Saturday, February 25, 2006

153: சிவராத்திரி


இன்று சிவராத்திரி என்று நண்பர் இராகவன் இரண்டு நாட்களுக்கு முன்னால் சொன்னார். அப்போது தான் நண்பர் யோகநடராஜன் மின்னஞ்சலில் அனுப்பியிருந்த தஞ்சைப் பெருவுடையார் திருவுருவப் படங்களைப் பார்த்திருந்தேன். இராகவன் சிவராத்திரியை நினைவுறுத்தியதும் பெருவுடையாரின் திருவுருவப் படங்களைப் போட்டு ஒரு சிறப்புப் பதிவு போடலாம் என்று தோன்றியது.

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான் மறையும்
மாவேறு சோதியும் வானவரும் தானறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ!

தாமரை மலரில் வாழும் தலைவனாம் பிரம்மனும், புரந்தரனான இந்திரனும், அழகு மிகுந்து பிரம்மனின் நாவில் ஏறி வாழும் செல்வியாம் கலைமகளும், நாரணனான மாயவனும், நான்மறைகளும், பெருமை மிகுந்த சோதி ரூபனான சூரியனும், மற்றைய வானவர்களும், இவர்கள் எல்லாரும் அறியாத சோதி மிகுந்த சிறந்த திருவடிகளுக்கே சென்றூதாய் கோத்தும்பீ!

நானார் என் உள்ளமார் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனார் உடை தலையில் உண்பலி தேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ!

வானவர் தலைவனான இறைவன் அவனது பேரருள் காரணமாய் மதிமயங்கி என்னை தன் அடிமையாகக் கொண்டிலனேல் நான் என்ன விதமாய் இருந்திருப்பேன்? என் உள்ளம் என்ன விதமாய் இருந்திருக்கும்? என் அறிவு என்ன விதமாய் இருந்திருக்கும்? என்னைப் பற்றி அறிந்தவர்கள் யார் இருக்கப் போகிறார்கள்? உண்பதற்காக பிரம்ம தேவனது உடைந்த மண்டை ஓட்டில் பிச்சை ஏற்கின்ற திருச்சிற்றம்பலத்தவனின் தேன் நிறைந்த திருவடித் தாமரைகளையே சென்று புகழ்வாய் கோத்தும்பீ!

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப் பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ!

இறைவன் கண்களில் இரத்தம் கசிவதைக் கண்டு கண்ணப்பர் தன் இரு கண்களையும் பிடுங்கி அப்பினார். அப்படிப்பட்ட அன்பு என்னிடம் இல்லை என்பதை கண்ட பின்னும் என் தந்தையாகிய இறைவன், என்னை விடத் தாழ்ந்தவர்கள் இல்லையெனும் படி இருக்கும் என்னையும் தன் அடிமையாகக் கொண்டு அருளி, சிறந்த பணிகளைக் கொடுத்து என்னை அருகில் அழைத்துக் கொண்ட வானளவு கருணை கொண்ட தங்க பொடி போல் உடலெல்லாம் திருநீறு அணிந்த இறைவனுக்கே சென்றூதாய் கோத்தும்பீ!

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை
பேயெனதுள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை
சீயேதும் இல்லாத செய்பணிகள் கொண்டருளும்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ!

நாய் போன்ற இழிந்த என்னை தன் திருவடிகளைப் பாடவைத்த தலைவனை, பேய் போன்ற எனது உள்ளப் பிழைகளை நான் நினைத்த தீய எண்ணங்களாகிய தவறுகளை பொறுக்கும் பெரும் குணம் உடையவனை, 'சீ' என்று இகழாது என் சிறு சிறு பணிகளையும் உவப்புடன் கொண்டு அருளும் தாயைப் போன்ற ஈசனின் புகழ்களையே சென்றூதாய் கோத்தும்பீ!

Wednesday, February 22, 2006

150: இரண்டுவித இந்தியா...

எல்லோருக்கும் தெரியும் இரண்டுவித இந்தியா இருக்கின்றதென்று. அந்த இரண்டு இந்தியாவிற்கும் உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. ஒரு இந்தியாவில் நல்ல கல்வி கிடைக்கிறது; எல்லா வித வசதிகளும் கிடைக்கின்றன; வாழ்க்கை பொருளாதார ரீதியாகவும் சமுதாய வாழ்வு ரீதியாகவும் நன்றாய் அமையும் என்ற நம்பிககை எளிதில் கிடைக்கிறது. மற்ற இந்தியாவிலோ இதற்கு எதிர்ப் பதமாக இருக்கும் நிலையே உள்ளது. இந்த மாதிரி சமுதாய ஏற்றத்தாழ்வு நம் நாட்டில் மட்டுமன்றி உலகில் எங்கு நோக்கினும் இருக்கிறது. ஒரே வித்தியாசம். நம் நாட்டில் இந்த இரண்டு இந்தியாவிற்கும் உள்ள இடைவெளி மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக மிக அதிகமாக இருக்கிறது என்பது என் கருத்து.

