Thursday, May 15, 2008

அலைபேசி

தொலைபேசி தெரியும். அதென்ன அலைபேசிங்கறீங்களா? கொஞ்சம் சிந்திச்சுப் பாத்தா புரிஞ்சிரும்ங்க. ஆங்... அதே தான். மொபைல் போன், செல் போன் என்றெல்லாம் சொல்றோமே - அதனைத் தமிழ்ல அலைபேசின்னு சொன்னா என்னங்க? நம்ம வா. மணிகண்டன் அவரோட தமிழ்மண விண்மீன் வாரத்துல இதனைப் பயன்படுத்தியிருந்தார்ன்னு நினைக்கிறேன். அப்ப குறிச்சு வச்சுக்கிட்டேன் இந்த சொல்லை - சொல் ஒரு சொல்லுக்காக. இனிமே நாம எல்லாரும் செல்போன்னு சொல்லாம அலைபேசின்னே சொல்லலாங்களா?

வேற பொருத்தமான சொல் ஏதாச்சும் இருந்தா அதையும் சொல்லுங்க.

9 comments:

  1. இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 25 செப்டம்பர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    37 கருத்துக்கள்:

    Sivabalan said...
    குமரன் சார்

    நல்ல வார்த்தை. ஆனால் எல்லா தொலை பேசிக்கும் பொருந்தும் வார்த்தையாகத்தான் உள்ளது.

    Mobile என்பதற்கு நடமாடும் என்று சொல்லலாமா?

    ஏனென்றால் Mobile Library ஐ நடமாடும் நூலகம் என்று சொல்கிறார்கள்..

    அதனால் நடமாடும் பேசி என சொல்லலாமா?

    பதிவுக்கு நன்றி

    October 04, 2006 7:48 AM
    --

    G.Ragavan said...
    அலைபேசீங்குறது எதுனால? பொருத்தமா இருக்கும்னு தோணலை. தொழில்நுட்பத்த வெச்சிப் பாத்தா எல்லாத் தொலைபேசிகளும் அலைபேசிகள்தான். செல்லிடைபேசி என்று கூட சிலர் சொல்கிறார்கள். கைத்தொலைபேசி எனலாம். அல்லது செல்லுமிடமெல்லாம் பேச உதவும் செல்லிடப்பேசி அல்லது செல்பேசி என்றும் சொல்லலாம்.

    October 04, 2006 8:27 AM
    --

    Johan-Paris said...
    அன்புக் குமரா!
    ஓகோ ,இதை வைத்துக்கொண்டு சிலபேர்- அலையோ அலையென அலைஞ்சு கொண்டு அலம்பித் திரிவதால், உங்களுக்கு இந்த எண்ணம் வந்துதோ தெரியல!!!!ஆனாலும் உங்களுக்கு இந்தக் குறும்பு கூடாது. எனினும் ;செல்பேசியே போது மெனக் கருதுகிறேன்.இதை புழக்கத்தில் கொண்டு வந்தாலே போதும்.
    யோகன் பாரிஸ்

    October 04, 2006 8:45 AM
    --

    குமரன் (Kumaran) said...
    அலை தொலைநுட்பத்தால் ஆன பேசி என்ற முறையில் அலைபேசி என்று சொல்லவில்லை. அலைபேசி என்றால் அலைந்துகொண்டே பயன்படுத்தக் கூடிய தொலைபேசி என்ற பொருளினைத் தான் கொண்டேன். :-)

    October 04, 2006 9:17 AM
    --

    Merkondar said...
    அணுத்தொலை பேசி என வைக்கலாமா?
    கைத்தொலை பேசியே நன்றாகஉள்ளது

    October 04, 2006 9:31 AM
    --

    தேவ் | Dev said...
    அலைபேசி அவ்வளவு அழுத்தமாக இல்லையே..

    யோகன் சார் சொல்லியிருக்கும் கருத்து நல்ல நகைச்சுவை:)

    October 04, 2006 10:18 AM
    --

    சிவமுருகன் said...
    இதை நான் செல்ல பேசி என்று சொவதுண்டு.

    அலைபேசி சரியாக உள்ளது பலரும் பயன் படுத்தும் வார்த்தை.

    உடன்பேசி என்றும் சிலர் சொல்கிறார்கள்.

