Tuesday, March 27, 2007
திவ்ய பிரபந்த பாசுர இராமாயணம்
இராமாயணக் கதை பல இந்திய மொழிகளில் பாடப்பட்டிருக்கிறது. ஆதி காவியம் என்ற வால்மீகி இராமாயணம், அதற்கு முன்னர் இருந்த பல இராமாயணங்கள், தமிழில் கம்பரின் இராமாவதாரம், இந்தியில் துளசிதாசரின் இராமசரிதமானஸ் என்று பல மொழிகளிலும் பிரபலமான இராமாயணங்கள் இருக்கின்றன. சங்க காலத்திலும் இராமாயணக் காவியங்கள் இருந்துள்ளதாக பலத் தனிப்பாடல்கள் மூலம் எடுத்துக் காட்டும் கட்டுரை ஒன்றை மதுரை திட்டத்தின் வலைப்பக்கத்தில் படித்திருக்கிறேன்.
ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் என்னும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திலிருந்து பாசுர வரிகளைக் கொண்டு வியாக்கியான சக்ரவர்த்தி என்று பெயர் பெற்ற பெரியவாச்சான் பிள்ளை என்ற வைணவ ஆசார்யர் தொகுத்த இராமாயணம் ஒன்று இருக்கிறது. அது பாசுரப்படி இராமாயணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இராமாயணத்தைப் பாடினால் ஆழ்வார்களின் பாசுரங்களைப் படித்த பயனும் இராமாயணம் பாடிய பயனும் ஒருங்கே கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த இனிய இராமாயணத்தை இங்கே இராமநவமி புண்ணிய தினமான இன்று இடுவதற்கு எம்பெருமானின் திருவருள் அமைந்தது என் பாக்கியம்.
***
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு
ஏழுலகம் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பன்
அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
ஆவார் யார் துணையென்று துளங்கும்
நல்ல அமரர் துயர் தீர
வல்லரக்கர் இலங்கை பாழ்படுக்க எண்ணி
மண்ணுலகத்தோர் உய்ய
அயோத்தி என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்
கௌசலை தன் குல மதலையாய்
தயரதன் தன் மகனாய்த் தோன்றி
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி
வல்லரக்கர் உயிருண்டு கல்லைப் பெண்ணாக்கி
காரார் திண் சிலை இறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து
இருபத்தொருகால் அரசு களைகட்ட
மழு வாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று
அம்பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க
கொங்கை வன் கூனி சொற்கொண்ட
கொடிய கைகேயி வரம் வேண்ட
அக்கடிய சொற்கேட்டு
மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இந்நிலத்தை வேண்டாது
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிந்து
மைவாய களிறொழிந்து மாவொழிந்து தேரொழிந்து
கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து
அங்கங்கள் அழகு மாறி
மானமரு மென்னோக்கி வைதேவி இன் துணையா
இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்ல
கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் கடந்து போய்
பத்தியுடை குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து
வனம் போய் புக்குக் காயொடு நீடு கனியுண்டு
வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயின்று
சித்திரகூடத்திருப்ப தயரதன் தான்
நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள்வானில் போக்க
என் பெற்றாய் கைகேசீ
நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன்
என்று வான் ஏற
தேனமரும் பொழில் சாரல் சித்திரகூடத்து
ஆனை புரவி தேரொடு காலாள்
அணி கொண்ட சேனை சுமந்திரன்
வசிட்டருடன் பரதநம்பி பணிய
தம்பிக்கு மரவடியை வான் பணயம் வைத்துக் குவலய
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்து
திருவுடைய திசைக்கருமம் திருத்தப் போய்
தண்டகாரணியம் புகுந்து
மறை முனிவர்க்கு
அஞ்சேல்மின் என்று விடை கொடுத்து
வெங்கண் விறல் விராதனுக வில் குனித்து
வண்டமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி
புலர்ந்து எழுந்த காமத்தால் சீதைக்கு நேராவள்
என்னப் பொன்னிறம் கொண்ட
சுடு சினத்த சூர்ப்பனகாவை
கொடி மூக்கும் காதிரண்டும்
கூரார்ந்த வாளால் ஈரா விடுத்து
கரனொடு தூடணன் தன்னுயிரை வாங்க
