நரசிம்மதாசன் இப்படி கிருஷ்ண பக்தியில் என்றும் எப்போதும் மூழ்கி இருப்பதற்கு அவன் வங்காளத்தில் பிறந்த இந்தக் காலம் காரணமா அல்லது அவனது பல பிறப்புகளில் செய்த தவங்கள் காரணமா தெரியவில்லை. இவனைப் போன்ற பக்தனைப் பார்ப்பதற்கு கடினம் என்று இவனைப் பார்ப்பவர்கள் எல்லாம் சொல்கின்றார்கள். சில நேரங்களில் தன்னையே இராதையாக எண்ணிக் கொண்டு கண்ணனின் வரவிற்காக காத்திருக்கிறான். சில நேரங்களில் தன்னைக் கண்ணனாகவும் கண்ணனை இராதையாகவும் எண்ணிக் கொண்டு இராதைக்குக் கண்ணன் செய்யும் பணிவிடைகளை எல்லாம் செய்கிறான். பார்க்கும் திசையிலெல்லாம் ஏதோவொன்று கண்ணனை நினைவுபடுத்துவதாக இருக்கிறது அவனுக்கு.
முப்பந்தைந்து வயதிற்கு மேல் ஆகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. தாய் தந்தையர் இருந்திருந்தால் எப்போதோ வற்புறுத்தித் திருமணம் செய்து வைத்திருப்பார்கள். வற்புறுத்த யாரும் இல்லாமல் இவனும் எப்போதும் கிருஷ்ணனை நினைத்தே தன் காலத்தை ஓட்டிவிட்டான். அழகும் இளமையும் இருக்கும் போதும் இவனது கிருஷ்ணபிரேமையைப் பார்த்து இந்தப் பைத்தியத்திற்குப் பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை.
இவன் பிறந்து ஐந்து வருடங்களுக்குப் பின்னர் நவத்வீபத்தில் ஒரு பெரும் ஜோதி தோன்றியது. பிறந்த நாள் முதல் இன்று வரை அந்த மகானுபாவரால் கிருஷ்ண பக்தி மென்மேலும் பெருகிக் கொண்டிருக்கிறது. வங்காளமும் கலிங்கமும் அந்தப் பெரும் ஒளியின் பெருமையால் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. கிருஷ்ணனையே என்றும் சித்தத்தில் வைத்திருப்பதால் அந்த மகானை கிருஷ்ண சைதன்யர் என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அந்த மகாபிரபுவின் கருணையால் உய்ந்து போனவர்கள் பலர். இராதா கிருஷ்ணன் இருவரின் அவதாரமாகவே அவரை அவரது பக்தர்கள் கொண்டாடுகின்றனர். பல தீயவர்களுக்கு நல்வழி காட்டிய கிருஷ்ண சைதன்ய மகாபிரபுவைத் தரிசிக்க வேண்டுமென்ற பெரும் ஆவல் பல நாட்களாக நரசிம்மதாசனுக்கு இருக்கிறது. அதற்கான வாய்ப்பு தான் இது வரை கிட்டாமல் இருந்தது.
இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் கீத கோவிந்தத்தில் தனக்குப் பிடித்த இந்த அஷ்டபதியைப் பாடிக்கொண்டிருப்பதற்குக் காரணம் அவனுக்கு நேற்று கிடைத்த செய்தி தான். கிருஷ்ண சைதன்யர் இன்று மாலை இவன் வாழும் கிராமத்திற்கு வருகை தருகிறார். இதனை விட பெரும்பேறு வேறு என்ன இருக்க முடியும். அது தான் மிக மிக ஆனந்தமாக இருக்கிறான் நரசிம்மதாசன்.
அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தருணமும் வந்தது. நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டு கிருஷ்ண சைதன்ய மகாபிரபுவும் அவரது சகோதரர் நித்யானந்தரும் பல நூறு பக்தர்களுடன் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரும் வழியில் இருக்கும் மக்கள் எல்லோரும் அவரது தரிசனம் பெற்று கண்களில் நீர் நிறைய விழுந்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர். நரசிம்மதாசனும் ஓடிப் போய் பார்த்தான். கண்ணனே நேரில் வந்து நிற்பது போல் இருந்தது அவனுக்கு. தன்னை அறியாமல் நாமசங்கீர்த்தனத்திற்கு ஏற்ப நடனமாடத் தொடங்கிவிட்டான். நடுநடுவே சைதன்யரைப் பார்க்கும் போது சில நொடிகள் பிரமித்து நின்று விட்டு பின்னர் யாரோ அவனைத் தொட்டவுடன் மீண்டும் பாட்டைக் கவனிக்கத் தொடங்குகிறான். அந்த ஊர்வலம் அப்படியே நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டே நரசிம்மகாவிற்கு வந்து சேர்ந்தது. நாமசங்கீர்த்தனத்தை நிறைவு செய்துவிட்டு அங்கிருக்கும் கோவிலில் பக்தர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார் சைதன்ய மகாபிரபு.