    October 04, 2006 11:17 AM
    --

    இலவசக்கொத்தனார் said...
    செல்பேசி - இதுவே போதுமே. நம்ம எங்க போனாலும் கூடவே செல்லும் பேசி. ஆங்கிலத்திலும் செல் எனச் சொல்வதால் புரிதல் எளிது.

    October 05, 2006 7:51 AM
    --

    குமரன் (Kumaran) said...
    சிவபாலன். அப்பாடா - 'நல்ல பதிவு'ன்னு சொல்றதோட வழக்கமா நிப்பாட்டிருவீங்க. இந்தத் தடவை கருத்து, கேள்விகள்ன்னு அசத்திட்டீங்க. :-)

    அலைபேசிங்கறது தொலைபேசிக்கும் பொருந்து சொல்லா? எப்படி?

    நடமாடும் பேசின்னு தான் நேரடியா மொழிபெயர்த்தால் வரும். ஆனால் அதனை விட சிறப்பான சொற்களைத் தேடலாம் என்று தோன்றுகிறது.

    October 06, 2006 6:39 AM
    --

    குமரன் (Kumaran) said...
    இராகவன். நீங்களும் சிவபாலன் சொன்ன மாதிரியே சொல்லியிருக்கீங்க. அலை பேசின்னா அலைவரிசைகளினால் இயக்கப்படும் பேசின்னு பொருள் எடுத்துக்கிட்டீங்களா? பதிவுல சரியா சொல்லாம விட்டுட்டேன் போல இருக்கே?!

    செல்லிடைபேசி, கைத்தொலைபேசி இவற்றை எல்லாம் விட செல்பேசி நல்லா இருக்கு. :-)

    October 06, 2006 6:41 AM
    --

    குமரன் (Kumaran) said...
    யோகன் ஐயா. நல்ல நகைச்சுவை. படித்துச் சுவைத்தேன். :-)

    ஆக உங்கள் வாக்கும் செல்பேசிக்குத் தானா? நல்லது. :-)

    October 06, 2006 6:42 AM
    --

    குமரன் (Kumaran) said...
    என்னார் ஐயா. அணுத்தொலைபேசி என்பது செல்பேசி போல் எளிமையாக இல்லையே. கைத்தொலைபேசிக்கு உங்கள் வாக்கா? சரி.

    October 06, 2006 6:43 AM
    --

    குமரன் (Kumaran) said...
    தேவ். அலைபேசி அழுத்தமாக இல்லை என்று மட்டும் சொன்னால் எப்படி? எந்தச் சொல் அழுத்தமாக இருக்கிறது; எதற்கு உங்கள் வாக்கு என்பதயும் சொல்லுங்கள்.

    October 06, 2006 6:44 AM
    --

    குமரன் (Kumaran) said...
    செல் பேசியும் செல்ல பேசியும் நல்லா இருக்கு சிவமுருகன்.

    அலைபேசி பலரும் பயன்படுத்துகிறார்களா? எனக்குத் தெரியாதே?

    உடன்பேசி என்றால் எந்த பொருளில் சொல்கிறீர்கள்?

    October 06, 2006 6:45 AM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆக கொத்ஸின் வாக்கும் செல்பேசிக்குத் தான். நல்ல சிலேடையாகவும் இருக்கிறது.

    October 06, 2006 6:46 AM
    --

    தேவ் | Dev said...
    என் வாக்கும் செல்பேசிக்குத் தான் :)

    October 06, 2006 6:49 AM
    --

    கோவி.கண்ணன் [GK] said...
    குமரன்...!

    இங்கு சிங்கையில் நம் தமிழர்கள், மொபைல் போனை - கையடக்க தொலைபேசி என்று சொல்வார்கள். அது சுருங்கி கைபேசி ஆகிவிட்டது இப்போ !
    :)

    October 06, 2006 9:42 AM
    --

    பூங்குழலி said...
    செல்பேசி= செல்லிடத் தொலைபேசி

    என் வாக்கும் செல்(ல)பேசிக்குத்தான்..

    நன்றி,
    பூங்குழலி

    October 06, 2006 10:37 AM
    --

    வைசா said...
    அலைபேசி என்பது சரியாகத் தோன்றவில்லையே. கைத்தொலைபேசி அல்லது கோவி கண்ணன் கூறியது போல சுருக்கி கைப்பேசி என்பதுதான் பொருத்தமாகத் தெரிகிறது.

