கடலிலிருந்து கதிரவன் தோன்றுவதைக் கண்டிருக்கிறீர்களா? கன்னியாகுமரிக் கடற்கரையில் ஒரு முறை நான் கண்டிருக்கிறேன். கரு நிறக் கடலின் நடுவில் மெதுவாக சிவந்த பந்து தோன்றுவதும் அது மெல்ல மெல்ல மேல் எழுவதும் அதே நேரத்தில் மெதுவாக கடலின் நிறம் நீலமாக மாறுவதும் பகலவன் முழுவதும் தோன்றி ஆனால் இன்னும் கடலை நுனி தொட்டுக் கொண்டு இருக்கும் போது அலைகளில் தெரியும் நீண்ட சிவப்புக் கோடும் ஆகா நேரே கண்டால் தான் அதன் அழகு தெரியும்; புரியும்.
உலகத்தவர் யாராயினும் இந்தக் காட்சியைக் கண்டால் மனம் உவப்பர் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்தக் காலத்தில் மட்டும் இன்றி எந்தக் காலத்திலும் அப்படித் தான். இல்லையா? திருமுருகாற்றுப்படை எழுதிய காலத்தும் அப்படித் தான் இருந்திருக்கும். அதனால் தான் முருகனைப் பற்றிச் சொல்லத் தொடங்கியவுடன் சிவந்த சூரியன் கடலில் எழுவதும் அதனைக் கண்டு உலகோர் மகிழ்வதும் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனாருக்குத் தோன்றியிருக்கிறது. முதல் இரண்டு வரிகளில் இந்த அருமையான காட்சியை கண் முன்னே நிறுத்துகிறார் நக்கீரனார்.
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு...
உலகத்தவர் மகிழ உலகத்தின் வலப்பக்கத்தில் தோன்றி (வலிவுடன் தோன்றி) உலகத்தினைச் சுற்றும், பலரும் போற்றும், ஞாயிறு கடலில் தோன்றியதைப் போல...
இது தான் நக்கீரனாருக்கு முதலில் தோன்றிய உவமை. எத்தனை அழகான உவமை பாருங்கள்.
கருநிற யானையாம் பிணிமுகத்தின் மேல் செவ்வேள் குமரன் அமர்ந்து வருவது கருநிறக்கடலின் மேல் செந்நிறக் கதிரவன் தோன்றுவதைப் போல் இருக்கிறது என்கிறது இந்த உவமை.
பிற்கால வழக்கின் படி நீல நிற மயிலின் மேல் சேயோன் முருகன் அமர்ந்து வருவது நீலத்திரைக்கடலின் மேல் செங்கதிரவன் தோன்றுவதைப் போல் இருக்கிறது என்றும் சொல்லலாம்.
அகரத்திலும் உகரத்திலும் கவிதையை, காப்பியத்தைத் தொடங்குவது மரபு. 'அகர முதல' என்று தொடங்கினார் பொய்யாமொழிப் புலவர். 'உயர்வற உயர் நலம்' என்று திருவாய்மொழியைத் தொடங்கினார் நம்மாழ்வார் மாறன் சடகோபன். 'உலகெலாம்' என்று திருத்தொண்டர் புராணமெனும் பெரிய புராணத்தை தொடங்கினார் சேக்கிழார் பெருமான். 'உலகம் யாவையும்' என்று இராமாவதாரமெனும் கம்பராமாயணத்தைத் தொடங்கினார் கவிச்சக்ரவர்த்தி கம்பர். இந்த மரபு பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்திருக்கிறது என்பதற்கு சாட்சியாக திருமுருகாற்றுப்படையும் 'உலகம்' என்று தொடங்குகிறது.
வலன் என்பதற்கு வலம் என்றும் வலிமை என்றும் இரண்டு பொருள் சொல்லப்படுகிறது. வலம் என்று கொண்டால் கதிரவன் உலகத்தை வலம் வருகிறான் என்ற கருத்து தோன்றுகிறது. உலகம் கதிரவனை வலம் வருகிறது என்பதை நாம் இப்போது அறிவோம். அந்தக் காலத்தில் கதிரவன் உலகத்தை வலம் வந்தான் என்றே எண்ணினர். அதனைச் சொல்கிறார் போலும். கதிரவன் உலகை மட்டுமில்லை மேரு மலையை/இமய மலையை/கயிலை மலையை வலம் வருகிறான் என்றதொரு கருத்தும் பழங்காலத்தில் இருந்தது. அதனையும் சொல்கிறார் போலும்.
வலிமை என்ற பொருளினைக் கொண்டால் ஞாயிற்றின் சிவப்பு நிறம் மட்டும் முருகனுக்கு உவமை என்று கொள்ளாமல் ஞாயிற்றின் வலிமையும் முருகனுக்கு உவமையாகச் சொல்லப்படுகின்றது என்னலாம். செயல் திறனிலும் முருகன் ஞாயிற்றைப் போன்றவன். உருவத்திலும் முருகன் ஞாயிற்றைப் போன்றவன்.
அதிகாலைச் சூரியன் குளிர்ந்து இருப்பான். அந்தக் குளிர்ச்சியும் இங்கே முருகனுக்கு உவமை ஆகின்றது போலும்.
பலர் புகழ் ஞாயிறு என்று சொல்லும் போது 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று சிலப்பதிகாரம் தொடங்குவது நினைவிற்கு வருகிறது. சங்க காலத்தில் ஞாயிறு பலர் போற்றும் வகையில் ஏற்றம் பெற்றிருந்தது என்பதை இந்த இரு இலக்கியங்களின் மூலமும் அறியலாம்.
இன்னொரு அழகும் இந்த இரு அடிகளில் காணலாம். சிறிதே தமிழ்ப்பயிற்சி கொண்டவரும் எந்த வித உரை உதவியும் இன்றி விளங்கிக் கொள்ளும் படி இந்த இரண்டு அடிகளும் இருக்கின்றன. உலகம், உவப்ப, வலன், திரிதரு, பலர், புகழ், ஞாயிறு, கடல், கண்டு என்று ஒவ்வொரு சொல்லும் இரண்டாயிரம் ஆண்டுகளாக எல்லோரும் புரிந்து கொள்ளும் படி அமைந்திருக்கின்றன பாருங்கள். உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே என்று தான் பாடத் தோன்றுகிறது.
//வலிமை என்ற பொருளினைக் கொண்டால் ஞாயிற்றின் சிவப்பு நிறம் மட்டும் முருகனுக்கு உவமை என்று கொள்ளாமல் ஞாயிற்றின் வலிமையும் முருகனுக்கு உவமையாகச் சொல்லப்படுகின்றது //
ReplyDeleteகுமரன்,
கட்டுரை மிக நன்று !
சேயோன் என்றால் சிவப்பு என்றும், காலை சூரிய ஒளியை நிறத்துடன் ஒப்பிட்ட முருகன் குறித்த கருத்துக்களை அண்மையில் தான் எதோ ஒரு நூலில் படித்தேன். மாலை செம்மஞ்சள் நிறத்தை சிவபெருமானுக்கு ஒப்பிட்டு இருந்தது.
//அந்தக் காலத்தில் கதிரவன் உலகத்தை வலம் வந்தான் என்றே எண்ணினர். //
சுழன்றும் ஏர் பின்னது உலகம் - என்று திருவள்ளுவர் குறிப்பிட்டு இருக்கிறார். இங்கு கதிவரவனை குறிப்பிடவில்லை என்பதால் மட்டுமே கதிவரவனைப்பற்றி எல்லோருமே நீங்கள் குறிப்பிட்ட அந்த கருத்தை கொண்டிருந்தார்கள் என்று சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.
பாராட்டிற்கு நன்றி கோவி.கண்ணன்.
ReplyDeleteசேயோன் என்பதற்கு நேற்று தான் இராம.கி. ஐயாவும் பொருள் உரைத்தார். சேய் என்பதற்கு சேய்மையும், சிவப்பும் என இரு பொருள்கள் உண்டு. அந்த வகையில் சேயோன் என்ற சொல்லை பாட்டனுக்குப் பாட்டனைக் குறிககவும் சிவந்தவனைக் குறிக்கவும் புழங்கலாம்/புழப்பட்டிருக்கிறது என்றார். அப்படிச் சொல்லும் போதே சேயோன் என்று முருகனையும் சிவனையும் குறிக்கும் வழக்கமும் உண்டு என்று சொன்னார்.
காலையில் செங்கதிராம் உச்சி
வேளையில் வெண்கதிராம்
மாலையில் பொன்கதிராம் பரா
சக்தி நீல வானத்தினிலே
என்ற பாட்டும் நீங்கள் சொன்னதைப் படிக்கும் போது நினைவிற்கு வருகிறது.
