடியாதா என்றால் அதற்கு விடை என்னிடம் இல்லை; சேர்ப்பதற்கான அதிகாரமும் இல்லை.
// இப்படி எல்லாம் சொல்லி யாருக்கும் புரியாத மாதிரி, பார்த்த உடன் அகராதியைத் தேடி ஓடுமாறு எழுதினால்தான் மொழி வளர்ச்சியில் எனக்கு அக்கறை. என்ன செய்ய.
//
கட்டாயம் இது நடக்கப் போவதில்லை கொத்ஸ். தமிழைச் சிதைத்துத் தான் எல்லோரும் எழுதுகிறோம். அதனால் அது சரி என்று ஆகிவிடாது. ஆனால் அதே நேரத்தில் தமிழைச் சிதைக்காமல் எழுதினால் அகரமுதலியைப் பார்த்து தான் எல்லா சொற்களையும் புரிந்து கொள்ள முடியும் என்பதும் இல்லை. எல்லாம் பழக்கம் தான்.
February 24, 2007 2:55 PM
குமரன் (Kumaran) said...
//தமிழ் எழுத்தை, தமிழனே இது தேவை என உணர்ந்து தமிழில் சேர்த்த எழுத்தை, தமிழை வளர்க்கிறேன் எனச் சொல்லும் தமிழ் அன்பர்களே மறுப்பது விந்தையிலும் விந்தை.
//
எஸ்.கே.
ஷ, ஸ, ஷ, ஹ - இவை தமிழ் எழுத்துகள் இல்லை. மேலே விளக்கம் சொல்லியிருக்கிறேன் பாருங்கள். இவை வேற்று மொழிச் சொற்கள் பலுக்குவதற்குத் தான் தேவையே ஒழிய தமிழ்ச்சொற்களைப் பலுக்குவதற்குத் தேவை இல்லை. வேண்டுமானால் யோசனை என்பதை யோஜனை என்றோ செல்வம் என்பதை ஷெல்வம் என்றோ அரன் என்பதை ஹரன் என்றொ சொல் என்பதை ஸொல் என்றோ பலுக்குவதற்கு வேண்டுமானால் தேவையாக இருக்கலாம். ஆனால் அப்படி பலுக்குவது தமிழ்ச்சொற்களைப் பலுக்கும் முறை இல்லை என்பதைத் தமிழை வளர்க்கிறேன் என்று சொல்லும் தமிழ் அன்பர்கள் எல்லாம் அறிந்திருக்கிறார்கள். அதனை மற்றவர்கள் மறுத்தால் அது விந்தையே இல்லை.
//'ஷ, 'ஸ' 'ஜ', 'ஹ' இவற்றுக்கெல்லாம் ஒலி வடிவம் மட்டுமில்லாது உருவமும் கொடுத்து ஏற்றுக்கொண்டிருக்கிற ஒன்றை ஒதுக்க வேண்டும் என குரல் எழுப்புபவர் எழுப்பட்டும்.
நான் உபயோகப் படுத்த தயங்க மாட்டேன்!
//
நானும் நீங்கள் சொன்ன நான்கு எழுத்துகளையும் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் அவை தமிழ் இல்லை என்பதை உணர்ந்தே பயன்படுத்துகிறேன். அவை தமிழ் நெடுங்கணக்கில் இப்போது இல்லை என்பதும் இது வரை எந்தக் காலத்திலும் இருந்ததில்லை என்பதும் உண்மை. இனி மேல் தமிழறிஞர்கள் அவற்றைச் சேர்த்தால் உண்டு.
தமிழில் ஒரு க, ஒரு ச, ஒரு ப, ஒரு த தானே இருக்கின்றன? அவற்றிற்கும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தினால் 'உச்சரிப்பு' மாறாது என்று எண்ணி 'உச்சரிப்பை' முக்கியமாக எண்ணும் அன்பர்கள் பயன்படுத்தினால் அதுவும் சரி தான். ஆனால் அவர்களும் அந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் இல்லை என்பதை உணர வேண்டும்.
February 24, 2007 9:42 PM
இலவசக்கொத்தனார் said...
//ஆனால் அவர்களும் அந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் இல்லை என்பதை உணர வேண்டும்.//
குமரன் அண்ணா, அப்போ இதெல்லாமும் தமிழ் எழுத்துக்கள்தானா? எழுத்துரு அளவில் கேட்கிறேண்ணா. பழைய கல்வெட்டுகளில் வட்டெழுத்து இல்லையாண்ணா இருக்கு. பேசாம அதுக்கு ஒருங்குறி வடிவங்கள் குடுத்து இனி வட்டெழுத்தில் எழுதினால்தான் அக்மார்க் தமிழன் அப்படின்னு ஒரு அரசாணை போடலாங்களாண்ணா?
February 24, 2007 11:23 PM
குமரன் (Kumaran) said...