இந்த இடைவெளி குறைவாய் இருக்கும் நாடுகளே உலகில் வளர்ந்த நாடுகளாய் இருக்கின்றன. வளர்ந்த நாடுகள் என்றவுடனே நினைவிற்கு வரும் அமெரிக்காவிலும் நம் நாட்டில் இருக்கும் எல்லாவித தீமைகளும் இருக்கின்றன. ஆனால் கஷ்டப்படும் அமெரிக்காவிற்கும் வாழ்வாங்கு வாழும் அமெரிக்காவிற்கும் இருக்கும் இடைவெளி நம் நாட்டளவு இல்லை. அதனால் சிறிது முயற்சி செய்தாலே போதும் கஷ்டப்படும் அமெரிக்காவில் வாழும் ஒருவன் நன்றாய் வாழும் அமெரிக்காவில் கிடைக்கும் வாய்ப்புக்களைப் பெற்று முன்னேறிவிட முடியும். நம் நாட்டிலோ அப்படி இல்லை. வாய்ப்புகள் எல்லாமே வாழும் இந்தியாவின் குடிமகனுக்குத் தான் கிடைக்கின்றன. தாழும் இந்தியாவின் குடிமகனுக்கு அவ்வித வாய்ப்புகள் இருப்பதே தெரியாத அறியாமை நிலை தான் இருக்கிறது. அப்படியே அவனுக்கு இந்த வாய்ப்புக்களைப் பற்றித் தெரிந்தாலும் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவனால் அந்த வாய்ப்புகளை எட்டிப் பிடிக்க முடியவில்லை. அதற்குப் பலவித காரணங்கள் - அவர்கள் வாழும் சமுதாயச் சூழல் அதில் முக்கியப் பங்காற்றுகிறது. இது ஒரு சிறையில் அடைபட்ட உணர்வினையும் நம்பிக்கை இழப்பையும் அந்த தனி மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. சமுதாயச் சூழலினால் அடிப்படைக் கல்வியும் பெற முடியாது தன் சமுதாயச் சூழலைப் போலவே அன்றாடங்காய்ச்சியாகவோ அடிமைத் தொழில் செய்பவனாகவோ அவன் மாற வேண்டியிருக்கிறது.

கல்வியும் நிலையானப் பொருளாதாரச் சூழ்நிலையும் ஒருவனை இந்தச் சிறையிலிருந்து விடுதலை செய்து விடும். ஆனால் உண்மையில் நடப்பது என்ன? சமுதாயச் சூழலினால் அவனுக்குத் தேவையான கல்வி கிடைப்பதில்லை. கல்வி கிடைக்காததால் அவனால் அந்தச் சமுதாயச் சூழலில் இருந்து விடுபட முடிவதில்லை. இது ஒரு சக்கரச் சுழற்சியைப் போன்று ஒன்றிலிருந்து ஒன்று தோன்றி முடிவே இல்லாமல் செல்கின்றது.

பரம்பரை பரம்பரையாய் தான் இப்படிக் கஷ்டப்படும் போது இன்னொரு இந்தியாவில் வாழுபவர்கள் பரம்பரை பரம்பரையாய் நன்றாய் வாழ்வதைக் கண்டு அவனுடைய நம்பிக்கை நசுக்கப்படுகிறது. உரிமை கிடைக்காத போது அதனைத் தட்டிப் பறிக்கத் தொடங்குகிறான். அந்த உரிமைகளைக் கொடுக்க இன்னும் தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்ளாத இந்தியா தட்டிப் பறிக்கும் அவன் செயலைக் குற்றம் என்று சொல்லி சட்டரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் தண்டிக்கிறது.

எதிர்மறையான இந்த வழிமுறையை விட்டால் வேறு வழியில்லையா நம் நாட்டை முன்னேற்ற?

