வீட்டில் எல்லா விதமான செல்வங்களும் இருக்கின்றன. எந்தக் குறையும் இல்லை. மாடு மனை, வீடு வாசல், நன்செய் புன்செய் என்று எல்லாமே கொழிக்கின்றன. செய்யும் அறச்செயல்களுக்கோ அளவில்லை. வேண்டி நின்றார் வேண்டிற்றளவும் கொடுத்து வள்ளல் என்ற பெயரும் கிடைத்திருக்கிறது. எல்லாம் இருந்தும் என்ன பயன்? வேளாளர்த் தலைவர் காரிக்கும் அவர் தம் மனைவியார் உதயநங்கைக்கும் தம் குலம் தழைக்க ஒரு குழந்தை இல்லையே என்பது தான் பெருங்குறை.
பொருநை நதிக் கரையில் திருக்குருகூரில் கோயில் கொண்ட ஆதிநாதப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று குழந்தை வரம் வேண்டினால் நிச்சயம் அருள் கிடைக்கும் என்று பெரியோர்கள் சொல்ல, இதோ ஆதிநாதப் பெருமாள் கோயிலுக்கு வந்து அவன் அருளை வேண்டி இறைஞ்சி நிற்கின்றனர் . கோயில் பிரகாரத்திலேயே அன்றிரவு தங்கிவிட்டனர்.
கனவில் வந்தான் மாயவன். அடியார் படும் துயரைக் காணச் சகிக்காதவன் அல்லவா அந்த அச்சுதன் . தன் அம்சமான சேனை முதலியார் எனும் விஷ்வக்சேனரே அவர்களுக்கு ஒரு மகனாய் பிறப்பார் என்று அருள் செய்கிறான். மகுந்த மன மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றனர் கணவனும் மனைவியும்.
***
இன்று பிரமாதி வருடம், வைகாசி மாதம், விசாக நட்சத்திரம். உதய நங்கை மிகுந்த ஒளியுடன் கூடிய ஒரு ஆண்மகவை ஈன்றிருக்கிறாள். கண்ணன் பிறந்த போது அன்று ஆய்ப்பாடி பட்ட பாடு காரியார் திருமாளிகை இன்று பட்டது. எங்கும் ஒரே கோலாகலம்.
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே
ஆனந்தத்தால் இங்கும் அங்கும் ஓடுகிறார்கள் சிலர்; கீழே விழுகிறார்கள் சிலர்; விரும்பி ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்கிறார்கள்; நம் தலைவன் எங்கு பிறந்துள்ளான்? எங்கே உள்ளான்? என்று அவனைக் காண விரும்பி நாடுவார்கள் சிலர்; பாடுவார்கள் சிலர்; பலவிதமான பறைகளைக் கொட்டிக்கொண்டு ஆடுகிறார்கள் சிலர்; இப்படிப் பட்ட கோலாகலம் கண்ணன் பிறந்த போது ஆய்ப்பாடியில் ஏற்பட்டது.
***
நாட்கள் சென்றன. குழந்தை பிறந்தது முதல் அழவேயில்லை. எந்த விதமான உணவும் உட்கொள்ளவில்லை. ஆனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. எப்போதும் ஏதோ ஒரு மோன நிலையில் இருப்பது போல் ஆடாமல் அசையாமல் இருக்கிறது. வந்துப் பார்த்த வைத்தியர்கள் எல்லாம் எதுவும் செய்ய முடியவில்லை. உணவு உட்கொள்ளாமலேயே குழந்தை வளர்ந்து வருவதால் கொஞ்சம் நாள் சென்றால் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டனர்.
ஆதிநாதப் பெருமாள் அருளால் பிறந்த இந்த குழந்தை இப்படி மற்ற குழந்தைகளை விட மாறுதலாய் இருப்பதால் ஊரார் 'மாறன்' என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர். குழந்தைகளை பிறந்தவுடனே 'சடம்' என்னும் ஒரு வாயு தாக்குவதால் தான் குழந்தைகள் அழ ஆரம்பிக்கின்றன. இந்தக் குழந்தை பிறந்தது முதல் அழாததால் அந்த சட வாயு இவனை அண்டவில்லை என்று தோன்றுகிறது. அதனால் இவனைச் 'சடகோபன்' என்று அழைக்கலாம் என்று பெரியவர்கள் சொல்ல அதுவும் அந்தக் குழந்தைக்குப் பெயராகியது.
