Thursday, June 23, 2011

குலமகளும் அறம் தாங்கு மக்களும்...



ஒரு கல்லை எறிந்தால் மரத்தில் இருக்கும் பறவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பறப்பதைப் போல், ஏதோ ஒன்றினால் சிறு சலனம் ஏற்பட்ட போது எல்லா திசைகளிலும் பரந்து செல்லும் குளத்து நீர் வட்டங்களைப் போல், பாரதியார் இயற்றிய இந்த விநாயகர் நான்மணிமாலைப் பாடலைப் படித்த போதும் பல எண்ணங்கள் எல்லா திசைகளிலும் பரவுகின்றன.

துறந்தார் திறமை பெரிது அதனினும் பெரிதாகும் இங்கு
குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவு ஈந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களும் நீடுழி வாழ்க என அண்டம் எல்லாம்
சிறந்தாளும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செய்யும் தவமே

எளிமையான பாடல் தான்.

துறந்தார் திறமை பெரிது!

அதனினும் பெரிது உண்டு!

அது குறைந்தாரைக் காத்து, எளியார்க்கு உணவு ஈந்து, குலமகளும் அறம் தாங்கு மக்களும் நீடுழி வாழ்க என, அண்டம் எல்லாம் சிறந்து ஆளும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செய்யும் தவம்!

தவம் என்ற சொல்லைக் கேட்டவுடன் நினைவிற்கு வருவது துறவு தான். துறவிகள் தான் தவம் செய்வார்கள் என்பதே நம் மனத்தில் பதிந்திருக்கும் ஒரு ஆழமான புரிதல்!

அந்தக் காலத்தில் முனிவர்கள் தங்கள் மனைவியருடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டே தவங்களையும் செய்தார்கள் என்று மரபு வழி நூல்களில் படிக்கும் போது, துறவிகள் மட்டுமே தவம் செய்வார்கள் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு சிறிது குழப்பம் அடைபவர்களும் உண்டு; உள்ளூர நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்பவர்களும் உண்டு.

முனிவர்கள் என்று அழைக்கப்பட்ட அந்தப் பெரியவர்கள் பலர் துறவியராகவும் இருந்திருக்கிறார்கள்; குருகுலம் அமைத்துக் கொண்டு தேடிவந்த மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அரசுக்கு அறவுரை சொல்லும் குலகுருக்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

இப்படி பலவகைப்பட்டத் தொண்டுகள் செய்தவர்களை எல்லாம் முனிவர்கள் என்று சொல்வதைப் பார்க்கும் போது துறவிகள் என்பவர் முனிவர்களில் ஒரு பகுதியினர் ஒரு வகையினர் என்று மட்டுமே சொல்லலாமே ஒழிய முனிவர்கள் எல்லோரும் துறவிகள் இல்லை என்ற புரிதல் கிடைக்கிறது.

அந்தப் புரிதல் கிடைத்தால் குழப்பமும் வராது; நமுட்டுச் சிரிப்பும் வராது.

இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு துறவிகளாக வெளிவேடம் போட்டுவிட்டு மாட்டிக் கொள்ளும் போது ‘முனிவர்கள் தத்தமது மனைவியருடன் வாழ்ந்தனர்’ என்று கூறி தப்பிக்க முயல்பவர்களைப் பற்றி இங்கே பேசவில்லை; பேசத் தொடங்கினால் முடியாததொன்று அது!

தவம் செய்யும் முனிவர்களின் பெருமையை நம் மரபான நூல்கள் பரக்கப் பேசும். அவர்களால் ஆகாததொன்றும் இல்லை என்ற அளவிற்கு அப்பெருமைகள் பேசப்பட்டிருக்கும். அதெல்லாம் அங்கே விரிவாக ஏற்கனவே பேசப்பட்டுவிட்டதால் அவற்றையெல்லாம் இந்தப் பாடலில் விரிக்காமல் பாடலின் அரை அடியில் அதனை ‘துறந்தார் பெருமை பெரிது’ என்று சொல்லி அனைத்தையும் குறிப்பாக உணர்த்திவிட்டார் பாரதியார்.

துறந்தார் செய்யும் தவத்தை விட பெருமை வாய்ந்த தவம் வேறு ஒன்றுண்டு! இல்லறமல்லது நல்லறமன்று என்ற மூத்தோர் சொல் வழி வாழும் மனிதர் செய்யும் தவமே அது!

அப்படியென்றால் இல்லறத்தில் ஈடுபட்டுள்ள நான் செய்வது தவமா? அது துறந்தார் பெருமையை விட பெரியதா? நினைத்தால் உள்ளூர ஏளனச் சிரிப்பு தான் தோன்றுகிறது!

துறந்தார் பெருமையை விட சிறந்தது எது என்பதை மிகவும் விரிவாகச் சொல்கிறார் இந்தப் பாடலில்.

குறைந்தாரைக் காக்க வேண்டும்!

எந்த வகையில் குறைந்தவர்கள் என்று சொல்லாமல் எந்த வகையிலோ குறையை உடையவர்களை எல்லாம் காக்க வேண்டும். உடலில் குறை இருக்கலாம்; மனதில் குறை இருக்கலாம்; அறிவில் குறை இருக்கலாம்; எந்த வகையிலும் குறை இருக்கலாம்.

'இறைவன் தான் எக்குறையும் அற்றோன்! இங்கு எவருக்கு குறையில்லை? யார் முற்றும் கற்றோன்?' என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளும் இங்கே பொருந்தும்!