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
என்னும் குறட்பா உலகம் சூரியனைச் சுற்றுகிறது என்று சொல்லவில்லை என்று நினைக்கிறேன். உலகம் தன்னைத் தானே சுற்றுகின்ற சுழற்சியையோ காலச் சுழற்சியையோ தான் அது சுட்டுகிறது என்று நினைக்கிறேன். ஓயாமல் சுழன்று கொண்டிருக்கும் உலகமும் ஏர் பின்னது என்று ஒரு இடத்திலும், பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் உலகம் ஏர்த்தொழிலின் பின்னே தான் செல்ல வேண்டியிருக்கிறது என்று இன்னொரு இடத்திலும் காலச் சுழற்சியில் ஓயாமல் சுழலும் உலகம் என்று இன்னொரு இடத்திலும் இந்தக் குறளின் முதல் அடிக்குப் பொருள் படித்திருக்கிறேன். எங்கேயும் சூரியனை உலகம் சுற்றுவதைப் பற்றியும் உலகத்தைச் சூரியன் சுற்றுவதைப் பற்றியும் சொல்லவில்லை. அதனால் இந்தக் குறள் சூரியனை உலகம் சுற்றுகிறது என்று சொல்லவில்லை. வேறு இடங்களில் உலகத்தைக் கதிரவன் சுற்றுகிறான் என்ற கருத்தினைப் படித்திருக்கிறேன். ஏதேனும் இலக்கியச் சான்று கிடைத்தால் சொல்கிறேன்.
///காலையில் செங்கதிராம் உச்சி
ReplyDeleteவேளையில் வெண்கதிராம்
மாலையில் பொன்கதிராம் பரா
சக்தி நீல வானத்தினிலே//
இதை நீங்கள் குறிப்பிட்ட பிறகு என்னால் அதைச் சொல்லாமல் இருக்க முடியாது. உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் படித்ததை பகிர்தல் என்ற வகையில் ...
ஒன்றே இறைவன் என்ற பொருளில் ஒளியை வழிபட்டு அதனை சிவன் என்று சொல்லி ... அதன் பிறகு அந்த சிவனை அம்மை அப்பானாக வழிபட ஆரம்பித்த போது 'நீல' நிற ஒளியை சக்தியின் அடையாளமாக வழிப்பட்டதாகவும்... பெண்ணை வணங்குவதா என்ற சிலரின் ஆணாதிக்க மாற்று சிந்தனையில் தோன்றியதே 'நீல' நிற திருமால் என்று அண்மையில் தான்...மறைமலை அடிகளாரின் 'தமிழர் மதம்' என்ற நூலில் இன்னும் விளக்கமாக படித்தேன். உங்களுக்கு ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கிறேன். ஏற்காவிட்டாலும் 'போகிற போக்கில்' எழுதுபவர் அவரை சொல்ல மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
:)
ரொம்ப அழகான உவமை ஒன்றினை அறிய தந்துள்ளீர்கள் குமரம். நன்றி.
ReplyDeleteஉதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகத்தை விட்டு விட்டீர்களே குமரன்! :-)
ReplyDelete//அதிகாலைச் சூரியன் குளிர்ந்து இருப்பான். அந்தக் குளிர்ச்சியும் இங்கே முருகனுக்கு உவமை ஆகின்றது போலும்//
ஞாயிறு கடல் கண்டாஅங்கு...என்று தான் வருகிறது குமரன்!
எனவே கடலில் காலைச் சூரியனையும் காணலாம்; மாலைச் சூரியனையும் காணலாம்!
இரண்டும் செக்கர் வானம் தான்! இரண்டும் தணிந்த சூடு தான்!!
முதலும் முடிவுமாய் இருப்பவனும் முருகனே என்றும் குறிக்கும் அல்லவா?
படித்ததைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோவி.கண்ணன்.
ReplyDeleteஇறைச் சக்தி ஒன்றே; அது வெவ்வேறு தோற்றங்களில் வெளிப்படுகிறது என்று சொல்வது ஒரு புலனம் - அந்த வகையில் எனக்கு எந்த வித மறுப்பும் மாறுபாடும் இல்லை. இறைச்சக்தியைப் பற்றிய என் நிலையான உணர்வும் அதுவே. அவற்றை என் வலைப்பதிவுகளிலும் காணலாம்.
மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்க முன்னோடி என்பதால் அவர் மீது அளவற்ற மரியாதை கொள்வது இன்னொரு புலனம். அந்த மரியாதையையும் விவரித்துக் கூற வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன். உங்களுக்கும் இங்கே பலருக்கும் அது தெரியும்.
இங்கே நீங்கள் சொல்லியிருக்கும் மறைமலை அடிகளாரின் 'தெய்வ உருவங்களின் பரிணாமம்' என்ற கருத்து ஏதேனும் தரவுகளின் அடிப்படையில் சொல்லப்பட்டக் கருத்தா அல்லது 'போகிற போக்கில்' சொந்தக் கருத்தாகச் சொல்லப்பட்டதா என்று கேட்பது இன்னொரு புலனம். இந்தக் கேள்வி கேட்பது அடிகளாரை அவமதிப்பதற்காக இல்லை. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண விழைவது.
நீங்கள் அனுப்பிய 'தமிழர் மதம்' புத்தகத்தின் பக்கங்களைப் பார்த்தேன். இன்னும் படிக்கவில்லை. படித்த பின் மின்னஞ்சலிலேயே உரையாடலைத் தொடருவோம்.
படித்ததைப் பகிர்ந்து கொண்டதற்கு மீண்டும் என் நன்றிகள்.
உண்மையிலேயே இது ரொம்ப அழகான உவமை தான் இல்லையா கொத்ஸ்?! உங்களுக்கும் பிடித்திருந்ததைச் சொன்னதற்கு நன்றி.
ReplyDeleteஉதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகத்தை எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை இரவிசங்கர். :-)
ReplyDeleteநீங்கள் சொல்வது போல் 'ஞாயிறு கடல் கண்டாஅங்கு' என்று இருப்பதால் மறையும் கதிரவனைக் குறிப்பதாகவும் கூறலாம். மயக்கும் மாலைப்பொழுதும் உலகம் உவக்கும் பொழுது தானே. :-)
This comment has been removed by the author.
ReplyDeleteதரவுகளுடன் சொல்லப்படும் கருத்துகளுக்கும் போகும் போக்கில் சொல்லும் கருத்திற்கும் இந்த இடுகையிலேயே எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.
ReplyDeleteஇலக்கியத்தை உகரத்தில் தொடங்குதல் மரபு என்று மட்டுமே சொல்லிச் செல்லாமல் எடுத்துக்காட்டுகளாக இலக்கியச் சான்றுகள் உரைப்பது தரவுகளுடன் சொல்லும் கருத்து.
அந்தக் காலத்தில் கதிரவன் உலகத்தை வலம் வந்தான் என்று எண்ணினர் என்று மட்டுமே சொல்லிவிட்டு அதற்கு ஏற்ற எந்த இலக்கியச் சான்றும் கொடுக்காமல் செல்வது 'போகும் போக்கில்' சொல்லிச் செல்லும் கருத்து. தரவுகள் இல்லை என்று பொருள் இல்லை - கொஞ்சம் முயன்றால் போகும் போக்கில் இந்தக் கருத்தைச் சொன்னவரும் அதனை ஏற்றுக் கொண்டவரும் தரவுகள் தர முடியும். அப்படித் தரவுகள் தரும் வரையில் அது உறுதி படுத்தப்பட்ட கருத்து இல்லை. ஒரு தனிப்பட்டக் கருத்து - ஊகம் - என்று தான் சொல்லவேண்டும்.
இந்த இடுகையில் தரவுகளுடன் வைத்தக் கருத்தை எடுத்து இன்னொருவர் எழுதி இங்கே தரப்பட்டத் தரவுகளையும் தந்தால் அது தரவுகளுடன் தரப்பட்ட கருத்து. அப்படி இன்றி 'தரவுகள் இல்லாமல் சொல்லப்பட்டக் கருத்தை - குமரன் சொன்னான் என்ற ஒரே காரணத்திற்காக - அப்படி குமரன் சொன்னதையே தரவாக எடுத்து வைத்தால் என்ன செய்வது? இப்படி ஒருவருக்கொருவர் தரவுகளை ஏற்படுத்திக் கொண்டே செல்லலாமே?! தகுந்த தரவுகள் இன்றி வைக்கப்படும் எந்தக் கருத்துமே உறுதிப்படுத்தப் பட்ட கருத்தாக இருப்பதில்லை. சொல்பவரின் மேல் இருக்கும் மரியாதையால் அதனை ஏற்றுக் கொள்வது அவரவர் உரிமை. ஆனால் அது உறுதிப்படுத்தப்படாத கருத்து என்பதால் கட்டுடைப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும். இந்த இடுகையில் நான் 'போகிற போக்கில்' சொன்ன கருத்திற்கு கோவி.கண்ணன் ஒரு தரவு வைத்துக் கட்டுடைக்க முயன்றதைப் போல்.