***
வைத்தியர்கள் சொன்ன மாதிரி சிறிது நாட்கள் சென்றால் குழந்தை சரியாகிவிடும் என்று தான் பெற்றோர் நினைத்தனர். ஆனால் ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை அப்படியே தான் இருக்கிறது. எந்த இறைவனின் திருவருளால் குழந்தை பிறந்ததோ அந்த இறைவனின் திருக்கோயிலுக்குச் சென்றால் ஒரு வேளை குழந்தை மாற்றமடையலாம் என்று எண்ணி குழந்தையை ஆதிநாதப் பெருமாள் ஆலயத்திற்கு எடுத்து வந்தனர். குழந்தையை இறைவன் திருமுன்பு வைத்து அவனை இறைஞ்சி நின்றனர்.
ஆஹா. என்ன ஆச்சரியம்? இதுவரை ஆடாமல் அசையாமல் வெறும் பிண்டம் போல் கிடந்த குழந்தை தவழ்ந்து தவழ்ந்து அந்த புளிய மரம் நோக்கிச் செல்கிறதே. அந்தப் புளிய மரமும் சாதாரண மரமன்று. அது உறங்காப்புளி. எல்லாப் புளிய மரங்களும் இரவில் தம் இலைகளை மூடும் . இந்த புளியமரம் இரவிலும் தன் இலைகளை மூடுவதில்லை.
அந்த உறங்காப் புளியின் அருகில் சென்று அமர்ந்துவிட்டது குழந்தை. ஒரு வயதுக் குழந்தை தாமரை ஆசனம் இட்டு அமர்ந்திருப்பது ஏதோ தவத்தில் அமர்ந்திருப்பது போல் இருக்கிறது. எத்தனையோ முறை முயன்றும் மாறனை அம்மரத்தடியில் இருந்து நகர்த்த முடியவில்லை. அதனால் பெற்றோரும் ஆதிநாதர் திருக்கோயிலுக்கு அருகிலேயே வசித்து தினமும் தங்கள் திருமகனை வந்துப் பார்த்துப் போகிறார்கள்.
***
'ஹும். நமக்கும் வயதாகிவிட்டது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தத் தெய்வத் திருநாடாம் தென்பாண்டி நாட்டுத் திருக்கோளூரில் பிறந்து நம் குல ஆசாரத்திற்கு ஏற்ப வடமொழி வேதங்களையும் தமிழ்மொழி இலக்கிய இலக்கணங்களையும் கற்று பெரும்பண்டிதன் என்று புகழ் பெற்றோம். சிறு வயதிலிருந்தே இனிமையான கவிதைகள் பாடி வருவதால் மதுரகவி என்றும் அழைக்கப் படுகிறோம். பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தாமனைச் சேவித்து அவன் அருள் என்னும் அழியாச் செல்வத்தைப் பெற, இந்த பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுதலைப் பெற, மோக்ஷபுரிகள் என்று சொல்லப் படும் அயோத்தி, மதுரா (வட மதுரை), மாயா (ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி), பூரி (புவனேஷ்வர்), துவாரகை என்று எல்லாத் திருத்தலங்களுக்கும் சென்று அங்கேயே சிறிது காலம் தங்கிப் பார்த்தோம். அயோத்தி நம் மனதிற்கு உகந்ததாகவும் இராமபிரானையும் அன்னை சீதையையும் தினமும் தொழுவதற்கு ஏற்பதாகவும் இருந்ததால் இங்கேயே தங்கிவிட்டோம். ஆனால் அவன் அருள் வந்ததாகவும் தெரியவில்லை. முக்தி மார்க்கம் தென்படுவதாகவும் தெரியவில்லை. கற்ற கல்வி அனைத்தும் ஒரு சதாசாரியன் கிடைக்காவிட்டால் விழலுக்கு இறைத்த நீர் என்பது எவ்வளவு உண்மை. வயது கூடக் கூட ஒரு நல்ல ஆசாரியன் கிடைப்பான் என்னும் நம்பிக்கை தளர்ந்து வருகிறது. இறைவா. எனக்கு ஒரு நல்ல ஆசாரியனைக் காட்டக் கூடாதா?'