உண்டு. நிச்சயம் உண்டு. இந்த இந்தியச் தேசம் தந்த வசதிகளை எல்லாம் பெற்று அதனால் ஒரு நல்ல நிலைக்கு வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயம் நினைத்தால் இது நிகழும். அவர்கள் மனது வைத்து 'நாம் பெற்ற இந்த வசதிகள் ஒரு ஏழைச் சிறுவனும் பெற வேண்டும்' என்று எண்ணி அதற்குரிய வழிகளில் ஈடுபடத் தொடங்கினால் இது நிகழும். ஏன் இளைஞர் சமுதாயம் என்கிறேன் என்று கேட்டீர்களானால், வயது ஏற ஏற எதிர்மறையான அனுபவங்களைப் பெற்று, இது நடக்காது என்ற ஒரு அவநம்பிக்கையும், அவன் என்னை அன்று அப்படிச் செய்தான், அவனுக்கு நான் ஏன் உதவவேண்டும் என்ற அடாவடி எண்ணங்களும் நிரம்பி விடுகின்றன. இளைய சமுதாயத்திடம் அந்த விதமான கசப்பு எண்ணங்கள் இல்லை. அதனால் அவர்களை சிறிது தூண்டிவிட்டால் இத்தகைய நல்ல செயல்களில் எளிதாக ஈடுபடுத்த முடியும்.

அதனால் தானோ என்னவோ நம் குடியரசுத் தலைவரும் பெரியவர்களிடம் அதிகம் பேசாமல் பள்ளிக் குழந்தைகளிடமும் இளைய சமுதாயத்திடமும் அதிகம் பேசுகிறார். அவர்களிடம் நம்பிக்கை எனும் நெருப்பை மூட்டுகிறார். எல்லோருக்கும் அக்கினிச் சிறகுகள் தந்து உதவுகிறார். இந்த எதிர்மறையில்லாத நேர்மறையான செயல்பாட்டில் ஈடுபட நினைக்கும் மூத்தவர்களும் இதனையே செய்ய வேண்டும்.

இன்றைய இளைய தலைமுறைக்கு பொழுது போக்குகள் என்ற பெயரில் நஞ்சினை ஊட்டும் திசைத் திருப்பல்கள் மிக அதிகமாகிவிட்டன. மற்றவர்க்கு உதவி செய்யும் நல்ல உள்ளம் அவர்களுக்கு இருந்தாலும் அதனை நல்ல முறையாகச் செயல்படுத்த அவர்களுக்கு ஒரு வழிகாட்டி தேவையாய் இருக்கிறது. நல்லவை செய்யும் வாய்ப்புகள் இல்லாத வெற்றிடத்தில் இந்த திசைத் திருப்பும் தீய பொழுது போக்குகள் எளிதில் இடம்பிடித்து விடுகின்றன.

இந்த இளையத் தலைமுறைக்கு அவர்களுக்குள்ளே இருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தை நன்றாக ஊக்கப்படுத்தும்போது அவர்களும் வேறு சிலரை நல்ல நிலைக்குக் கொண்டுவர முயலுவான். அப்படிக் கைத்தூக்கி விடப்பட்டவர்களும் தாங்கள் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின் தான் இருந்த நிலையில் இருப்பவர்களுக்கு உதவ முன்வருவார்கள். அப்படி ஒவ்வொருவராக நடக்கும் செயல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு என்று தொற்றி ஒரு பெரும் இயக்கமாய் வளர்ந்து நம் நாடு முன்னேற்றப் பாதையில் விரைவில் நடக்க வழிவகுக்கும்.

என்ன, இதெல்லாம் எழுதுவதற்கும் கேட்பதற்கும் பேசுவதற்கும் நன்றாய் இருக்கிறது; நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று தோன்றுகிறதா? இருக்கலாம். நடைமுறையில் சாத்தியமின்றி இருக்கலாம். இந்தத் திசையில் எந்த வித முயற்சியும் எடுக்காமல் தொடக்கத்திலேயே நடைமுறைச் சாத்தியமில்லை என்று சொல்லாமல் சற்றே முயன்று பார்ப்போம் என்று சில இளைஞர்களால் தொடங்கப்பட்டதே 'இந்தியக் கனவு 2020' http://www.dreamindia2020.org/ என்ற இயக்கம்.

