Sunday, December 23, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 9

கள்ளம் கபடம் இல்லாத இந்த மக்களைப் பார்க்கும் போதெல்லாம் என் மனம் குதூகலிக்கிறது. என் மனமகிழ்ச்சியை மணம் வீசும் என் மலர்களின் மூலம் வெளிப்படுத்துகிறேன். எப்போதெல்லாம் இந்த மக்கள் இந்தக் குன்றின் மேல் கூடி இங்கு நட்டு வைத்திருக்கும் வேலின் முன்னால் திருவிழா கொண்டாடுகிறார்களோ அப்போதெல்லாம் நான் பூத்துக் குலுங்குகின்றேன்.

குண்டு குண்டாக இருக்கும் என் மலர்களைத் தொடுத்து மாலையாக்கி அவர்கள் வேலுக்குச் சூடி விழா கொண்டாடுகின்றனர். வேலுக்குச் சூடிய மாலையை எடுத்து வேலன் என்ற ஒருவன் சூடி வெறியாட்டம் ஆடுகின்றான். மக்கள் எல்லோரும் தங்கள் குறைகளைக் கூறி அவனிடம் நல்வாக்கு பெறுகின்றனர். அவ்வப்போது 'கடம்பம் கடம்பம்' என்று வேலன் கூவுகின்றான். அப்போது சிலர் என்னைக் காட்டி 'அது தான் கடம்ப மரம்' என்று சொல்கிறார்கள். என் பெயர் அது தான் போலும். என்னைச் சுற்றி பல மரங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் சில தான் பூக்கள் பூக்கின்றன. அந்தப் பூக்கள் எதையுமே இவர்கள் வேலுக்கோ வேலனுக்கோ சூட்டுவதில்லை. என் மலர்களை மட்டுமே சூட்டுகிறார்கள். அதில் எனக்குப் பெருமை தான். என்னால் இவர்களின் கொண்டாட்டத்திற்கு உதவ முடிகிறதே என்ற மகிழ்ச்சியில் இன்னும் அதிக மணத்துடன் நிறைய பூக்களைப் பூக்கிறேன்.





அடடா. இதென்ன அதிசயம். இந்த மக்களைப் போன்ற உருவம் கொண்டவர் தானே அவரும்? அவர் மட்டும் எப்படி ஆகாயத்தில் பறந்து வருகிறார். அவர் அருகில் வர வர நறுமணம் வீசுகிறதே. என் மலர்களின் மணம் எல்லாம் இந்த நறுமணத்திற்கு முன் என்னாகும்? அழகும் இளமையும் உடைய உருவம். மக்கள் எல்லோரும் அவரை வணங்குகிறார்கள். நானும் வணங்கிக் கொள்கிறேன். 'போகர் போகர்' என்று இந்த மக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதைப் பார்த்தால் இவர் பெயர் போகர் போலும். போகரே. உம்மை நானும் வணங்குகிறேன். இந்த மக்கள் எல்லோரும் அவரைச் சூழ்ந்து அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்கிறார்கள். நானும் கேட்கிறேன். நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.

"மகாஜனங்களே. இந்த குன்றத்தின் சிறப்பு உங்களுக்குத் தெரியுமா? இங்கே ஏன் வேலை நிறுவி வழிபட்டு வருகிறீர்கள் என்று தெரியுமா?"

"சித்தர் பெருமானே. வழி வழியாக இந்தக் குன்றத்தின் மேல் இந்த வேல் இருப்பதை அறிவோம். குன்றத்தைச் சுற்றி வாழும் நாங்கள் நெடுங்காலமாக இந்த வேலை வணங்கி வருகிறோம். இந்த இடத்தில் வேலனின் வெளிப்பாடு அதிகம் இருப்பதையும் காண்கிறோம். மற்றபடி வேறொன்றும் அறியோம்"

"மக்கள் தலைவரே. நீங்கள் சொன்னது போல் இந்த இடத்தில் கந்தனின் வெளிப்பாடு நிறைந்து தான் இருக்கிறது. இந்த வேல் இருக்கும் இடத்தில் முருகனுக்கு ஒரு திருவுருவம் சமைத்து நிறுவ எண்ணியிருக்கிறேன். அந்தத் திருவுருவதைத் தொழுதால் உங்கள் பிறவிப்பிணி நீங்கும்; திருவுருவத்திற்கு முழுக்காட்டி அந்த நன்னீரை உட்கொண்டால் உடற்பிணி நீங்கும். உறுதியான உடல் தானே இறைவன் வாழும் ஆலயம். அதனால் உடலுக்கும் உயிருக்கும் நன்மையை அருளி என்றும் இங்கே நிலையாக நிற்பான் திருக்குமரன்"