மதுரகவியார் இப்படி இறைவனை இறைஞ்சி அடிக்கடி பெருமூச்சு விடுவது வழக்கமாய் விட்டது. கருணைக் கடலான இறைவன் நல்ல வழி காட்டாமலா போய்விடுவான்.
***
'ஆஹா. அது என்ன பெருஞ்சோதி. ஆதவன் மறைந்த பின் சில நாட்களாக தென் திசையில் இந்த பெரும் ஒளி தோன்றுகிறதே. என்னவாக இருக்கும்?'
'நண்பரே. அங்கு பார்த்தீர்களா? தெற்கில் ஏதாவது விசேஷமா? ஒரு பெரும் ஒளி தோன்றுகிறதே?'
'மதுரகவியாரே. எந்த ஒளியைச் சொல்கிறீர்கள்? எனக்கு எதுவும் தெரியவில்லையே?'
'இதே தான் எல்லாருடைய பதிலாகவும் இருக்கிறது. நமக்கு மட்டும் இந்த ஒளி தினமும் இரவில் தோன்றுகிறதே. அது என்ன என்று அறிந்து கொள்ள மிக்க ஆவலாக இருக்கிறது. நாளை நாம் தெற்கு நோக்கிச் செல்வோம். அந்த ஒளி எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிப்போம்'.
இப்படி எண்ணி அயோத்தியிலிருந்து கிளம்பினார் மதுரகவியார். தினமும் பகலில் ஓரிடத்தில் தங்கிப் பகலவன் மறைந்த பின் ஒளிக்கற்றையை நோக்கி நடந்து நடந்து மதுரகவியார் தென்னாட்டிற்கு வந்தார். பல நாட்கள் பயணித்தபின் திருக்குருகூர் ஆதிநாதப் பெருமாள் ஆலயத்திற்கு அருகில் வந்த போது அந்த ஒளி மறைந்தது. பின்னர் தோன்றவே இல்லை.
ஆதிநாதர் திருக்கோயிலில் தான் ஏதோ அதிசயம் இருக்க வேண்டும் என்று எண்ணி அங்குள்ள மக்களிடம் கேட்டார். அவர்கள் காரிமாறன் சடகோபனைப் பற்றிச் சொல்லி மதுரகவியாரை உறங்காப்புளி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
'அடடா. இந்த 16 வயது பாலகன் எவ்வளவு காந்தியுடன் இருக்கிறான். இவன் பிறந்தது முதல் அசையவே இல்லை என்று சொல்கிறார்களே. எந்த உணவும் உட்கொள்ளவில்லை என்றும் கண் திறந்து பார்த்ததில்லை என்றும் வாய் திறந்து பேசியதில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் இச்சிறுவனைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. உடலிலோ முகத்திலோ எந்த வித வாட்டமும் இல்லை. அவன் முகத்து ஒளியை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் இருக்கிறதே. இந்தப் பாலகனைப் பேசவைத்துப் பார்க்கலாம். இறைவன் நமக்கு ஒரு சதாசாரியனை இறுதியில் காட்டிவிட்டான் என்றே தோன்றுகிறது'.
மதுரகவியார் இப்படி எண்ணிக்கொண்டு ஒரு சிறு கல்லை எடுத்து அந்த சிறுவன் அருகில் போட்டார் . அந்த ஒலியைக் கேட்டு இதுவரை கண் திறக்காத மாறன் கண் திறந்து மதுரகவியாரைப் பார்த்தான்.
மதுரகவியார் உடனே 'செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ?' என்று வினவினார்.
சடகோபன் உடனே தன் திருவாய் மலர்ந்து 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' என்றார்.
அதனைக் கேட்டவுடன் முதியவரான மதுரகவியார் கீழே விழுந்து அந்தச் சிறுவனை வணங்கி தன்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டி நின்றார். மாறன் சடகோபனும் ஏற்றுக் கொண்டார்.