ஆமாம். அது தொடங்கும் போது சின்னதாகத் தான் இருந்தது. தொடங்கி ஒரு வருடம் தான் ஆகிறது. ஆனால் அது ஆங்கொரு பொந்திடை வைத்த அக்கினிக் குஞ்சு போல் காட்டினை வெந்து தணிக்க ஒரு இயக்கமாய்ப் புறப்பட்டு விட்டது. மும்பையில் மூன்று தமிழ் இளைஞர்களால் தொடங்கப் பட்ட இந்த இயக்கம் இன்று இந்தியாவின் எல்லா பெருநகரங்களிலும் இயங்குகிறது. ஒரு இளைஞன் இன்னொரு இளைஞனிடம் சொல்லி, அவன் மற்றொருவனிடம் சொல்லி இப்படியே இது இளைய சமுதாயத்தில் ஒரு நல்ல இயக்கமாய் மாறி வருகிறது. இன்னும் அதிக இளைஞர்கள் இதனால் உந்துதல் பெற்றுத் தங்களால் இயன்ற அளவு மற்றவர்க்கு உதவி செய்யத் தொடங்கிவிடுவார்கள். அது மட்டும் நடந்தால் மேலே சொன்ன மாதிரி நம் நாடு முன்னேற்றப் பாதையில் விரைந்து வீர நடை போடும். வாய்ச்சொல்லில் மட்டும் வீரராய் இல்லாமல் செயல்வீரர்களாய் இருக்கும் இந்த இளைஞர்கள் அதனை நடத்திக் காட்டுவார்கள். இரண்டுவித இந்தியாவிற்கும் நடுவில் இருக்கும் இடைவெளி வெகு வேகமாய் மறையத் தொடங்கும். நம்பிக்கை என்னும் ஒளி வீசும்.

--------------------------

என்னுடைய இந்தக் கட்டுரை 'திசைகள்' மின்னிதழின் பிப்ரவரி மாத இதழில் வெளிவந்தது. அதனையே எனது 150வது பதிவாக இங்கு இடுகிறேன்.

Friday, February 17, 2006

148: மதுரை - 2

இன்னைக்கு திருமலை நாயக்கர் மகால் பத்தி பார்க்கலாம். என்னமோ மதுரையில திருமலை நாயக்கர் கட்டின அரண்மனையை மகால்ன்னு தான் சொல்றாங்க. எந்த காலத்துல இந்த வழக்கம் வந்துச்சோ தெரியல. நானும் மகால்ன்னே சொல்றேன்.

இப்ப மதுரையில இருக்கிறது திருமலை நாயக்கர் கட்டுன மகால்ல ஒரு சிறு பகுதி தான். அந்தப் பகுதிக்கு 'சொர்க்க விலாசம்'ன்னு அவர் பேரு வச்சிருந்திருக்கார். அந்தக் காலத்துல மகால்ல மேலேயும் கீழேயும் எல்லா இடத்தையும் பாக்க விட்டுக்கிட்டு இருந்தாங்களாம். யாரோ ரெண்டு மூனு பேர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு இப்ப எல்லாம் மேலே விடறதில்லை. கீழேயும் சில பகுதிகளுக்கு மட்டும் தான் விடறாங்க. நான் பார்த்ததெல்லாம் இந்தப் பகுதிகளைத் தான். படத்துல இருக்கிறது அனுமதிக்கப் படும் பகுதிகள்ல ஒன்னு. தருமி சார் மகால் முழுக்கப் பார்த்திருக்கலாம்.




இந்தப் பகுதிகள்ல தான் தினமும் இரவு ஆங்கிலத்திலயும் தமிழ்லயும் ஒளியும் ஒலியும் காட்சிகள் நடக்குது. ரொம்ப நல்லா இருக்கும். கண்ணகி மதுரையை எரிக்கிற காட்சி வர்றப்ப கொலைநடுங்கும்.

இப்ப இருக்கிறது திருமலை மன்னர் கட்டுன அரண்மனையோட ஒரு பகுதின்னு சொன்னேன்ல. பிரிட்டிஷ் காலத்துல இந்த அரண்மனையோட சிதிலமான பகுதிகள் எங்கே எங்கே இருந்தது அப்படிங்கறதை நல்லா படமா வரைஞ்சு வச்சிருக்காங்க. அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத்துல இருக்கிற கண்காட்சியிலும் மகாலுக்குள்ள இருக்கிற கண்காட்சியிலும் அந்த ஓவியங்களைப் பாக்கலாம்.

செவிவழியா வந்த செய்தி. திருமலை மன்னர் கட்டுன மகால் வடக்குல தெற்கு மாசி வீதியையும், மேற்குல கூடல் அழகர் கோவிலையும், தெற்குல கிருதமாலா நதியையும் (இப்ப அது ஒரு சின்ன வாய்க்காலா ஆயிடுச்சு), கிழக்குல கீழ வெளி வீதியையும் எல்லைகளா கொண்டிருந்ததுன்னு சொல்லுவாங்க. எவ்வளவு தூரம் உண்மைன்னு தெரியல.