    வைசா

    October 06, 2006 11:45 AM
    --

    வெற்றி said...
    குமரன்,
    இன்று கிட்டத்தட்ட எல்லோராலும் பாவிக்கப்படும் பொருட்களில் இதுவும் ஒன்று. கட்டாயம் இச்சொல்லுக்கு தமிழ்ச்சொல் வேண்டும். சில வருடங்களின் முன்னர் கலைஞர் அவர்களின் உரை ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவ்வுரையில் கலைஞர் செல்லிடப் பேசி என்றே cell phone ஐச் சொன்னார்கள். அன்றிலிருந்து நான் செல்லுமிடப் பேசி எனும் சொல்லைத்தான் புழங்கி வருகிறேன்.

    October 07, 2006 1:28 AM
    --

    சிவமுருகன் said...
    //உடன்பேசி என்றால் எந்த பொருளில் சொல்கிறீர்கள்? //

    நம்முடனே இருந்து (உடனே) பேசமுடிகிறதே அதனால் அப்பெயர்.

    October 07, 2006 10:30 AM
    --

    ஜெயஸ்ரீ said...
    என்னுடைய வாக்கு செல்பேசிக்கே

    வினைத்தொகையாகவும் இருக்கிறது

    என்னுடன் நேற்று சென்ற பேசி, இன்று செல்லும் பேசி, நாளையும் செல்லும் பேசி )))

    October 07, 2006 10:58 AM
    --

    SK said...
    செல்பேசி என்பதே பொருத்தமான பெயராக எனக்குப் படுகிறது.

    ஆங்கில cell-லுடனும் இசைந்து வருவதால் ஜி.ரா. சொல்வது போல் புரிதல் எளிது.

    கைப்பேசி என்றால் மற்ற பேசிகளை வேறு எதன் மூலம் பயன்படுத்துகிறோம் என்ற ஐயமும் வருகிறது! அவற்றையும் கையில் தானே பிடிக்கிறோம்.

    குழம்பும்.

    என் வாக்கும் செல் பேசிக்கே.

    October 07, 2006 6:00 PM
    --

    மாயவரத்தான்... said...
    தமிழிலே பேரை மாத்தி சொன்னா, மாச பில்லிலே பேரன் எதுனாச்சும் வரி விலக்கு, தள்ளுபடி தர்றாராமா?!

    ஹிஹி..

    தமிழிலே இப்படி மாத்த கஷ்டப்படுறதை விட, பேசாம 'மொபைல்' அப்படீன்றதே தமிழ் வார்த்தை தான்னு சொல்லிட்டு தமிழை வளர்க்கலாமே?! (இதை கிண்டலுக்கு சொல்லலை!)

    October 07, 2006 9:05 PM
    --

    குமரன் (Kumaran) said...
    சிங்கையில் கைபேசியா இதற்குப் பெயர். நன்றாக இருக்கிறது கோவி.கண்ணன் ஐயா.

    October 11, 2006 5:31 AM
    --

    குமரன் (Kumaran) said...
    உங்கள் வாக்கும் செல்பேசிக்குத் தானா?! நன்றி பூங்குழலி.

    October 11, 2006 5:31 AM
    --

    குமரன் (Kumaran) said...
    வைசா, கைத்தொலைபேசி, கைபேசி சரி. செல்பேசியைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

    அதற்குத் தான் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் போல் இருக்கிறதே.

    October 11, 2006 5:44 AM
    --

    குமரன் (Kumaran) said...
    கலைஞரும் செல்லிடப்பேசி என்றாரா? அப்படியென்றால் அவர் வாக்கும் செல்பேசிக்குத் தான் இருக்கும் வெற்றி. :)

    October 11, 2006 5:45 AM
    --

    குமரன் (Kumaran) said...
    விளக்கத்திற்கு நன்றி சிவமுருகன்.

