பச்சை நிறம் கொண்ட இலவம் பஞ்சின் பழத்தைப் பார்த்த ஒரு கிளி இந்தப் பழம் உண்ண இது சரியான நேரம் இல்லை; தற்போது பச்சைக் காயாக இருக்கிறது; இது விரைவில் பழுக்கும்; அப்போது இதனைச் சுவைத்து உண்ணலாம் என்றெண்ணிக் காத்திருந்தது. காலமும் சென்றது. பழமும் பழுக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் அந்த இலவங்காய் வெடித்து வெண்ணிறப் பஞ்சு எங்கும் சிதறிப் பறந்தது. கிளியும் ஏமாந்தது.
இறைவனை வணங்க இது காலமில்லை; நான் தற்போது இளைய வயதுடன் இருக்கிறேன். சற்று முதிர்ந்த பிறகு இறைவனை வணங்கி இன்புறலாம் என்று ஒவ்வொரு மனிதனும் நினைத்துக் கொள்கிறான். காலமும் செல்கிறது. வயது ஏறினாலும் இறைவனை வணங்கும் வயது வந்துவிட்டதாக யாரும் நினைப்பதில்லை. காலன் வந்து உயிரைக் கவர்ந்து சென்ற பின் காலத்தை எல்லாம் வீணே கழித்து ஏமாந்தோமே என்று அந்த ஜீவன் வருந்துகிறது.
இளமையில் அனுபவித்து முடிக்க வேண்டியவற்றிற்கு முடிவே இல்லை. இலவங்காயும் பழுக்கப் போவதில்லை. அதனால் கிளியைப் போல் ஏமாறாமல் இன்றே இறைவனை வணங்கி அவன் புகழ் பாடி 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்றெண்ணி அவன் தொண்டினைச் செய்து அவன் அடியாராய் வாழ்வோம்.
***
இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 13 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது.
இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 13 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete34 comments:
நாகை சிவா said...
இந்த இலவு காத்த கிளி மேட்டரு தான் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்றும் சொல்வார்களோ குமரன்.
ஒரு நல்ல செய்தி சொல்லி உள்ளீர்கள் குமரன் வாழ்த்துக்கள்.
October 13, 2006 10:00 AM
--
கோவி.கண்ணன் [GK] said...
குமரன்..!
இதைத்தான் சாகிர காலத்தில் சங்கரா ! சங்கரா ! என்றால் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள் என்றார்களோ !
:)
October 13, 2006 10:32 AM
--
கால்கரி சிவா said...
ஒரு கிளியை வைத்து இத்தனை பதிவுகளா. கிளிகளின் வாஆஆஆரம்.
நல்ல கதை குமரன்
October 13, 2006 11:36 AM
--
Johan-Paris said...
அன்பு குமரா!
என் இளமை காலத்தில் "இலவு காத்த கிளி" ஓர் பாடல் தொகுப்புப் படித்துள்ளேன்; அதன் இறுதி வரி" பஞ்சாகிக் காற்றுடனே பறந்ததே!! பைங்கிளியார் போற்றி வந்த இலவம் பழமே!!.
காலாகாலத்தில் இறையருள்;கல்வி;உழைப்பு என்பன கூட தேடாவிடில் வாழ்வு!! இலவுகாத்த கிளி நிலைதான்!!! நன்கு சொன்னீர்
யோகன் பாரிஸ்
October 13, 2006 1:29 PM
--
இலவசக்கொத்தனார் said...
நல்ல வேளை அப்புறம் படிக்கலாம், அப்புறம் படிக்கலாம் என ஒத்திப் போடாமல் உடன் படித்தேன்!
நல்ல சுவையான கதைதான் குமரன்.
October 13, 2006 2:41 PM
--
குறும்பன் said...
நல்ல கதை குமரன்.
October 13, 2006 4:52 PM
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
மிக அருமையாகச் சொன்னீங்க குமரன்!
