இந்தக் கட்டுரை சுனாமிக்குப் பின் நான் ஆங்கிலத்தில் எழுதி இந்தியக்கனவு 2020 வலைப்பக்கத்திலும் என் ஆங்கிலப் வலைப்பூவிலும் பதிக்கப்பட்டது. அதில் உள்ள கருத்து இப்போதும் பொருத்தமாக இருக்கிறது (என்றும் பொருத்தமாக இருக்கும் போலும்) என்பதால் தமிழில் மொழிபெயர்த்து இங்கே பதிக்கிறேன்.
***
இந்தியப் பெருங்கடல் சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற அளவுக்கு உதவி செய்துவிட்டோம். இந்த மாதிரி இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டவர்க்கு உதவும் நம் இயற்கைக் குணம் இன்னொரு சுனாமியாய் இனிய சுனாமியாய் இத்தகைய தருணங்களில் வெளிப்படுவது கண்டு நெகிழ்ச்சியாக இருக்கிறது. தங்களால் முயன்ற வரை தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பலவிதமான போற்றத்தகுந்த உதவிகளை நிறையபேர் செய்திருக்கின்றனர். சுனாமி தாக்கிய இடங்களுக்கு அண்மையில் இருப்பவர்கள் பலர் உடனே அந்த இடங்களுக்குச் சென்று மிகச் சிறந்த பணிகள் ஆற்றியிருக்கின்றனர். தூரத்தில் இருப்பவர்கள் தொண்டு நிறுவனங்களுக்கு பொருள் உதவி செய்தும், நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பியும் தங்கள் பங்கினைச் செய்திருக்கிறார்கள். இப்படிப் பட்ட செயல்களைக் காண்பது மிக்க நெகிழ்ச்சியாகவும் உந்துதலாகவும் இருக்கிறது.
ஆனால் இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது எனக்கு ஒரு கேள்வி அண்மையில் அடிக்கடி தோன்றத் தொடங்கியுள்ளது. இந்த மாதிரி இயற்கை அழிவு நேரும் போது மட்டும் தான் இப்படிப்பட்ட கருணைச் செயல்களை நாம் பார்க்கிறோம். மற்ற நேரங்களில் நம் இயற்கைக் குணமான இந்தக் கருணை எங்கே சென்று விடுகிறது? என்னை முதற்கொண்டு எல்லோரும் ஏன் நம்மைச் சுற்றியிருக்கும் துன்பப்படும் மக்களின் துயரங்களைக் கண்டு கொள்வதில்லை? நம்மைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு எத்தனையோ கஷ்டப்படுகிறார்கள். நாம் ஏன் அவர்களை அப்படியே துன்பப்படும்படி விட்டுவைத்திருக்கிறோம்? நம் மனம் இயற்கை அழிவுகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ விழைகிறது; ஆனால் மற்றத் துன்பங்களான பொருளாதார சமூக அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டுமென்று எண்ணுவதில்லையே? ஏன்?
நாம் இன்னும் கொஞ்சம் கவனமாய்ப் பார்த்தால் நம்மைச் சுற்றி நிறைய பேர் தம்மால் முடிந்த அளவு துன்பப்பட்டு இனிமேலும் தாங்காது என்ற நிலைமையை அடைந்துள்ளார்கள் என்பதையும் நம்முடைய பணத்திலும் நேரத்திலும் சிறிது செலவழித்தாலும் போதும் அவர்கள் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கமுடியும் என்பதைப் பார்க்கலாம். ஆனால் நாம் அதனைச் செய்வதில்லையே ஏன்? நம்மைத் தடுப்பது எது? நாம் இப்படி கடின மனம் கொண்டவராய் ஏன் மாறிவிட்டோம்? நாம், நம் குடும்பம், சுற்றம், நட்பு இவர்களைப் பற்றி மட்டும் கவலைப்படும் சுயநலம் கொண்டவர்களாக ஏன் ஆகிவிட்டோம்?