மதுரை மக்கள் தொகையில மூனுல ஒரு பங்கு சௌராஷ்ட்ரா காரங்கன்னு சொன்னேன்ல. மகால் பக்கத்துல தான் நிறைய சௌராஷ்ட்ரா காரங்க வசிக்கிறாங்க. அந்தப் பக்கம் வேற ஆளுங்களும் இருக்காங்க. அப்படி இருக்கிறவங்க முக்காவாசிப் பேருக்கு சௌராஷ்ட்ரா தெரிஞ்சுரும். மதுரைக் காரங்க தான் இத்தனை பேரு இருக்கீங்களே...உங்களுக்கு சௌராஷ்ட்ரா காரங்க ப்ரண்ட்ஸா இருக்காங்களா? தருமி சார் உங்களுக்கு?

சௌராஷ்ட்ரா ஆளுங்க குஜராத்துல இருந்து புலம் பெயர்ந்து மெதுவா தெற்கு பக்கம் வர்றப்ப ரொம்ப நாள் ஆந்திராவுல இருந்திருக்காங்க. சௌராஷ்ட்ரா அளுங்களுக்கு இன்னொரு பேரு பட்டுநூல்காரர். நிறைய பேரு பட்டுநூல் நெசவாளிங்க. விஜயநகர சாம்ராஜ்யம் நல்லா இருக்கிறவரைக்கும் ஆந்திராவுல இருந்திருக்காங்க. அதனால அவங்க பேசற பாஷையில தெலுங்கு வார்த்தைகள் நிறைய உண்டு. விஜயநகரம் அழிவுக்கு வர்ற நேரத்துல அவங்க நெசவு செய்ற துணிகளோட மேன்மையைப் பார்த்துட்டு திருமலை நாயக்கர் மதுரைக்கு அவங்களைக் கூட்டிக்கிட்டு வந்தாராம். அதனால தான் அவங்க மதுரையில மகால் பக்கத்துல பெரும்பான்மையா இருக்காங்க. இப்ப மக்கள் தொகை பெருக்கத்தால மதுரை நகரை விட்டு சுத்துவட்டாரத்திலயும் நிறைய பேரு இருக்காங்க.

சரி. மகாலைப் பத்தி சொல்றேன்னு ஆரம்பிச்சு சௌராஷ்ட்ரா ஆளுங்களைப் பத்தி சொல்லிக்கிட்டுப் போறேன். அதனால இதோட நிறுத்திகிறேன்.

மதுரைக்கு வந்தா மறக்காம திருமலை நாயக்கர் மகாலுக்குப் போயி பாருங்க. பகல்ல போனீங்கன்னா மகால்ல இருக்கிற தூணை சுத்தி நின்னு அளக்கணும்னா எத்தனை பேரு வேணும்ன்னு அளந்து பாருங்க. மாலையில போனீங்கன்னா, ஒலியும் ஒளியும் பார்க்க மறந்துடாதீங்க.

ஒரு முக்கியமான விஷயம் மறந்துட்டேன் பாருங்க. திருமலை நாயக்கர் மகால்ல ஒரு சிறப்பு என்னான்னா மகால் கட்டினதுல இரும்பே எங்கேயும் பயன்படுத்தலைன்னு சொல்லுவாங்க. அதுவும் ஒரு காரணமா இருக்கலாம் மகாலோட மத்த பகுதிகள் எல்லாம் காணாமப் போனதுக்கு. ஒதுக்குப்புறமா யானைகளைக் கட்டி வச்ச பத்துத் தூண்கள் மட்டும் இன்னும் நல்லா நிலையா நிக்குது.

Sunday, February 12, 2006

145: மதுரை - 1

அண்மையில் எனக்கு மின்னஞ்சலில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலின் பல பாகங்கள் அருமையான படங்களாய் வந்தன. ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் போது பல நினைவுகள் வந்தன. ஒவ்வொன்றாய் இங்கே பதிக்கலாம் என்று தோன்றியதால் இந்தத் தொடர்.