கடைசிக் காலத்தில் பாத்துக்கலாம், கடைசிக் காலத்தில் பாத்துக்கலாம், ன்னு கடைசியிலே காலனைத் தான் பாத்துக்கலாம்...:-))
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் தான் இறை அன்புக்குச் சரியா வரும்! இறை அன்புன்னு இல்லை எந்த அன்புக்கும் சரி!
சாதாரண விடயத்துக்கே.. நல்ல காரியம் தள்ளிப்போடக் கூடாதுன்னு சொல்றோம்...அப்ப உயிர் கடைத்தேறும் காரியம் மட்டும் ஏன் தள்ளிப் போடணும்?
உங்க பஜகோவிந்தம் பதிவுல சொன்ன மாதிரி கடைசியில பாத்துக்கறது, "நஹி நஹி ரக்ஷதி டுக்ருந் கரணே" தான்! :-)
October 13, 2006 6:45 PM
--
செந்தில் குமரன் said...
தப்பா நினைச்சுக்காதீங்க குமரன் இலவு காத்த கிளியை வைத்தே எனக்குத் தோன்றிய இன்னொரு சிறு கதை. உங்களுக்கு எதிர் கருத்து சொல்ல வேண்டும் என்றெல்லாம் இதை சொல்லவில்லை தோன்றியதை எழுதி விட்டேன் அவ்வளவே.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
தினமும் கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கி வருகிறான் பக்தன் ஒருவன். அவனுக்கு கடவுள் தரிசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். அவன் கடவுள் தரிசனம் கிடைக்காமலே இருப்பதால் தான் என்ன தவறு செய்கிறோம் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் கடைசி வரை அப்படி செய்யவே இல்லை.
கடைசியில் தான் உணர்கிறான் பிறர் சொன்னதை அப்படியே பின்பற்றிக் கொண்டிருந்தேன் என் அளவில் சரி தவறு என்பதை உணரவே இல்லை.
பசிக்கும் குழந்தைகள் இருக்கும் பொழுது கோயிலில் பாலாபிஷேகம் செய்தேன்.
உலகில் என் கடவுள் பேரால் சண்டைகள் நடக்க, நான் சண்டையிடவில்லை ஆகையால் எனக்கு சம்பந்தமில்லை என்று விட்டு விட்டேன்.உலகில் கடவுள் பெயரால் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்காமல் விட்டு விட்டேன்.
இப்படி கடவுள் கடவுள் என்று கோயிலில் மட்டுமே தேடி என்னை சுற்றி உள்ள சமூகத்தின் மேல் அக்கறை இல்லாமல் இருந்து விட்டேன்.
கடவுள் தரிசனம் கிடைக்க கடவுளை கோயிலில் மட்டுமே தேடிக் கொண்டிருந்து விட்டேன்.
கடவுள் தரிசனம் எனக்கு வேண்டுமென்றால் உலகில் அமைதிக்கு பங்காற்றி இருக்க வேண்டும். என் குடும்பம் என் கடவுள் என்று நான் நான் என்றே இருந்து விட்டேன்.
October 14, 2006 4:51 AM
--
வசந்தன்(Vasanthan) said...
எனது "இலவு காத்த கிளி" பதிவு.
சோமசுந்தரப்புலவர் எழுதிய பாட்டு.
October 14, 2006 5:24 AM
--
குமரன் (Kumaran) said...
உண்மை தான் நாகை சிவா. இந்த இலவு காத்த கிளி என்பதையும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதையும் இங்கே சொன்ன செய்தியில் மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் காலத்தால் செய்ய வேண்டிய பலவற்றிற்கும் சொல்லலாம். வழக்கம் போல் படித்துவிட்டுப் பின்னூட்டம் போடாமல் செல்லாமல் இந்த முறை பின்னூட்டம் இட்டதற்கு நன்றி. ;-)
October 14, 2006 5:49 AM
--
குமரன் (Kumaran) said...