***
'நடந்ததைக் கேட்டாயா? இந்த பிராமணக் கிழவர் மதுரகவியார் கோயிலில் ஆடாமல் அசையாமல் கிடந்த, நம் தலைவர் காரியாருடைய மகன் மாறன் ஒரு சிறுவன் என்று கூடப் பாராமல் அவன் காலில் விழுந்து தன்னைச் சீடனாக்கிக் கொள் என்று சொல்கிறாரே? இது தகுமா? அவர் வயது என்ன? இவன் வயது என்ன? அவர் குலம் என்ன? இவன் குலம் என்ன? அவர் கற்றது எவ்வளவு? இவன் கற்றது எவ்வளவு? எதற்கும் ஒரு அளவு உண்டு'.
'ஆம் நண்பா. நீ சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். வேளாளர்களாகிய நம் குலத்தில் பிறந்த இந்தச் சிறுவனை அந்தப் பார்ப்பனக் கிழவர் கீழே விழுந்து வணங்குவதும் என்னை சீடனாக்கிக் கொள்ளுங்கள் என்று கேட்பதும் அதற்கு அந்த பாலகன் ஒத்துக் கொள்வதும் மிக்க ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. உலகவழக்கிற்கு எதிராகவும் இருக்கிறது. மதுரகவியார் செய்வதில் ஏதேனும் பொருள் இருக்கும். அவர் ஏதோ கேட்க, சிறுவன் மாறன் சடகோபன் ஏதோ பதில் சொன்னானே. என்ன என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்'.
***
'சுவாமி. நீங்கள் கோயிலுக்கு வந்து சடகோபனைப் பார்த்தவுடன் ஏதோ கேட்டு அவனும் ஏதோ பதில் சொன்னானே. அது என்ன என்று எங்களுக்கு விளக்க முடியுமா?'
'அன்பர்களே. திருக்கோயிலில் இருக்கும் நம் ஆசார்யன் சாதாரணமானவர் இல்லை. எல்லா ஞானமும் உடையவர். நான் கேட்டது
செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?
என்பது. இதன் பொருள் உயிரில்லாததாகிய இந்த உடலில் அணு உருவமாய் சிறியதாய் இருக்கும் ஜீவன் பிறந்தால் எதனை அனுபவித்துக் கொண்டு எந்த நிலையில் இருக்கும் என்பது.
அதற்கு நம் ஆசார்யன் சொன்ன பதில்
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்
என்பது. இதன் பொருள் அந்த உயிர் சாதாரணமான உயிராய் இருந்தால் அந்தப் பிறவி நேரக் காரணமான முன்வினைகளுக்கு ஏற்ப இன்பதுன்பங்களை அனுபவித்துக் கொண்டு அந்த உடலிலேயே வினைப்பயன் முடியும் அளவும் கிடக்கும்; அதுவே இறையுணர்வு கொண்ட உயிராய் இருந்தால் எம்பெருமானிடம் எப்போதும் ஈடுபாடு கொண்டு அவனிடமே தோய்ந்து கிடக்கும் என்பது'.
'விளக்கத்திற்கு நன்றி. இது பெரும் விஷயமாகத் தான் இருக்கிறது. சடகோபன் ஞானமடைந்தவன் என்பது தெளிவாகிறது. ஆனால் வயதிலும் மற்ற எல்லாவிதத்திலும் உயர்ந்தவரான நீங்கள் எப்படி இந்தச் சிறுவன் காலில் விழுந்து அவனை ஆசாரியனாக ஏற்றுக் கொள்ள முடியும்? இது தகுமா?'
'அன்பர்களே. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். மேலோன் கீழோன் என்பதெல்லாம் உலக வழக்கில் நமக்கு நாமே அமைத்துக் கொண்ட வழிமுறைகள். சிறியவர் பெரியவரை வணங்க வேண்டும் என்பதும் அந்த வழிமுறைகளில் ஒன்று. ஆனால் ஒருவர் ஞானமடைந்திருந்தால் அவர் எந்த வயதினராக இருந்தாலும், எந்த குலத்தினராக இருந்தாலும், எப்படிப் பட்டவராய் இருந்தாலும் நம்மால் வணங்கப்பட வேண்டியவர். ஞானிகளிடம் குலம் கோத்திரம் கல்வி கேள்வி வயது போன்றவைகளைப் பார்க்கக் கூடாது. அதனால் நான் நம் ஆசாரியன் சடகோபனிடம் அடைக்கலம் பெற்றது மிகவும் சரியே'.
***
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்.