மேலே உள்ள படம் அண்மையில் எடுக்கப் பட்டது போலும். மின்விளக்குகளால் அன்னை மீனாக்ஷியின் திருக்கோயில் கோபுரங்கள் அலங்கரிக்கப்பட்ட காட்சி இது. எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் கோவில் கோபுரங்களில் இரண்டு மூன்று தெரியும். அந்தக் காலத்தில் வண்ண மின் விளக்குகளால் இப்படி ஜெகத்ஜோதியாய்க் காட்சியளிக்காது கோபுரங்கள். முதலில் சித்திரைத் திருவிழா நேரங்களில் வண்ண வண்ண விளக்குகளால் கோபுரங்களையும் விமானங்களையும் அலங்கரிக்கும் பழக்கம் வந்தது. இப்போது எப்போதும் விளக்குக்களுடன் மதுரை நகரின் எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும் கோவில் கோபுரங்கள் தெரியும் படி செய்து விட்டார்கள்.

மதுரை மாநகரில் எழுதப்படாத சட்டம் ஒன்று உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதும் அந்த மரபு பின்பற்றப் படுகிறதா என்று தெரியவில்லை. நகரின் எல்லைக்குள் எந்தக் கட்டிடமும் மீனாக்ஷி அம்மன் கோவிலின் கோபுரங்களின் உயரத்துக்கு மேலான உயரத்துடன் இருக்கக் கூடாது என்பது தான் அந்த எழுதப் படாத சட்டம். எனக்குத் தெரிந்து மதுரை நகருக்குள் உள்ள ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் எதுவும் கோபுரங்களை விட உயர்ந்தவை அல்ல என்று தான் நினைக்கிறேன். தெற்கு மாசி வீதியில் நிறைய உயர்ந்த உயர்ந்த கட்டிடங்கள் வந்துவிட்டன. ஆனாலும் இன்று கூட வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தால் கோவில் கோபுரங்கள் தெரிகின்றன.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.

Thursday, February 02, 2006

140: அதிக பின்னூட்டம் பெறுவது எப்படி?

இந்த நட்சத்திர வாரம் முடிந்த பிறகு ஏன் எல்லோரும் நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு போகிறார்கள் என்பது இப்போது தான் எனக்குப் புரிகிறது. எல்லாம் இந்த post-star-week-blues தான் காரணம். எல்லா excitementம் அடங்கி கொஞ்ச நாள் எது பற்றியும் எழுதாமல் அடுத்தவங்க எழுதுறதைப் படிப்போம் என்று தோன்ற வைத்துவிடுகிறது இந்த நட்சத்திர வாரம்.

அப்பாடா...எப்படியோ இந்த மன-அழுத்தத்தில் இருந்து மீண்டு வர இராமநாதன் 'பின்னூட்டம் பெறுவது எப்படி?' என்று இலவசக் கொத்தனாரின் அண்மைப் பதிவில் எழுதியிருந்தது மிக்க உதவியாக இருந்தது. அவர் சொன்ன எல்லாவற்றையும் ஏறக்குறைய நான் செய்திருக்கிறேன் என்பதால் அதனை அவரின் அனுமதி பெற்று ஒரு தனிப் பதிவாகவே போட்டுவிடுகிறேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். :-)

1. உங்க பதிவுக்கு வந்து தப்பித்தவறி யாராவது ஒருத்தர் பின்னூட்டம் போட்டாலும், அவருக்கு தனியா நன்றி சொல்லணும்.

2. அது வெளிநாட்டு துரைங்களா இருந்தாலும் சரி. மொதல்ல word verification-அ தூக்கணும். ஆனா பாருங்க பின்னூட்ட மட்டுறுத்தல் வந்தப்புறம் துரைங்க வர்றதெல்லாம் குறைஞ்சு போச்சு. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல. அவங்க கமெண்ட பப்ளிஷ் பண்ணிட்டு அழிச்சிடலாம் (Remove Forever பண்றவங்க இதுக்கு மேல இதப் படிக்கறது வேஸ்ட்).

3. பின்னூட்டமே வரலேன்னா என்ன செய்யறது? இருக்கவே இருக்கு, நமக்கு நாமே திட்டம். இதுல ரெண்டு வழி இருக்கு. முதலாவது ரொம்ப சுலபம். test, பின்னூட்டம் வேலை செய்யலேன்னு மயில் மூலம் பல்லாயிரக்கணக்கான நண்பர்கள் சொன்னதை பரிசோதிக்க சோதனைப் பின்னூட்டம் அப்படின்னு அடிச்சு வுடலாம். இதுல சோதனை போடறதுக்கு தனித் திறமை வேணும். இந்தியா நேரம் காலை ஆறு மணிக்கு பதிவு போட்டு ஒருத்தரும் பின்னூட்டம் போடலேன்னா, அந்த டைம்-கேப்பில யாரும் உங்க பதிவ படிக்க இல்லென்ன்னு புரிஞ்சுக்கணும். ஆறு மணி நேரம் கழிச்சு சோதனை முயற்சி செஞ்சு பாக்கலாம். புரியுதா?