உண்மை தான் கோவி.கண்ணன் ஐயா. மேலே நாகை சிவாவிற்குச் சொன்ன மாதிரி 'சாகிற நேரத்தில் சங்கரா சங்கரா என்றால் எப்படி' என்ற சொலவடையும் காலத்தால் செய்யாத எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
October 14, 2006 5:50 AM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் சிவா அண்ணா. இது கிளிகளின் வாஆஆஅரம் தான். :) உங்களின் 'நீமோ என்னும் அன்புருண்டை' பதிவை இன்னும் படிக்கவில்லை. விரைவில் படித்துவிடுவேன்.
October 14, 2006 5:51 AM
--
குமரன் (Kumaran) said...
நன்கு சொன்னீர்கள் யோகன் ஐயா. உங்கள் பின்னூட்டம் பார்த்த பின்பே மேலே நாகைசிவா, கோவி.கண்ணன் ஐயா இருவருக்கும் அந்த பதில் சொல்லத் தோன்றியது. மிக்க நன்றி.
October 14, 2006 5:52 AM
--
குமரன் (Kumaran) said...
கொத்ஸ். அப்புறம் படிக்கலாம் என்று தள்ளிப் போடும் அளவிற்கு என் பதிவுகள் பெரியதாகவோ போரடிப்பதாகவோ இருக்கின்றனவா? உண்மையை நேரடியாகச் சொல்லுங்கள். திருத்திக் கொள்ள முயல்கிறேன். :-)
October 14, 2006 5:58 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி குறும்பன்.
October 14, 2006 5:59 AM
--
குமரன் (Kumaran) said...
'இலவு காத்த கிளி', 'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்', 'சாகிற நேரத்துல சங்கரா சங்கரா என்றால்?', 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்', 'சுவரை வைத்துத் தான் சித்திரம் எழுத வேண்டும்' - ஹும் எத்தனை எத்தனை வகையில் இந்த பெரும் தத்துவத்தை நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். நாம் தான் புரிந்து கொள்வதில்லை.
நன்றி இரவிசங்கர்.
வள்ளுவரும் இதனை இன்னொரு வகையில் சொல்லியிருக்கிறார். 'காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்...'
October 14, 2006 6:02 AM
--
குமரன் (Kumaran) said...
செந்தில் குமரன். என் எண்ணம் (குமரன் எண்ணம்) நீங்கள். நீங்கள் எப்படி எதிர்கருத்து சொல்ல முடியும். நான் பதிவில் ஒரே வரியில் - இன்றே இறைவனை வணங்கி அவன் புகழ் பாடி 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்றெண்ணி அவன் தொண்டினைச் செய்து அவன் அடியாராய் வாழ்வோம் - என்று சொன்னதைத் தான் நீங்கள் விளக்கமாகப் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன். உங்கள் கருத்துடன் முழு ஒப்புதல் எனக்கு உண்டு. அதனையே பதிவிலும் பல இடங்களிலும் சொல்லியிருக்கிறேன்.
October 14, 2006 6:06 AM
--
குமரன் (Kumaran) said...
மிக அருமையான பாடலைத் தந்திருக்கிறீர்கள் வசந்தன். அந்தப் பாடலுக்கு என் பதிவில் விளக்கம் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். அனுமதி உண்டா?
October 14, 2006 6:11 AM
--
ramachandranusha said...
எனக்கு தெரிந்த இலவுகாத்த கிளி! மணியன் ஆனந்தவிகடனில் தொடர்கதையாய் எழுதி, பாராட்டு பெற்ற கதை இலவுகாத்த
கிளி. இதைத்தான் பாலசந்தர் "சொல்லத்தான் நினைக்கிறேன்" என்ற பெயரில் படமாக்கினார். இதில் வரும் பாடல்.
சொல்லத்தான் நினைக்கிறேன் பாட்டு எனக்கு மிகப் பிடிக்கும். எம்>எஸ். விஸ்வநாதனின் பாடிய பாடலில், இது ஒன்றுதான் சகிக்கிறாமாதிரி இருக்கும்.