கொத்ஸ் 'தம்பி'. :-)
எனக்கு தெரிஞ்சதைச் சொன்னேன்.
வட்டெழுத்துல தமிழ் எழுதப்பட்ட போது கூட தமிழ் நெடுங்கணக்குல ஜ,ஸ,ஹ,ஷ,க்ஷ இருந்தது போல் தெரியவில்லை. அதனால நீங்க விரும்புற மாதிரி வட்டெழுத்துகளை ஒருங்குறிகளாக மாத்தி அதனைத் தான் புழங்கணும்ன்னு அரசாணை வெளியிட்டாலும், கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் இல்லை என்ற உணர்வு வேண்டும்.
வட்டெழுத்துகளோ தற்கால எழுத்து வடிவங்களோ எந்த வடிவங்களிலும் தமிழ் நெடுங்கணக்கில் கிரந்த எழுத்துகள் இருந்ததில்லை. அதனை மட்டுமே சொன்னேன். அவற்றைத் தள்ளி வைத்து எழுதுபவன் தான் அக்மார்க் தமிழன் என்று சொல்லவில்லை. அப்படி நீங்கள் பொருள் கொண்டு என்னை அண்ணன் என விளித்துக் கேட்கிறீர்கள் போல. அப்படிப் பார்த்தால் நானும் அக்மார்க் தமிழன் இல்லை. (உன்னை யாரு தமிழன்னு சொன்னான்னு கேக்கறீங்களா? :-) )
February 25, 2007 7:51 AM
இலவசக்கொத்தனார் said...
நான் வட்டெழுத்துக்களில் கிரந்த எழுத்து இருக்கான்னு கேட்க வரலை. அதுதான் இந்த கால தமிழ் கூட இல்லைன்னு சொல்லியாச்சே!
நான் சொல்ல வந்தது, தமிழின் தூய தன்மைக்கு பழங்காலத்தில் இருந்தது போன்றே இருக்க வேண்டுமானால் வட்டெழுத்தையும் வழக்குக்கு கொண்டு வர வேண்டும் என்பதே. அதற்கு உங்களிடமிருந்து பதில் எதிர்பார்க்கவில்லை, உங்களை முன் வைத்து இங்கு வரும் மற்றவர்களின் கருத்து என்ன எனப் பார்க்கவே அந்த கேள்வி.
//(உன்னை யாரு தமிழன்னு சொன்னான்னு கேக்கறீங்களா? :-) )//
இதுல நீங்களும் நானும் கிட்டத்தட்ட ஒரே கட்சிதான்!
February 25, 2007 8:09 AM
oagai said...
vocabularyக்கு சொற்றொகை என்பதையே நான் பயன்படுத்துகிறேன், பரிந்துரைக்கிறேன்.
சொற்றொகை என்பது சொல் தொகுப்பு என்ற பொருளைத் தருகிறது. சொற்குவை என்பது சொல் குவியல் என்ற பொருளைத் தருகிறது. தொகுப்பு நூல்களை குறுந்தொகை, எட்டுத்தொகை என்றெல்லாம் முன்னோர் பெயரிட்டிருக்கிறார்கள்.
குவியலில் முறையின்மையும் முழுமையின்மையும் பண்புகளாக இருக்கின்றன. தொகுப்பில் முறைமையும் முழுமையும் பண்புகளாக இருக்கின்றன.
மேலும் சொற்குவை என்பதை சில புதுக்கவிதைகளை விவரிக்க நான் பயன்படுத்தியிருக்கிறேன்.
February 25, 2007 9:31 AM
oagai said...
குமரன்,
'சொல் ஒரு சொல்' ஒரு அருமையான முயற்சி. இங்கேயே நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஆங்கிலச் சொற்களுக்கு மாற்றுச் சொல் தருவதில் முன்னுரிமை தரவேண்டும். வடமொழி என்பது நம் பண்பட்டுடன் கலந்துவிட்ட ஒன்று. மேலும் அதன் பல சொற்கள் தானாக வழக்கொழிந்து போய் அதற்குறிய தமிழ்ச் சொற்கள் வந்து விடுகின்றன.(உபாத்தியாயர்=வாத்தியார்=ஆசிரியர்).
இம்முயற்சியில் ஞானவெட்டியான் ஐயா அவர்களைப் போல நானும் கலந்துகொள்ள விரும்புகிறேன்.
இனி பதிவைப் பற்றி என் கருத்துகள். (முடிந்தவரை மற்றவர்கள் சொன்ன எனக்கு ஏற்புடைய கருத்துகளை தவிர்த்திருக்கிறேன்.)