இயற்கை அழிவு தாக்கும் போது மட்டும் தான் நான் மற்றவர்களுக்கு உதவுவேன் என்று நான் சொன்னால் அது மிகக் கொடூரமான எண்ணம். மற்றவர்களுக்கு உதவுவது என்பது என் இயற்கைக் குணம் என்றால் நான் அப்படிச் சொல்ல மாட்டேன். என்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் காண்பேன்; கேட்பேன். ஏதோ உயிரோடு இருக்கிறோம் என்ற நிலையில் 'வாழ்வதொன்றே' மிச்சமாய் இருக்கும் துன்பப்படும் மக்களையும் காண்பேன். அவர்களுக்கு என்னால் முடிந்ததெல்லாம் செய்வேன்.
என் இயற்கை குணமான கருணையைப் பற்றி எனக்கு மற்றவர்கள் சொல்லவேண்டியிருப்பதை எண்ணினால் வெட்கமாக இருக்கிறது. தினமும் இந்தக் கருணை என்னும் குணத்தை வெளியே கொண்டுவருவதற்கு மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், அன்னை தெரஸா போன்ற சமூகச் சேவகர்களின் உந்தும் சொற்கள் தேவைப்படுவது வெட்கமாய் இருக்கிறது. என்னைச் சுற்றி இருப்பவர்கள் மேல் என் கருணைக் குணத்தை வெளிப்படுத்துவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. நான் இன்னும் அதிக கவனத்துடன் இருந்து என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன். எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் உறுதி - 'என் இயற்கைக் குணமான கருணை வெளிப்படுவதற்கு இன்னொரு இயற்கை அழிவு தேவையில்லை. சான்றோர்களின் உந்தும் வார்த்தைகளைத் தொடர்ந்து படிப்பேன்; ஆனால் மற்றவர்களுக்கு உதவும் என் குணம் வெளிப்பட அந்த வார்த்தைகள் இனித் தேவையில்லை. அது இன்னும் இயற்கையாக நடக்கும்'. இந்த உறுதி மொழியில் நிலையாக நிற்க நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் என் இயற்கைக் குணமான கருணைச் செயல்கள் செய்வதற்கும் ஆண்டவனை வேண்ட வேண்டியுள்ளதே என்று எண்ணும் போது வெட்கமாய் இருக்கிறது.
Atleast by getting reminded of the good words of great men and God, we should keep doing our social duty.
ReplyDeleteAnbudan,
Natarajan.
நல்ல கட்டுரை குமரன்! நம் இரக்கக் குணம் வெளி வரவேண்டும் என்றால் ரெண்டு பேரு மண்டைய போடனும்னு காத்திருப்பது எவ்வளவு கொடுமை. 'அம்மா பசின்னு வருபவனுக்கு நம்மில் எத்தனை பேர் ஒரு சோற்று பொட்டலாம் வாங்கி கொடுத்திருப்போம்' ஆனால் சுனாமிக்கு காசு கொடுத்தவர்கள் முக்கால்வாசி பேர் இருப்போம். கொஞ்சம் யோசிப்போமா?.
ReplyDeleteAn out of topic question! Hope Kumaran retains this!
ReplyDeleteSomeone reading this, if you are aware of the new RSS URL of Thamizmanam, please write that down in your comment! Thanks!!
[The URL used to be http://www.thamizmanam.com/tmwiki/feed.php?type=RSS1.0 but that does not work since the last 2 weeks!]
நீங்கள் கூறுவது போல் மற்றவர்கள் சொல்லியோ அல்லது ஊடகங்கள் கூற்றினாலோ தான் நமது கருணை உள்ளம் திறக்கிறது. வள்ளலாரைப் போல வாடிய பயிரைக் கண்டு வாடாவிடினும் சாலையோர விபத்துக்களின் போது எத்தனை பேர் நமது deadlinesகளை எண்ணி அவர்களது deadlineஐ புறக்கணிக்கிறோம்.