(1) இறைவன் எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் மேலானவன் என்பதையும், (2) என்றும் நிலையான உயிர்களின் இயல்புகளையும், (3) அந்த உயிர்கள் மேலான இறைவனை அடையும் வழியையும், (4) அந்த வழிக்குத் தடையாக எப்போதும் தொடர்ந்துவரும் முன்வினைகளையும், (5) அவனருளாலே அவன் தாள் அடைந்து அனுபவிக்கும் பேரானந்தப் பெருவாழ்வையும், தன் பாடல்களில் கூறுகின்ற திருக்குருகூர் மாறன் சடகோபன் என்னும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாடல்கள் வேதங்களை யாழின் இசையுடன் இசைத்தது போன்றுளது.
வேறொன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறெங்கள்
வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே சரண்.
எனக்கு வேறொன்றும் தெரியாது. வேதங்களைத் தமிழில் திருவாய்மொழியாக இசைத்த மாறன் சடகோபன் திருக்குருகூர் ஏறு - அவரே எங்கள் வாழ்வு' என்று ஏத்தும் மதுரகவியாழ்வார், எங்களை ஆள்பவர். அடியார்க்கு அடியாரான அவரே அடியோங்களுக்கு அடைக்கலம்.
ஆகா! இதுதான் வேதம் தமிழ் செய்த சடகோபர் வரலாறா! நம்புங்கள் குமரன்...இந்த வரலாற்றைக் கொஞ்ச காலமாக நான் தேடிக் கொண்டிருந்தேன். ஏனோ யாரிடமும் கேட்கவில்லை. இப்பொழுது தானாகக் கிடைத்திருக்கிறது. மிக்க நன்றி குமரன்.
ReplyDeleteஇன்று வைணவத் திருக்கோயில்களில் கொண்டாடப்படும் தமிழ் வேதங்கள் செய்தது வேளாளர் குலத்தவரால் என்று கேட்பது பெருமையாக இருக்கிறது. ஞானம் குலம் பார்த்து வருவதில்லை அல்லவா.
பக்தி கதை சொல்றதுல உங்களை மிஞ்ச முடியுமா. கதை நன்று. விளக்கமும் நன்று. அடிக்கடி இப்படி போடுறது தானே?. விஷ்ணு சித்தர், கோதை-யை சீக்கிரம் ஆரம்பிங்க.
ReplyDelete'செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ?' என்று வினவினார்.
ReplyDeleteசடகோபன் உடனே தன் திருவாய் மலர்ந்து 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'
என்னமோ விளக்கம் எனக்கு விளங்க வில்லை
செத்ததின் வயிற்றில் புழு பூச்சி, அது அதையே தின்று பெரியதாகும்.
இது தான் நமக்கு விடை.
ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார். இங்கு சென்று பாருங்கள் http://muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=324&POSTNUKESID=af2247f325ee5f4c89b8e971e8f98a2a.
ReplyDeleteதிருக்குருகூர் சடகோபர் எழுதிய பாடல்கள் மொத்தம் ஆயிரம்.
ReplyDelete'இலிங்கத்திட்ட புராணத்தீரும்
சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நுந்
தெய்வமுமாகி நின்றானே!....'
லிங்கம்(சைவம்), சமணர், சாக்கியர் அனைவரும் திருமால்தானாம்.
'நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய்
நெடுவானாய்ச்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய்
அயனாய்...
என எல்லாம் பெருமாளாம்., சிவனை., நாரயணனுடன் அதிகம் சொல்லியிருக்கிறார் சடகோபர்.
நான் மாடக் கூடல்
ReplyDeleteதந்த நல்லதொரு முத்து
ஆன்மீகம் சொல்லிவரும்
எங்கள் பெரும் சொத்து
உன் எழுத்துக்களைப் படிப்பதிலே
எந்தன் மனம் பித்து
உன் எழுத்துக்களில் உள்ளதைய்யா
ஏதோ ஒரு சத்து.
ஆமாம் இராகவன். இது தான் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனாகிய நம்மாழ்வாரின் வரலாறு. கேளுங்கள் கொடுக்கப்படும்ன்னு அதனாலத் தானே சொல்லியிருக்காங்க. நீங்க தேடுனீங்க; இப்பக் கெடைச்சிருச்சு.
ReplyDeleteகதை நடை நல்லா இருக்கான்னு சொல்லலை?
