Tuesday, October 31, 2006

சொல்வது ஒன்று புரிவது ஒன்று

அடிப்படையில் மனம் ஒரு ஊகிக்கும் இயந்திரம். புரியாததை ஏற்கனவே தெரிந்ததை வைத்து இட்டு நிரப்புவதை தனது வேலையாக மனம் நினைக்கிறது. அதனால் ஏற்படும் விளைவு 'துணிபுகள்'. இந்தத் துணிபுகள் முக்காலங்களையும் சேர்ந்த பல காரணிகளால் ஆனது - நினைவுகள், நம்பிக்கைகள், தற்போதைய பார்வைகள்/கண்ணோட்டங்கள், எதிர்பார்ப்புகள், உணர்வுகள், சூழ்நிலைகள், ஆசாபாசங்கள், நோக்கங்கள். ஒருவர் சொல்வதைப் புரிந்து கொள்வது என்பது கடினமான வேலை என்று தோன்றுகிறதா? எளிதில் தவறு செய்யக் கூடிய ஒன்று தோன்றுகிறதா? உண்மை.

- அண்மையில் கலந்து கொண்ட 'The Art of Listening' பயிற்சி வகுப்பிலிருந்து.

துணிபுகள் - Assumptions
காரணிகள் - Factors

19 comments:

  1. //"சொல்வது ஒன்று புரிவது ஒன்று" //

    "ஐ லவ் யூ !"

    சொல்லிப் பாருங்க குமரன் !
    நன்றாக புரியும் !

    :)

    ReplyDelete
  2. /துணிபுகள் - Assumptions
    காரணிகள் - Factors /
    சொல் ஒரு சொல்லில் போட வேண்டிய பதிவை கூடலில் போடதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  3. இதை எப்படி மனம் என்று மேலைநாட்டார் சொல்வதை நம்பி உருவகப் படுத்துகிறீர்கள், குமரன்?

    இதை எங்கள் நாட்டில், 'கற்பனை' என்றழைப்பார்கள்!

    அதற்கு மனம் ஒத்துழைக்கும்,..வெளி நின்று!

    அவ்வளவே!

    தெரிந்தே!!

    மனம் ஒரு இயந்திரமா?

    இருப்பதைக் கொண்டு நிரப்பி வருகிறதா?

    பெரிதாகக் குழம்பி இருக்கிறீர்கள்!

    இதுவும் ஒரு ஆரம்பமே!

    ரசிக்கலாம்!

    மனதின் வலிமை புரியாதவர்கள் சொன்னதை எல்லாம் அப்படியே நம்ப வேண்டாம்.

    கொஞ்சம் சிந்தியுங்கள்!

    அதற்குத்தான் மனம் இருக்கிறது!

    :))

    ReplyDelete
  4. கோவி.கண்ணன் ஐயா. கலாய்த்தலுக்கு நன்றி. செருப்படி பட்டாலும் எனக்கு நன்கு உறைக்கும் :-) அது தெரிந்ததால் இந்த வயதிற்கு மேல் இன்னொருவரிடம் அந்த 143யைச் சொல்லப்போவதில்லை. தினம் 12 முறை யாரிடம் சொல்கிறேனோ அவரிடம் தொடர்ந்து சொல்லி வருகிறேன். :-)

    ReplyDelete
  5. குறும்பன். ஏன் கவலைப்படறீங்க. சொல் ஒரு சொல்லிலும் போட்டுடலாம்.

    ReplyDelete
  6. நல்ல (சிறு) கட்டுரை குமரன்.

    :)
    நன்றாக இருக்கிறது.

    ஃபிரண்ட்ஸ் படத்தில் ஆணியை பிடுங்கச் சொன்னதும் எல்லோரும் செல்வதும், திரும்பிவருமாறு அழைத்ததும் எல்லோரும் திரும்பி வருவதும் நினைவிற்கு வருகிறது.

    சொல்வது தெளிவாக இருந்தால் புரிவதும் தெளிவாக இருக்கும் அல்லவா?

    ReplyDelete
  7. //"ஐ லவ் யூ !"
    சொல்லிப் பாருங்க குமரன் !
    நன்றாக புரியும் !//


    கோ.வியாரே! குமரன் மேல் உங்களுக்கு ஏன் இந்தக் கொலை வெறி?

    :))))))

    (ஆரம்பிப்போமா?)

    ReplyDelete
  8. //சொல்லிப் பாருங்க குமரன் !//

    என்ன பதில் கிடைக்கும் என்று ஊகித்துப் பார்க்கிறேன்.