ReplyDeleteசுனாமி போன்ற பேரழிவு காலங்களில் கூட பணம் கொடுக்கத் தயாராகயிருந்த எவ்வளவு பேர் நேரில் சென்று களப் பணி செய்ய தயாராக இருந்தனர் ?
இந்தப் பதிவிற்கு இன்னும் அதிகமான பின்னூட்டங்களை எதிர்ப்பார்த்தேன். வராததற்கு என்ன காரணம்? கீழே உள்ளவை தோன்றுகின்றன காரணங்களாக. இவற்றில் எது உண்மையான காரணமோ? இல்லை எல்லாமே சேர்ந்து சதி செய்கிறதோ? :-(
ReplyDelete1. பின்னூட்ட மட்டுறுத்தலின் மகிமையா?
2. எல்லோரும் குடியரசு நாளை முன்னிட்டு விடுமுறையில் சென்று விட்டார்களா?
3. இந்தப் பதிவு கருத்துக் கந்தசாமியிடம் இருந்து வந்தது போல் இருக்கிறதா?
4. தமிழ்மணத்தின் புதிய விதிகள் செய்யும் சதியா? (சரி காசி கோபித்துக் கொள்வார். :-)புதிய விதிகளைப் பற்றியப் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் இடுவதிலேயே மக்களின் கவனமெல்லாம் இருக்கிறதா? பின்னே கருத்துச் சுதந்திர வெங்காயம் அல்லவா பறி போகிறது?) :-)
5. இந்தப் பதிவின் கருத்து புரியவில்லையா?
6. கருத்து புரிந்தும் ஏற்புடையதாக இல்லையா?
ஒரு முக்கியமான காரணத்தை விட்டுவிட்டேன்.
ReplyDelete7. இதெல்லாம் பேசுறதுக்குத் தான் நல்லா இருக்கும். ஒன்னும் செய்ய முடியாது என்று எண்ணும் ஒரு காரணமா?
எதுவாய் இருந்தாலும் உங்கள் கருத்தைப் பதியுங்கள். அது தான் ஒரு நல்ல விவாதத்திற்கு வழி வகுக்கும். :-)
மற்றப் பதிவுகளில் பின்னூட்ட ஆசையால் கேட்டேன். ஆனால் இங்கு கேட்பது பின்னூட்ட ஆசையால் அன்று. இந்தப் பதிவின் கருத்து இன்னும் நிறைய பேருக்குச் சென்றடையவேண்டும் என்ற எண்ணத்தால். :-)
உண்மைதான் நடராஜன். உங்கள் கருத்துக்கு நன்றி.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி சிவா.
ReplyDeleteயாராவது கே.எஸ்.க்கு உதவி செய்யுங்கள். மிக்க நன்றி.
ReplyDeleteஉண்மைதான் மணியன் சார். தற்போதைய உடனடித் தேவை பணம் மட்டுமன்று. களப்பணி செய்யத் தயாராக உள்ள மக்களும் தான். இதனை வலியுறுத்தவே இந்தியக் கனவு 2020 இயக்கம் தொடங்கப் பட்டது. மேல் விவரங்களுக்கு அந்த இயக்கத்தின் பெயரில் இருக்கும் என் வலைப்பூவைப் பாருங்கள்.
ReplyDeleteவேண்டினாத்தான் கடவுளே நமக்கு உதவுறாரு, அது போலத்தானோ?
ReplyDeleteநல்ல பதிவு குமரன்,
ReplyDeleteநட்சத்திர வார புண்ணியத்துல உங்களோட பல dimensions வெளியில வருது.
எனக்கென்னவோ நீங்க சொன்னதோட ரிவர்ஸ் தான் சரின்னு படுது. இந்த மாதிரி தினசரி வாழ்க்கையில் அடுத்தவங்களுக்கு உதவி செய்ய யோசிக்கறதுக்கு fast life னு நமக்கு நாமே சொல்லிக்கறோம்.
அதனால் கோயில் உண்டியில் பிராயச்சித்தம் போடற மாதிரி இயற்கை சீற்றங்களின் போது உதவி அதுக்கு மருந்து தேடறோம்.