    October 11, 2006 5:46 AM
    --

    குமரன் (Kumaran) said...
    ஜெயஸ்ரீ,

    சரியாகச் சொன்னீர்கள். நானும் அது வினைத்தொகை ஆதலால் என் வாக்கும் செல்பேசிக்கே என்று நினைத்தேன். :-)

    October 11, 2006 5:47 AM
    --

    குமரன் (Kumaran) said...
    எஸ்.கே.வின் வாக்கும் செல்பேசிக்கே. முடிவை அறிவித்துவிடலாம் போலிருக்கே. :-)

    October 11, 2006 5:48 AM
    --

    குமரன் (Kumaran) said...
    மாயவரத்தான்,

    தமிழ்ல பேரை மாத்திச் சொன்னா வரிவிலக்கு தள்ளுபடி தரணும்ன்னு கேக்கிறவங்களை எங்கே கொண்டு போய் வைக்கிறது? சாம தான தண்ட பேதத்துல தானம் என்ற வழிக்குத் தான் இப்போது செல்வாக்கு இருக்கிறது. இந்த வலைப்பூவில் பயன்படுத்துவது சாமம் என்னும் வழி. தண்டத்திற்கும் பேதத்திற்கும் இங்கே வேலையில்லை. உங்களுக்கும் சாம தான தண்ட பேதங்களைப் பற்றித் தெரியும் என்று நம்புகிறேன். :-)

    உங்கள் கேள்விக்குப் பதில் பலமுறை சொல்லியாயிற்று. இன்னொரு முறை சொன்னாலும் தவறில்லை. சொல்கிறேன்.

    தமிழில் கலைச்சொல் சேர்ப்பது கஷ்டமா? சரி தான். விட்டால் ஒவ்வொரு நாளும் உண்பது கஷ்டம்; ஒவ்வொரு முறையும் மூச்சிழுப்பது கஷ்டம் என்று கூட சொல்வீர்கள். :-)

    தமிழில் மற்ற மொழிச் சொற்களை அப்படியே தமிழ்ப்படுத்திப் பயன்படுத்தலாம் தான். அவை பெயர்சொற்களுக்கு மிகப் பொருந்தும். கருணன், வீடணன், இலக்குவன், வீமன், கன்னன் என்று வடமொழிப் பெயர்களை தமிழ்ப்படுத்திப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படி தமிழ்ப்படுத்தும் போது வேற்றுமொழிச் சொல்லிற்கும் தமிழ்ச்சொல்லிற்கும் வேறுபாடு மிகுதியாக இருந்தால் தமிழ்ச்சொல் எது என்று நன்கு தெரியும். மேலே சொன்னவற்றில் எல்லாமே தமிழ்ச்சொற்கள் என்பது சொல்லாமலேயே புரியும். ஆனால் அவ்விதம் செய்யாமல் வேற்று மொழிச் சொல்லை அப்படியே தமிழில் கொண்டுவந்ததால் தமிழில் அதற்கு ஒரு சொல்லும் இல்லமல் போய் ஒரு காலத்தில் தமிழால் தனித்தியங்க முடியாது; இந்த வேற்று மொழியின் அடிப்படையிலேயே தமிழ் அமைந்திருக்கிறது என்று சிலர் கொக்கரிக்க வழிவகை ஏற்படுகிறதே?! வடமொழிச் சொற்கள் பலவற்றை தமிழில் அப்படியே எடுத்தாண்டதால் தற்போது சிலர் வடமொழியே தமிழுக்கு அடிப்படை; வடமொழியின்றித் தமிழ் தனித்தியங்க முடியாது என்று சொல்கிறார்களே. நீங்கள் சொல்வது போல் ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எடுத்தாண்டால் வருங்காலத்தில் சிலர் ஆங்கிலமே தமிழுக்கு அடிப்படை; ஆங்கிலமின்றித் தமிழ் தனித்தியங்க முடியாது என்று சொல்லலாம். இதனைத் தவிர்ப்பதற்கும் தமிழில் தமிழ்க் கலைச்சொல்லே அமைவதற்கும் ஆன சிறு முயற்சியே இந்தப் பதிவுகள்.