//இன்று வைணவத் திருக்கோயில்களில் கொண்டாடப்படும் தமிழ் வேதங்கள் செய்தது வேளாளர் குலத்தவரால் என்று கேட்பது பெருமையாக இருக்கிறது.//
இந்தக் கருத்தையும் வலியுறுத்தவே இந்தக் கதையை எழுதினேன். :-)
நன்றி சிவா. கதை பிடித்திருந்ததா? மகிழ்ச்சி. ஆமாம் நாம் எழுதியதில் நிறைய பேருக்கு எது பிடித்தது என்று யோசித்ததில் விஷ்ணுசித்தர் வரலாறும், கோதையின் கதையும் நினைவிற்கு வந்தது. அதனால் நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் கதைகளை எடுத்துக் கொண்டேன்.
ReplyDeleteவிண்மீன் வாரம் முடிந்த பின் கோதையின் கதையையும் விஷ்ணுசித்தரையும் கொஞ்சம் கவனிக்கவேண்டும். மார்கழியின் ஆரம்பத்தில் எழுதியது. தை முடிந்துவிடும் போலிருக்கிறது.
'செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ?' என்று வினவினார்.
ReplyDeleteசடகோபன் உடனே தன் திருவாய் மலர்ந்து 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'
என்னமோ விளக்கம் எனக்கு விளங்க வில்லை///////
தேரைக்கு கல்லில் மட்டும் தான் உணவு கிடைக்கும்.வெளியே மிகப்பெரும் உலகம் இருந்தாலும் அதற்கு அதெல்லாம் பிடிக்காது.கல்லையே தின்று கொண்டு கல்லுக்குள்ளேயே கிடக்கும்.
ஆத்மாவும் வெளியே உள்ள பேரானந்தத்தை அறியாமல் உடலால் கிடைக்கும் சுகத்தை அனுபவித்துக்கொண்டு அதனுள்ளேயே சிறைபட்டு கிடக்கும்.
புலன்களை வெல்லாத இப்படிப்பட்ட மனிதன் தேரைக்கு தான் சமம் என பொருள் கொள்ளலாம்
குமரன் ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க. இப்பத்தான் என்னுடைய தமிழின் லட்சணம் எனக்கு தெரியுது. பல இடங்கள்ல திக்கி திணறி படித்தேன் அத்தனையும் தேன்.தொடர்ந்து எழுதுங்க. நம்ம ஓட்டு எப்பவுமே உங்களுக்கு உண்டு.
ReplyDeleteHi
ReplyDeleteBrought back memories of listening to Keeran and his discourses thirty years ago. Thanks for the post. Living in a foreign land leaves an emptiness in the heart which cannot be filled by material comforts. Reading your posts brings back happiness that I consider priceless.
Sam
கருத்துக்கு நன்றி என்னார் ஐயா.
ReplyDeleteஅப்டிப்போடு அக்கா. சுட்டிக்கு மிக்க நன்றி. அதில் பரஞ்சோதி கொடுத்துள்ளதைப் படிக்கிறேன்.
ReplyDeleteஆமாம் அப்டிபோடு அக்கா. திருக்குருகூர் சடகோபராகிய நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் ஆயிரம் பாடல்கள் உண்டு. அவர் திருவாய்மொழி போக இன்னும் மூன்று நூற்களும் பாடியுள்ளார்.
ReplyDeleteநீங்கள் சொன்ன மாதிரி அவருடைய பாடல்கள் பலவற்றில் சிவபெருமானையும் பிரம்மனையும் இந்திரனையும் பெருமாளைப் பாடுவது போலவே பாடியிருக்கிறார்.
அவருடைய பாடல்கள் பத்தினை இந்த வருடம் வைகுண்ட ஏகாதசி அன்று பதித்தேன். அதன் சுட்டி http://koodal1.blogspot.com/2006/01/108.html
வாழ்த்துக்கு நன்றி நாமக்கல் சிபி. இராகவன் ஊரில் இருந்து வந்தவுடன் இந்தப் பாட்டுக்கும் பொருள் எழுதச் சொல்லிவிடலாம் :-) மயிலாரும் அவரும் சேர்ந்து நீங்கள் நினைக்காத விளக்கமெல்லாம் கொடுப்பார்கள். :-)
ReplyDeleteஅசத்துறீங்க செல்வன்!!! நல்ல விளக்கம். மிக்க நன்றி.