    ஐ ஸ்லேப் யூ!
    :)))

    ReplyDelete
  9. எஸ்.கே. நீங்கள் இதனை 'கற்பனை' என்று கூறினாலும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் போது பார்த்தால் மனம் எவ்வளவு தூரம் இந்தக் 'கற்பனை'யில் ஈடுபடுகிறது என்று பார்க்கலாம். உண்மையில் பெரும்பாலான புரிதல்கள் நம் துணிபுகளின் அடிப்படையிலேயே இருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் இடையில் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்களையே பாருங்கள். முதலில் நீங்களும் என் வயதை ஒத்தவர் என்ற துணிபு ( ) என்னிடம் இருந்தது. பின்னர் ஒரு முறை ஏதோ ஒன்றை நீங்கள் உங்கள் பதிவிலோ பின்னூட்டத்திலோ சொல்லப் போக நீங்கள் என்னை விட வயதில் மூத்தவர் என்று தெரிந்தது. உடனே நான் உங்களை விளிக்கும் போது ஐயா போட்டேன். அப்போதும் நீங்கள் என்னை விட சிறிதே வயதில் மூத்தவராய் இருப்பீர்கள் என்ற துணிபு / புரிதல் இருந்தது. அதற்கு நீங்கள் என்னிடம் 'ஐயா' என விளிக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டதும் ஒரு காரணமாய் இருக்கலாம். அண்மையில் ஒரு நண்பரின் மூலம் அறிந்தவை நான் நினைப்பவை மீண்டும் தவறாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. நீங்கள் இன்னும் பெரியவர்; உங்களுக்குத் தகுந்த மரியாதையை இது வரை நான் கொடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால் அவையும் என் மனம் இட்டு நிரப்பிய 'கற்பனை'களால் தோன்றும் உணர்வாக இருக்கலாம்.

    இதற்கு எதிர்ப்பதமாக உங்களை ஒருவர் 'ஒரு பக்கம் திருப்புகழ்; ஒரு பக்கம் விஷம்' என்றார். அந்த வார்த்தையும் அவரின் மனம் உங்களைப் பற்றி அறிந்ததை வைத்து அறியாததைப் பற்றி இட்டு நிரப்பிக் கொண்ட துணிபுகள்/புரிதல்கள் அடிப்படையிலேயே அமைந்தது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

    மனம் என்ற ஒன்று உருவகமா இல்லை உண்மையில் இருப்பதா என்பது விஞ்ஞான முறைப்படி இன்னும் தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால் எல்லோரும் அதன் செயல்பாட்டை அறிவோம். அதனால் இருக்கிறது என்று உணர்வோம். 'கற்பனை'யும் மனத்தின் செயல்பாடு தானே. அதனால் மேல்நாட்டார் சொன்னதில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. என் அனுபவத்தில் அது மாபெரும் உண்மை.

    மனதில் வலிமையே 'சிந்திப்பதன்' மூலம் தெரியாததை 'கற்பனை'யின் மூலம் இட்டு நிரப்புவதே. அது சில நேரங்களில் சரியாக அமைந்துவிடுகிறது. பல நேரங்களில் தவறான புரிதல்களையே தருகிறது. அனுபவங்களும் அதற்கு ஒரு முக்கிய காரணம். காரணிகளில் அதனையும் சொல்லியிருக்கிறார்கள்.

    மனதின் வலிமை புரியாதவர்கள் சொல்லவில்லை இதனை.

    'கற்பனை' என்று தெரிந்தே செய்யும் போது மனம் வெளி நின்று ஒத்துழைக்கும். ஆனால் ஒவ்வொரு விநாடியும் தெரியாமலேயே மனம் 'கற்பனை' செய்கிறதே?! இதற்கு நீங்கள் வேறு பெயர் வைத்திருக்கலாம். அதுவும் ஒரு காரணியாக இந்த மேலை நாட்டார் சொல்லியிருக்கிறார்கள். :-)

    ReplyDelete
  10. துணிபு/கருத்து/முடிவு
    எல்லாமே மாறுவதுதானே.
    கேட்பதும் ஒன்றாயிருந்து, புரிதல்
    வேறு மாதிரி இருக்க ஹேது உண்டே.

    கேட்பதும் புரிதலும் ஒன்றாயிருந்தாலும்
    மறுபடி யோசிக்கும் போது
    மாற வாய்ப்பு உண்டு.