குமரன்,
ReplyDeleteஎவ்வளவோ மனிதர்கள் தங்களால் முடிந்த அளவு உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.அவ்ர்கள் அதை விளம்பரபடுத்துவது இல்லை.20வது ரூபாய் டியுப் லைட்டில் தன் பெயரை போடுபவர்களும் உண்டு. 2கோடி கொடுத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் போவார்களும் உண்டு. தி. ரா. ச
குமரன்,
ReplyDeleteஎவ்வளவோ மனிதர்கள் தங்களால் முடிந்த அளவு உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.அவ்ர்கள் அதை விளம்பரபடுத்துவது இல்லை.20வது ரூபாய் டியுப் லைட்டில் தன் பெயரை போடுபவர்களும் உண்டு. 2கோடி கொடுத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் போவார்களும் உண்டு. தி. ரா. ச
ஐயா! கருணைங்கிறது எல்லாரிடமும் இருக்கு. அது தேவையானவர்களிடம் வெளிப்படவும் செய்யுது.. ஆனா இப்படி ஒரு பெரிய இயற்கை சீற்றம் போன்ற நிகழ்வு ஏற்படும்போதுதான்.. அந்த கருணை உலகுக்கே தெரியுது.
ReplyDeleteநான் என்ன சொல்ல வரேன்னா.. சின்ன சின்ன உதவிகளை மக்கள் அவ்வப்பொழுது செய்துகொண்டிருந்தாலும்.. மற்றவர்களின் கவனத்தை இந்த அளவுக்கு ஈர்ப்பதில்லை.. அதனால உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம் (அடடா குமரன்.. நான் சொல்ல வந்ததை விளங்கச் சொல்லி இருக்கேனா?? )
அவ்வப்போது என்னாலான சின்னச் சின்ன உதவிகளை செய்ய தவறியதில்லை நான்.
ஒரு இரயில்நிலையத்தில் பெஞ்சில் ஒரு அம்மா படுத்திருந்தார்கள். என்னை அருகில் அழைத்தார்கள். சரி என்று போனேன்.. ஏதோ சைகையில் கேட்டார்கள்.. சரி காசுதான் கேட்கிறார்போல என்று எண்ணி கொடுத்தேன்.. வேண்டாம் என்று தலையசைத்தார்.. பின்னர் தண்ணீர் வேண்டும் என்று சைகை.. நான் போய் தண்ணீர் பாக்கெட் ஒன்று வாங்கிக் கொடுத்தேன்.. பாவம் எவ்வளவு நேரம் தாகத்தால் தவித்தார்களோ தெரியவில்லை.. ஒரேமூச்சில் குடித்துவிட்டு கையெடுத்து கும்பிட்டார்.
என் மனதில் ஏதோ ஒரு உணர்ச்சி. அடுத்தவர்களுக்கு உதவுவதும் ஒரு விதத்தில் சுயநலம்தான்.. அதனால் நம் மனதுக்கும் ஏதோ நல்லது செய்தோம் என்று ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது..
சரி.. நான் என்ன சொல்ல வந்தேன்னா.. back to 1st paragraph :)
அன்புடன்
கீதா
யோசிக்க வைக்கும் கட்டுரை. தமிழ்மணத்தில் பின்னூட்டம் வருவதை வைத்தெல்லாம் கட்டுரையின் தரத்தை நிர்ணயிக்க முடியாது.
ReplyDeleteதொடர்ந்து இது போன்ற பொதுவான கட்டுரைகள் எழுதினால் என்னைப் போன்ற ஆட்களும் கொஞ்சம் உங்கள் இல்லம் வருவோம் :-)
சிறில் அலெக்ஸ், உங்க கருத்துல இருந்து மாறுபடறேன். கடவுள் கருணையே உருவானவர்ன்னா நாம வேண்டிக்கிட்டாத் தான் நமக்கு உதவனும்ன்னு இருக்க மாட்டார். நாம வேண்டிக்கிறது வேற மாதிரி.