அவள் கதறித் தலையில் அங்கை வைத்து
மலை இலங்கை ஓடிப் புக
கொடுமையில் கடுவிசை அரக்கன்
அலை மலி வேற் கண்ணாளை அகல்விப்பான்
ஓர் உருவாய் மானை அமைத்துச் சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக் குரம்பில் தனி இருப்பில்
கனி வாய்த் திருவினைப் பிரித்து
நீள் கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடு போய்
வம்புலாங் கடிகாவில் சிறையாய் வைக்க
அயோத்தியர் கோன் மாயமான் மாயச் செற்று
அலைமலி வேற்கண்ணாளை அகன்று தளர்வெய்தி
சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
கங்குலும் பகலும் கண் துயிலின்றி
கானகம் படி உலாவி உலாவி
கணை ஒன்றினால் கவந்தனை மடித்து
சவரி தந்த கனி உவந்து
வனம் மருவு கவியரசன் தன்னோடு காதல் கொண்டு
மரா மரம் ஏழு எய்து
உருத்து எழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஓட்டி
கருத்துடைத் தம்பிக்கு
இன்பக் கதிர் முடி அரசளித்து
வானரக் கோனுடன் இருந்து வைதேகி தனைத் தேட
விடுத்த திசைக் கருமம் திருத்து
திறல் விளங்கு மாருதியும்
மாயோன் தூது உரைத்தல் செப்ப
சீர் ஆரும் அநுமன் மாக்கடலைக் கடந்தேறி
மும்மதிள் நீள் இலங்கை புக்குக் கடிகாவில்
வாராரு முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு
நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்
அயோத்தி தன்னில் ஓர்
இடவகையில் எல்லியம் போதின் இருத்தல்
மல்லிகை மாமலை கொண்டு அங்கார்த்ததும்
கலக்கிய மா மனத்தளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்
கங்கை தன்னில்
கூரணிந்த வேல் வலவன் குகனோடு
சீரணிந்த தோழமை கொண்டதுவும்
சித்திரக் கூடத்திருப்ப பரத நம்பி பணிந்ததுவும்
சிறுகாக்கை முலை தீண்ட மூவுலகும் திரிந்து ஓடி
வித்தகனே ராமா ஓ நின்னபயம் என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்
பொன்னொத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்
ஈது அவன் கை மோதிரமே என்று
அடையாளம் தெரிந்து உரைக்க
மலர்குழலாள் சீதையும்
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர் கோன் மாக்கடிகாவை இறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன் சினம் அழித்து மீண்டு அன்பினால்
அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடியிணை பணிய
கான எண்கும் குரங்கும் முசுவும்
படையாக் கொடியோன் இலங்கை புகல் உற்று
அலையார் கடற்கரை வீற்று இருந்து
செல்வ விபீடணற்கு நல்லானாய்
விரிநீர் இலங்கை அருளி
சரண் புக்க குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து
கொல்லை விலங்கு பணி செய்ய
மலையால் அணை கட்டி மறுகரை ஏறி
இலங்கை பொடி பொடியாக
சிலை மலி வெஞ்சரங்கள் செல உய்த்து
கும்பனொடு நிகும்பனும் பட
இந்திரசித்து அழியக் கும்பகர்ணன் பட
அரக்கர் ஆவி மாள அரக்கர்
கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட
இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள் இருபதும் போய் உதிர
சிலை வளைத்துச் சரமழை பொழிந்து
மணி முடி பணி தர அடியிணை வணங்க
கோலத் திருமாமகளோடு
செல்வ வீடணன் வானரக் கோனுடன்
இலகுமணி நெடுந்தேரேறி
சீர் அணிந்த குகனோடு கூடி
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி எய்தி
நன்னீராடி
பொங்கிளவாடை அரையில் சாத்தி
திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும்
முதலா மேதகு பல்கலன் அணிந்து
சூட்டு நன்மாலைகள் அணிந்து
பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமணனும் இரவு நன்பகலும் ஆட்செய்ய
வடிவிணை இல்லாச் சங்கு தங்கு முன்கை நங்கை
மலர்க்குழலாள் சீதையும் தானும்
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்
தனிக்கோல் செல்ல வாழ்வித்து அருளினார்
- பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் -
***
எம்பெருமான் திருவுளம் இருந்தால் இந்தப் பாசுரப்படி இராமாயணத்துக்கு விளக்கத்தை வருங்காலத்தில் எழுதுகிறேன். ஏதேனும் சொற்களுக்கு ஆங்காங்கே பொருள் புரியவில்லை என்றால் கேளுங்கள்.
