Tuesday, June 20, 2006

ஆடி அடங்கும் வாழ்க்கையடா...

மகாகவி பாரதி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்ற வரிசையில் பாரதிதாசனாரின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதனைக் கொண்டு தன்னைச் சுப்புரத்தினதாசன் என்று அழைத்துக் கொண்ட பழம்பெரும் கவிஞர் சுரதா அவர்கள் காலமானார் என்ற செய்தியினை செந்தழல் ரவி அவர்களின் பதிவில் அறிந்து கொண்டேன். மறைந்த கவிஞருக்கு அஞ்சலி செய்யும் முகமாக அவருடைய இரண்டு பாடல்களை இங்கே தருகிறேன்.

திரைப்படம்: நீர்க்குமிழி (1965)
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: வி குமார்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா (ஆடி)

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா - கண்
மூடினால் காலில்லா கட்டிலடா (ஆடி)

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம் (ஆடி)

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அன்றோ திறக்கின்றான் (ஆடி)

வகுப்பான் அது போல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதைச் சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை....

***

திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்

அமுதும் தேனும் எதற்கு - நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு (அமுதும்)

அருவி தரும் குளிர் நீர் அன்பே - இனிமேல்
அதுவும் சுடுநீராகும் நமக்கு (அமுதும்)

நிலவின் நிழலோ உன் வதனம் - புது
நிலைக்கண்ணாடியோ நின் கன்னம்
மலையில் பிறவா மாமணியே - நான்
கொய்யும் கொய்யாக் கனியே வான் (அமுதும்)

விழியாலே காதல் கதை பேசு - மலர்க்
கையாலே சந்தனம் பூசு
தமிழ்மொழி போலே சுவையூட்டும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே வான் (அமுதும்)


சீர்காழி சிவசிதம்பரம் அவர்களும் இந்தப் பாடலை ஒரு இசைநிகழ்ச்சியில் பாடியிருக்கிறார். சுட்டிகள் தந்து உதவிய வெற்றி, யோகன் ஐயா, எஸ்.கே அனைவருக்கும் மிக்க நன்றி.

39 comments:

  1. குமரா!
    அவர் அழகுதமிழ்க் கவிஞர்!அவர் பாடல்களே! தனியழகே!; சீர்காழியாரின் குரல்; பாரம்பரிய இசை;பாடல்கள் பெருவிருந்தே!
    ஒரு சிறு திருத்தம் 'நான் கொடியில்;கொய்யாக்கனியா,,,,:கொய்யும் கொய்யாக்கனியா,,,??(சிலேடை)
    சரி பார்க்கவும். முடிந்தால் அவர் எழுதுய பாடல்களின் பட்டியலைத் தரவும்.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  2. எனக்குச் சரியாகத் தெரியவில்லை யோகன் ஐயா. நான் இன்னொரு முறை பாடலைக் கேட்டுப் பார்த்தேன். 'நான் கொடியில் கொய்யாக் கனியே' என்று பாடியதாகத் தான் தெரிகிறது. சரியான பாடல் அடிகளைத் தெரிந்தவர் சொன்னால் மாற்றிவிடுகிறேன்.

    ReplyDelete
  3. குமரன்,
    இன்று காலையில் நானும் கவிஞர் சுரதா அவர்களின் மறைவுச் செய்தியை சுந்தர் அவர்களின் பதிவில் அறிந்து அவரின் பதிவில் அனுதாபப் பின்னூட்டம் எழுதியபோது இந்த "அமுதும் தேனும் " பாடலை நினைவு கூர்ந்திருந்தேன்.

    அம்மம்மா! என்ன அருமையான கவிஞர். அவரின் எல்லாப் படைப்புக்களையும் படித்திராத போதும், அவரின் சில பாடல்களைக் கேட்டு இரசித்திருக்கிறேன். அதில் இந்த அமுதும் தேனும் பாடலும் ஒன்று.