1. ஆங்கிலம் பிற மொழிகளிடமிருந்து சொற்களை எடுத்துக் கொள்வதால் வளம் பெறுகிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதன் இன்றைய நிலைக்கு ஒரு வல்லரசின் மொழி என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. குறைந்த சொற்றொகுதி(vocabulary)யை உடைய ஆங்கிலத்துக்கு தேவைகளுக்கு ஏற்ப பிற மொழி சொற்களை ஏற்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதை கட்டாயமாகக் கொள்ளாமல் விருப்பத்துடனே சொற்களை ஏற்பதனால் இன்று அதன் சொற்றொகுதி பிரம்மாண்டமானதாய் இருக்கிறது.
ஆனால் தமிழின் சொற்றொகுதி இயல்பாகவே மிகப் பெரியது. நான் மொழி ஆய்வோ அல்லது அது சார்ந்த படிப்போ செய்தவனல்லன் ஆயினும் வெறும் பட்டறிவினாலேயே இதைச் சொல்கிறேன். இங்கு இரண்டு சொற்களை குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று கடைதல் என்ற சொல். சுழற்றுவதால் ஒரு இயந்திர பலனை அடைவதைக் குறிக்கும் சொல். தயிர் கடைதல், தீக்கடைதல், மரம் கடைதல், கடைசல் பட்டறை, கடைந்தெடுத்த சிற்பம். இந்த சொல் குறிக்கும் செயல் ஆங்கிலத்தில் பல சொற்களால் வழங்கப்படுகின்றன. பொறியியல் பட்டறைகளில் திருப்பு என்ற பொருள் தரும் turning என்ற சொல் பயன்படுகிறது. துளையிடும் சிற்றுளி போன்ற கருவிக்கு அலகு என்ற சொல் இரண்டு தலைமுறைக்கு முன் வரை புழக்கத்திலிருந்தது. இன்று அதன் பெயர் drill bit. அலகு என்பது அக்கருவிக்கு நேரான சொல். இன்று நாம் புழங்கும் எல்லா கருவிகளையும் நான் அதன் நேரான தமிழ் சொற்கள் மூலமாக அறிந்திருக்கிறேன். ஆனால் இவை யாவும் இன்று புழக்கத்தில் இல்லை.
என்னிடமிருக்கும் ஆங்கில அகராதியில் blog என்ற சொல்லே தொகுக்கப்படவில்லை. Web log என்பதிருந்து வந்த சொல் blog என்று விக்கி சொல்கிறது. ஆனால் வலைப்பூ/வலைப்பதிவு என்ற சொல் தமிழில் ஏற்கனவே இருந்த சொல்தானே! இருக்கும் சொற்களை புழங்கத் தொடங்கினாலே நமது சொற்றொகை அல்லது சொற்றொகுதி எவ்வளவு பெரியது என்பது விளங்கும்.
2. செங்கிருதமும் தமிழும் இந்தியாவின் தொன்மொழிகள். இரண்டு மொழிகளுக்குள்ளும் மற்றொன்றின் சொற்கள் கலந்திருப்பதை அறிய முடிகிறது. அவ்வகையில் தனக்கென தனியான இலக்கணத்தை வைத்திருக்கும் தமிழ் இன்னொரு மொழியைச் சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுவது தமிழியல்பு அறியாத அறியாமையாகவே கருத முடியும். செங்கிருதத்தின் சொற்கள் தமிழரின் உச்சரிப்பு முறைகளுக்கு ஒவ்வாதவை. சற்றும் ஒவ்வாதவை. ரகர எழுத்து முதற்சொற்கள் (ராமன்), மெய்யொலியில் தொடங்கும் சொற்கள் (த்வனி), பல மெய்யொலிக்கூட்டுகள்(ஸ்ரீ), நெட்டொலி சொல் முடிவுகள்(சீதா= சீதை அல்லது சீத), சிரமத்துடன் எழுப்பவேண்டிய ஒலிகள்(தட்சினாயனம்), தமிழ் நெடுங்கணக்கில் இல்லாத ஒலிகள்(ஜ,ஸ,ஷ,) இவை யாவும் தமிழருக்கு இன்றும் பிரச்சனையாக இருப்பவை. இதையும் மீறி செங்கிருதத்தின் சொற்கள் சமயத்தை பரப்புகிறவர்களாலே புகுத்தப்பட்டிருக்கிறது.
உண்மையில் செங்கிருதம் தவிர்த்தோ அல்லது கலந்துவிட்ட சொற்களை தமிழ் உச்சரிப்புடனோ கூறவே தமிழர் விரும்புவர்.(லெச்சுமி என்று பாமரனும் இலக்குமி என்று பண்டிதனும்) இந்நிலையில் தமிழ் செங்கிருதத்தைச் சார்ந்திருக்க வேண்டுமெனக் கூறுவது தமிழை உணராமையின் உச்சம். ஆனால் செங்கிருதம் தன்னிடத்தே கொண்டிருக்கும் அளப்பறிய அறிவுக் கருவூலத்தை நாம் எளிதில் அடைய அம்மொழியை முழுதும் அறிதலே சாலச் சிறந்ததன்றி தமிழில் அம்மொழியைக் கலத்தலால் அன்று.
