பட்டிக்காட்டு பெஞ்சுக்கடையில் உக்காந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி. அந்த வழியாக கையில் உடுக்கையோடு செந்தில் வருகிறார்.
"டேய்! கரியடுப்புத் தலையா! இங்க வாடா. உச்சி வெயில்ல எங்கடா போயிட்டு வார?"
"அது வந்துண்ணே.....ஜிரா இருக்கார்ல ஜிரா..."
"என்னது ஜிரா இருக்காரா? ஜிரா இருக்குன்னு சொல்லுடா இலக்கோண வாயா. ஜிராங்குறது திரவப் பொருள். அதுல குலாப்ஜான் ஜலஜலஜலஜலன்னு மெதக்கும். (கையால் உருட்டிக் காட்டுகிறார்) பாத்ததில்லையா? நீ எங்க பாத்துருக்கப் போற? அதெல்லாம் என்னப் போல வெவரமான அழகான அம்சமான இளமையான (செந்தில் கெக்கெக்கென சிரிக்கிறார்) ஆட்கள் சாப்புடுறது"
"ஹெ ஹெ ஹெ அண்ணே...அது குலோப்ஜான் இல்லண்ணே...குலோப்ஜாமூன். ஐயோ...ஜானுக்கும் ஜாமூனுக்குமே ஒங்களுக்கு வித்தியாசம் தெரியலையே...இதுல ஒங்களுக்குக் கலியாணம் வேற ஆகி...ஹெ ஹெ ஹே"
கடுப்பாகிறார் கவுண்டமணி. பெஞ்சை விட்டு படக்கென எழுந்து, 'அடேய். அடடேய்..அடடடடேய்! வந்துட்டான் ஜானுக்கும் மொழத்துக்கும் வித்தியாசம் சொல்ல. திருக்குறள நூறு வாட்டி திருப்பி எழுதுனவன் மாதிரி. எங்கடா போனேன்னு கேட்டா...."
"கோவிச்சிக்கிறாதீங்கண்ணே. ஜிராதான் கூப்புட்டு உடுக்கைன்னா என்னன்னு சொல்லிக் குடுத்தாருண்ணே."
"அதான் உடுக்கையோட குடுக்கை மாதிரி போனியாக்கும்?" அமைதியாகி உட்கார்ந்து சாப்பிடத் தொடங்குகிறார். "(சத்தமாக)ஆமாமாமா...அதென்ன உடுக்கையப் பத்திப் பாடம்? கோடாங்கி கிட்ட கேட்டா நாலு தட்டு தட்டப் போறான். இதுக்குப் போய் ஜிராகிட்ட எதுக்குக் கேட்ட? அந்த ஜிரா என்ன தாளிச்ச மோரா?"
செந்தில் குனிந்து கவுண்டமணி காதில் மெதுவாகச் சொல்கிறார். "அண்ணே....அவரு கூட ஒரு மயிலார் இருக்காரு. அவரு காதுல விழாமப் பேசுங்க. கொத்தீரப் போறாரு. அப்புறம் நீங்க குத்தம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி என்பதேது எம்.ஆர்.ராதா மாதிரி ஆயிருவீங்க." (செந்திலின் கனவில் கவுண்டமணி ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி வந்து பாடுகிறார்.)
"டேய்..ஒம் மண்டைக்குள்ள இருக்குற அந்த டீவிய ஆப் பண்ணு. இல்லைன்னா ஆண்டெனாவைப் பிடுங்கிப் போட்டுருவேன். மகனே! நீ எப்பப்ப எங்கெங்க எப்படியெப்படி நெனச்சாலும் சிக்னலு எங்களுக்கு வந்துருதுப்பு."
செந்தில் முகத்தை அப்பாவி மாதிரி வைத்துக் கொள்கிறார். கவுண்டமணி, "சரி சரி....தோச வாயா...ரொம்ப நாடகம் போடாத. ராம நாராயணன் படத்துல நடிக்கக் கூட்டுறப் போறாங்க. போகட்டும்...அந்த உடுக்கையைப் பத்திச் சொல்லு. (கடைக்குள் பார்த்து கத்துகிறார்) யாருப்பா இது....சாம்பார் எங்கப்பா....இதுவரைக்கும் அஞ்சே அஞ்சு வாட்டிதான் சாம்பர ஊத்தீருக்க. சாம்பார்ல கேரட்டே இல்லை. கத்திரிக்காயா வந்து விழுது என்ன கடையோ....இங்க மனுசன் திம்பானா?"
