Wednesday, June 25, 2008
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணம் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே
காண இனியது நீறு - அணிந்தவர்களைக் காண இனிமையாக இருக்கும்படி செய்வது திருநீறு
கவினைத் தருவது நீறு - அழகையும் நற்குணங்களையும் தருவது திருநீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு - உளம் விரும்பி பேணி அணிபவர்களுக்கெல்லாம் பெருமையைக் கொடுப்பது திருநீறு
மாணம் தகைவது நீறு - மாண்பைத் தருவது திருநீறு. (உறுதிப்படுத்தும் ஆதாரமாய் (பிரமாணமாய்) அமைவது திருநீறு என்று தொடக்கத்தில் தவறாகப் பொருள் சொல்லியிருந்தேன்)
மதியைத் தருவது நீறு - நிலைத்த ஞானத்தைத் தருவது திருநீறு
சேணம் தருவது நீறு - விண்ணுலகப்பேற்றையும் உயர்வையும் அளிப்பது திருநீறு. (கடினமான நேரங்களில் மன அமைதியைத் தருவது திருநீறு என்று தொடக்கத்தில் தவறாகப் பொருள் சொல்லியிருந்தேன்)
திருஆலவாயான் திருநீறே - அது திருவாலவாயாம் மதுரையம்பதியில் வாழும் இறைவனின் திருநீறே
***
முதல் இரண்டு அடிகள் எவ்வளவு எளிமையாக இருக்கிறதோ அவ்வளவு கடினமாகத் தோன்றியது கடைசி இரு அடிகள். கொடுத்துள்ள பொருள் தவறாக இருப்பின் திருத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.
திருத்தங்கள் 07 நவம்பர் 2006 அன்று செய்யப்பட்டது. திருத்தங்களைச் சொன்ன நண்பர்களுக்கு மிக்க நன்றி.
குமரா, சேணம்னா கடிவாளம்தானே? மனதைக் கட்டுப்படுத்த உதவுவதுன்னு சொல்லலாமா?
ReplyDeleteஇந்த இடுகை 'திருநீற்றுப்பதிகம்' பதிவில் 4 நவம்பர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete23 comments:
சிவமுருகன் said...
//நற்குணங்களையும் தருவது திருநீறு..நிலைத்த ஞானத்தைத் தருவது திருநீறு//
ஞாபகசக்தியை பெருக்குவதில் திருநீறின் தன்மை அளர்பரியது.
7:25 AM, November 05, 2006
--
Sivabalan said...
நன்றாக எழுதியுள்ளீர்கள்
7:36 AM, November 05, 2006
--
Johan-Paris said...
அன்புக் குமரா!
தேவாரம் படிக்கிறேன்; அதாவது மீண்டும் படிக்கிறேன். நன்றே எழுதுகிறீர்கள்
யோகன் பாரிஸ்
10:01 AM, November 05, 2006
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்
நன்கு விளக்கி உள்ளீர்கள்!
//காண இனியது நீறு//
அணிபவருக்கு மட்டும் இல்லாது, அணியாதார் கண்களுக்கும், அவர்கள் விரும்பியோ விரும்பாதோ கண்டால் கூட, அவர்க்கும் இனியது தரும் நீறு!
புறச்சின்னங்கள் தேவையா என்ற ஒரு சொற்பொழிவில் கிருஷ்ணபிரேமி சுவாமிகள் இதை மேற்கண்டவாறு சொல்லுவார். நமக்காக மட்டுமன்றி, நம்மைச் சுற்றியுள்ள சமூகத்துக்காகவும் தான் சின்னங்கள்!
ஆக இந்தச் சிவ "வேடம்" என்பது நிச்சயம் சுயநலமன்று! பொதுநலமும் கூட!
12:12 PM, November 05, 2006
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
மாணம்/சேணம் என்ற சொற்களையும் சற்று விளக்கினால் நன்றாக இருக்கும்; அவ்வளவாகப் புழங்காத சொற்கள் என்பதால் தான் கடைசி இரு அடிகள், கடினமாகத் தோன்றுகின்றன!
