வருகின்ற ஏப்ரல் 11ம் நாள் பங்குனி உத்திரத் திருநாள். பங்குனி உத்திரத் திருநாள் பலவிதங்களில் சிறப்புடையது. அதன் சிறப்புக்களை ஒரே பதிவில் சொல்லிவிட முடியாது என்பதால் இரண்டு மூன்று பதிவுகளில் அதனைச் சொல்ல முயல்கிறேன். முதல் பதிவையும் படித்துப் பாருங்கள்.
***
துர்வாச முனிவர் வந்து கொண்டிருக்கிறார். கோபத்திற்குப் பெயர் போனவர். ஆனால் இன்றோ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் போல் இருக்கிறது. அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருக்கிறது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வருகிறார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வருகிறான். தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு மிக்கப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிகிறது.
துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று 'தேவேந்திரா. உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குத் தான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்' என்று சொன்னார்.
விண்ணோர் தலைவனும் அந்த மலர் மாலையை அலட்சியமாக அங்குசத்தால் வாங்கி ஐராவதத்தின் தலையில் வைத்தான். தேவர்களின் தலைவனான தான் கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர்மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கி கொள்வதா என்ற எண்ணம். ஆனாலும் கொடுப்பவர் துர்வாசர் என்பதால் பேசாமல் வாங்கி கொண்டான். யானையோ தன் தலையில் வைக்கப்பட்ட மலர்மாலையை உடனே எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு துவைத்துவிட்டது. அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது.
'தேவேந்திரா. தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உன்னிடம் இருக்கிறது. எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்' என்று சாபம் கொடுத்தார்.
துர்வாச முனிவரின் சாபத்தின் படி இந்திர லோகத்தில் இருந்த எல்லா செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன. அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் எல்லோரும் துன்பம் வரும்போது செய்யும் வழக்கம் போல் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள். இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள்.
மந்தர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கின்றனர். நாட்கள் பல சென்று விட்டன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால் திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது. பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவருகிறது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்குகிறது. இரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் இருக்கிறது.
உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணாமூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிவிட்டார். காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும் படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள். விஷம் அங்கேயே நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் 'நீலகண்டன்' என்ற திருப்பெயரைப் பெற்றார்.
இன்னும் சில நாட்கள் சென்றன. எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கின.
அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் என்ற திருநாமத்தை அடைந்தாள். அப்படி அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர்மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் பிறந்த நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப் படுகிறது.
***
மஹிஷியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவள் வாங்கிய வரத்தின் படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனால் தான் அழிவு. ஆனால் ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை எப்படி பிறக்கும்? அது நடக்காத விஷயமாதலால் அவள் தன்னை அழிக்க யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு அளவில்லாத அட்டூழியங்கள் செய்துக் கொண்டிருக்கிறாள்.
பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் வேலை செய்யத் தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் இணைந்ததால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். மோகினிசுதன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள்.
***
சூரபதுமனும் அவன் தம்பியரும் செய்யும் தொல்லைகள் அளவிட முடியாமல் போய்விட்டன. சிவகுமாரனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்று வரம் பெற்றதாலும் சிவபெருமான் காலகாலமாக அப்போது தவத்தில் மூழ்கி இருந்ததாலும் தனக்கு தற்போதைக்கு அழிவு இல்லை என்றெண்ணி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான் சூரன். அன்னை தாக்ஷாயிணி இமயமலைக்கரசன் மகளாய் பர்வத ராஜகுமாரியாய் பார்வதியாய் தோன்றி சிவபெருமானை மணக்க தவம் செய்து கொண்டிருக்கிறாள். சிவபெருமானோ அன்னை தாக்ஷாயிணியைப் பிரிந்ததால் மனம் வருந்தி யோகத்தில் நிலை நின்று விட்டார். சூரனின் அழிவு நேர வேண்டுமாயின் அன்னை பார்வதியை ஐயன் மணக்கவேண்டும். அதற்காக தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். ஆனால் காமன் கணைகள் தன் வேலையைச் செய்தன. காமேஸ்வரன் அன்னை பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார். ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். அன்னையும் அண்ணலும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். அதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.
***
குமரன், பங்குனி உத்திரத்தை பத்தி, அதன் தொடர்பான புராணக்கதைகளை சரியா தெரிஞ்சுக்க முடிஞ்சுது. ஏற்கனவே தெரிந்த ஐயப்பன் சாமி, தாட்சாயினி , பாற்கடல், நீலகண்டர் கதைகளானாலும், அதை கோர்வையா சொல்லி பங்குனி உத்திரத்தின் தொடர்பு தெரிய வச்சதுக்கு ரொம்ப நன்றி.