உங்கள் விரிவான விளக்கத்திற்கு காத்திருப்பேன். இராம நவமி அன்று பொருத்தமான பதிவுதான்.
ReplyDeleteராம் ராம்.
அண்ணா,
ReplyDeleteமிக்க அருமையான பாடல். இவ்வளவு நீளமாக இருக்கிறதே என்று முதலில்நினைத்தேன், ஆனால் படிக்க ஆரம்பித்த உடனே ஒரு கோர்வையாக எளிய நடையில் அமைய, 15-நிமிடத்தில் படித்து முடித்து விட்டேன். உங்களுக்கு மட்டும் எப்படி தான் இது போன்ற பாடல்கள் கிடைக்கின்றதோ :). பல இடங்களில் இராமாயண காட்சி கண்முன்னே வந்தது. மிக்க நன்றி.
இப்பாடலில் அக்னிப்ரவேசம் இல்லை என்பது மிகச்சிறப்பு, இதே போல் சௌராஷ்ட்ர மொழியில் "சௌராஷ்ட்ர கம்பர்" தாடா. சுப்ரமண்யம் அவர்கள் எழுதிய ’சௌராஷ்ட்ர ராமாயணு’-விலும் இது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ungaLukku 'Sourashtra Ramayanam' paTriyum terindirukkum enRu ninaikkirEn.
ReplyDeleteK.V.Pathy.
அன்புக் குமரா!
ReplyDeleteஇப்படியும் ஒரு இராமாயணமிருகென இதுவரை அறியேன். மேலோட்டமாகப் படித்தேன். தெரிந்த விடயமென்பதால் பொருள் புரிகிறது.மீண்டும் படித்து, பொருள் தெரியாச் சொற்களுக்கு வினாவுவேன்.
இராம ஜெயம்!
கொத்ஸ். கதை தெரிந்த கதை என்பதால் விளக்கம் இல்லாமலேயே பெரும்பாலும் புரிந்துவிடும். விளக்கத்தை எதிர்பார்க்காமல் ஒரு முறை படித்துப் பாருங்கள். உங்களுக்கு கட்டாயம் புரியும்.
ReplyDeleteஆமாம் சிவமுருகன். நீளமாகத் தோன்றினாலும் படித்தால் மிக எளிதாகப் புரியும். அக்கினிபிரவேசம் பற்றி ஆழ்வார்கள் எதுவும் சொல்லவில்லையோ என்னவோ? அதனால் தான் அது இந்த இராமாயணத்தில் இல்லை. தாடா. சுப்ரமணியம் எழுதிய 'சௌராஷ்ட்ர ராமாயணு' பற்றி தெரியும். ஆனால் இதுவரை படித்ததில்லை. உங்களிடம் புத்தகம் இருக்கிறதா? எங்கே கிடைக்கும்?
ReplyDeleteஆமாம் பதி ஐயா. சௌராஷ்ட்ர இராமாயணம் பற்றியும் தெரியும். சிவமுருகனும் அதனைப் பற்றி சொல்லியிருக்கிறார்.
ReplyDeleteமீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள் யோகன் ஐயா. முடிந்த வரை சீர்களைச் சொற்களாகப் பிரித்து இட்டிருக்கிறேன். அதனால் எளிதாகப் புரியவேண்டும்.
ReplyDeleteகுமரன்,
ReplyDeleteநன்றி. வாசித்து மகிழ்ந்தேன். ராமநவமி அன்று இப்பதிவிட வேண்டும் என்று தங்களைப் போன்றவர்களுக்கு (மட்டுமே) தோன்றுவதில் ஆச்சரியமில்லை:)
எ.அ.பாலா
நான் அடிக்கடி படிக்கும் லிஃப்கோ பதிப்பகத்தாரின் வெளியீடு இது.
ReplyDeleteஅற்புதமான கோர்வை!
ராம நவமி நன்நாளில் இதனை அளித்தமைக்கு நன்றி, குமரன்!
இராமநவமி அன்று ரமாயணம் படிக்கக் கொடுத்தீர்கள்.
ReplyDeleteஸ்ரீராமன் ஜனனம் புத்தகம் கொண்டுவராததற்கு வருத்தப் பட்டேன். நீங்கள் முழுராமாயணத்தையே கொடுத்துவிட்டீர்கள்.
இதே போல அருணாசலக் கவிராயரின் இராமநாடகம் இணையத்தில் படிக்கக் கிடைக்குமா?
நன்றிகள் பல குமரன்...பல வருடங்களுக்கு முன் முதன் முறை இதை மும்பையில் திருப்பாவை உபன்யாசத்தின் போது திரு.கள்யாணராமன் அவர்கள் ஒரே மூச்சில் சொல்லக் கேட்டு அசந்து போனேன்...அதன் பிறகு இதை சிறு புத்தகமாக வைத்திருந்து தொலைத்து தேடித் தேடி கிடைக்காது அலுத்தேன்
ReplyDeleteராமநவமியன்று இது எனக்கு திரும்ப படிக்கக் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது
அன்புடன்...ச.சங்கர்
//கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்
ReplyDeleteதனிக்கோல் செல்ல வாழ்வித்து அருளினார்//
ஆகா...மாரி மலை முழைஞ்சில் எனத் தொடங்கும் ஆண்டாள் திருப்பாவைப் பாசுரத்தை வைத்து, "சீரிய சிங்காதனத்திருந்து" என்று முடிக்கிறார் பெரியவாச்சான் பிள்ளை.
குமரன்
நல்ல நாளில் நல்ல பணி.
பாசுர வரிகளால் ஆன இராமாயணம் என்பது, எவ்வளவு சிறப்பு!
VSK சொன்னது போல் லிப்கோ நூலில் படித்தது.
முழுக்கப் படிக்க எனக்கு நேரமாகியது. படிக்கும் போது அப்படியே பாசுரக் காட்சிகளும் ஓடுகின்றன...பின்னாளில் நீங்கள் விளக்கம் அளிக்கும் போது, பாசுரக் குறிப்புடன் சேர்த்தே விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பாலா. தங்களுக்கு மட்டும் என்று சொல்லாமல் தங்களைப் போன்றவர்களுக்கு மட்டும் என்றீர்களே. அது வரை சரி. :-) வல்லியம்மா, இரவிசங்கர் கண்ணபிரான், இராமநாதன் என்று பலரும் இராமநவமி பதிவுகள் இட்டிருக்கிறார்கள்.
ReplyDeleteஆமாம் எஸ்.கே. நானும் இந்த பாசுரப்படி இராமாயணத்தை முதன் முதலில் படித்தது லிஃப்கோவின் 'ஸ்தோத்ரமாலா' புத்தகத்தில் தான். அதனையும் பார்த்துத் தான் இந்த இடுகையை இட்டேன்.
ReplyDeleteவல்லியம்மா. இராமனின் படங்கள் வேண்டும் என்றதும் உங்கள் பதிவிற்குத் தான் வந்தேன். இந்த இடுகையில் இருக்கும் இரண்டு படங்களையும் உங்கள் பதிவில் இருந்து தான் எடுத்து இட்டேன். நன்றி.