பக்திவழியா, ஞானவழியா, கர்மவழியா, யோகவழியா எந்த வழி கண்ணனை அடைவதற்கு எளிதான வழி என்ற உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது. எல்லாமும் ஒரே ஊருக்குச் செல்லும் பல வழிகள் என்ற விளக்கம் தரும் போதே பக்திவழி மிகச் சிறந்த வழி; மிக எளிதான வழி என்று விளக்கிக் கொண்டிருக்கிறார் அத்வைதாசாரியார் என்னும் ஒரு சீடர். அங்கு இருப்பவர்களிலேயே வயதில் மிக மூத்த கிழவர் அவர். அவர் சொல்வதை எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த பக்திவழியிலேயே பல வகைகள் உண்டு. அந்தப் பல வகைகளில் ஒன்பது வகைகளைப் பற்றி பாகவதம் கூறுகிறது. அவை சிரவணம் (கண்ணனின் கதைகளை லீலைகளைக் கேட்பது), கீர்த்தனம் (கண்ணனின் புகழைப் பாடுவது), ஸ்மரணம் (கண்ணனின் புகழை நினைப்பது), பாதஸேவனம் (கண்ணனின் பாதத்தில் சேவை செய்வது), அர்ச்சனம் (கண்ணனை வழிபடுவது), வந்த்யம் (கண்ணனைப் வணங்குவது), தாஸ்யம் (கண்ணனுக்கு அடிமையாக இருப்பது), சக்யம் (கண்ணனிடம் நட்புடன் இருப்பது), ஆத்ம நிவேதனம் (கண்ணனிடம் தன் ஆத்மாவையே ஒப்படைப்பது). இந்த ஒன்பது வகை பக்திகளைப் பற்றியும் அவற்றைப் பின்பற்றி கண்ணனை அடைந்த பாகவதர்களைப் பற்றியும் அத்வைதாசாரியர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சக்யமும் (நட்பும்), தாஸ்யமும் (அடிமைத்தனமும்) பற்றி பேச்சு வரும் போது நாயக நாயகி பாவத்தைப் பற்றியும் பேசினார். அதற்கு மாதுர்ய பக்தி என்றொரு பெயரும் சொன்னார். அந்த மாதுர்ய பக்தியே இருக்கும் எல்லா பக்தி முறைகளிலும் மிக மிகச் சிறந்தது என்று சொன்னார்.
இப்படியெல்லாம் பக்தியின் முறைகளைப் பற்றி அத்வைதாசாரியர் சொல்லி வரும் போது மகாபிரபு அங்கிருப்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார்.
"அன்பர்களே. எல்லா வழிகளிலும் மிக உயர்வான வழியாக அத்வைதாசாரியர் சொன்ன மாதுர்ய பக்தியைப் பின்பற்றினால் கண்ணனை அடைய எவ்வளவு நாளாகும் என்று தெரியுமா?"
"பிரபு. கர்ம ஞான யோக வழிகளைப் பின்பற்றினால் பல்லாயிரம் பிறவிகளுக்குப் பின்னரே முக்தி கிடைக்கும். பக்தி வழியைப் பின்பற்றினால் எளிதாகக் கண்ணனின் திருவடியை அடையலாம் என்று தெரியும். ஆனால் எவ்வளவு நாட்களாகும் என்று தெரியாது. தேவரீரே சொல்லியருள வேண்டும்"
அந்தப் பதிலைக் கேட்டுச் சிரித்துக் கொண்டார் சைதன்யர்.
"நீர் சொன்னது சரி தான். பக்தி வழியில் செல்பவர்களுக்கும் பல பிறவிகளுக்குப் பின்னரே கண்ணனை அடைய முடியும். அதனால் தான் கண்ணன் 'வாஸுதேவ சர்வமிதி ச மஹாத்மா சுதுர்லப' என்று கீதையில் சொன்னான். அப்படி பல பிறவிகள் கிருஷ்ண பக்தி செய்த பின்னர் தான் உண்ணும் நீரும் தின்னும் சோறும் எல்லாமும் கண்ணன் என்ற நிலை அடைந்த மகாத்மா ஆகிறான் ஒருவன்."
