Monday, June 16, 2008
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
நஞ்சணி கண்டன் - தேவர்களும் அசுரர்களும் இழந்த செல்வங்களை மீண்டும் அடைவதற்காக பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து எழுந்த ஆலகால நஞ்சை இந்த உலகங்களின் மீதுள்ள கருணையினால் தான் விழுங்கி அது தொண்டையில் தங்கியதால் அதுவே தொண்டைக்கு ஒரு அணிகலனாக அழகுடன் அமையப் பெற்ற நீலகண்டனாகிய
எந்தை - என் தந்தை
மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன் - அன்பும் அருளும் மிக்க அன்னை உமையவளோடு அறவுருவாகிய எருதின் மேல் ஏறி வரும் எங்கள் பரமனாகிய சிவபெருமான்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்து - அனைவரும் ஆழ்ந்து உறங்கும் நடு இரவு நேரத்தின் இருட்டினைப் போன்ற நிறம் கொண்ட வன்னி மலரையும் (சிவந்த) கொன்றை மலரையும் தனது திருமுடி மேல் அணிந்து கொண்டு
என் உளமே புகுந்த அதனால் - அவனது அளவில்லா அருளினாலே என் உள்ளத்தில் புகுந்து அங்கேயே நிலை பெற்றதனால்
வெஞ்சின அவுணரோடும் - வெப்பமும் கோபமும் மிகுந்த அவுணரும்
உருமிடியும் மின்னும் - உருமும் இடியும் மின்னலும்
மிகையான பூதமவையும் - மிக்க சக்தி வாய்ந்த ஐம்பூதங்களும் (நிலம், நீர், காற்று, தீ, விண்)
அஞ்சிடும் நல்ல நல்ல - இறைவனது பெருமையையும் அவனடியார்களது பெருமையும் எண்ணி அஞ்சிடும்
அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அதனால் அவை அடியார்களுக்கு மிக நல்லவைகளாக இருக்கும்
இந்த இடுகை 'கோளறு பதிகம்' பதிவில் 13 மே 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete18 comments:
Lakshmi said...
arumai..mikavum arumai!!!
May 13, 2006 10:34 AM
--
manu said...
பதிகம் ஒரு காப்பு, குமரன். எனக்கு மின்னலும் இடியும் அவ்வளவாக ரசிக்காது.அது தப்பு வார்த்தை, ரசிக்காது என்பதை விட எனக்கு அவைகள் மீது பயம்.வரும்போதே இந்தப் பாடலும்,அர்ஜுனா மந்திரமும் மருந்து.தமிழ் மட்டும் போடுவீர்களா.பாலசுப்ரமனிய ஷர்ம என்பவர் குருவாயுரப்பன் பாடல்கள் பாடுவார். அப்பனே வந்துவிடுவான்,அவர் குரல் கேட்டால். தேடிப் போடமுடியுமா?
May 13, 2006 9:55 PM
---
Ram.K said...
//துஞ்சிருள்//
இந்த ஒரு வார்த்தைக்குப் பொருள் ஒரு வாக்கியமாக (குறைந்த பட்சம்) ஆகிவிடுவது சொல்லின் சக்தியை விளக்குகிறது.
நன்றி
May 13, 2006 11:41 PM
---
சிவமுருகன் said...
அருமை அண்ணா,
மிக அருமையாக தொடர் செல்கிறது.
May 15, 2006 3:29 AM
---
G.Ragavan said...
நல்ல விளக்கம். எனக்கு இரண்டு ஐயங்கள்.
மடவாள் என்பதற்கு அன்பும் அருளும் உள்ளவள் என்றா பொருள் கொள்வார்கள்? கொஞ்சம் விளக்குங்களேன்.
உருமிடி - இது உறுமும் இடியா? உருமும் இடியா? எழுத்துப்பிழையா? இதையும் விளக்கினால் தெரிந்து கொள்வேன்.
May 15, 2006 6:08 AM
---
குமரன் (Kumaran) said...
நன்றி லக்ஷ்மி.
May 15, 2006 1:31 PM
---
குமரன் (Kumaran) said...