12:15 PM, November 05, 2006
--
G.Ragavan said...
குமரன், சேணம் என்பது எதைக் குறிக்கும்? குதிரைக்குச் சேணம் கட்டுவார்கள் அல்லவா. அந்தச் சேணம் அதன் பார்வை சிதறாது தெளிவான பாதையில் கொண்டு செல்லும். அதுபோல நமது வாழ்வில் நல்ல வழியைக் காட்டி (அதுதான் மதியைத் தருவது நீறு)...அந்த நல்ல வழியிலேயே தொடர்ந்து செல்லும் ஆற்றலைத் (சேணம் தருவது நீறு) தருவது நீறு. இப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.
எளிய அழகிய விளக்கம்.
4:27 AM, November 06, 2006
--
குமரன் (Kumaran) said...
நன்றி சிவமுருகன். திருநீறு அணிவது நம்பிக்கையின்பாற்பட்டது.
7:04 PM, November 06, 2006
--
குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்.
7:05 PM, November 06, 2006
--
குமரன் (Kumaran) said...
நன்றி யோகன் ஐயா. நானும் மீண்டும் தேவாரம் படிக்கிறேன் ஐயா.
7:05 PM, November 06, 2006
--
குமரன் (Kumaran) said...
உண்மை இரவிசங்கர். சிறு வயதில் எத்தனையோ பெரியோர்கள் திருநீறு தரித்த அடியேனைப் பார்த்து 'ஆகா முருகப்பெருமானே எதிரில் வந்தது போல் இருக்கிறது. போகும் காரியம் ஜெயமே' என்று சிலாகித்துக் கொண்டு போனது நினைவிற்கு வருகிறது. அவர்களுக்குத் திருநீறு தரித்த அடியேன் நெற்றியும் அடியேன் பெயரும் குமரக்கடவுளை நினைவூட்டி நம்பிக்கையைப் பெருகச் செய்தது; அது தான் திருநீறு தரிப்பதின் ஒரு பயன். இறைவன் பெயரைக் குழந்தைகளுக்குச் சூட்டுவதின் ஒரு பயன். இராகவன் என்று ஒவ்வொரு முறை சொல்லும் போது சக்ரவர்த்தி திருமகன் நினைவிற்கு வருகிறானே.
7:10 PM, November 06, 2006
--
குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். எனக்கும் மாணம், சேணம் என்ற சொற்கள் இங்கே என்ன பொருளில் பாவிக்கப்பட்டுள்ளன என்று புரியவில்லை. கொஞ்சம் சிந்தித்துத் தான் இந்த பொருள் சொல்லியிருக்கிறேன். அதனால் தான் சொன்ன பொருள் தவறாயிருப்பின் திருத்தும் படி கேட்டுக் கொண்டுள்ளேன்.
மாணம் என்பதைப் படித்தவுடன் முதலில் வெகுமானம், பகுமானம் என்ற சொற்களில் சுருக்கமோ என்று தோன்றியது. ஆனால் அவ்விடங்களில் 'ன'கரத்தைத் தானே சொல்லியிருக்கிறார்கள். 'ண'கரத்தைச் சொல்லவில்லையே. அதனால் வேறு ஏதோ ஒரு சொல் என்று தோன்றியது. பிரமாணம் என்று பொருள் கொண்டேன்.
சேணம் என்பது குதிரையின் மேல் ஏறும் போது அமர்வதற்காக இருப்பது என்று எண்ணியிருந்தேன். இராகவன் வேறு பொருள் சொல்லுகிறார். எது சரியென்று தெரியவில்லை. குதிரையில் பயணிக்கும் போது வசதியாக இருக்க உதவுவது இந்த சேணம் என்று அந்தப் பொருளைச் சொன்னேன்.
இவை சரி தானா என்று அறிந்தவர்கள் சொல்லவேண்டும்.
7:15 PM, November 06, 2006
--
குமரன் (Kumaran) said...
தங்கள் விளக்கத்திற்கு நன்றி இராகவன். சேணம் என்றால் குதிரையின் மேல் அமர்வதற்காக இடப்பட்டிருக்கும் ஆசனம் இல்லையா?