"மகாபிரபு. அடியேன் இன்னும் எத்தனை பிறவிகள் பக்தி செய்ய வேண்டும்"
"அத்வைதாசாரியரே. உங்களுக்கு இன்னும் மூன்றே பிறவிகள் போதும்" இன்னும் மூன்று பிறவிகளா என்று வருந்தினார் அத்வைதாசாரியர்.
"சுவாமி. அடியேனுக்கு?"
"விந்த்யாசலா. உனக்கு இன்னும் ஐம்பது பிறவிகள் வேண்டும்" ஐம்பது பிறவிகளா என்று மலைத்துப் போனார் விந்த்யாசலர்.
"பிரபு. அடியேனுக்கு"
"குமாரதாசரே. உங்களுக்கு பத்து பிறவிகள் போதும்"
இப்படியே ஒவ்வொருவராகக் கேட்டுக் கொண்டு வரும் போது நரசிம்மதாசனும் கேட்டான்.
"நரசிம்மதாசரே. உங்களுக்கு இன்னும் ஐநூறு பிறவிகள் வேண்டும்" அதனைக் கேட்டவுடன் ஆனந்த நடனமாடத் தொடங்கிவிட்டான் நரசிம்மதாசன்.
"ஆகா. ஆகா. இன்னும் ஐநூறு பிறவிகள். ஐநூறு பிறவிகள். பின்னர் தான் கண்ணனை அடைவேன்"
இப்படி ஒரு பைத்தியமா என்று எல்லோரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பிறவியிலேயே இறைவனை அடைந்துவிட வேண்டும் என்று எண்ணாமல் ஐநூறு பிறவிகள் சென்ற பின்னர் தான் அடையலாம் என்று சொன்னால் கூத்தாடுகிறானே இந்த பைத்தியக்காரன் என்று நினைத்தார்கள்.
"நரசிம்மதாசரே. ஐநூறு பிறவிகள் காத்திருக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா?"
"இல்லை பிரபு. நீங்கள் விரும்பினால் அடியேனை இந்தப் பிறவியிலேயே கடைத்தேற்றிவிடுவீர்கள் என்று அறிவேன். ஆனால் தங்களின் பெருமைகளைப் பாடிப் பரவி அனுபவித்து வாழ அடியேனுக்கு ஒரு வாய்ப்பாகத் தான் இந்த ஐநூறு பிறவிகளைத் தந்திருக்கிறீர்கள். அந்த ஐநூறு பிறவிகளிலும் தங்கள் பெருமையைப் பாடிப் பரவி மகிழ்ந்து வாழ்வேனே. ஒன்றா இரண்டா ஐநூறு பிறவிகள். ஐநூறு பிறவிகள். போதும் என்ற அளவிற்குக் கிருஷ்ணலீலாம்ருதத்தை அருந்தி மகிழ கிடைத்த வாய்ப்பல்லவா இது. அதனால் தான் ஆனந்தம் சுவாமி"
அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் மலைத்துப் போய்விட்டனர்.
"நரசிம்மதாசரே. நீர் சொன்னது சரி தான். ஆனால் நீங்கள் நேரடியாக பக்தி மார்க்கத்திலேயே இருக்கப் போவதில்லை. மற்ற வழிகளிலும் சென்று பார்த்து கொஞ்ச காலம் அலைபாய்ந்து பின்னர் தான் மீண்டும் பக்தி வழிக்கு வருவீர்கள். அதனையும் மனத்தில் வைத்திருங்கள். ஒவ்வொரு பிறவியும் தவறிப் போவதற்கு ஒரு வாய்ப்பு என்பதையும் நினைவில் வைத்திருங்கள்"
"சுவாமி. நீங்கள் எந்த வழியில் விரும்புகிறீர்களோ அப்படியே நடக்கட்டும். அடியேன் அலைபாய்ந்து பின்னர் தான் உங்கள் திருவடிகளை அடைய வேண்டும் என்பது தங்கள் சித்தம் என்றால் அதுவே அடியேனின் பெரும்பாக்கியம்.
