Saturday, July 07, 2007

கடம்பம் - 2

இந்தப் பாடல் மக்கள் நடுவே மிக நன்கு அறியப்பட்டது. பலரும் பாடியிருப்பார்கள்.

(கந்தர் அலங்காரம் - 38ம் பாடல்)

நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.


குமரேசரின் இரு திருவடிகளும் அவற்றில் அணிந்த சிலம்பும் சதங்கையும் தண்டையும், ஆறுமுகங்களும், பன்னிரு தோள்களும் அவற்றில் அணிந்த கடம்பமாலையும் எனக்கு முன்னே வந்து தோன்றிவிட்டால் - நல்ல நாள் கெட்ட நாள் தான் என்னை என்ன செய்யும்? நான் செய்த நல்வினைத் தீவினைப் பயன்கள் தான் என்னை என்ன செய்யும்? வினைப்பயன்களை அளிக்க எனை நாடி வந்த ஒன்பது கோள்களும் என்ன செய்யும்? என் உயிரை எடுக்க வரும் கொடிய கூற்றும் என்ன செய்யும்? அவன் அருளால் இவற்றை எல்லாம் வெல்லுவேன்.

முருகனின் திருவுருவத்தில் எவை எவை எடுப்பாகத் தெரியுமோ அவற்றை எல்லாம் பாடிக் கொண்டு வரும் போது கடம்பையும் பாடுகிறார்.

***


அடுத்தப் பாடலும் நன்கு அறியப்பட்டப் பாடல்.

(கந்தர் அலங்காரம் 40ம் பாடல்)

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே.

திருச்செந்தூர் அருகில் இருக்கும் வயல்களில் நீர்வளம் மிகுந்து இருப்பதால் வயல்களில் நிறைய மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அந்த மீன்கள் துள்ளித் துள்ளி விளையாடுவதால் செந்தூர் வயற்பொழில்கள் சேறாகிவிட்டன.

முருகனின் தோளில் இருக்கும் தேனைச் சொரியும் கடம்ப மாலையின் மயக்கத்தில் (அவன் தோளைத் தழுவி அந்த மாலைகளின் மணத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில்) பூங்கொடியார் மனம் துவண்டது.

மாமயில் ஊர்தியைக் கொண்டவன் வேலால் கடலும் கடல் நடுவே மாமரமாய் நின்ற சூரனும் கிரௌஞ்ச மலையும் அழிந்தார்கள்.

அவனுடைய திருவடிகள் பட்டதால் என் தலை மேல் பிரமன் எழுதிய தலையெழுத்து அழிந்தது.

***

அடுத்தப் பாடல் நம் இராகவனுக்கு மிகவும் பிடித்தப் பாடல்.

(கந்தர் அலங்காரம் - 62ம் பாடல்)

ஆலுக்கு அணிகலம் வெண்டலை மாலை அகிலமுண்ட
மாலுக்கு அணிகலம் தண்ணம் துழாய் மயில் ஏறும் ஐயன்
காலுக்கு அணிகலம் வானோர் முடியும் கடம்பும் கையில்
வேலுக்கு அணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே.

ஆலமுண்ட சிவபெருமானுக்கு அணிகலம் வெண் தலை மாலை. உலகங்களை எல்லாம் உண்ட திருமாலுக்கு அணிகலம் குளிர்ந்த துளசி. மயில் ஏறும் எங்கள் ஐயனின் காலுக்கு அணிகலம் வானவர்கள் திருமுடியும் கடம்ப மாலையும். அவன் கையில் இருக்கும் வேலுக்கு அணிகலம் அந்த வேல் அழித்த கடலும் சூரனும் கிரௌஞ்ச மலையுமே.