ReplyDeleteஅருணாசலக்கவிராயரின் பாடல்கள் சில மியூசின் இண்டியா ஆன்லைனில் பார்த்திருக்கிறேன். பாடல்வரிகள் மதுரைத் திட்டத்தில் இருக்க வாய்ப்புண்டு. தேடிப் பார்க்கிறேன்.
நீங்கள் தேடி அலுத்த இந்த பாசுரப்படி இராமாயணம் மீண்டும் உங்களுக்குக் கிடைத்ததை அறிந்து மகிழ்ந்தேன் சங்கர். எம்பெருமான் திருவருள்.
ReplyDeleteநன்றி. குமரன்.புலவர் கீரன் அவர்கள் இதை ராகத்தோடு மிக அருமையாக மனனம் செய்து தன்னுடைய கதை சொற்பொழிவின் போது கூறுவார்.அந்த தாக்கத்தில் நானும் படித்து வந்தேன்.
ReplyDeleteஅருமை, அருமை.
ReplyDeleteநீங்கள் கொடுத்திருக்கும் மதுரைப் பக்கத்தின் சுட்டியினை அனைவரும் படிக்க வேண்டும்.
அருணாசல கவி ராயரின் பாடலை இங்கே கேளுங்கள். இதே பாடலை மஹாராஜபுரம் சந்தானம் குரலில் கேட்பது பேரானந்தமாக இருக்கும்.
ஆமாம் இரவிசங்கர். மாரி மலை முழைஞ்சில் பாசுரத்தில் இருந்து தான் இந்த அடிகளை எடுத்து இட்டிருக்கிறார். எனக்கு எல்லா ஆழ்வார்களின் பாசுரங்களிலும் பயிற்சி என்று இல்லை. அதனால் நான் எழுதினால் பொருள் விளக்கம் மட்டுமே தருகிறேன். நீங்கள் பாசுரக் குறிப்புகளுடன் விளக்கம் தரலாம். இது ஏற்கனவே 'புதிய பதிவுகள்' பட்டியலில் இருக்கிறது. நேரம் வரும் போது நீங்களோ நானோ இல்லை வேறு ஒருவரோ எழுதலாம்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி தி.ரா.ச.
ReplyDeleteவெகு நாட்களுக்குப் பின் இராமாயணம் தங்களை அடியேன் பதிவிற்கு அழைத்து வந்தது போலும். மிக்க மகிழ்ச்சி.
மிக்க நன்றி ஓகை ஐயா. பாடலின் சுட்டிக்கும் நன்றி.
ReplyDeleteசென்ற ஞாயிறு கோயிலில் ஒரு பிரசங்கம். அதில் அவர் கூறியது, வால்மீகி ராமாயணத்திலும் அக்னிப் பிரவேசம் பற்றி இல்லவே இல்லை என்று. எனக்கு இதற்கு மேல் விபரம் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லலாம்.
ReplyDeleteகொத்ஸ். நீங்கள் பிரசங்கத்தில் கேட்டது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. வால்மீகி இராமாயண ஸ்லோகங்கள் சில அக்கினி பிரவேசத்தைப் பற்றி எப்போதோ படித்ததாக நினைவு.
ReplyDeleteகொத்ஸ்
ReplyDeleteபாசுரப்படி ராமாயணத்தில் தான் அக்னிப் பிரவேசம் வெளிப்படையாகக் காட்டப்படவில்லை.
என்றாலும் மூல நூலில் வால்மீகி இது பற்றிச் சொல்லியுள்ளார்.
யுத்த காண்டம் சர்க்கம் 117-120 வரை
அக்னிப் பி்ரவேசச் செய்திகள் தான்.
தயரதன் வந்து இராமனை இடித்துரைத்து, அன்னை சீதையை ஏற்கச் சொல்லும் காட்சிகள் எல்லாம் மூல நூலில் அப்படியே உள்ளன.