    கவிஞர் சுரதாவின் இழப்பு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

    குமரன், கவிஞர் சுரதாவின் நினைவாக இப் பதிவைப் போட்டு, அவரின் பாடல்கள் சிலவற்றையும் இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    அன்புடன்
    வெற்றி

    ReplyDelete
  4. குமரன்,
    நீங்கள் "அமுதும் தேனும் எதற்கு" எனும் பாடலுக்கு கொடுத்திருக்கும் இணைப்பு மருத்துவர் சீர்காழி கோ. சிவசிதம்பரம் எங்கேயோ நடந்த சங்கீதக் கச்சேரியில் பாடியது. இப் பாடலை அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' எனும் படத்திற்காகப் பாடியிருந்தார்கள். இப் பாடலை அமரர் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் கேட்பதற்கு கீழ்க் காணும் இணைய முகவரியை உங்கள் பதிவில் இணைத்து விடுங்கள்.

    http://www.musicindiaonline.com/p/x/QrQgNyn4mt.As1NMvHdW/

    மிக்க நன்றி.

    அன்புடன்
    வெற்றி

    ReplyDelete
  5. அன்புக் குமரனுக்கு!
    கட்டாயம் சரிபார்த்துக் கொள்ளவும். அதே வேளை இதன் மூலப்பாடல்;கோவிந்தராஜன் பாடியது.மியுசிக் இந்தியா ஒன் லைனில் ;தை பிறந்தால் வழி பிறக்கும்; பட வரிசையில் சென்றால் கேட்கலாம்.
    புது நிலைக் கண்ணாடியோ! மின்னும் கன்னம்..;; (நின் அல்ல)
    தமிழ் மொழிபோல சுவையூட்டும்;;;;! (சுவையூறும் அல்ல)
    கொய்யும் கொய்யாக் கனியே! வானமுதும் தேனுமெதற்க்கு!
    உடல் நான்; உயிர் நீ தானே வானமுதும் தேனுமெதற்க்கு!!!
    பல்லவி; அனுபல்லவியில் அமுதென்றும்;சரணங்களில் வானமுதென்றும் ;ஒலிப்பது போல் உள்ளது.

    இந்தக் "கொய்; வானமுது" சிலேடைப் பிரயோகங்களோ என எனக்குப் படுகிறது; இதே வேளை பல பாடல்கள்; வேறு சிலரால் மேடைக் கச்சேரிகளில் பாடும் போது; சொற்ப்பிழை; வரி ஒழுங்கின்மை!மெட்டில் பிசகு சகசமாக நடப்பது.இங்கே "சிவசிதம்பரம்"-பாடலில் அதுதான் நடந்துள்ளது.என நினைக்கிறேன்.
    தெளிவு படுத்தவும்.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  6. அன்புக் குமரனுக்கு!
    கட்டாயம் சரிபார்த்துக் கொள்ளவும். அதே வேளை இதன் மூலப்பாடல்;கோவிந்தராஜன் பாடியது.மியுசிக் இந்தியா ஒன் லைனில் ;தை பிறந்தால் வழி பிறக்கும்; பட வரிசையில் சென்றால் கேட்கலாம்.
    புது நிலைக் கண்ணாடியோ! மின்னும் கன்னம்..;; (நின் அல்ல)
    தமிழ் மொழிபோல சுவையூட்டும்;;;;! (சுவையூறும் அல்ல)
    கொய்யும் கொய்யாக் கனியே! வானமுதும் தேனுமெதற்க்கு!
    உடல் நான்; உயிர் நீ தானே வானமுதும் தேனுமெதற்க்கு!!!
    பல்லவி; அனுபல்லவியில் அமுதென்றும்;சரணங்களில் வானமுதென்றும் ;ஒலிப்பது போல் உள்ளது.