***

இந்தப் பாடல் எனக்கும் மிகப் பிடித்தப் பாடல்

(கந்தர் அலங்காரம் - 72ம் பாடல்)

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

சிவந்தவனை, கந்தனை, திருச்செங்கோட்டு மலையை உடையவனை, சிவந்த சுடர் வேல் உடைய மன்னனை, செந்தமிழ் நூல் பல செய்தானை, புகழ் விளங்கும் வள்ளியின் மணவாளனை, கந்தனை, கடம்பமாலை அணிந்தவனை, கரிய மயிலை வாகனமாக உடையவனை, சாகும் வரையில் மறவாதவர்களுக்கு ஒரு தாழ்வும் இல்லையே.
***
படங்கள்:

1. திருமுருகன்
2. மலர்ந்த மலர் முகத்துடனும் கடம்ப மலர்க் கொத்துடனும் ஒரு சிறுமி
3. பழனி மலை அடிவாரத்தில் இருக்கும் கடம்பமரம்
4. சில மொட்டுக்களுடன் ஒரு கடம்ப மலர்க் கொத்து.
மேலும் சில பாடல்கள் அடுத்த இடுகையில்

18 comments:

  1. கடம்பன் புகழ்பாடும் இப்பதிவுகள் மிகவும் அழகாக வருகின்றன, குமரன்.

    கந்தா போற்றி, கடம்பா போற்றி.
    வெட்சி புனையும் வேளே போற்றி!

    ReplyDelete
  2. கடம்பம் கண்டோம்
    கடம்பம் கேட்டோம்
    கடம்பன் அருள் கொள்ள
    வேறென்ன வேண்டும் பராபரமே!

    நன்றி குமரன்!

    ReplyDelete
  3. //கந்தா போற்றி, கடம்பா போற்றி.
    வெட்சி புனையும் வேளே போற்றி!//

    சந்தடி சாக்கில் நம்ம SK ஐயா, கடம்பப் பதிவுக்கு அடுத்தது, என்ன மலர் என்று ஒரு ஐடியா கொடுத்துச் செல்கிறார்!

    வெட்சி! வெட்சி! வெட்சி!

    கடம்பப் படங்களுக்கு நன்றி குமரன்.
    செங்கடம்பு வகை ஒன்றும் உள்ளது! சிவப்புக் கலர் கடம்பு! சேயோனுக்குச் சிவப்பு அல்லவா?

    //அடுத்தப் பாடல் நம் இராகவனுக்கு மிகவும் பிடித்தப் பாடல்//

    எனக்கும் தான் குமரன்! :-)
    ஏன் என்று உங்களுக்கும் ஜிராவுக்கும் தெரியாதா என்ன? :-)

    //அகிலமுண்ட
    மாலுக்கு அணிகலம் தண்ணம் துழாய் மயில் ஏறும் ஐயன்
    காலுக்கு அணிகலம் வானோர் முடியும் கடம்பும்//

    ஆகா...எவ்வளவு அழகான அணிகலன்கள்!
    தேவார மூர்த்திகளும் இது போன்ற அணிகலப் பாடல்கள் பல செய்துள்ளார்கள்!

    ReplyDelete
  4. வெற்றி கேட்டு கடம்பினைப் பற்றி எழுதுகிறேன். வெற்றி பெற்றால் வெட்சி அணிவார்கள். என்னே பொருத்தம்? என்னே பொருத்தம்?! :-)

    செங்கடம்பு படமும் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்த இடுகையில் இடுகிறேன் இரவிசங்கர்.

    இந்தப் பாடல்கள் எல்லாம் நம் எல்லோருக்கும் பிடிக்கும் இரவி. இராகவன் அந்தப் பாடலை சில முறை எடுத்துக் காட்டியிருக்கிறார். அதனால் அப்படி கூறினேன். கடைசிப் பாட்டினை ஏன் எனக்குப் பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியும் தானே?! :-)

    ReplyDelete
  5. குமரன்,
    படங்களும் பதிவும் மிகவும் அருமை.
    மிக்க நன்றி.
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. அடுத்த இடுகையும் இட்டுவிட்டேன் வெற்றி. பாருங்கள்.

    ReplyDelete
  7. கடம்பும் கண் முன் காட்டிய குமரனுக்கு நன்றி. கண்டேன் கண்டேன் கடம்பைக் கண்டேன். கந்தனைக் கண்டதைப் போலக் கொண்டேன். நன்றி. நன்றி.