ReplyDeleteஇறைவனுடைய கருணை பெய்யும் மழையைப் போல. எங்கும் எல்லார் மீதும் பெய்கிறது. ஆனால் கவிழ்த்து வைத்திருக்கும் பாத்திரத்தில் மழை நீர் சேராத்து போல அவனை வணங்காத போது நமக்கு அவன் கருணை தெரிவதில்லை. நேராய் வைத்தப் பாத்திரம் தான் வேண்டிக் கொள்ளும் மனம். அது மழைநீராகிய இறைவன் கருணையைச் சேமித்து உணர்கிறது.
அது சரி. நீங்க சொன்னதற்கும் இந்தப் பதிவிற்கும் என்ன தொடர்பு? எனக்குப் புரியலையே?
இராமநாதன் நீங்க சொல்றது எனக்குப் புரியலை. கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா? வரவர நீங்க சொல்றது எதுவுமே எனக்குப் புரியமாட்டேங்குது. :-(
ReplyDeleteஉண்மைதான் தி.ரா.ச. சார். எத்தனையோ மனிதர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் முடிந்த அளவு செய்கிறார்களா என்றால் இல்லை. ஒரு ஏழைக் கிழவன்க்கோ கிழவிக்கோ ஒரு ரூபாய் கொடுப்பதற்கு ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள்; ஆனால் எதாவது விரைவு உணவு விடுதிக்கோ திரைப்படத்துக்கோ சென்றால் கவலைப் படாமல் பணத்தைச் செலவழிப்பார்கள். அதனால் தங்களால் இயன்ற அளவு என்பதைவிட தங்கள் மனது ஒத்துக்கொள்ளும் அளவுக்குச் செய்கிறார்கள் என்று சொல்லவேண்டும். நம்மவர்களிடம் இருக்கும் பணத்திற்கு எல்லாரும் தங்களால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவி செய்தால் நம் நாடு இன்னும் மிக விரைவில் முன்னுக்கு வரும்.
ReplyDeleteமேலே சொன்ன குற்றச்சாட்டு மற்றவர்களுக்கு மட்டும் இல்லை. எனக்கும் பொருந்தும். அதனால் தான் இந்தப் பதிவை என்னை நானே சொல்வது போல் எழுதினேன். அதில் நிறைய உண்மை இருக்கிறது.
அதே மாதிரி நீங்கள் சொல்லும் 20 ரூபாய் மின்விளக்கில் அதன் வெளிச்சமே வெளியே தெரியாத அளவுக்குத் தன் பெயரைப் போட்டுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்; கோடிகளாய் கொட்டிக் கொடுத்துவிட்டு யாருக்கும் தெரியப் படுத்தாமல் போகின்றவர்களும் இருக்கிறார்கள். எனக்கு இந்த இரண்டாம் வகையினரைப் பார்த்தால் தான் கோபம். இந்த வணிகமயமாக்கப்பட்ட உலகில் விளம்பரம் தான் எல்லாவற்றையும் செய்கிறது. அதனால் விளம்பரம் தவறு என்று கூற மாட்டேன். விளம்பரத்தின் நோக்கம் சுய தம்பட்டமாக இருக்கும் பட்சத்தில் அந்த விளம்பரத்தைப் பார்ப்பவர்கள் எல்லோருக்கும் அது தெரிந்துவிடும். அப்படிப் பட்ட விளம்பரம் வெறுக்கத் தக்கது. ஆனால் அந்த விளம்பரம் மற்றவர்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களாலும் இது போல் செய்யமுடியும் என்ற நம்பிக்கை கொடுத்தால் அந்த விளம்பரம் வரவேற்கத் தக்கது.