"அண்ணே...உடுக்கைன்னா தட்டுற உடுக்கை மட்டுமில்லையாம். போட்டுக்குற துணிக்கும் உடுக்கைன்னுதான் பேரு."
ஆச்சரியப் பட்டு வாயைப் பிளக்கிறார் கவுண்டர். "என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாது. உடுக்கைன்னா போட்டுக்குற துணியா? எம்.ஜி.ஆர் படத்துல ஜோதிலட்சுமி ஒடம்பு முழுக்க உடுக்கையக் கட்டிக்கிட்டு ஆடுறாங்களே...அதச் சொல்றாங்களா?"
முகத்தைச் சுளித்து தலையில் அடித்துக் கொள்கிறார் செந்தில். "ஐயோ அண்ணே..இப்பிடி கிட்னி இல்லாம இருக்கீங்களே...."
"அதென்ன கிட்னியோப்பா...நான் என்னத்தக் கண்டேன். இட்டிலிக்குத் தொட்டுக்கிட கெட்டிச் சட்டினி கூட இந்தக் கடையில குடுக்குறதில்லையே...."
"சரி...முழுக்கக் கேளுங்க. வள்ளுவரு என்ன சொல்லீருக்காரு?"
"அவரு எங்கிட்ட ஒன்னும் சொல்லையே ராசா! ஒங்கிட்ட என்ன சொன்னாரு?"
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு"
"என்னது கடுக்கண் களையனுமா? டேய்! இந்தக் கடுக்கண் எங்க தாத்தாவோட தாத்தாவோட தாத்தாவோட தாத்தா மைசூர் மகாராஜாகிட்ட வாங்குனது. இதுக்கு முன்னாடி இது சந்திரமுகி படத்துல வர்ர வேட்டைராஜா கிட்ட இருந்தது. அதுக்கு முன்னாடி அவரு வெச்சிருந்த சந்திரமுகி கிட்ட இருந்தது. இப்ப்ப்ப்ப்ப்ப்ப...எங்கிட்ட இருக்கு"
செந்தில் முகமெல்லாம் பிரகாசமாக எதையோ கேட்கப் போகிறார். கவுண்டர் அதைத் தடுத்து, "நீ என்ன கேக்கப் போறன்னு தெரியும். எலய எடுத்து விசிர்ரதுக்கு முன்னாடி வள்ளுவர் என்ன சொன்னார்னு சொல்லீட்டு..அப்படியே திரும்பிப் பாக்காம ஓடிப் போ!"
"உடுக்கைன்னா ட்டிரஸ்சு. அந்த ட்டிரஸ்சு அவுந்துச்சுன்னா கை எப்பிடி தானாப் பிடிக்குதோ...அதுமாதிரி துன்பம் வர்ரப்ப நண்பர்கள் உதவுவாங்கன்னு வள்ளுவர் சொல்லீருக்காருண்ணே!"
சலித்துக் கொள்கிறார் கவுண்டர். "என்ன நண்பர்களோடா! ஒரு ஆயிரம் ரூவா திருப்பித் தரலைன்னு தெருவுல நின்னு கத்துற நாயெல்லாம் நண்பனா? கொஞ்ச நாள் பொறுத்தா திருப்பிக் குடுக்க மாட்டேனா? பத்து வருசம் பொறுத்தவனுக்கு இன்னங் கொஞ்சம் பொறுக்க என்ன கேடு வந்தது. நண்பனாம் நண்பன்." முறுக்கிக் கொண்டு மூஞ்சியை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.
"டென்சன் ஆகாதீங்கண்ணே. டென்சன் ரொம்ப வந்தா பிரசர் வரும். பிரசர் வந்தா தலைவலி வரும். ரெண்டும் சேந்து வந்தா மாரடைப்பு வரும்...மாரடைப்பு வந்தா...."