"ஆகா. அப்படியே ஆகட்டும் பெருமானே. எங்களால் ஆகும் எல்லா விதமான உதவிகளையும் செய்கிறோம். கட்டளை இடுங்கள்"




"ஒன்பது விதமான நச்சு மூலிகைகளாலும் பொருட்களாலும் முருகனின் திருவுருவத்தை உருவாக்கப் போகிறேன். அந்தப் பொருட்களைத் தனித் தனியாகத் தொட்டாலோ உட்கொண்டாலோ உடனே உயிரிழக்க நேரிடும். ஆனால் அவற்றையே தகுந்த முறைப்படி ஒன்று சேர்த்தால் அது உடற்பிணியை நீக்கும் பெருமருந்தாக மாறிடும். அதனையே நான் செய்ய விழைகிறேன். அப்படி செய்யும் போது வீசும் வெப்பத்தால் இங்கிருக்கும் செடி கொடிகள் வாடலாம். உங்களுக்கும் கெடுதல் நேரிடலாம். அதனால் எல்லோரும் குன்றத்தை விட்டு கீழிறங்கி அங்கேயே தங்க வேண்டும். திருவுருவம் நிறுவப்பட்டவுடன் நான் வந்து உங்களை அழைத்து வருகிறேன்"

"ஆகா. அப்படியே ஆக்ட்டும் பெருமானே"

எல்லோரும் அங்கிருந்து நீங்கிவிட்டனர். போகர் சொன்னதைக் கேட்டால் எனக்கு பயமாகத் தான் இருக்கிறது. ஆனால் என்னால் இந்த இடத்தை விட்டு நகர முடியாதே. என்ன செய்வது? போகர் பெருமானே. செடி கொடிகள் வாடும் என்று சொன்னீர்களே; மரங்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. நானும் வாடுவேனா?




இந்தப் பக்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் பறந்து சென்றுவிட்டாரே. இதோ திரும்பி வந்துவிட்டார். கைகளில் சில மூலிகைகளும் உலோகங்களும் கற்களைப் போன்ற பொருட்களும் இருக்கின்றன. அவற்றை எல்லாம் இதோ சேர்க்கத் தொடங்கிவிட்டார். அடடா அடடா என்ன வெப்பம் என்ன வெப்பம். என்னால் முடிந்த உதவி இந்த வெப்பம் நீங்க என் கிளைகளைக் கொண்டு வீசுகிறேன். கொஞ்சம் குளிர்ந்த காற்று வருவதைப் பார்த்து பெருமானும் இந்தப் பக்கம் பார்த்து புன்னகைக்கிறார். ஆகா. தொடர்ந்து இதையே செய்வோம். இதை விட பெரும்பாக்கியம் வேறு என்ன இருக்கிறது?

அழகான திருவுருவத்தை உருவாக்கிவிட்டார். இதோ இன்னும் சில மூலிகைகளைக் குழைத்து ஒரு சிறு குழிக்குள் இட்டு அந்தத் திருவுருவத்தை அங்கே நிறுத்துகிறார். இது தான் திருமுருகனின் திருவுருவம் போலும். கையில் கோலுடன் கோவணாண்டியாக நிற்கும் அந்தத் திருவுருவத்தின் தலையிலும் தோள்களிலும் வயிற்றிலும் முழங்கால்களிலும் கால்களிலும் கையை வைத்து கண்ணை மூடிக் கொண்டு ஏதோ முணுமுணுக்கிறாரே. அட இது என்ன அதிசயம். முருகன் திருவுருவம் பொன்னால் செய்ததைப் போல் பெரும் ஒளி வீசுகிறதே. போகர் கை கூப்புவதைப் பார்த்தால் சிலையில் கந்தனின் வெளிப்பாடு ஏற்பட்டு விட்டது போலிருக்கிறதே. கந்தா கடம்பா நானும் வணங்குகிறேன்.

இப்போது தான் கவனிக்கிறேன். என்னைச் சுற்றி இருக்கும் செடி கொடிகள் பொலிவிழந்து போய்விட்டனவே. மரங்களும் கொஞ்சம் வாடித் தான் இருக்கின்றன. நான் மட்டும் தான் வாடவில்லை போலும். ஏன் தெரியவில்லையே? கந்தனின் அருளா? போகர் பெருமானின் அருளா?