3.ஸ்டாலின், இஸ்லாம், சரஸ்வதி, சுரேஷ், சமஸ்கிருதம் போன்ற சொற்கள் உச்சரிப்பதற்கு கடினமானவை. இதற்கான வழக்கு தமிழுக்கு தேவைப்படாமலேயே பெரும் சொற்றொகுதியைக் கொண்டிருக்கிறது. உச்சரிப்பதைப் போலவே எழுதுவது என்பதில் என்ன தவறு காணமுடியும்? உண்மையில் அவற்றை அவற்றின் வேற்று மொழி உச்சரிப்புடனே எழுத முற்படுவது ஒரு வகையில் உச்சரிப்பு தினிப்பல்லவா? வேற்று மொழியைக் கற்றுக் கொள்ள முயலும் போதல்லவா நாம் இந்த பயிற்சிக்கு வரவேண்டும்? வடமொழியிலிருந்து ராமாயணத்தை செய்த கம்பரும், ஐரோப்பிய மொழிகளிலிருந்து பல தமிழ் நூல்களைச் செய்த வீரமாமுனிவரும், வேறு பலரும் வேற்று மொழிச் சொற்களை தமிழ்ப்படுத்தியே கையாண்டிருக்கின்றனர்(சூசை). இவ்வாறு தமிழ்ப் படுத்தி எழுதும் போது கஷ்டத்தை கட்டமென்றும் இஷ்டத்தை இட்டமென்றும் எழுதாமல் கடினம் விருப்பம் என்று எழுதினால் குழப்பம் குறைவதோடு அழகும் அதிகமாகும், படிப்பதற்கும் எளிதாகும். இஸ்லாம், ஸ்டாலின் போன்ற இந்திய தொடர்பில்லாத சொற்களை இசுலாம், இசுடாலின் என்றழைப்பது கொச்சையாக சிலருக்குத் தோன்றலாம். இவற்றை எழுதுவோரின் தனிப்பட்ட விருப்புகளுக்கு விட்டுவிட்டாலும் சரஸ்வதி, சுரேஷ் போன்ற சொற்களை சரசுவதி, சுரேசு என்று எழுதுவது வலியுறுத்தப்படவேண்டும். நம் மொழியில் தவிர்க்கமுடியாத சொற்களுக்காகவே ஸ ஷ ஜ க்ஷ ஹ போன்ற வேற்றொலிகளை எழுத்துக்களாக அனுமதித்தனர். இதிலும் க்ஷ இப்போது வழக்கொழிந்து விட்டது. ஆனால் இவற்றைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. இவை தமிழருக்கு உச்சரிக்கக் கடினமானவை. என் வட்டத்தில் என்னை நடராசு அல்லது நடராசா என்று அழைப்பவர்களே அதிகம். நடராஜா என்று அழைப்பவர்கள் மிகக் குறைவு.
4. ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறிக்கொள்ளவே மொழி என்பதால் அவ்விருவருக்கும் புரிந்து விடும்போது அது எந்த மொழி சொல்லாக இருந்தால் என்ன என்கிற வாதம் ஏற்கத்தக்கது அல்ல. இதை ஏற்றுக் கொள்வோமானால் தமிழை விடுத்து ஆங்கிலத்தை நம் பேச்சு மொழியாக ஏற்றுக் கொண்டுவிடலாம். இந்த வாதத்தை நீட்டி எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம் என்ற முறைமைக்கு வந்து விட்டால் நாம் அடையப் போகும் பலன்கள் கணக்கிலடங்காதவை. செய்ய விரும்புவோமா நாம்?
இங்கு இராம கி ஐயா அவர்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அவர் தரும் தமிழமுது அருமையானது. வேர்சொற்களுடன் இலக்கிய ஆதாரங்களுடன் அவர் எல்லா சொற்களுக்கும் தமிழ்ச் சொற்களைத் தருகிறார். சீருந்து ஓட்டிக்கு துரவர் என்று அவர் சொன்ன சொல் மிகப் பொருத்தம். நான் பயன்படுத்துகிறேன். இந்த சொல்லும் பயன்பாட்டில் இருந்து இப்போது வழக்கொழிந்து போன சொல் தான். இதுவும் அத்தொழிலுக்கான நேரான சொல். ஆங்கிலத்தைப் போன்று செலுத்துதல்(drive) என்ற பொதுச் சொல்லை அப்படியே பயன்படுத்துவது போலில்லை. செங்கிருதம் என்பதும் அவர் சொல்லி நான் கற்றுக் கொண்டதுதான். இணையத்தில் தமிழ் பரப்ப அதன் மூலம் தமிழகத்தில் தமிழ்ச் சொற்கள் பெருக நாம் அவரை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
February 25, 2007 9:48 AM
oagai said...