ஆக, குறை உள்ளவர் நாமும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிர்களுமே! ஒவ்வொன்றையுமே இயன்ற அளவில் காப்பதே பெருந்தவமாகும்! அது துறந்தார் பெருமையை விட பெரிதாகும்!

எளியார்க்கு உணவு ஈய வேண்டும்!

உற்றார் உறவினர் நண்பர்கள் என்று வீட்டிற்கு அழைத்து உணவு இடும் போது அது நமக்கு பெரிதாகத் தோன்றுவதில்லை. வாழ்க்கையில் இயல்பாக நடக்கும் ஒரு செயலாக அது இருக்கிறது.

நமக்கு உறவாகவோ நண்பராகவோ இல்லாமல் இருக்கும் ஒருவர் ஏழ்மையிலோ துன்பத்திலோ இருந்தால் அது நமக்கு உறைப்பதில்லை!

நம்மைச் சுற்றி எத்தனையோ பேர் ஏழ்மையில் வாடினாலும் அது நம் கண்களுக்குத் தென்படுவதில்லை!

அதனால் தான் எளியார்க்கு உணவு ஈவதைத் தவம் என்று தனித்துச் சொன்னார்கள் போலும். அந்தத் தவம் துறந்தார் பெருமையை விட பெரிதாகும்!

மனைவி குலமகளாக பண்பாடு காக்க வேண்டும்!

பண்பாடு என்றால் என்ன என்று விளக்கிச் சொல்லத் தேவையில்லை; அனைவருக்கும் அதில் ஒரு புரிதல் உண்டு.

விளக்கிச் சொல்வதும் எளிதான செயல் இல்லை. ஒன்றிலிருந்து ஒன்றாக கிளைத்துச் செல்லும் சங்கிலித் தொடராக அது நீளும்.

பண்பாடு காத்தல் என்பது இங்கே ஒருத்திக்கு ஒருவன் என்னும் கற்பு நெறி காப்பது மட்டும் இல்லை.

பெற்றோரிடமும் மூத்தோர்களிடமும் கற்றதை எல்லாம் வாழ்க்கையில் நடத்திக் கொண்டு தன் பிள்ளைகளுக்கும் அவற்றைக் கற்றுக் கொடுப்பதே பண்பாடு என்றும் கற்பு வாழ்க்கை என்றும் முன்னோர் வகுத்தனர்.

கற்றது என்ற சொல்லின் அடிப்படையில் அமையும் சொல் கற்பு. அந்தக் கற்பெனும் பண்பாட்டைக் காப்பவள் குலமகள்.

கற்பு நிலை என்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அஃதை பொதுவில் வைப்போம்!

பெண்டிரை இப்பாடல் குறித்தால் இங்கே குலமகள் என்னாது குலமகன் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்!

மக்கள் அறம் தாங்குபவர்களாக இருக்க வேண்டும்!

அறம் என்பதும் விளக்கத் தொடங்கினால் நீளும்.

முன்னோர் வகுத்ததில் அறிவிற்கு முரணில்லாதவற்றை நடத்துவதும், அப்படி நடத்துவதுல் எந்த விதத் தடை வந்தாலும் தயங்காமல் ஊக்கத்துடன் நடத்திச் செல்வதும், தன்னலத்திற்கு எதிராக இருந்தாலும் பொது நலம் பேணினால் அதனை ஊக்கத்துடன் நடத்திச் செல்வதும் என்று பலவகையாக அறம் தாங்குதல் என்பதை விளக்கிச் செல்லலாம்.

தம் மக்கள் அப்படி அறந்தாங்குபவர்களாக இருக்கும் படி பெற்றோர் வளர்க்க வேண்டும்! அது தவம்! அந்தத் தவம் துறந்தார் பெருமையை விடப் பெரிதாகும்!

குலமகளான மனைவியும் அறம் தாங்கும் மக்களும் நீடுழி வாழ்ந்து பண்பாட்டையும் அறனையும் காக்க வேண்டும் என்று விரும்பித் தொழ வேண்டும்!

யாரைத் தொழுவது?

தனக்கொரு நாதன் நாயகன் இல்லாமல் தானே அனைத்திற்கும் நாயகனாய் இருக்கும் நாதனைத் தொழவேண்டும்!

அண்டம் எல்லாம் சிறந்தாளும் அந்த நாதன் அந்த நாயகன் விநாயகன்!

அப்படித் தொழுதல் தவம்! அந்தத் தவம் துறந்தார் பெருமையை விடப் பெரிதாகும்!

தொண்டு செய்ய வேண்டும்!

இறைவனைத் தொழுபவர் மட்டுமே தொண்டர் இல்லை! என்பும் உரியர் பிறர்க்கு என்ற வகையில் அன்புடையார் எல்லோரும் தொண்டரே! தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிது! அப்படியெனில் அவர் செய்யும் தவம் துறந்தவர் பெருமையை விடப் பெரியது தானே?!

இப்பாட்டைப் படிக்கும் போதும் பின்னர் விளக்கத்தைப் படிக்கும் போதும் உங்களுக்குத் தோன்றிய எண்ணங்கள் என்ன?

Wednesday, June 22, 2011

It Gets Better: Target Team Members



இதில் வரும் சிலர் நாள்தோறும் நான் சந்திப்பவர்கள்; கூட வேலை செய்பவர்கள். அவர்கள் கதையை அறிந்ததில் மகிழ்ந்தேன். அதனைப் பகிர்ந்தும் கொள்கிறேன்.