    :) இதென்ன எனக்குப் பிடித்த பாடல்களாக அடுக்கியிருக்கின்றீர்கள். எல்லாப் பாட்டுகளுமே இனியது கேட்கினில் வந்ததுதான். ஆனால் கடம்புக்கு என்று தொகுத்ததில்லை. நல்லதொரு தொகுப்பு.

    ReplyDelete
  8. ஆமாம் இராகவன். எல்லா பாடல்களும் நீங்கள் ஏற்கனவே விளக்கம் கூறியவை தான். முதலில் சுட்டிகளை மட்டும் கொடுத்துவிடலாமா என்று நினைத்தேன். அப்புறம் தொகுப்பாக இப்படி எழுதினால் தான் நன்றாக இருக்கும் என்று எழுதியிருக்கிறேன். அடுத்த இடுகையில் அபிராமி அந்தாதிப் பாடல்களை இட்டிருக்கிறேன். அவை 'அபிராமி அந்தாதி' பதிவில் இருக்கின்றன என்று சொல்லி விட்டிருக்கலாம். அங்கும் தொகுப்பாய் கொடுத்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. ஆகா, இப்போதுதான் படிக்கமுடிந்தது...எல்லாவற்றையும் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்....

    இந்த மலர்தான் கடம்பா?....எங்கள் அலுவலக வாயிலில் இந்த மரம் இருக்கிறது, மலர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.....நன்றி...

    இனி தினம் 2 மலர்களை கொய்ந்து சென்றென்னப்பனுக்கு அர்பணிக்கிறேன்.

    ReplyDelete
  11. மௌலி ஐயா, பெங்களூருவில் இந்த மரம் இருக்கிறது என்றா சொல்கிறீர்கள்?! மலரைப்பறித்து மணம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். கட்டாயம் கந்தக் கடம்பனுக்குச் சாத்துங்கள். கடம்பை அம்பிகைக்கும் சாத்தலாம்.

    ReplyDelete
  12. 13ஐத் தாண்டுவோம். இன்று 13ம் வெள்ளியும் சேர்ந்து வருவதால் தீங்காமே?! பேசிக்கொள்கிறார்கள்.

    ReplyDelete
  13. குமரன், ஆம்! இந்த மலர் பெங்களூரில் இருக்கிறது...எனது அலுவலக வாசலில் இருக்கிறது....இதன் அரும்பை நான் பறித்து முகர்ந்து பார்த்து, காயா என்று வியந்து மலரை தேடியதும் உண்டு.......இவையெல்லாம் கடந்த மாதத்தில் நடந்தது....தங்கள் பதிவினை பார்த்ததும் தான் தெரிந்தது இது கடம்பென்று......கைக்கெட்டும் தூரத்தில் சில அரும்புகள் இருக்கின்றன...தற்போது அவற்றை தினமும் பார்க்கிறேன், மலரட்டும் உங்களுக்கும் போட்டோ எடுத்து அனுப்புகிறேன்......

    நம்ம ஊரில் (கடம்பவனம்) ஒரு மரம் கூட பார்த்ததில்லை..... :-)

    ReplyDelete
  14. "சேந்தனைக் கந்தனை" இந்தப் பெயரை எங்கோ கேட்டது போல் இருக்கிறது குமரன்.
    வாழ்க கடம்பன்,கடம்ப மரம்.

    ReplyDelete
  15. ஆமாம் மௌலி ஐயா. நானும் நம் ஊரில் கடம்ப மரத்தைப் பார்த்தில்லை. அம்மன் கோவிலில் இருக்கும் தல மரத்திற்கும் கிளைகளோ இலைகளோ இல்லை. பட்ட மரமாகத் தான் இருக்கிறது.

    ReplyDelete
  16. நன்றி தி.ரா.ச. சேந்தன் தான் இப்போது மிகவும் பிரபலமான பெயராயிற்றே. :-) எல்லாம் கல்கி ஆசிரியரின் திருவருள். சேந்தன் அமுதனை அழியாக்காவியப் பெயராக்கிவிட்டார். :-)

    ReplyDelete