"டேய் டேய் டேய் நிறுத்துடா.....இதெல்லாம் தானா வரலைன்னாலும் நீ போய் கூட்டீட்டு வந்துரவ போல. ரொம்பப் பேசாத கண்ணா....உடுக்கைக்கு வாடா" சோற்றையும் சாம்பாரையும் பிசைகிறார்.
"உடுத்தப் படுவது உடுக்கையாம். இதத்தான் குறுந்தொகைல சொல்லீருக்காங்களாம். முருகன் போட்டுருக்குற ட்டிரஸ்சு ஜொஜ்ஜொஜ்ஜொஜ்ஜொஜ்ஜொன்னு இருந்துச்சாம். அதச் சொல்ல திகழ் ஒளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கைன்னு எழுதீருக்காங்கண்ணே."
யோசிக்கிறார் கவுண்டமணி. "பனம்பழத் தலையா...முருகன் என்னைக்கு ஜொஜ்ஜொஜோ ஜொஜ்ஜொஜோன்னு டிரஸ் போட்டிருந்தான்? அவங்கிட்ட இருக்குறது ரெண்டு கோமணம். அதுல ஒன்னு திருடு போயிருச்சு. (மனசுக்குள்...நம்மதான் எடுத்தம்னு யார் கிட்டயும் சொல்லக் கூடாது.) இப்பக் கூட நாந்தான் அவனுக்கு பத்து ரூவா குடுத்து வேட்டி சட்டை வாங்கச் சொன்னேன்."
தலையிலடித்துக் கொள்கிறார் செந்தில். "ஐயோ ஐயோ...இப்பிடி சுப்பிடிட்டியா இருக்கீங்களேன்னே. நீங்க சொல்ற முருகன்....நம்மூரு முருகன். நாஞ் சொல்ற முருகன்...சாமி முருகன். இப்படி ஏதாவது நீங்க ஓளறி வெச்சு சாமி குத்தமாயி கைகாலுக்கு ஏதாவது....."
கவுண்டமணி பம்முகிறார். "ஏண்டா...ஒனக்கு நான் என்னடா செஞ்சேன்? இப்பிடி எதையாவது சொல்லிப் பயமுறுத்தாதடா! அஞ்சு காசுக்குத் தேன்மிட்டாய் வாங்கித்தாரேன்." முகத்தில் பொய்யாக சிரிப்பை வைத்துக் கொண்டு..."நீ மேல ஸொல்லு"
"உடுக்கப் பயன்படுவது எப்படி உடுக்கையோ..அதே மாதிரி படுக்கப் பயன்படுவது படுக்கை."
"எல்லாம் வக்கனையாத்தான் கேட்டுக்கிட்டு வந்திருக்க. அது சரி....இந்தச் சோத்துக்கு ஏண்டா பருக்கைன்னு பேரு வந்தது?"
சிரிக்கிறார் செந்தில். விழுந்து விழுந்து சிரிக்கிறார். "நிறுத்துடா...டேய்...நிறுத்துடா...என்ன கேட்டுட்டேன்னு இப்பிடி விழுந்து விழுந்து சிரிக்கிற?"
"அது ஒன்னுமில்ல....சரி. நீங்களே கேட்டுட்டீங்க. உடுக்கப் பயன்படுவது உடுக்கை. படுக்கப் பயன்படுவது படுக்கை....அது மாதிரி...நீங்க இப்பிடி பருக்கப் பயன்படுவது பருக்கை. எப்படிண்ணே நம்ம தமிழறிவு?" சொல்லி விட்டு ஒரே ஓட்டமாக அந்த இடத்தை விட்டு ஓடுகிறார் செந்தில்.
கோவத்தில் கவுண்டமணி எழுந்திருக்கிறார். பெஞ்சுகள் கீழே விழுகின்றன. "பிடிங்கடா அந்த டைனோசார? அடிச்சா ஒரு நாடே ஒரு வருசத்துக்கு உப்புக் கண்டம் போட்டுச் சாப்புடலாம். உடுக்கையாம் உடுக்கை. இனிமே எவனாவது உடுக்கைன்னு சொன்னா...அவனுக்கு உடுக்கையடிதான். ஒழுங்கா அழகா நிறுத்தி நிதானமா எழுத்துக் கூட்டி தமிழ்ல டிரஸ்சுன்னு சொல்லனும்."
