Friday, June 23, 2006
ஆறு வழிகள்
நாலு பதிவுக்கு சிங். செயகுமாரும் நாமக்கல் சிபியும் என்னை அழைத்தார்கள். இந்த ஆறு விளையாட்டிற்கு வெங்கடரமணியும் இராம்பிரசாத் அண்ணாவும் அழைத்திருக்கிறார்கள். இவர்கள் நால்வருக்கும் நன்றி.
***
உலகில் இறைவனை வழிபட எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்தியத் திருநாட்டில் வடமொழி வேதங்களைப் புறந்தள்ளாத வழிகளும் இருக்கின்றன; வடமொழி வேதங்களைப் பற்றிப் பேசாத வழிகளும் இருக்கின்றன; வடமொழி வேதங்களை முழுவதும் புறந்தள்ளிய வழிகளும் இருக்கின்றன. ஆதிசங்கரரின் காலத்திலும் இப்படியே எத்தனையோ சமயங்கள் இருந்தன இந்தத் திருநாட்டில். சமயங்கள் ஒன்றில் ஒன்று கலப்பதும் புதிதாக ஒன்று உருவாவதும் இருந்த ஒன்று இன்னொன்றில் கலந்து முழுதும் உருத்தெரியாமல் மறைவதும் காலம் காலமாக எல்லா நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக் கொண்ட (கவனிக்கவும் வேதங்களை அடிப்படையாகக் கொண்ட என்றோ வேதங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட என்றோ சொல்லவில்லை) சமயங்களை ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை சீர்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர். அந்த ஆறு சமயங்களைப் பற்றியே இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
***
காணபத்யம்:
முழுமுதற்கடவுள் என்று போற்றப்பட்டு எல்லாச் செயல்களையும் தொடங்குவதற்கு முன் வணங்கப்படும் ஆனைமுகன் கணபதியை எல்லாக் கடவுளர்களையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்று வணங்குவது காணபத்யம் என்னும் சமயம்.
கௌமாரம்:
அழகில் சிறந்தவன்; ஆறுமுகங்களைக் கொண்டவன்; முருகன்; குமரன்; கிழவன்; குகன் என்று பலவாறாகப் போற்றப் படும் குமரக்கடவுளை முழுமுதற்கடவுளாகப் போற்றுவது கௌமாரம்.
சௌரம்:
உலகுக்கெல்லாம் ஒளி கொடுத்து உலகச் செயல்கள் எல்லாம் நடக்கச் சக்தியும் கொடுக்கும் கண்கண்ட தெய்வமான சூரியனை முழுமுதற்கடவுளாக, பரம்பொருளாக வணங்குவது சௌரம்
சாக்தம்:
பரம்பொருளை அன்னை வடிவில் சக்தி வடிவில் வணங்குவது சாக்தம்
சைவம்:
பிறப்பிலியான சிவபெருமானைப் பரம்பொருளாக வணங்குவது சைவம்
வைணவம்:
திருமகள் மணாளனை, விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வணங்குவது வைஷ்ணவம் என்றும் சொல்லப்படும் வைணவம்.
***
ஆதிசங்கரரின் காலத்தில் இந்த ஆறு சமயங்களுக்கும் வேறுபாடுகள் இருந்தன. அவர் காலத்திலேயே அவை ஒன்றுக்குள் ஒன்றாய் கலக்கத் தொடங்கியிருந்தன. தற்காலத்தில் இந்த ஆறு சமயங்களும் இரு பெரும் சமயங்களாக - சைவம், வைணவம் - உருமாறி நிற்கின்றன.
காணபத்யம், கௌமாரம், சாக்தம் இந்த மூன்றும் சைவத்தில் அடங்கிவிட்டாலும் இந்தியாவில் சில பாகங்களில் அவை இன்றும் சிறப்போடு இருக்கின்றன. காணபத்யம் மஹாராஷ்ட்ரத்திலும் கௌமாரம் தமிழகத்திலும் சாக்தம் வங்காளத்திலும் கேரளத்திலும் இந்த ஆறு சமயங்களிலும் தலைமையிடம் கொள்கின்றன. சௌரம் சைவத்திலும் வைணவத்திலும் கலந்து மறைந்துவிட்டது. சைவத்தில் சிவசூரியனாகவும் வைணவத்தில் சூரியநாராயணனாகவும் சௌரத்தின் சூரியன் உருமாறிவிட்டான். தற்காலத்தில் சூரியனை முழுமுதற்கடவுளாக வணங்குபவர் இந்தியாவில் இல்லாமல் போய்விட்டார்கள். ஆனால் உலக வரலாற்றைப் பார்த்தால் சூரியனை எல்லா நாட்டினரும் வணங்கியிருக்கிறார்கள் என்பது புலனாகும்.