ReplyDeleteஆமாம் வெளிகண்ட நாதர் சார். எல்லாருக்கும் தெரிந்த புராணக் கதைகள் தான். வெறுமே அந்த அந்தக் கடவுளருக்கும் பங்குனி உத்திரத்துக்கும் உள்ள தொடர்பைச் சொல்லிக் கொண்டு போயிருக்கலாம். ஆனால் அதனைக் கதையாய் சொன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அது மட்டும் இன்றி கதையாய் எழுதினால் இன்னும் நிறைய பேர் படிக்கிறார்கள் (சிவபுராணம் சிவா, கதை எழுதினால் தான் என் பதிவுக்கு வருவேன் என்கிறார்) என்றும் தெரிந்தது. அதனால் கதையை எழுதிவிட்டேன். கோர்வையாய் வந்தது அவன் செயல். நீங்கள் சொல்லிய பிறகு படித்துப் பார்த்தேன். கொஞ்சம் கோர்வையாய் தான் வந்திருக்கிறது. :-)
ReplyDeleteமூன்று கதைகள் ஒரே பதிவிலா?
ReplyDeleteமன்னிக்க முடியாத குற்றம்!
யார் அங்கே?
இழுத்து வா அந்தக் 'குமரனை'!
எழுதப் பணி இன்னும் 100 வருஷம்!
நாளின் சிறப்பு பல வண்ணமுடையதா?
ReplyDeleteஓ!!!
Kumaran.panguni Uthiram post is so informative. wish I can write as good as you in Enlish so my children and grandchildren will understand.Srivilliputhur Kodhaiyum Rangamannaarum panguni UTHIRAM kalyaanamaa?
ReplyDeleteanbudan,
yezhisai
குமரன், இங்கே முருகன் கோயில் திருவிழா நடக்கிறது. பங்குனி உத்தரம் என்ன சிறப்புடையது என்று நேற்றுத்தான் பேசிக்கொண்டிருந்தோம். விரைவில் அடுத்த பதிவையும் இடுங்கள்.
ReplyDeleteஉத்திரம் இல்லையேல் வீடு இல்லை.
ReplyDeleteஉடலாகிய வீட்டில் அத்திரத்தை கண்டு உயர்ந்து நோக்க ஊழித்தீயாம் அக்கினி கலை உயர்ந்து எழுந்து வடக்கு நோக்கிச் சென்று சிதாகாயத்தில் சிதம்பர நடனமாடும்.
உத்திரம் = வடக்கு, மறுமொழி, பின்னர், பலம், திறன், ஊழித்தீ, உயர்ச்சி.
பலருக்கும் தெரிந்த கதைபூக்களை, தங்கள் பதிவு எனும் ஒரே நாரால் கோர்த்து மாலையாக்கி, தமிழன்னைக்கு காணிக்கையாக்கியது அருமை, அருமையிலும் புதுமை.
ReplyDeleteகுமரன், பங்குனி உத்திரத்தை சைவத்தோடு மட்டுமே கொண்டு வந்திருந்தேன் நான். வைணவத்தோடும் ஐயப்பனோடும் தொடர்பு படுத்திச் செய்திகள் தந்தமைக்கு நன்றி. புதுச் செய்திகள். நாளை பங்குனி உத்திரம். பெங்களூரில் முருகன் கோயில்களில் கோலாகலமாக இருக்கும். திப்பசந்திரா முருகன் கோயிலுக்குப் போவதா...அல்சூர் முருகன் கோயிலுக்குப் போவதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அனேகமாக திப்பசந்திராதான். வீடு பக்கத்தில் இருக்கிறதே....
ReplyDeleteஎஸ்.கே. சார். நாளைக்குள் (11 ஏப்ரல்) மூன்று பதிவுகளையும் எழுதி முடித்துவிட வேண்டும் என்று எண்ணியதால் ஒரே பதிவில் மூன்று கதைகளையும் சுருக்கமாகக் கொடுத்துவிட்டேன். நேரம் இருந்திருந்தால் வழக்கம் போல் விரிவாக, மெகாத் தொடர் அளவிற்குக் கொடுத்திருக்கலாம். :-)
ReplyDeleteதங்கள் தண்டனைக்கு நன்றி. உங்கள் ஆசிப்படி 100 வருடங்கள் தொடர்ந்து எழுதும்படி இறைவன் அருளட்டும். :-)
ரொம்ப நாளைக்கப்புறம் உருப்படியா முழுவதும் கதையா, ரொம்பவே ரசித்து படித்தேன் இந்த பதிவை (இப்படி வாரம் ஒன்று போடும்மய்யா). ஒரே நாளில் இந்தனை நிகழ்ச்சியா. விட்டா எல்லா கடவுள்களுக்கும் பங்குனி உத்திரம் ஒரு சிறப்பான நாளாக இருக்கும் போலயே. அலைமகள், ஐய்யப்பன், சிவன் திருமணம்...அப்பாடா..பெரிய பட்டியல் தான். சுவாரஸ்யமாக சொன்னதுக்கு ரொம்ப நன்றி குமரன்.
ReplyDeleteகுமரன்,
ReplyDelete"இந்த கதைகள் யாவும் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரின் போது ஏற்படுத்தப்பட்டவை
ஆக,
ஆரியர்கள் தான் தேவர்கள், திராவிடர்கள் தான் அசுரர்கள்.