(என்னடா சொல் ஒரு சொல் இப்படி இருக்கேன்னு பாக்குறீங்களா? இப்படி எழுதுனா சரியா வருமான்னு முயற்சி செஞ்சி பாத்தேன். பதினைஞ்சு நிமிசத்துல பதிவு தயார். அதுகாக இப்படியே தொடர மாட்டேன். இது ஒரு பரிசோதனைதான்.)
அன்புடன்,
கோ.இராகவன்
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 18 ஜனவரி 2007 அன்று வந்தது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete23 கருத்துக்கள்:
அன்பு said...
உடுக்கையிடைப் பற்றும் கையுடை ஜீரா
உடுக்கையினை ஆய்ந்திடும் நேரம் - உடுக்கை
நன்றுடுத்தும் பெண்கண்டால் சீக்கிறம் கல்யாணப்
பெண்ணுன்னை சேர்வாள் காண்
அதென்னமோங்க.. புகை-- புற்றுன்னு எழுதுனத பாத்ததில இருந்து யாரையாவது பிடுங்கிடனும்னு இருந்தென்.. மாட்டிட்டீங்க
மாப்பு மாப்பு
January 18, 2007 7:19 AM
--
G.Ragavan said...
// அன்பு said...
உடுக்கையிடைப் பற்றும் கையுடை ஜீரா
உடுக்கையினை ஆய்ந்திடும் நேரம் - உடுக்கை
நன்றுடுத்தும் பெண்கண்டால் சீக்கிறம் கல்யாணப்
பெண்ணுன்னை சேர்வாள் காண் //
நல்லாயிருக்குங்க. வெண்பாலுல இது சேருமா? அதையுஞ் சொல்லீருங்க. அதுசரி...இந்தப் பாட்ட ஒங்களுக்குத்தான எழுதுனீங்க?
// அதென்னமோங்க.. புகை-- புற்றுன்னு எழுதுனத பாத்ததில இருந்து யாரையாவது பிடுங்கிடனும்னு இருந்தென்.. மாட்டிட்டீங்க //
அதுக்காக இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பிடியா.... :-)
// மாப்பு மாப்பு //
இதெதுக்குங்க. :-)
January 18, 2007 7:31 AM
--
கோவி.கண்ணன் [GK] said...
நடராஜர் கையில் இருக்கும் உடுக்கைக்கு டமரு என்ற இன்னொரு பெயரும் உண்டு.
உடுக்கை = ஆடை, டமரு
ஜிரா,
நகைச்சுவை நடையில் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். படித்தேன் ரசித்தேன் !
January 18, 2007 7:36 AM
--
johan -paris said...
ராகவா!
கவுண்டர் + செந்தில் ;நகைச்சுவையுடன் உடுக்கைக்கு விளக்கம் மிக ரசித்தேன். நம்ம பக்கம் உடுப்பு வழக்கிலுண்டு. உடுக்கை என உடுப்பதைக் கூறும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. உடுக்கு என்பது ஓர் தோல்வாத்தியம்; உடும்புத் தோலில் செய்வது , கிராமிய வழிபாட்டில் வாசிப்பதைப் பார்த்துள்ளேன்.சிவனாரின் கையிலும் இருக்கும் சிலை; படம் கண்டுள்ளேண்;
யோகன் பாரிஸ்
January 18, 2007 7:58 AM
--
இலவசக்கொத்தனார் said...
அங்க வந்து வெண்பா போடச் சொன்னால் இங்க இப்படி தனியாவர்த்தனம் நடக்குதா? இருக்கட்டும் கவனிச்சுக்கறேன்.
//உடுக்கைன்னா ட்டிரஸ்சு. அந்த ட்டிரஸ்சு அவுந்துச்சுன்னா கை எப்பிடி தானாப் பிடிக்குதோ.//
இது இப்படிச் சொல்லணுமா? இல்லை இது மாதிரியும் சொல்லலாமா?
