Monday, October 16, 2006

செருப்புக் கடவுளின் மேல் ஆயிரம் பாடல்கள்

இது ஒரு Impulse பதிவு என்று நீங்கள் நினைக்கலாம். நண்பர் சிவபாலனின் நாத்திகப் பதிவிற்கான எதிர்ப்பதிவு என்றும் நீங்கள் நினைக்கலாம். (அது ஆத்திகம் என்று சொன்னால் நண்பர் கோவித்துக் கொள்வார். அதனால் தெளிவாகச் சொல்லிவிட்டேன் அது நாத்திகப் பதிவு என்று). ஆனால் அவர் 'அட இது கூட கடவுள் தான்' என்று காலணியைக் காட்டியிருந்தார். அதனைக் கண்டவுடன் தோன்றியதே இப்பதிவு. அதனை அங்கேயே பின்னூட்டமாக இட்டிருக்கலாமே என்று கேட்கிறீர்களா? எதற்கு வம்பு? நம் பதிவில் இட்டாலாவது அது நம் கருத்து என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது. மற்றவர் பதிவில் நம் கருத்தைச் சொல்லி அவர்கள் அதனை அவர்களின் பதிவினைக் கடத்துவதாக எண்ணிக் கொண்டால்?

இந்தப் பதிவினால் யாருடைய மனமாவது புண்பட்டால் மன்னித்துக் கொள்ளுங்கள். எந்த உ.கு.வும் இந்தப் பதிவில் இல்லை. எல்லாம் நேரடியாகத் தெளிவாகத் தான் சொல்லப் போகிறேன்.

செருப்பைக் கடவுளாகப் பார்த்தார்களா? இப்போதும் அது நடக்கிறதா? செருப்பின் முன்னால் உட்கார்ந்து வணங்குகிறார்களா? இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் ஆம்; ஆம்; ஆமாம்.

ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார்கள் காலணியை ஏத்தி. நண்பர்களே அந்த ஆயிரம் பாடல்களுக்கும் பொருள் உரைக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஏற்கனவே எடுத்துக் கொண்ட பணிகள் முடிந்தவுடன் அதனைத் தொடங்குகிறேன். இப்போதைக்கு 'New Blog ideas' என்ற வலைப்பூவில் இதனைச் சேர்த்துவிடுகிறேன்.

அந்த ஆயிரம் பாடல்கள் உள்ள நூல் எது என்று சொல்லவில்லை பார்த்தீர்களா? ஹிஹி உங்களுக்குத் தெரியாதா என்ன? நீங்களே சொல்லுங்கள். - இது கட்டாயம் இரவிசங்கர் கண்ணபிரானின் 'புதிரா? புனிதமா?' பதிவினைப் பார்த்துப் போடும் புதிர் இல்லை :-)

26 comments:

  1. ஜெயஸ்ரீ,

    நீங்கள் சொன்னது சரி. உங்கள் பதிலைப் பின்னர் பதிப்பிக்கிறேன். நன்றிகள்.

    ReplyDelete
  2. குமரன் சார்

    நல்ல பதிவு. :)

    நன்றி.

    அப்படியே கார், வாசிங்மிசன், டூத் பேஸ்ட் இதற்கும் ஏதாவது போடுங்கள்.

    உங்களை காயப் படுத்த இதை சொல்லவில்லை என்பது உங்களுக்கு நிச்சயம் தெரியும்.

    ReplyDelete
  3. சிவபாலன். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். காலணியைப் பற்றி ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார்கள். அதனால் அதனைப் பற்றிச் சொன்னேன். நீங்கள் கடவுள் என்று கைகாட்டிய மற்றவையும் கடவுள்களே. ஆனால் அவற்றைப் பற்றி வழிபாட்டுப் பாடல்கள் இன்னும் வரவில்லையே. நானோ இல்லை வெண்பா பதிவுகள் எழுதும் அன்பர்களோ தான் எழுத வேண்டும். எஸ்.கே. ஐயாவை கேட்கிறேன். அவர் எழுதலாம். கோவி.கண்ணன் ஐயாவும் எழுதலாம். வாய்ப்புகள் உண்டு. :-)

    ReplyDelete
  4. குமரன்

    ராமாயணமா ?