கொத்தனார் இந்த கிரந்த எழுத்துகளின் மேல் அளவற்ற பாசமும் பற்றும், ஆசையும் அன்பும், ஆதரவும் அரவனைப்பும், ஆராதிப்பும் அபிமானமும், வேட்கையும் விருப்பமும், காதலும் காமமும், பிரேமையும் பிடித்தமும், பீடும் பித்தும், வைத்திருக்கிறார் போலிருக்கிறது.
தமிழ் சொற்களுக்கு இவ்வெழுத்துக்கள் தேவையே இல்லை. இந்த உச்சரிப்புகள் தமிழருக்கு சுமை. பெருஞ்சுமை.
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரு தெலுங்கு நடிகையின் பெயரை சரளமாக உச்சரிப்பது எனக்கு இன்றைக்கும் சிரமம்தான்.(பிரதியுக்ஷா) புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
February 25, 2007 10:02 AM
குமரன் (Kumaran) said...
ஓகை ஐயா. உங்கள் விருப்பப்படி இந்தப் பதிவில் சேர்வதற்கு அழைப்பினை அனுப்பியிருக்கிறேன்.
February 25, 2007 11:18 AM
குமரன் (Kumaran) said...
ஆங்கிலச் சொற்களுக்கு மாற்றுச் சொல் தருவதில் முன்னுரிமை தரவேண்டும் என்று நீங்கள் சொன்னது நினைவிருக்கிறது ஓகை ஐயா. அதற்குப் பின் இரண்டு மூன்று இடுகைகள் அதற்காக இட்டிருக்கிறேன்.
வடமொழி நம் பண்பாட்டுடன் கலந்துவிட்ட ஒன்று; எந்த சொல் வடசொல்; எது தமிழ்ச்சொல் என்று பிரித்தறிவது சில நேரம் கடினம் - என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சொற்கள் தானே வழக்கிழந்து தமிழ்ச்சொற்கள் வருகின்றன என்று நான் எண்ணவில்லை. வடசொற்களுக்குப் பதிலாகத் தமிழ்ச்சொல்லைத் தமிழில் பேசும் போதும் எழுதும் போதும் புழங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நடக்கும் (நடந்த) முயற்சிகளே வடசொற்கள் மெதுவாக வழக்கிழக்க வழி செய்தது.
உங்கள் கருத்துகள் அனைத்துடனும் ஒத்துப் போகிறேன் ஐயா. மிகச் சிறப்பாக கருத்துகளைத் தொகுத்திருக்கிறீர்கள்.
February 25, 2007 11:29 AM
oagai said...
ரவிசங்கர் அருமையான சில சொற்களை தந்திருக்கிறார்.
// இன்னும் பல சொற்களும் எங்கள் ஊரில் புழங்குகின்றன. சுத்தமாக ஆங்கிலம் தெரியாத கிராமத்து பாட்டிகளிடம் தொடர்ந்து ஒரு மணி நேரம் பேசினால் பல நல்ல தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ளலாம். //
உண்மை. பாமரர்களும் படிக்காதவர்களும் பல சிறந்த சொற்களை பயன்படுத்துகின்றனர். குஷி படத்தில் ego என்பதை விளக்கவும் அதை தமிழில் சொல்வதற்கும் விஜய் படாத பாடு படுவார். அப்போது ஜோதிகாவின் தந்தையாக நடிக்கும் விஜயகுமார் 'அட அகம் புடிச்ச கழுதை' என்று சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு போய்விடுவார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசுவதாக "அகம் அழியவில்லை உனக்கு' என்றொரு வசனம் வரும்.
ego என்பதை தமிழில் அகம் என்ற சொல் பயன்பாட்டால் பாமரர் பயன்படுத்துகின்றனர்.
February 25, 2007 12:31 PM
oagai said...
// இந்த நிலையில் இப்படிப்பட்ட முயற்சிகள் மிகத் தேவையானவை. இல்லையெனில் பாரதி சொன்னதுபோல
'மெல்லத் தமிழினிச் சாகும்'.//
ஜெயஸ்ரீ அவர்களே,
பாரதி இது போல் சொல்லவே இல்லை. ஒரு பேதை அவ்வாறு சொன்னதாகவே பாரதி சொல்லியிருக்கிறார். என்னுடைய இந்த பதிவை தயைகூர்ந்து படித்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
February 25, 2007 12:43 PM
ஜெயஸ்ரீ said...
//பாரதி இது போல் சொல்லவே இல்லை. ஒரு பேதை அவ்வாறு சொன்னதாகவே பாரதி சொல்லியிருக்கிறார்//
ஓகை ஐயா,
"மெல்லத் தமிழினிச் சாகும் அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஒங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்
இந்த நிலை வரலாமோ
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"
இந்த வரிகள் நினைவில் இருக்கின்றன.