//ஏற்காவிட்டாலும் 'போகிற போக்கில்' எழுதுபவர் அவரை சொல்ல மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
ReplyDelete:)//
இது நான் மேலே போட்ட பின்னூட்டத்தில் உள்ளது.
-------
குமரன்,
தெளிவு படுத்திவிடுகிறேன். ஒரு சொல் தட்டச்சு செய்யும் போது விட்டுவிட்டது
ஏற்காவிட்டாலும் 'போகிற போக்கில்' எழுதுபவர் என அவரை சொல்ல மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். என்றிருக்க வேண்டும்
முன்பு ஒரு கட்டுரையில் நான் இட்டிருந்த ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தைப் படித்து இது 'போகிற போக்கில்' என்று நீங்கள் குறிப்பிட்டதைக் குறித்துதான் இங்கு சுட்டினேன். நான் உங்களை 'போகிற போக்கில் சொல்பவர்' என்று சொல்வதற்காக அல்ல.
அங்கே நீங்கள் போட்ட பின்னூட்டத்தை ஒரு வேளை நீங்கள் மறந்திருக்கலாம்.
//நான் கேட்ட கேள்விகளுக்கு விடை சொன்னால் மிக்க மகிழ்வேன். அதே போல் இந்த நூலின் ஆசிரியர் போகிற போக்கில் கிருஷ்ணனைப் பற்றிய இந்தக் கருத்தைச் சொல்லிச் செல்கிறாரா அல்லது ஏதேனும் சான்றுகள் தருகிறாரா என்ற கேள்விக்கும் விடை சொல்லுங்கள். //
http://govikannan.blogspot.com/2007/09/blog-post_24.html
உங்களை சொல்வதாக, குறைத்து மதிப்பிடுவதாக நினைத்திருந்தால் மன்னிக்க. நான் உங்களைச் சொல்லவில்லை. நீங்கள் சொல்லி இருந்ததைத்தான் குறிப்பிட்டேன்.
நீங்கள் இப்பதிவில் கடைசியாக சொல்லி இருக்கும் 'போகிற போக்கும்' உங்கள் பின்னூட்டத்தை வைத்துத்தான் நீங்களும் சொல்கிறீர்கள்' என்று சொன்னால். எனக்கு சொல்வதற்கு கருத்து இல்லை. ஏனென்றால் அது உங்கள் கருத்து.
'என' என்ற சொல் விட்டுப்போயிருந்தாலும் நீங்கள் என்னை 'போகிற போக்கில்' கருத்து சொல்லிச் செல்பவன் என்று சொன்னதாகப் புரிந்து கொள்ளவில்லை. நான் 'போகிற போக்கில்' என்று உங்கள் இடுகையிலும் இங்கும் சொன்னதற்கு விளக்கமாகத் தான் கடைசியில் இருக்கும் பின்னூட்டத்தை இட்டேன். நீங்கள் மன்னிப்பு கேட்கும் வகையில் எதுவும் சொல்லவில்லை.
ReplyDelete//குமரன் (Kumaran) said...
ReplyDelete'என' என்ற சொல் விட்டுப்போயிருந்தாலும் நீங்கள் என்னை 'போகிற போக்கில்' கருத்து சொல்லிச் செல்பவன் என்று சொன்னதாகப் புரிந்து கொள்ளவில்லை. நான் 'போகிற போக்கில்' என்று உங்கள் இடுகையிலும் இங்கும் சொன்னதற்கு விளக்கமாகத் தான் கடைசியில் இருக்கும் பின்னூட்டத்தை இட்டேன். நீங்கள் மன்னிப்பு கேட்கும் வகையில் எதுவும் சொல்லவில்லை.
//
மிக்க நன்றி !
குமரன்,
ReplyDelete"உதிக்கின்ற செங்கதிர்" அப்படிங்கறது?.......ஹிஹிஹி
நீங்க சொல்லியது புரிந்தது....இளஞ்சிவப்பு நிற சூரியனைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன் பாருங்க...
எங்கே எங்க ஜி.ராவின் பின்னூட்டம்?
ReplyDeleteமௌலி. விரைவில் வந்து படிக்கிறேன்.
ReplyDeleteபாலாஜி. உங்க ஜிராவை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். இராகவன் இந்த இடுகையைப் படித்துவிட்டார் என்று தான் நினைக்கிறேன். அவருக்கு முருகனைப் பிடிக்கவில்லை அல்லது உதயசூரியனைப் பிடிக்கவில்லை; இரண்டில் ஒன்று - அதனால் பின்னூட்டம் இடவில்லை. சரியா? :-)
ReplyDeleteவேலை அதிகம் இருக்கும் போலிருக்கிறது. இனி மேல் வருவார். அவர் வந்து என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
குமரா!
ReplyDeleteநல்ல ஒப்பு நோக்குக் கட்டுரை.
காலை உதயசூரியனை விட ஒருகாலத்தில் மாலை மறையும் சூரியன்,அதுவும் அமைதியான கடல் மட்டத்தில் செந்துளியாகக் கடைசிச் சொட்டு மறையும் காட்சி 45 வருசமாகியும் மனதைவிட்டு மறையவில்லை.
ரம்மியமான மாலைப் பொழுதுகள்..
குமரன்,
ReplyDeleteமிகநன்றாக எழுதி இருக்கிறீர்கள். முதல் இரண்டு அடியுடன் ஏன் நிறுத்தி விட்டீர்கள்? மூன்று அடிகள் சேர்ந்த கூட்டுப் பொருள் அல்லவா சூரிய - முருக ஒப்புமை?
"ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி"
என்கிற மூன்றாவது வரியையும் சேர்ந்துப் பாருங்கள் (ஓ என்றால் தங்குதல்; அற என்றால் ஆணவம் அறுத்த மனங்களில் என்கிற பொருள். அம்மாடியோ)
"உயிர்கள் மகிழும்படி மேருமலையை வலமாக எழுந்து திரிகின்ற, பலசமயத்தவரும் புகழ்கின்ற சூரியன் கிழக்குக் கடலில் தோன்றக் கண்டாற் போல், ஆணவம் அகன்ற அடியார்களின் உள்ளத்தில் விளங்குவதும் அவர்தம் கருத்துக்குத் தொலைவில் நின்று விளங்குவதும் ஆகிய இயற்கை ஒளியானவன்" என்று முருகனை நக்கீரர் விவரிக்கும் அழகை என்னென்பது!
மூன்று வரிகளுக்குள் எவ்வளவு விஷயங்கள்!
1. சூரியன் இருள் போக்குவது போல், முருகன் அறியாமை இருள் போக்குபவன்
2 எல்லாம் அவன் செயல் எனும்படி முனைப்படங்கிய உயிர்களில் சென்று தங்குபவன்
3. அவர்களின் உள்ளத்தில் தங்கினாலும் அவர்களின் கருத்துக்குப் பிடிபடாமல் வெகு தொலைவில் இருப்பவன்
கூடுதலான ஒரு பார்வை: ஒளிர்தல் என்கிற பொருளுக்கு இமைத்தல் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார். இமைப்பது மட்டுமே ஒளிர்வுக்கு சான்று. என்ன உவமானம்!
கோவி.கண்ணன் கூறியுள்ள 'சுழன்றும் ஏர்ப்பின்னது' குறளுக்குத் தாங்கள் சொல்லியிருப்பதே சரியான கருத்து.
சிலப்பதிகாரத்திலும், "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு மேரு வலந்திரிதலான்" என்று வந்திருப்பது ஒப்பு நோக்கத் தக்கது.
(ஏன் அப்படிப் பொருள் கொள்ள வேண்டும்? மேருவே (அல்லது மேருவை உள்ளடக்கிய பூமியே) தன்னைச் சுற்றிவரும் பெருமை கொண்டிருப்பதால் சூரியனைப் போற்றுவோம் என்று இளங்கோ பாடியிருப்பதாக ஏன் பொருள் கொள்ளக் கூடாது? என்று கூடத் தோன்றலாம். ஆனால் சிலப்பதிகாரத்தில் அந்த வாழ்த்துப் பாடல்களில் இளங்கோ அடிகள் முறையே, திங்கள், சூரியன், மழை, பூம்புகார் ஆகிய நான்கினையும் போற்றும் பாங்கில் ஒரு புதுமையைக் கையாண்டிருக்கிறார்.