    இந்தக் "கொய்; வானமுது" சிலேடைப் பிரயோகங்களோ என எனக்குப் படுகிறது; இதே வேளை பல பாடல்கள்; வேறு சிலரால் மேடைக் கச்சேரிகளில் பாடும் போது; சொற்ப்பிழை; வரி ஒழுங்கின்மை!மெட்டில் பிசகு சகசமாக நடப்பது.இங்கே "சிவசிதம்பரம்"-பாடலில் அதுதான் நடந்துள்ளது.என நினைக்கிறேன்.
    தெளிவு படுத்தவும்.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  7. //'நான் கொடியில்;கொய்யாக்கனியா,,,,:கொய்யும் கொய்யாக்கனியா,,,??//

    !இரண்டும் இல்லை!!
    'நான் கொஞ்சும் கொய்யாக் கனியே வா'
    ஆதாரத்திற்கு இந்தப் பதிவைப் பார்க்கவும்!

    http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=2466

    ReplyDelete
  8. அன்பு எஸ் கே!
    "கொஞ்சு" மென்பதிலும்; கொடியில்,,பொருத்தமாக இருக்கிறது. அதைவிடக் "கொய்யாக் "கனியென அடுத்த சொல்வருவதால்; கவிஞர் "சொற்சிலம்பம்" ஆடியிருக்கலாம். என்பதே! என் தாழ்மையான அபிப்பிராயம். இப்போ 3 வகையாகிவிட்டது. பொறுத்துப் பார்ப்போம்.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  9. கும்ஸ் பாட்டெல்லாம் சூப்பரோ சூப்பர்.

    அதிலும் முதல் பாட்டு தத்துவம்ய்யா தத்துவம். தொடரட்டும் தங்கள் இன்னிசைப் பயண்ம் நல்ல தமிழ் பாடல் வரிக்ளின் துணையோடு.

    ReplyDelete
  10. தேவ்!
    முடிந்தால்;பழைய படங்களும் பார்க்கவும்;இந்தப் பாடல் இடம் பெற்ற "நீர்க்குமிழி" படத்தையும் பார்க்கவும்.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  11. பாடலைக் கேட்டுப் பாடல் வரிகளைச் சரியாக எழுதியிருக்கிறேன். சரியான சுட்டிகளையும் தந்திருக்கிறேன். மிக்க நன்றி யோகன் ஐயா, வெற்றி, எஸ்.கே.

    ReplyDelete
  12. ஆமாம் வெற்றி. நானும் சுந்தர் பதிவில் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன்.

    நானும் சுரதா அவர்களின் கவிதைகளை நிறையப் படித்ததில்லை. பள்ளியில் படிக்கும் போது அவருடைய கவிதைகள் சில பாடங்களில் இருந்தன என்று நினைவு. ஆனால் அவை யாவை என்று நினைவில்லை.

    ReplyDelete
  13. வெற்றி. சுரதா அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தியைப் படித்த போது உடனே இந்தப் பதிவு இட வேண்டும் என்று தோன்றியது. அலுவலகத்திற்குக் கிளம்பும் அவசரம் வேறு. அதனால் நீங்கள் ரவியின் பதிவில் கொடுத்தச் சுட்டியில் இருப்பது சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் பாடியது என்பதைச் சரியாகக் கவனிக்காமல் இட்டுவிட்டேன். மன்னிக்கவும்.

    நீங்கள் சொன்ன படி சரியான பாடலை பதிவில் இணைத்துவிட்டேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  14. உவமைக் கவிஞரின் இழப்பு தமிழ்க்கவிதை உலகிற்குப் பேரிழப்பு. அவரின் நினைவாகப் பாடல்கள் இரண்டு இட்டமைக்கு நன்றி குமரன்.

    ReplyDelete
  15. யோகன் ஐயா. நீங்கள் சொன்ன மாதிரி ஒரு முறை கேட்டுச் செய்யவேண்டியத் திருத்தங்கள் எல்லாம் செய்திருக்கிறேன். சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்.