ட்ரெஸ்ஸு முழுசா அவுந்தா நம்ம கையானது ஆட்டோமேட்டிக்கா வேணுங்கற இடத்தை மூடி மானத்தைக் காக்குதே, அந்த மாதிரி நமக்கு ஒரு துன்பம் அப்படின்னா நாம கேட்காம ஆட்டோ மேடிக்கா வந்து உதவி பண்ணுறவந்தான் நண்பன்.
January 18, 2007 8:35 AM
--
இலவசக்கொத்தனார் said...
அன்பண்ணா,
உங்க பாட்டுல தளை தட்டுதுங்கோ.
January 18, 2007 8:36 AM
--
குமரன் (Kumaran) said...
பரிசோதனைப் பதிவு நல்லாத் தான் இருக்கு. :-)
January 18, 2007 9:07 AM
--
Anonymous said...
மொதல்ல சொல் ஒரு சொல் பதிவுக்குதான் வந்திருக்கேனா இல்ல வெட்டிப்பயல் பதிவுக்குப் போயிட்டேனா னு ஒரு சந்தேகமாப் போச்சு!! :))
இந்த முயற்சியும் நல்லாதான் இருக்கு!
January 18, 2007 9:33 AM
--
G.Ragavan said...
// கோவி.கண்ணன் [GK] said...
நடராஜர் கையில் இருக்கும் உடுக்கைக்கு டமரு என்ற இன்னொரு பெயரும் உண்டு. //
டமர் என்பது வடமொழி என நினைக்கிறேன். டமருகத்தடி போல் என்று பாம்பன் சுவாமிகள் எழுதியுள்ளாரே.
// உடுக்கை = ஆடை, டமரு
ஜிரா,
நகைச்சுவை நடையில் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். படித்தேன் ரசித்தேன் ! //
நன்றி கோவி.
January 18, 2007 10:40 AM
--
G.Ragavan said...
// johan -paris said...
ராகவா!
கவுண்டர் + செந்தில் ;நகைச்சுவையுடன் உடுக்கைக்கு விளக்கம் மிக ரசித்தேன். நம்ம பக்கம் உடுப்பு வழக்கிலுண்டு. உடுக்கை என உடுப்பதைக் கூறும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. உடுக்கு என்பது ஓர் தோல்வாத்தியம்; உடும்புத் தோலில் செய்வது , கிராமிய வழிபாட்டில் வாசிப்பதைப் பார்த்துள்ளேன்.சிவனாரின் கையிலும் இருக்கும் சிலை; படம் கண்டுள்ளேண்;
யோகன் பாரிஸ் //
உடுப்பு என்ற சொல் வழக்கு தமிழகத்திலும் உண்டு. அது உடுக்கையிலிருந்து பிறந்ததுதான். உடுக்கு என்பது நீங்கள் சொல்வது போல சிவனார் தட்டுவது. பட்டிக்காட்டில் வழிபாடுகளில் வாசிப்பது.
January 18, 2007 10:41 AM
--
G.Ragavan said...
// இலவசக்கொத்தனார் said...
அங்க வந்து வெண்பா போடச் சொன்னால் இங்க இப்படி தனியாவர்த்தனம் நடக்குதா? இருக்கட்டும் கவனிச்சுக்கறேன். //
ஐயா...வெண்பால்லாம் தமிழ் தெரிஞ்சவங்க எழுதுறது. பாவிலக்கணமெல்லாம் நமக்குத் தெரியாதுங்க. அதான் இப்படி தெரிஞ்சது எதையாவது சொல்லி........
////உடுக்கைன்னா ட்டிரஸ்சு. அந்த ட்டிரஸ்சு அவுந்துச்சுன்னா கை எப்பிடி தானாப் பிடிக்குதோ.//
இது இப்படிச் சொல்லணுமா? இல்லை இது மாதிரியும் சொல்லலாமா?
ட்ரெஸ்ஸு முழுசா அவுந்தா நம்ம கையானது ஆட்டோமேட்டிக்கா வேணுங்கற இடத்தை மூடி மானத்தைக் காக்குதே, அந்த மாதிரி நமக்கு ஒரு துன்பம் அப்படின்னா நாம கேட்காம ஆட்டோ மேடிக்கா வந்து உதவி பண்ணுறவந்தான் நண்பன். //
நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம். பொருட்பிழை இல்லை.