சோழனுடையை ஆட்சியின் குளிர்ச்சிபோல் இன்பம் தருவதால் திங்களைப் போற்றுவோம் என்றும், சோழன் உலகிற்கு அளிக்கும் அருள் போல் மேலிருந்து பொழிவதால் மழையைப் போற்றுவோம் என்றும், சோழன் மரபினரை உலகிற்குத் தந்ததால் பூம்புகாரைப் போற்றுவோம் என்றும் சொல்கிற பாணியில் சோழனின் ஆட்சிச் சக்கரம் போல் சூரியனும் மேருவைச் சுற்றுவதால் அதனைப் போற்றுவோம் என்கிற ANALOGY தானகவே வந்து விடுகிறது)
சூரியன் மேருவை வலம் வந்ததான நம்பிக்கை தான் அப்போது இருந்திருக்கிறது.
நல்ல பதிவு. கூடுதல் சிந்தனைகளைத் தூண்டிய பதிவு. வாழ்த்துக்கள். நன்றி.
Need not be published
ReplyDeleteஆன்மீகம் சார்ந்த இலக்கியம் எழுதுவதில் தாங்களும் திரு ரவிஷங்கர் அவர்களும் பதிவுலகத்தில் ஒரு நம்பிக்கையான இடத்தை அடைந்திருக்கிறீர்கள். இந்த நிலையில் தங்களுடைய பதிவுகளில் சொல்லப்படும் விஷயங்களின் பொறுப்பு கனம் கூடுகிறது என்று உணருங்கள். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இலக்கியங்களை உகரத்தில் அல்லது அகரத்தில் தொடங்குதல் மரபு என்று பொதுப்படுத்துகிறீர்கள். அப்படி அல்ல என்று நினைக்கிறேன். சங்க இலக்கியத்தின் பதினெண் மேல்கணக்கு, கீழ்க்கணக்காகிய முப்பத்தாறில் எட்டு அல்லது ஒன்பது மட்டுமே உகர அகரத்தில் தொடங்குகின்றன. அப்படி மரபு என்று தனிப்பட்ட முறையில் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களில் எங்காவது சொல்லப்பட்டிருந்தால் தான் அதைப் பொதுப்படுத்தலாமே தவிர ஒரு சில உதாரனங்கள் மூலம் நம்முடைய பார்வைக்கு மட்டும் தோன்றுகிற விஷயத்தை " . . . .என்று படுகிறது" என்கிற பாணியில் எழுதுவதே பொறுப்பினைக் குறிக்கும் என்பது என் அபிப்ராயம்.ஏற்பதும் ஏற்காததும் தங்கள் சுதந்திரம்.
இரத்னேஷ். நல்ல கருத்தைச் சொல்லியிருப்பதால் பதிக்க வேண்டாம் என்று சொன்ன பின்னூட்டத்தையும் பதித்துவிட்டேன். மன்னிக்கவும்.
ReplyDeleteஏன் சார், உங்க கிட்ட மன்னிப்பை யார் கேட்டா? மாஞ்சு மாஞ்சு நீளமா பின்னூட்டம் எழுதி இருக்கேன் அதுக்கு ரெண்டு வார்த்தை எழுதுவீங்களா அதை விட்டு . . .
ReplyDeleteI really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.
ReplyDeleteகுமரன்,
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு. பின்னூட்டங்களின் மூலமும் நல்ல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தது. மிக்க நன்றி.
ரத்னேஷ். கோவிச்சுக்காதிங்க. உங்க பின்னூட்டத்தை விட பெரிய பின்னூட்டமா பதில் போடறேன். கொஞ்சம் பொறுத்துக்கோங்க. :-)
ReplyDeleteசூரியன் மரங்களுக்குப் பின்னே மறையும் காட்சியை பார்த்திருக்கிறேன் யோகன் ஐயா. கடலில் மறையும் காட்சியைக் கண்டதில்லை. உதயத்தின் அழகு நினைவில் நன்றாக இருக்கிறது; மறைவும் அழகாக இருக்கும் என்பதைக் கற்பனையில் காணமுடிகிறது.
ReplyDeleteதங்கள் பாராட்டிற்கு நன்றி ஐயா.
இரத்னேஷ். நல்ல கேள்வி. ஏன் இரண்டு வரிகளுடன் நிறுத்தி விட்டீர்கள் என்று. மூன்றாவது வரி நீங்கள் சொன்னது போல் ஆழ்ந்த பொருள் கொண்டதாக இருந்ததால் இன்னொரு இடுகையாக இடலாம் என்று எண்ணியிருந்தேன். மூன்றாவது அடி மட்டும் இன்றி மற்ற அடிகளிலும் பிடித்தவற்றைப் பற்றி எழுத எண்ணியிருக்கிறேன். மூன்றாவது அடியின் பொருளை எழுதி என் வேலையை எளிதாக்கிவிட்டீர்கள் நன்றி.
ReplyDeleteஆகா. ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று இடுகையில் சொல்லியவனுக்கு 'மேரு வலம் திரிதலான்' என்பது மறந்து போய்விட்டது பாருங்கள். அதுவும் நல்லதற்கே. இல்லாவிட்டால் இவ்வளவு அழகாக நீங்கள் விளக்கம் சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்திருக்குமா? மீண்டும் நன்றிகள் இரத்னேஷ்.
இரத்னேஷ். முதலில் இரவிசங்கர் அளவிற்கு என்னைச் சொன்னதற்கு நன்றி. அவர் ஆன்மிக சுப்ரீம் ஸ்டார். அடியேன் சிறிய ஞானத்தன்.
ReplyDeleteபதிவுகளில் மட்டுமின்றிப் பின்னூட்டங்களிலும் சொல்வதை ஒன்றிற்கு இரு முறை சிந்தித்து விட்டே இடுகிறேன் இரத்னேஷ். சொல்ல நினைப்பதைத் தெளிவாகச் சொல்ல இயலாவிட்டால் சொல்லாமல் விட்டுவிடுவதும் செய்திருக்கிறேன். தங்கள் அறிவுரைக்கு நன்றி.
மரபு என்பதற்கும் இலக்கண விதி/சட்ட விதி என்பதற்கும் எனக்குத் தெளிவு போதாது. மரபு என்பது எழுதப்படாத விதி; அதனை பெரும்பாலானவர்கள் பின்பற்றுவார்கள்; ஆனால் எல்லோரும் பின்பற்றத் தேவையில்லை. இலக்கண விதி என்பதோ சட்ட விதி என்பதோ மீற முடியாத ஒன்று; அப்படி மீறி நடந்து கொண்டால் இலக்கணத்தையும் சட்டத்தையும் பின்பற்றுபவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்ட புரிதல் தான் எனக்கு இருக்கிறது. சரியான புரிதல் தானா?
மரபாகிய உகரத்தில் தொடங்குவதற்கு உள்ள எடுத்துக்காட்டுகளைத் தந்திருக்கிறேன். ஆனால் 'எல்லா' இலக்கியங்களும் அந்த மரபைப் பின்பற்றுகின்றன என்று பொதுப்படுத்தவோ அப்படி ஒரு இலக்கண விதி இருக்கிறது என்றோ சொல்லவில்லை. அப்படிச் சொல்லாமல் விட்டதற்கு நான் மரபு என்பதைப் பற்றியும் இலக்கண விதி என்பதைப் பற்றியும் வைத்திருக்கும் புரிதல் தான் காரணம். அது தவறாக இருந்தால் மாற்றிக் கொள்கிறேன்.
மரபு என்று சொல்லுவதே பொதுப்படுத்தல் ஆகிவிடுமா? புரியவில்லையே?!
என்னுடைய பார்வைக்கு மட்டும் தோன்றுவதை '... என்று படுகிறது' என்று சொல்லாமல் இதுவரை விட்டதில்லை. என்னுடைய பல இடுகைகளிலும் பல பின்னூட்டங்களிலும் 'என்று நினைக்கிறேன்' என்ற தொடர் மந்திரத்தைப் போல் திரும்பத் திரும்ப வந்திருக்கும்.
இங்கே உகரத்தில் இலக்கியத்தைத் தொடங்குவது மரபு என்று சொன்னது காட்டிய எடுத்துக்காட்டுகளின் மூலம் 'என்னுடைய பார்வைக்கும் மட்டும் தோன்றிய' ஒன்று இல்லை. நச்சினார்க்கினியர் முதல் பலரும் சொன்னதொரு மரபு இது. நீங்கள் நச்சினார்க்கினியரின் திருமுருகாற்றுப்படை உரையைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் சொல்லுங்கள். அந்த உரையிலிருந்து இந்த மரபைப் பற்றிய செய்தியை எடுத்துத் தருகிறேன். வாரியார் சுவாமிகளும் இந்த மரபைப் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். (இப்போது அதற்குத் தரவு இல்லை. உங்களைப் போன்றவர்கள் 'மேரு வலம் திரிதலான்' என்று தரவை எடுத்துத் தந்ததைப் போல் தந்தால் மகிழ்வேன்). நண்பர் இராகவனும் பலமுறை இந்த மரபைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அவருடைய பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. அவரே வந்து சொன்னால் தெரியும்.