பாலசுப்ரமணிய சர்மாவின் பாடல்களைத் தேடிப் பார்க்கிறேன் மனு. அவை எனக்குப் புரிந்து பிடிக்கவும் செய்தால் அதனையும் என் வலைப்பதிவுகளில் இடுகிறேன்.
May 15, 2006 1:32 PM
---
குமரன் (Kumaran) said...
ஆமாம் இராம்பிரசாத் அண்ணா. சொல்லின் வலிமை இந்த சொல்லில் நன்றாக விளங்குகிறது.
May 15, 2006 1:33 PM
---
குமரன் (Kumaran) said...
இராகவன். இப்போது தான் நீங்கள் என் பதிவுகளையும் நக்கீரன் கண் கொண்டு படிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. :-)
மடவாள் என்பதனை மடம் + வாள் என்று பிரித்து அன்பும் அருளும் ஒளியும் பொருந்தியவள் என்று சொல்லியிருக்கவேண்டும். வாள் என்பதற்கு ஒளி என்றொரு பொருள் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மடம் என்பதற்கு மடமை என்பது தான் பொதுவாகச் சொல்லப் படும் பொருள். ஆனால் யாராவது தமக்கு அன்பானவர்களை மடமையுடையவர்கள் என்று சொல்வார்களா? அதனை அன்பு, அருள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்றும் அந்தப் பொருள் கொண்டு மடம் என்ற சொல் வரும் இடத்தை எல்லாம் நோக்கினால் அது எவ்வளவு பொருத்தம் என்று தெரியும் என்றும் அண்மையில் எங்கோ படித்தேன். ஹரிகிருஷ்ணன் சொன்னது என்று நினைவு. ஆனால் உறுதியாகச் சொல்லவில்லை. சுட்டியும் தேடவேண்டும்.
உருமிடி என்பது தான் பாடலில் வருவது. அதனை நான் உறுமும் இடி என்று பொருள் கொண்டு விட்டேன். உருமிடி என்பதனை பலம் கொண்ட இடி (உரமுடைய இடி) என்று பொருள் கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறேன்.
May 15, 2006 1:38 PM
---
குமரன் (Kumaran) said...
நன்றி சிவமுருகன்.
May 15, 2006 1:39 PM
---
தி. ரா. ச.(T.R.C.) said...
வெஞ்சின அவுணரோடும் - வெப்பமும் கோபமும் மிகுந்த அவுணரும்
இங்கு அவுணர் என்பது யாரைக்குறிக்கிறது? சமணர்களையா. தி ரா சா
May 20, 2006 8:24 PM
--
குமரன் (Kumaran) said...
அவுணர் என்றால் அசுரர், இராக்கதர் என்று பொருள் தி.ரா.ச. அதனை விளக்காமல் விட்டதற்கு மன்னிக்கவும்.
May 21, 2006 4:55 AM
---
rnateshan. said...
மிக சிறப்பாக செல்கிறது!! தொடரவும்!!
May 21, 2006 6:53 AM
---
G.Ragavan said...
// இராகவன். இப்போது தான் நீங்கள் என் பதிவுகளையும் நக்கீரன் கண் கொண்டு படிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. :-) //
ஆகா.......நக்கீரன் கண் கொண்டு கண்ட திருப்பரங்குன்றத்துக் குமரனை நானும் கண் கொண்டு கண்டேன் என்பதைத் தவிர அவருடைய பார்வை அளவிற்கு என் பார்வை சிறப்பானதன்று.