"
என்ற தியரியில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
Why not write a series on that?
ஆமாம் இராம்பிரசாத் அண்ணா. இந்த அளவிற்கு பல வண்ணங்கள் கொண்ட நாட்கள் மிகக் குறைவு.
ReplyDeleteபாராட்டுகளுக்கு நன்றி மனு / ஏழிசை அவர்களே. ஆங்கிலத்திலும் பங்குனி உத்திரம் பற்றி எழுதலாம். விரைவில் எழுத முயற்சிக்கிறேன். எனது 'மைத்ரீம் பஜத' ஆங்கில வலைப்பூவில் எழுதுகிறேன்.
ReplyDeleteஆண்டாள் திருமணம் பங்குனி உத்திரத்தில் தான் வில்லிப்புத்தூரில் கொண்டாடப் படுகிறது. ஆனால் பல வீடுகளில் போகி அன்றும் ஆண்டாள் திருமணம் கொண்டாடப்படுகிறது. அது திருப்பாவையை மார்கழி முழுவதும் அனுசந்தானம் செய்துவிட்டு மார்கழி கடைசி நாளில் திருமணம் கொண்டாடப் படுகிறது என்று எண்ணுகிறேன்.
'மழை' ஷ்ரேயா. படித்துப் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி. அடுத்தப் பதிவினையும் இட்டுவிட்டேன். பார்த்தீர்களா?
ReplyDeleteஉத்திரத்திற்குப் பொருள் சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா. அடியேன் உத்திரத்தில் பிறந்ததற்கு நீங்கள் சொல்லும் வழியில் செல்லவேண்டும் என்பதும் ஒரு காரணமோ? அறியேன் அடியேன்.
ReplyDeleteமிக்க நன்றி சிவமுருகன்.
ReplyDeleteஆமாம் இராகவன். நீங்கள் மட்டுமில்லை. பெரும்பான்மையோருக்கு பங்குனி உத்திரம் என்றால் உடனே நினைவிற்கு வருவது முருகன் கோவில் திருவிழாக்கள் தான். அதில் மற்ற தெய்வங்களுக்கு உள்ள தொடர்பு பலருக்குத் தெரிவதில்லை. இனித் தெரியும். :-)
ReplyDeleteஎந்தக் கோவிலுக்குச் சென்றீர்கள்? திப்பசந்திரா கோவிலுக்கா அல்சூர் கோவிலுக்கா?
சிவா, மொத்தமே வாரம் ஒரு பதிவோடு நிறுத்திக் கொள்ளலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் வாரம் ஒரு கதைப் பதிவு போடச் சொல்கிறீர்கள். :-) முடிந்தவரை கதைகளாக எழுத முயற்சிக்கிறேன்.
ReplyDeleteஎல்லா நாட்களும் எல்லா கடவுளர்க்கும் ஏற்ற நாட்களே. :-) பங்குனி உத்திரம் நம் புராணங்களின் படி இத்தனைச் சிறப்பாக இருக்கிறது. அவற்றை இங்கே பதித்தேன். :-)
கார்த்திக் (Kay Yes), விவகாரமான கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இதில் என் கருத்தினைப் பற்றிச் சொல்லி என்ன ஆகப் போகிறது? அதனால் இந்த விஷயத்தில் என் கருத்தினை என்னளவில் வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். :)
ReplyDeleteஏற்கனவே எழுதத் தொடங்கியவை நிறைய முற்றுப் பெறாமல் இருக்கின்றன. அதனால் இந்தத் தொடரை இப்போதைக்கு எழுத இயலாது. வருங்காலத்தில் அதற்கு நேரம் வந்தால் எழுத முயற்சிக்கிறேன். நன்றி.
//ரொம்ப நாளைக்கப்புறம் உருப்படியா //
ReplyDeleteசிவா, இப்போது தான் இதனைக் கவனித்தேன். ரொம்ப நாளைக்கப்புறம் உருப்படியான்னா அண்மையில் எழுதியது எதுவுமே உருப்படியில்லாத பதிவுகளா? என்ன சொல்ல வர்றீங்க? :-) வஞ்சப் புகழ்ச்சியா எழுதியிருக்கீங்க போலிருக்கே??!!
ஓ! உருப்படியான்னா அப்படி ஒரு அர்த்ததில் போய்டுதோ...ஐயோ..நான் அப்படி சொல்லலை. என்னை மாதிரி உருப்படிகள் வெறும் கதை இருந்தால் படிப்போம். பாட்டெழுதி விளக்கம் மட்டும் கொடுத்தால், ஓடிப்போய்டுவோம்..அதை தான் 'ரொம்ப நாளைக்கப்புறம்' (உங்கள் கோதை தமிழுக்கப்புறம்) என்று சொல்ல வந்தேன். தப்பா எடுத்துக்கொள்ள வேண்டாம் குமரன் :-). வஞ்ச புகழ்ச்சி எல்லாம் அல்ல :-))
ReplyDelete