அகரத்தில் தொடங்கும் இன்னுமொரு நூல் 'கந்தர் அலங்காரம் - அடலருணைத் திருக்கோபுரத்தே'. நண்பர் இராகவன் பதிவில் தேடிய போது கிடைத்தது.
ஆனால் நமக்கு மட்டுமே தோன்றும் ஒரு கருத்தினையோ மற்றொருவர் தகுந்த தரவுகள் இன்றிச் சொன்ன கருத்தினையோ சொல்லும் போது '..என்று தோன்றுகிறது', '... என்று படுகிறது', '... என்று நினைக்கிறேன்' என்று எழுதுவதே பொறுப்பான செயல் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அதனை எல்லா இடங்களிலும் நான் செய்திருக்கிறேன்.
இன்னொரு புலனத்திலும் பேச நினைக்கிறேன். ஆன்மிகம் சார்ந்து எழுதுவதால் நான் எழுதுவதில் பொறுப்பு மிகுகிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட ஒரு பொதுவான எண்ணம் மக்களிடையே இருக்கிறது என்பதை நன்கு அறிவேன். சில நேரங்களில் சொல்ல நினைத்ததைச் சொல்ல முடியாமல் தவிக்கும் போது அந்த பொது எண்ணத்தின் பாரம் அழுத்தியிருக்கிறது. ஆனால் அது தேவையானது தானா என்பதில் எனக்கு கேள்விகள் உண்டு. ஆன்மிகம் சார்ந்து எழுதுவதால் எப்படி தனிப்பட்ட மேன்மை இல்லையோ அது போல் தனிப்பட்ட பொறுப்பும் இல்லை என்றே நினைக்கிறேன். எல்லாருக்கும் உள்ள பொறுப்பு தான் எனக்கும் உண்டு; இருக்க வேண்டும். அதற்கும் மேலே இருப்பதாக நானே எண்ணிக் கொள்ள விரும்பவில்லை.
எப்படி நான் மட்டும் காண்பதை '..என்று எண்ணுகிறேன்' என்று சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்கிறதோ (மற்றவருக்கும் அப்படி இருக்கலாம்) அதே போல் எல்லாரும் (முக்கியமாக எல்லா வலைப்பதிவர்களும்) தாங்கள் மட்டும் காண்பதை '...என்று எண்ணுகிறேன்', 'என்று படுகிறது' என்பதைப் போல் எழுத வேண்டும்; அதுவே பொறுப்புள்ளவர்கள் செய்வதாகும். அப்படி இன்றி பக்கத்தில் இருந்து எல்லாவற்றையும் பார்த்தது போல் அறுதியிட்டுப் பேசுவது பொறுப்பான செயல் இல்லை. எல்லோரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். இதை ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம். உங்களை முன்னிலையில் வைத்து இதனைப் பொதுவில் எல்லோருக்கும் தான் சொல்கிறேன். உங்களை முன்னிலையில் வைப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. உங்கள் இடுகைகளில் அப்படி 'போகிற போக்கில்' பல கருத்துகள் சொல்லப்படுவதும் சில நேரங்களில் பின்னூட்டங்களிலும் மற்றவர்கள் வந்து அப்படிப்பட்டக் கருத்துகளைச் சொல்லும் போது நீங்கள் அவற்றை மெச்சிக் கொள்வதையும் பார்த்திருக்கிறேன். நீங்கள் எழுதத் துவங்கியதில் இருந்து உங்கள் இடுகைகளைத் தொடர்ந்து படிக்கிறேன். ஆனால் மேலே சொன்னதைப் போன்றவை இருப்பதால் பல நேரங்களில் பின்னூட்டம் இடத் தயங்கி இடாமல் விட்டிருக்கிறேன். நீங்கள் என்னிடம் எதிர்ப்பார்க்கும் பொறுப்புணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதே என் ஆவல். நீங்களே சொன்னதைப் போல் இதனை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் உரிமை; அவரவர் விருப்பம்.
உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு ஏற்ற பதில் சொல்லிவிட்டேனா இரத்னேஷ்?! சின்னதாகப் பின்னூட்டம் இடுபவர்களுக்கே நீண்ட பின்னூட்ட பதில் சொல்வது என் வழக்கம். இங்கே இவ்வளவு ஆழமான பின்னூட்டம் இட்டுவிட்டு நீங்கள் செல்லும் போது இரண்டு வரிப் பின்னூட்ட பதிலா சொல்வேன்? அது மரியாதை ஆகுமா? என் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறைக்கு மிக்க நன்றி. அந்த நன்றியைக் காட்டும் அளவிற்கு இதோ என் பதில் பின்னூட்டம். :-)
நன்றி கிரண்.
ReplyDeleteநன்றி வெற்றி. பின்னூட்டங்களைச் சுவையாக எழுதியவர்களுக்கும் என் நன்றிகள். :-)
ReplyDeleteநண்பர் குமரனுக்கு,
ReplyDeleteஉங்கள் பதிவு முழுமையும் படிக்கத் துவங்கவில்லை. தவிரவும் தங்களது பேசுபொருள் எனக்கு பரிச்சயமற்றது. இருப்பினும் உங்கள் மூலமாக அதனை வாசிக்கத் துவங்கலாம். பக்தி இலக்கியங்கள் கடவுள் என்கிற நிலைதாண்டி அன்பை போதிக்கும் தன்மை வாய்ந்தவை என்பதாக படித்துள்ளேன். நிற்க.
//அப்படி இன்றி பக்கத்தில் இருந்து எல்லாவற்றையும் பார்த்தது போல் அறுதியிட்டுப் பேசுவது பொறுப்பான செயல் இல்லை. எல்லோரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.//
இது ஒரு பொறுப்புள்ள ஆலோசனை.
உங்கள் விவாதம் முழுக்கவும் எனது பரிச்சய தளத்திற்கு அப்பாற்பட்டது. சேயோன் என்பது குறிஞ்சி நிலத்தின் செந்நிறக் கடவுள் என்கிறது தொல்காப்பியம். காலை சூரிய உதயத்தை செவ்வேள் எனப்படும் முருகன் தனது சேவலுடன் எழுந்துவருவதான கற்பனைகள் உண்டு அதில். சூரிய வழிபாடுடன் இதனை இணைப்பதால் சிவ வழிபாடுடன் இதனை தொடர்பு படுத்துகிறார்கள். கிரேக்கர்களின் சூரியக் கடவுள் பெயர் சீயோன். இதனையும் இத்துடன இணைத்த சிவ வழிபாடு உலகலாவியது என்பது சைவர்கள் நிலைப்பாடு. இக் கருத்தாக்கங்களை எனது மொழியும் நிலமும் என்கிற தொல்காப்பியம் பற்றிய கட்டுரையில் எடுத்தாண்டுள்ளேன். இக்குறிப்புகள் உங்களக்கு எந்த அளவிற்கு பயன்படும் என்று தெரியவில்லை. போகிறபோக்கில் நானும் ஒரு கருத்தைச் சொன்னேன் அவ்வளவுதான். பதிவுலகை பயனுள்ள முறையில் பயன்படுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது.
அன்புடன்
ஜமாலன்.
நண்பர் ஜமாலன்,
ReplyDeleteஅண்மையின் பதிவுலகில் எழுத வந்தவர்களில் மூவர் என் கவனத்தைப் பெற்றிருக்கின்றனர். நீங்கள், இரத்னேஷ், பைத்தியக்காரன் என்ற பெயரில் எழுதும் நண்பர்.- பல திறப்பட்ட புலனங்களில் படிப்பையும் சிந்தனையும் கொண்டவர்கள் நீங்கள் என்பது உங்கள் மூவரின் கட்டுரைகளில் நன்கு தெரிகின்றது. என் கூகுள் ரீடரில் மூவரின் பதிவும் இருக்கின்றன. தொடர்ந்து எல்லா கட்டுரைகளையும் படித்து வருகிறேன்.