    October 11, 2006 5:59 AM
    --

    குமரன் (Kumaran) said...
    இதுவரை வந்த பின்னூட்டங்களில் செல்பேசியே அதிக வாக்குகள் பெற்றிருப்பதால் அந்தச் சொல்லையே 'சொல் ஒரு சொல்' பதிவின் சார்பாக பரிந்துரைக்கிறேன். இனி செல்பேசி என்றே மொபைல் போனைச் சொல்வோம். :-)

    October 11, 2006 6:01 AM
    --

    ரவிசங்கர் said...
    வழக்கில் உள்ள சில சொற்கள்: phone - பேசி, telephone - தொலைப்பேசி, handphone - கைப்பேசி, cell phone, mobile phone - செல்பேசி, நகர்பேசி (செல் as in சென்றான்!),

    செல்லுமிடமெல்லாம் பேசலாம் என்பதற்காக செல்பேசி எனலாம். ஆனால், mobilw என்பது mobile phone தாண்டி பல இடங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. mobile=நகரத்தக்க, நகர இயன்ற. எனவே நகர்பேசி என்று அழைப்பதும் நுட்ப வகையில் பொருத்தமானது.

    செல்பேசி = cellphone என்று ஓசை ஒத்திருப்பதால் மக்கள் புழக்கத்துக்கு எளிதில் வர ஏதுவான சொல்.

    நல்ல வலைப்பதிவு இது தொடர்ந்து எழுதுங்கள்.

    November 11, 2006 6:10 AM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி இரவிசங்கர். தொடர்ந்து வந்து தங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

    November 15, 2006 5:58 AM
    --

    குறும்பன் said...
    ஒரு திங்கள் கடந்து விட்டது, புதிய பதிவை காணோமே? என்ன ஆச்சு? ராசாக்களா குறைந்தது மாதத்துக்கு இரண்டு பதிவாவது போடுங்கப்பா.

    November 23, 2006 8:10 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் குறும்பன். ஒரு திங்கள் சென்று விட்டது. அடுத்த வாரம் ஒரு பதிவை இடுகிறேன். மன்னிக்கவும்.

    November 24, 2006 1:03 AM

    ReplyDelete
  2. செல்பேசிதான் சரியா இருக்கு; ஆனா இன்னும் நிறைய இடங்கள்ல அலைபேசின்னு பயன்படுத்தறதைப் பார்த்திருக்கேன்...

    ReplyDelete
  3. உங்கள் வாக்கும் செல்பேசிக்குத் தானா கவிநயா அக்கா. எளிதாகவும் இருக்கிறதே.

    ReplyDelete
  4. எல்லாத்தையும் விட ஒரு நல்ல சொல் இருக்கிறது. அதுதான் செல்போன். அதுக்கு என்ன குறைச்சல்? இப்ப செல்போன் என்று சொன்னால் யாருக்குக்காவது புரிய மாட்டேன் என்கிறதா?

    கஷ்ட்டப்பட்டு இங்கிலீஷ்காரன் கண்டு பிடிச்ச செல்போனுக்கு பெயர் வெக்கிறதுக்கு நாம படற கஷ்டம் உண்மையாகவே கஷ்டம்டா சாமி. இப்படி கஷ்ட்டப்பட்டு பெயர் வைத்து என்ன செய்யப்போகிறோம்? அதுக்கு செல்போன் மாதிரி ஒரு புதிய கண்டுபிடிப்பை செய்தாலாவது மனித குலத்துக்கு பயனுடையதா இருக்கும்.

    அது சரி, நம்மாலத முடிஞ்சதத்தான நாம செய்ய முடியும்.

    ReplyDelete
  5. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் அமரபாரதி.

    ReplyDelete
  6. செல்பேசியோ அலை பேசியோ பேசதானே போகிறோம். இரண்டுமே நன்றாகதான் இருக்கிறது. பெண்களுக்கு செல் ஆண்களுக்கு அலை என்ற பிரிவினையை உருவாக்கலாமே :)

    ஐபி போனை வலைபேசி என்றழைக்கலாமா?

    வயர்லெஸ் இண்டர்னெட்டை உபயோகிக்கும் ஐபி போனை அலைவலைபேசி என்றழைக்கலாமா?

    ReplyDelete
  7. நல்ல பரிந்துரைகள் சிவாண்ணா. :-)

    ReplyDelete
  8. செல்லிடப்பேசி - செல்பேசி

    ReplyDelete
  9. ஆமாம் மருத்துவரே. வேறு சிலரும் அதனைச் சொல்லியிருக்கிறார்கள்.

    ReplyDelete