(கொத்தனாரின் இலவசப் பாடம்: 3. ஆமாம். இப்போ புதுசா சுயமா புதுப்பிக்கறா மாதிரி வேற பண்ணிட்டாங்களா. அதனால பதிவு போட்ட உடனே நாமளே ஒரு பின்னூட்டம் போட்டோம்ன்னா அது சீக்கிரம் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில வந்துடும். my 2 cents .)

4. பின்னூட்டமே வரல. யாருமே நம்மள கண்டுக்க மாட்டேங்கறாங்கன்னா.. வெட்கமேயில்லாம விளம்பரம் கொடுக்கலாம். நிறைய அடி (ஹிட்) வாங்கற பதிவுகளுக்கு போய் உங்களோட கருத்துகளையும் (சம்பந்தமிருக்கோ இல்லியோ) பின்னூட்டமா போட்டுட்டு அதுலேயே உங்க பதிவுக்கும் விளம்பரம் கொடுத்துடலாம்.

4.1 மேல சொன்னபடி அடுத்தவங்க பதிவுக்கு போனீங்கன்னா, இன்னொரு ராடிகல் டெக்னிக் இருக்கு. அந்தப் பதிவாளர் சொல்றது தப்போ ரைட்டோ, நார் நாரா கிழிச்சு, இன்னா மேன் எழுதற நீயெல்லாம்னு மரியாதையா கேட்டீங்கன்னா.. கண்டிப்பா அந்தப் பதிவ படிக்கற எல்லாரும் உங்க விளம்பரம் மூலமா உங்க பக்கம் வருவாங்க. ஆனா, இது கொஞ்சம் ரிஸ்கி. ஏன்னா, பதிவாளர் விஷயம் தெரிஞ்சவரா இருந்து பதிலடி கொடுத்திட்டா. அப்படியும் கவலையில்லை. அம்பது சதவிகிதமாவது பாவப்பட்டு உங்க பக்கம் வருவாங்க.

(கொத்தனாரின் இலவசப் பாடம்: 4.1 இதுக்கு ஒரு ஐடியா. நாமளே இரண்டு பேர்ல பதிவுகள் போட்டு, மாறி மாறி திட்டிக் கிட்டா என்ன?)

5. இது ஒரு அடிப்படை விதி. உங்க பதிவுக்கு முப்பது பின்னூட்டம் வந்தா இருபதாவது உங்களுதா இருக்கணும். ஒருத்தருக்கு பதில் சொல்லும்போது, எல்லாத்தையும் சொல்லிடக் கூடாது. பாதி எழுதிட்டு, அஞ்சு நிமிஷம் கழிச்சு, ஆங் சொல்ல மறந்துட்டேனேன்னு அடுத்த பார்ட்-ஐயும் போடணும்.

6. நிறைய பேர் எழுதுனாலும், எல்லாருக்கும் நன்றின்னு எழுதுனா அதுக்கு மேல யாரும் வரமாட்டாங்க. சில பேர் அப்படி செய்வாங்க. அவங்க ரேஞ்சே வேற. நாம அப்படியா? அதனால தனித்தனியாத் தான் பதில் போடணும். மறந்துடக் கூடாதுங்கறதுக்காக இன்னொரு தடவை சொல்றேன்.

7. இன்னொரு விஷயம் நினைவில் வச்சுக்கணும். ரிபீட் ஆடியன்ஸ் தான் வெற்றியின் ரகசியம். சூப்பர் ஸ்டாரிலிருந்து எலெக்ஷன்ல ஓட்டுப் போடறவங்க வரைக்கும் எல்லாருக்கும் இது பொருத்தம்.ஒருத்தர் வந்து பின்னூட்டம் போடறார்னு வச்சுக்கங்க. அவர் மறுபடியும் ஒரு மணியிலோ அடுத்த நாளோ நீங்க அவர் சொன்னதுக்கு ஏதாவது கருத்து சொல்லிருக்கீங்களான்னு கண்டிப்பா பார்ப்பார். நம்புங்க. நீங்க பெரிசா ஒண்ணும் சொல்லலேனா, சத்தமில்லாம போயிடுவாரு. அதனால, நாம பதில் போடும்போது நன்றியோட நிறுத்தாம அவர வம்புக்கு இழுத்தோ, ஜாலியா கிண்டல் செஞ்சோ போட்டோமுன்னா, கண்டிப்பா அதுக்கும் ஒரு பதில் போடணுமின்னு அவருக்கு தோணும். அவர் போட, நீங்க போட, அந்தப் பதிலுக்கு அவர் போட.. இப்ப ஓடுதே இதே மாதிரி ஓட்டிடலாம். :))