என்னுடைய பேசுபொருள் பெரும்பாலும் ஆன்மிகம் & பழந்தமிழ் இலக்கியம் சார்ந்தே அமைந்திருக்கின்றன. அதுவும் மரபை ஒட்டியே பெரும்பாலும் அமைந்திருக்கும். புரட்சிக் கருத்துகளும் புதுமையான கருத்துகளும் குறைவாகத் தான் இருக்கும். தற்கால சிந்தனைக்கு ஏற்ப பழைய தீமைகளை வெருட்டும் சிந்தனைகள் இருக்கும்; ஆனால் அது மரபாகச் சொல்லப்படும் கருத்துகளை வெட்டிப் பேசாமல் ஒட்டியே பேசப்பட்டிருக்கும். அதனால் நான் பழமைவாதி என்று தவறாகப் புரிந்து கொண்டு அப்படிச் சொல்லும் நண்பரும் உண்டு.என்னைப் பொறுத்தவரை ஒரு கருத்து பழையது என்பதாலோ புதியது என்பதாலோ உடனடியாகத் தள்ளத் தக்கதில்லை என்று நினைக்கிறேன். அதனால் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண விழைந்து புதிய கருத்துகளும் மரபை வெட்டிச் சொல்லப்படும் கருத்துகளும் வரும் போதும் தரவுகள் கேட்கிறேன்.
இதை ஏன் இப்போது சொல்கிறேன் இங்கே? காரணமாகத் தான். இது வரை உங்கள் இடுகைகளைத் தொடர்ந்து படித்து வந்தாலும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களே இட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். உங்கள் விண்மீன் வார முதல் இடுகையில் ஒரு பின்னூட்டம் இட்டது நினைவிருக்கிறது. உங்கள் இடுகைகளில் புதுமையான கருத்துகள் பல இருப்பதால் பல நேரங்களில் படித்துப் புரியாமல் சென்றதும் உண்டு; புரிந்து கொள்ள முயன்றதும் உண்டு. உங்கள் கருத்துகள் கனமாக இருப்பதால் புரிந்து கொள்ள நிறைய முயற்சி செய்ய வேண்டும்; இனிமேல் முயல்கிறேன். நீங்கள் இங்கே என் பதிவுகளைப் பற்றி ஏறக்குறைய அதே போல் சொல்லியிருப்பதைப் பார்த்ததும் நானும் அப்படித் தானே உங்கள் கட்டுரைகளைப் பற்றியும் நினைக்கிறேன் என்று தோன்றியது. :-)
நான் மேலே சொன்னது போல் என்னுடைய பேசு பொருள் மரபைச் சார்ந்தே இருப்பதால் உங்களுக்கு கட்டாயம் பரிச்சயமாகியிருக்கும் என்றே நினைக்கிறேன். படித்துப் பாருங்கள். ஆன்மிகம் போக மற்ற பேசுபொருள்களிலும் எழுதுகிறேன். என்னுடைய ப்ரொபைல் பார்த்தால் என்னுடைய மற்ற வலைப்பதிவுகளையும் பார்க்கலாம்.
அண்மைக்காலமாகத் தான் விவாதத்திற்குரிய பேசுபொருளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு முன் விவாதம் செய்வதை தவிர்த்து வந்திருக்கிறேன். அதனால் எப்போது வேண்டுமானாலும் விவாதத்திலிருந்து மீண்டும் அந்த விவாதம் செய்வதைத் தவிர்க்கும் வகைப் பேசுபொருளுக்குச் சென்றுவிட வாய்ப்புகள் உண்டு. :-) உண்மையில் இந்த இடுகையை எழுதும் போது விவாதம் எதுவும் வராமல் தான் எழுதினேன். முந்தைய இரு இடுகைகளில் விவாதத்திற்கு உரிய பொருள் உண்டு. ஆனால் அங்கு இவ்வளவு தூரம் மக்கள் விவாதத்தில் ஈடுபடவில்லை. ஒரு வேளை நீங்கள் சொன்னது போல் பேசுபொருள் அவ்வளவு பரிச்சயமில்லாததாக இருந்ததோ என்னவோ.
தொழில் அதிபர் திரு.மகாலிங்கம் ஆசிரியராக இருந்து நடத்தி வரும் 'ஓம் சக்தி' மாத இதழைச் சிறு வயது முதல் படித்துவருகிறேன். தற்போதும் இணையத்தில் அந்த இதழைத் தவறாமல் படிக்க முடிகிறது. நீங்கள் சொல்லும் கருத்துகளை அந்த இதழில் படித்திருக்கிறேன். சிவ வழிபாடு உலகளாவியது என்பதற்கு கிரேக்கர்களின் சீயோனை மட்டுமின்றி மத்திய அமெரிக்க மாயன் கலாச்சாரத்தில் இருக்கும் இலிங்க வழிபாட்டையும் எடுத்துக் காட்டும் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். அதே போல் புத்தரின் ஒரு உருவமாக விநாயகர் கீழ்த்திசை நாடுகளில் வழிபடப்படுவதைப் பற்றியும் படித்திருக்கிறேன். உங்களது 'மொழியும் நிலமும்' நூலினைப் பற்றிய குறிப்புகளை உங்கள் பதிவில் கண்டிருக்கிறேன். கேட்பவர்களுக்குப் பிடிஎஃப் கோப்பாகத் தருகிறேன் என்றும் சொன்னதாக நினைவு. முதலில் உங்கள் பதிவுகளைப் படித்துப் புரிந்து கொண்ட பின் (குறைந்த பட்சம் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும் போது) உங்கள் நூலினைக் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். :-) உங்கள் நூலில் தொல்காப்பியம் பற்றிய குறிப்புகள் இருந்தால் படிக்க ஆவல். உங்களது 'திணை' பற்றிய கட்டுரையைப் படித்தேன். முழுதும் புரிந்து கொள்ளவில்லை இன்னும். அங்கும் தொல்காப்பியக் குறிப்புகளைக் கண்டேன்.
தரவுகளை வைக்காமல் ஒரு கருத்தைச் சொல்வதை 'போகிற போக்கில் சொல்வது' என்று நானும் 'போகிற போக்கில்' வைத்த ஒரு வரையறையை நன்கு பயன்படுத்தியிருக்கிறீர்கள். :-)
நாம் மட்டும் இல்லை ஜமாலன். பதிவுலகில் எழுதுபவர்களும் படிப்பவர்களும் எல்லோரும் பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறார்கள். இது பயனுடைத்து; இது இல்லை என்று பிரிப்பதில் எனக்கு ஏற்பு இல்லை.
தங்களின் அன்பான வெளிப்படையான முதல் பின்னூட்டத்திற்கு நன்றி. இனி மேலும் தங்கள் கருத்துகளைத் தொடர்ந்து சொல்லிவாருங்கள்.
உங்களது நீண்ட பின்னொட்டத்தை தற்சமயம்தான் பார்க்க முடிந்தது. நன்றி.
ReplyDelete//என்னைப் பொறுத்தவரை ஒரு கருத்து பழையது என்பதாலோ புதியது என்பதாலோ உடனடியாகத் தள்ளத் தக்கதில்லை என்று நினைக்கிறேன்.//
மேற்சொன்னன கருத்தினை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். கருத்து என்பதில் பழையது புதியது எனகிற காலவரையறையில் எனக்கு உடன்பாடில்லை. நான் வேறதீசைசயிலருந்து உங்ககள் பேசுபொருள்கள் நொக்கி வந்தவன். நான் 15- ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தைவிட்டு பிரிந்து இருக்கிறேன். வருடத்தக்க 1 முறை 1 மாதம் தமிழகம் வருவேன். சொந்த பிரச்சனைகள் கொஞ்சம் புத்தகம் என திரும்பிவிடுவேன். தமிழை முறையாக படிப்பது என்கிற ரீதியல் ஆரம்பித்ததுதான் தொல்காப்பியம். அதன்பிறகு மற்றவற்றை தொடரமுடியாமல்..போய்விட்டது. நிற்க.
பொதுவாக தமிழ் இலலக்கியங்களை புரிந்துகொள்வதற்க்கு குறிப்பாக பக்தி இலக்கியங்கள் உங்கள் பதிவுகள் பயன் உள்ளதாக இருக்கிறது.இனி தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசித்து புரிந்துகொள்வதற்கு முயல்வது, எனது புரிதல் பரப்பை விரிவுபடுத்தும்.
பதிவுகளில் கனமாகவும் வீச்சுடனும் பயனபடுத்துபவர்களில் உங்களது பதிவும் ஒன்று. பின்னொடட்மிடும் நணண்பர்களும் தங்களது ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்துபவர்களாக உள்ளனர். இது பன்மகப்பட்ட பார்வையைய உருவாக்கும். முன்முடிவககற்ற தேடலே சுதந்திரமானது மற்றும் சுகமானதும்கூட. அது பக்தியா பெரியாரா உலகாயுதமா அத்வைதமா என்பது முக்கியமல்ல.