    கொய்யாக்கனி என்பதில் இருக்கும் சிலேடை புரிகிறது. வானமுது என்பதில் உள்ள சிலேடை புரியவில்லை. கொஞ்சம் விளக்குங்கள்.

    ReplyDelete
  16. எஸ்.கே. பாடலைக் கேட்டால் அதில் 'கொய்யும்' என்றிருப்பதாகத் தான் தோன்றுகிறது. நீங்கள் தந்துள்ள சுட்டியில் நிறைய எழுத்துப்பிழை இருக்கிறது. இதுவும் அதில் ஒன்றோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  17. நன்றி தேவ். தொடர்ந்து பாடல் பதிவுகளுக்கு மட்டுமாவது வந்து மறுமொழி சொல்லுங்கள். :-)

    ReplyDelete
  18. நல்ல பாடல்கள் குமரன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  19. kelpiti.blogspot.com யில் போடவேண்டிய பதிவை koodal1.blogspot.com இட்டுவிட்டீர்கள்?

    அமுதும் தேனும் மிக அருமையான பாடல்.சிறுவயதில் பல முறை கேட்டு ரசித்திருக்கிறேன்

    ReplyDelete
  20. 'யோகந்பாரிஸ்',

    கொய்தல் என்றால், எடுதல், பிய்த்தல் எனப் பொருள் வரும்.

    இந்த இடத்தில் சொல்லும் 'கொய்யாக்கனியைக்' கொய்ய முடியாது!

    கொஞ்சத்தான் முடியும்!!!:))
    எனவே, கொஞ்சும் என்பதே சரியென நினைக்கிறேன்.
    மேலும், நான் குறிப்பிட்டிருக்கும் சுட்டியின் பதிவாளர் மிகவும் கவனமானவர், இது போன்ற தகவல்களில்!

    [பி.கு.] நீங்க நம்ம பக்கமெல்லாம் வரவில்லையே!
    www.aaththigam.blogspot.com
    [விளம்பரத்திற்கு மன்னிக்கவும்!!]

    ReplyDelete
  21. ஒரே ஒரு காரணம் செல்வன். ஏன் இந்தப் பதிவைக் கேட்டதில் பிடித்தது வலைப்பூவில் போடாமல் கூடலில் போட்டேன் என்பதற்கு. என்ன காரணம் என்று தெரிகிறதா? செல்வன் மட்டுமில்லை. யாருக்குத் தெரிந்தாலும் சொல்லலாம்.

    ReplyDelete
  22. அமுதும் தேனும் வேறு வலை பதிவும் எதற்கு!!நம் குமரனின் வலைபதிவு இருக்கையிலே!!
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்றப் பாடலை பலரும் மறந்துவிட்டனர்!!அதான் ஆட்டம் போட்டுகிட்டே இருக்காங்க!!
    நன்றி குமரன்!!!

    ReplyDelete
  23. அமுதும் தேனும் வேறு வலை பதிவும் எதற்கு!!நம் குமரனின் வலைபதிவு இருக்கையிலே!!
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்றப் பாடலை பலரும் மறந்துவிட்டனர்!!அதான் ஆட்டம் போட்டுகிட்டே இருக்காங்க!!
    நன்றி குமரன்!!!

    ReplyDelete
  24. சுரதா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதால் அதை கூடலில் தந்துள்ளீர்கள்.

    (இவ்வலைபூவின் நோக்கம் "ஒரு தனிப் பொருள் பற்றி இல்லாமல் என்ன என்ன தோன்றுகிறதோ அவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு இந்த வலைப்பூ", என்பதில் இருந்து கணித்துள்ளேன் சரியா?)