8. உங்க பேர்லேயே விளம்பரமோ டெஸ்ட் பின்னூட்டமோ கொடுக்க வெட்கமாயிருந்தா (இதுக்கெல்லாம் வெட்கப்பட்டா முடியுமா?).. தனியா அந்நியன் மாதிரி ஒரு புது ப்ளாக்கர் கணக்கு தொடங்கி, அம்பி, ரெமோ, அந்நியன் மாத்ரி உங்களுக்குள்ளேயே பேசிக்கலாம்.

(கொத்தனாரின் இலவசப் பாடம்: 8. நமக்கு வெட்கமெல்லாம் கிடையாதுங்க. எருமைத்தேலுன்னு அம்மா அடிக்கடி திட்டுவாங்க. அப்படியே கொஞ்ச நஞ்ச உணர்ச்சி இருந்தாக் கூட அனானியா போடலாமே.)

7. addendumவரவர்க்கு கொக்கிப் போடணும்னு சொன்னோமா? கேள்வியும் கேக்கலாம்? இல்லேனா, அறியத்தந்தமைக்கு நன்றி, சுட்டி ஏதேனும் கொடுக்க முடியுமா?னு கேட்கலாம். அவரும் கண்டிப்பா சுட்டி கொடுப்பாரு. அதுக்கு ஒரு நன்றி. அதுல ஒரு கேள்வி. improv பண்ணனும். இதெல்லாம் பழகப் பழகத்தானா வரும்.

9. மிகவும் முக்கியமானது இது. பதிவோட தலைப்பு. சும்மா மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான், தமிழ்நாட்டு அரசியல், கில்லி- திரைப்பட விமர்சனம். இப்படியெல்லாம் வச்சா ஒருத்தரும் வரமாட்டாங்க. அதுக்கு பதிலா, 'நீ ஒரு குரங்கு', 'வெட்கம், மானம் சூடு சொரணை இருக்கிறதா', கில்லி ஒரு பல்லி' னு அப்படின்னு யோசிச்சு வக்கணும்.

10. இதுவும் ரொம்ப முக்கியமானது. அடிப்படை விதி. 4.1ன் கண்ணியமான மாற்றம். விளம்பரம் போடாம, சகட்டுமேனிக்கு எல்லார் பதிவிலேயும் பின்னூட்டம் போடணும். ஒரு சனி, ஞாயிறு இதுக்காக ஒதுக்கினீங்கன்னா போதும். கொஞ்சமே பின்னூட்டங்கள் வந்து தத்தளிக்கற பதிவுகள தூக்கி விட்டீங்கன்னா, அவங்களும் நன்றிக்கடன் திருப்பிச் செலுத்த உங்க பக்கம் வந்து தூக்கி விடுவாங்க.

11. இதுவும் ரொம்ப முக்கியமானது. பின்னூட்டப் பேராசைப்பட்டு சர்ச்சைக்குரிய விஷயங்கள் பத்தியெல்லாம் பேசக்கூடாது. பேசினா ப்ராண்ட் குத்தி ஓரமா ஒக்கார வச்சுடுவாங்க. நீங்க புது ஐடில வந்தாலும், ப்ராக்ஸி வச்சு கண்டுபிடிச்சுடுவாங்க.விஷய அறிவோட எழுதறவங்களுக்கு இது பொருந்தாது.

12. இதுவே கடைசின்னு நினைக்கிறேன். இன்னும் ஏதுனா தோணுனா மெதுவா சொல்றேன். (trade secret எல்லாத்தியும் சொல்லிட்டா எப்படி). உங்கள மாதிரியே வெட்டியா இருக்கற ஒரு பிரண்ட பிடிங்க. யாஹூ சாட்க்கு பதில் இங்கேயே சாட் பண்ணலாம்.

எல்லாத்தையும் சொல்லிட்டேன்பா. இனிமே நீங்களும் இதையெல்லாம் ஃபாலோ பண்ணி பின்னூட்டம் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க. :-)

வாழ்க வளமுடன். பின்னூட்ட வளத்தைச் சொன்னேனப்பா.