வைணவம் மட்டுமே ஆதிசங்கரரின் காலத்திலிருந்து எந்த சமயத்தையும் எடுத்துக் கொள்ளாமலும் எந்த சமயத்திலும் கலந்துவிடாமலும் இருப்பது போல் தோன்றினாலும் மற்ற சமயங்களில் இருந்தத் தத்துவங்களை வைணவம் ஏற்றுக் கொண்டிருப்பது கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் தெளிவாகும்.
***
இந்த ஆறு விளையாட்டில் நானும் ஒரு ஆறு பேரை அழைக்கவேண்டுமே. சிந்தித்துப் பார்த்ததில் கீழே இருக்கும் ஆறுபேரை அழைக்கலாம் என்று தோன்றியது. இந்த ஆறு பேர் தவிர வேறு சிலரையும் அழைக்கலாம் என்று எண்ணிய போது ஏற்கனவே மற்றவர்களல் அழைக்கப் பட்டவர்களைத் தவிர்க்கவேண்டும் என்று தோன்றியது. இந்த ஆறு பேர் இதுவரை இந்த விளையாட்டிற்கு அழைக்கப் படாதவர்கள் என்று எண்ணுகிறேன். அழைக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள். அவர்கள் பெயரை எடுத்துவிட்டு வேறு ஒருவர் பெயரை தருகிறேன்.
1. இராகவன்
2. இலவசக் கொத்தனார்
3. சிவமுருகன்
4. சிங். செயகுமார்
5. தருமி ஐயா
6. காஞ்சி பிலிம்ஸ்
Tuesday, June 20, 2006
ஆடி அடங்கும் வாழ்க்கையடா...
திரைப்படம்: நீர்க்குமிழி (1965)
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: வி குமார்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா (ஆடி)
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா - கண்
மூடினால் காலில்லா கட்டிலடா (ஆடி)
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம் (ஆடி)
சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அன்றோ திறக்கின்றான் (ஆடி)
வகுப்பான் அது போல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதைச் சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை....
***
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
அமுதும் தேனும் எதற்கு - நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு (அமுதும்)
அருவி தரும் குளிர் நீர் அன்பே - இனிமேல்
அதுவும் சுடுநீராகும் நமக்கு (அமுதும்)
நிலவின் நிழலோ உன் வதனம் - புது
நிலைக்கண்ணாடியோ நின் கன்னம்
மலையில் பிறவா மாமணியே - நான்
கொய்யும் கொய்யாக் கனியே வான் (அமுதும்)
விழியாலே காதல் கதை பேசு - மலர்க்
கையாலே சந்தனம் பூசு
தமிழ்மொழி போலே சுவையூட்டும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே வான் (அமுதும்)
சீர்காழி சிவசிதம்பரம் அவர்களும் இந்தப் பாடலை ஒரு இசைநிகழ்ச்சியில் பாடியிருக்கிறார். சுட்டிகள் தந்து உதவிய வெற்றி, யோகன் ஐயா, எஸ்.கே அனைவருக்கும் மிக்க நன்றி.
Tuesday, June 06, 2006
தி.ரா.ச.வின் அறுபதாம் ஆண்டு நிறைவு
Saturday, June 03, 2006
200: எம்பெருமான் திருமலையில் ஏதேனும் ஆவேனே!
ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ஆனே(று) ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே
நப்பின்னைப் பிராட்டியை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்ற கண்ணனின் அடிமையாய் வாழும் நல்வாழ்க்கையை அன்றி வலிமை மிக்க உடலில் அருமையான அழகிய புஜங்களும் மார்புகளும் கொண்ட வீர வாழ்க்கையை நான் வேண்டேன். வளைந்திருக்கும் சங்கினைத் தன் இடக்கரத்தில் ஏந்தியிருக்கும் திருவேங்கடத்தானின் கோனேரித் தீர்த்தத்தில் வாழும் கொக்காய் பிறப்பேனே.
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வான் ஆளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே
கொக்காய்ப் பிறப்பேன் என்றேன். ஆனால் கொக்காய்ப் பிறந்தால் ஏதோ ஒரு நேரத்தில் திருவேங்கடத்தை விட்டுப் பறந்து போக வாய்ப்புண்டு. அதனால் கொக்காய் பிறப்பதைக் காட்டிலும் மீனாய்ப் பிறப்பது மேல்.
அளவில்லாத செல்வத்துடன் அரம்பையர்களால் சூழப்பட்டு வானுலகத்தை ஆளும் பெரும் வாய்ப்பையும் மண்ணுலகத்தில் அரசாள்வதையும் நான் வேண்டேன். தேனால் நிரம்பியப் பூக்களைக் கொண்ட சோலைகள் உடைய திருவேங்கடத்தில் இருக்கும் நீர்ச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் பெரும் வாய்ப்பு உடையவன் ஆவேனே.
பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டுப் புகல் அரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தான் உமிலும்
பொன்வட்டில் பிடித்(து) உடனே புகப் பெறுவேன் ஆவேனே
மீனாய்ப் பிறந்தாலும் வேங்கடவன் அருகாமை கிடைக்காது. அது மட்டுமின்றி என்றாவது அந்த நீர்ச்சுனை வற்றிப் போனால் மீனாய் எடுத்தப் பிறவியும் வீணே போகும்.
பின்னலுடைய சடையணிந்த சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் விரைந்து உன்னைக் காண்பதற்காக வைகுந்தத் திருவாசலில் குழுமி நிற்கின்றனர். நீ மின்னலைப் போல் சுழலும் வட்ட வடிவு கொண்ட சக்கரத்தைக் கொண்டுள்ளாய். திருவேங்கடத்தலைவா. நீ உன் எச்சிலை உமிழும் போது அதனைத் தாங்குவதற்காக பொன்வட்டிலைப் பிடித்து நின்று என்றும் உன்னுடனே எல்லா இடத்திற்கும் செல்லும் பேறு பெறுவேன் ஆவேனே.
ஒண்பவள வேலை உலவு தண் பாற்கடலுள்
கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே
நீ உமிழும் பொன்வட்டிலைத் தாங்கும் அடிமையாய் இருப்பேன் என்றேன். ஆனால் அதனால் உன் திருமுகத்தைக் காணும் பேறு மட்டுமே கிடைக்கும். திருவடிகள் அல்லவா அடியவர்க்குப் பெரும்பேறு.
அருமையான பவளங்களை அலைகள் கரையினில் தினமும் சேர்க்கும் குளிர்ந்தத் திருப்பாற்கடலில் அறிதுயில் புரியும் மாயவா உன் கழலிணைகள் காண்பதற்கு வழி தெரிந்துவிட்டது. பாடல்களைப் பாடிய படி வண்டுக் கூட்டங்கள் திரியும் திருவேங்கட மலையில் ஒரு செண்பக மரமாய் நிற்கும் பெரும்பேறு உடையேன் ஆவேனே. தினந்தோறும் உன் திருவடிகளுக்கு அர்ச்சனையாய் செண்பக மலர்கள் தந்து எப்போதும் உன் திருவடிகளில் நிலையாக இருப்பேனே.
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே
செண்பக மரமாய் நிற்கும் பேறு பெரும் புண்ணியம் செய்தவர்க்கே கிட்டுமோ என்னவோ? அப்படியென்றால் திருவேங்கட மலை மேல் ஒரு முள்செடியாயாவது பிறக்கும் பேறு பெறுவேன்.
வலிமையும் அழகும் மிகுந்த பட்டத்து யானையின் கழுத்தின் மீதேறி இன்பத்தை நுகரும் செல்வத்தையும் அரசாட்சியையும் நான் வேண்டேன். எனக்கும் இந்த ஈரேழ் உலகங்களுக்கும் தலைவனான திருவேங்கட நாதனின் திருமலை மேல் ஒரு முள்செடியாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே.
மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு ஆடலவை ஆதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குடவாம் அருந்தவத்தன் ஆவேனே
முள்செடியாய் நின்றால் எனக்கு மட்டுமே பயன். எம்பெருமானுக்கோ அடியவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. அதனால் திருவேங்கடமலையில் இருக்கும் பல சிகரங்களுக்குள் ஒரு சிகரமாக நான் நின்றால் இறைவன் இருக்கும் இடம் இது என்று அடியவர்களுக்கு உணர்த்தும் பேறு கிடைக்கும். (சிகரம் என்றால் மலைச் சிகரம் என்றும் கோபுரம் என்றும் பொருள் தரும்).
மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினை உடைய ஊர்வசியும் மேனகையும் அவர்களைப் போன்றவர்களும் பாடியும் ஆடியும் மகிழ்விக்கும் இன்பங்களை நான் விரும்பேன். அவர்களின் பாடல் ஆடலைவிட இனிமையாக தேனினைப் போல் (தென்ன வென) வண்டுக் கூட்டங்கள் பண்களைப் பாடி ஆடும் திருவேங்கடத்துள் அழகு மிகுந்த பொற்சிகரமாக ஆகும் அரிய தவத்தை உடையவன் ஆவேனே.
வானாளும் மாமதி போல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கட மலை மேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே.
மலைச்சிகரமாய் நின்றாலும் யாருக்கும் பயனின்றிப் போகலாம். எத்தனையோ சிகரங்கள் இருக்கின்றன; அதனால் அடியார்களுக்கும் பயனின்றிப் போகலாம். ஆனால் திருவேங்கட மலையில் ஒரு காட்டாறாய் நான் இருந்தால் உன் திருமுழுக்குக்கும் ஆவேன்; அடியார்களின் தாகத்திற்கும் ஆவேன்.