// மடவாள் என்பதனை மடம் + வாள் என்று பிரித்து அன்பும் அருளும் ஒளியும் பொருந்தியவள் என்று சொல்லியிருக்கவேண்டும். வாள் என்பதற்கு ஒளி என்றொரு பொருள் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மடம் என்பதற்கு மடமை என்பது தான் பொதுவாகச் சொல்லப் படும் பொருள். ஆனால் யாராவது தமக்கு அன்பானவர்களை மடமையுடையவர்கள் என்று சொல்வார்களா? அதனை அன்பு, அருள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்றும் அந்தப் பொருள் கொண்டு மடம் என்ற சொல் வரும் இடத்தை எல்லாம் நோக்கினால் அது எவ்வளவு பொருத்தம் என்று தெரியும் என்றும் அண்மையில் எங்கோ படித்தேன். ஹரிகிருஷ்ணன் சொன்னது என்று நினைவு. ஆனால் உறுதியாகச் சொல்லவில்லை. சுட்டியும் தேடவேண்டும். //
நல்ல விளக்கம். இதையும் சேர்த்துத்தான் நீங்கள் விளக்கம் எழுத வேண்டும். ஏனென்றால் நீங்கள் கோனார் உரை எழுதவில்லை. :-)
// உருமிடி என்பது தான் பாடலில் வருவது. அதனை நான் உறுமும் இடி என்று பொருள் கொண்டு விட்டேன். உருமிடி என்பதனை பலம் கொண்ட இடி (உரமுடைய இடி) என்று பொருள் கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறேன்.
//
அப்படியும் கொள்ளக் கூடாது. உருமி மேளம் கேட்டிருக்கிறீர்களா? அந்த உருமி மேளத்தைப் போல இடிக்கும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
May 21, 2006 9:18 PM
---
johan -paris said...
அன்புக் குமரனுக்கு!
மடவாள்! என்பதை ,இந்த "அச்சம் ;மடம், நாணம்; பயிர்ப்பு!" என்பாங்களே! இந்த நான்கில்; மடம் தூக்கலாக உள்ள உமையாள்,எனக் கொள்ளக் கூடாதா??,
வெஞ்சின அரக்கர்- தேவர்களுக்குச் சினமே வராதா?
உங்கள் உரை ,நுனி திரித்துக் கையில் கொடுப்பதென்றால்;உங்கள் வாசகவட்டம்;நூற் பந்தே! ஆக்கிறார்கள்!!
பின்னூட்டங்களும்; வெகு சுவையாக சிந்திக்க வைக்கின்றன!
இணையத்திள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.
தொடரவும்.
யோகன் - பாரிஸ்
May 22, 2006 3:40 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி நடேசன் ஐயா.
May 23, 2006 10:39 AM
---
குமரன் (Kumaran) said...
//ஏனென்றால் நீங்கள் கோனார் உரை எழுதவில்லை//
இராகவன், இதற்குத் தான் கோனார் உரை எழுதுவது என்று பொருளா? எனக்கு அது புரியாமல் போனதே!!
உருமி மேளம் போல் உறுமும் இடி. நன்றாக இருக்கிறது பொருள் இராகவன். நன்றி. :-)
May 23, 2006 10:41 AM
---
குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா, கட்டாயம் அப்படித் தான் பொருள் கொள்ளவேண்டும்; கொண்டிருக்கிறேன். மடம் என்பதற்கு மடமை என்ற பொருள் தான் வழக்கமாகக் கொடுக்கப் படுகிறது. ஆனால் நம் அன்பிற்குரியவரை அப்படி சொல்வோமா? இல்லையென்பதால் அதற்கு வேறு பொருள் இருக்க வேண்டும் என்று ஹரிகிருஷ்ணன் சொன்ன பொருள் ஏற்புடையதாக இருந்ததால் அதனை எடுத்துக் கொண்டேன். நான் கொண்ட பொருளும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவற்றில் வரும் மடம் என்பதனையே.
உங்களுக்கும் எனக்கும் சினம் அவ்வப்போது வருவது போல் தேவர்களுக்கும் வரும். ஆனால் எப்போதும் சினத்துடன் இருப்பவர்கள் அவுணர்கள்; அதனால் அவர்களையே வெஞ்சின அவுணர் என்கிறார் இங்கே.
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. எப்போது நீங்கள் சங்கத்தில் சேர்ந்து எழுதப் போகிறீர்கள்? :-)
May 23, 2006 10:45 AM
வேறென்ன சொல்லப் போகிறேன்! அருமையாகப் பொருள் சொல்கிறீர்கள், குமரா! உருமியென உறுமும் இடி - மிக நன்று :)
ReplyDeleteநன்றி கவிநயா அக்கா.
ReplyDelete