ராஜாஜி எழுதிய வியாசர் விருந்தில், தான் வால்மீகி கதையை அப்படியே தருவதாக எழுதியுள்ளார். அவர் புத்தகத்திலும் அக்னிப் பிரவேசத்தைப் பற்றிச் சற்றுக் கோபமாகவே எழுதுவார்.
குமரன்,
ReplyDeleteநான் இதுவரையில் அறியாதவைகளில் இதுவும் ஒன்று. அருமையாக, இலகுவாக இருக்கிறது......நன்றி.
ஆமாம் இரவிசங்கர். நானும் அந்த சுலோகங்களை நினைத்துக் கொண்டு தான் சொன்னேன்.
ReplyDeleteஅது சரி. இராஜாஜி எழுதிய வியாசர் விருந்தா சக்ரவர்த்தித் திருமகனா எதில் வால்மீகியின் கதையை அப்படியே தந்திருக்கிறார்? என்ன குழப்பம் திடீரென்று? :-)
மிக்க மகிழ்ச்சி மௌலி ஐயா. ஏற்கனவே அறிந்தவர்கள் ஆகா மீண்டும் கிடைத்தது என்பதும் இப்போது தான் அறிந்தேன் என்று சிலர் சொல்வதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த நோக்கத்தில் தான் முழுவதையும் கொடுத்தேன் - விளக்கம் பின்னர் எழுதிக் கொள்ளலாம் என்று.
ReplyDeleteகுமரன், பரம காருணீகரான பெரியவாச்சான் பிள்ளையுடைய அற்புதமான தொகுப்பு இது. இணையத்தில் பதிப்பித்ததற்கு மிக்க நன்றி. மதுரை திட்டத்தினருக்கு எழுதி, இதையும் அந்தத் தொகுப்பில் இணையுங்கள்.
ReplyDeleteகுலசேகராழ்வார் "அங்கண் நெடுமதிள் புடைசூழ் அயோத்தியென்னும்" என்று தொடங்கி பத்து பாசுரங்களில் ராமகாதை முழுவதையும் சொல்கிறார். தில்லை நகர் திருச்சித்திர கூடத்தில் பாடியது இது. ஒரே சந்தத்தில் அமைந்ததால் இந்தப் பத்து பாடுவதற்கும் மிக நன்றாக இருக்கும்.
இறுதியில் லவகுசர்கள் ராமாயணம் பாடியதையும் அழகாகக் குறிப்பிடுவார் -
தன்பெருந்தொல் கதைகேட்க மிதிலைச் செல்வி
உலகுய்யத் திருவயிறூ வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள்வாய்த்தன் தன் சரிதம் கேட்டான்
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்னால்
கருகுவோம் இன்னமுதை மதியாமின்றே!
அக்னிப் பிரவேசம் கம்பராமாயணத்தில் மீட்சிப் படலத்தில் மிக விஸ்தாரமாக உள்ளது. வால்மீகியிலும் அப்படியே. அது ராமாயணத்தில் இன்றிமையாத பகுதி. சில தொகுப்புகளில் விடுபட்டதால் இல்லை என்று ஆகிவிடாது. இது பற்றி செல்வன் "கனலை எரித்த கற்பின் கனலி" என்று முன்பு தமிழோவியத்தில் மிக அழகான தொடர் ஒன்று எழுதினார். படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
//அது சரி. இராஜாஜி எழுதிய வியாசர் விருந்தா சக்ரவர்த்தித் திருமகனா எதில் வால்மீகியின் கதையை அப்படியே தந்திருக்கிறார்? என்ன குழப்பம் திடீரென்று? :-) //
ReplyDeleteஹிஹி...
சக்ரவர்த்தித் திருமகன் தான்.
உங்களுக்குப் பின்னூட்டம் இடுவதற்குச் சற்று முன்பு வியாசர் விருந்து discussion.
பீஷ்மர் பற்றிய ஒரு ம்கா விவாதம் வெட்டிப்பையலாருடன். அந்தச் சூடில் வந்த பின்னூட்டம். பொறுத்து அருளுங்கள் :-)))