    ReplyDelete
  25. திரு குமரன், கவிஞர் சுரதாவின் முத்தான இரண்டு பாடல்களை போட்டு சிறப்பு செய்திருக்கிறீர்கள். உங்களோடு சேர்ந்து நானும் அஞ்சலி செலுத்துகிறேன்

    ReplyDelete
  26. "நான் குறிப்பிட்டிருக்கும் சுட்டியின் பதிவாளர் மிகவும் கவனமானவர், இது போன்ற தகவல்களில்!"
    அன்பு எஸ் கே!
    அந்தச் சுட்டியைச் சென்று பார்த்தேன்; நீங்கள் குறிப்பிடுமளவுக்கு;கவனமானவர்களாகத் தெரியவில்லை. குமரனும் அதைக் கவனித்துள்ளார்.எனினும் இனிச் "சுரதா ஐயாவைக் கூப்பிட முடியுமா? எனவே நீங்க "கொஞ்சுங்க"...நான்"கொய்யிறேன்".மூலப்பாடல் கேட்டீர்களா???என்னைப் பொறுத்த மட்டில் ;கவிஞரின் சொற்சிலம்பம் அந்த வரியில் தான் உள்ளது.அது "கொய்தலில் தான் உள்ளது.ஆனால் "நீங்க கொஞ்சுங்க". அடுத்து உங்கள் திருப்புகழுக்கு! வந்து வந்தனம் போட்டேன்!!!!என்ன?, என்னைப்போல் அறிவு குறைந்தவங்க ;வந்தனம் எல்லாம் ஏற்றுக் கொள்ளாதோ!!உங்கள் பக்கம். இவ்வாரவிறுதியில்; சகலதும் படிக்கிறேன். பதிலிடுவேன். இன்னும் சில தொழில் நுட்பங்கள் பிடிபடாததால்;பதிலிடுதலில் தவறேற்படுகிறது.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  27. அன்புக் குமரனுக்கு!
    உடன் பதிலெழுத முடியவில்லை; எழுத்துச் சிலேடை போல் பேச்சுச்சிலேடைகள் நூற்றுக்கு;நூறு இலக்கணத்துள் அமைவதில்லை.இந்த வானமுது;;;பேச்சு;அதாவது அப்பாடலை உச்சரிக்கும் விதத்தில் அமைகிறது; செவிக்கு சொற்களின் இசையோட்டத்துடன் வந்த உச்சரிப்பு அந்தப் பிரமையையேற்படுத்துகிறது.
    உடல் நான்;உயிர் நீ தானே....வா++++அமுது; இந்த+++இடைவெளியில்; பாடகரில் ரீங்காரம்,சிலேடை போன்ற பிரமையைத் தருகிறது; அடுத்து......இன்னுமொரு பாடல்
    "ஆடவரலாம்; ஆடவரலாம்" இங்கேயும் பேச்சுச்சிலேடையுண்டு.
    ஆடவர்++ எல்லாம்-ஆடவரலாம்....++இந்த இடங்களில் குரலால் அந்த நளினம் எற்படுத்தப்பட்டுள்ளது.அதனால் அதை ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.
    வாலி தன் கவிநடையைப் பற்றிப் பேசும் போது!
    இது வஞ்சிபா போல் வாலிப்பா!....இது வாளிப்பா! இருக்காணு பாருங்க!!!! இது சிலேடையாக பல கவிஞர் பெருமக்கள் இருந்த மேடையில் ;ரசிக்கப் பட்டது. அழகாகத்தான் இருக்கிறது.
    வைரமுத்துவின் "எழுதிட மறுத்தது; என்பேனா!!!???";;;நன்கு இலக்கணத்துடன் அமைந்த சிலேடை!
    என்னால் தரக்கூடிய விளக்கங்கள் இதுவே!!!
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  28. குமரன்,

    சுரதாவின் மறைவு எனக்கு மனவருத்ததைத் தருகிறது.

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா பாடல் எனக்கு சுரதாவை விட நாகேஷ் அவர்களின் நடிப்பால் கவர்ந்த ஒன்று.

    உங்கள் பாடல் வார்த்தைகள் எனக்கு அந்நினைவைத் தூண்டிவிட்டது.

    நன்றி.

    கண்ணீருடன்
    பச்சோந்தி.