ஐய்யயோ, யாரோ வராங்க... ஜூட்.....:-)
October 14, 2006 6:30 AM
--
குமரன் (Kumaran) said...
உஷா. யாரைப்பாத்துட்டு ஓடறீங்க? என்னையா? :-)
October 14, 2006 7:17 AM
--
SK said...
சீரிய கருத்தைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
இந்த 'சாகிற காலத்தில் 'சங்கரா, சங்கரா' என்னாமல், எப்போதும் கண்ணனை நினைத்துக் கொண்டிரு என்று கூட சொல்லியிருக்கிறார்கள்!
:)
'அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன், நாராயணா என்னும் நாமம்' என்று கூட ஒரு பாட்டு இருக்கிறது.
October 14, 2006 10:08 AM
--
G.Ragavan said...
அழித்துப் பிறக்கவொட்டா அயில்வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கிலீர் எரிமூண்டதென்ன
விழித்துப் பொங்குவெங் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டிழுக்குமன்றோ கவி கற்கின்றதே!
இதாங்க எங்க வாத்தியார் சொல்லிக் குடுத்தாரு :-)
October 14, 2006 11:11 AM
--
குமரன் (Kumaran) said...
இராகவன். பின்னூட்ட விதிகளின் படி பாடலின் விளக்கம் தேவை. :-)
October 14, 2006 11:14 AM
--
தி. ரா. ச.(T.R.C.) said...
நல்ல கதை குமரன்.எல்லா மனிதருக்கும் இது பொருந்தும்.இதே கருத்தை பாபநாசம் சிவனும் இப்படி கூறுகிறார்.
"ஒன்றுமே பயன் இல்லை என்று உணர்ந்த பின் அவர் உண்டு என்பார்
ஒவ்வொரு மனிதரும் ஒருநாள் இந்நிலை எய்வது உறுதி இதை மறந்தார்
அன்று செயலழிந்த ஒருபொழுது சிவன் நாமம் வாயில் வாராதே
ஆதலினால் மனமே இன்றே சிவ நாமம் சொல்லிப் பழகு
அன்புடன் நம்பிக் கெட்டவர் எவரையா--உமை
நாயகனை திரு மயிலையின் இறைவனை...
என்ற பாடலில்.இந்த எளிமையாண பாடலுக்கு விளக்கம் தேவையில்லை
October 15, 2006 5:40 AM
--
ramachandranusha said...
குமரன் தலைப்பைப் பார்த்ததும் நினைத்தாலே இனிக்கும் பாடலும், ஆசை பொங்குது பால்போலே வரிக்கு ஸ்ரீவித்யாவின் அழகு கண்களுமே நினைவுக்கு வந்தது. வந்துப் பார்த்தால் "அற்றைக்கு இற்றே சொன்னேன்" என்று எல்லாரும் மனமுறுகிக் கொண்டு இருக்கிறீர்கள். என்ன செய்ய வெள்ளத்தனைய மலர் நீட்டம் :-)
October 15, 2006 6:50 AM
--
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. அப்போதைக்கு இப்போதே சொல்லிவைக்கவும் ஒரு மனநிலை வேண்டும் அல்லவா. அவன் அருளாலே அவன் தாள் வணங்க இளம் வயதே ஏற்றது என்பதற்காகச் சொன்னேன்.
நான் கேட்ட பழமொழி 'சாகிற நேரத்தில் சங்கரா சங்கரா என்றால் எப்படி?' என்றதோடு நின்றது. கண்ணனை நினைன்னு சொல்லிக் கேள்விப்பட்டதில்லையே? ஆனாலும் அப்படிச் சேர்த்துச் சொல்வதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. :-)
October 15, 2006 7:07 AM
--
குமரன் (Kumaran) said...
நீங்கள் சொல்லும் பாடலை நானும் கேட்டிருக்கிறேன் தி.ரா.ச.