    ReplyDelete
  5. பாதுகா நாமாவளி ?

    ReplyDelete
  6. //அப்படியே கார், வாசிங்மிசன், டூத் பேஸ்ட் இதற்கும் ஏதாவது போடுங்கள்//

    இது வேண்டுகோளா [Request]இல்லை மேலாணையா?[High command]


    காருக்கு பதில் கருடனுக்குப் போடலாமா? [அதுவும் வாகனம்தானே ஒருவருக்கு. அதற்கும் ஒன்றும் கேட்காது தான்!:)]

    வாஷிங்மெஷினுக்குப் பதில் வேலுக்குப் போடலாமா? [அதுவும் ஒரு உபகரணம்தானே!]

    டூத் பேஸ்டுக்குப் பதில் தேவியின் இதழ்களைச் சிவக்க வைக்கும் தாம்பூலத்தைப் போற்றிப் பாடலாமா?

    :))

    நானும் யாரையும் காயப்படுத்தச் சொல்லவில்லை

    ReplyDelete
  7. ராமாயணத்தில் ராமபாதுகை வைத்து ஆட்சி நடத்தவில்லையா? அது பற்றிய பாடல்கள்தானா தாங்கள் சொல்வது?

    ReplyDelete
  8. அன்புடன்...ச.சங்கர்,

    நீங்கள் இரண்டு பதில்களைச் சொல்லியிருக்கிறீர்கள். முதல் பதில் சொல்லும் இதிகாசமும் காலணியின் பெருமையைப் பேசுவதே. ஆனால் அந்த இதிகாசத்தில் மற்ற கதாபாத்திரங்களின் பெருமைகளும் பேசப்படுகிறது. இரண்டாவது பதில் தவறு. ஆனால் நீங்கள் சரியான சொல்லைப் பயன்படுத்தவில்லை என்று எண்ணுகிறேன். ஆயிரம் பெயர்கள் என்றால் நீங்கள் சொன்ன பதிலைச் சொல்லலாம். நான் சொன்னது ஆயிரம் பாடல்கள்.

    பதில்கள் சொன்னதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. கொத்ஸ். அந்தப் பாடல்களைப் பற்றி நான் சொல்லவில்லை. காலணிகளின் பெருமையை மட்டுமே வைத்து ஆயிரம் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன.

    ReplyDelete
  10. குமரன்

    தேசிகனின் பாதுகா சகஸ்ரம் பற்றிச் சொல்ல ஆரம்பித்து விட்டீர்களோ என்று ஆசை ஆசையாய் ஒடி வந்தேன்! மேலும் சிவபாலன் அவர்களின் பதிவைப் படிக்கும் போதே என் மனதில் இது தான் ஓடியது.

    நீங்கள் 'New Blog ideas' என்ற வலைப்பூவில் இதனைச் சேர்த்து விட்டீர்களே! அந்த நாளும் இப்போதே வந்திடாதோ!

    //இது கட்டாயம் இரவிசங்கர் கண்ணபிரானின் 'புதிரா? புனிதமா?' பதிவினைப் பார்த்துப் போடும் புதிர் இல்லை :-)//

    குமரன்; அடியேன் இங்கு உள்ளேன்; புனிதமாக நிச்சயம் இல்லை; புதிராகத் தான் :-)

    //டூத் பேஸ்டுக்குப் பதில் தேவியின் இதழ்களைச் சிவக்க வைக்கும் தாம்பூலத்தைப் போற்றிப் பாடலாமா?
    //

    SK, மிகவும் பிடித்திருந்தது! அம்பாளின் சுகந்த பரிமள தாம்பூலம் பற்றி எழுதுங்களேன்!