போகர் பெருமான் தன் கருணைப் பார்வையை அந்த வாடிய செடி கொடிகள் மரங்கள் மீது வீசியதும் அவை மீண்டும் பழைய படி பொலிவு பெற்று விட்டன. ஆகா. என் அருகில் வருகிறாரே போகர் பெருமான்.

"கடம்ப மரமே. நீ நினைப்பதைப் போல் கொற்றவை சிறுவனின் திருவுருவம் சமைக்கப்பட்டுவிட்டது. ஒரு மண்டல காலம் நான் பூசனை செய்துவிட்டு பின்னர் போய் இந்தப் பகுதியில் வாழும் மக்களை அழைத்து வருவேன். திருவுருவத்தைச் சமைக்கும் போது வெப்பம் தீர நீ கிளைகளால் வீசி திருப்பணி செய்ததால் வெந்து போகாமல் நின்றாய். அந்தத் திருப்பணி செய்ததால் இன்னும் அதிக திருப்பணி செய்யும் வாய்ப்பு உனக்குக் கிடைக்கும். கடம்ப மரமாகிய நீ உன் வாழ்நாள் முழுதும் இந்த முருகனுக்கு உன் மலர்களால் தொண்டு செய். உன் வாழ்நாள் முடியும் போது நானும் நீ நிற்கும் இந்த இடத்திற்கு வந்து ஜீவசமாதி அடைவேன். அடுத்தவர்க்குப் பணி செய்ய விழையும் நீ நின்றதாலும் நான் ஜீவசமாதி அடைவதாலும் இந்த இடம் பெரும் புனிதமடைந்து பல நூற்றாண்டுகள் நிலைத்து நின்று தன்னை நாடி வரும் அனைவருக்கும் அருள் கொடுத்துக் கொண்டிருக்கும்."




ஆகா. ஆகா. என்ன பாக்கியம் என்ன பாக்கியம். மகிழ்ச்சியால் என் கிளைகளை விசிறி குளிர்ந்த காற்று வரச் செய்தேன். என் கிளைகளில் இருக்கும் மலர்களைத் தூவினேன். அந்த மலர்கள் போகர் பெருமான் மேலும் பழனியாண்டவன் மேலும் சொரிந்தன.


15 comments:

  1. என்னங்க குமரன், சென்றபதிவில் ஜி.ரா சொன்னதை இந்தமுறை நான் வழிமொழிகிறேன். :-)

    ReplyDelete
  2. மௌலி. போன முறை மிகச்சரியாகப் பொட்டில் அடித்த மாதிரி இடுகை சொல்லும் செய்திக்கு ஏற்ற பின்னூட்டம் போட்ட நீங்கள் இந்த முறை இப்படி சொல்கிறீர்களா? சரி. ஒரு க்ளூ தருகிறேன். (ஏற்கனவே தந்தது தான்). கதையின் தலைப்பு 'புல்லாகிப் பூண்டாகி' என்ன சொல்ல வருகிறது என்று பாருங்கள். இந்த அத்தியாயத்திற்கும் போன அத்தியாயத்திற்கும் என்ன தொடர்பு என்று பாருங்கள். புரியலாம்.

    ReplyDelete
  3. இதுதான் க்டம்ப மரத்தின் பூவா? ரொம்ப வித்தியாசமாக இருக்கிறதே! இதனை PIT போட்டிக்கு அனுப்பி இருக்கலாமே!!

    ReplyDelete
  4. PIT போட்டின்னா என்ன கொத்ஸ்?

    ReplyDelete
  5. மெளலி
    இந்தாங்க க்ளூவுக்கு க்ளூ!

    புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி
    ...
    கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்.....
    சரி தானே குமரன்?

    சென்ற பதிவில் கல்
    இந்தப் பதிவில் மரம்
    என்னங்க குமரன் இது?...சீக்கிரம் சஸ்பென்சை உடைங்க! :-)

    ReplyDelete
  6. ஆமாம் கே.ஆர்.எஸ்.....நீங்க சொல்வது இன்னும் கொஞ்சம் கிளியரா தெரியறது...பாக்கலாம்!!!