விரிவான கருத்தாடலை தொடர்வோம். எனது முழுநூலும் PDF-ல் இல்லை. குறிப்பாக தொல்காப்பியம்
கட்டுரையான மொழியும் நிலமும் மட்டுமே உள்ளது. உங்களுக்கு பயன்படுமெனில் அனப்பி வைக்கிறேன். அஞ்சல் அனுப்புங்கள்.
நேரம் ஒதுக்கி இவ்வளவு விரிவாக பகிர்ந்து கோண்டமைக்கு நன்றி.
குமரன்,
ReplyDeleteமன்னிக்கவும். தங்களுடைய தொடர் பின்னூட்டங்களில் முதலிரண்டினைப் பார்த்ததோடு விட்டு விட்டேன். இன்று தான் கீழே உள்ள இரண்டையும் பார்த்தேன்.
//இங்கே உகரத்தில் இலக்கியத்தைத் தொடங்குவது மரபு என்று சொன்னது காட்டிய எடுத்துக்காட்டுகளின் மூலம் 'என்னுடைய பார்வைக்கும் மட்டும் தோன்றிய' ஒன்று இல்லை. நச்சினார்க்கினியர் முதல் பலரும் சொன்னதொரு மரபு இது. நீங்கள் நச்சினார்க்கினியரின் திருமுருகாற்றுப்படை உரையைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் சொல்லுங்கள். அந்த உரையிலிருந்து இந்த மரபைப் பற்றிய செய்தியை எடுத்துத் தருகிறேன். வாரியார் சுவாமிகளும் இந்த மரபைப் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.//
இதைத்தான் கேட்டேன். இப்படி ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்தாலே அதுமரபு என்றாகி விடுகிறது. எனில் நீங்கள் சொன்னது சரியே.
ஆன்மீக விஷயங்கள் மற்றவற்றை விட சமூக ஒழுங்கிற்கானது என்கிற இமேஜ் இருப்பதனாலேயே அது குறித்து எழுதுபவர்களுக்குக் கூடுதல் பொறுப்பு இருப்பது நல்லது என்று தெரிவித்தேன். தங்களுடைய பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் அது நிறையவே பளிச்சிடுவதைக் காண்கிறேன்.
நீங்கள் சொல்லி இருப்பது போல் அந்தப் பொறுப்பு எல்லோருக்கும் அவசியமே. அதில் மறுகருத்து இல்லை.
என்னுடைய பதிவுகளில் என்னையும் அறியாத பொறுப்பற்ற இடுகைகள் இருந்தால் சுட்டிக் காட்ட முழு உரிமையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
"சுய மெச்சல்" அல்லது தகுதியற்ற பாராட்டுக்களை மெச்சிக் கொள்வது இரண்டையும் தவிர்ப்பதாகவே நான் எண்ணி இருக்கிறேன். தங்களைப் பின்னூட்டம் இடத் தயங்க வைக்கும் அளவிற்கு எங்கோ ஏதோ நடந்திருக்கிறது என்று தெரிகிறது. தவறாக எடுத்துக் கொல்ள மாட்டேன். சுட்டிக் காட்டுங்கள். வேண்டுமானால் பதிவுக்கு அல்ல என்று குறிப்பிட்டுக் கூட சொல்லலாம்.
நன்றி.
//இரத்னேஷ். முதலில் இரவிசங்கர் அளவிற்கு என்னைச் சொன்னதற்கு நன்றி. அவர் ஆன்மிக சுப்ரீம் ஸ்டார். அடியேன் சிறிய ஞானத்தன்.//
ReplyDeleteநீங்க ஆன்மீக சூப்பர் ஸ்டாராச்சே :-)
குமரன், இந்தப் பதிவை இப்பொழுதுதான் படித்தேன்.
ReplyDeleteஉலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு ஓவற இமைக்கும் சேன் விளங்கு அவிரொளி
இங்கே நீங்கள் சொல்லியிருக்கும் படிப் பொருள் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை.
உலகம் உவப்ப...வலன் ஏர்பு திரிதரு...பலர் புகழ் ஞாயிறு = உலகம் மகிழும்படியாகச் செய்யும் பெருமை கொண்டு...அப்பெருமை எங்கும் பரவும் படி பலரும் புகழும் ஞாயிறானது...
கடல் கண்டாங்கு ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி - ஞாயிறானது கடலோடு கண்ட பொழுதில் உண்டாகும் இமைக்கச் செய்யும் அழகான செவ்வொளியின் தன்மையுடைய திருவடி
இதுதான் நான் படித்துக் கண்ட பொருள்.
முருகனுடைய செவ்விய திருவடிகளைக் குறிப்பதாகவே நான் கருதுகிறேன்.
நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கமும் அருமையாக இருக்கிறது.
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ReplyDeleteகுமரா!
நல்ல ஒப்பு நோக்குக் கட்டுரை.
காலை உதயசூரியனை விட ஒருகாலத்தில் மாலை மறையும் சூரியன்,அதுவும் அமைதியான கடல் மட்டத்தில் செந்துளியாகக் கடைசிச் சொட்டு மறையும் காட்சி 45 வருசமாகியும் மனதைவிட்டு மறையவில்லை.
ரம்மியமான மாலைப் பொழுதுகள்..//
யோகன் ஐயா, கச்சியப்பரின் ஒரு பா நினைவிற்கு வருகிறது
ஏலவார்குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
பாலனாகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞாலமேவுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய்
மாலையாவதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவுல மகன் உக்காந்திருக்கிறது எப்படி இருக்குன்னா....இரவுக்கும் பகலுக்கும் நடுவுல இருக்குற மாலை மாதிரி இனிமையா இளமையா குளுமையா செழுமையா இருக்காம். :)
// சிலப்பதிகாரத்திலும், "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு மேரு வலந்திரிதலான்" என்று வந்திருப்பது ஒப்பு நோக்கத் தக்கது. //
ReplyDeleteரத்னேஷ். அது அப்படியிருக்கும் என்று நினைக்கவில்லை.
ஞாயிறு பொற்றுதும்..ஞாயிறு போற்றுதும்.
ஏன்?
ஏன்னா...இந்தக் காவிரி பாயுதே சோழநாடு...அந்த நாட்டு அரசன் இருக்கானே சோழன்....அவனோட ஆணைச்சக்கரம் மேரு வரைக்கும் போகுமப்பா...அந்த மாதிரி சூரியனுடைய ஆட்சியும் மேரு வரைக்கும் போகும்னு பொருள் கொள்றதே சரியா இருக்கும்னு தோணுது.
// //இங்கே உகரத்தில் இலக்கியத்தைத் தொடங்குவது மரபு என்று சொன்னது காட்டிய எடுத்துக்காட்டுகளின் மூலம் 'என்னுடைய பார்வைக்கும் மட்டும் தோன்றிய' ஒன்று இல்லை. நச்சினார்க்கினியர் முதல் பலரும் சொன்னதொரு மரபு இது. நீங்கள் நச்சினார்க்கினியரின் திருமுருகாற்றுப்படை உரையைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் சொல்லுங்கள். அந்த உரையிலிருந்து இந்த மரபைப் பற்றிய செய்தியை எடுத்துத் தருகிறேன். வாரியார் சுவாமிகளும் இந்த மரபைப் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.//
ReplyDeleteஇதைத்தான் கேட்டேன். இப்படி ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்தாலே அதுமரபு என்றாகி விடுகிறது. எனில் நீங்கள் சொன்னது சரியே. //
ரத்னேஷ். பலமுறை சொல்லும் கருத்து. ஒவ்வொரு முறையும் இதைக்குறிப்பிட வேண்டும் என்று தேவையில்லை.
இந்த முறையை நானும் அறிவேன். இனியது கேட்கின் வலைப்பூவிலும் பயன்படுத்தியிருக்கிறேன். தேடினால் தொடுப்பு கிடைக்கும்.
http://iniyathu.blogspot.com/2006/12/47.html
இதோ கிடைத்தும் விட்டது.
ராகவன்,
ReplyDelete//அவனோட ஆணைச்சக்கரம் மேரு வரைக்கும் போகுமப்பா...அந்த மாதிரி சூரியனுடைய ஆட்சியும் மேரு வரைக்கும் போகும்னு பொருள் கொள்றதே சரியா இருக்கும்னு தோணுது//
'வலந்திரிதலான்' என்கிற பதம் இதில் அடக்கமாகிறதா?
தங்களுடைய 'இனியது கேட்கின்' இன்று தான் பார்த்தேன். அருமையான தியான மண்டபம். நன்றி.