    ReplyDelete
  29. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, யோகன் -பாரிஸ்.
    மீண்டும் சென்று ஜிமெயிலில் பார்த்தேன்.
    உங்கள் பின்னூட்டம் அங்கு வரவில்லை.
    ஆனால், நீங்கள் போட்டேன் எனச் சொன்னதே மகிழ்வாய் இருக்கிறது.
    மறுபடியும் அனுப்பமுடியுமா?
    மன்னித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  30. நன்றி நடேசன் ஐயா.

    ReplyDelete
  31. ஏறக்குறைய சரி சிவமுருகன். முக்கியமான பதிவுகள் என்று நான் எண்ணும் எல்லாப் பதிவுகளும் 'கூடலில்' தான் வந்துள்ளன. (அப்ப மற்ற வலைப்பூக்களில் இருப்பதெல்லாம் முக்கியமில்லாதவையா என்று கேட்கக்கூடாது. :-) அவையும் முக்கியமே. ஆனால் அந்த வலைப்பூவின் பொருளுக்கு ஏற்புடையதாக இருப்பதால் அங்கு இடுகிறேன்.)

    கவிஞர் சுரதாவுக்கு அஞ்சலி செலுத்தும் இந்தப் பதிவு முக்கியமானது என்பதால் கூடல் வலைப்பூ கேட்டதில் பிடித்தது வலைப்பூவை விட பொருத்தமானது என்று தோன்றியது.

    ReplyDelete
  32. நன்றி இலவசக் கொத்தனார் & கோவி.கண்ணன்

    ReplyDelete
  33. யோகன் ஐயா. நீங்கள் சொல்லும் பேச்சுச் சிலேடை நன்றாகப் புரிகிறது. நிறைய எடுத்துக்காட்டுகளும் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    நீ தானே வானமுது; நீ தானே வா அமுது.
    கொய்யாக்கனி; கொய்யாக் கனி
    ஆடவரெல்லாம் ஆடவரலாம்
    வாலிப்பா; வாளிப்பா
    என்பேனா?; என் பேனா

    அருமை. அருமை. நான் கவிதை எழுதும் போது இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேன்.

    அறிவில் ஆதவன் நீ; அறிவிலாதவன் நான்
    சுடரில் ஆதவன் நீ; சுடரிலாதவன் நான்
    மதியில் ஆதவன் நீ; மதியிலாதவன் நான்

    இப்படியே நிறைய எழுதிக் கொண்டு போனேன். இப்போது மறந்துவிட்டது.

    ReplyDelete
  34. தனிமடலிலும் இங்கும் தங்கள் கருத்தையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி இராம்பிரசாத் அண்ணா.

    ReplyDelete
  35. //இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அன்றோ திறக்கின்றான்//
    இந்த வரிகள் தான் ஞானியின் தத்துவக் கருத்தாகும் இதற்குவிலையேதும் இல்லை

    ReplyDelete
  36. அன்பு குமரா,
    "அமுதும் தேனும் எதற்க்கு" பாடலைக் கேட்க:
    http://iniyavaikal.blogspot.com/2006/10/23.html

    ReplyDelete
  37. உண்மை என்னார் ஐயா. மிக்க நன்றி.

    ReplyDelete
  38. இன்று காலை உங்கள் பதிவில் அந்தப் பாடலைக் கேட்டேன் ஞானவெட்டியான் ஐயா. அப்போது நேரமில்லாமல் போனதால் பின்னர் பின்னூட்டம் இடலாம் என்று வந்துவிட்டேன்.

    ReplyDelete
  39. அன்பு குமரா,
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்:
    "ஆடி அடங்கும் வாழ்க்கையடா"
    கேட்டுப்பாருங்கள்:
    http://iniyavaikal.blogspot.com/2006/10/24.html

    உங்களின் semitech.com.sg பாடாய்ப் படுத்துகிறது.

    ReplyDelete