அவசரத்தில் செய்த தவறுக்கு வருந்துகிறேன்.
உங்கள் பதிவைப் படிக்கிறேன்.
February 25, 2007 4:32 PM
இலவசக்கொத்தனார் said...
//கொத்தனார் இந்த கிரந்த எழுத்துகளின் மேல் அளவற்ற பாசமும் பற்றும், ஆசையும் அன்பும், ஆதரவும் அரவனைப்பும், ஆராதிப்பும் அபிமானமும், வேட்கையும் விருப்பமும், காதலும் காமமும், பிரேமையும் பிடித்தமும், பீடும் பித்தும், வைத்திருக்கிறார் போலிருக்கிறது.
தமிழ் சொற்களுக்கு இவ்வெழுத்துக்கள் தேவையே இல்லை. இந்த உச்சரிப்புகள் தமிழருக்கு சுமை. பெருஞ்சுமை.//
இருந்துட்டுப் போகறேன் ஐயா. அந்த எழுத்துக்களின் மேல் மட்டும் அப்படின்னு சொல்லாம விட்டீங்களே. அதற்கு ரொம்ப நன்றி.
என்னளவில் கஷ்டம் நஷ்டம் எல்லாம் தமிழ் வார்த்தைகள்தான். "நான் நாளைக்கு அந்த Side ஒரு Tour plan பண்ணியிருக்கேன். நீயும் உன் familiyயும் join பண்ணறீங்களா? interest இருக்கா?" என்ற அளவில் தமிழ் எழுதாமல் இருக்கத்தான் முயல்கிறேன்.
மற்றபடி உங்களோடு கம்பன் எழுதினாரா தொல்காப்பியர் எழுதினாரா என்றெல்லாம் விவாதம் செய்யும் அளவிற்கு எனக்கு இலக்கியம் தெரியாது. அவருக்குப் பின் வந்த அறிஞர்கள் வேண்டும் என நினைத்துத்தான் இந்த எழுத்துக்களை சேர்த்துள்ளார்கள். தமிழ் உச்சரிப்புக்கும், வெளியில் இருந்து வந்த பொருள்களுக்கும் சம்மந்தம் உண்டாக்கத்தான் கம்பனுக்குப் பின்வந்தோர் கிரந்தங்களை ஏற்றிருப்பார்களோ என்னமோ, எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு அவை இருப்பதால் சௌகரியமாக இருக்கிறது.
என் பெயரைத் தமிழில் எழுதும் பொழுது கிரந்த எழுத்துக்களை பயன்படுத்த வேண்டியது வரும். அந்த எழுத்துகள் தமிழில் இருக்கும் பொழுது அவை இல்லாமல் என் பெயரைச் சிதைத்தால் எனக்குப் பிடிப்பதில்லை. அப்படித்தான் பலருக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.
நீங்கள் கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தாமல் இருக்கலாம். அது தவிர்க்கப்பட வேண்டும் எனச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இன்று நான் காட்டியது போல பிற மொழி சொற்களை கலவாமல் எழுதப் பழகுவோம். அதுதான் இன்று நாம் செய்ய வேண்டியது. அதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் கல்கி எழுதியது தமிழா அல்லது கம்பன் எழுதியது தமிழா எனப் பார்க்கலாம்.
இல்லையென்றால் எது தமிழ் என முடிவு செய்து கொள்ளுங்கள் அதன் பின் நான் கற்றுக் கொள்கிறேன் என என் மகன் சொல்லிவிடும் அபாயம் இருக்கிறது.
February 26, 2007 6:46 AM
ஓகை said...
// ....பிரேமையும் பிடித்தமும், பீடும் பித்தும், வைத்திருக்கிறார் போலிருக்கிறது......
இருந்துட்டுப் போகறேன் ஐயா. அந்த எழுத்துக்களின் மேல் மட்டும் அப்படின்னு சொல்லாம விட்டீங்களே. அதற்கு ரொம்ப நன்றி. //
கொத்தனாருக்கு கோபம் வந்துவிட்டது போலிருக்கிறது. கொத்தனாருக்காக கொஞ்சம் அதிகமாக சொல்லப்படுவது மற்றவருக்கு என்னால் சொல்லப்படமாட்டது. அந்த எழுத்துக்கள் மீது மட்டும்தான் உங்களுக்கு பிரேமை என்று கருதியிருந்தால் என் பதில் வேறு தொனியில் இருக்கும். அல்லது பதிலே இருக்காது.