//என்னுடைய பதிவுகளில் என்னையும் அறியாத பொறுப்பற்ற இடுகைகள் இருந்தால் சுட்டிக் காட்ட முழு உரிமையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
ReplyDelete//
இரத்னேஷ். நீங்களே இப்படி சொன்னாலும் அந்த உரிமை எடுத்துக் கொள்ளும் தகுதி எனக்கு இல்லை என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன எழுதலாம்; என்ன எழுதக் கூடாது என்பதை நீங்களே நன்கு அறிவீர்கள். நீங்கள் எழுதுவதில் சில எனக்கு எரிச்சலை மூட்டினால் முடிந்தவரை கண்டு கொள்ளாமல் போகிறேன். சில நேரங்களில் எதிர்வினையும் செய்கிறேன். :-) எல்லாவற்றிற்கும் எதிர்வினை செய்ய நேரம் இல்லை என்பதும் ஒரு காரணம்.
//"சுய மெச்சல்" அல்லது தகுதியற்ற பாராட்டுக்களை மெச்சிக் கொள்வது இரண்டையும் தவிர்ப்பதாகவே நான் எண்ணி இருக்கிறேன். //
சுய மெச்சல் என்றோ பாராட்டுக்களை மெச்சிக் கொள்வது என்றோ நான் சொல்லவே இல்லையே. அப்படி ஒன்றும் உங்கள் இடுகைகளில் காணவில்லை. சில அண்ணன்மார் ஒரு சில கருத்துகளை எந்த வித சான்றுகளும் வைக்காமல் அள்ளிவிடும் போது அவற்றை மெச்சிக் கொள்வதைக் கண்டிருக்கிறேன். அதே போல் நான் மதிக்கும் சிலரைப் பற்றியும் வணங்கும் இறை உருவங்களைப் பற்றியும் Lighter senseல் பல கருத்துகளைச் சொல்லியிருக்கிறீர்கள். அவற்றைச் சொன்னேன். மேலே சொன்னது போல் இப்படி எல்லாம் எழுதாதீர்கள் என்று வலியுறுத்தவில்லை; உங்களுக்குத் தெரியும் என்ன எழுத வேண்டும் என்று. எதிர்வினை செய்வதும் செய்யாததும் மட்டுமே என்னால் முடிந்தது.
ஜமாலன். நீங்கள் எப்போதோ தமிழ் கற்க தொல்காப்பியத்தைத் தொடங்கிவிட்டீர்கள் போலும். நான் இப்போது தான் தொடங்கியிருக்கிறேன். நானும் பற்பல ஆண்டுகளாகத் வெளிநாட்டில் தான் இருக்கிறேன். என் பயிற்சியும் ஆர்வமும் பக்தி இலக்கியங்கள் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும் இலக்கியங்களிலேயே இது வரை இருந்தது. வேறு இலக்கிய ஆராய்ச்சி நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் மரபான பொருளை விட்டு விலகிச் சென்ற நூல்கள் அவ்வளவாகப் படித்ததில்லை. புரியவில்லை என்பதே காரணம்.
ReplyDeleteஉங்கள் புரிதல் பரப்பை விரிவுபடுத்தும் அளவிற்கு என் இடுகைகள் இருக்குமா என்ற ஐயம் உண்டு. ஆனால் முடியும் போது படித்து கருத்துகளைச் சொல்லுங்கள்; கேள்விகளைக் கேளுங்கள். தெரிந்த வரை சொல்கிறேன்.
முன்முடிவுகளற்ற தேடல் எனக்கு இருக்கிறதா என்பதில் ஐயம் உண்டு. அதனால் என் பதிவுகளைக் கொஞ்சம் படித்த பின் என் சார்பு நிலைகள் உள்ளங்கை நெல்லிக்கனியென உங்களுக்குத் தென்படலாம். :-)
மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். தொல்காப்பியக் கட்டுரையை அனுப்புங்கள். மிக்க நன்றி.
ஆகா. நீங்கள் இவ்வளவு நேரம் ஒதுக்கி எழுதும் போது அதற்குப் பதில் சொல்ல நான் நேரம் ஒதுக்குவதில் என்ன இருக்கிறது? :-)
நன்றிகள் ஜமாலன்.
//நீங்க ஆன்மீக சூப்பர் ஸ்டாராச்சே :-) //
ReplyDeleteரொம்ப உரக்கச் சொல்லாதீங்க பாலாஜி. இரவியை (ரெண்டு பொருளையும் எடுத்துக்குங்க) சுப்ரீம் ஸ்டார் என்று சொல்லிவிட்டு மின்மினியை சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் வெட்கமாக இருக்கிறது.
சர்க்கரை ஆலை வரும் வரை தான் இலுப்பைப்பூ சர்க்கரை. :-)
//குமரன் (Kumaran) said...
ReplyDelete//நீங்க ஆன்மீக சூப்பர் ஸ்டாராச்சே :-) //
ரொம்ப உரக்கச் சொல்லாதீங்க பாலாஜி. இரவியை (ரெண்டு பொருளையும் எடுத்துக்குங்க) சுப்ரீம் ஸ்டார் என்று சொல்லிவிட்டு மின்மினியை சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் வெட்கமாக இருக்கிறது.
சர்க்கரை ஆலை வரும் வரை தான் இலுப்பைப்பூ சர்க்கரை. :-)//
அப்படியெல்லாம் இல்லைங்க குமரன். அடியவர்களில் உயந்தவர் யார் தாழ்ந்தவர் யார்? உங்களுக்கு தெரிஞ்சதை அட்டகாசமா எழுதறீங்க. அது போதுமே...
இராகவன். அப்பாடா. இப்போதாவது படித்தீர்களே?! :-)
ReplyDeleteமுருகப்பெருமானின் செவ்விய திருவடிகளின் பெருமையையும் தடக்கைகளின் பெருமையையும் திருமுருகாற்றுப்படை சொல்வதை இனி வரும் இடுகைகளில் சொல்கிறேன்.
சோமாஸ்கந்தர் திருவுருவ விளக்கப்பாடல் ஏற்கனவே நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மீண்டும் இப்போது அதனைப் படிக்கச் சுவையாக இருக்கிறது.
ஞாயிறு போற்றுதும் வரிகளுக்கு உங்கள் விளக்கத்தைக் கண்டவுடன் இணையத் தமிழ் பல்கலைகழக நூலகத்துக்குப் போய் பார்த்தேன். நாவலர் பண்டித ந்.மு. வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை இப்படி சொல்கிறது.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் - யாம் ஞாயிற்றைப் போற்றுவேம்; ஞாயிற்றைப் போற்றுவேம்; காவிரி நாடன் திகிரி போல் - பொன்னி நாட்டையுடைய சோழனது ஆழி போல், பொற்கோட்டு மேரு வலம் தருதலான் - பொன்னாலாய கொடுமுடியை உடைய மேருவை வலமாகத் திரிதருதலால்.
உங்கள் பதிவில் நீங்கள் இதற்குச் சொன்ன பொருளும் ஏறக்குறைய நீங்கள் இப்போது சொன்ன பொருளை ஒட்டியே இருப்பதை இப்போது தான் கவனித்தேன். அப்போது எப்படியோ என் கவனத்திலிருந்து தப்பியிருக்கிறது.
உங்கள் தயவால் நாட்டார் அவர்களின் உரையைப் படிக்க முடிந்தது. அடிகள் சொல்லாத அழகு ஒன்றை அவர் சேர்த்துச் சொல்வதையும் படித்து மகிழ்ந்தேன். பொற்கோட்டு என்று மட்டும் அடிகள் சொல்கிறார். உரையில் காவிரியின் இன்னொரு பெயரான பொன்னியை இங்கே தகுந்த நேரத்தில் பயன்படுத்தி உரையை வரைந்து இன்னும் அழகு கூட்டிவிட்டார் உரையாசிரியர்.
உகர மரபைப் பற்றி உங்கள் பதிவில் தேடினேன். கிடைக்கவில்லை. இப்போது நீங்கள் தேடிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.
எல்லா பின்னூட்டங்களையும் படிக்கவில்லை குமரா. நேற்றுதான் ஸ்ரீகாழியூரர் பிள்ளையார்சுழியின் மகிமையையும் / உகாரத்தின் மகிமையையும் குறித்து நம்பிக்கை குழுமத்தில் எழுதினார். இலக்கியங்கள் உகாரத்தில் தொடங்குவதற்கும் அதுவே காரணம் என்றும் கருத்துப் பரிமாற்றம் நடந்தது.
ReplyDeleteபின்னூட்டங்களையும் படித்துப் பாருங்கள் அக்கா. நிறைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். திருமுருகாற்றுப்படை மூன்றாவது இடுகை இடும் முன்னர் இந்த இடுகையில் இருக்கும் எல்லா பின்னூட்டங்களையும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். :-)
ReplyDelete