    ReplyDelete
  11. //குமரன் (Kumaran) said...
    கோவி.கண்ணன் ஐயா. கலாய்த்தலுக்கு நன்றி. செருப்படி பட்டாலும் எனக்கு நன்கு உறைக்கும் :-) அது தெரிந்ததால் இந்த வயதிற்கு மேல் இன்னொருவரிடம் அந்த 143யைச் சொல்லப்போவதில்லை. தினம் 12 முறை யாரிடம் சொல்கிறேனோ அவரிடம் தொடர்ந்து சொல்லி வருகிறேன். :-)
    //

    குமரன் !

    ஆகா...! நானும் சொல்ல வேண்டியவரிடம் தான் சொல்லச் சொன்னேன் ! உங்களுடைய அவருக்கு புரியும்.

    12 முறை என்ன 108 முறை கூட சொல்லலாம் !
    :)

    ReplyDelete
  12. சிபி. சொல்வது எவ்வளவு தெளிவாக இருந்தாலும் புரிந்து கொள்பவர்களின் நிலையும் மேலே சொன்ன காரணிகளும் பெரும் பங்காற்றுகின்றன. யாராவது உ.கு.வைத்து எழுதினால் சில நேரம் எனக்குப் புரிகிறது. பல நேரங்களில் புரிவதே இல்லை. :-)

    ReplyDelete
  13. உண்மைதான் குமரன். ஒன்று சொல்லப்படுகிறதென்னால்...அதைச் சொல்கிறவர்...அவரது பின்புலன்கள்...சொல்கின்ற பொழுது நமது மனநிலை...இன்னும் நிறைய காரணிகள் புரிதலைக் கட்டுப்படுத்துகின்றன. இதில் ஐயமில்லை.

    அது சரி. சொல்லொரு சொல்லில் போட வேண்டிய பதிவு இது. பாருங்க...கீழ ரெண்டு ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழாக்கம் கொடுத்திருக்கீங்க.

    ReplyDelete
  14. குமரன் சார்

    நல்ல பதிவுங்க..

    உங்கள் விளக்கம் அருமை..

    நன்றி

    ReplyDelete
  15. சிபி. அந்த ஆணியைப் பிடுங்க சொல்லும் காட்சியை மறந்துவிட்டேனே. கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  16. உண்மை அம்மா. மாற்றம் ஏற்படும் வழிகளின் பல அடுக்குகளைச் சொல்லியிருக்கிறீர்கள். ஆமாம். கருத்துகள் முடிவுகள் மாற்ரம் அடைந்து கொண்டே தான் இருக்கின்றன. ஒன்றையே எல்லாரும் கேட்டாலும் புரிதல் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்க கட்டாயம் வழிகள் உண்டு. கேட்டதும் புரிந்து கொண்டதும் சரியாக இருந்தாலும் பின்னர் சிந்திக்கும் போது அந்த புரிதல் மாற்றம் அடைவதும் உண்டு. தங்கள் குறுகத் தரித்தக் குறளைப் போன்ற பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  17. கோவி.கண்ணன் ஐயா. 12 தடவை சொல்றதே அவங்களுக்கு போரடிக்குது. 108 தடவை சொன்னா அம்புட்டுத் தான். வீட்டை விட்டு விரட்டி விட்றுவாங்க. :-)

    ReplyDelete
  18. இராகவன். நீங்கள் சொன்னது போல் சொல்கிறவரின் காரணிகளும் இருக்கின்றன. ஆனால் அந்தக் காரணிகளை பெரும்பாலும் எல்லோரும் உணர்ந்தே இருக்கிறோம். ஆனால் புரிந்து கொள்பவரின் காரணிகளைப் பற்றி அப்படிப்பட்ட அறிவுணர்ச்சி இல்லை என்றே எண்ணுகிறேன்.

    சொல்லொரு சொல்லிலும் இவ்விரண்டு சொற்களையும் இடலாமே. நீங்கள் செய்கிறீர்களா? நான் தான் சொல் ஒரு சொல்லைக் கவனிக்கவில்லையென்றால் நீங்களும் அந்த வலைப்பூவை அம்போ என்று விட்டுவிட்டீர்களே? :-)

    ReplyDelete
  19. ஆகா. வழக்கமான 'நல்ல பதிவுங்க' வார்த்தையோட இன்னொரு வாரத்தையையும் எழுதிட்டீங்களே சிவபாலன். அதுக்குத் தான் நம்ம ஊருல கொட்டோ கொட்டுன்னு கொட்டுது போங்க. :-)

    ReplyDelete