இந்தியக் கனவு 2020 வலைப்பூவை தொடங்கும் போது அந்த இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் அது தேவையில்லாத விளம்பரம் போல் தோன்றும் என்று சொல்லித் தயங்கினார்கள். பின்னர் அந்த மாதிரிப் பதிவுகள் வந்தால் தான் அது மற்றவர்களுக்கு உந்துதலாக இருந்து அவர்களும் அவரவர் அளவில் நிஜமாக அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் நம் மக்களுக்கு உதவி செய்வார்கள் என்று சொன்னவுடன் ஒத்துக் கொண்டார்கள். அந்த வலைப்பூவில் இதுவரை மூன்றே பதிவுகள் தான் இட்டிருக்கிறேன். அதற்குள் அந்த வலைப்பூவின் தாக்கம் எனக்குத் தெரியத் தொடங்கிவிட்டது. அதனால் அப்படிப்பட்ட விளம்பரம் நிச்சயம் வேண்டும் என்று சொல்வேன். பத்து பேர் - ஆஹா நீங்கள் பெரிய ஆள் என்று பாராட்டி விட்டுச் செல்வார்கள் - அவர்களை நன்றி என்று கூறித் தவிர்த்து விட வேண்டும். அவர்கள் அப்படிப் பாராட்டவும் செய்வார்கள்; பின்னர் திட்டவும் செய்வார்கள். ஆனால் சிலர் நானும் இது மாதிரி செய்ய வேண்டும் என்பார்கள். அவர்களைத் தான் நாம் கவனிக்கவேண்டும்.
குமரன், நீங்கள் ஆன்மீககடலில் முழ்கி முத்தெடுத்துக் கொண்டிருப்பதாய் நினைத்து, ஒதுங்கிப் போனதற்கு மன்னிக்கவும் :-))))
ReplyDeleteநல்ல வேளையாய் பார்த்தேன்.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த, ஒரு முறை தன் வீட்டில் தர்ம உண்டி ஒன்று வைத்திருப்பதாகவும்,
அதில் பணம் போடப்பட்டு அனைத்தும் தர்ம காரியங்களுக்கு செலவிடுவதாகவும் சொல்லியிருந்தார். அதைப்படித்ததும் நாங்களும்
அப்படியே, சம்பளம் வந்ததும் குறிப்பிட்ட அளவு திராம்ஸ்ஸை முதலில் தனியாய் ஒரு கவரில் போட்டு விடுவோம், (ன்).
இது என்னுடைய ஒன்றாம் தேதியின் முதல் வேலை. கவரின் மேலேயே, பணம் எவ்வளவு உள்ளது என்ற தேதிவாரி கணக்கும்
உண்டு. அனைத்தும் முகம் தெரியாத ஏழைகளுக்கு உதவ மட்டுமே என்பதில் உறுதியாய் உள்ளேன். மூகமூடியின் ஆஷா பார்த்தீர்களா?
இங்கு பின்னுட்ட பெட்டியில் மட்டும் முகம் காட்டும் திரு. பால் ராஜ் கீதா என்பவரின் மனைவி திருமதி. கீதா இப்படி இரண்டு பிள்ளைகள் படிப்புக்கு உதவுவதாக கூறினார். சில விஷயங்கள் சொல்ல கூச்சப்பட்டுக் கொண்டு சொல்லாமல் இருப்பதால், நல்ல விஷயங்கள் வெளியே தெரியாமலேயே போகின்றது.
கடைசியாய் ஒரு சிறு விண்ணப்பம், உங்கள் குழந்தைகளை நேரம் கிடைக்கும்பொழுது, சேவை மையங்களுக்கு அழைத்து செல்லுங்கள். நாம் சில விஷயங்களை வாய் வார்த்தையால் எவ்வளவு சொன்னாலும், நேரில் பார்க்கும்பொழுது ஏற்படும்
மன மாற்றம், சிந்தனை போன்றவை அதிகமே. இது என் சொந்த அனுபவம்.
அடடா.. உங்க தொல்லை தாங்கமுடியலியே.. புரியலியேங்கறது தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தன்னுட்டு என்னைய புலம்ப வச்சுடுவீங்க போலிருக்கே.