7:20 PM, November 06, 2006
--
கோவி.கண்ணன் [GK] said...
குமரன் ...!
மன அழுக்குகளை எரித்தால் மனம் தூய்மை பெறும் !
இதுதான் வெண்மை திருநீற்றுத் தத்துவமோ !
7:39 PM, November 06, 2006
--
கோவி.கண்ணன் [GK] said...
குமரன் ...!
மன அழுக்குகளை எரித்தால் மனம் தூய்மை பெறும் !
இதுதான் வெண்மை திருநீற்றுத் தத்துவமோ ?
7:39 PM, November 06, 2006
--
குமரன் (Kumaran) said...
உண்மையைச் சொன்னீர்கள் கோவி.கண்ணன் ஐயா. மிக்க நன்றி.
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்
வாய்மையின் நிறம் வெண்மை.
7:41 PM, November 06, 2006
--
G.Ragavan said...
// இராகவன் என்று ஒவ்வொரு முறை சொல்லும் போது சக்ரவர்த்தி திருமகன் நினைவிற்கு வருகிறானே. //
என்ன குமரன் இது! எல்லாரும் முருகன் நினைவுக்கு வருகிறான் என்கிறார்கள். நீங்கள் மாற்றிச் சொல்கின்றீர்களே :-))))))))))))))))
// குமரன் (Kumaran) said...
தங்கள் விளக்கத்திற்கு நன்றி இராகவன். சேணம் என்றால் குதிரையின் மேல் அமர்வதற்காக இடப்பட்டிருக்கும் ஆசனம் இல்லையா? //
குமரன். நான் குழம்பி விட்டேன். நீங்கள் சொன்ன பிறகுதான் நான் செய்த தவறு தெரிந்தது. சேண் விளங்கு அவிர் ஒளி என்கிறது திருமுருகாற்றுப்படை. சேண் என்பது தொலைவு என்றும் கொள்ளலாம். உயர்ந்தது என்றால் உயரத்தில் உள்ளது என்று மட்டும் பொருள் அல்லவே. அது போல சேண் என்ற சொல்லுக்குத் தொலைவு என்று பொருள் இருந்தாலும் உயர்ந்தது என்றும் பொருள் கொள்வது சரி. சேண் விளங்கு அவிர் ஒளி இப்பொழுது புரிந்திருக்கு. அந்தச் சேணை இங்கே கொண்டு வந்தால் சேணம் தருவது நீறு என்பதற்கு உயர்வு தருவது நீறு என்று பொருள் கொள்வது மிகப் பொருந்தும்.
(குதிரைக்குக் கண்ணுல கட்டுறது என்ன?)
9:41 AM, November 07, 2006
--
G.Ragavan said...
அது போல மாணம் என்பது மாண்பைக் குறிக்கும் என்று நினைக்கிறேன். மாண்பு தகைவது நீறு என்பதும் பொருத்தமாக இருக்கிறதே.
9:42 AM, November 07, 2006
--
ஜெயஸ்ரீ said...
மாணம் (மாண்பு) என்ற சொல்லுக்கு உயர்வு, சிறப்பு என்ற பொருளும் உண்டு.
"ஞாலத்தின் மாணப் பெரிது" -திருக்குறள்
சேண் என்ற சொல்லுக்கு உயரம்(height) என்று பொருள். வானம், சொர்க்கம் எனவும் பொருள் படும்
உதாரணம் - சேணுயர் சோலையில்( வானுயர்ந்த சோலையில்), சேணுயர் வேங்கடத்தில்(வானுயர்ந்த திருவேங்கட மலையில்)
சேணம் அளிப்பது நீறு - உயர்வை அளிப்பது, விண்ணுலகப்பேற்றை அளிப்பது எனவும் பொருள் கொள்ளலாம்.
9:59 AM, November 07, 2006
--
குமரன் (Kumaran) said...