    ReplyDelete
  7. மொதல்ல சிரிப்பானோட போகலாம்ன்னு நெனைச்சீங்களா இரவிசங்கர்? அப்புறமா வந்து மௌலிக்கு க்ளூ கொடுத்திருக்கீங்க? :-)

    சஸ்பென்ஸை இனிமே நான் எங்க உடைக்கிறது. அதான் தெளிவா சொல்லிட்டீங்களே? நானும் இவ்வளவு தெளிவா சொல்ல வேணாம்ன்னு அது வரைக்கும் சொல்ல வந்துட்டு சொல்லாம விட்டுட்டுப் போய்கிட்டு இருந்தேன். இப்ப நீங்க சொல்லிட்டீங்க. :-)

    ReplyDelete
  8. மௌலி. இரவிசங்கர் சொன்ன பின்னாடி நீங்க போன இடுகையில் இட்ட பின்னூட்டம் எப்படி பொருத்தம்ன்னு இன்னும் தெளிவா தெரியுதா? :-)

    ReplyDelete
  9. //இரவிசங்கர் சொன்ன பின்னாடி நீங்க போன இடுகையில் இட்ட பின்னூட்டம் எப்படி பொருத்தம்ன்னு இன்னும் தெளிவா தெரியுதா//

    நல்லாவே புரியுதுங்க குமரனண்ணாத்தே. போன இடுகை படித்தவுடன் வந்த அந்த எண்ணம், தொடர்பு, இந்த இடுகையினை படித்தவுடன் எனக்கு சட்டென மனதில் எழவில்லை. கே.ஆர்.எஸ் அருளில் இப்போ மிக தெளிவாக உணர்ந்தேன். :)

    ReplyDelete
  10. பழனி ஆண்டவனைப் படைத்த போகரின் முயற்சி - அவர் சொன்னதைக் கேட்டு ஒத்துழைத்த மக்கள் - குளிர் காற்று வீசி - தொண்டாற்றி - பதிலுக்கு வாடாமல் இருக்கும் கடம்ப மரம் - ம்ம்ம் - பழனியைப் பற்றிய செய்திகள் நிறைந்த நல்ல தொரு பதிவு.

    ReplyDelete
  11. மௌலி. இதன் தொடர்ச்சியா அடுத்த அத்தியாயமும் எழுதியாச்சு. பாத்தீங்களா?

    ReplyDelete
  12. மிக்க நன்றி சீனா ஐயா. நண்பர்கள் பலரும் ஏன் இந்தக் கதையில் இந்தப் பகுதி, ஏன் கதை இப்படி செல்கிறது, புரியவில்லை, கதைக்கு வாருங்கள் என்றெல்லாம் சொல்லுவதைப் பார்க்கும் போது நான் எழுதுவது சரியில்லையோ என்ற ஐயம் தோன்றிக் கொண்டிருந்தது. அந்தக் கேள்விகளையெல்லாம் தற்போதைக்கு அப்புறமாய் வைத்துவிட்டு இடுகையில் சொல்லிவரும் முக்கிய கருத்துகளை எடுத்து இந்த இடுகைக்கும் அடுத்த இடுகைக்கும் பின்னூட்டம் இட்டு மனத்தை நெகிழ்த்திவிட்டீர்கள். நீங்கள் சொன்னதையெல்லாம் மற்ற நண்பர்களும் படித்து மனத்தில் வைத்திருப்பார்கள்; ஆனால் மனத்தின் முன்னால் வந்து நின்ற கேள்வியையே கேட்டுவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் அதனை உறுதிபடுத்திய உங்களுக்கு மிக்க நன்றி.

    பழனியைப் பற்றிய செய்திகளை மட்டும் சொல்லாமல் கதையின் ஓட்டத்தில் அவற்றைச் சொன்ன இடுகை இது.

    ReplyDelete
  13. முதல் முறையாகப் பழநி ஆண்டவன் தரிசனம் செய்துவிட்டு வந்ததும் படிக்கும் முதல் பதிவே அவனின் கோயில் அங்கே வந்த வரலாறுதான் என்பதில் ரொம்பவே ஆச்சரியமாயும் சந்தோஷமாயும் இருக்கிறது. இன்னும் மற்றப் பதிவுகளைப் படிக்கவில்லை.

    ReplyDelete
  14. கீதாம்மா. தங்கள் மூலமாக முருகனருள் இந்த தொடர்கதைக்கு இருப்பது உறுதியாகிவிட்டது. பழனியாண்டியைத் தரிசித்த பின்னர் போகர் சமாதியையும் தரிசித்தீர்களா?

    ReplyDelete