நான் சொன்னதில் என்ன தவறு? நீங்கள் விடாமல் வாதாடுகிறீர்கள். அதற்கு நான் காரணம் கற்பித்தேன். அவ்வளவுதான். இவ்வெழுத்துக்கள் பற்றி நான் சொன்ன மற்ற கருத்துகளையும் மனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
// என்னளவில் கஷ்டம் நஷ்டம் எல்லாம் தமிழ் வார்த்தைகள்தான். "நான் நாளைக்கு அந்த Side ஒரு Tour plan பண்ணியிருக்கேன். நீயும் உன் familiyயும் join பண்ணறீங்களா? interest இருக்கா?" என்ற அளவில் தமிழ் எழுதாமல் இருக்கத்தான் முயல்கிறேன். //
அது எனக்கு நன்றாகத் தெரியும். ஆங்கிலக் கலப்புக்கு உங்கள் எல்லைக் கோட்டை சொல்லிவிட்டீர்கள். என் எல்லைக்கோடு விலக்குபவை சற்று அதிகமாக இருக்கிறது.
சூரிய நாராயண சாஸ்த்ரி என்கிற தன் பெயரை பரிதிமாற்கலைஞர் என்று மாற்றி வைத்துக் கொண்டாரே அவர் செயல் பற்றி என்ன சொல்வீர்கள்? நான் ஆடற்கோ என்று என் பெயரை மாற்றவில்லை. என் எல்லை அந்த அளவுக்கு போகவில்லை.
கஷ்டம் இஷ்டம் இவற்றை கடினம் விருப்பம் என்றுதானே எழுதச் சொன்னேன்.
கஷ்டயிஷ்டத்தில் எவ்வளவு கடினவிருப்பம் பாருங்கள்.
//என் பெயரைத் தமிழில் எழுதும் பொழுது கிரந்த எழுத்துக்களை பயன்படுத்த வேண்டியது வரும். அந்த எழுத்துகள் தமிழில் இருக்கும் பொழுது அவை இல்லாமல் என் பெயரைச் சிதைத்தால் எனக்குப் பிடிப்பதில்லை. அப்படித்தான் பலருக்கும் இருக்கும் என நினைக்கிறேன். //
என் பெயரிலேயே ஒரு கிரந்த எழுத்து வருகிறது. நான் என் பெயரை நடராசன் என்றூ எழுதுவதில்லை. ஆனால் என்னை நடராசு என்று அழைக்கும்போது என் பெயரை அவர்கள் சிதைப்பதாக நினைப்பதில்லை. அப்படியே எழுதினாலும் அப்படித்தான். எனக்குத் தெரிந்த ஒருவர் தன் பெண்களுக்கு உஷா, விஜி என்று பெயர் வைத்துவிட்டு அந்தப் பெண்களுக்கு ஐம்பது வயதுக்கு மேலாகிவிட்டபின்னும் இன்றுவரை உசா, விசி என்றே அழைக்கிறார். இது கொச்சை என்று என்னால் கருதமுடியவில்லை. தமிழருக்குள்ள இயல்பான இயலாமை என்றே கருதுகிறேன்.
எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஜெயஸ்ரீ என்ற மாணவியின் பெயரை கரும்பலகையில் எழுத நேரிட்டபோது ஸ்ரீ என்று எழுதுவதற்கு படாத பாடு பட்டுவிட்டேன். அதுவரை அந்த எழுத்தை நான் எழுதியதே இல்லை.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வந்த கதை கட்டுரைகளை படித்தீர்களானால் அவற்றில் எவ்வளவு வடமொழிச் சொற்கள் கலந்திருக்கிறதென அறியலாம். இன்று நிலைமை வெகுவாக மாறி பெரும்பாலும் மாந்தரின் பெயர் இடங்களின் பெயர் இவையே கிரந்த எழுத்துக்களின் தேவையைக் கொண்டிருக்கின்றன.
// இல்லையென்றால் எது தமிழ் என முடிவு செய்து கொள்ளுங்கள் அதன் பின் நான் கற்றுக் கொள்கிறேன் என என் மகன் சொல்லிவிடும் அபாயம் இருக்கிறது. //
எது தமிழ் என்று குழம்பும் அளவுக்கு இங்கு குழப்பக்காடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கும் எனக்கும் கொஞ்சூண்டு எல்லைத் தகராறுதான்.
February 27, 2007 11:56 AM
கோவி.கண்ணன் said...
இங்கு பின்னூட்டங்களைப் இப்பொழுதுதான் பார்த்தேன். இது தொடர்புடைய ஒரு பதிவு ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அதில் இருந்து சிறு பகுதி ஒன்றை இங்கு ஒட்டுகிறேன்.
***************************
ஆங்கிலத்தை எடுத்துக் கொண்டால் கூட a(அ) இருக்கிறது aa (ஆ) இல்லை இது போல் இரண்டு மாத்திரைக்கு மேல் ஒலிக்கும் பல எழுத்துக்கள் ஆங்கிலத்திலும் இல்லை. ஆங்கிலத்தின் வளர்ச்சி குன்றவில்லையே. பல ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பு அகராதியைப் பார்த்துதானே தெரிந்து கொள்கிறோம். நீள் ஒலி (நெடில்)எழுத்துக்கள் இல்லாதது ஆங்கிலத்தின் குறை என்று சொல்வதில்லை. ஆங்கிலம் பிறமொழி புதுச்சொற்களை இருபத்து ஆறு எழுத்துக்களை வைத்துக் கொண்டு தான் எழுதுகிறது.