திவி வா புவி வா மமாஸ்து வாசோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம்
அவதீரித சாரதாரவிந்தௌ
சரணௌ தே மரணேபி சிந்தயாமி
சொர்க்கத்திலோ பூமியிலோ நரகத்திலோ எனக்கு எங்கு வாசம் என்பது நரகாசுரனைக் கொன்றவனே உன் விருப்பப்படி நடக்கட்டும். ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் உண்டு. எந்த நிலையிலும் மரணம் அடையும் போதும் உன்னுடைய மழைக்காலத் தாமரை போன்ற திருவடிகளை சிந்திக்கும் நினைவை மட்டும் அருள்வாய்"
(நர்சிஹ்ம்தாஸ் என்ற வடசொல்லை நரசிம்மதாசன் என்று இங்கே எழுதியிருக்கிறேன்)
ஒரே கதையாய் இருக்கும் என எதிர்ப்பார்த்தால் ஒரு மையக்கருத்தை வைத்துக் கொண்டு பல சிறு கதைகளாய் வருகிறதே. இவை அனைத்தும் சேர்த்து மாலையாய் கட்டுவீர்களா? அல்லது இப்படியே உதிரிப்பூக்களாய் இருக்குமா? கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteகுமர, தனித்தனி பதிவுகளாக, நிகழ்வுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இவை அனைத்தையும் இணைக்கும் கயிறு எப்போது - காத்திருப்போம்.
ReplyDelete500 பிறவிகளா - மகிழ்ச்சி
அதிலும் தவறி விடலாம் - அப்போதும் மகிழ்ச்சி
திரும்ப வரலாம் - மெத்த மகிழ்ச்சி
நரசிம்ம தாசனின் வருவதை எதிர் கொள்ளும் மனம் - எதற்கும் கவலைப் படாத மனம் - நடப்பவை எல்லாம் நன்மைக்கெ என்ற நல்ல மனம் - எல்லாம் அவன் செயல் என்ற அடியவர் மனம் - எல்லாப் புகழும் துன்பமும் போகட்டும் கண்ணனுக்கே என்ற அர்ப்பணிக்கும் மனம் - உண்மையிலேயெ நரசிம்ம தாசர் தெய்வப் பிறவி.
குறும்புச் சிரிப்புடன், குழந்தை முகத்துடன், குழல் வாசிக்கும் கண்ணன் படம் அருமை.
வாழ்த்துகள் குமர
கண்ணா கண்ணா கண்ணா
ReplyDeleteகண்ணா கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா
(பதிவைப் படித்து வேறேதும் எழுதத் தோணவில்லை!)
நரசிம்மதாசனின் கதையை நன்கு சொல்லி உள்ளீர்கள் குமரன்.
ReplyDelete//ஒன்றா இரண்டா ஐநூறு பிறவிகள். ஐநூறு பிறவிகள். போதும் என்ற அளவிற்குக் கிருஷ்ணலீலாம்ருதத்தை அருந்தி மகிழ கிடைத்த வாய்ப்பல்லவா இது. அதனால் தான் ஆனந்தம் சுவாமி"//
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம்!
- திருப்பாவை
(என்றும், எழும் பல பிறவியிலும், உனக்கு உற்றவராய் இருந்து, உனக்கு ஆட்செய்து கொண்டே இருப்போம்!)
கூடும் அன்பினால் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்
- பெரிய புராணத்தில் சேக்கிழார் சுவாமிகள்
(மனத்தில் பெருகும் அன்பினால், கும்பிடுவதைத் தவிர, வீடுபேறு வேண்டும் என்று கேட்கக் கூடத் தெரியாத பெருமை உடையவர்கள், நல் அடியவர்கள்)
சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்,
இறப்பில் எய்துக எய்தற்க, யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை,
மறப்பொன்று இன்றி என்றும் மகிழ்வேனே
- நம்மாழ்வார்
(சிறப்பாகச் சொல்லப்படும் இல்லமான மோட்சம், சொர்க்கம், நரகம் இது எல்லாம் கிடைக்குமோ, கிடைக்காதோ...யோசிக்கவில்லை!
பிறவிகள் பலவற்றிலும் பெருமானை மறக்காது இருப்பதே போதும், மகிழ்ச்சி)
கொத்ஸ். நல்ல கேள்வி. குழம்ப வேண்டாம். எல்லாமே தொடர்புடையவை தான்.
ReplyDeleteகொத்ஸ் கேட்டதையே நீங்களும் கேட்டிருக்கிறீர்கள் சீனா ஐயா. இந்த அத்தியாயங்களில் சொல்லப்படும் கால வரிசையைப் பார்த்தால் விரைவிலேயே இணைக்கும் கயிற்றைப் பற்றி வந்துவிடும் அல்லவா?
ReplyDeleteநரசிம்மதாசன் மட்டும் இல்லை ஐயா. எல்லோருமே தெய்வீகப் பிறவிகள் தான். செய்த வினைகளுக்கு ஏற்ப எதனை வெளிப்படுத்த இயலுமோ அதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
எனக்கும் அந்தக் குறும்புக்கண்ணன் மிகவும் பிடித்துப் போனான் ஐயா.