January 18, 2007 10:43 AM
--
G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...
பரிசோதனைப் பதிவு நல்லாத் தான் இருக்கு. :-) //
நன்றி குமரன். :-) இப்படியும் நமக்கு எழுத வருமான்னு நெனச்சு முயற்சி செஞ்சதுதான் இது. வரத்தான் செய்யுது போல.
// அருட்பெருங்கோ said...
மொதல்ல சொல் ஒரு சொல் பதிவுக்குதான் வந்திருக்கேனா இல்ல வெட்டிப்பயல் பதிவுக்குப் போயிட்டேனா னு ஒரு சந்தேகமாப் போச்சு!! :)) //
என்னப்பா இது! வெட்டி எங்கே? நானெங்கே? நகைச்சுவைத் தேனில் ஊறிய பலா அவர். நான் புகை போட்டுப் பழுக்கப் பார்க்கும் காய்.
// இந்த முயற்சியும் நல்லாதான் இருக்கு! //
நன்றி காதற் கவிஞரே.
January 18, 2007 10:46 AM
--
Sivabalan said...
ஜீரா
நன்றாக எழுதியுள்ளீர்கள்!
படித்தேன்! ரசித்தேன் !
January 18, 2007 11:01 AM
--
SK said...
இருப்பது "இருக்கை"
படுப்பது "படுக்கை"
ஏற்றிச் சுமப்பது "சிவிகை"
உடுப்பது "உடுக்கை"
புகை போட்டுப் பழுக்கப் பார்க்கும் காயே இப்படி என்றால்......!!!
:))
இந்தக் குறளின் பொருளைப் புரிய நம்மூரில் இருக்கும் குடிகாரர்களைப் பார்த்தாலே விளங்கிவிடும்!
என்னதான் போதையில் தள்ளாடி, வசை மொழிகள் பாடி நடந்து{??!!] வந்தாலும், ஒரு சமயத்தில், அவனது வேட்டி அவிழும் நிலையில், அவன் கை தானே சென்று, யாரும் சொல்லாமலே. பற்றும்.
அப்படி உதவ வருபவனே நண்பன்!
January 18, 2007 11:42 AM
--
நாமக்கல் சிபி said...
அருமை! அருமை!!!
கவுண்டர் செந்தில் மூலமா விளக்கியது புதுமை!!! பதிவ படிக்க ஆரம்பிச்சதும் இது சொல் ஒரு சொல்லானு ஒரு சின்ன சந்தேகம் வந்துடுச்சு :-)
இந்த மாதிரி நிறைய முயற்சி செய்யுங்க...
January 18, 2007 12:55 PM
--
யாழ்த்தமிழன் said...
இராகவன்,
நன்றாக உள்ளது. இரசித்தேன்.
உடுக்கை, படுக்கை போல அடுக்கை, எடுக்கை, ஒடுக்கை, தடுக்கை, முடுக்கை, சொடுக்கை என்றும் வரும்போலுள்ளது.
January 18, 2007 5:03 PM
--
G.Ragavan said...
// SK said...
இருப்பது "இருக்கை"
படுப்பது "படுக்கை"
ஏற்றிச் சுமப்பது "சிவிகை"
உடுப்பது "உடுக்கை"
புகை போட்டுப் பழுக்கப் பார்க்கும் காயே இப்படி என்றால்......!!!
:)) //
ஆகா...எஸ்.கே அடுத்தடுத்து எடுத்துச் சொல்கின்றீர்களே. பிரமாதம்.
// இந்தக் குறளின் பொருளைப் புரிய நம்மூரில் இருக்கும் குடிகாரர்களைப் பார்த்தாலே விளங்கிவிடும்!
என்னதான் போதையில் தள்ளாடி, வசை மொழிகள் பாடி நடந்து{??!!] வந்தாலும், ஒரு சமயத்தில், அவனது வேட்டி அவிழும் நிலையில், அவன் கை தானே சென்று, யாரும் சொல்லாமலே. பற்றும்.
அப்படி உதவ வருபவனே நண்பன்! //
:-)))))))))))))) சிறப்பான எடுத்துக்காட்டு. இதைப் பெண்களுக்கும் சொல்லலாம். விளக்கமாகச் சொன்னால் மக்கள் அடிக்க வருவார்கள்.