மங்கோலிய மொழிகளான சீனம் மற்றும் ஜப்பான் மொழிகளில் R எழுத்து பயன்பாட்டில் இல்லை. பெயர் சொல்களில் வரும் R ஐ தவிர்த்துவிட்டுதான் சொற்கள் அமைத்து அதன்படியே எழுதுகிறார்கள். சீனர்களோ, ஜப்பானியர்களோ அது தங்களின் மொழியின் பெரும் குறை என்றெல்லாம் சொல்வதில்லை. மேலும் அவர்களின் மொழியில் புதிய எழுத்துக்களை சேர்க்காததால் அவர்களுடைய மொழியில் பெயர் சொற்களின் சிதைவு உச்சரிப்பு நீங்கலாக வினைச் சொற்களில் பிறமொழி கலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. சிங்கப்பூர் என்பதை சீனர்கள் சிஞ்சப்பூ(ர்), ஆஸ்திரேலியா என்பதை ஆடேலியா என்றுதான் எழுதுவார்கள் அதற்கு அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை தங்கள் மொழியின் குறை என்றெல்லாம் வீணாக கற்பனை செய்து கொள்வதில்லை.
எல்லா ஒலியையும் ஒலிக்கும் எழுத்துக்களை கொண்டிருக்கிறது என்று எந்த ஒரு மொழியும் இல்லவே இல்லை. சீன எழுத்துக்களில் பன்மாத்திரை (நெடில் நீள் ஒலி எழுத்து 'கூகூகூ' என மூன்று மாத்திரைக்கு மேல் ஒலிக்கும் ஒற்றை எழுத்துக்கள்)மற்றும் கால் மாத்திரை அளவுள்ள குறும் ஒலி எழுத்துக்கள் பிறன் மொழியில் இல்லை. சீன பெயர் சொற்கள் (ஊர், இடம்) பெயரை பிறமொழிகளில் எழுதும் போது அதே போன்ற உச்சரிப்பில் நிச்சயம் இருக்காது எழுத முடியாது. இதனால் சீன எழுத்துக்களை கடன் வாங்கினால் ஆங்கிலம் மேலும் சிறக்கும் என்று சொல்ல முடியுமா ?
ஒலி அதிர்வு அலையின் வேகம் 4hz - 4000 hz வரை இருக்கிறது இதில் தான் நாம் கேட்கும் அத்தனை ஒலிகளும் அடக்கம். குயில் கூவலை அப்படியே எழுத்தின் ஒலிமூலம் சொற்களில் கொண்டு வரும் தன்மை எந்த ஒரு மொழிக்கும் இல்லை. இரைச்சல், சத்தம் என்று எழுதத்தான் முடியும். இரைச்சல் காதின் கேட்கும் திறனால் கேட்கிறது ஆனால் எழுத்தில் அதே போன்று ஒலியை ஏற்படுத்தி நாவை ஒலிக்கவைக்க எழுத்துக்கள் எந்த மொழியிலும் இல்லை.
மேலும் படிக்க...
March 02, 2007 3:47 AM
'மேலும் படிக்க' என்று சொல்லி கோவி.கண்ணன் கடைசிப் பின்னூட்டத்தில் தந்த சுட்டி இது:
ReplyDeletehttp://govikannan.blogspot.com/2007/01/blog-post_17.html
அப்பாடி! குமரா, information overload ஆகிப் போச்சு! (அச்சச்சோ! அதுக்கு தமிழ்ல என்னன்னு நீங்களே சொல்லிடுங்க, தயை செய்து :)
ReplyDeleteரொம்ப தெளிவா இருக்கீங்க. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. உங்க காரணிகளோட நானும் ஒத்துப் போறேன். உங்கள் பணி தொடரட்டும்! வளரட்டும்! சிறக்கட்டும்!
சென்ற இடுகையையும் இந்த இடுகையையும் ஒரே நாளில் படித்தால் இப்படித் தான் தகவலளவுமீறல் ஆகிப் போகும் அக்கா. :-)
ReplyDeleteகுமரன்,
ReplyDeleteசென்னையில் திரு இராமகி ஐயாவை சந்தித்த போது உங்கள் சொ.ஒ.சொ முயற்சி குறித்து பாராட்டினார்.
மிக்க மகிழ்ச்சி கோவி.கண்ணன். சென்னை செல்லும் போது நானும் இராம.கி. ஐயாவைச் சந்திக்க முயல்வேன். நன்றிகள்.
ReplyDelete