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் ஜீவா. :-)
ReplyDeleteஆகா. பொருத்தமான தமிழ்ப்பனுவல்களை எடுத்துத் தந்தீர்கள் இரவிசங்கர். பாவம் நரசிம்மதாசன். அவனுக்கு இந்தப் பனுவல்கள் எல்லாம் இன்னும் தெரியாது. தெரிந்திருந்தால் அவற்றைப் பாடிப் போற்றியிருப்பான். அவனுக்கு வடமொழியில் எழுதப்பட்ட கீதகோவிந்தமும் முகுந்தமாலையும் தான் தெரிந்திருந்தது. அதனால் அவற்றை மட்டும் பாடியிருக்கிறான். ஆனால் என்ன 'எம்பெருமான் திருமலையில் ஏதேனும் ஆவேனே' என்று பாடிய குலசேகராழ்வாரின் முகுந்த மாலை தெரிந்திருந்ததே. அந்த வரையில் கொடுத்து வைத்தவன் தான்.
ReplyDeleteபின்னூட்ட விதியின் படி பொருளையும் சேர்த்துச் சொன்னதற்கு மிக்க நன்றி.
//பாவம் நரசிம்மதாசன்//
ReplyDeleteபாவமா? மிகவும் கொடுத்து வைத்தவன்! :-)
//அவனுக்கு இந்தப் பனுவல்கள் எல்லாம் இன்னும் தெரியாது. தெரிந்திருந்தால் அவற்றைப் பாடிப் போற்றியிருப்பான்//
பனுவல்கள் தெரியாமலேயே அவற்றின் சாரமான பொருளைக் கைவரப் பெற்றானே நரசிம்மதாசன்!
பனுவல்கள் ஏட்டளவில் அறிந்து எண்ணத்தளவில் அறியாத அடியேனுக்கு நரசிம்மதாசன் ஒரு நம்பிக்கைக் கீற்று!
என்ன சொல்றதுனு புரியலை, எல்லாப் பதிவுகளையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது நரசிம்மதாசரைப்பற்றிய இந்தப் பதிவு. கண்ணபிரானின் விளக்கங்களையும், உங்கள் பதிவுகளையும் சேர்த்து ஒரு தொகுப்பாய்க் கொடுக்கலாமோ?
ReplyDeleteகுமரன், இப்பத்தான் தொடரின் விட்டுப்போன அத்தியாயங்களைப் படிச்சிட்டு வந்தேன். கந்தனும் கேசவனும் திடீர்னு காணாமப் போயிட்டாங்க. வரிசையா சாமி கதை சொல்லீட்டு வர்ரீங்க. எப்படி இந்த ரெண்டு விதங்களையும் ஒட்டுப்போடப் போறீங்கன்னு தெரியலை. காத்திருக்கேன்.
ReplyDeleteகுமரன், இப்பத்தான் தொடரின் விட்டுப்போன அத்தியாயங்களைப் படிச்சிட்டு வந்தேன். கந்தனும் கேசவனும் திடீர்னு காணாமப் போயிட்டாங்க. வரிசையா சாமி கதை சொல்லீட்டு வர்ரீங்க. எப்படி இந்த ரெண்டு விதங்களையும் ஒட்டுப்போடப் போறீங்கன்னு தெரியலை. காத்திருக்கேன்.
ReplyDeleteகீதாம்மா. இந்தத் தொடர்கதை முடிந்த பின் தொகுப்பாக கட்டாயம் செய்து வைக்கலாம். தொடர்கதை நன்றாக இருந்தது என்று நண்பர்கள் நினைத்தால். :-)
ReplyDeleteஇந்தப் பகுதி நன்கு அமைந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
கந்தனும் கேசவனும் காணாம போகலை இராகவன். தொடர்ந்து இந்த சாமிக்கதைங்க பகுதியில் வர்றாங்க. பதிமூன்றாம் அத்தியாயத்துல மீண்டும் நேரடியா வந்திருவாங்க. ரெண்டு பேருமே வருவாங்களா ஒருத்தர் மட்டும் அந்த அத்தியாயத்துல வருவாரான்னு தான் இன்னும் தெரியலை. :-)
ReplyDeleteஇரவிசங்கருக்கு எப்படி ஒட்டவைக்கப் போறேன்னு புரிஞ்சிருச்சு. மௌலிக்கும். மத்தவங்களுக்கும் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். உங்களுக்கும் பன்னிரண்டாம் அத்தியாயம் படித்தால் புரியலாம்.
இப்ப எல்லாம் என்ன ஒரே பின்னூட்டத்தை ரெண்டு ரெண்டு தடவை போடறீங்க?