January 19, 2007 8:01 AM
--
G.Ragavan said...
// வெட்டிப்பயல் said...
அருமை! அருமை!!!
கவுண்டர் செந்தில் மூலமா விளக்கியது புதுமை!!! பதிவ படிக்க ஆரம்பிச்சதும் இது சொல் ஒரு சொல்லானு ஒரு சின்ன சந்தேகம் வந்துடுச்சு :-)
இந்த மாதிரி நிறைய முயற்சி செய்யுங்க... //
என் பெயர் விசுவாமித்திரனா என்று ஒரு ஐயம் வருகிறது. :-) எல்லாப் புராணங்களிலும் விசிட்டரான வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டமல்லா கிடைக்கிறது. ;-)
January 19, 2007 8:03 AM
--
G.Ragavan said...
// யாழ்த்தமிழன் said...
இராகவன்,
நன்றாக உள்ளது. இரசித்தேன்.
உடுக்கை, படுக்கை போல அடுக்கை, எடுக்கை, ஒடுக்கை, தடுக்கை, முடுக்கை, சொடுக்கை என்றும் வரும்போலுள்ளது. //
அதே அதே. சரியாகப் பிடித்தீர்கள் யாழரே. இனிமேல் நீங்களே இதை வைத்து பல பதிவுகள் போடலாம்.
January 19, 2007 8:05 AM
--
வெற்றி said...
இராகவன்,
நீங்கள் செய்தது உங்களுக்கே நல்லாய் இருக்குதா? :))
உங்களின் பதிவைப் படித்து பணிமனையில் பலமாக வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.
என்னே கற்பனை வளம் உங்களுக்கு! சொல்ல வந்த ஒரு அருமையான சங்கதியை மிகவும் நகைச்சுவையாக இரசிக்கும் வண்ணம் சொல்லியுள்ளீர்கள்.
உங்களின் இப் பதிவைப் பிரதி எடுத்து என் தமிழ்நண்பர்கள் சிலருக்கு உடனடியாக பணிமனையில் இருந்து தொலைநகலில்[Fax] அனுப்பினேன். இங்கே உங்களுக்கு ஒரு இரசிகர் கூட்டமே உருவாகுது என்றால் மிகை இல்லை.:))
நிற்க. இனிப் பதிவு பற்றி.
இராகவன், இச் சொல் எனக்குப் புதிதல்ல. எங்கள் ஊரில் இச் சொல் அன்றாட புழக்கத்தில் உண்டு.
தைப்பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன், "உடுக்கைகள் படுக்கைகள் எல்லாத்தையும் எடுத்தா தோய்க்கிறதுக்கு" என்று என் பேரனார் சொல்வது இன்றும் ஞாபகத்தில் நிற்கிறது. உடுக்கை,உடுப்பு போன்ற சொற்கள் எனது ஊரில் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் அன்றாட புழக்கத்தில் உள்ள சொல் என்றே நம்புகிறேன்.
January 19, 2007 2:00 PM
--
G.Ragavan said...
// வெற்றி said...
இராகவன்,
நீங்கள் செய்தது உங்களுக்கே நல்லாய் இருக்குதா? :))
உங்களின் பதிவைப் படித்து பணிமனையில் பலமாக வாய்விட்டுச் சிரித்து விட்டேன். //
ஹா ஹா ஹா...சிரித்து விட்டீர்களா? அப்பாடி...இப்பத்தான் எனக்கு நிம்மதி. :-)
// என்னே கற்பனை வளம் உங்களுக்கு! சொல்ல வந்த ஒரு அருமையான சங்கதியை மிகவும் நகைச்சுவையாக இரசிக்கும் வண்ணம் சொல்லியுள்ளீர்கள். //
உண்மையச் சொன்னா....இந்தப் பதிவ எழுத மெனக்கெடலை. ரொம்ப லேசா எழுதுனது.