    ReplyDelete
  11. குமரன், எனக்கு விடை தெரியவில்லை. ஆனா உங்ககிட்ட கேட்க எங்கிட்ட ஒரு கேள்வி இருக்கு :-)

    என் புகைப்படம் தமிழ்மண முகப்பில் தெரிய என்ன செய்ய வேண்டும்? புதிய பதிவு போட்டா பேர் மட்டும் தான் தெரிகிறது என் "Profile" படம் தெரியமாட்டிக்குது. எங்க "Template" ல் மாற்றம் செய்யவேண்டும்?

    ReplyDelete
  12. செய்கின்ற தொழிலே தெய்வமென்பார்
    செய்தொழில் கரணங்கள் தெய்வமென்பார்
    உய்வழி காட்டும் அவ்வாயுதங்கள்
    ஒவ்வொன்றும் உறுதியாய் தெய்வமென்பார்

    பாங்காக வருடத்தில் ஒரு நாளேனும்
    பகுத்தறிவு கொண்டுஅத் தெய்வம் தன்னை
    நீங்காத நற்செல்வம் அருள்வாய் என்று
    நிறைவாக ஆயுத பூஜை செய்வார்

    காலையில் எழுந்ததுமே கடுங்குளிரில்
    களைப்பின்றி செல்வதற்கு உதவும் தெய்வம்
    கார் என்ற பெயர் கொண்டு விளங்கும் அதனை
    கணப்பொழுதும் மறவாமல் வணங்குகின்றோம்

    ஆள்பாதி ஆடையும் பாதியென்றே
    அருமையாய் சொன்னார்கள் முன்னோர் அன்று
    அதற்கேற்ப ஆடைகளை துவைக்கும் தெய்வம்
    அதை வணங்க எனக்கென்ன வெட்கம் வெட்கம்?

    பல் போனால் சொல் போச்சு என்பதோர் சொல்
    பழங்காலச் சொல்வழக்கு அதை மறவாமல்
    பல்தன்னை தினந்தோறும் விளக்கிக் சொல்லை
    பலநாளாய் காக்கின்ற தெய்வம் நன்று

    பற்றுக பற்றற்றான் பற்றை என்றே
    பழந்தமிழர் சொல்லிவைத்தார் பலநாள் முன்பே
    பற்றற்றான் பற்றென்றால் என்னவென்றால்
    பண்ணவனின் பாதுகைகள் என்று சொன்னார்

    பாதுகைகள் பெருமை தனை பாரிலுள்ளோர்
    பல்லாண்டு பாடியே வாழ்த்துகின்றார்
    பாதுகைகள் பெருமைதன்னை ஆயிரம் பா
    பாடியுமே வாழ்த்தியுள்ளார் அறிவீர் நீரே!

    காரென்ன வாஷிங் மெஷினுமென்ன
    கனஜோராய் டூத் பேஸ்ட் அதுவுமென்ன
    கால்தன்னைக் காக்கின்ற காலணியென்ன
    காண்கின்றோம் அத்தனையும் தெய்வம் தெய்வம்

    மேல் சொன்ன உயிரற்ற பொருட்களுடன்
    மேல் நின்ற உயிருள்ள மாந்தர் மாக்கள்
    தாள் பரப்பி நிற்கின்ற ஈசன் அவனின்
    தகை சார்ந்த வடிவங்கள் என்று கண்டோம்

    தூணிலும் இருக்கின்றான் தும்மலிலும் உண்டு
    பேணி நின்ற எல்லாவற்றிலும் உண்டு
    நாணி நிற்கும் நல்ல பெண் தன்னிலும் உண்டு
    நனி நின்ற தலித் அன்பன் தன்னிலும் உண்டு

    ஓர் தெய்வம் அவன் எங்கும் நிறைந்து உள்ளான்
    ஒருமையுடன் அவன் திருவடி வணங்குகின்றோம்
    மாறுபடு கருத்துகளைச் சொல்லும் நண்பர்
    மனம் உவக்க என்றுமே சொல்லிச் செல்க!