ReplyDeleteசந்தோஷ். பாராட்டுக்கு நன்றி. செந்தமிழும் நாப்பழக்கம்ன்னு சொல்ற மாதிரி இப்ப செந்தமிழும் வலைப்பதிவுப் பழக்கம் ஆயிடுச்சு. நீங்க இன்னும் நிறைய எழுதுங்க. தமிழ் நன்றாய் வந்துவிடும். :-)
ReplyDeleteசொன்ன மாதிரி தவறாம வந்து + வோட்டு போட்டுடணும் என்ன? :-)
உங்கள் பதிவுகள் சில படித்தேன். மற்றவர்கள் எழுதுவதைவிட ஆயிரம் மடங்கு மேல். தமிழும் பதிவுகளின் பொருளும் நன்றாக இருந்தன.
நன்றி சாம். அடிக்கடி வந்து படிங்க. எனக்கு தெரிந்து ஒரு சாம் இருக்கிறார். அவர் தருமி ஐயா. ஆனால் அவர் வெளிநாட்டில் இப்போது இல்லை என்று எண்ணுகிறேன். அதனால் அது நீங்களாய் இருக்க முடியாது. :-)
ReplyDeleteஅன்பு குமரன்,
ReplyDeleteகதையோட்டம் அருமை.
செல்வனின் கருத்துக்கு:
******************
//தேரைக்கு கல்லில் மட்டும் தான் உணவு கிடைக்கும்.வெளியே மிகப்பெரும் உலகம் இருந்தாலும் அதற்கு அதெல்லாம் பிடிக்காது.கல்லையே தின்று கொண்டு கல்லுக்குள்ளேயே கிடக்கும்.//
ஆமாம்.
//ஆத்மாவும் வெளியே உள்ள பேரானந்தத்தை அறியாமல் உடலால் கிடைக்கும் சுகத்தை அனுபவித்துக்கொண்டு அதனுள்ளேயே சிறைபட்டு கிடக்கும்.//
ஆன்மா உடலுக்குள் அனுபவிப்பதே பேரின்பம். உடலுக்கு வெளியே உலகில் இருப்பவை எல்லாம் அத்துடன் ஒப்பிடும்போது சிற்றின்பமே!
தேரை, பாம்பு, ஆமை இவைகள் எல்லாம் தவம் செய்கின்றன. அதனால் நீண்ட ஆயுளுடன் இருக்கின்றன. இவையெல்லாம் ஆன்மாவை ஒக்கும்.
இது எம் புரிதல்.
இது போன்ற மற்ற ஆழ்வார்களின் வரலாறையும் பதிவில் இடுங்கள். "ஆன்மீக அருட்குமரன்" என்ற பட்டத்தையும் உங்களுக்கு சூட்டிகிறேன். வழிமொழிபவர்களும் எதிற்பவர்களும் சண்டைக்கு வரலாம் நான் ரெடி."ஜிரா" வின் துணையிருக்கும் என்ற நம்பிக்கை ராமனாதன் பலமும் இருக்கும்.ஆனால் குமரன் சொல்வார் நான் "பட்டம் பதவி பெறபாடவில்லை, தங்க பதக்கங்களும் எனக்கு தேவையில்லை குமரன்(திருப்பரங்குன்றம்) அருள் போதும் என்பார். விடக்கூடாது. தி ரா ச
ReplyDeleteஞான வெட்டியான் ஐயா,
ReplyDeleteவெளியே கிடைக்கும் இன்பம் என நான் குறிப்பிட்டது இந்திரியங்களுக்கு வெளியே கிடைக்கும் இன்பத்தைதான்.அப்படி உடலுக்கு வெளியே வந்து பெறும் இன்பம் தான் பேரின்பமாகும்.கண்,காது,வாய் போன்ற இந்திரியங்களுக்கு வெளியே வந்து,இவை அமைந்த உடல் தரும் இன்பங்களையும் துறந்து அனைத்தையும் சரிசமமாக பார்க்கும் மனப்பான்மை பெற வேண்டும்.
தம் உடலையும் மரம் மட்டையையும் சரிசமமாக பார்க்க வேண்டும்.