ReplyDeleteஏதோ இந்த மாதிரி இயற்கை சீற்றங்களுக்கு உதவி, வருஷம் பூரா ஒண்ணும் செய்யாம இருந்த குற்ற உணர்ச்சிக்கு, பிராயச்சித்தம் தேடறோமோ என்னவோ?
மத்தபடி உஷா அக்கா சொல்வதையும் ஒத்துக்கொள்கிறேன். நிறைய பேர் இருக்கிறார்கள்.
தனியாட்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும், UNAID உம் இல்லையென்றால் பல உலக நாடுகளின் நிலைமை இன்னும் பரிதாபகரமாக இருந்திருக்கும்.
உண்மைதான் கீதா. கருணை எல்லோரிடமும் இருக்கு. அதில் சந்தேகமே இல்லை. அதனால் தானே அதனை நம் இயற்கைக் குணம் என்று சொல்கிறோம். ஆனால் அது தேவையானவர்கள் எல்லோரிடமும் வெளிப்படுகிறதா என்பது மிகப் பெரிய கேள்வி. நம்மை நாமே தினமும் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். என்னை நான் கேட்டுக் கொண்டதன் விளைவே இந்தப் பதிவு.
ReplyDeleteநீங்கள் சொல்லும் சின்ன சின்ன உதவிகளைத் தான் நானும் சொல்கிறேன். நீங்கள் பல் விளக்கியதையும் மூச்சு விடுவதையும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கின்றீர்களா? இல்லையே! அது எப்படி இயற்கையாய் நடக்கிறதோ அது போல் நாம் மற்றவர்களுக்குச் செய்யும் சிறு உதவிகளும் இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். அப்படி என்றால் தான் கருணை என்பது நம் இயற்கை குணமாக இருக்கமுடியும். நாம் என்ன என்ன உதவிகள் மற்றவர்களுக்குச் செய்தோம் என்பதே மறந்து போகும். அந்த அளவுக்கு அது இயற்கையாய்ப் போகும். அந்த அளவுக்கு செய்த உதவிகளின் எண்ணிக்கை இருக்கும்.
இன்று நீங்களும் நானும் என்ன என்ன உதவிகள் செய்தோம் என்று பட்டியல் இட முடிகிறது. அதனால் அது இன்னும் நமக்கு இயற்கையான குணமாய் இல்லை என்று ஆகிறது. இயற்கையாய் இல்லாமல் ஆனால் நல்லது என்று நாம் எண்ணும் எந்த விஷயத்துக்கும் நாம் என்ன செய்வோம்? அதனை மறுபடியும் மறுபடியும் நினைவில் கொள்ள முயல்வோம் இல்லையா? அப்படித் தான் தினமும் நம்மால் இன்னும் எந்த எந்த விதங்களில் எல்லாம் மற்றவர்களுக்கு உதவியாய் இருக்க முடியும் என்று தேடித் தேடிச் செய்ய வேண்டும் என்கிறேன். நான் அப்படிச் செய்கிறேனா என்றால், இல்லை; ஆனால் முயல்கிறேன் என்று சொல்வேன். அப்படியே எல்லோரும் செய்தால் மிக நன்றாய் இருக்கும்.
நீங்கள் சொன்ன உதாரணம் மிக அருமையான உதாரணம். உதவி என்றால் பணம் மட்டும் அல்ல. இனிமையான ஆதரவான வார்த்தைகளும் கூட உதவிகள் தான். அப்படி எல்லா முறையிலும் மற்றவருக்கு நாம் உதவ முன் வர வேண்டும்.
உங்கள் பின்னூட்டத்தைத் தெளிவாக இட்டதற்கு மிக்க நன்றி கீதா.
நிலா. தொடர்ந்து இது போன்ற பொதுவான கட்டுரைகள் அவ்வப்போது எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன். இந்தக் 'கூடல்' வலைப்பூவும், 'இந்தியக் கனவு 2020', 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' இந்தப் வலைப்பூக்களும் ஆன்மிகம் அல்லாதவைகளைப் பேசும் வலைப்பூக்கள். அதனால் என் பதிவுகள் எதனையும் ஒதுக்கிவிடாமல் உள்ளே வந்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த விஷயம் பேசியிருந்தால் தொடர்ந்து படிங்க.