    ReplyDelete
  13. வாழ்த்தெனச் செப்ப
    வாயுண்டு
    உளமும் உண்டு
    உளமுண்டு செப்பிய
    முந்தியன முடித்திட
    வழி செய்தால்
    பிந்தியன நன்றாகும்!
    விருப்பம் உமது!
    செயலும் உமது!

    ReplyDelete
  14. ராமனின் பாதுகை என பார்த்தேன்

    ReplyDelete
  15. இராகவன்.

    விருப்பமும் எமதன்று
    செயலும் எமதன்று
    நெருநல் இருந்தார்
    இன்றில்லை எனும்
    பெருமை உடைத்தாம்
    உலகில் செய்யும்
    கருமமும் அவனே
    காரணமும் அவனே

    ReplyDelete
  16. //வாழ்த்தெனச் செப்ப
    வாயுண்டு
    உளமும் உண்டு
    உளமுண்டு செப்பிய
    முந்தியன முடித்திட
    வழி செய்தால்
    பிந்தியன நன்றாகும்!
    விருப்பம் உமது!
    செயலும் உமது!
    By G.Ragavan, at October 18, 2006 1:08 PM

    இராகவன்.

    விருப்பமும் எமதன்று
    செயலும் எமதன்று
    நெருநல் இருந்தார்
    இன்றில்லை எனும்
    பெருமை உடைத்தாம்
    உலகில் செய்யும்
    கருமமும் அவனே
    காரணமும் அவனே
    By குமரன் (Kumaran)//

    குமரன் அய்யா,எஸ் கே அய்யா,ராகவன் அய்யா,மற்றும் KRS அய்யா,

    நீங்கள் அனைவரும் இங்கு உரையாடுவதை படித்து சுவைக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்த இறைவனுக்கு நன்றி.

    பாலா

    ReplyDelete
  17. இராமனின் பாதுகைகளே தான் என்னார் ஐயா. சரியாகத் தான் எண்ணியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  18. அன்பு குமரன்!
    கல் கடவுளாகும் போது, காலணி ஏன் ஆகக் கூடாது. இது மனதைப் பொறுத்தது.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  19. உண்மை தான் யோகன் ஐயா.

    ReplyDelete
  20. // விருப்பமும் எமதன்று
    செயலும் எமதன்று
    நெருநல் இருந்தார்
    இன்றில்லை எனும்
    பெருமை உடைத்தாம்
    உலகில் செய்யும்
    கருமமும் அவனே
    காரணமும் அவனே //

    அனைத்தும் அவனே
    அனைத்திலும் அவனே
    ஆயினும் காலைப் பொழுதில்
    பல் துலக்கத் தொடங்கி
    முடிக்குமுன்னே காப்பி குடிப்பீரோ!
    குளியலைத் தொடங்கி
    முடிக்குமுன்னே ஆடை புனைவீரோ!
    முதலில் தொட்டதைப்
    பாதியில் விட்டதை
    முடித்து வைப்பதை
    உமக்கும் அவன் சொல்லட்டும்!

    ReplyDelete
  21. // குமரன் அய்யா,எஸ் கே அய்யா,ராகவன் அய்யா,மற்றும் KRS அய்யா,

    நீங்கள் அனைவரும் இங்கு உரையாடுவதை படித்து சுவைக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்த இறைவனுக்கு நன்றி.

    பாலா //

    அய்யாவா? ஐயோ! ஏன் பாலா? :-)))))))))))))))

    ReplyDelete
  22. இராகவன்.

    முதலில் தொட்டதை எல்லாம் அவனருளால் முடித்து வைத்த பின்னரே பாதுகா சஹஸ்ரத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருக்கிறேன். ஒவ்வொன்றாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பாதுகா சஹஸ்ரத்தை 'New Blog Ideas' வலைப்பூவில் சேர்த்து வைத்திருக்கிறேன் தற்போதைக்கு.

    ReplyDelete