இராகவன் என்றால் எனக்கு மாமனும் மருகனும் இருவருமே நினைவிற்கு வருகிறார்கள் இராகவன். உண்மையைச் சொன்னால் மருகன் மேல் கொஞ்சம் பொறாமையே வந்துவிடும் போலிருக்கிறது - உங்களின் முருகன் அன்பு அந்த அளவிற்கு இருக்கிறது. :-)
விளக்கத்திற்கும் திருத்தங்களுக்கும் மிக்க நன்றி இராகவன். சேண் என்றும் மாண் என்றும் இருந்திருந்தால் குழம்பியிருக்க மாட்டேன் என்று நினைக்கிரேன். சேணம், மாணம் என்றதால் கேள்விப்படவில்லை.
ஒரே நேரத்தில எப்படி நீங்க ரெண்டு பேருமே அதே விளக்கத்துடன் ஏறக்குறைய அதே சொற்களுடன் சொன்னீர்கள்? :-)
10:51 AM, November 07, 2006
--
குமரன் (Kumaran) said...
எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியதற்கு மிக்க நன்றி ஜெயஸ்ரீ. இப்போது பொருள் நன்றாகப் புரிகிறது.
10:52 AM, November 07, 2006
--
குமரன் (Kumaran) said...
நண்பர்களின் திருத்தங்களை பதிவிலும் செய்துவிட்டேன்.
10:52 AM, November 07, 2006
--
ஜெயஸ்ரீ said...
குமரன்,
" சேணம் தருவது நீறு " - விண்ணுலகப்பேற்றை அளிப்பது என்று பொருள் கொள்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
சேண் என்ற சொல் வானத்தையும், விண்ணுலகையும் குறிக்கும்.
சேணில் அரிவை அணைக்கும் திருமார்பா - திருப்புகழ்
சேணில் அரிவை -விண்ணூலகத்திலுள்ள மங்கை (தெய்வயானை)
சேணிலத்தார் பொன்பூவையிட்டு -விண்ணுலகத்தவர் பொன்பூக்களைப் பொழிய
11:45 AM, November 07, 2006
--
G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...
இராகவன் என்றால் எனக்கு மாமனும் மருகனும் இருவருமே நினைவிற்கு வருகிறார்கள் இராகவன். உண்மையைச் சொன்னால் மருகன் மேல் கொஞ்சம் பொறாமையே வந்துவிடும் போலிருக்கிறது - உங்களின் முருகன் அன்பு அந்த அளவிற்கு இருக்கிறது. :-) //
பொறாமை ஏன் குமரன். கொடுக்கக் குறையாமல் இருப்பது அன்பு ஒன்றுதான். கொடுக்கக் கொடுக்கப் பெருகவும் செய்கிறது. பிறகு கொடுப்பதில் என்ன குறை. குமரன் உங்கள் பெயரிலேயே இருக்கிறானே. பிறகென்ன!
// விளக்கத்திற்கும் திருத்தங்களுக்கும் மிக்க நன்றி இராகவன். சேண் என்றும் மாண் என்றும் இருந்திருந்தால் குழம்பியிருக்க மாட்டேன் என்று நினைக்கிரேன். சேணம், மாணம் என்றதால் கேள்விப்படவில்லை.
ஒரே நேரத்தில எப்படி நீங்க ரெண்டு பேருமே அதே விளக்கத்துடன் ஏறக்குறைய அதே சொற்களுடன் சொன்னீர்கள்? :-) //
ஆமாம் குமரன். ஜெயஸ்ரீ இன்னமும் சிறப்பாக பல எடுத்துக்காட்டுகள் தந்திருக்கிறார்களே.
2:32 AM, November 08, 2006
ஆகா. அவசரப்பட்டு நீங்க பதிவை முடிக்கும் முன் பின்னூட்டம் போட்டுட்டேன் போல. கண்டு கொள்ள வேண்டாம்னு கேட்டுக்கறேன்!
ReplyDeleteசேணம்ன்னா கடிவாளம் இல்லை அக்கா. விளக்கங்களை எல்லாம் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அவசரம் எல்லாம் இல்லை. நான் தான் இடுகையைப் போட்டு கொஞ்ச நேரம் கழிச்சு பின்னூட்டங்களை எல்லாம் இட்டேன். என் மேல் தான் தவறு. :-)
ReplyDelete