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி.
ராமசந்திரன் உஷா, மேலே நிலாவுக்குச் சொன்ன பதில் தான் உங்களுக்கும். உள்ள வந்து பாத்துட்டு அப்புறம் போங்க. ;-)
ReplyDeleteஉதாரணங்கள் சொன்னதற்கு மிக்க நன்றி.
நீங்கள் சொன்ன மாதிரி குழந்தைகளைச் சின்ன வயதிலிருந்தே சேவை நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும். சொல்லித் தெரிவதை விட அனுபவித்துத் தெரிந்து கொள்வது நிலையாக நிற்கும்.
எல்லா மனிதனிடமும் உதவும் மனம் இருக்கும். சில வேளை உண்மையாய்., சில வேளை விளம்பரத்திற்காய் (சில நேரம் வரியேப்புக்காயும் சிலர் உதவுவதுண்டு). எல்லா மதமும் எளியோர்க்கு உதவுவதையே முதலில் வலியுருத்துகிறது.
ReplyDelete//உங்கள் குழந்தைகளை நேரம் கிடைக்கும்பொழுது, சேவை மையங்களுக்கு அழைத்து செல்லுங்கள். நாம் சில விஷயங்களை வாய் வார்த்தையால் எவ்வளவு சொன்னாலும், நேரில் பார்க்கும்பொழுது ஏற்படும் மன மாற்றம், சிந்தனை போன்றவை அதிகமே//.
100% உண்மை உஷா.
இராமநாதன், 'புரியலையே' மட்டும் தானா? 'விளக்கம்'ங்கறதக் கூடச் சேத்துக்கோங்க. :-) நீங்கள் சொல்வது புரிந்தது என்று கூறி உங்கள் வயிற்றில் பால் வார்க்கிறேன். ரொம்ப புலம்பாதீங்க :-)
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி அப்டிபோடு அக்கா.
ReplyDeleteகுமரன்,
ReplyDeleteஅருமையா 'இயற்கை குணம்- கருணை" பற்றி விளக்கி இருக்கிங்க.
நான் இதுநாள் வரை செய்த உதவியெல்லாம் எப்பொழுதாவது நினைவில் வந்து போகுமே தவிர அதனை மறந்தேனில்லை.
அடுத்தவங்களுக்கு உதவி செய்யும்போது என் மனதுக்கு ஒரு வித சந்தோஷம் வருவதாலேயோ அல்லது அப்படி செய்தால் நல்லது என்பதாலேயோதான் செய்திருக்கிறேன் என்று நியாபகம். ஒரு உதவியினை இயல்பாக செய்துவிட்டு அதனை மறந்தேனா என்றால் இல்லை.
அருமையா விளக்கி இருக்கிங்க. நன்றி. இனி இது போன்ற குணங்கள் என் இயல்பிலே கலந்திருக்க பழகணும்.
அது அவ்வளவு சுலபமில்லை. மனம்ணு ஒன்னு இருக்கே.. அது ஒரு விஷயம் மறக்கணுனு சொன்னா அதைத்தான் நிமிஷத்துக்கொரு முறை நினைவுபடுத்திட்டே இருக்கும்.
ம்.. ஆசையா இருக்கு அப்படி மாறணும்னு.. பார்ப்போம்.
புரியவைத்தமைக்கு நன்றி குமரன்.
அருமையான ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டேன் என்று ஒரு திருப்தி.
ஒரு புத்தகத்தை திறப்பவன் ஆவலோட திறக்கணும். படிச்சு முடிக்கும்போது திருப்தியோட முடிக்கணும்.
உங்க பதிவும் அப்படித்தான் இருந்தது.
நன்றி
அன்புடன்
கீதா
//உங்க பதிவும் அப்படித்தான் இருந்தது.
ReplyDelete//
நன்றி கீதா.