அன்று செயலழிந்த போது சிவன் நாமம் வாயில் வராதே; ஆதலினால் மனமே இன்றே சிவ நாமம் சொல்லிப் பழகு
அருமையான வாக்கியங்கள். நன்றி.
October 15, 2006 7:08 AM
--
குமரன் (Kumaran) said...
உஷா. மனமுறுகிக் கொண்டிருந்தார்களா? என்ன சொல்கிறீர்கள்? யாருடைய மனம் முறுகியது இங்கே? ஓஓ மனமுருகிக் கொண்டிருந்தார்களா? :-)
நல்ல வேளை வெள்ளத்தனைய மலர் நீட்டத்தோட நிறுத்தினீங்க. குலம், குணம்ன்னு எல்லாம் போகாம. :-)
October 15, 2006 7:10 AM
--
வெற்றி said...
குமரன்,
வணக்கம். கடந்த சில நாட்களாக வெளியூரில் இருந்ததால் எல்லாப் பதிவுகளையும் படித்துப் பின்னூட்டமிட முடியவில்லை.நிற்க.
நல்ல கதை. ஒரு பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை சின்னக் கதை மூலம் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
/*அதனால் கிளியைப் போல் ஏமாறாமல் இன்றே இறைவனை வணங்கி அவன் புகழ் பாடி 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்றெண்ணி அவன் தொண்டினைச் செய்து அவன் அடியாராய் வாழ்வோம். */
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
- தெய்வப் புலவர் வள்ளுவர்
நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்
தொன்றின ஒன்றின வல்லே செயிற் செய்க;
சென்றன சென்றன வாழ்நாள், செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று!
- நாலடியார்
October 15, 2006 11:55 AM
--
குமரன் (Kumaran) said...
தொடர்ந்து பதிவுகள் படிப்பதற்கு நன்றி வெற்றி. பாடல்களின் விளக்கத்தையும் சொல்லியிருக்கலாமே?!
October 16, 2006 10:33 AM
--
Sivabalan said...
:)
நோ கம்ன்ட்ஸ்.
October 16, 2006 12:02 PM
--
சிவமுருகன் said...
அண்ணா,
ஸ்ரீமன் நடன கோபால நாயகி ஸ்வாமிகளும் இதை வெகு சாதாரணமான வார்த்தைகளில் சொல்கிறார்
"ஹிந்ததி காய் நிஜமு - ஏ
நிமுஸு பல்ச்சோ நிமுஸ்
ரா:ஸ்த தி காய் நிஜம்"
இன்று என்பது உண்மை அதாவது உன்னுடைய உடலும் இன்று இப்போது இருப்பது உண்மை நாளை என்று கூட சொல்லாம் இந்த நிமிடம் போனால் அடுத்த நிமிடம் இருப்பது உன்கையில் இல்லை எனவே இப்போதே ஆரம்பிப்பாய் என்கிறார்.
"தின்னு ஸெரேத் யமோ சொன்னாவி தெல் ஜேடை
அன்ன ஹால் ஹொயே ஸரிர் பொன்னொ துளி ஜேடை"
நாட்கள் கடந்து விட்டால் யமன் தாமதிக்க மாட்டான் உணவினால் உன்டான உன் உடல் பாண்டம் உருண்டோடி விடும்.
சரியாக இவ்வரிகள் உங்கள் கதைக்கு பொருந்துகிறது.
October 17, 2006 8:33 AM
--
குமரன் (Kumaran) said...
வருகைக்கும் வந்ததைச் சொன்னதற்கும் நன்றி சிவபாலன். :-)
October 19, 2006 8:39 PM
--
குமரன் (Kumaran) said...
உண்மை தான் சிவமுருகன். நாயகி சுவாமிகள் இன்னொரு பாடலில் இலவு காத்த கிளியைப் பற்றியே ... ரமோ ஸொகோ என்று சொல்லியிருப்பார். அது தான் இந்தப் பதிவின் தூண்டுதல்.
October 20, 2006 5:43 AM