வானத்தில் இருக்கும் விண்மீன்களையெல்லாம் தன் ஒளியால் வென்று வானத்தை ஆளும் முழுமதியைப் போல் வெண்கொற்றக் குடையின் கீழ் அரசாளும் மன்னவர்களை எல்லாம் திறத்தால் வென்று அவர்கள் தலைவனாக வீற்றிருக்கும் பெருமையையும் நான் வேண்டேன். தேன் நிரம்பும் பூக்கள் உடைய சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் ஒரு காட்டாறாய் பாயும் எண்ணத்தைக் கொண்டவன் ஆவேனே.
பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறை முடிப்பான் மறையானான்
வெறியார் தண் சோலைத் திருவேங்கடமலை மேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே
பொற்சிகரமாய் நின்றாலும் உன் கோயிலைச் சுற்றி அடர்ந்த காடுகள் இருப்பதால் அடியார்களால் உன் கோயிலை அடைய முடியாமல் போகலாம். அதனால் அவர்கள் உன் கோயிலை அடையும் வழியாக நான் ஆவேன்.
பிறையினை தன் சடையில் வைத்திருக்கும் சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் முறையுடன் உன்னை வேண்டிச் செய்யும் பெரும் வேள்விகளுக்கான பயன்களைத் தந்து அவர்களின் குறை தீர்ப்பாய். அவர்கள் முறை என்ன என்று அறியும் வகை சொல்லும் வேதங்களாய் நின்றாய். நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் அடியவர்கள் உன் திருக்கோயிலை அடையும் வழியாகக் கிடக்கும் நன்னிலை உடையவன் ஆவேனே.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே
உன் கோயிலுக்கு வரும் வழிகள் பல இருக்கலாம். அதனால் உன்னைக் காண வரும் அடியார்களில் சிலர் நான் வழியாய்க் கிடந்தாலும் என் மேல் வராமல் வேறு வழியாய் உன் கோயிலை அடையலாம். அவர்கள் எல்லோருடைய திருவடிகளும் என் மேல் பட வேண்டும் என்றால் உன் திருக்கோயிலின் படியாய் கிடக்கும் பேறு வேண்டும்.
பற்பல பிறவிகளாய் செய்த ஒன்றுடன் ஒன்று பிணைந்த காட்டுச் செடிகளைப் போல் இருக்கும் என் வலிய வினைக்கூட்டங்களைத் தீர்க்கும் திருமகள் மணாளா. நான் என்றோ செய்த சிறிய நல்வினையை நினைவில் நெடுங்காலம் கொண்டு எனைக் காப்பவனே நெடியவனே. திருவேங்கடவா. உன் கோயிலின் வாசலில் அடியவர்களும் வானவர்களும் அரம்பையர்களும் வந்து உன்னைக் காணுமாறு ஒரு படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.
உம்பர் உலகாண்டு ஒரு குடைக்கீழ் உருப்பசி தன்
அம்பொற்கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம்பவள வாயான் திருவேங்கடமென்னும்
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே.
நான் ஏன் இப்படி இது ஆவேன்; அது ஆவேன் என்று உன்னை வேண்டிக் கொண்டிருக்கிறேன். அடியவனுக்கு அழகு தன் தலைவன் தன்னை எந்த நிலையில் வைத்தாலும் அதில் மகிழ்ந்திருந்து தலைவனுக்குத் தொண்டு செய்வதே. அதனால் நீ என்னை எந்த நிலையில் வைத்தாலும் அதற்கிணங்க ஏதேனும் ஒன்றாய் திருவேங்கட மலை மேல் நான் ஆவேன்.
தேவர்கள் உலகங்களை ஒரு குடை கீழ் ஆண்டு ஊர்வசியின் அழகிய பொன்னாடைகள் அணிந்த இடையிலிருந்து கிடைக்கும் இன்பத்தைப் பெற்றாலும் அதனை விரும்பேன். சிவந்த செம்மையான் திருப்பவள வாயானின் திருவேங்கடமென்னும் எம்பெருமானுடைய பொன் மலையில் அவன் திருவுள்ளப்படி ஏதேனும் ஆவேனே.
மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே
என்றென்றும் குளிர்ந்த சாரல் வீசும் வடவேங்கடத்தை உடைய எம்பெருமானின் பொன்னைப் போன்ற செவ்விய திருவடிகளைக் காண்பதற்கு இறைஞ்சி எல்லா எதிரிகளையும் வெல்லும் கூரிய வேலினைக் கைக் கொண்ட குலசேகரன் சொன்ன இந்தத் தமிழ்ப்பாடல்களை சொல்லி மனத்தில் வைத்தவர்கள் இறைவனுக்கு மிகவும் நெருக்கமான பக்தர்கள் ஆவார்கள்.