//இராகவன் ஊரில் இருந்து வந்தவுடன் இந்தப் பாட்டுக்கும் பொருள் எழுதச் சொல்லிவிடலாம்//
ReplyDeleteதங்கள் சித்தம் என் பாக்கியம்.
பாராட்டுக்கு நன்றி என்னார் ஐயா.
ReplyDeleteதி.ரா.ச. நீங்கள் சொன்ன மாதிரி மற்ற ஆழ்வார்களின் வரலாறுகளையும் கதை வடிவில் இடுகிறேன். நாயன்மார்கள் கதையை எழுதலாம் என்றால் இராகவன் சண்டைக்கு வருவார். அதனால் அவர் எழுத முடியாது என்று சொன்னால் நான் எழுத முயற்சிக்கிறேன். :-)
ReplyDeleteஇன்னொரு பட்டத்துக்கு நன்றி. முருகன் அருளே உங்கள் அன்பின் வடிவாய் இந்தப் பட்டங்களாய் வருகிறது என்று எடுத்துக் கொள்கிறேன் :-) அவைகளும் அவனின் அருளே. அவற்றை ஏன் ஒதுக்க வேண்டும். இறைவனை ஒதுக்கிவிட்டு அவற்றின் பின் ஓடினால் தவறு. இறைவனும் வேண்டும்; மற்றவை வந்தால் மறுப்பதில்லை என்பது என் கொள்கை. :-)
ஞானவெட்டியான் ஐயாவும் செல்வனும் பேசிக்கொள்வதைக் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteகுமரன்,
ReplyDeleteமிக அருமை.
மிக்க நன்றி முத்து.
ReplyDeleteஅழகாக எழுதியுள்ளீர்கள், குமரன்.
ReplyDeleteஇந்த இறையுணர்வையும் தமிழ் சுவையையும் அனுபவிக்கத் தந்த குமரன் அவர்களுக்கு நன்றிகள் பல
ReplyDeleteசிவா சொல்வதை வழி மொழிகிறேன்
மிக சிறப்பாக உள்ளது.தொடரட்டும் உங்கள் பணி எங்கள் பயனுக்காய்
குமரன்,
ReplyDeleteநல்ல பதிவு.
பி.கு:- என்ன குமரன் இப்ப கொஞ்ச நாளாய் எழுதிறதில்லை? வேலைப்பளுவா ?
நன்றி எ.அ.பாலா. & அ.ச.சங்கர்.
ReplyDeleteசங்கர். உங்கள் பதிவுகளைப் பார்க்க முடியவில்லையே. உங்கள் பெயரின் மேல் அழுத்தினால் ப்ரொபைல் தெரியமாட்டேன் என்கிறது. வலைப்பூ இருந்தால் சுட்டியைத் தாருங்கள்.
நன்றி வெற்றி. வேலைப்பளுவே காரணம் வெற்றி. இரண்டு மாதம் பதிவுகள் இடாமல் இருக்கலாம் என்று ஆகஸ்ட் 1ல் இருந்து எதுவும் புதிதாக பதியவில்லை. அக்டோபரிலிருந்து மீண்டும் பதிவிடுகிறேன்.
//புலன்களை வெல்லாத இப்படிப்பட்ட மனிதன் தேரைக்கு தான் சமம் என பொருள் கொள்ளலாம்//
ReplyDeleteநல்லது செல்வன் என்ன விந்தைபாருங்கள் கல்லினுள் தேரை எப்படி சுவாசிக்கும் எப்படி தண்ணீர் குடிக்கும் எப்படி வளரும் விந்தையிலும் விந்தைதான்
சுட்டி தந்தமைக்கு நன்றி குமரா. கூரத்தாழ்வார் வழி காட்ட இங்கே வந்தேன். ஹ்ம்... படிக்க வேண்டியது (நீங்க எழுதினதே) இன்னும் எவ்வளவோ இருக்கு! மிக்க நன்றி. நாமக்கல்லார் கவியையும், தி.ரா.ச ஐயா வழங்கிய பட்டத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteநன்றி கவிநயா அக்கா.
ReplyDeleteபுல்லாகிப் பூண்டாகி - தொடர்கதை படித்துக் கொண்டிருந்தீர்களே. முடித்துவிட்டீர்களா? :-)
இன்னும் இல்லப்பா :(
ReplyDelete