// உங்களின் இப் பதிவைப் பிரதி எடுத்து என் தமிழ்நண்பர்கள் சிலருக்கு உடனடியாக பணிமனையில் இருந்து தொலைநகலில்[Fax] அனுப்பினேன். இங்கே உங்களுக்கு ஒரு இரசிகர் கூட்டமே உருவாகுது என்றால் மிகை இல்லை.:)) //
ஆகா........நன்றி நன்றி. வெற்றி நமது பக்கம். :-)
// நிற்க. இனிப் பதிவு பற்றி.
இராகவன், இச் சொல் எனக்குப் புதிதல்ல. எங்கள் ஊரில் இச் சொல் அன்றாட புழக்கத்தில் உண்டு. //
அப்படியா? மிக நன்று. மகிழ்ச்சி தரும் செய்தி இது.
// தைப்பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன், "உடுக்கைகள் படுக்கைகள் எல்லாத்தையும் எடுத்தா தோய்க்கிறதுக்கு" என்று என் பேரனார் சொல்வது இன்றும் ஞாபகத்தில் நிற்கிறது. உடுக்கை,உடுப்பு போன்ற சொற்கள் எனது ஊரில் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் அன்றாட புழக்கத்தில் உள்ள சொல் என்றே நம்புகிறேன். //
பேரனார் என்றால் பாட்டனாரா? ஏனென்றால் முன்பு சந்திரவதனாவின் பதிவில் பேத்தியார் என்பது பாட்டியைக் குறிக்கும் என்று படித்த நினைவு.
January 20, 2007 7:53 AM
--
இலவசக்கொத்தனார் said...
//நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.//
செந்தில் கவுண்டமணி அப்படின்னு வந்த உடனே அவங்க வசனம் எல்லாம் இயல்பா வருதே. இதைப் படிச்ச உடனெ செந்தில் சொல்லும் பூவை பூவுன்னு சொல்லலாம், புய்ப்பமுன்னு சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது. :))
January 20, 2007 11:05 AM
--
G.Ragavan said...
// இலவசக்கொத்தனார் said...
//நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.//
செந்தில் கவுண்டமணி அப்படின்னு வந்த உடனே அவங்க வசனம் எல்லாம் இயல்பா வருதே. இதைப் படிச்ச உடனெ செந்தில் சொல்லும் பூவை பூவுன்னு சொல்லலாம், புய்ப்பமுன்னு சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது. :)) //
உண்மைதான் கொத்ஸ். அது என்ன படம்னு கூட மக்களுக்குத் தெரிஞ்சிருக்குமோ இல்லையோ...இந்த வசனம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். :-))) எனக்கும் ரொம்பப் பிடிச்ச வசனம் அது.
January 21, 2007 8:02 AM
////உடுக்கப் பயன்படுவது உடுக்கை. படுக்கப் பயன்படுவது படுக்கை....அது மாதிரி...நீங்க இப்பிடி பருக்கப் பயன்படுவது பருக்கை.////
ReplyDeleteசூப்பர்!
சூப்பர் பதிவு! வாய்விட்டுச் சிரிச்சேன் :) அதுலயும் பருக்கை விளக்கம் அதி சூப்பர்! :) நன்றி, குமரா, ஜிரா! (அட, ரைமிங்கா வந்துருச்சே! :)
ReplyDeleteஆமாம் வாத்தியார் ஐயா. அந்த பகுதி ரொம்ப நல்லா இருக்கு. :-)
ReplyDeleteபருக்கை விளக்கம் மட்டும் இல்லை கவிநயா அக்கா. இந்த இடுகையில நிறைய வாய் விட்டு சிரிக்க இருக்கிறது. ஒவ்வொரு முறை படிக்கும் போது சிரித்துக் கொண்டே படிப்பேன். :-)
ReplyDeleteஆகா... இந்தப் பதிவு திரும்பவும் வந்திருக்குது. எனக்குப் பிடிச்ச பதிவும் கூட. :)
ReplyDeleteஅது சரி... ஜிரா... கோரா.... இராகவன்னு எல்லாப் பேரையும் ஒன்னாப் போட்டுட்டீங்க! :D
ஆமாம் இராகவன். கூவி அழைத்தால் குரல் கொடுக்கிறீர்களா என்று பார்க்கத் தான் எல்லா பெயர்களையும் கொண்டு அழைத்தேன். வந்துவிட்டீர்கள். :-)
ReplyDelete